இது என்ன மாயம் 42

இது என்ன மாயம் 42

பகுதி 42

மறுநாள், அனைவரும் சென்னை திரும்பினர். இவர்கள் அனைவரும் வந்து சேர இரவானது. லஷ்மி குடும்பத்தினர், ரயில் நிலைய சந்திப்பில் இருந்தே தங்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். அதனால், மதன், புஷ்பா, மற்றும் சரஸ், ரங்கன் மட்டும் வீடு திரும்பினர். பிரஜி, அவர்களுக்கு இரவு உணவாகத் தோசை வார்த்து தந்தாள். இதற்கிடையே ஒரு நாள், சங்கீ ஊருக்கு செல்லும் முன் சந்தோஷியோடு வந்து, பிரஜீயைப் பார்த்து விட்டு சென்றாள்.

மறுநாள் காலை விடியலில், ஒருக்களித்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள் அருகில் சென்று, அவளை அணைத்து, அவள் காதில் “ஏய்… பிரஜூ… எந்திரி…” என எழுப்பினான் சஞ்சீவ்.

பிரஜீயோ “இம்ச்சு… நீங்க எந்திரிச்சுப் போங்க… நான் பிறகு எந்திரிக்கிறேன்” என்று கண்ணைத் திறக்காமலே கூறி, அலுத்துக் கொண்டே அவனுக்கு முதுகு காட்டி, திரும்பி படுத்துக் கொண்டாள்.

சஞ்சீவும் சரி சிறிது நேரம் உறங்கட்டும் என விட்டுவிட்டு, எழுந்து, சரஸ் கொடுத்த டீயைக் குடித்து விட்டு, குளித்து விட்டு, வந்தான்.

அப்போதும் எழாமல் படுத்திருந்தவளிடம் சென்று, முட்டிக்காலிட்டுக் குனிந்து, தன் தலையை ஆட்டி, அவள் மீது நீர் துளிகளைச் சிதற விட்டான். அவளோ “இம்ஹும்ஹும்…” எனச் சிணுங்கிக் கொண்டே எழுந்து, சாய்ந்தமர்ந்து, குனிந்திருந்தவனின் கழுத்தில் இருந்தத் துண்டைப் பற்றி இழுத்தாள்.

அவனும் அவள் மீது சரியப் போக… ஆனால் கையால் மெத்தை மீது ஊன்றி சமாளித்தான். “ஏய் என்னடி காலங்காத்தால… செம… ரொமான்ஸ் மூட்ல இருக்க போல” எனக் கண்ணாடிக்க, “இம்…” என இழுத்து, அவன் தலையில் கொட்டி “இதுக்கு தான் இழுத்தேன்” எனக் கூறி சிரித்தாள்.

“உன்ன…” என அவன் பொய் கோபம் கொண்டு, அவளின் இடுப்பில், கழுத்தில் எனக் கைகளால் குறுகுறுப்பு மூட்ட, “ஹேய்ஈஈஈ….. வே..வேணாம்… விடுங்க…” என அவளைச் சிரிக்க செய்து… சிணுங்க வைத்து தான் விட்டான்.

“ஆமா… என்ன இன்னிக்கு சீக்கிரம் குளிச்சுட்டீங்க? வெளிய போறீங்களா?” எனக் கேட்டாள். “ஆமா… ஆனா வெளிய போறீங்களானு கேக்கக்கூடாது, வெளிய போறோமான்னு கேட்கணும்…” என்றான்.

அவளோ “எங்க போறோம்?… என்ட்ட சொல்லவே இல்ல…” அவனோ “இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும்… சரி, சரி கிளம்பனும்… எங்கம்மா டிபன் செய்யப் போறாங்க… நீ இன்னும் தூங்கிட்டு இருக்க, கொஞ்சம் கூட பயமே இல்ல… எந்திரி… எந்திரி…” என எழுந்து, அவள் எழ ஒரு கைக் கொடுத்து, தன் துண்டால் அவளைப் பொய்யாக விரட்டினான்.

அவளோ “நான் சீக்கிரமா எந்திரிச்சுட்டேன்… ஆனா, அம்மா தான் என்ன போய் தூங்குமான்னு சொன்னாங்க” எனச் சொல்லி விட்டு, வாயைச் சுளிக்க, “உன்ன சொல்லக் கூடாது… எல்லாம் எங்கம்மா கொடுக்குற இடம்…” எனக் கூறி, அவளோடே வெளியே சென்று, சரஸிடம் “ம்மா… எல்லாம் உன் வேலை தானா… நீ தூங்கிட்டு அவள டீ போட சொல்ல வேண்டியது தான” எனப் பஞ்சாயத்து வைத்தான்.

சரஸோ “பாவம் டா… மூனு நாளும் தனியா அவ தான சமச்சிருப்பா, அதான் இன்னிக்கு ரெஸ்ட் எடுக்கட்டும்னு விட்டேன். அவ சீக்கிரமே எந்திரிச்சு வந்தா தான்… நான் தான் போய் தூங்குமான்னு அனுப்பி விட்டேன்” என மேலும் சமாதானம் சொல்ல, அதற்குள் பல் துலக்கி விட்டு வந்த பிரஜி, உணவு மேஜையில் இருந்த தன் டீயைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

“இன்னும் நல்லா சொல்லுங்க மா… மூனு நாளும் இது வேணும், அது வேணும்னு, என்ன செய்யச் சொல்லி, மூக்கு பிடிக்கத் தின்னுட்டு, எப்படி பேசுறார்னு பாருங்க மா” என அவர் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து, அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

அதற்குள் மதனும் புஷ்பாவும் குளித்து விட்டு, புத்தாடையுடன் வர, “ஏன்டா… எப்போ பாரு பிரஜீயை ஏதாவது சொல்லிட்டே இருக்க” எனச் சொல்ல, அதற்குள் நடைப் பயிற்சி சென்ற ரங்கனும் வந்து விட, “என்னடா… சஞ்சீ… காலங்காத்தல பஞ்சாயத்து கூட்டித்தியா…” எனக் கேட்க, “அப்பா… நீங்களுமா?” என அவன் கேட்கவும், அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தனர்.

உடனே சஞ்சீவ் “புஷ்பா… நீயாவது எனக்கு சப்போர்ட் பண்ணக் கூடாதா?” எனப் பரிதாபமாய் கேட்டான்.

அவளும் புன்னகைத்தவாறே “சரி அத்தான்” எனச் சொல்லி, “இனிமே யாரும் எங்க சின்ன அத்தான ஒன்னும் சொல்லக் கூடாது… அத்த உங்களுக்கு தான் முக்கியமா சொல்றேன்” என்று அவளும் பேசிக் கொண்டே தன் அத்தையிடம் சொல்ல, பிரஜி எழுந்து ரங்கனுக்கும், அவளுக்கும், மதனுக்கும் டீ ஊற்றி தர, சஞ்சீவோ “என்ன இருந்தாலும் அத்தப் பொண்ணு… அத்தப் பொண்ணு தான் பா” எனப் பெருமையாய் சொன்னான்.

காலை உணவு சமைக்க பெண்கள் செல்ல, பிரஜி தன் அத்தையிடம் குளித்து விட்டு வருவதாக சொல்லி சென்றாள். அவள் குளித்து விட்டு, நைட்டி அணிந்து வரும் போது, சஞ்சீவ் அவளுக்காக அறைக்குள் காத்திருந்தான்.

அதைக் கண்டவளோ “என்ன சஞ்சீவ்?” எனக் கேட்டுக் கொண்டே பீரோவை திறந்து, ஒரு சேலையை எடுக்கப் போக, அதற்குள் அவள் பின்னே வந்து, அப்படியே இடையோடு கட்டியணைத்த சஞ்சீவ் “ஹேய்… பொண்டாட்டி… இன்னிக்கு நல்ல சேலையா கட்டு…” என அவள் காதில் சொல்ல, அவளோ அதே நிலையிலேயே “ஏன்…” என கேட்டுக் கொண்டே, சேலையைத் தேடினாள்.

அவனோ அதே நிலையிலேயே, அவள் வலது கையோடு தன் கையை வைத்து, கல்யாணத்தன்று அவள் கட்டிய பட்டுச் சேலையை உருவப் போக, “என்னங்க பட்டுச் சேலையா… எதுக்கு? இம்ஹும்… என்னால கட்ட முடியாது” எனச் செல்லமாய் மறுத்தாள்.

“ஓகே… நோ ப்ராப்லம், உன்னால கட்ட முடியாதுன்னா, நான் கட்டி விடுறேன்” என்று குறும்பாய் கூறினான்.

“சஞ்சீவ்வ்வ்…” என அவள் இழுக்க, “என்னோட செல்ல பொண்டாட்டில… நான் சொன்னா… கேப்பியாம்” என இது போல நிறைய சொல்லி, அவளைச் சம்மதிக்க வைத்தான்.

“சரி, சரி கட்டு, டைம் ஆச்சு” என அவன் அவசரப்படுத்த, “நீங்க போங்க” என அவள் சொல்ல, “ஏன்? இம்ஹும்… நான் போ மாட்டேன்” என மறுத்தவனை, “ஐயோ சஞ்சீவ், வெளிய மாமா… அம்மாலாம் இருக்காங்க… அவங்க தப்பா நினைப்பாங்க… ப்ளீஸ்…” எனத் திரும்பி அவன் மார்பில் சாய்ந்து சொன்னாள்.

அப்பொழுதும், அசையாமல் நின்றவனை, “என் செல்ல சஞ்சுல…” என அவனைப் போல் சொல்லி, அவன் காதில் ரகசியமாய் ஏதோ சொல்லி, சமரசம் செய்து வெளியே அனுப்பி வைத்தாள்.

பின், அவள் சேலை அணிந்து வரும் போதே, தன் தந்தையின் பேச்சுக் குரல் கேட்கிறதே என ஆவலாய் எட்டிப் பார்க்க, அங்கு ராம் ரங்கனிடம் பேசிக் கொண்டிருந்தார். “அப்பா……. வாங்கப்பா” என விளித்து, அழைத்துக் கொண்டே சென்றவள், உணவு மேஜையின் நாற்காலியில் கோதை அமர்ந்திருப்பதைப் பார்த்து, அப்படியே நேரே தன் தந்தையிடம் செல்ல இருந்தவள், வலப்புறம் திரும்பி தன் அன்னையிடம், திரும்பி சென்றாள்.

அதைப் பார்த்து சிரித்த ராமோ, “பார்த்தீங்களா… சம்பந்தி, எப்படி இருந்தாலும், பொம்பள பிள்ளைங்க அம்மாவ தான் தேடிட்டு போகுதுங்க” எனச் சொல்ல, அதை ஆமோதித்த ரங்கனோ “ஆமா சம்பந்தி, ஆனா எங்க வீட்ல பொம்பள பிள்ள இல்லையேன்னு நாங்க குறப்பட்டுட்டு இருந்தோம், அதுலயும் என் மனைவிக்கு பொண்ணுன்னா உசிரு… ஆனா இப்போ பிரஜீனால, அந்தக் குறையே இல்ல” எனச் சொன்னார். இதை விட மகளைப் பெற்ற ஒரு தந்தைக்கு வேறு என்ன பெருமை வேண்டும். யார் மனதையும் நோக அடிக்காமல், அனுசரித்து, அந்தக் குடும்பத்திலேயே ஒன்றி, அந்த குடும்பத்தினராலே கொண்டாடி பாராட்டு பெரும் மகளை எண்ணி பெருமிதம் கொண்டார்.

ஆனால் இங்கு கோதையோ “அம்மா…” என வந்த மகளைப் பாராமல், புஷ்பாவிடமே, பேசிக் கொண்டே இருந்தார். புஷ்பாவிற்கே சங்கடமாகி போனது… ஆனால் பிரஜீயோ, அலட்டிக் கொள்ளாமல், சமயலறைக்கு சென்று, சரஸிடம் “அம்மா… எனக்கு பசிக்குதுமா” எனச் சொல்ல, அவரோ “நீ போய் தட்ட எடுத்து உட்காரு மா… புஷ்பா…..” என தன் மூத்த மருமகளை அழைத்தார்.

கோதையின் முன்னேயே, புஷ்பா சமைத்த உணவுகளை எடுத்து வைக்க, சரஸ் அமர்ந்தவாறே அவளுக்கு பரிமாறினார். அதைப் பார்த்தவரோ, தன்னைப் பாராமல், சமாதானம் செய்யாமல் இருப்பவளைப் பார்த்து, சிறிது கோபப்பட்டாலும் “எல்லாம் உங்கள சொல்லணும் சம்பந்தி… நீங்க செல்லம் கொடுத்து இவள கெடுத்து வச்சிருக்கீங்க…” எனச் சரஸை சொல்ல…

அவர் பதில் சொல்லும் முன்னே, “அம்மா… அவங்க முன்னாடி இருந்து இப்படி தான், அப்போ எங்கப்பாவ சொல்வாங்க, இப்ப நீங்க மாட்டிக்கிட்டீங்க…” என அசால்ட்டாய் சொல்லி, “ம்மா… எனக்கு ஒரு தோசை வைங்க மா” எனச் சொல்ல, சரஸ் ஒரு தோசை வைக்க, கோதை அவளுக்கு ஒரு கொட்டு வைத்தார்.

“ம்மாஆ….” என அவள் தலையைத் தேய்த்துக் கொள்ள, “வர வர உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு” என கண்டிக்க, மனதுள் ‘அப்படி வாங்க வழிக்கு’ என நினைத்து, “நீங்க தான உங்க பொண்ணோட பேசிட்டு இருந்தீங்க… அப்புறம் என்ன?” என அவள் குற்றம் சுமத்த,

“ஆமா… இனிமே புஷ்பா தான் என் பொண்ணு… நீ இல்ல” எனச் சொல்ல, “அப்பாடா… கிரேட் எஸ்கேப்….” என அவள் ஆர்பரிக்க, இந்த முறை சரஸ் அவள் மண்டையில் கொட்டி, “பிரஜி… அம்மா… உன்ன திட்டுறதுல தப்பே இல்ல” எனக் கடிந்தார்.

புஷ்பா இவர்கள் எல்லோரையும் பார்த்து முழித்துக் கொண்டு அமைதியாய் இருந்தாள். பின் வயிறு நிரம்பிய பிரஜி, “புஷ்பா, மதன் மாமாவும், நீயும் உட்காருங்க, சாப்பிடலாம். நான் போய் தோசை வார்க்கிறேன்… நீ… போய் அப்படியே மாமாவையும் கூப்பிட்டு வந்திரு” எனச் சொல்லி, அனுப்பி வைத்தாள்.

கோதையும், ராமனும் சாப்பிட்டு  விட்டோம் என்று சொன்னதால், அவர்களுக்கு சஞ்சீவ், குளிர் பானம் மட்டும் வாங்கி கொடுத்தான். பிரஜி அடுத்து தன் கணவனுக்கும், அத்தைக்கும் தோசை வார்க்க, சாப்பிட்டு முடித்த புஷ்பா அவளிடம் வந்து, “நீங்க போய் பரிமாறுங்க… நான் சுடுறேன்” என்று அவளுக்கு ஓய்வு கொடுத்தாள்.

பின்னர் ஒரு வழியாய், சஞ்சீவையும், பிரஜீயையும் மறு வீடு போல், தங்கள் வீட்டிற்கு விருந்திற்கு, இரண்டு நாட்கள் அழைத்து சென்றார்கள். மதனையும் புஷ்பாவையும் சேர்த்து விருந்திற்கு அழைத்தார்கள். ஆனால் அவர்கள் இன்று, வேறொரு சொந்தப்பந்தம் வீட்டிற்கு விருந்துக்கு செல்வதால், வேறு ஒரு நாள் வருவதாகச் சொல்ல, அவர்களைக் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைப்பு விடுத்து சென்றனர்.

வீட்டிற்கு காரில் செல்லும் போது தான், “என்னப்பா அண்ணன காணோம்?” எனக் கேட்டாள். “அவன் உன்னையும், மாப்பிள்ளையையும் வெல்கம் பண்றதுக்காக வீட்ல இருக்கான் மா” என சொன்னார் தந்தை.

அவள் தந்தை சொன்னது போலவே, பிரஜீக்கு பலத்த வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தான் ரிஷி. தன் தங்கையை மகிழ்ச்சியாக வரவேற்க, வீட்டை அலங்கரித்திருந்தான். மேலும் வீட்டிற்கு வந்த பிரஜி, சஞ்சீவுக்கு, கோதையும் அவர்கள் பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் சேர்ந்து ஆர்த்தி எடுக்கப்பட்டு, உள்ளே நுழைந்தவர்களை, பிரஜீயின் பக்கத்து வீட்டு குட்டீஸும், அவள் கல்லூரி தோழிகள் சிலர் வரவேற்று, அவளைச் சூழ்ந்துக் கொண்டனர்.

பிரஜி சத்தியமாக இப்படிப்பட்ட வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. பின்னர் அவள் கல்லூரி தோழிகளுக்கு, முன்பே சஞ்சீவும் அறிமுகம் என்பதால், நன்றாக அவனையும் சேர்த்து கிண்டல் செய்துக் கொண்டிருந்தனர்.

ரிஷி, அவர்கள் எல்லோரும் பேசி முடிக்கவும், பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு இனிப்பைக் கொடுத்து, அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். அவள் கல்லூரி தோழிகள் மூவரையும், கோதை, மதியம் சாப்பிட்டு விட்டு செல்லச் சொல்ல, ஆனால் அவர்களோ பிரஜியையும், சஞ்சீவையும் கவனிக்க சொல்லிவிட்டு, கிளம்பி விட்டனர்.

ஆனால் செல்லும் போது, அந்த மூவரில் ஒருத்தி மட்டும், ரிஷியிடம் கண்களால் விடைப்பெற்று சென்றாள். ரிஷியும் கண்களாலே, அவளுக்கு பதில் தர… இந்தக் கண் விடு தூதை, சஞ்சீவ் கண்டுக்கொண்டான்.

சிறிது நேரம் சஞ்சீவுடன் ரிஷி பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய அலைப்பேசியில் அவனுக்கு அழைப்பு வர, அதை எடுத்து பேசி விட்டு, “கொஞ்சம் ஆபீஸ் வரைப் போக வேண்டும் பா… நீங்க சஞ்சீவை கவனிச்சுக்கோங்க… நான் லஞ்ச்சுக்கு வந்திருவேன்” என்று தன் தந்தையிடம் சொல்லிவிட்டு, சஞ்சீவிடமும் விஷயத்தைச் சொல்லி மன்னிப்பை வேண்டி விட்டு அலுவலகம் சென்றான்.

ராமோ “பிரஜி போ மா… மாபிள்ளைய உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லு மா” என அனுப்பி வைத்தார்.

அவளுக்கும் தன் அறையைப் பார்க்கும் ஆவல், அதிகமாய் இருந்தாலும், தன் அன்னை தனியே விருந்து சமைப்பதை உணர்ந்து, சஞ்சீவிடம் “அதாங்க என் ரூம்… நீங்க போங்க, நான் வரேன்” என்று ஒரு அறையைச் சுட்டிக் காட்டிக் கூறி விட்டு, சமையலறைப் பக்கம் திரும்ப, ராம் “என்னமா… மாப்பிளைய தனியா போ சொல்ற, நீயும் கூடப் போ…” என்றார்.

அவளோ “இல்லப்பா… அம்மாக்கு ஹெல்ப் பண்ணலாம்னு…” என அவள் முடிக்கும் முன்னே, “அதெல்லாம் உங்கம்மா செஞ்சிடுவா… நான் இருக்கேன்ல, நான் பார்த்துக்கிறேன்… நீ போ… நீயும் போய் ரெஸ்ட் எடு” என்று துரத்தாத குறையாய் அனுப்பி வைத்தார்.

உள்ளே சஞ்சீவுடன், தன் அறைக்கு சென்றவளோ, அவன் இருப்பதைக் கூட உணராமல், அறை வாயிலின் உள்ளே நின்றவாறே தன் அறையை அளந்தாள். பின் உள்ளே வந்த பின், சூரியனை பூமி சுற்றிக் கொண்டே, தன்னை தானே சுற்றுமே, அது போல அவளும் அறையை ஒரு முறை சுற்றி, பின் நின்று, அதே இடத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டாள். அதைக் கண்ட சஞ்சீவுக்கு, அவள் தன் அறை மீது வைத்திருந்த பாசம் புரிந்தது.

ஆனாலும் “என்னமா மகாராணி… மைசூர் பேலஸ்ஸ சுற்றிப் பார்த்த மாதிரி… இப்படிப் பார்க்குற?” என்று சீண்டினான்.

அவளோ, தன் இடுப்பில் கை வைத்து, அவனை முறைத்து பார்த்தாலும் “இது அத விட ஸ்பெஷலான இடம் எனக்கு” என்று சிலாகித்து பதில் சொன்னாள்.

“அப்படி என்ன ஸ்பெஷல்? எங்க சொல்லு… பார்க்கலாம். நானும் என் பொண்டாட்டி வளர்ந்த இடத்தோட வரலாற கேட்குறேன்” என்று கூற, “நாங்க இந்த வீட்டுக்கு வரும் போது, நான் பிஃப்த் (fifth) தான் படிச்சிட்டு இருந்தேன், அப்புறம் எங்கப்பாட்ட எனக்கு ரூம் வேணும் பா ன்னு சொல்ல, அவரும் இந்த அறையைக் கொடுத்தார். இதோ… இங்க பாருங்க…” என அங்கு சுவரோடு ஒட்டியிருந்த கப்போர்டை காண்பித்தாள்.

அதில் ஏதோ குட்டி குட்டியாய், நீளப் போக்கு வரிசையில், ஸ்டிக்கர் இருந்தது. அவன் அதைப் பார்த்து, “ஹே… இது நாம சின்னப் பிள்ளையா இருக்கும் போது வந்த கார்ட்டூன் தான, இப்பலாம் இந்த மாதிரி பேப்பர் ஸ்டிக்கரே இல்லேல…” என அவனும் தன் சிறு வயது மலரும் நினைவுகளில் மூழ்க,

பிரஜீயோ “ஆமா சஞ்சு… இது எல்லாம் அப்போ வாங்குனது தான். நான் என்னோட ஒவ்வொரு பர்த்டேக்கும், நான் எவ்ளோ வளர்ந்திருக்கேன்னு, இந்த கப்போர்ட்ல நின்னு, குறிச்சு வச்சு, அதுல ஸ்டிக்கர் ஓட்டுவேன். பென்சில் பேனால குறிச்சா அழிஞ்சிடும்னு இப்படி ஐடியா பண்ணேன்” என அவள் ஆவலாய் சொல்ல,

அவனும் அருகே சென்று, அந்த ஸ்டிக்கர் மீது அவள் வருடத்தையும் எழுதி வைத்திருந்ததைப் பார்த்து, மனதில் மெச்சி “ஹே பொண்டாட்டி… டென்த் வரைக்கும் நல்லா ஹையிட்டா வளர்ந்திருக்க போல, உங்க அண்ணன விட நீ ஹையிட்டா இருந்திருப்ப போல, அப்புறம் காலேஜ் போற வரைக்கும் வளர்ந்திருக்க, அப்புறம் வளரவே இல்ல போல…” என அவன் கேலியாய் சொல்ல,

“இம்… அதுனால தான் உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்… வளர்ந்திருந்தா… வீட்ல பார்த்த அமெரிக்கா மாப்பிளைய கட்டிருப்பேன்” என அவளும் சோகமாய் சொல்ல, “அடிப்பாவி… உன்ன…” என அவளை நெருங்கி கப்போர்டில் சாய்த்து, சிறை செய்து, காதலாய் அவள் வாயடைத்தான்.

பின் அவள் “எங்க நீங்க நில்லுங்க… பார்ப்போம்… உங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவோம்” என அவனையும் நிற்க செய்து, சொன்னதை செய்தாள். அவன் கூட, “ஏய்… நான் என்ன இனி வளரவா போறேன் ?” என அவன் சொன்னதையும் பொருட்படுத்தாமல், தற்சமயம் ஸ்டிக்கர் இல்லாத குறையால், தான் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி, தேதியையும் மார்கரால் எழுதி வைத்தாள்.

அடுத்த கப்போர்டை திறந்து, அவள் சிறுவயதில் உபயோகித்து, குட்டியாகி விட்ட பென்சில், பேனா, அதை வைத்திருந்த பென்சில் பாக்ஸ், அவள் பயன்படுத்திய கலர் பென்சில், க்ரேயான்ஸ், வாட்டர் கலர், அதை விட உச்சக்கட்டமாய்… இரண்டாம் வகுப்பு வரை, சுற்றிலும் அவள் கடித்து வைத்திருந்த ஸ்லேட்டையும் காண்பித்தாள்.

அதைப் பார்த்த சஞ்சீவோ “ஹேய்… என்னடி இது, விட்டா உனக்குன்னு… நீ பயன்படுத்திய பொருளுன்னு… ஒரு குட்டி கண்காட்சியே வைக்கலாம் போல” எனச் சொன்னாலும், தான் இது போல் எல்லாம் சேர்த்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது அவன் மனதுள்.

ஆனால் அவன் சொன்னது அவள் காதுகளில் விழுந்தால் தானே, அவளோ தன் சிறுவயது உலகிற்கு சென்றவள், மேலும் தான் உபயோகித்த செப்பு சிட்டி, மற்றும் அவள் எட்டாம் வகுப்பில் எழுதிய ஒரே ஒரு பரீட்சை பேப்பரைக் கூட வைத்திருந்தாள்.

அதைப் பார்த்தவன், “ஏய்… உனக்கு ஆட், ஈவன் நம்பர்ஸ் கூட தெரியாத? அதுல போய் தப்பு வாங்கியிருக்க” என தேர்வு தாளை ஆராய்ந்து கேட்டவனிடம், “ஐயோ… அத ஏன் கேக்குறீங்க? எனக்கு இப்பவும் அதுல குழப்பம் தான் சஞ்சு” என நெற்றி சுருக்கி சொல்லி சிரித்தாள்.

“அடி… மக்கு பொண்டாட்டி…” எனச் செல்லமாய் இழுத்து சொன்னாலும், அவளைத் தோளோடு அணைத்து, “இதெல்லாம் பத்திரமா வச்சிரு… நம்ம குழந்தைங்க வளர்ந்து, பெரியவனா ஸ்கூல்ல அஞ்சாவது, ஆறாவது படிக்கும் போது, இதெல்லாம் காமிக்கலாம். உங்கம்மாவோட இலட்சணத்த பாருங்க டான்னு” என அவன் கேலி செய்ய, “போங்க…. சஞ்சீவ்” என அவனைச் செல்லமாய் அடித்தாள்.

அதற்குள் கோதை சாப்பிட அழைக்க, உணவு மேஜையில் சாப்பிட அமர்ந்தனர். “ரிஷி இன்னும் வரலையா மாமா?” என ராமிடம் சஞ்சீவ் விசாரிக்கும் போது, அவனே வந்து விட, அனைவரும் அமர்ந்து உண்டனர்.

சாப்பிடும் போது, பிரஜி ராமிடம் பேசிக் கொண்டே சாப்பிடுவதைப் பார்த்து, கோதை “ஏய்… பிரஜி, இன்னும் கொஞ்சம் கொஞ்சமா சின்னப் பிள்ள மாதிரி, பேசிட்டே சாப்பிடுறத விடவே இல்லையா” என தன் அர்ச்சனையை ஆரம்பிக்க, உடனே சஞ்சீவோ “அத்த… பாவம் “ என அவன் ஆரம்பிக்கும் முன்னரே, “நீங்க சும்மா இருங்க மாப்பிள்ள” என அவனையும் அதட்டினார்.

ஆனால் இந்த அர்ச்சனையின் நாயகியோ, தன் தமையனோடும், தந்தையோடும் பேசிக் கொண்டே தான் இருந்தாள். சாப்பிட்டு முடித்த பின், வேகமாய் எழப் போனவளை, “வயித்துல பிள்ள இருக்கு, மெதுவா எந்திரிக்கனும்னு கூடவா தெரியாது? எங்கிட்டாவது இடிச்சுக்கப் போற பிரஜி. இன்னும் சின்னப் பிள்ளை மாதிரி இருக்காத… உனக்கே குழந்தை வரப் போகுது, ஞாபகம் வச்சுக்கோ” எனக் கோதைக் கடிந்தார்.

அதற்குள் மீண்டும் சஞ்சீவ் “அத்த…” என அழைக்க, “சும்மா இருங்க மாப்பிள்ள, உங்க வீட்டுல எல்லோரும், இவள ரொம்ப தாங்குறீங்க, அதான் இப்படி இருக்கா, நீங்க எல்லோரும் நல்லவங்களா இருக்க போய் பரவாயில்ல, இதே வேற கொடுமைப் படுத்துறவங்கக் கிட்ட மாட்டியிருந்தா… அவ வாழ்க்கையே போயிருக்குமே. இனியாவது குழந்தை பிறக்கிற வரைக்கும், சொன்னப் பேச்சைக் கேட்டு நட பிரஜி” எனக் கைக் கழுவ சென்ற பிரஜீயை தன் கண்களால் தொடர்ந்துக் கொண்டே சொன்னார்.

தன் அன்பை, அக்கறையை தன் அதட்டல் மூலம் காண்பித்தவர், மீண்டும் சஞ்சீவ் “அத்த…” என்றதில் கலைந்தார். கோதைக் கடுப்பாகி ‘இவர் ஒருத்தர்… பொண்டாட்டிய திட்ட விட மாட்டார், அத்த அத்தன்னு… வந்திருவார்… ஆனா இவருக்கு பொண்டாட்டி ஆகுறதுக்கு முன்ன, எனக்கு அவ மக தான. எனக்கு உரிமையில்லையா என்ன?’ என மனதுள் எண்ணி, வெளியே “ம்ச்சு… என்ன மாப்பிள்ள… இப்ப என்ன உங்க பொண்டாட்டிய திட்டக் கூடாது, அவ்ளோ தான!” என எரிச்சலாய் கேட்க,

சஞ்சீவோ “இல்ல அத்த… எனக்கு கொஞ்சம் மோர் ஊத்துங்க அத்த. அந்தா… உங்கப் பக்கத்துல இருக்கு பாருங்க” எனப் பாவமாய் கேட்டான்.

இதைக் கண்ட ரிஷியும் பிரஜீயும் சிரிக்க, கோதையோ “அச்சச்சோ… மனிச்சுக்கோங்க மாப்பிள்ள… உங்கள கவனிக்கல” என அவனுக்கு மேலும் சாதத்தைப் போட்டு, அவன் கேட்ட மோரை ஊற்றினார்.

 

மாயம் தொடரும்…….

error: Content is protected !!