இது என்ன மாயம் 44

இது என்ன மாயம் 44

பகுதி 44

பிரஜீயை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த சஞ்சீவைப் பார்த்து, எழுந்த புஷ்பா “எப்போ அத்தான் வந்தீங்க?” எனக் கேட்டாள். அவளின் குரலில் கலைந்தவனோ, அவளைப் பார்த்து நெற்றி உயர்த்தி, “நீயும்… இங்க தான் இருக்கியா புஷ்பா, இப்ப தான் வந்தேன் மா, நல்லா இருக்கியா?” எனக் கேட்டான்.

“இம்… நல்லா இருக்கேன் அத்தான், நீங்க நல்லா இருக்கீங்களா?” என அவன் கையில் இருந்த பையைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“இம்… என்ன படிக்கிறியா? பாடம்லாம் ஈஸியா இருக்கா?” எனக் கேட்க, அவளோ “ஆமா அத்தான். பரவாயில்ல… அத்தான், சரி நான் கீழப் போறேன். வர்றேன் பிரஜி” எனக் கீழே சென்று விட்டாள்.

அதுவரை அமைதியாய் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்த பிரஜீயை, அப்போது தான் திரும்பிப் பார்த்தான் சஞ்சீவ். உடனே அவள் அருகில் சென்று, அவள் கைப் பற்றி “என்ன பிரஜீமா… நல்லா இருக்கியா? குழந்த நல்லா இருக்கா? மாத்திர மருந்துலா ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடுறியா?” என மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கினான்.

அவளோ புன்னகைத்து “ஐயோ… மெதுவா… மூச்சு விட்டு கேளுங்க, இரண்டு பேரும் அம்மாவோட கவனிப்புல சூப்பரா இருக்கோம். எல்லாம் கரெக்டா சாப்பிடுறேங்க, அதான் தினமும் போன்ல கேப்பீங்கள, பிறகென்ன? ஆமா, நீங்க என்ன இளச்சுப் போன மாதிரி தெரியுறீங்க. ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா? இம்ம்…” எனச் செல்லமாய் கோபப்பட்டாள்.

மேலும் “சரி வாங்க, கீழப் போய் டீ குடிக்கலாம், ஏதாவது டிபன் செஞ்சு தர்றேன்” எனப் பற்றிய அவன் கையை விடுத்து, அவள் அவன் கையைப் பற்றி அழைத்தாள்.

“ஹே… அரும பொண்டாட்டி, அம்மா கொடுத்த டீயக் குடிச்சிட்டு தாண்டி வர்றேன், கூடவே பலகாரமும் தந்தாங்க… நீ வா முதல…” என அவளை, மாடியில் இருந்த அவர்கள் அறைக்கு அழைத்து சென்றான்.

“என்னங்க… இது? வாங்க கீழப் போகலாம், அம்மா ஏதாவது நினைக்கப் போறாங்க. எல்லோரும் கீழ வேற இருக்காங்க” எனச் சொல்ல, “ஏய்… இங்க வந்ததுல இருந்து, நீ ரொம்ப பண்ற டி… கீழ எல்லோரும் இருக்காங்கன்னு தான், நான் மேல வந்தேன். இதுக் கூட தெரியாம மக்குப் பொண்டாட்டியா இருக்கியே… உன்னலா வச்சு…” என அவன் முடிக்காமல் விட, “நீங்க அங்க சுற்றி, இங்க சுற்றி எதுக்கு வருவீங்கன்னு தெரியும்” எனச் சிரிப்போடு வெட்கப்பட்டாள்.

“இம்ச்சு…” என வேண்டுமென்றே ஆச்சரியப்பட்டு, “புரிஞ்சிருச்சா… அப்போ நமக்கு நல்லதாப் போச்சு” எனச் சொல்லி கண்சிமிட்டி, மேற்கொண்டு அவளை அவன் பேசவிடவில்லை, பிரஜீயும் தன் கணவனின் ஆசைப் புரிந்து, விலாகமல் இருந்தாள்.

பின் சிறிது நேரம் அவனின் வேலைப் பற்றியும், சங்கீ, ஸ்ரீ பற்றியும் விசாரித்தாள். ஆம், சஞ்சீவ் இன்னும் அதே வீட்டில் தான் இருந்தான். ஏனெனில் சென்னைக்கு மாற்றல் கேட்டிருந்தான். அவன் செய்துக் கொண்டிருந்த ப்ராஜெக்ட்டும் முடியும் தருவாயில் இருந்ததால், எப்படியும் மாற்றல் இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், இதற்காக எதற்கு வீட்டை மாற்ற வேண்டும் என்று பொருட்களை அனுப்பி விட்டாலும், அவனுக்கு தற்சமயம் தேவைப்படும் பொருட்களோடு அங்கேயே இருக்க தான் செய்தான்.

ஒரு வேளை மாற்றல் கிடைக்கவில்லை என்றாலும், பிரசவம் முடிந்து பிரஜீயை அழைத்து வந்து, இந்த வீட்டிலயே இருந்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தான். ஏனெனில் தற்பொழுது வசிக்கும் இடம் பழக்கமான இடமாகவும் ஆயிற்று, அதோடு பக்கத்தில் சங்கீ இருப்பதால், நாளை குழந்தை பிறந்த பின் ஏதேனும் உதவி என்றாலும் தயங்காமல் அவள் செய்வாள், நல்லவள் என்று எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து தான் அங்கிருந்தான். இதை மனைவியிடமும், தாயிடமும் கூறியிருந்தான், அவர்களும் அவனின் முடிவைப் பாராட்டினார்கள்.

பின் கீழே சென்று, இரவு உணவை முடித்து விட்டு, இருவரும் மாடியில் தங்களறைக்கு வந்தார்கள். சஞ்சீவின் தோள் வளைவில் தலையைச் சாய்த்து, அமைதியாய் இருந்தாள்.

சஞ்சீவோ அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள், ஆனால் தயங்குகிறாள் என்பதை யூகித்து, “என்ன பிரஜி? ஏதோ சொல்ல நினைக்கிற… ஆனா தயங்குற? என்னமா… என்ட்ட சொல்ல மாட்டியா?” என அவள் தோளை அணைத்திருந்த கரங்களால் மெல்ல அழுத்தி, மென்மையாய் கேட்டான்.

அவன் தோளில் இன்னும் வாகாய் சாய்ந்தப்படி, அவன் இடையை கட்டிக் கொண்டு “இல்லங்க… அது வந்து… இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து, எல்லாம் நல்லாபடியா தானங்க நடக்குது. நமக்கு ராசியா தான இருக்கு. அதுனால….” என நிறுத்தி, அதே நிலையில் தன் முகம் திருப்பி அவன் முகத்தை ஏறிட்டாள்.

“அதுனால?… அதுனால என்ன பிரஜி” என அவன் தலையை கீழிருந்து மேலாக ஆட்டி, புருவத்தை மேலேற்றி கேட்கவும், “இந்த வீட வாங்கிரலாம்ங்க” எனக் கூற, “இம், இது ஏற்கனவே முடிவு பண்ணது தான டா, இம் வாங்கிரலாம். அப்பாகிட்டயும் கேட்க நினைச்சேன்… நாளைக்கே எல்லோர்கிட்டயும் இத பத்தி பேசிடலாம். சரியா… ஆமா இதுக்கா இவ்ளோ தயக்கம்” எனப் புன்சிரிப்போடு கேட்டான்.

“இல்லங்க இன்னொன்னும் சொல்லணும், அதுக்கும் நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்…” எனத் தயங்கி, அவன் முகத்தைப் பார்த்து “சொல்லவா…” எனக் கேட்டாள்.

அவனும் சொல்லு என்பது போல் தலையாட்ட “இல்ல மதன் மாமாக்கும், ஏதாவது லோன் கிடைக்குதான்னு பார்த்து…” என அவள் நிறுத்த, அவன் நெற்றி சுருக்கி, அவனையும் இந்த வீட்டை வாங்க பணம் போட சொல்ல நினைக்கிறாளோ என எண்ணி, “பார்த்து…” என அவனும் கேட்க…

“பார்த்து, லோன் கிடைச்சா… இன்னொரு கார் வாங்கி, அவர தனியா ஒரு ட்ராவல் ஏஜன்சி மாதிரி வைக்க சொல்லலாம்ல. முந்தி தான் தனியா இருந்தார், சவாரி போனார். இப்ப கல்யாணம் பண்ணிட்டார், புஷ்பாக்கும் இதனால கொஞ்சம் சங்கடமா இருக்கும்ல. ஓனா ட்ராவல் ஏஜன்சி நடத்துறாருன்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்ல” என ஏதார்த்தமாய் கூற, அவனோ “ஏன்… புஷ்பா எதுவும் உன்ட்ட சொன்னாளா?” என அவளை ஆராய்ச்சியோடுப் பார்த்து கேட்டான்.

“ஐயோ… இல்லங்க. நானா தான் சொல்றேன். லோன் போட்டு இன்னொரு பெரிய காரா… டவேரா… இல்ல சைலோ… மாதிரி, செகண்ட் ஹாண்ட்ல நல்ல காரா வாங்கினா இரண்டையும் வச்சு, ஒரு இடம் பார்த்து நடத்தலாம். எக்ஸ்ட்ரா ஒரு நல்ல டிரைவர போட்டா போதும். மதன் மாமாவும், சவாரி போனார்னா, ஆபீஸப் பார்த்துக்க அப்பாவ வச்சுக்கலாம். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஐடியா சொல்லியிருக்கேன். நீங்களும் இத பற்றி யோசிச்சு மதன் மாமாட்ட சொல்லுங்க” என்று தன் யோசனையைக் கூறினாள்.

அவனும் “இம்… நல்லா தான் இருக்கு. நான் அண்ணன்ட்ட கேட்டுப் பார்க்கிறேன்”

அவளோ, மேலும் “கேட்டுப் பாருங்க, கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும். ஏன்னா இத்தன வருஷத்துல, மாமாக்கு சில கஸ்டமர்கிட்ட நல்லா பழக்கம் இருக்கும், அதோட நாம ஒரு கார் சொந்தமா வச்சிருக்கோம், இன்னொன்னு தான லோன் போடப் போறோம். அதுனால சமாளிக்கலாம். அப்புறம் நல்லா ஓடுச்சுன்னா, இன்னொன்னும் பண்ணலாம்ங்க.

இப்பலாம் எல்லோரும் சேர்ந்து டூர் இல்ல கோவிலுக்கு, இந்த மாதிரி ட்ராவல்ஸ் மூலமா போறாங்க. சோ ஒரு பஸ்சும் வாங்கி, இத செய்யலாம். ஏன்னா, நம்ம மதன் மாமாக்கு எல்லா ஊர்லயும், எந்த ஹோட்டல் சாப்பிட, தங்க நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வச்சிருப்பார். அதுனால, நமக்கும், ஊர்லா சுத்திக் காமிச்சா, அங்க ஹோட்டல்ல இந்த மாதிரி மொத்தமா தங்க வச்சா, அங்க கன்சஷனும் கிடைக்கும்” என அவள் தன் ஆலோசனையைச் சொன்னாள்.

ஆனால் சஞ்சீவ் யோசித்து, “கேட்க எல்லாம் நல்லா தான் இருக்கு… ஆனா…” அவன் முடிப்பதற்குள், “ஆனா முயற்சி பண்ணி பார்க்கலாமேங்க. அப்பாக்கும் பிஸினஸ் பண்ணனும்கிற ஆசையும் நிறைவேறுன மாதிரி இருக்கும். நீங்க வேணா இத அப்பாக்கிட்ட சொல்லிப் பாருங்களேன்… அவரே நிறைய ஐடியா சொல்வார். ஏன்னா அவர் நிறைய அனுபவப்பட்டிருப்பார். அதுனால கண்டிப்பா பிஸினஸ் வளரும்ங்க… நம்பிக்கையோட இருங்கங்க” என ஆவல் மிகுதியில் அவள் கூறினாள்.

ஆனாலும் சஞ்சீவ் தயங்க, “ஏங்க, எதுவும் பிரச்சன வந்தா, குடும்பத்த கொஞ்ச நாளைக்கு, நாம சமாளிக்கலாம்ங்க. ஏங்க, நீங்க உங்க அண்ணனுக்கு ஹெல்ப் பண்ணமாட்டீங்களா? நானும் அம்மா வீட்டுக்கு போகும் போது, அப்பாக்கிட்ட சொல்றேங்க. அவரே நெறைய கஸ்டமர்ஸ பிடிச்சுக் கொடுப்பார். அவங்க ஆபீஸ்ல புஃல்லா டூர் போறவங்க நிறையப் பேர் இருப்பாங்க” என ஊக்கமளித்தாள்.

அவனோ, தன் குடும்பத்துக்காக எவ்வளவு யோசிக்கிறாள்! இதில் தன் அண்ணனுக்காகவும் யோசிக்கிறாள், தான் கூட, தன் அண்ணனுக்காக இவ்வளவு அக்கறைப் படவில்லை என எண்ணி உள்ளே குன்றினாலும், தன்னவளை எண்ணி மிகவும் பெருமிதம் கொண்டான்.

அதே பெருமிதத்தோடு, அவளைத் தோளோடு அணைத்த நிலையிலேயே, அவள் கன்னத்தை, இன்னொரு கரத்தால் தன் தோளோடு அழுத்தி “பிரஜி பிரஜி…” எனச் சொல்லி அவள் தலையில் முத்தமிட்டு, “நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணிருக்கேன்டி, அதான் நீ என் மனைவியா வந்திருக்க. இந்த வரத்த தந்த தெய்வத்துக்கு, இந்த ஜென்மம் முழுசும் நன்றி சொன்னாலும் பத்தாது.” என அவளை இறுக அணைத்தான்.

“நானும் தாங்க… உங்கள போல ஒரு நல்ல புருஷனும், இப்படிப்பட்ட குடும்பமும் அமைய கொடுத்து வச்சிருக்கணும்” என்று அவளும் நெகிழ்ந்தாள்.

இருவரும் மன நிறைவோடு, படுத்து உறங்கினார்கள். விடிந்து, ஏழு மணியான போது, எழுந்து இருவரும் அங்கிருந்த குளியலறையிலேயே குளித்து முடித்திருந்தனர். சஞ்சீவ் கீழே சொல்லப் போகும் போது, அவனை “ஏங்க” என அழைத்து, அறை வாசலிலேயே நின்றவனிடம், “நான் சொன்னேன் சொல்லிறாதீங்க, எல்லாம் நீங்களே சொன்ன மாதிரி சொல்லுங்க” என்றாள்.

“ஏன் பிரஜி இப்படி சொல்ற?” என அவன் கேட்க, அவளோ “ப்ளீஸ்…ங்க” எனக் கண்ணை சுருக்கி கெஞ்சினாள். மனைவி எதையேனும் சொன்னால், அதில் ஏதோ விஷயம் இருக்கும் என்றெண்ணியவன் மேலும் துருவாமல், “சரிங்க மேடம்… ஆனா நீங்களும் எனக்கு ஒன்னு பண்ணனும்” என்று கண்டிஷன் போட, அவளோ சரியென தலையாட்டி புன்னகைக்க,

அவனோ “அத அப்புறம் சொல்றேன். ஆனா மதன் சாயங்காலம் தான் வருவானாம். அப்போ எல்லாத்தையும் சொல்லலாம். இப்போ எனக்கு வேல இருக்கு டா” என கீழே சென்றான். பின் அவளும், அவன் கொண்டு வந்த அவனின் அழுக்குத் துணிகளை எடுத்து ஒரு கட்டப்பையில் போட்டு, அதை எடுத்துக் கொண்டு, கீழே சென்றாள்.

ஆனால் மேல் மாடியில், படிக்க வந்து, படித்து முடித்த புஷ்பா, கீழே இறங்க போக… மேல் மாடி படிகளின் நடுவில் அவள் வரும் போது, தற்செயலாய் கீழே, முதல் மாடியில் அவர்களின் சம்பாஷணையைக் கேட்டாள்.

அவர்கள் பேசியது காதில் விழுந்ததும், மனதுள் ‘இன்று என்ன செய்யப் போகிறாளோ பார்க்கலாம்.’ என்றெண்ணிக் கொண்டே பிரஜீயின் பின்னேயே கீழே இறங்கினாள்.

“என்ன புஷ்பா படிக்க வந்தியா?” எனப் பிரஜி கேட்க, “ஆமா பிரஜி, இங்க கொடு, நான் தூக்கிட்டு வர்றேன்” என அவளை நிறுத்தி, அவள் கையில் இருந்த பையை தரவில்லையென்றால் சஞ்சீவ் அத்தானை அழைப்பேன் என மிரட்டி, வலுக்கட்டாயமாய் வாங்கிக் கொண்டாள். “மெதுவா பார்த்து போ” என்றாள்.

பிரஜீயோ, ‘என்ன இவள்? சில சமயம் நேச மழை பொழிகிறாள், சில சமயம் துவேஷ மழை பொழிகிறாள்’ என்றெண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டே, கவனமாய் இறங்கினாள்.

இருவரையும் கண்ட சரஸ், பிரஜீயிடம் இருவருக்கும் டீயைக் கொடுத்தார். பிரஜீயும், புஷ்பாவைத் தேடி அவள் அறைக்கு சென்றாள்.

அவள் துணிப் பையை வாஷிங் மெஷின் அருகே வைத்து விட்டு, தன் அறைக்கு சென்று புத்தகங்களை அடுக்கி, கல்லூரி செல்ல ஆயத்தமானாள். சனிக்கிழமையான இன்றும், அவளுக்கு கல்லூரி இருந்தது. மதன் ஊரில் இல்லாததால், தயக்கமின்றி அவர்கள் அறைக்கு சென்று “இந்தா புஷ்பா” என டீயை நீட்டினாள்.

பின் “குளிச்சிட்டு வா, டிபன் சாப்பிடலாம். புஷ்பா காலேஜ் முழு நேரமா, அரை நேரமா?” எனக் கேட்டாள்.

அவளும் “புல் டே தான் பிரஜி… எனக்கு வாட்டர் பாட்டில்ல தண்ணி ஊத்திடுறியா? நான் வந்து டிபன் பாக்ஸ் கட்டிடுறேன்” எனக் கூறிக்கொண்டே குளிக்க சென்றாள்.

அவர்களிடையே ஒன்றரை அல்லது இரண்டு வயது வித்தியாசம் தானே அதற்கேன், தன்னை அக்கா என்றழைக்கிறாய், சும்மா பெயர் சொல்லியே அழைத்துக் கொள் என்று புஷ்பாவிடம் பிரஜி தான் சொன்னாள். அதனால் தான் புஷ்பா ஒருமையில் அவளை அழைத்தாள்.

சஞ்சீவ் செய்தி தாள் பார்த்துக் கொண்டிருக்க, ரங்கன் தன் காலை நேர நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றால், அப்படியே காய்கறியும் வாங்கி வருவார். இன்றும் கையில் காய்கறி பையை சுமந்து, அதை உணவு மேஜையில் வைத்தார்.

பிரஜி அதைப் பிரித்து, காய்களை எடுத்து கழுவி, குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை வைத்தாள். பின் தன் பறவைத் தோழமைகளுக்கு தண்ணீர், சாப்பாடு வைத்தாள். புஷ்பா வந்ததும், அவளுக்கு சாப்பாடு பரிமாறி விட்டு, அவளின் லஞ்ச் பாக்சையும், தண்ணீர் பாட்டிலையும் மேஜையில் வைத்தாள்.

மாதங்கள் முதிர, பிரஜீயை அடுப்பு வேலைகளை செய்யவே விடுவதில்லை சரஸ். அதனால் காய்கள் வெட்டுவதோ, மின் அரைவையில் அரைப்பது என மேம்போக்கான, சிறு சிறு உதவிகளை செய்வாள் பிரஜி. புஷ்பாவோ படிக்கிறேன், கல்லூரி செல்கிறேன் என்று சரஸுக்கு எதுவும் உதவ மாட்டாள். தன் வேலைகளை மட்டும் பார்த்துக் கொள்வாள்.

முன்பெல்லாம், சரஸ் பிரஜி கர்ப்பமாய் இருக்கிறாள், என இவளை அழைத்து தான் பணி சொல்வார். மேலும் தன் அண்ணன் பெண் என உரிமையோடு தயங்காமல், சில வேலைகளையும் செய்யச் சொல்வார்.

அதனால் புஷ்பா, தன்னையே தான் வேலை வாங்குகிறார் இந்த அத்தை, ஆனால் புகழாரம் சூட்டப்படுவது எல்லாம் பிரஜீக்கு. இவர் மட்டுமா, மாமாவும் அப்படி தான், அதற்கும் மேல், வெளியூர் சென்று விட்டு வரும் தன் கணவன் கூட, “என்ன பிரஜி ஒழுங்கா சாப்பிடுறியா, உடம்பு நல்லா இருக்கா?” என அக்கறையை, முதலில் அவளிடம் கொட்டி விட்டு தான், தன்னை நலம் விசாரிப்பார் என்று நொடித்தாள்.

தன் கணவனே இப்படி என்றால், அவள் கணவன்… சஞ்சீவ் அத்தானுக்கு… தங்க தட்டு ஒன்று இல்லாதது தான் குறை. அது இல்லாமலே எப்படி தாங்குகிறார். மாதங்கள் முதிரவும், பிரஜீயால் முன் போல அமர்ந்து துணிகளை துவைக்க முடியவில்லை என்று உடனே துவைக்கும் இயந்திரம் வாங்கி, மேலே தன் அறையின் பால்கனியில் போட்டான்.

பின் தினம் இரவு, அவளுக்கு இடுப்பில் சுடு தண்ணீர் ஊற்ற, தண்ணீரை சுட வைத்து, குளியலறை சென்று ஊற்ற தன் அன்னை சிரமப்படுகிறார் என்று ஹீட்டர் போட்டுவிட்டான். அதுவும், மாடியில் அவர்கள் குளியலறைக்கும், கீழே இவர்கள் குளியலறைக்கும், சுடு தண்ணீர் வருவது போன்று இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் அவள் தந்தை, மறுவீடு சென்று வந்த பின், குளிர்சாதனப் பெட்டி வாங்கி தந்திருந்தார். அவளுக்கு தன் கணவன் இது போலெல்லாம் தன்னிடம் உருகாமல் இருக்கிறானே, என்று மதன் மீதும், அவ்வப்போது எரிச்சல் படுவாள். அவன் இல்லாத நேரம், புஷ்பா பிரஜீயிடம் நேரிடையாகவே தன் எரிச்சலைக் காட்டுவாள்.

 

மாயம் புரிவாள் பிரஜி…….

error: Content is protected !!