இது என்ன மாயம் 45

இது என்ன மாயம் 45

பகுதி 45

மதன் இல்லாத நேரத்தில், புஷ்பா பிரஜீ மீது எரிச்சல் படுவாள். அப்படி தான் ஒரு நாள், ஏதோ தூரத்து உறவினர் வர, சரஸ் புஷ்பாவை தன் பெரிய மருமகள் என்றும் பிரஜீயை சின்ன மருமகள் என்று அறிமுகப் படுத்த, வந்தவர் பிரஜீயின் வயிற்றைப் பார்த்து விட்டு, “ஓ… அப்படியா சரஸ், நான் கூட இவ தான் பெரிய மருமகள்ன்னு நினைச்சிட்டேன்” என்று சொன்னார்.

சரஸோ சங்கடப்பட்டாலும், “இல்ல பெரியவ படிக்கிற… இந்த காலத்து புள்ளைங்க எல்லாத்தையும் யோசிச்சு தான் பண்றாங்க. நமக்கு பிள்ளைங்க சந்தோஷம் தான முக்கியம்” என்று சமாளித்தார்.

ஆனால் புஷ்பா, தனியாக சிக்கிய பிரஜீயிடம், “எங்க அத்தங்கிறதுனால சும்மா இருக்காங்க, இதே வேற ஒருத்தவங்கன்னா இப்போ ஒரு கலவரமே நடந்திருக்கும்” எனக் கூற, “புஷ்பா…” என ஏதோ பேச முயன்ற பிரஜீயை, தன் கையை உயர்த்தி நிறுத்துமாறு செய்கை செய்து, மேலும் “இப்படி அவசரப்பட்டுக் கல்யாணம் பண்ணி, அவசரப்பட்டு குழந்தையும் பெற்றுக்கப் போற… ஆனா எங்களுக்கு தான் அவமானம் எல்லாம்” என அவளிடம் கோபப்பட்டு சென்றே விட்டாள்.

உடனே பிரஜி கண்கள், கண்ணீரால் நிரம்பினாலும், அவள் சொல்வதும் நியாயம் தானே, தன்னால் தானே, தன் அன்னைக்கு மேல் கவனிக்கும் சரஸிற்கு அவமானம் என எண்ணி கலங்கினாள். இருந்தும் குடும்பத்தாரின் அன்பால் அதை மறந்தாலும், சில சமயம் இதனால் அமைதியாகவே தென்பட்டாள் பிரஜி.

மேலும் பிரஜி பணி செய்யும் போதும், அவள் கடுமையாய் ஏதோ பேச, “புஷ்பா…” என அதட்டிய சரஸை, கண் ஜாடையிலேயே சரஸைத் தடுத்தாள். பின் அவள் கல்லூரி சென்ற பின், பிரஜி தன் அத்தையிடம், “அம்மா அவ சின்னப் பொண்ணு, அவள எதுவும் சொல்லாதீங்க. நானே உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். பாவம் அவ காலேஜ்க்கு வேற போறா, அதுனால முத அவள கவனிச்சு அனுப்புங்கமா, அப்புறம் நாள் புல்லா உங்க மனசுப் போல என்ன கவனீங்க” என்று புன்னகையோடு முடித்தாள்.

சரஸ் கூட “என்ன இன்னும் சின்னப்பிள்ளன்னு சொல்ற, கல்யாணம் ஆகி ஒரு வீட்டுக்கு மருமகளா வந்துட்டா பொறுப்பா இருக்க வேணாமா? பாவம் படிக்க ஆசப்படுறான்னு தான படிக்க விட்டோம், அதக் கூட புரிஞ்சிருக்காம, நாம பண்ற உதவியெல்லாம் நினைச்சு பார்க்காம எடுத்தெறிஞ்சுப் பேசுறா” என அவர் தன் அண்ணன் மகளா இப்படி! என்ற தவிப்பை வெளியிட்டார்.

புஷ்பா, பிரஜீயிடம் தான் எடுத்தெறிந்துப் பேசினாலும், சரஸ் நம் என்ற வார்த்தையில், தன் மருமகளை விட்டு கொடுக்காமல் பேசினார்.

“அச்சோ… அம்மா, அவ இப்ப தான் காலேஜ் முடிச்சிருக்கா, இப்ப தா இங்க வந்திருக்கா, நாலு பேரப் பார்த்து பழகுனா, சரியா போய்டும். விடுங்க மா இன்னும் கொஞ்ச நாளுல பக்குவமா ஆகிடுவா” என்று தன்மையாய் சரஸை ஆறுதல் படுத்தினாள்.

“எப்பப் பாரு உன் கூடவே போட்டி போடுறா, நீயும் அவளும் ஒன்னா? நீ பிள்ளைத்தாச்சி பொண்ணுன்னு உனக்கு பக்குவம் பண்றோம். அதுக்கூடவா அவளுக்கு புரியல, உன்கூடவே சண்டைக்கு நிக்குறா. நீ சொல்லலைன்னா… எனக்கென்ன தெரியாதுன்னு நினைச்சியா?” என அவளையும் பிடித்தார்.

“அம்மா… அவளுக்கு அம்மாவ பார்க்கணும், தங்கச்சியப் பார்க்கணும்னு ஏதாவது ஆச இருக்கும்மா, மதன் மாமா இருந்தாலாவது அவர்ட்ட சொல்லுவா, அவரும் இரண்டுமூனு நாளைக்கு ஒருவாட்டி வர்றதுனால, எதையும் அவர்ட்ட ஷேர் பண்ணக் கூட முடியாம இருக்கனாலக் கூட இப்படி சின்னப் பிள்ள மாதிரி நடந்துக்கலாம். இப்ப என்ன அவ என் கூட தான மா, சண்டப் போடுறா, இது அக்கா தங்கச்சி பிரச்சனை, இனிமே நீங்க தலையிடக் கூடாது. ஆமா… சொல்லிட்டேன். என்னோட தங்கச்சி, என்ன எதுவும் சொல்லுவா…” என்று பொய் கோபத்தோடு, முகத்தைத் தூக்கி வைத்து, புருவத்தை சுருக்கி கண்டிப்போடு சொன்னவளைப் பார்த்து, சரஸ் நகைத்து விட்டார்.

அவளும் முகத்தை மாற்றாமலே “நான் கோபமா இருக்கேன். நீங்க என்னடான்னா… அத மதிக்காம, சிரிச்சுட்டு இருக்கீங்க ம்மாஆஆஆ….” எனக் கடைசியில் கத்தினாள்.

அவரோ மேலும் சிரித்து, “ஏய் வாலு, என் பேரக் குழந்தைய சுமக்குறதால சும்மா விடுறேன் இல்ல… மண்டையிலேயே இரண்டு கொட்டு கொட்டிடுவேன். கோவப்படுற ஆளப் பாரு” என்று அவளைக் கலாய்த்தார்.

அவளோ “நாம என்ன அவ்ளோ மோசமாவக் கோபப்பட்டோம்” என முக்கை சுருக்கி யோசிக்க, “ஆமா… உனக்கு கோபம் நல்லாவே வரல, உங்க மாமாவ பார்த்திருக்கியா? கோபமெல்லாம் நல்லா வரும். அவர் கோபமான முகத்த பார்த்தா, பத்து நாளைக்குக் கூட, எனக்கு அந்த முகம் தான் ஞாபகத்துலயே இருக்கும். சஞ்சீக்கும், அவங்க அப்பா போல, நல்லா கோபம் வருமே” எனக் கண்களை உருட்டிச் சொன்னார்.

“ஆமா, உங்க பிள்ளைக்கு அது ஒன்னு தான் நல்லா தெரியும். ஏதோ… என்ன கட்டுனதால, இப்ப கொஞ்சம் சிரிக்கிறார்.” எனக் கெத்தாகச் சொல்ல, “ஏன்… நீ வர்றதுக்கு முன்னாடி, அவன் சிரிக்கலையாக்கும். அவன் வரட்டும், சொல்றேன், உன் பொண்டாட்டி இப்படி சொல்றாடா ன்னு” என அவர் மாமியாராய் மிரட்ட,

“சொல்லிக்கோங்க சொல்லிக்கோங்க… எனக்கென்ன பயமா… பயமா…” எனச் சிறுப்பிள்ளையாய் சொன்னவளை, ரசித்து அவள் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளி விட்டு, வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.

இப்படி தான் பிரஜி, சரஸை புஷ்பா விஷயத்தில், அன்பாய் அடக்கி வைத்தாள். ஒரு நாள், மதனிடம் புஷ்பா, தங்களுக்கும் ஒரு துவைக்கும் இயந்திரம் வாங்க சொல்ல, அவனோ எதற்கு, அது தான் மாடியில் ஒன்று இருக்கிறதே எனக் கேட்க, புஷ்பாவோ அதை அவர்கள், இனி குழந்தைப் பிறந்த பின் தனியே சென்றால், எடுத்துக் கொண்டுச் சென்று விடுவார்கள் என்று பல விஷயம் சொல்லி, தன் கணவனை தனக்கும் வாங்கி தரும் படி சொன்னாள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரஜி, அந்த வார இறுதியில் வந்த சஞ்சீவிடம், “என்னங்க மெஷின கீழ இறக்கி, நம்ம வீட்ல வச்சிருங்க” எனச் சொன்னாள்.

“ஏன் பிரஜி, இங்க இருந்தா துவைச்சு, அப்படியே மாடியிலேயே காயப்போட்டுக்கலாம், வசதின்னு சொன்ன?” என்று வினவினான்.

“இல்லங்க… நீங்க வந்தா தான் மாடிக்கு வர்றேன், இல்லைன்னா கீழ தான் இருக்கிறேன். அதுனால துவைக்கிறதுக்கு மட்டும் மாடிக்கு வர முடியல. அத்தையும் கால் வலின்னு மாடி ஏறக் கஷ்ட்டப் படுறாங்க. நீங்க கீழேயே வச்சிருங்க, அங்க வெளிய, பால்கனில கொடிக் கட்டிக் காயப்போட்டுக்கலாம்” என காரணம் சொன்னாள்.

அவனும் அதே போல் செய்ய, மற்ற இரு பெண்களும் ஏன் பிரஜி எனக் கேட்க, அவளும் சஞ்சீவுக்கு சொன்ன அதே காரணத்தைச் சொல்ல, புஷ்பாவோ அவள் தனக்காக தான் கீழே இறக்கியிருக்கிறாள் என்று உள்ளே எண்ணினாலும், “தனியா போனா உங்களுக்கு வேணும்ல பிரஜி, பத்திரமா மாடியிலேயே வச்சுக்கோ” என அவள் மறுத்தாலும், பிரஜீயோ “இங்கயே இருக்கட்டும், நீயும் துவைக்க மாடி ஏறி கஷ்டப்படுற, அப்படிப் போகும் போது பார்த்துக்கலாம் புஷ்பா” எனச் சொல்லி அவளின் வாயை அடைத்தாள்.

சஞ்சீவுக்கு, புஷ்பா தன் மனைவியோடு ஒட்டாமல் இருப்பது புரிந்து விட்டது. அதைப் பிரஜீயிடம், அவன் கேட்டு வைக்க, அவளோ “இது பொம்பளைங்க பிரச்சன, இன்னிக்கு அடிச்சுக்குவோம், நாளைக்கு கூடுவோம். சோ, நீங்க யார்ட்டையும் எதுவும் கேட்க வேண்டாம்” என்று அவனையும், அவர்கள் பிரச்சனைக்கு வெளியே நிறுத்தினாள்.

இப்படியாக நாட்கள் விரைந்தாலும், புஷ்பாவிற்கு, பிரஜி மீது இருந்த பொறாமை கொஞ்ச நேரம் மறைந்தாலும், மற்ற நேரம் வெளிப்பட்டு விடும். அது போல் தான் இன்று காலை, அவள் வயிற்றில் குழந்தையோடு, அழுக்குத் துணிகள் நிறைந்த பையோடு மாடிப்படியில் இறங்கியதும், அவள் மனதில் இரக்கம் சுரந்து, அவளிடம் இருந்து அதைப் புஷ்பா வாங்கிக் சென்றாள்.

அதே போல், துவைக்கும் இயந்திரம் கீழே வந்ததில் இருந்து, அவளைத் துணி துவைக்கவே விட மாட்டாள். இவளே பிரஜீயின் துணியையும் வாங்கி, சேர்த்து துவைத்து தந்து விடுவாள். காரணம் புஷ்பாவின் மனதும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டு இருந்தது.

அந்த மாற்றத்திற்கு ஒரு காரணம், காலையில் புஷ்பா கல்லூரி கிளம்ப, வயிற்று சுமையோடு, அவளுக்கு சாப்பாடுப் போட்டு, அன்பாய் பரிமாறி கவனித்து அனுப்புவாள். புஷ்பாவும் கல்லூரி விட்டு வரும் போது, அவளுக்குப் பிடித்த இனிப்பு பலகாரம், பழம் என்று ஏதாவது வாங்கி வருவாள்.

சில நேரம் நினைத்தால், பிரஜீக்காக சிந்தா வீட்டிற்கு சென்று சந்தோஷியை அழைத்து வருவாள். சமயத்தில் செல்வியின் மைந்தன் சாஸ்வத்தையும் சேர்த்து தூக்கி வருவாள். சிந்தாவும், செல்வியும் நேரம் கிடைத்தால், அவளைப் பார்த்து விட்டு செல்வார்கள்.

இருந்தும் புஷ்பா, தன் கணவன் மட்டும் இப்படி கஷ்டப்படுகிறான் என்றும், அவ்வப்போது கணவனின் தம்பி சஞ்சீவோடு வேலை விஷயத்தில் ஒப்பிட்டும் பார்த்து, தாழ்வு மனப்பான்மையும் அடைவாள்.

மாலையானதும், சஞ்சீவ் மதனிடமும், தன் தந்தையிடமும், தன் மனைவி சொன்ன திட்டங்களைக் கூற, முதலில் மதன் யோசித்தாலும், ரங்கன் அவனிடம் “சஞ்சீவ் சொல்வதும் சரி தான், முயற்சித்தும் பார்க்கலாமே” எனக் காரியத்தில் இறங்க முடிவு செய்தனர்.

இவ்விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே, புஷ்பாவிற்கு காலையில் மாடியில் அவர்கள் பேசிய சம்பாஷனையும், மாலையில் நடந்ததையும் வைத்து, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று, எல்லாம் பிரஜீயின் யோசனைத் தான் போல என்று புரிந்து விட்டது.

புரிந்த நொடியே, சற்றும் தாமதிக்காமல், பிரஜீயை தேடி, மாடிக்கு சென்றாள். அப்போது தான் சஞ்சீவும், பிரஜீயும் இரவு உணவு முடித்து விட்டு, அங்கு வெட்டவெளியில் காற்றாட சிறிது நேரம் நிற்கலாம் என்று நின்றிருந்தனர்.

ஆட்கள் வரும் சத்தத்தை உணர்ந்து, படிக்கட்டின் வாயில் பக்கம் திரும்பிப் பார்த்த சஞ்சீவ், புஷ்பாவைக் கண்டு “என்ன புஷ்பா?” எனக் கேட்டான்.

அவளோ அவர்களிடம் வந்து “ஒரு நிமிஷம் அத்தான்” என பிரஜீயை, அவர்கள் அறைக்கு அழைத்து சென்றாள். பிரஜீயோ புரியாமல், “என்ன புஷ்பா?” என்று கேட்க, அவளோ “என்ன மன்னிச்சிடு பிரஜி” என அவள் வலக்கரத்தை, இரு கரங்களால் பற்றி சொன்னாள்.

பிரஜீயோ நெற்றி சுருக்கி “எதுக்கு… மன்னிப்பு கேட்குற?” என்று விழிக்க, “நான் உன்னப் பற்றி புரிஞ்சுக்காம, சின்னப் பிள்ள மாதிரி நடந்துக்கிட்டேன். ஆனா நீ… என்ன புரிஞ்சுக்கிட்டு… இப்ப என் அத்தானுக்கும் பிசினஸ் பண்றதுக்கு யோசனை சொல்லியிருக்க… ஆனா நான்… என்ன மன்னிச்சுடு பிரஜி” எனச் சொல்ல,

அவளோ “ஏய்… நான் தான் சொன்னேன்னு உனக்கு யார் சொன்னா?” எனத் திகைக்க, “யாரும் சொல்லல… எனக்கு தெரியும், நீ தான் சொல்லியிருப்பன்னு…” என்று காலையில் தற்செயலாய் கேட்டதை வைத்து அவள் சொன்னதை, அவளிடம் கூறினாள். மீண்டும் “தேங்க்ஸ் பிரஜி…” என அவள் சொல்ல,

“ஏய் புஷ்பா… என் தங்கச்சிக்கு இதுக் கூட பண்ணமாட்டேன்னா… என்ன…?” என்று அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்து புன்னகைத்து, “அப்புறம்… யார்கிட்டையும் நான் சொன்னதா சொல்லிறாத. ஏன்னா மதன் மாமா ஏதாவது நினைச்சுக்குவார். ஆனா நானா இத சொல்லல மா, உங்க சஞ்சீவ் மாமாவும் தான் யோசனைச் சொன்னார். அதுல எனக்கு தோணுனத… தெரிஞ்ச வரைக்கும் சொன்னேன் மா. அவ்ளோ தான்” என்று தன் கணவனையும், அவள் நல்லவிதமாய் நினைக்க வேண்டும் என்று அவனையும் சேர்த்து சொன்னாள்.

அன்றிரவு பிரஜி “என்னங்க… என்னவோ காலைல எனக்கும் ஒன்னு பண்ணனும்னு சொன்னீங்க” என்று அவனைப் பார்த்தவாறு ஒருக்களித்து படுத்திருந்த பிரஜி கேட்டாள். சஞ்சீவோ அவளை அணைத்துக் கொண்டு “நீ இங்க நம்ம வீட்டுலேயே இரு பிரஜி” என்று சொன்னான்.

அவளோ புரியாமல், ஆனால் அவன் முகத்தில் இருந்த அவஸ்தையைக் கண்டு, அவன் தலையை வருடி “என்னங்க சொல்றீங்க, நான் இங்க நம்ம வீட்ல தான இருக்கேன்” என்று சொல்ல, “இல்ல… உனக்கு வளைகாப்பு முடிஞ்சு நீ உங்கம்மா வீட்டுக்கு போய்டுவியா பிரஜி?” எனச் சிறுபிள்ளையாய் கேட்டான்.

அவளோ “இம்… ஆமா அங்க தானங்க போகணும்” எனச் சொன்னாள், “ஆனா… நீ இங்கயே இரு பிரஜி, நம்ம குழந்தை நம்ம வீட்டுலேயே பிறக்கட்டுமே… ப்ளீஸ்…” எனக் கெஞ்ச, அவளோ, தன் அன்னையை எண்ணிப் பார்த்தாள்.

அவருக்கும் ஆசை இருக்கும் அல்லவா தன் பெண்ணை சீராட்ட வேண்டும் என்று, அதனால் என்ன சொல்வது என்று அவள் குழம்ப, “என்ன பிரஜி… உங்க அம்மா வீட்டுக்கு போயிடுவியா” எனக் கேட்க, அவளோ தீர்வாய் “நீங்க தான் ஊருக்கு போயிடுவீங்கள?” எனக் கேட்டாள்.

“இம்… ஆனா சீக்கிரம் எனக்கு மாற்றல் கிடைச்சிடும். இங்க வந்திருவேன். ப்ளீஸ் பிரஜி நீ அத்த கிட்ட கேளு, இல்ல நான் மாமாகிட்ட கேட்கவா?” என ஆவலாய் கேட்டான். ஆனால் அவளோ தானே கேட்பதாய் சொல்லி சமாதானம் செய்து, அவனைத் தூங்கச் செய்தாள்.

ஒரு மாதத்திற்கு பின்…

“பிரஜி ஒழுங்கா இதையும் சாப்பிடுறியா? இல்ல சஞ்சீ அத்தானுக்கு போன் பண்ணவா?” எனத் தட்டு நிறைய கீரை, காய்களை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தாள் புஷ்பா.

பிரஜீயோ “ஏய் போதும்… ஆமா, உனக்கு லீவ் விட்டது… எக்ஸாமுக்கு படிக்கவா, இல்லை என்ன கவனிக்கவா? போ போய் படி புஷ்பா” என்று விரட்டினாள்.

சரஸோ “ஸ்ஸ்ஸ்… உங்களோட அக்கப்போரா இருக்கு, புஷ்பா உனக்கு லீவ் விட்டாலும் விட்டாங்க, உங்க ரெண்டு பேர் அலம்பல் தாங்கல. சீக்கிரம் இடத்த காலிப்பண்ணுங்க… உங்க மாமா வந்திருவார். சாப்பாடு போடணும்” என தன் மருமகள்களின் ஒற்றுமையை உள்ளே மெச்சினாலும், வெளியே விரட்டினார்.

பிரஜீயோ “அம்மா… இவ தான் என்ன சாப்பிட சொல்லி கொடுமைப் படுத்துறா மா” எனப் புகார் செய்தாள்.

“அத்த நீங்களே சொல்லுங்க… ஒழுங்கா சாப்பிட்டா தான குழந்த நல்லா ஆரோக்கியமா பிறக்கும். ஆனா இவ சாப்பிட மாட்டேங்குற என்னன்னு கேளுங்கத்த…” என்று அவளும் புகார் செய்ய,

சரஸோ “உங்க பஞ்சாயத்துக்கு நான் வரல மா, அன்னிக்கு அப்படி தான் ஏதோ சொன்னதுக்கு, அவள ஏன் பேசுறீங்கன்னு நீ சொல்ற, உன்ன சொன்னா அவ வர்றா. நீங்க என்னமோ பண்ணுங்க. என்ன விடுங்க” என அவர் கழன்றுக் கொள்வது போல சொன்னாலும், அங்கேயே அமர்ந்து பிரஜி சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். பின் சாப்பிட்டதும், மருந்து குடிக்கும் படி மறக்காமல் கூறினார்.

மேலும் சரஸ், “புஷ்பா நாளைக்கு விசேஷத்துக்கு, நான் சொன்ன பொருள எல்லாம் சாமி ரூம்ல வச்சுட்டியா மா?”

“ஓ… வச்சுட்டேன் அத்த…” என்றுக் கூறி விட்டு பிரஜீயை அறைக்கு அழைத்து சென்றாள்.

மறு நாள் அழகாக விடிய, சீக்கிரமே எழுந்த புஷ்பா குளித்து முடித்து விட்டு, பிரஜீயைத் தேடி, எதிரே இருந்த அறைக்கு சென்றாள். அங்கு பிரஜீயும், சரஸும் படுத்திருக்க, அதைப் பார்த்து அவள் சத்தமில்லாமல் திரும்பி சமையற்கட்டிற்கு சென்று, அனைவருக்கும் டீ போட்டு முடிக்கவும், சரஸ் வரவும் சரியாக இருந்தது.

அவள் “அத்த, டீ போட்டுட்டேன். சட்னியும் அரச்சுட்டேன். நீங்க இந்தாங்க டீய குடிச்சிட்டு, குளிச்சிட்டு அப்புறம் நிதானமா இட்லி ஊற்றுங்க. நான் போய் பிரஜீய ரெடி பண்றேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அதே போல் குளித்து முடித்த பிரஜீக்கு, தேன் நிறத்து அவள் கல்யாண பட்டுச் சேலையை அழகாய் உடுத்தி விட்டாள் புஷ்பா. பின் அவள் கூந்தலைத் தளரப் பின்னி, ஜடை அலங்காரம் செய்து, தலை நிறைய பூ வைத்து, கண்களுக்கு மையிட்டு, பிரஜீயை அழகியாய் மாற்றிக் கொண்டிருந்தாள். ஆம், பிரஜீக்கு தற்போது ஏழாம் மாதம் நடப்பதால், இன்று அவளுக்கு வளைகாப்பு வைத்திருந்தனர்.

மாடியில் இருந்து குளித்து முடித்து கீழே இறங்கி, மதனுடன் வந்த சஞ்சீவ், தன் மனைவியின் அழகில் சொக்கித் தான் போனான். எல்லோரும் இருப்பதால் அமைதியாய் சாப்பிட செல்லும் போது, அவளைப் பார்த்து, யாருக்கும் தெரியாமல் கண்ணடித்து, வாய் குவித்து ஒரு முத்தத்தை மறக்காமல் தூரத்து இருந்தே கொடுத்து விட்டு தான் சென்றான்.

நேரம் செல்ல செல்ல, உறவினர்களும், சுற்றமும் வரலாயினர். முதல் நாளே புஷ்பாவின் பெற்றோர் லதாவும், சேகரும், பூஜாவும் வந்திருந்தனர். முதல் ஆளாக கோதை, ராம் மற்றும் ரிஷி வந்தனர்.

பின்னர் சங்கீ குடும்பம், “பர்ஜி அத்த… புஸ்ஸத்த…” என கத்திக் கொண்டே சந்தோஷியும், அவள் பின்னால், சிந்தா மற்றும் செல்வி குடும்பம், மற்றும் லஷ்மி குடும்பத்தினரும் வந்தனர்.

பிரஜியை மனையில் உட்கார வைத்து, நலுங்கிட்டு, வளையல் அடுக்கினர். பின் புஷ்பாவையும் அதே மனையில் அமர வைத்து, “சீக்கிரம் நீயும் இது மாதிரி நல்ல செய்தி சொல்லனும் மா” என சங்கீயின் அன்னை ஷாந்தியம்மா சொல்லி, நலுங்கிட்டு வாழ்த்து கூறினார். அப்படியே அவளுக்கும் எல்லோரும் நலுங்கிட, புஷ்பா வெட்கத்தோடு தன் மணாளன் மதனைப் பார்த்தாள். அப்போது அவனும் அவளையே தான், காதலோடுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்தப்பக்கம் சத்தமில்லாமல் சுதன், தன் காதலை பூஜாவுக்கு காதல் பார்வையாய் அனுப்பி, அவளின் நாணப்பர்வையை பெற்றுக் கொண்டிருக்க, அதைப் பார்த்து விட்ட ரதி, தன் கோபப்பார்வையோடு அவன் முன்னே நின்று, “ஏய்… ஒரு சின்னப்பிள்ளையக் கூட வச்சுக்கிட்டு, உனக்கு ரொமான்ஸ் கேட்குதா?” எனத் திட்ட, அவனோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “சந்தோஷி இங்க இல்லையே… அதோ… சஞ்சீ அண்ணா தூக்கி வச்சிருக்காங்க பார்” என சொல்ல,

அவளோ “ஏய்… வேணாம்… நான் அம்மாகிட்ட நீ பூஜாவ பார்க்கிறதச் சொல்லிடுவேன்” என மிரட்ட, அவனோ “சொல்லிக்கோ…” என்று தோள் குலுக்கினான்.

சொன்னதை செய்யாவிட்டால் அவள் ரதி இல்லையே, அதே போல் லஷ்மியிடம் கூற, அவரோ “உனக்கென்ன, அவன் எதுவும் பண்றான்” என்று சொல்ல, அவளோ அதிர்ந்து, “அம்மா… பொறுப்பா ஒரு தாய் மாதிரி பேசு” என்று அறிவுறுத்த,

“நான் தாய் மாதிரி தான் இருக்கேன். உனக்கு முத கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சேன். நீ தான் ரொம்ப அலட்டிக்குறல, நான் என் பையனுக்காவது சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன். அந்த பூஜாவும் நல்ல பொண்ணு தான், உன்ன மாதிரி இல்ல அவ. நீ டாக்டரா… இப்படியே சேவகம் பண்ணிட்டு இரு” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

அவளும் தலையை வெட்டிக் கொண்டு, “போ…” என சிலுப்பி கொண்டு நகர்ந்தாள்.

ஆம், சசி வீட்டில் இருந்து ஜெய்யும், சங்கீயும், பிரஜி சஞ்சீவிடம் சொல்லி, அவளை சசிக்கு பெண் கேட்க, லஷ்மியும் உள்ளூரிலேயே நல்ல சம்பந்தம் கிடைத்த திருப்தியில் சந்தோஷப்பட, ரதி தான் வேண்டுமென்றே வேண்டாம் என முறுக்கிக் கொண்டாள்.

அந்தக் கடுப்பில் தான் லஷ்மி இப்படி அவளைப் பொரிந்தார். மேலும் சுதன் தனக்கு பூஜாவைப் பிடித்திருப்பதாக முன்பே தன் பெற்றோரிடம் சொல்லி விட்டான்.

ரதியை நோக்கி ஒரு அம்மா வந்து, “நீ தான் ரதியாம்மா…?” என வினவினார், அவளும் ஆம் என்பது போல் தலையசைக்க, “ஏன்மா… உனக்கு எங்க சசியப் பிடிக்கல? இப்பத் தான் புரியுது, அவன் உன்னையத் தான் கட்டுவேன் ஒத்தக் கால்ல ஏன் நிக்குறான்? பார்க்க ரதி போலவே அழகா இருக்கியே” என அவர் சொன்னதில், ரதி கூச்சப்படாமல், மயங்கி “நிஜமாவா?…” எனக் கேட்டாள்.

அவரோ “ஆமாம்மா… இஹும்… எங்க சசிக்கு தான் கொடுத்து வைக்கல” என்று நகர, “ஒரு நிமிஷம்… நீங்க யாரு?” என்று அவள் கேட்க, “நான் தான் மா, சசியோட அம்மா” என்றார் அவர்.

“அத்த… நீங்களா! ஐயோ சாரி அத்த… எனக்கு தெரியாம… நீங்கன்னு… உங்கள…” என அவள் உளற அரம்பித்ததிலேயே, அவருக்கு, அவளுக்கு சம்மதம் என்று புரிந்து விட்டது. அதனால் அவர் சிரித்துக் கொண்டே, “அப்போ, எங்க வீட்டுக்கு வர உனக்கு சம்மதமா மா?” எனக் கேட்க, அவளோ சசியை எண்ணி நாணப்பட்டுக் கொண்டே, “முத நீங்க எல்லோரும் எங்க வீட்டுக்கு வாங்க அத்த…” எனக் கூறி தலைக் குனிந்தாள்.

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சுதன் பக்கத்திலிருந்த தன் அன்னையிடம் “ஐயோ… இது நம்ம ரதியா?” என அவளை ஒரு புகைப்படம் எடுத்தான்.

பின்னர் அனைவரும் ரதியை ஓட்டிக் கொண்டிருக்க, ஜெய் “டேய் சசி, இப்ப கிளம்பி வா டா, உன் ஆளு இப்ப தான்… ஓகே சொல்லிட்டா” என அவனை அழைத்தான்.

இரண்டு மாதத்திற்கு பின்……..

சஞ்சீவ் பிரஜீயின் வளைக்காப்பின் போதே மாற்றல் வாங்கி சென்னைக்கே வந்து விட்டான். அதே போல் பிரஜீயும் சஞ்சீவ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தாய் வீட்டிற்கு சென்று சாஸ்திரத்திற்கு இரண்டு நாள் இருந்து விட்டு, இங்கே வந்து விட்டாள்.

கோதையும் தன் மாப்பிளையின் எண்ணம் அறிந்து, பூரித்து மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார். ஆனால் வாரம் தவறாமல், பிரஜீயை வந்து பார்த்து விட்டு போய் கொண்டிருப்பார். இதனால் சரஸும் கோதையும் நல்ல தோழிகளாகி விட்டனர்.

சந்தோஷியை அன்று அழைத்து வந்த சஞ்சீவ், பக்கத்தில் அமர்ந்திருந்த பிரஜீயிடம் “ஏன் பிரஜி நம்ம குழந்தையும் இப்படி தான வளர்ந்து, இவள மாதிரி குட்டி கை, குட்டி காலோட அழகா இருக்கும்…” என தன் மடியில் அமர்ந்து, அவர்கள் வீட்டு டெடிக்கு கதை சொல்லிக் கொண்டிருந்த சந்தோஷியைப் பார்த்தான். அவளும் சந்தோஷியை வருடி, “ஆமாங்க…” எனச் சொன்னாள்.

சஞ்சீவோ, சந்தோஷியிடம் “சந்துக் குட்டி” என அழைக்க, அவளோ டெடியை நோண்டிக் கொண்டே “இம்ம்…” எனக் கேட்க, “நீங்க காலைல எந்திரிச்சு என்னென்ன பன்னுவீங்க?”

“இம்ம்… அதுவா னா என்ட்ரிச்சு அப்பாகிட்ட போவேன். அப்பா ஹோர்லிக்ஸ் தரும். அப்புறம் அம்மா என்ன குளிக்குமா… அப்புறம் சந்து குட்டி ச்சூல் போவா. அங்க அவ்வா பூவ்வா தருவாங்க….” என நீண்ட விளக்கம் தந்தாள்.

உடனே பிரஜி “அச்சோ… பாப்பா காலைல சாப்பிட மாட்டாங்களா” என அவள் சொல்ல மறந்ததை கேட்க, அவளோ சிரித்து விட்டு “அச்சோ…. மருந்துபோச்சா… இம் இட்லி சாபிடுவேன்” எனச் சொல்ல,

“சரி ஸ்கூல் போய் என்ன படிப்ப?” எனச் சஞ்சீவ் கேட்க, “இம்… ஏ,பி, சி, டி தான்… இது தெளியாத” என அவனை கேட்க, இப்படியாக கணவன் மனைவி இருவரும் அவளை நேர்முகத் தேர்வு செய்துக் கொண்டிருக்க… சிறிது நேரத்தில் பதில் சொல்லி அலுத்துப் போன சந்தோஷி “னா… புஸ்ஸட்ட கிட்ட போறேன்” என நழுவி விட்டாள்.

பின் அன்று இரவு உறங்கிய பின், கருக்கலில் மூன்று மணி அளவில் பிரஜீக்கு வலியெடுக்க, மெல்ல தன் அருகே படுத்திருந்த சரஸிடம் கூறினாள். ஆம், பிரஜி சரஸோடு கீழ் அறையிலும், சஞ்சீவ் மாடியிலும் படுத்துக் கொண்டனர். அவரும் எழுந்து அவளைப் பார்த்து, “கொஞ்சம் பொறுத்துக்கோ மா, வலி இன்னும் நல்லா வரட்டும். பிரசவ வலியான்னு பார்த்துட்டுப் போகலாம்” என்று பிரசவ வலிக்காக காத்திருந்தனர்.

அப்படி காத்திருந்த வேலையில், பிரஜீக்கு வலியின் இடைவெளி குறைய ஆரம்பிக்க, “அம்மா…. முடியல மா, “ எனப் பிரஜி கண்ணீர் விட ஆரம்பிக்க, “இதோ போகலாம் மா” என எதிர் அறையில் இருந்த மதனை எழுப்ப, அவன் மேலே சென்று சஞ்சீவை எழுப்பி அழைத்து வந்தான். அதற்குள் புஷ்பா வந்து, பிரஜீயின் அருகில் அமர, அவளிடம் “புஷ்பா, பிரஜீக்கு தேவையான நைட்டி மற்ற மாற்று துணி இரண்டு மூணு எடுத்து வை மா” என்று சமயலறைக்கு சென்றார்.

அங்கு ஒரு பிளாஸ்க், ஒரு சின்ன தூக்குவாளி, மூன்று டம்ளர், சாப்பிடும் தட்டு, சுடு தண்ணீர் என்று எடுத்து, ஏற்கனவே சில பொருட்களை சுமந்திருந்த கூடையில் வைத்தார். அந்தக் கூடையில் இரண்டு தினம் முன்பு தான், சரஸின் பழைய பருத்தி சேலை இரண்டு, ரங்கனின் பருத்தி வேஷ்டி, சிறிய கத்திரி, அப்புறம் வேஷ்டியின் கருப்பு முனையை கிழித்து வைத்திருந்தார். மேலும் அதனுடன் பால் பாசி, கண் மை டப்பா, சீனியையும் ஒரு சிறிய டப்பாவில் அடைத்து வைத்திருந்தார்.

கூடையை எடுத்து வரவேற்பறையில் வைத்தவர், அறை உள்ளே செல்ல, பிரஜீயின் மௌனக் கண்ணீரை கண்டு, புஷ்பாவிற்கும் தானாய் கண்ணீர் சுரக்க, அதோடு பிரஜீயை பார்த்து சோகமாய் அமர்ந்திருந்த சஞ்சீவையும் பார்த்து, “ஏய்… புஷ்பா என்ன நீயும் இப்படி அவளோட அழுதுட்டு உட்கார்ந்திருக்க… உன்ன என்ன சொன்னேன் போ… அத எடுத்து வை சீக்கிரம்” என்று அதட்டி அனுப்பினார்.

பின் அவள் துணி பையோடு வரவும், “நீ போய்… சாமி… இல்ல நீ இவள கூட்டிட்டு வா” என்று வெளியே வந்து, மதனிடம் பையைத் தந்து, காரை எடுக்க சொல்லி விட்டு, விளக்கேற்றி சாமியைக் கும்பிட்டு விட்டு, “அம்மா, மீனாட்சி தாயே, குழந்தைய நல்ல படியா பெற்று எடுக்கணுமா என் பொண்ணு” என்றெண்ணி பிரஜீக்கு திருநீர் பூசி, “பொறுத்துக்கோ மா, போகலாம், சாமிய நினச்சுட்டே வா” என்று அவளுக்கு ஆறுதல் கூறிய படி, ரங்கனிடம் “என்னங்க நாங்க முத ஹாஸ்பிட்டல் போறோம், நீங்களும் புஷ்பாவும் இருங்க, அங்கிருந்து போன் பண்ணப்புறம் வாங்க” என்று சொல்லி விட்டு, சரஸ், பிரஜி, சஞ்சீவ் மற்றும் மதன் எனக் கிளம்பினார்கள்.

நானும் வருகிறேன் என்று சொன்ன புஷ்பாவை வேண்டாம் என மறுத்து விட்டார் சரஸ். எங்கு பிரஜீயின் பிரசவ வலியைக் கண்டு இவள் பயந்து விடுவாளோ என்று எண்ணி தான் அவ்வாறு சொன்னார்.

இவர்கள் மருத்துவமனை செல்லும் முன்னே, அங்கு கோதையும், ராமும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் முன் ரதி அங்கு வந்திருந்தாள். இது அவள் தோழி பணிபுரியும் மருத்துவமனை என்பதால், இங்கு பிரஜீயை மாதாந்திர பரிசோதனை, மற்றும் பிரசவமும் இங்கேயே பார்க்கலாம் என்று அவள் தான் பரிந்துரை செய்தாள்.

பிரஜீக்காக, அவளின் பிரசவ தேதியை ஒட்டி, தான் பணிபுரியும் மருத்துவமனையில் ஒரு வார விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். பிரஜீயை ஆறரை மணி அளவில் தான் பிரசவ அறைக்கு அழைத்து சென்றார்கள். அதற்குள் அவள் துடித்த துடிப்பைப் பார்த்து சஞ்சீவ் மனதின் உள்ளே அதிர்ந்துக் கொண்டிருந்தான்.

பிரசவ அறைக்கு சென்ற பிரஜி, சஞ்சீவைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவனும் செல்ல, வந்தவன் கையைப் பற்றி “என்னங்க… ம்மா… எனக்கு…. பயமா… இருக்கு… சஞ்சுஊஊ….. இம்மாஆஆஆஅ….” என அவள் வலியோடு சொல்ல, “சஞ்சு… எனக்கு ஒன்னும்… ஆகாதுல… இல்ல… ம்மா…. குமா… அதுனால… கடவுள்… சஞ்சுஊஉ…..” என வலியைத் தாங்கி, “என்ன….தண்….” எனச் சொல்லி முடிப்பதற்குள்,

அவளின் பயத்தைப் புரிந்து, “ஹேய்… லூஸு…. அதெல்லாம்… ஒன்னும் ஆகாது உனக்கு. நான் இருக்கேன்… உன்ன காப்பாற்ற… பயப்படாத மா, ரதி இருக்கா…” எனச் சொல்லி கொண்டே, அவள் கையை அழுத்தி, குனிந்து அவள் வயிற்றில், மற்றொரு கையை வைத்து, “செல்லக்கட்டி… ஏன்டா அம்மாவ இப்படி படுத்துற, நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்ல, அம்மா பாவம், கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு. நீங்க சமத்து தான, சீக்கிரம் அம்மாக்கு சிரமம் கொடுக்காம வாங்க செல்லம்” எனக் கண்களில் நிரம்பிய கண்ணீரோடு சொல்ல…

‘ஸ்ஸ்ஸோ… இவருக்கு இதே வேலையா போச்சு… ப்பா… இருப்பா நான் வெளிய வந்து உன்ன உதைக்கிறேன்’ என்று எண்ணிய குட்டி, வெளியே வர எத்தனிக்க… அதனால் அவள் உச்சக்கட்ட வலியால் “ம்மாஆஆஅ….. சஞ்சு….” எனக் கண்ணீர் வடிக்க, சஞ்சீவை வெளியேற்றி, ரதியும் அவள் தோழியும், அரை மணிநேரம் போராடி, பிரஜீயின் குழந்தைக்கு உலகைக் காட்டினர்.

“வ்வே….. இங்.. குவ்வே….” என அழுத குழந்தையை ரதி கையிலேந்தி வந்து, சஞ்சீவிடம் “அண்ணா… இங்க பாருங்க… உங்கள மாதிரியே அழகா பையன் பிறந்திருக்கான்.” என்று காட்டினாள். அதற்குள் அவர்களிடம் சரஸ், கோதை, லஷ்மி எனப் பெண்கள் கூடி விட, மதனும் ராமும் குழந்தையை அவர்கள் பின்னே நின்று எட்டிப் பார்த்தனர்.

ரதி சஞ்சீவிடம் குழந்தையை நீட்ட, அவனோ பிரம்பிப்போடு வாங்க, அது கைக் காலை ஆட்டி சிணுங்கவும், குழந்தையின் ஸ்பரிசம் பட்டதும், தலை முதல் கால் வரை நாடி நரம்புகளில், புதிதாய் ரத்தம் பாய்வது போன்று பரவசமாய் இருக்க, சஞ்சீவுக்கு கைகள் நடுங்கியது.

உடனே “ம்மா… இந்தாங்க” எனப் பூவை விட மென்மையாய் தன் அன்னையிடம் கொடுத்து விட்டான். அவரோ பேரனை லாவகமாய் தூக்கிக் கொண்டே, அருகில் இருந்த மதனிடம் “நீ போய், அப்பாவையும், புஷ்பாவையும் கூட்டிட்டு வா பா” எனக் கூறி, பேரனை அணைவாய் வைத்திருக்கவும் குழந்தை அழுகையை நிறுத்தியது.

சஞ்சீவ், குழந்தையின் கையைப் பற்றினான். பூவை விட அழகாய், பட்டை விட மென்மையாய், செடியில் துளிர் விடும் தளிர் போன்ற குட்டி குட்டி கை விரல்கள், கால் விரல்கள் என எண்ணிக் கொண்டே, “ம்மா… குட்டியா அழகா இருக்கான்ல…” எனத் தன் அன்னையிடம் சொல்ல, அவரோ “நீயும் இப்படி தான் பா இருந்த… கொழு கொழுன்னு” என்று அவர் தன் மகவை கையில் ஏந்திய நாளுக்கு சென்று விட, அதற்குள் கோதை பேரனை வாங்கி தன் கணவனிடம் காட்டினார்.

உடனே சரஸ் தான் கொண்டு வந்த சீனி டப்பாவில் இருந்த சிறிது சீனியை எடுத்து அனைவர் கையிலும் கொடுத்தார்.

இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரதியிடம், சஞ்சீவ் “பிரஜிய போய் பார்க்கலாமா ரதி மா” எனக் கேட்டான்.

“இல்லண்ணா… கொஞ்ச நேரத்துல ரூமுக்கு மாத்திருவாங்க, அப்போ போய் பாருங்க. இப்ப கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க.” என விடை தர, “நல்லா இருக்காளா ரதி” எனத் தவிப்போடு அவன் கேட்க, “நல்லா இருக்காங்க, பயப்பட வேண்டாம்ணா…” என ஆறுதல் கூறி விட்டு, பிரஜீயைப் பார்க்கச் சென்றாள்.

புஷ்பா பத்து மணிக்கு வந்து பார்க்கும் போது, பிரஜியை அறைக்கு மாற்றி இருந்தனர். அவள் அருகே குழந்தையைப் படுக்க வைத்திருந்தனர். புஷ்பா குழந்தையைப் பார்க்க, அழகாய் நெற்றியில் வட்டமாய் கருப்பு போட்டிட்டு, கழுத்தில் பால் பாசி அணிந்து, கையிலும் காலிலும் கருப்பு கயிறு லேசாய் கட்டியிருக்க, உள்ளங்காலிலும் வட்ட மையிட்டு அழகாய் குட்டி கண்ணனை போன்று இருக்கிறான் என்று கூறினாள்.

இவர்கள் வரவும், குழந்தை விழித்து அழுக ஆரம்பிக்க, பிரஜீ திரும்பி தன் அழும் மகனைப் பார்க்க, சரஸ் கையில் எடுத்து, ரங்கனிடம் குழந்தைக்கு கொடுக்கவென வைத்திருந்த சீனி கரைசலை தர, அவரோ “நான் வேணாம் சரஸ், நீயே முத கொடு. அதான் உன்ன மாதிரி அமைதியா அன்பா இருப்பான்” என்று கூற, அவரோ “நானா… ரிஷிமா நீங்க தர்றீங்களா?” என கோதை எதுவும் எண்ணுவாரோ என்று அவரிடம் கேட்க,

அவரோ “நீங்களே சேனை வைங்க சரசு, அண்ணா சொன்ன மாதிரி குழந்தை உங்கள மாதிரியே வளரட்டும்” என்று தன் பெண்ணை ஒரு தாய்க்கு மேலாய் தாங்கிய அந்தத் தாயுள்ளத்தையே வைக்கச் சொன்னார். அதோடு ராமும், பிரஜீயும், சஞ்சீவும் ஆமோதிக்க அவரே தன் பேரனுக்கு சேனை வைத்தார்.

இது ஒரு பழக்கவழக்கம், புதிதாய் குழந்தை பிறந்தால், சீனி கரைசலை தொட்டு அக்குழந்தையின் வாயில் வைப்பார்கள். அப்படி அக்கரைசலை முதலில் யார் வைக்கிறார்களோ, குழந்தை அவர்களின் குணங்களோடு வளரும் என்று நம்பப்படுகிறது. சிலர், குழந்தைக்கு நன்றாக படிப்பு வர வேண்டும் என்று, பேனா முனையில் தொட்டு வைப்பார்கள்.

பின் சஞ்சீவ் பிரஜீக்கு தனிமைக் கொடுத்து, குழந்தையைத் தூக்கி கொண்டு, அனைவரும் வெளியே செல்ல, இதற்காவே காத்திருந்தது போல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, சஞ்சீவ் அவள் தலை மேல் தன் தலையை சாய்த்து, அவள் கைப் பற்றி “தேங்க்ஸ்… பிரஜு” எனச் சொல்லி, கண்கள் தளும்ப, “ரொம்ப கஷ்டப் பட்டுட்டியா பிரஜி…” என உருகினான்.

அவளோ அவன் கண்ணீரிலேயே அவன் அன்பை உணர்ந்து, “இல்ல சஞ்சு… நம்ம பையன பார்க்கவும் எல்லா வலியும் மறந்துப் போச்சு” எனச் சொல்ல, அவள் கன்னத்தைத் தன் கையால் மென்மையாய் பற்றி, “இம்… ஆமா பிரஜி அவனப் பார்த்தா எதுவுமே ஞாபகம் இருக்கிறது இல்ல, அப்படியே மனச கொள்ளை அடிக்கிறான்.”

மெல்ல சிரித்த பிரஜீயோ “உங்கள மாதிரியே மாயம் பண்றான்னு சொல்லுங்க” எனச் சொல்ல, “ஏய்… என்ன சொன்ன, நானா… நானா மாயம் பண்றேன்… நீ தான் ஏதோ மாயம் பண்ணி, என்ன மயக்கி, இப்ப எப்போ பாரு என் மனசும், மூளையும் உன்னையே நினைக்குது.” என்று அவள் கூர் மூக்கை பிடித்து ஆட்டி, சிரித்தான்.

மூன்று மாதம் கழித்து, ஒரு சுப யோக நன்னாளில், விடிகாலை ஆறு மணி, முப்பது நிமிடம்…

“இப்பவாது தலைக் குனிஞ்சு நட, இல்லேன்னா மாப்பிள்ள வேணாம்னு சொல்லப் போறார். அப்புறம் இன்னொரு சோணகிரியலாம் உனக்காகப் பிடிக்க முடியாது” என அவளுடன் வந்த சுதன் கேலிப் பேசினான்.

ஆம், ரதி தன் அண்ணன் தான், தன்னை மணப்பெண் தோழிக்கு பதிலாய் தோழனாய் அழைத்து செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்க, லஷ்மி இரண்டு அடி கொடுத்தும், கேட்காதவளை, மேலும் முகத்தைச் சுண்ட வைக்க விட வேண்டாம் என்று, பாவம் அவள் தயாராகி வரும் வரை, சுதனை மணமகள் அறைக்கு வெளியே காவலனாய் நிறுத்தி விட்டனர்.

ஆனால் இதைப் பற்றி துளியும் கவலைப் படாமல், உள்ளே இருக்கும் தன் காதலி பூஜாவையே வைத்தக் கண் வாங்காமல், கண்களாலே தொடர்ந்துக் கொண்டிருந்தான். ரதியை விட பூஜா, இந்தத் தாக்குதலில் தவித்து சிவந்து போனாள்.

பிரஜி தன் மூன்று மாத மகனை பத்திரமாய் கையில் வைத்திருக்க, அவனுக்கு கையை சொடக்கிட்டு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான் அவளருகே அமர்ந்திருந்த சஞ்சீவ்.

மேலும் “பிரணவ் குட்டியா நீங்க… அப்படியா” எனக் கேட்க, குழந்தையோ அவன் மீது காலை வைத்து உதைத்து, சிரித்தது. எப்போதும் பிரணவிடம் ஏதேனும் பேசி, “அப்படியா அப்படியா” எனக் கேட்டால், கொள்ளை சிரிப்பு வரும்.

இந்த மூன்று மாதத்தில், பிரணவின் சிரிப்பு, அழுகை, தூக்கத்திலே சிரிக்கும் அழகு, பிரஜீயின் சேலையை இறுக பற்றிக் கொள்ளும் விதத்தைப் பார்த்து சந்தோஷியை விட சஞ்சீவ் பூரித்து, ஆச்சரியப்பட்டான் என்று சொன்னால் அது மிகையல்ல.

பின் மேடையில் அவர்களை அழைக்க, முதல் வரிசையில் இருந்த சஞ்சீவும், பிரஜீயும் செல்ல, கெட்டி மேளம் சொல்லப்பட, பிரஜி, சசி ரதிக்கு கட்டிய தாலியில், நாத்தனார் முடிச்சிட்டாள்.

பின் குடும்ப சகிதமாய் நின்று புகைப்படம் எடுத்தாலும், புஷ்பா-மதன், பிரஜி-சஞ்சீவ், சங்கீதா-ஜெய், செல்வி-சபரி, சிந்தா-ஷிவா என நின்றனர்.

அப்படியே அந்த வரிசையில், வலுக்கட்டாயமாய் சுதனால் இழுக்கப்பட்டு வந்த பூஜா மற்றும் சுதன் நிற்க, “அடிப்பாவி… “ என ஏற்கனவே இவர்கள் விஷயம் தெரிந்தாலும், பூஜாவைப் புஷ்பா முறைக்க…

அதே போல, ரிஷி-திவி நிற்க, இந்த முறை “அடப்பாவிகளா” என இருவரையும் பிரஜி முறைக்க…

ரதியோ “சரி சரி விடுங்க, சின்னப் புள்ளைங்க பிழைச்சுப் போகட்டும்” என்று சொல்லி விட்டு, “சசி எனக்கு தாகமா இருக்கு ஜூஸ் சொல்லுங்க” எனச் சொல்ல, அவனோ “இந்தா டியர்” எனத் தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.

அவளோ ‘உன்ன….. நைட் கவனிச்சுக்கிறேன்’ என்று மனதுள் எண்ணி, பாட்டிலை வாங்கி தண்ணீர் பருகினாள்.

இரவு, சசி தன் அறைக்கு செல்ல, “என்ன இது… நம்ம ரூம் தான, இல்ல மாத்தி வந்துட்டோமா” எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டிருக்கும் போதே, “எல்லாம்… உன் ரூம் தான் டா” என ஜெய் வந்தான். “டேய்… என்னடா இது, ஒரு பலகாரக் கடையே இருக்கு” என வியந்தான். “எல்லாம் உன் ரதி தான்பா வைக்கச் சொன்னா, இந்தா இந்த வாழப்பழத்த மறந்துட்டாங்களாம், நீ ரூமுக்கு போயிட்டன்னு என்ட்ட கொடுத்து விட்டாங்க” என தான் வந்த வேலையைக் கூற,

“டேய் அண்ணா… இன்னிக்கு எனக்கு பர்ஸ்ட் நைட் டா, இப்படி ஒரு ஸ்வீட் கடையே வச்சீங்கன்னா… இத எப்ப சாப்பிட்டு?” என அவன் போக்கில் அங்கலாய்த்தவனைக் கண்டு கொள்ளாமல், “டேய் சசி, நான் வேணா இதுல கொஞ்சம் என் ரூமுக்கு எடுத்திட்டு போகவா டா? எனக்கு கூட இன்னிக்கு தான் டா கல்யாண நாள்” என்று ஆசையாய் கேட்க,

“அது மூணு வருஷத்துக்கு முன்னாடி டா, இப்ப எனக்கு தான் கல்யாண நாள். சோ நீ இடத்த காலி பண்ணு… போ… உன் ரூம்ல ரதியோட அண்ணி… அதான் புஷ்பா, சங்கீக்கு துணையா இருக்காங்களாம். சோ நீ போய் மொட்ட மாடில உன் அணிவர்சரியக் கொண்டாடுவியாம்.” என அவனை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தான்.

இப்படி பல சந்தோஷங்களை அள்ளி தரும் மாயங்கள், இவர்கள் எல்லோர் வாழ்விலும்  தொடர்ந்துக் கொண்டே இருக்கட்டும் என மகிழ்ச்சியோடு வாழ்த்தி செல்வோமேயானால், நம் வாழ்விலும் மாயங்கள் நிகழும் என்று கண்டிப்பாக நம்பலாம்.

 

என்றும் மாயங்கள் தொடரட்டும்.

error: Content is protected !!