இந்திரனின் சுந்தரியே

?14?         

“என்னது சுந்தரியோட ப்ராஜக்ட் வெளிய ஒரு ஆப்பா இருக்கா? எங்க இருக்கு? எந்த இடம்?” வத்சலாவின் குரல் பதட்டத்துடனும், ஆவலாகவும் வெளி வந்தது..

“அந்த வெப்சைட் நம்ம பக்கத்து ஊர்ல இருக்கிற ஒரு காய்கறி வெண்டார்க்கு தான் செஞ்சிருக்காங்க.. இது மேடம் செஞ்சிக் கொடுத்தாங்களா இல்ல நம்ம ஆபீஸ்ல இருந்து அந்த ப்ராஜகட் லீக் ஆகிடுச்சான்னு தெரியல மேடம்..” அந்த ஆபீசில் இருந்து வத்சலாவிற்கு அழைத்துச் சொல்லவும், வத்சலா கோபத்துடன் பல்லைக் கடித்தார்..

‘பக்கத்து ஊருல இருந்து தான் இந்த ஆட்டம் போட்டு இருக்கியா நீ? வரேண்டி என் மகளே..’ மனதினில் கருவியவர்,

“எனக்கு அந்த சைட் எந்த ஐபின்னு பார்த்துட்டீங்களா?” மனதில் அடுத்த கட்டத் திட்டத்தை வகுத்துக் கொண்டே அவர் கேட்க, அந்த ஐடியை வாங்கிக் கொண்டவர், உடனே அந்த டிடெக்டிவ்விற்கு அழைக்க, அவரும் தான் கண்டவற்றைச் சொல்லி, திருமண விஷயத்தை மட்டும் சொல்லாமல் விட்டு, 

“உங்களுக்கு நான் நேத்து இருந்து ட்ரை பண்றேன் மேடம்..” என்று சொல்லவும்,

“ஹ்ம்ம்.. அந்த ஐடி எங்க இருக்கு.. என்ன ஏதுன்னு கண்டுப்பிடிங்க.. நான் உடனே கிளம்பி வரேன்..” என்றவர், அடுத்த ப்ளைட்டைப் பிடித்து வந்து சேர்ந்தார்..

வத்சலா கொடுத்த ஐபி எங்கிருந்து செயல் பட்டிருக்கிறது என்று கண்டுப்பிடித்து அவர் அந்த இடத்திற்குச் சென்ற பொழுது, அந்த இடத்தைப் பார்த்தவர் அவரது உதவியாளரைப் பார்த்து நக்கலாகப் புன்னகைத்தார்..

“நான் சொன்னேன் இல்ல.. இது போல ஒரு இடத்துல தான் அந்தப் பொண்ணு இருக்கும்ன்னு.. பாரு.. இந்த ஏரியாக்குள்ள தான் ஒளிஞ்சு இருக்காங்க.. அவ்வளவு வசதியான பொண்ணு இங்க வந்து தங்க அப்படி என்ன கஷ்டமோ போ..” என்றவர், அந்த இடத்தில் விசாரிக்கத் துவங்கினார்..

“ஹ்ம்ம்.. அந்த ஆளுக்கு பயந்து தான் வந்திருக்கும்.. சார் பேசாம நாம கண்டுப்பிடிக்க முடியலைன்னு சொல்லிடலாமா? ‘பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்’ன்னு வள்ளுவரே சொல்லி இருக்காரே. அது போல செஞ்சிடலாம் சார்..” உதவியாளருக்கு சுந்தரியை காட்டிக் கொடுப்பதில் மனமில்லாமல் புலம்ப,

“முதல்ல அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி இருக்கறவன் நல்லவனான்னு தெரியணுமே.. அது தெரிஞ்சா போதும்..” என்று அவர் சொல்லவும், அந்த ஏரியாவில் சுற்றியவர், அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்ட்டிற்கு சென்றார்..

அப்பொழுது தான் சவாரி முடித்து, தான் வாங்கி வைத்திருந்த பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக் கொண்ட ஆதவன், சுந்தரியையும் அவளுக்கு காவலுக்காக இருக்கும் இந்திரனையும் கவிழ்ப்பதற்காக கூட்டணி அமைத்து பாஸ்கியுடன் பேசிக் கொண்டிருந்தான்..

“இன்னைக்கு கல்யாணமும் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க.. எப்படியாவது அவங்க சந்தோஷமா இருக்க விடாம செய்யணும்.. என்னை அசிங்கப்படுத்தின சுந்தரி எப்படி நல்லா இருக்கலாம்.. போய் அவங்க வீட்டு கதவைத் தட்டி.. அவனையும் ஒரு தட்டு தட்டி அவளைத் தூக்கிட்டு போகலாமா?” குடி போதையில் பாஸ்கி புலம்ப,

“ஹ்ம்ம்.. எனக்கு கொலைவெறியே வருது.. என்னை அன்னைக்கு எப்படி அறைஞ்சா தெரியுமா?” கோபமாக ஆதவன் கேட்க, பாஸ்கி தலை முடியைப் பிய்த்துக் கொண்டான்..

“அந்த சுந்தரியை சும்மா விடக் கூடாது.. அந்த காய்காரன உயர்த்தி வச்சு.. என்னை மட்டம் தட்டி அவன் முன்னால அசிங்கப்படுத்திட்டா.. அவன் முன்னாலயே அவளை அசிங்கப்படுத்தணும்னு பார்த்தேன்.. முடியல.. அய்யனார் போல அவளுக்கு காவலாவே சுத்திட்டு இருக்கான்.. அந்த அடியாளுங்களை வச்சு அவன் வியாபாரத்துக்கு போகும் போது.. முன்ன நடந்தது போல ஆக்சிடென்ட் போல அவனை அடிச்சுத் தள்ளினா தான் சரியா வரும்.. அவளை சுலபமா தூக்கிடலாம்” பாஸ்கி சொல்லிக் கொண்டிருந்த வேளையில் அதைக் கேட்டுக் கொண்டே வந்த டிடெக்டிவ்விற்கு, ஒரு பக்கம் அதிர்ச்சியும், அவர்கள் பேசுவதைக் கேட்டு தலையை சுற்றுவது போல இருந்தது..

‘அப்போ அந்தப் பொண்ணை கல்யாணம் செய்துட்டு இருக்கறவன் நல்லவன் தான்.. அந்தப் பொண்ணுக்கு பாதுகாப்பா இருந்திருக்கான்.. ஆனா.. அந்தப் பொண்ணுக்கு இங்க பாதுகாப்பு இல்லை போலவே.. இப்போ என்ன செய்யலாம்? அந்தப் பொண்ணோட பாதுகாப்பா.. இல்ல அவளோட வாழ்க்கையா? இவனுங்க பேசறதைப் பார்த்தா அந்த பொண்ணை இங்க நிம்மதியா வாழ விடமாட்டாங்க போல இருக்கே.. வேற ஏதாவது விபரீதமா நடந்துட்டா?’ என்று யோசித்தவரின் கண் முன் அவர் சந்தித்த பல வழக்குகள் வளம் வந்தன..

பெண்களை கடத்தி, அவர்களை நாசம் செய்து.. அவர்களை கொன்று போட்டுவிட்டுச் செல்லும் காமுகர்களை கண்டவருக்கு, தானாக கைகள் எழுந்து, தனது கையில் இருந்த சுந்தரியின் புகைப்படத்தைப் பார்க்கத் தூண்டியது. அது போன்ற ஒரு நிலையை எண்ணிக் கூடப் பார்க்கத் தோன்றாமல், தனது மனதில் உள்ளதை உதவியாளரிடம் கேட்க, அந்த இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அவரும் இப்பொழுது குழம்பிப் போனார்..

இருவரும் சிறிது தூரம் நகர்ந்து வந்து அமைதியாக தங்களது காரில் அமர, “இவனுங்க ரொம்ப மோசமானவனுங்க போல இருக்கானுங்க சார்.. அந்தப் பையன் நல்லவனா இருந்தாலும்.. அவனை அடிச்சுப் போட்டுட்டு அந்தப் பொண்ணை நாசம் செய்ய இவனுங்க தயங்க மாட்டாங்க போலேயே..  என்ன செய்யலாம்.. பேசாம அந்தப் பொண்ணை சந்திச்சு அந்தப் பொண்ணோட நிலை.. அந்த பையன் எப்படி ஹான்டில் பண்றான்னு எல்லாம் பார்த்துடலாமா?“ உதவியாளர் கேட்க, அந்த டிடெக்டிவ் அதிகாரியும் யோசனையுடன் தலையசைத்தார்..

இருவரும் யோசனையுடன் அமர்ந்திருக்க, வத்சலா அந்த இடத்திற்கு வந்து விட்டதாக போன் செய்யவும், அந்த டிடெக்டிவ் ஒரு பெருமூச்சை வெளியிட்டு ஆதவனின் அருகில் சென்றார்..

தனது அருகில் யாரோ நிற்கவும், ஆதவன் நிமிர்ந்துப் பார்க்க, சுந்தரியின் போட்டோவைக் காட்டியவர், “இந்தப் பொண்ணை இந்த ஏரியால எங்கயாவது பார்த்து இருக்கீங்களா?” எதுவும் தெரியாதது போலக் கேட்கவும், கண்கள் விரிய அவளது புகைப்படத்தைப் பார்த்தவன்,

“இந்தப் பொண்ணா? இந்தப் பொண்ணை நல்லா தெரியுமே.. நீங்க யாரு? அந்தப் பொண்ணுக்கு நீங்க என்ன வேணும்?” ஆவலாக பாஸ்கி கேட்க,

“சொல்லுங்க.. அந்தப் பொண்ணுக்கு ரொம்ப வேண்டியவங்க தான்..” அந்த டிடெக்டிவ் கேட்ட நேரம், வத்சலாவும் அந்த இடத்திற்கு வர, தங்களது அருகில் வந்து சல்லென்று நின்ற அந்த விலை உயர்ந்த காரைப் பார்த்த ஆதவனும், பாஸ்கியும் வாயைப் பிளந்து நின்றனர்.. அதை விட ஜீன்சும்.. டாப்புமாக வந்து இறங்கிய வத்சலாவைப் பார்த்த ஆதவன் கண்களை விரிக்க, அவர் அருகில் இருந்து ஒருவன் இறங்கவும், இருவரும் கேள்வியாக அந்த டிடெக்டிவ் சூர்யாவைப் பார்க்க,

“அவங்க அந்தப் பொண்ணோட அம்மா.. அவங்க பொண்ணை கூட்டிட்டு போக வந்திருக்காங்க..” அந்த டிடெக்டிவ் சொன்னது தான் தாமதம்..

“அப்படியா.. அம்மாவா? சுந்தரியை விட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களே.. அந்தப் பொண்ணு எப்படி இவ்வளவு அழகா இருக்குன்னு இப்போ தானே தெரியுது..” பாஸ்கி வழிய,

“போதும்.. நீங்க அவங்க இருக்கற வீட்டைச் சொல்லுங்க..” சூர்யா அவர்களது பேச்சை வெட்டி கேட்கவும்,

“நீங்க வந்தது ரொம்ப நல்லதுங்க.. வாங்க நான் அந்த பொண்ணு இருக்கற வீட்டைக் காட்டறேன்.. அந்தப் பொண்ணு ரொம்ப அப்பாவிங்க.. நல்லவன்னு நினைச்சு ஒரு பொறுக்கி கிட்ட மாட்டிட்டு இருக்கு.. வாங்க.. சீக்கிரம் வந்து காப்பாத்துங்க..” ஆதவன் அவசரமாக நகர, அவனைப் பிடித்து நிறுத்திய பாஸ்கி,

“அந்த பொண்ணு வீட்டைக் காட்டினா உங்களுக்கு உங்க பொண்ணு கிடைக்கும்!! எங்களுக்கு?” என்று கேட்க, இரண்டு பேருக்கும் ஒரு கட்டு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து வத்சலா நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டவர்கள், இரட்டை சந்தோஷத்தில் இந்திரனின் வீட்டை நோக்கி நகர்ந்தனர்..

அந்த இடத்தைப் பார்த்த வத்சலாவிற்கு சுந்தரியை கன்னம் கன்னமாக அறைந்து தள்ளும் வெறியே எழுந்தது.. ‘எப்படி ஒரு இடத்துல வந்து இருக்காப்பாரு..  அவ வந்து இருக்கறதும் இல்லாம என்னையும் இல்ல வர வச்சிட்டா.. ச்சே..’ மனதில் கருவியவர், ஆதவனைப் பின்தொடர்ந்து சுந்தரியை இழுத்துக் கொண்டு வரச் சென்றார்..

“நீங்க நேத்தே அவ இங்க இருக்கான்னு கண்டுப்பிடிச்சிட்டீங்களா?” அந்த டிடெக்டிவ்வைப் பார்த்துக் கேட்க,

“இல்ல.. பக்கத்துல இருந்த நகைக் கடையில நகை வாங்கி இருக்காங்க.. அதுக்கு அவங்க கார்ட்ல பே பண்ணி இருக்காங்க.. அது தான் அங்க இங்கன்னு விசாரிச்சிட்டு வந்தோம்.. ஓரளவு நெருங்கற சமயத்துல தான் நீங்க ஐபி அட்ரெஸ் வச்சு கண்டுப்பிடிக்கச் சொன்னீங்க.. இங்க வந்துட்டோம்..” அவர் சொல்லவும்,

“நகை இல்ல சார்.. அவங்க கல்யாணத்துக்கு தாலி வாங்கி இருப்பாங்க..” பாஸ்கி சொல்லவும்,

“இல்ல பாஸ்கி.. அந்தப் பொண்ணு அவனுக்கு செயின், ப்ரேஸ்லெட் எல்லாம் வாங்கிச்சு.. அதுக்கு போட்டு இருக்கும்.. எவ்வளவு பெரிய இடத்து பொண்ணு அந்த காய்க்காரனைப் போய் கல்யாணம் பண்ணிக்கிச்சே..” அந்த இடத்தை பார்த்து வத்சலாவின் முகம் போன போக்கைப் பார்த்தவன், மேலும் ஏற்றி விட வத்சலா அதிர்ந்து அவனைப் பார்த்தார்..

“என்னது கல்யாணம் ஆகிடுச்சா?” அவர் கிரீச்சிட,

“ஸ்.. சத்தம் போடாதீங்க மேடம்.. இங்க எல்லாம் சத்தம் போடாம காரியம் சாதிக்கணும்.. சத்தம் போட்டு ஊரைக் கூட்டினா உங்களுக்கு எதிரா திரும்ப சேன்ஸ் நிறைய இருக்கு.. அந்த இந்திரனோட அக்கா சரியான பஜாரி.. எல்லாரும் எழுந்து வந்தா.. உங்க பொண்ணை நீங்க கூட்டிட்டு கூட போக முடியாம போகலாம்.. ஊரைக் கூட்டி நீங்க அசிங்கப்படணுமா? இல்ல சைலென்ட்டா இந்திரனை அசிங்கப்படுத்தணுமா?” பாஸ்கி நைசாகக் கேட்க, ஆதவன் பெரிதாக மண்டையை உருட்ட, வத்சலா கண்களை மூடி தன்னை சமன் செய்துக் கொள்ள,    

“ஆமாங்க மேடம்.. இன்னைக்கு காலைல தான் கல்யாணம் நடந்துச்சு.. இத்தனை நேரம் அந்தப் பொண்ண அந்தக் காய்காரன் என்ன எல்லாம் கொடுமைப் படுத்தினானோ? அவன் கடைக்கு வரப் பொண்ணுங்களை கூட ஒழுங்கா விட மாட்டான்.. கைய பிடிச்சு காசு வாங்கறதும்.. அப்படியே கையைத் தடவறதும்ன்னு அப்படி ஒரு பிக்காலிப் பையன்..” ஆதவன் பேசிக் கொண்டே வேகமாக நடக்க, வத்சலாவின் வேகமும் அதிகரித்து இருக்க, அந்த டிடெக்டிவ்விற்கும், அவனது உதவியாளருக்கும் மனம் பதைபதைத்தது..

உதவியாளரின் பார்வை அமைதியாக வத்சலாவுடன் நடந்து வந்துக் கொண்டிருந்த அந்த ராஜீவ்வின் மீது பதிய, அவனது முகமோ அப்படி குரூரமாக இருந்தது..

“இதோ.. இது தாங்க அவங்க வீடு..” ஆதவன் கைக்காட்டியது தான் தாமதம், வேகமாக கதவின் அருகே சென்ற வத்சலா படபடவென்று கதவைத் தட்டத் துவங்கினார்..      

படபடவென்று கதவு தட்டப்படவும், இந்திரன் பயத்துடன் அமைதியாக நின்றான்.. அவனது மனது கண்டபடி அடித்துக் கொள்ளத் துவங்கியது.. இதயம் தொண்டைக்குழியில் வந்து துடிக்க, அவன் செய்வதறியாது நிற்க, கதவு தொடர்ந்து தட்டப்படவும், உறக்கத்தில் இருந்த சுந்தரி விழித்துக் கொண்டாள்.

எழுந்து வெளியில் வந்தவள் இந்திரனை கலவரத்துடன் பார்க்க, “நீ உள்ள போ சுந்தரி.. இல்ல மெல்ல பின் பக்கமா போய் அங்க அக்கா கூட இரு.. இந்த ஆதவன் சில சமயம் குடிச்சிட்டு வந்து ராத்திரி இப்படி நிறைய தடவ பல பேர் வீட்டைத் தட்டி இருக்கான்.. இன்னைக்கு நம்ம வீடுன்னு நினைக்கிறேன்..” அவளுக்கு சமாதானமாகச் சொன்னாலும், அவனது மனதில் என்னவோ பயம் சூழ்ந்து இருந்தது..

‘ஒருவேளை அவன் யாரையாவது கூட்டிட்டு வந்து எங்களை அடிச்சு போட்டா.. ஒருத்தன் ரெண்டு பேருன்னா சமாளிக்கலாம்.. நிறைய பேர்ன்னா என்ன செய்யறது?’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், சுந்தரியின் கரங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டான்..

“இருங்க வரேன்..” என்றவள், வேகவேகமாக தனது ஹான்ட்பேகில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயையும்.. ஒரு கத்தியையும் எடுத்துக் கொண்டு வந்தவள், இந்திரன் அருகே நின்று,

“அந்தக் கதவைத் திறந்து அவனை ரெண்டு சாத்து சாத்துங்க.. என்னவோ ஓவரா பண்ணிட்டு இருக்கான்..” அவள் தைரியமாக சொன்னாலும், அவனது மனக்கண்ணில் மலரின் குரூர முகமும், ஆதவனின் பேச்சுக்களும் நினைவு வர, இந்திரனுக்கு அந்த தைரியம் இன்றி போனது..

“சும்மா இரு சுந்தரி.. அவன் மட்டும் இருந்தா ஓகே.. அவன் கூட வேற யாராவது வந்தா?” என்று கேட்கவும், அவனது முகத்தைப் பார்த்த சுந்தரி,

“நீங்க இந்த கத்தியைப் பிடிங்க.. நான் இந்த ஸ்ப்ரே வச்சிக்கறேன்.. எதுக்கும் பின் சைட் கதவை தாழ் திறந்து வச்சிக்கோங்க.. டக்குனு வெளிய போறதுனாலும் போயிடலாம்..” தைரியமாக சுந்தரி சொல்லிவிட்டு, கதவின் அருகே செல்ல, அவள் சொன்னது போல செய்தவன், அவளை நகர்த்திவிட்டு, மனதினில் என்னவோ தோன்ற அவளை இறுக அணைத்து விடுவித்து, கதவின் தாழில் கை வைத்தான்.

அவனது மனதில் ஏதோ இனம் புரியா உணர்வு.. சுந்தரியைத் திரும்பிப் பார்த்தவன், ஒரு பெருமூச்சுடன் கதவைத் திறந்து, ஒரு தாக்குதலுக்குத் தயாராக, தாழ் திறக்கும் சத்தம் கேட்டதும், கதவைத் தள்ளிக் கொண்டு சட்டென்று உள்ளே வந்த ராஜீவ், அங்கு பெப்பர் ஸ்ப்ரேயுடன் நின்றிருந்த சுந்தரியின் கழுத்தைப் பிடித்து தள்ளிக் கொண்டே சுவரோட சுவராக மோத, அவனைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்த சுந்தரி, அவன் சுவற்றில் வைத்து அவளது கழுத்தை அழுத்தவும், அவனது முகத்தில் டக்கென்று அந்த ஸ்ப்ரேயை அழுத்தி விட, அவனது கை அவளது கழுத்தில் இருந்து விலகியது..  

“யூ.. யூ.. இடியட்..” கண்களைத் திறக்க முடியாமல், அவனது கை சுந்தரியை அடிக்க வர, அவனைப் பின்னால் இருந்து பிடித்துத் தள்ளிய இந்திரன்,

“ஹே.. என் பொண்டாட்டி மேல கையை வச்ச.. வச்ச கையை வெட்டி எரிஞ்சிடுவேன்..” என்றபடி ராஜீவின் கையை இரண்டு மிதி மிதிக்கவும், உள்ளே வந்திருந்த வத்சலா, இந்திரனைப் பிடித்துத் தள்ள, “மாம்..” சுந்தரி அலறினாள்..

அவளது ‘மாம்’ என்ற அழைப்பைக் கேட்ட இந்திரன் அதிர்ச்சியுடன் சுந்தரியைப் பார்க்க, “என்னடி? என்னடி மாம்ன்னு கூப்பிடற.. இந்த மாம் இத்தனை நாளா இருக்காளா? செத்தாளான்னு பார்த்தியா?” என்று கேட்கவும், அலட்சியமாக தலையைச் சிலுப்பியவள்,

“யாரு நீங்களா செத்து இருக்கப் போறீங்க? இருக்கற எல்லாரையும் தானே சாகடிச்சு இருப்பீங்க? என்ன கதை சொல்லிட்டு இருக்கீங்க?” என்றவள், அவரது கையில் இருந்த பையைப் பார்த்து,

“இப்போ கூட ஃபாரின் ட்ரிப் போல.. எங்க மலேசியாவா? நல்லா என்ஜாய் போல.. அது டிஸ்டர்ப் ஆன கோபமோ?” அவள் நக்கலாகக் கேட்கவும், வத்சலாவின் கை சுந்தரியின் கன்னத்தில் பதிந்தது..

“மாம்..” சுந்தரி குரலை உயர்த்த,

“என்னடி மாம்.. ஏண்டி.. ஏண்டி உன் புத்தி இப்படி போகுது? உனக்கு நான் யூ.எஸ்.ல ராஜா மாதிரி ஒரு வரனை பார்த்து இருக்க, இப்படி வந்து ஒரு காய்காரனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிக்கறியேடி.. ச்சே.. உன்னை எல்லாம்.. இந்தத் தாலி எல்லாம் ஒரு இதுவே இல்ல.. அதை தூக்கி போட்டுட்டு வா..” என்றவர், அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தை பிடிக்க, அவரது கையைப் பட்டென்று தட்டியவள், இந்திரனின் அருகே சென்று நிற்க, வத்சலாவின் நடவடிக்கைகளைப் பார்த்த இந்திரன் திகைத்து நின்றுக் கொண்டிருந்தான்..

அவனது மனம் முழுவதும் சுந்தரி கூறிய, ‘எங்க அம்மாவை பார்க்கத் தானே போறீங்க.. அப்போ உங்களுக்குத் தெரியும்..’ என்ற வாக்கியமே ஓடிக் கொண்டிருந்தது..

அதற்குள் சுதாரித்து எழுந்த ராஜீவ் திகைத்து நின்றுக் கொண்டிருந்த இந்திரனைத் தாக்க, இந்திரன் அவனைத் தடுத்துக் கொண்டிருக்க, “ராஜீவ்.. அவரை விடு.. நீ யாரு அவரை அடிக்க.. போ இங்க இருந்து வெளிய.. இது எங்க வீடு.. நான் இங்க இருந்து யார் கூடவும் வர மாட்டேன்.. இனிமே என்னோட வாழ்க்கை இந்திரன் கூடத் தான்..” சுந்தரி கத்திக் கொண்டிருந்த வேளையில்,

“ராஜீவ்.. எங்க அந்த ரெண்டு பேரும்.. பணம் வாங்கிட்டு சும்மா நின்னுட்டு இருக்கானுங்களா? வந்து இவனை ஒரு கை பார்க்கச் சொல்லு..” வத்சலாவின் ஆணையில், ஓடி வந்த பாஸ்கரும், ஆதவனும், இந்திரனைப் பிடித்துக் கொள்ள, ராஜீவ் இந்திரனை அடிக்கத் துவங்கினான்..

“ராஜீவ்.. இப்போ விடல.. நான் உன்னை குத்திடுவேன்..” கீழே கிடந்த கத்தியை எடுத்து சுந்தரி அவனிடம் காட்ட, அதை அலேக்காகத் தட்டியவன், அவளது தலை முடியை பிடித்து அருகே இழுத்து,

“ஏண்டி.. என்கிட்டே இல்லாதது என்ன இருக்குன்னு நீ இவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட.. நான் அப்படி என்ன சொல்லிட்டேன்? ஒரு டேட் போயிட்டு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு தானே.. நான் கேட்டது அப்படி என்ன தப்பா? ஏன் ஆன்ட்டி?” அவன் கேட்கவும்,

“இவ சரியான பட்டிக்காடு ராஜீவ்.. அது தான் நான் இந்த தடவ அனுப்பும்போது அவளை தூக்கிட்டு போயிடுன்னு சொன்னேன்.. நம்மளால இவளை இங்க ஒண்ணும் செய்ய முடியாது.. அந்தக் கிழவன் இவ மேல ஒரு துரும்பு பட்டாலும் எனக்கு ஆப்பு வச்சிடுவான்.. ச்சே.. என் உயிரை எடுத்துட்டு இருக்கான்.. அதுக்குத் தானே இவளை அப்படி பார்த்துப் பார்த்து மகாராணி போல வச்சுக்கிறது..    

அங்க அவளை கரக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டா இங்க பிரச்சனை இருக்காதுன்னு பார்த்தா.. அதுக்குள்ள தான் அவ தப்பிச்சிட்டாளே.. இப்போ மட்டும் என்ன.. அவளை தரதரன்னு வீட்டுக்கு கூட்டிட்டு வா.. நாளைக்கே உனக்கும் அவளுக்கும் அந்த ரிசார்ட்ல கல்யாணம் செய்துடலாம்..” வத்சலாவின் பதிலைக் கேட்ட இந்திரனுக்கு கோபம் பொங்கியது..

“என்ன என்ன சொன்னீங்க? எவன் பொண்டாட்டிக்கு எவன் தாலி கட்டறது? நான் சாகர வரை அதுக்கு விட மாட்டேன்..” அவர்கள் இருவரிடம் இருந்தும் விடுபட இந்திரன் போராட, சுந்தரி ராஜீவை இழுத்துக் கொண்டிருக்க, அவனது அருகில் இருந்த ஆதவனோ,

“அதான் அம்மா கூப்பிடறாங்க இல்ல சுந்தரி.. போகலாம் இல்ல.. உன் மேல எவ்வளவு அன்பு இருந்தா தேடி கண்டுப்பிடிச்சு வந்திருப்பாங்க..” என்று கேட்டபடி அவளது கன்னத்தைத் தொட வரவும், சுந்தரி பட்டென்று விலகி, அவனது கையைத் தட்டி விட, இந்திரன் அவனது காலை ஓங்கி மிதிக்க, ஆதவனுக்கு வெறி எழுந்தது..

“என்னடி.. என்னவோ ரொம்ப தான் பண்ற? நான் முதலும் கடைசியுமா கேட்கறேன்.. என் கூட வரப் போறியா இல்லையா?” சுந்தரியின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே வத்சலா கேட்க,

“நான் சொன்னது உன் காதுல விழுந்துச்சா இல்ல போதையில இருக்கியா? நான் தான் சொல்றேன் இல்ல.. நான் உங்க கூட வர மாட்டேன்.. நீங்க இங்க இருந்து கிளம்புங்க.. நான் செத்துப் போயிட்டத்தா கூட நீங்க நினைச்சிகோங்க.. என்னை ஆளை விடுங்க.. எனக்கு நீங்க எல்லாம் வேண்டாம்..” சுந்தரி சொல்லவும்,

“அது எப்படி? என் மானம் என்ன ஆகறது?” என்று கேட்ட வத்சலாவின் கோபம் எல்லை மீறிப் போக, சுந்தரியை கண் மண் தெரியாமல் அடிக்கத் துவங்கினார்..

“என்னங்க.. என்னவோ சத்தம் கேட்கற மாதிரி இருக்கு..” உறக்கத்தில் இருந்து விழித்த ராணி தாசை எழுப்பிச் சொல்லவும்,

“நாளைக்கு சந்தை இருக்கு இல்ல.. அதுக்கு சாமான் எடுத்துட்டு போறவங்க போவாங்களா இருக்கும்.. வேற ஒண்ணும் இல்ல.. இப்போ பேசாம நீ வா..” என்று அவளை அணைத்துக் கொண்டவன், ராணியுடன் உறவாடத் துவங்கவும், ராணி தாசினுள் கரைந்து போனாள்.

வத்சலா அவ்வாறு அடிக்கவும், இருவரிடமும் இருந்து வெறி கொண்டது போல விடுபட்டு வந்தவன், வத்சலாவைத் தடுக்க, ஆதவனும் பாஸ்கியும் இந்திரனை இழுத்துப் பிடித்தனர்..

சுந்தரி தனது அன்னையை தடுத்துக் கொண்டிருக்க, இந்திரனின் பக்கம் சாய்ந்த ஆதவன், “இவங்க வரலைன்னா நாங்க வந்து உன்னை அடிச்சு போட்டுட்டு முதலிரவு கொண்டாடலாம்ன்னு இருந்தோம்.. அதுக்கு தான் ஆளை எல்லாம் செட் பண்ணிட்டு இருந்தோம்.. கடைசியில இவங்க வந்ததுனால இன்னைக்கு தப்பிச்சீங்க.. இன்னைக்கு இல்லன்னா என்ன?? அந்த பொண்ணு சண்டைப் போடறதைப் பார்த்தா.. அது இங்க தான் இருக்கும் போல.. எப்படியும் ஆபீஸ் போக வர இருப்பா.. ஆபீஸ்ல அவன் இருக்கான்.. வெளிய நான் இருக்கேன்.. எப்போவாவது ஏதாவது சந்தர்ப்பத்துல அவளைத் தட்டிட மாட்டோமா? பெரிய விஷயமா என்ன? அன்னைக்கே என் தங்கச்சி அவளைத் தள்ளி விட்ட போது.. அவளை ஒரு வழி செஞ்சு அசிங்கப்படுத்தி இருப்பேன்.. மழை வேற ஊத்திக்கிட்டு இருந்துச்சா.. அதுல போய் எவன்டா நனையறதுன்னு விட்டுட்டேன்.. இன்னைக்கு பாரு நானும் அவனும் நிஜமா உன்னை தட்ட பிளான் பண்ணினா.. அவங்க அம்மா வந்து கெடுத்துட்டாங்க.. என்ன மாப்பிள்ளை நான் சொல்றது சரி தானே..” தனது வக்கிரத்தை மொத்தமும் அவன் கொட்டி முடிக்க, இந்திரனின் உடலில் பயப்பந்து ஓடி உருளத் துவங்கியது.. அதற்குத் தகுந்தார் போல பாஸ்கியின் பார்வை வத்சலாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்த சுந்தரியின் மீதே இருக்க, இந்திரன் தவித்துப் போனான்..

காலையில் பார்த்த மலரின் விகார முகமும், அவள் அன்று சுந்தரியின் ஆடைகளை களைந்து எரிய விழைந்ததை பெருமையாகச் சொன்னதும் இப்பொழுது நினைவிற்கு வர, இந்திரனுக்கு சுந்தரியின் பாதுக்காப்பு இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து நின்றது..

“மாம்.. மாம். நான் சொல்றதைக் கேளுங்க.. அவர் ரொம்ப நல்லவர்ம்மா.. என்னை நல்லா பார்த்துப்பார்.. நீங்க நினைக்கிற மாதிரி அவர் கண்டிப்பா கூடிய சீக்கிரம் உழைச்சு முன்னேறுவார்.. அவர் ரொம்ப உழைப்பாளி மாம்.. ப்ளீஸ்.. எங்களை இப்படியே விட்டுட்டு போயிடுங்க.. நாங்க சந்தோஷமா வாழ்வோம்..” சுந்தரி கெஞ்சிக் கொண்டிருக்க, இந்திரனின் மனதில் அவளை நினைத்து சொல்ல முடியாத துயரம் எழுந்தது..

அவளது நம்பிக்கையை பற்று கோலாகக் கொண்டவன், ‘நீ சொல்ற மாதிரி நான் ராவா பகலா உழைச்சு அந்த இடத்துல வீடு கட்டி.. உன்னை பாதுக்காப்பா அங்க கூட்டிட்டு போயிடறேன்டா அம்மும்மா.. இது போல எல்லாம் பொறுக்கி கிட்ட பேச்சு வாங்கிட்டு நீ வேலைக்கு போக விடாம.. நீ மகாராணியா வீட்ல இருந்தா போதும்.. அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்.. நீ இங்க இருந்தா.. உனக்கு ஏதாவது அகிடும்ன்னே என்னால வேலை செய்ய முடியாது.. என்னால முழு கவனத்தோட உழைக்க முடியாது.. அதுனால இப்போதைக்கு நீ பாதுக்காப்பா உங்க வீட்ல இருக்கறது தான் நல்லது.. உங்க அம்மாவை நீ ஜெயிக்க விட மாட்ட..

அங்க தான் யாரோ வயசானவர் உன்னை பத்திரமா பார்த்துக்கணும்ன்னு சொல்றார்ல.. உனக்கு கண்டிப்பா அங்க பாதுகாப்பு இருக்கும்.. நான் கூடிய சீக்கிரம் உன்னை தன் கூட கூட்டிக்கிட்டு வந்துடறேன் சுந்தரி.. அதுவரை நீ இங்க இருக்க வேண்டாம்.. எனக்கு நீ ரொம்ப முக்கியம்.. இப்படிப் பட்ட மட்டமான நாய்ங்க எல்லாம் உன்னை தொடவே அலையறானுங்க.. உனக்கு அப்படி ஒரு விஷயம் நடந்தா.. ஹையோ கடவுளே..’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவன்,  

“உங்க பொண்ணை நீங்க கூட்டிட்டு போயிடுங்க..” என்று சத்தமாகச் சொல்ல, சுந்தரி அதிர்ந்து அவனைப் பார்க்க, ஆதவனும், பாஸ்கியும் இந்திரனிடம் இருந்து அப்படி ஒரு வார்த்தையை எதிர்ப்பார்க்காமல் அவனை திகைப்புடன் பார்த்தனர்..

“இந்தர்.. என்ன? என்ன சொல்றீங்க?” சுந்தரி அதிர்ச்சியுடன் கேட்க, அவளுக்கு பதில் சொல்லாமல்,  

“நானே நாளைக்கு காலைல உங்க பொண்ணை உங்க வீட்ல கொண்டு வந்து விடலாம்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. இன்னைக்கு தான் அவ யாருங்கற விஷயத்தை என்கிட்டே சொன்னா.. எனக்கு இத்தனை நாளா அவ யாருன்னு தெரியாது.. கேட்டாலும் சொல்லவே இல்ல.. போலீஸ்ல கொண்டு விட அவ சின்னக் குழந்தையும் இல்ல.. அவளைத் தேடி இத்தனை நாளா யாரும் வராததுனால தான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளோட பாதுக்காப்புக்காக.. கண்ட நாயும் அவ மேல கை வைக்க பார்க்குதுங்க..” இந்திரன் தன் அருகில் இருந்த இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கெத்தாக சொல்ல, வத்சலா சந்தேகமாக அவனைப் பார்த்தார். 

“என்ன பார்க்கறீங்க.. இன்னைக்கு தான் உங்க பொண்ணு சொன்னா.. இத்தனை நாளா நான் எதனை தடவ அவளை உங்க வீட்ல கொண்டு விடறேன்னு சொல்லி இருக்கேன்னு உங்கப் பொண்ணையே கேளுங்க.. நான் சொல்றது பொய்யான்னு..” என்ற இந்திரன்,

“என்ன சுந்தரி.. உங்க அம்மாகிட்ட உண்மையைச் சொல்லு..” அவளது அதிர்ந்த முகம் அவனை வதைத்தாலும், இது இலகும் சமயமல்ல என்று நினைத்துக் கொண்டவன், சுந்தரியிடம் கேட்க, சுந்தரி அவன் அருகில் வந்தவள்,

“இந்தர்.. என்ன பேசறீங்க இந்தர்.. என்னை எங்க போகச் சொல்றீங்க? இத்தனை நாளா கேட்டதுக்கும் இப்போ என்னை கொண்டு விடறேன்னு சொல்றதும் ஒண்ணா? எப்படி உங்களால இப்படி பேச முடியுது? கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னது எல்லாம்?” சுந்தரி திகைப்புடன் கேட்டுக் கொண்டே அவனது கையைப் பிடிக்க, அவளது கையை உதறியவன்,

“உங்க வீட்டுக்கு போன்னா கிளம்பிப் போயேன்.. இதுவும் நான் தான் சொல்றேன்.. என்னால உன்னை எல்லாம் பார்த்துக்க முடியாது.. உனக்கும் கொஞ்ச நாள்ல இது எல்லாம் கஷ்டம் கசந்து போயிடும்.. இப்போ நான் உன்னை இங்க இருந்து போகச் சொல்றேன் சுந்தரி.. இங்க இனிமே உனக்கு வேலை இல்ல.. அது தான் உங்க அம்மா கூப்பிடறாங்க இல்ல.. போ.. போய் சுகமான வாழ்க்கையை வாழு.. என்னை விட்டு போ..” இந்திரனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூர் ஈட்டிகளாக மாறி சுந்தரியைப் பதம் பார்த்தது..

அவள் வார்த்தைகளின்றி அதிர்ச்சியில் நின்றுக் கொண்டிருக்க, இத்தனை நேரம் நடப்பதை வேடிக்கைப் பார்த்து, சுந்தரியையும், இந்திரனையும் அளந்துக் கொண்டிருந்த அந்த டிடெக்டிவ் சூர்யாவும், இறுதியில் இந்திரனின் வார்த்தையில் அவனை அதிர்ந்து பார்க்க, வத்சலா இந்திரனைப் பார்த்தார்..

“உனக்கு அவளை என்கிட்டே அனுப்ப எவ்வளவு பணம் வேணும்?” தான் வென்றுவிட்ட மகிழ்ச்சியில் அவர் கேட்க,

“எனக்கு பணம் எல்லாம் வேண்டாம்.. அவளைக் கூட்டிட்டு போங்க.. போதும்..” என்றவன், அசையாமல் நின்ற கோலம், அந்த டிடெக்டிவ்விற்கு எதுவோ உணர்த்த, அதிர்ந்திருந்த சுந்தரியை இழுத்துக் கொண்டு வத்சலா முன்னே நடக்க, இந்திரனின் மனது ஊமையாக அழத் துவங்கியது..

தனது உயிரை யாரோ பிரித்து எடுத்துச் செல்வது போல வலி எழ, அவன் கசங்கிய முகத்துடன் சுந்தரியை பார்த்துக் கொண்டு நிற்க, கையை உதறி, இந்திரன் பேசிய வார்த்தைகளில் மனதில் உடைந்துப் போனவள், சுற்றம் மறந்து வத்சலா இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்.

அந்த வீட்டத் தாண்டும் வேளையில், கையை இந்திரனை நோக்கி நீட்டி, ‘இந்தர்…’ உயிரைத் தேக்கி வைத்த குரலில் அவள் அழைக்க, அவனோ அசையாமல் நிற்கவும், சுந்தரி முற்றிலும் நொறுங்கிப் போனாள்..

அவள் போட்டிருந்த நைட்டியுடன், கலைந்த கேசமுமாக வத்சலா இழுத்துச் சென்று டிரைவர் கொண்டு நிறுத்திய காரில் அவளை ஏற்ற, இந்திரனுக்கு மனது மிகவும் வலித்தது.. அந்தக் கோலத்தில் அவள் வெளியில் செல்வதைப் பார்த்தவனுக்கு, இப்பொழுதே உயிர் போய் விடாதா என்று மனம் தவித்தது.

அவளையே அசையாமல் பார்த்துக் கொண்டு இந்திரன் நிற்க, அவளை காரின் உள்ளே தள்ளியதும், இந்திரனை எட்டி உதைத்து கீழே தள்ளிய ராஜீவ்.. அவனைப் பார்த்து நாக்கை மடித்து பத்திரம் காட்டிவிட்டுச் செல்ல, ஆதவனும் பாஸ்கியும் அவனை பரிதாபமாக பார்த்துவிட்டு, தங்களது சட்டையில் இருந்த பணத்தை எடுத்து விசிறி போல ஆட்டிக் கொண்டே, “அவ இல்லன்னா என்ன? எங்களுக்கு எவ்வளவு பணம் கிடைச்சிருக்கு பாரு.. அடிக்கடி போய் அந்த அம்மாகிட்ட நாங்க கரந்துப்போம்..” என்று செல்லிவிட்டுச் செல்ல, இந்திரன் தனக்குள் இறுகி இருக்க, காரில் ஏறியவளோ சுற்றத்தை வெறிக்கத் துவங்கினாள்.

???❤❤❤???  

???????? ???????? ????????

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!