இது என்ன மாயம் 39

இது என்ன மாயம் 39

பகுதி 39

காதல் தந்தவளே நீ…

ஏன் என்னைக் கொல்கிறாய்

 

உன்னைக் கொல்கிறேன் எனத் தெரிந்தும்,

ஏன் என்னுயிராய் வருகிறாய்

 

உயிரை தந்தவளே நீ…

ஏன் என்னுள்ளம் வதைக்கிக்கிறாய்

 

உன்னை வதைக்கிறேன் எனத் தெரிந்தும்,

ஏன் கண்ணீராய் வருகிறாய்

 

கண்ணீரைத் தந்தும்

என் கண்ணின் மணியாய் நீ இருப்பதால்…..

ஆனந்தமாய் உன்னைச் சூழ்கிறேன்…

வரவேற்பு நல்ல படியாக சென்றுக் கொண்டிருந்தது, பிரஜீக்கு தான் நின்றுக் கொண்டே இருப்பது சோர்வாக இருந்தது. அதைப் பார்த்த சஞ்சீவோ “என்ன பிரஜி டயர்ட்டா இருக்கா?” என்று கேட்க,

அவளோ எரிச்சலில் “இப்ப ஆமான்னு சொன்னா என்ன பண்ணப் போறீங்க? போய் ரெஸ்ட் எடு, நான் மட்டும் இருக்கேன்னு சொல்லப் போறீங்களா?” என்று கடுப்புடன் நிறுத்தினாள்.

“ஏன் பிரஜி…” என அவன் ஏதோ சொல்லும் முன், அங்கு ஏதோ அறிவிப்பு வர, என்னவென்று பார்த்தால், இசைக் கச்சேரிக்கு எனப் போடப்பட்டிருந்த மேடையில் ரதி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

பிரஜீயின் சோர்வைக் கண்ட ரதியோ, ஒரு யோசனைச் செய்து, தன் அண்ணன் சுதனிடம் ஆலோசனைச் செய்து, அதைச் செயல் படுத்தினாள். தன் தோழிகளுடன் சேர்ந்து, ஒரு பாடலுக்கு ஆடி, வந்திருந்தவர்களையும் தன் ஆடல் மூலம் கவர்ந்திழுத்து, பிரஜீக்கும் சிறிது ஓய்வுக் கொடுத்தாள். பின்னர் சுதனும், அவன் நண்பர்களும் ஒரு பாட்டுக்கு ஆடினர். இவ்வாறு அண்ணன் தங்கை இருவரும், சிறிது நேரம் வரவேற்பை கலைக்கூடமாக்கி விட்டனர்.

இந்தப் பக்கம், நம் சசியோ, “டேய்… அங்க பாரேன்… வாவ்… பியூட்டிஃபுல்” என உணர்ச்சி வசப்பட்டு எழுந்து விட, சபரி தான், அவன் பான்ட்டை பின்பக்கமாக பற்றி “டேய்… உக்காருடா… மானம் போகுது… எல்லாரும் உன்ன தான் பார்க்கிறாங்க” எனக் கூறி அவனை அமர்த்தினான்.

பின் அப்படியே ரதி, சஞ்சீவ் பிரஜீயோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கச் செல்ல, சஞ்சீவ் “ஹே… வாலு… எங்க கிப்ட்?”

பிரஜியும் “அதான… உன் பிரன்ட் கவிலாம், கிப்ட் கொடுத்தாங்க, உன் கிப்ட் எங்க?” எனக் கேட்டாள்.

“ஹய்யோ… இவ்ளோ பெரிய கிப்ட் இருக்கும் போது, சின்னப் பிள்ளத்தனமா, கலர் கலர் பேப்பர்ல சுத்துன கிப்ட் கேட்குறீங்களே” என வாயடிக்க,

“ஏய்… இதெல்லாம் செல்லாது… செல்லாது…” என்று பிரஜி கூற, “இப்ப என்ன பிரஜி, உங்களுக்கு கிப்ட் தான வேணும்” என்று ரதி, அவள் கன்னத்தில் முத்தமிட, புகைப்படக்காரர் அதைச் சரியாக கிளிக்கினார்.

பின் சிரிப்போடு நகர்ந்து, மதனிடம் சென்றாள். அவனிடமும், அதே டையலாகை அடிக்க, புஷ்பா சிரித்துக் கொண்டே “அதானே நம்ம ரதியே ஒரு கிப்ட் தான்” என்று அவளுக்கு சார்பாய் பேச, “இம்… அப்படி சொல்லுங்க அண்ணி” என்றாள்.

“ஹே… நான் உங்கள விட சின்னவ தான் ரதி, புஷ்பான்னே கூப்பிடுங்க” என்று கூற, “ஏற்கனவே நான் பிரஜி அண்ணிய பேர் சொல்லி கூப்பிடுறேன்னு, எங்கம்மா டின் கட்டுறாங்க… இதுல உங்களையும் கூப்பிட்டு பழக்கமாகிடுச்சுன்னா, அவ்ளோ தான்…” என்று பயந்தவள் போல் சொல்ல, மதனும் “சரியான வாயாடி…” எனச் செல்லமாய் அவள் மண்டையில் கொட்ட, அதையும் புகைப்படக்காரர் கிளிக்கினார்.

“அண்ணி, பூஜா எங்க? நான் அவளக் கூப்பிட்டு வரேன்” என்று செல்ல, அவளையே ஒரு ஜோடிக் கண்கள் தொடர்ந்தன.

சுதனோ, அவளிடம் வந்து “ஏய்… அம்மா எங்க? நீ பார்த்தியா?” என்று வினவ, “அதோ… அங்க பார்… இந்த வயசுலையும் நம்ம ரவிய சைட் அடிச்சிட்டு இருக்காங்க பார்” என்று கைக் காட்டினாள்.

அவள் காட்டிய திசையில், லஷ்மி தன் கணவனை அழைப்பதற்காக, அவர் இந்தப் பக்கம் திரும்புவார், கை ஜாடையில் அழைக்கலாம், என்று அவரையே பார்த்திருக்க, அதைப் பார்த்து தான் அவர்களின் புதல்வி கேலிச் செய்தாள். இது அவளுக்கு பிடித்த பொழுதுப் போக்குகளில் ஒன்று.

பின் அவளை விடுத்து, தன் அன்னையை நோக்கி சென்றான் சுதன். “அம்மா, அண்ணன்களுக்கு கைச் செயின் போடணும்னு சொல்லிட்டு… இங்க என்னமா பண்ணிட்டு இருக்க?” என்றான்.

“அதுக்கு தான் பா, உங்கப்பாவ கூப்பிடலாம்னு பார்த்தா, மனுஷன் இந்தப் பக்கம் திரும்பவே மாட்டேங்கிறார்” என்று லஷ்மி சலிக்க,

“அவர் இன்னிக்காவது ப்ரீயா நாலஞ்சு பிகர பார்க்கட்டும் மா, எத்தனை நாளைக்கு தான் உன்னையே பார்ப்பார்” என்று சுதன் பின்னே வந்த ரதி சொல்ல, சுதனோ தன் தந்தையை அழைக்க சென்று விட, அவர்கள் திரும்பி வரும் போது, லஷ்மி “ஏன்டி… எப்போ பார் வெள்ளையவே கட்டி அழுகுற? ஹாஸ்பிட்டல தான் வெள்ளைக் கோட் போடுற, இங்கயுமா இப்படி அலையணும்” என அவளின் வெள்ளை அனார்கலி சுடியைப் பார்த்து திட்டினார்.

உடனே ரவி “ஏய்… பிள்ளைய திட்டாத லஷ்மி” என்று பரிந்துக் கொண்டு வர, லஷ்மியோ அவரை முறைத்து “ஏன் சொல்லமாட்டீங்க? இப்படி லைட் கலரா போட்டு அழுக்காக்குறது, அதுக்கப்புறம் சரியா துவைக்கல, அப்படி இப்படின்னு, என்ன குற்றம் சொல்லி குதிக்க வேண்டியது”

“சரி, சரி… விடு, அதுக்காக பிள்ளைய திட்டாத”

“இம்ம்… சரி, இனிமே நீங்களே துவைச்சு போடுங்க உங்க பிள்ளைக்கு” என்று அவர் தீர்ப்பு சொல்ல, ரதியோ “ஹையா… ஜாலி ஜாலி, இனிமே அப்பா அழகா துவைச்சு தந்திருவார். அதுனால எந்தக் கலர் ட்ரஸ்ஸும் போடலாம்” என்று கூவ,

அருகில் இருந்த சுதனோ “அப்பா… எனக்கு…” என்று கேட்க, ரவியோ “சரிடா… உனக்கும் துவைச்சு தரேன்” என்று கூலாய் சொன்னார்.

அவர்கள் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து, அவர்களின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த பூஜாவோ “குட் பாமிலி பா…” என எண்ணிக் கொண்டாள். அதிர்ந்து இருந்தவளையும் சேர்த்து, அவள் தோழிகளிடம் இருந்து பிரித்து, மீண்டும் புகைப்படம் எடுக்க அழைத்து சென்றாள் ரதி.

உணவுகள் திறந்த வெளியில், புல்வெளியில், உணவை மட்டும் போலிக் கூரை அடியில் வைத்து, இயற்கை அழகோடு, ஒளிவிளக்குகளோடு பரிமாறப்பட்டன. இரு கைகளிலும், இரண்டு தட்டை வைத்துக் கொண்டு, பஃபட் முறையில் பரிமாறப்பட்ட உணவை வாங்கிக் கொண்டே சென்றாள் ரதி.

அப்போது திடீரென மிதமான தென்றல் வீச, ரதியின் துப்பட்டா லேசாக பறக்க, “அய்யய்யோ… ஷால் மட்டும் க்ரேவில விழுந்துச்சு… நான் கைமா தான்” எனத் தன் தாயின் திட்டை எண்ணி பயந்து, இரண்டு கைகளிலும் தட்டை வைத்துக் கொண்டு, துப்பட்டா விழாமல் இருப்பதற்காக, அவள் கைகளை தூக்கியும், இறக்கியும் ஆடிக் கொண்டிருந்தாள்.

அவள் பின்னே வந்தவனோ, “யாரிது இப்படி தட்ட வச்சுக்கிட்டு கதக்களி ஆடுறது” என அவள் தட்டில் இருந்து பார்வையை அவள் பக்கம் திருப்பினான். ‘வாவ்… மை ஏஞ்சல் தானா?’ என மனதில் கூவியவன், வேறு யாருமல்ல, சாட்ஷாத் நம் சசியே தான்.

அவள் நடனமாடுவதைப் பார்த்தவனோ, அவள் நிலைமை புரிந்து, “மே ஐ ஹெல்ப் யூ” என ஆங்கிலப் பட கதாநாயகன் போன்று புன்னகையுடன் வினவ, அவளோ அவஸ்தையாய் அவனை முறைத்தாள். பின்னே அவள் துப்பட்டா ஒரு தோளில் இருந்து இறங்கி, மறுப்பக்க தோளில் இருந்தும் வழுக்க ஆரம்பித்திருந்தது.

அவளின் இந்தப் போராட்டத்தை உணர்ந்தவன், அவள் கைகளில் இருந்த ஒரு தட்டை வாங்கியிருக்கலாம், இல்லை என்றால், கீழே வைக்குமாறு யோசனையாவது சொல்லியிருக்கலாம். ஆனால் அவனோ, அவள் முன்னே நின்று, துப்பட்டாவை பற்றுவதற்காக அவளை நோக்கி கையை நீட்டினான்.

ஆனால் அவளோ “ஏய்…..” எனத் தன் கைகளால் அவனைத் தடுக்கப் போக, இரு தட்டில் இருந்த பதார்த்தங்களையும் தன் மீதே கொட்டிக் கொண்டாள்.

சசியோ அவளைப் பாவமாக பார்த்து, “ச்ச்..சச்…” என உச்சுக் கொட்டி, “ஏங்க… இப்படி அவசரப்பட்டீங்க, நான் ஷால ஒழுங்கா பிடிச்சிருப்பேன்ல” என அபயமளிக்க வந்தவன் போலவும், அவள் உதவ வேண்டாம் என்று தடுத்தவள் போலவும் சொன்னவனைக் கண்களைச் சுருக்கி பார்த்து, “யூ… யூ…” எனக் கண்களை மூடி அவள் கத்தவும் தான், தன் மீது தான் கோபப்படுகிறாள் எனப் புரிந்து, அவ்விடம் விட்டு மறைந்தான்.

இதை அவர்கள் பின்னே பார்த்துக் கொண்டிருந்த, சபரியும் ஜெய்யும் கைக் கொட்டி சிரிக்க, அந்த சிரிப்பினூடே சபரி, “நான் தான் சொன்னேன்ல, உனக்கு இந்த பொன்னுலாம் செட் ஆகாதுன்னு” என்று ஓடி வந்தவனிடம் சொல்ல, “டேய்… ஒரு ஹெல்ப் பண்ணப் போனவனுக்கு… இந்த நிலைமையா… அதனால தான் டா, இப்ப யாருமே ஹெல்ப் பண்றது இல்ல” என வேதனையோடு சொன்னான் சசி.

ஜெய் “நான் தான் அப்போவே சொன்னேன்ல… உனக்கு டாக்டர் பொண்ணுல செட் ஆகாதுன்னு”

சசி “ஏன் டா… ஏன்… ஒரு ப்ளான் பெயிலியர் ஆனா, இன்னொன்னு வொர்க் அவுட் ஆகாமலையா போய்டும்”

சபரி “இருந்தாலும் உனக்கு… டாக்டர் பொண்ணா… கொஞ்சம் ஓவரா தான் டா இருக்கு”

“ஏன் டா, நீங்கலாம் இன்ஜினியர் பொண்ணக் கட்டிக்கும் போது, நான் டாக்டர் பொண்ணக் கட்டக் கூடாதா?” எனச் சசி சொல்ல, “டேய்… பார்த்து பிளான் போடுடா, அந்த பொண்ணு தான் என் பையனுக்கு டாக்டரா அப்ப அப்ப ட்ரீட்மென்ட் கொடுக்கிறா… அவ பாட்டுக்கு உன்மேல இருக்க கோபத்துல, என் பையன் மேல காமிக்கப் போறா” என்று ஜெய் நிஜமான அக்கறையோடுக் கூறினான்.

“உன் பையனா… அவன் பயங்கரமான ஆளு டா… அங்கப் பாரு, இப்பவே என்ன பண்றான்னு” என்று ஒரு திசை நோக்கி காட்டினான் சசி.

அங்கே ஸ்ரீராம், சங்கீயின் அருகில் நின்றுக் கொண்டு, அவனைப் போன்று அங்கே இருந்த ஒரு பெண் குழந்தையிடம், எதையோ நீட்டிக் கொண்டிருந்தான்.

“பார்த்தியா… இப்பவே உன் பையன் எப்படி கரெக்ட் பண்றான்னு” என்று சசி ஜெய்யிடம் கூற, உடனே சபரி “அப்படியே அவங்க சித்தப்பா குணம்… அவனுக்கு வந்திருச்சு டா” என்று கூறும் போதே அவர்களை நோக்கி சுதன் வந்து கொண்டிருந்தான்.

அவனைக் கண்ட ஜெய்யோ, ஒரு அடி தள்ளி நின்று “சபரி, நீயும் இவன விட்டு தள்ளி நில்லுடா, பின்னாடி பாரு, சசிக்கு தர்ம அடி கொடுக்க ஒருத்தன் வர்றான்” என்று முடிக்கும் போதே, அவன் நெருங்கி விட்டான்.

தன் ஆடையில் உணவு சிந்தி, கறைப் பட்ட உடையோடு சென்றவளை, சுதன் தடுத்து “என்னவென்று?” விசாரிக்க, அவளோ சசி தன் மீது தட்டை இடித்து தள்ளி விட்டான் என்று நடந்ததை கூற முடியாமல், அவனால் தான் இப்படி ஆயிற்று என்று அவ்வாறு கூறினாள். அப்படி கூறியதோடு நிற்காமல் “நீ போய் அவன்ட்ட கேளு” என்று அவனை துரத்தியும் விட்டாள்.

ரதி எப்போதும் இப்படி தான், பக்கத்து வீட்டு சிறுவர்களோடு இல்லை அவள் வயது தோழிகளோடு விளையாடுகிறேன் பேர்வழி என்று சண்டையிட்டு வருவதும் இல்லாமல், அவர்களை தட்டிக் கேட்டு, தன் சார்பாய் சண்டையிட சுதனையோ அல்லது தந்தையையோ இழுத்துக் கொண்டு செல்வாள்.

அவர்களும் இவள் முன் அவர்களை திட்டுவது போல் நடித்து விட்டு, அவள் சென்ற பின் “சாரி டியர்ஸ், இனிமே இந்தப் பிள்ள வந்தா விளையாட்டுல சேர்க்காதீங்க டா” என்று அறிவுறுத்துவார்கள். ஆனாலும் நண்பர்கள் இவர்கள் பேச்சை, கேட்பார்களா என்ன? இதுவும் ரதியின் ஒரு குணம்… சிறுப்பிள்ளைத் தனமான குணம்…

ஏற்கனவே, சுதனுக்கு மாலையில், அவர்கள் எல்லோரும் சஞ்சீவின் மூலம் அறிமுகமானவர்கள் தான் என்றாலும், சந்தோஷியின் சித்தப்பா, மாமாக்கள் என்ற முறையிலும் அவர்களுடன் சிறிது நேரம் பேசி பழக்கமானான்.

ஆனாலும் ரதியின் தொல்லையால், அவர்களிடம் சும்மா பேருக்கு நின்று பேசி விட்டு சென்றால், அதைப் பார்த்து அவள், தான் திட்டி விட்டதாக சமாதானம் ஆகிவிடுவாள் என்றெண்ணி தான் அவர்களிடம் வந்தான்.

ஆனால் அதற்குள், சசியோ “யூ ந்நோ மிஸ்டர் சுதன், நான் ஹெல்ப் பண்ணப் போறதுக்குள்ள, உங்க சிஸ்டர் தான், கைல ரெண்டு தட்ட வச்சுகிட்டு, அவங்க மேலேயே கொட்டிக்கிட்டாங்க” என்று தானாய், வலிய சென்று அவனிடம் தலையைக் கொடுத்தான்.

ஆனால் சுதனோ புன்னகைத்துக் கொண்டே, “தெரியும் சசி, அவ இப்படி தான் எதவாது அவசரமா பண்ணிட்டு, அடுத்தவங்கள திட்டுவா, சாரி… நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, கொஞ்சம் செல்லமா வளர்ந்துட்டா” எனக் கூறினான்.

சசியோ ‘அப்போ நம்மளா தான் அவுட் ஆகிட்டோமா?’ என உள்ளே எண்ணினாலும், வெளியே கம்பீரமாய் “இட்ஸ் ஓகே சுதன். ஐ கேன் அண்டர்ஸ்டான்ட்” எனச் சொல்லிக் கொண்டு அப்படியே அவனையும் அவர்களுடனே ஒன்றாய், சாப்பிட சொல்லி நால்வரும் ஒன்றி விட்டார்கள். பின் ஷிவா வந்து தான் “என்னபா… கிளம்பலாமா” எனச் சந்தோஷியோடு வந்து கேட்க, அவர்களும் சுதனிடம் கைக்குலுக்கி விடைப்பெற்று சென்றனர்.

சுதனிடம் இருந்து எல்லோரும் நகர்ந்து விட, சசி மட்டும் வந்து “ஆமா, உங்க சிஸ்டர் ஏன் ரெண்டு ப்ளேட் வச்சிருந்தாங்க? ஒன்னு ஆன்ட்டிக்கா?” என அப்பாவியாய் கேட்க, அவனோ “இல்ல ரெண்டுமே அவளுக்கு தான்” என்று சொல்லி, சசியை அதிர வைத்தான்.

மேலும் சிரித்துக் கொண்டே “அவ எப்போவும் சாப்பாட மட்டும், முன்னக்கூடியே, ரிசர்வ் பண்ணி வச்சுக்குவா” என்று விளக்கமளித்தான்.

சசியோ ‘ஐயோ… இவளுக்கு மூனு வேள சாப்பாடு போடுறதுக்கே, வருஷத்துல முன்னூற்றிஅறுபது நாளும் உழைக்கனும் போலேயே’ என எண்ணி சிலையானான். பின் சுதன் தான் அவனின் மயக்கத்தைப் போக்கி, அனுப்பி வைத்தான்.

சசியைப் போன்ற ஆண்மகன் சுதனுக்கு, இந்நேரம் சசியின் எண்ணம் தெரிந்திருக்காதா என்ன? நேரம் எட்டை கடக்கவும், முதலில் சஞ்சீவ், பிரஜீயைச் சாப்பிட வைத்து லஷ்மி குடும்பத்தினரோடு அனுப்பி வைத்தார் சரஸ்.

போகும் போது, கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும் என்று சங்கீயிடம் பிரஜீயும், பிரஜீயிடம் சாந்தியம்மாவும் சொல்லி சென்றனர். டவேராவில் ஏறும் போது, மீண்டும் சரஸ் வந்து பூஜாவையும் அவர்களுடனே அனுப்பி வைத்தார். லஷ்மி மற்றும், லதாவின் குடும்பத்தினர் தங்க, பக்கத்திலேயே ஒரு வீட்டை ஒரு வாரத்திற்கு அமர்த்தியிருந்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்த சொந்தங்களில் சிலர் அங்கு தங்கி, இன்று கல்யாணம் முடிந்து, அவரவர் ஊருக்கு சென்று விட, அதனால் இன்று இவர்களை அங்கே தங்க வைத்தனர்.

பின் லஷ்மி, இளையவர்கள் மூவரையும், தன் கணவனையும் அந்த வீட்டிற்கு போக சொல்லிவிட்டு, பிரஜி சஞ்சீவோடு, சரஸ் வீட்டில் தங்கி விட்டார். தன் அக்கா சொன்ன வேலைகளைச் செய்ய ஆயத்தமாகும் போது, பிரஜீயின் சோர்வைப் பார்த்து “நீ போய் ஓய்வு எடு மா, நான் பார்த்துக்கிறேன்” என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தார். சஞ்சீவோ, மற்றவர்களின் வருகைக்காக, கதவைத் திறந்து விடுவதற்காக முன்னறையில் அமர்ந்திருந்தான்.

அங்கோ ரதியுடன், ஒரு அறையில் உறங்க சென்ற பூஜாவிடம், சுதன் “பூஜா” என அழைத்தான். அவளோ திடுக்கிட்டு திரும்ப, “ஆல் தி பெஸ்ட்” என்று அவன் சொல்லவும், குழம்பிவிட்டாள்.

பின் அவனே “எதுக்குன்னு பார்க்குறியா? தூக்கம் வர்றதுக்கு தான்” என்று அவன் சொல்லி சிரிக்கவும், மேலும் அதிர்ந்து ஸ்தம்பித்து விட்டாள். அதற்குள் உள்ளே சென்ற ரதி, தன் பின்னே பூஜா வராமல், வெளியே நின்றவளைப் பார்த்து, உள்ளே இழுத்துக் கதவடைத்தாள்.

இருவரும் உறங்க சென்றனர். ஆனால் பூஜாவிற்கு தான் சுதனின் வார்த்தைகளால் உறக்கம் வரவில்லை. இங்கோ பிரஜி அவர்கள் வரும் முன்னே ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விட்டாள். பின் சரஸ் மணமக்களுடன் வர, லதாவும், சேகரும் அந்த வீட்டிற்கும், ரங்கன் மேல்மாடிக்கும் சென்று விட, புஷ்பாவை லஷ்மி தான் அலங்கரித்தார். தன் அறைக்கு வந்த சஞ்சீவ், சேலையை கூட மாற்றாமல் படுத்திருந்தவள் அருகில், கண்ணில் காதலோடு, முகத்தில் புன்னகையோடு சென்றான்.

மாயம் தொடரும்…….

error: Content is protected !!