இனிய தென்றலே

தென்றல் – 10

ஒரு தென்றல் போல வந்து…

அன்பே என்னை வேர்க்க வைத்தாய்…

வள்ளல் போல வாழ்ந்தேன்…

உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்…

உன் பேரை நான் சொல்லி…

என்னை அழைப்பேன்…

உன்னை இன்று நான் தேடி

என்னைத் தொலைத்தேன்….

மனதிற்குள் பதியமிட்ட உறவில் சந்தோஷகிளை பரப்பிட ஆயத்தமாகும் இனிய மணநாள் இரவு… இல்லறமாகிய நல்லறத்தின் அறிமுகப் பொழுது.

இருவரின் அன்பும் புரிதலும், இன்பமும் துன்பமும், நிறைகுறைகளும் அவர்களுக்குள்ளாக மட்டுமே பகிர்ந்துணரப்படும் துவக்கத்தின் நன்னாள்.

இருமனங்களின் சங்கமத்தை, அன்பின் ஆழத்தை தங்களுக்குள் பிணைத்துக் கொள்ளும் அற்புதத் தருணத்தில் தம்பதிகளாய் அசோக் மற்றும் வைஷாலியின் பயணம் ஆரம்பம்.

தன்மனைவிக்கு இனிய கணவனாக, இல்லறத்தை தாங்கிச் செல்லும் நல்ல மனிதனாக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் அசோக் கிருஷ்ணா…

தனக்காக சுவாசிக்க, தன்னை மட்டுமே நேசிக்க, தனக்காக உயிர் சுமக்கும் பெண்ணாய் வைஷாலியை நினைக்க நினைக்க, மனம் தேனாய் தித்தித்தது.

தன் மனங்கனிந்தவள் உடனான வாழ்க்கை கனவுகளுடன் அவள் வருகைக்காக, வைஷாலியின் மாடியறையில் காத்துக் கொண்டிருந்தான்.

இடைப்பட்ட ஒரு வாரத்தில் அனைத்துவித நவீன வசதிகளோடு பேத்தி, தன்கணவனுடன் தங்குவதற்காக அந்த அறையை மிகத் துரிதமாக மாற்றி அமைத்திருந்தார் அன்னபூரணி பாட்டி.

கண்களுக்கு இதமளிக்கும் வண்ணக் கலவைகளை பூசிக் கொண்ட சுவர்களும், அலங்கார விளக்குகளும் அந்த அறையை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தன. தேக்கு மரக் கட்டிலும், முற்றிலும் குளிரூட்டப்பட்ட அறையும் தம்பதிகளின் கனிவான கவனத்திற்கு காத்துக்  கொண்டிருந்தன. 

வெளியே பால்கனியில் நிலா முற்றம்… அதற்கு கீழே பலவித நறுமணங்கள் வீசும் மல்லிகை, முல்லை, மனோரஞ்சிதப் பூப்பந்தல்கள் பரவியிருக்க, அதன் சுகந்தத்தை நுகரும் எவருக்கும் மனதோடு உடலும் கிறங்கச் செய்யும். 

காலையில் திருமண சடங்கில் இருவரின் நண்பர்களும் செய்த கிண்டல்களுக்கு கூச்சத்துடன் தன்தோளில் சாய்ந்தவளை, ஆதரவுடன் அணைத்துக் கொண்டவனின் நெஞ்சில், அந்த இன்ப நினைவுகளின் மிச்சம் மீதிகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

அந்த ஏகாந்தத்தில் மனமெல்லாம் மனைவியின் நினைவில் கரைய, நாணத்தில் சிவந்தமுகம் மனக்கண்ணில் விரிந்து, அவனை சிலிர்க்க வைத்தது.

பொன்தாலியும், நெற்றிக் குங்குமமும் தன்கைகளால் வாங்கிக் கொண்ட வேளையில், செங்காந்தாள் நிறத்தை முகத்தில் சூடிக் கொண்டிருந்தாள் வைஷாலி.

இதுவரையில் பெண்களை நாகரீக முறையில் மட்டுமே கண்டும் பழகியும் வந்தவன், மனைவியின் குங்கும முகத்தை அத்தனை லயிப்புடன் ரசித்தான்.

திருமணத்திற்கு முன்தின இரவில்தான் அசோக் கிராமத்திற்கு வந்திருக்க, வைஷாலியுடன் தனியாக பேசும் வாய்ப்பு இன்னமும் அவனுக்கு கிட்டவில்லை.

அடுத்தடுத்த திருமணச் சடங்குகள், விருந்தோம்பல், நண்பர்களின் கலாட்டாக்கள் என்று அன்றைய பகல் பொழுதெல்லாம் கழிந்துவிட, மாலையில் கோவிலுக்கு அழைத்து செல்லவென்று மணமக்களுடன் பெரியவர்களும் கைகோர்த்துக் கொண்டனர்.

திருமணமே வேண்டாமென்று பிடிவாதம் பிடித்தவர்களை அதட்டி மிரட்டி சம்மதிக்க வைப்பதற்குள் ஒரு வழியாகி இருந்தவர்கள், தங்களின் நன்றியை அன்றைய தினமே   கடவுளுக்கு சமர்பிக்க அவர்களுடன் சென்றனர்.

அதை முடித்து வந்தால், பேத்தியின் திருமண இரவை தங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்ற அன்னபூரணியின் கோரிக்கையை அனைவரும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, மணமக்களால் இம்மியளவும் அங்கிருந்து அசைய முடியவில்லை.

வெகு வருடங்களுக்கு பிறகு தங்களது வீட்டில் நடக்கும் சுபநிகழ்வு அங்கே முழுமையடையவும், தனது வீட்டில் பேத்தியின் வாழ்வு தொடங்க வேண்டுமென்ற ஆவலையும்   அன்னபூரணி உரைத்திட, முதலில் மறுத்து இறுதியில் சரியென்று முடிவுக்கு வந்திருந்தனர். 

நிறைவாக பெரியவரின் ஆசையை நிறைவேற்ற, வைஷாலியின் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டனர். உடன் தங்கமணியும் அவரின் மூத்த மருமகள் மைதிலியும் மணமக்களுடன் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க, இப்பொழுது அசோக், வைஷாலியின் அறையில் அவளுக்காக காத்திருந்தான்.

பால்கனியில் நின்று அவளை முதன்முதலில் சந்தித்த மல்லிகைப் பந்தலை ரசித்துக் கொண்டிருந்தவன், கதவு திறக்கும் சத்தம் கேட்டு அறைக்குள் வந்தான்.

“ரிலாக்ஸா இரு வைஷூ! ஆல் தி பெஸ்ட்!” என்று மைதிலி வாழ்த்திவிட்டு செல்ல, அந்த க்ஷணமே வெட்கம் பிடுங்கித் தின்றது புதுப்பெண்ணிற்கு…

வைஷாலி உள்ளே வந்து கதவடைக்க முயன்று தடுமாறினாள். கையில் வெள்ளி பால்சொம்பு வேறு, அவளது நிதானத்தை சோதிக்க, அவள் பின்னே வந்து தாழ்ப்பாள் இட்டான் அசோக்.

“கார்ஜியஸ் க்வின்டா நீ! இன்னைக்கு முழுக்க எத்தனை அழகான எக்ஸ்பிரசன்ஸ் உன் முகத்தில… ஐ யாம் ஸ்பீச்லெஸ் ஷா!” ரசனையுடன் சொன்னவன், அவளிடம் சரணடந்தவனாய் தன்னை மறந்து நிற்க, வெட்கச் சிரிப்பில் தலைகுனிந்தாள் வைஷாலி.  

மெல்லிய ஜரிகையோடிய, மாந்தளிர் பச்சை பார்டர் சேர்ந்த வெண்பட்டில், மல்லிகைப் பூக்குவியலோடு தானும் ஒரு பூப்பந்தாக வந்த மனைவியை இமை தட்டாது இவன் பார்க்க, அவளின் இமைகளோ தாழ் திறக்கவில்லை.  

இவளின் அன்பிற்கும் அணைப்பிற்கும் உரியவன் நான் மட்டுமே என்ற சிந்தனை எழுந்தபோது கர்வம் கொண்டான் அசோக். தனது உயரத்திற்கு தோள் சேர்க்க வந்தவள் போல், சற்றே பூசிய தேகத்துடன் ஐந்தரை அடியில் இருந்தவளை உச்சி முதல் பாதம் வரை கண்களால் தழுவிக் கொண்டான்.

மஞ்சள் பூசிய முகம் அவளது ரோஜா நிறத்தை தங்கமாய் மின்னிக் காட்ட, இடைதாண்டிய கூந்தல் அவளது வனப்பை மேலும் அழகூட்டியது.

அவளது பெரிய கரு விழிகளுக்குள் விரும்பியே சிக்கிக் கொண்டவன், தன்பார்வையை இங்கும் அங்கும் அசைய விடாது அவளின் கைபிடித்து கட்டிலுக்கு அழைத்து சென்றான்.

“கிழக்கு பார்த்து நில்லுங்க அகி” என்று மனையாள் ஆணையிட,

“ஏன்டா? எது கிழக்கு?” கேள்விகளை இவன் அடுக்க,

“மொத வேலையா உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க சொன்னாங்க பாட்டி…” என்றவள் அவனை திசை பார்த்து திருப்ப முயற்சிக்க,

“ஓ… சூப்பர்! நான் உன்னை பிலஸ்(bless) பண்றேன்… நீயும் என்னை பிலஸ் பண்ணு!” என்றவன் இமைக்கும் நேரத்தில், மனைவியின் பிறைநெற்றியில் தன் முதல் முத்திரையை பதித்து விட்டு,

“கமான் ஷா! என்னையும் நீ ஆசீர்வாதம் பண்ணு…” என்று அவளை உசுப்பேற்ற,

அறைக்குள் நுழைந்த நொடி முதலே கணவனின் உரிமைப் பார்வையில் நெளியத் தொடங்கியிருந்தவள், அவனது அவசர உச்சி முத்தத்தில், பெண்ணிற்கான இயல்பான நடுக்கம் வெளிப்பட்டு, பெரும் தயக்கத்துடன் கணவனை ஏறிட்டாள்.

பட்டு வேஷ்டி சட்டையில் புன்னகை மன்னனாக நின்றவனின் பார்வையில் மனைவி மயங்கி தடுமாறியே தலைக்குனிய, அவளின் தடுமாற்றப் பார்வையில் தன் அவசரபுத்தியை நினைத்து தன்னைத்தானே கடிந்து கொண்டு,

“அது… உன்ன ஃபர்ஸ்ட் டைம் ரொம்ப பக்கத்துல பார்க்குறேனா? அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்…” அவளை சகஜமாக்க தன்நிலையை தயங்காமல் தெளிவுபடுத்தினான்.

“பரவாயில்ல அகி… எனக்குமே அப்படிதான்! அதான் கொஞ்சம் சங்கடப்பட்டுட்டேன்… மத்தபடி என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான், சின்ன குழந்த கிடையாது” அவளும் வெளிப்படையாக பேசிவிட, அவனும், ‘அப்பாடி… என்னை தப்பா நினைக்கல…’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.

இருவரும் நிச்சய தினத்தில் பேசிக்கொண்டதோடு சரி. அதற்குமேல் பேசிக் கொள்ள அவர்களுக்கு நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை. அதனாலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் இதுவரை அமையவில்லை.

அப்படியிருக்க, இவன் அதிரடியாய் தன்உரிமையை நிலைநாட்டியதில் தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று சற்று நேரத்தில் கலக்கம் கொண்டவன், அவளிடம் கேட்டே விட்டான்.

வைஷாலியின் பதிலில் நிம்மதி அடைந்தவன், ஆயிரம் விடயங்களை பகிர்ந்து கொள்ளும் ஆவலில் அவளுடன் கட்டிலில் அமர, இருவரும் சகஜமாய் உரையாடலை ஆரம்பித்தனர்.

தங்களைப் பற்றிய சுயஅலசலில் இருவரின் பழக்க வழக்கங்கள் விருப்பங்கள் பற்றிய பேச்சை தொடங்கினர்.

முதலில் இருவருக்கும் எந்தெந்த விஷயங்களில் ஒத்துப் போகின்றது என்ற பொல்லாதஆசை அசோக்கிற்கு எட்டிப் பார்க்க, பேச்சை ஆரம்பித்தான்.

“எனக்கு பிளாக் கலர் பிடிக்கும், உனக்குடா?” கேட்ட அசோக், அவள் கைகளை தன்கைகளுடன் கோர்த்திருந்தான்.

“எனக்கு ரெட் அண்ட் வொயிட் பிடிக்கும்” முதல் விருப்பத்திலேயே அவனுக்கு எதிராய் கூறினாள்.

“மியூசிக்ல உன்னோட சாய்ஸ் எது ஷாலி?”

“எனக்கு கர்நாடிக் அண்ட் லைட் மியூசிக்… உங்களுக்கு?” பதிலுக்கு அவளும் கேட்க,

“எனக்கு வெஸ்டர்ன்”

“ஐயோ காது போயிடும்பா. நான் இருக்கும்போது அவாய்ட் பண்ணுங்க அகி”

போயிற்று! இரண்டாவது கேள்விக்கும் அவனுக்கு சாதகமான பதில் இல்லை.

“ம்ம்…” என்று வெறுப்பாய் தலையட்டியவன், “எனக்கு மூவீஸ், மேஜிக் ஷோ பார்க்குறது ரொம்ப பிடிக்கும். உன்னோட ஹாபீஸ் என்ன ஷாலி?”

“உங்களுக்கு தெரியாதா? ஹாயா ஊர் சுத்துவேன், இல்லன்னா புக்ஸ் படிப்பேன். அதோட டிராயிங் பண்றது எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த நேரத்தில என்ன சத்தம் வந்தாலும் நான் கவனிக்க மாட்டேன்.”

இப்படியே இருவரின் கேள்வி பதில்களும் தொடர ஒன்றிலும் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை.

“எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்” என்றவனின் பதிலுக்கு

“நான் ஸ்போர்ட்ஸ்ல ஜீரோ அகி!” என பெரிய குண்டைப் போட்டு அவனை காண்டாக்கினாள்.

“சென்னைக்கு போனதும் நெறைய ட்யுனிக் டாப்ஸ், டெனிம் ஜீன்ஸ் வாங்கி குடுக்கிறேன்… இப்படி சேலை சுத்திட்டு நிக்கிறத விட்டுடுடலாம்டா” தான்விரும்பும் உடையை உடுத்த மறைமுகமாய் மனைவிக்கு உத்தரவை போட,

“நோ, நோ… எனக்கு சல்வார் அண்ட் சாரீஸ்தான் பிடிக்கும்” அதையும் அவள் தட்டிக் கழிக்க, நிராசையின் உச்சிக்கு சென்று விட்டான் அசோக்.

ஆசை மனைவிக்கென மேக்கப்செட் மற்றும் விதவிதமான மணங்களில் ஹேர்ஸ்பிரே எல்லாம் இணையத்தில் பார்த்து வாங்கலாம் என்று அவளுடன் அமர்ந்து பார்க்க முயல,

“எனக்கு நெருக்கி கட்டுன குண்டுமல்லி, குளிக்க பயத்தம்மாவு, தலைக்கு சீயக்காய் போதும். இத்தனை வருசமா அப்படிதான் யூஸ் பண்ணிட்டு வர்றேன்” என்று கணவனின் முயற்சிக்கு தடை விதித்தாள்.

கண்ணாடி வளையல், மருதாணி விரல்கள், சலங்கை கொஞ்சும் கொலுசோடு வலம்வர விரும்புவதாகவும், அதுவே தனது பாட்டிக்கும் பிடிக்குமென்றும், தானும் அப்படியே பழகி உள்ளதாகவும் வைஷாலி, அவளது ஆசைகளை பட்டியலிட,

‘இப்படி ஏட்டிக்கு போட்டியா இருந்தா, குடும்பம் நடத்தி விளங்கினா மாதிரிதான்… ரெண்டு பேருக்கும் ஜாதகம் மட்டுமே பொருந்தி இருக்கும்போல… பழக்க வழக்கத்துல எந்த பொருத்தமும் இல்லாம, எப்படி வண்டிய ஓட்டுறது?’ பொல்லாத சந்தேகம் வந்து அசோக்கிற்கு பெரிதும் ஏமாற்றத்தை தந்தது.

இருந்தும் மனம் தளராமல் மனைவியின் ஆசைக்கு குறுக்கே நிற்க விரும்பாதவனாய்,

“சரிடா உன் சாய்ஸ்ல நான் குறுக்கே நிக்கமாட்டேன். நீ வேலைக்கு போகணும்னாகூட ஓகே!” பெரிய மனதுடன் கட்டை விரலை உயர்த்த,

“ம்ஹூம்… வேலைக்கு போயே ஆகவேண்டிய கட்டாயம் இல்ல… ஒழுங்கா வீட்டுவேலை பழகி குடும்பம் நடத்த பாருன்னு பாட்டி சொல்லிட்டாங்க” என்றவள் கணவனின் அனைத்து பேச்சிற்கும் ஒட்டுமொத்த மறுப்பைகூறி மண்ணை வாரிப் போட்டாள்.

வைஷாலி சமூக வலைதளங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கும் இக்கால தாரகைதான். ஆனால் அவளது எண்ணங்களும் விருப்பங்களும்தான் இந்த நவீனயுகத்தோடு சற்றும் ஒத்துப் போகாதவையாக இருந்தன. அவளின் ஒவ்வொரு செயலிலும் தான், பாட்டியின் வளர்ப்பு என்பதை நிரூபணம் செய்தாள்.

ஆக மொத்தம் இருவருக்கும் ஏணி வைத்தாலும் நெருங்க முடியாத ஏழாம் பொருத்தம் இருப்பதை அவளுடன் பேசிய இரண்டு மணிநேர உரையாடலில் தெரிந்து கொண்டவனின் மனம் முழுவதும் ஏமாற்றங்களும் நிராசைகளுமே நிரம்பி வழிய, அடுத்த கட்ட பேச்சிற்கு செல்லாமல் தூக்கம் வருகிறது என்று உறங்கி விட்டான்.

நவநாகரீக மங்கையாய், நுனிநாக்கு ஆங்கிலத்துடன் அடுத்தவரை அசரடிக்கும் அழகு தாரகையாக தனது ரசனைக்கு உரியவளாக, தன்மனைவியை மனதில் எடை போட்டிருந்தவனுக்கு பெருத்த ஏமாற்றம்.

அவனால், அவன் மனதை சமாதானம் செய்து கொள்ள முடியவில்லை. மனவுளைச்சல்கள் அனைத்தையும் தகர்த்து விட்டு தனக்கான இன்ப வாழ்வை இவன் கனவு கொண்டிருக்க, அது கனவிலேயே கரைந்து போனதொரு தோற்றம் அவனுக்கு. 

அந்த அழுத்தம் தாங்கமுடியாமல்போக முதன்முதலாய் வைஷாலியின் வீட்டை அன்னியமாக நினைக்க ஆரம்பித்தான். என்னதான் இன்று மாப்பிள்ளையாக கம்பீரமாக இங்கு வலம் வந்தாலும். அன்றொருநாள் இந்த வீட்டுப் பெரியவரால் வெளியேற்றப்பட்ட தனது அவலநிலை மனதில் படமாய் விரிய, அசோக்கின் மனம் குழப்பம் தங்கிய குப்பை மேடானது.

தூக்கம் வராமல் பெருங்குழப்பத்துடன் படுக்கையில் அவ்வப்பொழுது புரண்டு கொண்டிருக்க, இவனின் சகதர்மினி நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

‘நான் தூங்கிட்டேனா இல்லையான்னுகூட கவனிக்க தோணல இவளுக்கு… இதுல இவங்க பாட்டி வேற, இவ லைஃப் இங்கேதான் ஸ்டார்ட் பண்ணனும்னு இல்லாத நொண்டிச் சாக்கை எல்லாம் சொல்லி, வீணா என்னை இங்கே இழுத்து வச்சுடுச்சு’ தூங்குபவளை பார்த்து பல்லைக் கடித்தவன் அந்த கடுப்புடனே கண்ணயர்ந்தான்.

அடுத்த இரண்டு நாட்களில், சென்னையில் வரவேற்பு நடத்த ஏற்பாடாகியிருக்க, அதைக் காரணம் காட்டியே மறுநாள் காலையில் சென்னைக்கு புறப்பட்டு விட்டான்.

மனைவியை உடன் அழைத்துசெல் என்று எத்தனையோ முறை பெரியவர்கள் கூறியும் செவிசாய்க்காதவன், அலுவலக வேலையும் சேர்த்து பார்க்க வேண்டுமென்ற சாக்குபோக்கு சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டான்.

வைஷாலியை சற்றும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் என்ன நினைப்பாள் என்றும் கருத்தில் கொள்ளவில்லை. ஒரு வார்த்தையும் அவளுடன் பேசாமல் தன்நிலையே பிரதானம் என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தான். 

“கல்யாணம் பண்ணிக்க சொல்லி கம்பெல் பண்ணீங்க… அதோட உங்க வேலை முடிஞ்சு போச்சு. இனி என் விஷயத்துல தலையிடாதீங்க…” விட்டேற்றியாக தாயைப் பார்த்து கூறிவிட, அதற்கு மேல் யாரும் கேள்வி கேட்க முன் வரவில்லை

மனைவியாய் அவனிடம் கேட்கலாம்தான். ஆனால் முதலிரவினில் ஏக முழத்துக்கும் முகத்தை தூக்கி வைத்தவன் இன்னமும் அப்படியே தன்னிடம் பாராமுகம் காட்டிக் கொண்டிருப்பவனிடம் தானாய் சென்றுபேச வைஷாலிக்கும் மனம் வரவில்லை.

திருமணம் நிச்சயமான நாளிலிருந்தே இவனது நடவடிக்கைகளை எந்தளவிற்கு மாற்றிக்கொள்ள முயற்சித்து வருகிறான் என்பதை அறிந்துகொள்ள மனம் அலைபாய்ந்த போதும் வெளிப்படையாக கேட்டு அனைவரின் முன்பும் சங்கடப்பட வைக்க வைஷாலி விரும்பவில்லை. 

திருமண இரவில் பேச்சோடு பேச்சாக கேட்கலாமென்றால் தனது பேச்சில் மிட்டாய் திருடிய குழந்தைபோல திருதிருவென முழித்தே உறங்கிப் போனான். அப்பேற்பட்டவனிடம் என்னகேட்டு எப்படி பதில் வாங்குவது என்று நினைக்கும்போதே நீளப் பெருமூச்சுகள் அவளையும் அறியாமல் வெளியேறி, அவளது இயலாமையை வெட்ட வெளிச்சமாக்கியது. 

ஆகமொத்தம் ஒருநாள் திருமண வாழ்க்கை இருவருக்கும் காரணங்களே இல்லாத மனத்தாங்கலை உண்டு பண்ணிவிட, மேற்கொண்டு அலைபேசியில்கூட பேசாமல் நேரடியாக வரவேற்பு நாளில் சென்னையில் சந்தித்துக் கொண்டனர்.

வரவேற்புநாள் காலையில் பெரியவர்களுடன் வந்திறங்கிய வைஷாலியை விருந்தினர் வருகை, அழகுநிலையத்தாரின் அலங்காரம் என்று உள்வாங்கிவிட, கணவனை கண்டு பேசுவதற்கும் மறந்து போனாள். இவனும் வீட்டினரின் கண்களுக்கு அகப்படாமல் மாலை நேரடியாக விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். 

அன்றைய மணப்பெண்ணின் அலங்காரமும் வரவேற்பு உடையும் அசோக்கினால் தேர்வு செய்யப்பட்டு அதையே அணிந்து கொள்ள நிர்பந்தப்படுத்தப் பட்டாள் வைஷாலி. மறுத்துகூறி மாற்றிக் கொள்ளலாம் என்றால் அவள் கண்களுக்கு சிக்காமல், கணவன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான்.

தங்கநிற உடையில், செர்ரிபழ நிறத்தில் கற்கள் மின்ன சாக்லேட்நிற பூக்களை அள்ளித் தெளித்த லெஹெங்கா வெகு அழகாய் வைஷாலிக்கு பொருந்தியிருந்தது.

பொன்தாலி மின்னிய கழுத்தில் வைரக் கற்கள் பதித்த தங்க சோக்கரும் அதற்கேற்றார் போல் தங்க ஜிமிக்கியும் அவற்றோடு இணைத்திருந்த முத்து மாட்டல்களும் காதினை அலங்கரிக்க, பின்னால் இடப்பட்டிருந்த மெஸ்ஸி பன் கொண்டையுமாக, முடிகள் அங்கும் இங்கும் தொங்கிக் கொண்டிருக்கும் சிகையலங்காரமும் சேர்ந்து அவளை அசரடித்தது.

கண்களின் மேலே மட்டும் இடப்பட்டிருந்த மை, ‘கண்ணை கசக்கினா அவ்ளோதான்’ என்று மிரட்டிக் கொண்டிருக்க, ‘என்னை விட நீ எடுப்பாய் இருக்கிறாயா’ மிதப்பாக  கேட்டபடியே கைகளில் அணிந்திருந்த வைர ப்ரேஸ்லெட் மின்னிக் கொண்டிருந்தது. உதட்டில் லேசாய் தீட்டப்பட்ட லிப் பாம் மட்டுமே…

தன்னைத்தானே பார்த்து வியந்து கொண்ட வைஷாலிக்கு கணவனின் ரசனையில் பெருமை பொங்கியது. இவன் ரசிகன். அழகை ஆராதிக்கத் தெரிந்த தேர்ந்த கலைஞன்தான் என்று கணவனின் பெருமையை பீற்றிக்கொண்ட மனது, இப்படியான தேடலைத் தேடிதான் வார வாராம் புது மலர்களை நாடிச் செல்கிறானோ என்ற நினைவே கசந்துவிட, அவிழ்க்கபடாத முடிச்சாய் விழுந்தது.

இதற்கு காரணம் கேட்டால், எழுத்தில் இல்லாத  நெறிமுறைகளை சொல்லி தன்னை நியாயப்படுத்திக் கொள்வானென மனதோடு புலம்பியே கணவனின் பெருமையை ஒதுக்கி வைத்தாள்.

தனது விருப்பத்தைவிட, பெரியவர்களின் தேர்வில் வைஷாலியின் ரசனை ஒத்துப் போய்விட, நிச்சயம் தனது அலங்கார ஏற்பாட்டினை மறுத்து பிடிவாதம் பிடிப்பாள் என்றே அவள் கண்முன்னே அகப்படாமல் இருந்தான் அசோக்.

இவனது பெற்றவர்களுக்கும் ஆச்சரியமே! மனைவியை வரவேற்பு நாளில் தாங்கிக் கொண்டதில், இத்தனை அன்பை எல்லாம் எங்கே வைத்திருந்தான் என்றே மகனை அதிசயித்து பார்த்தனர்.   

“பொண்டாட்டிமேல எம்புட்டு ஆசையிருந்தா, எது பொருந்தும்னு பார்த்து பார்த்து மாப்பிள்ளை தம்பி செய்வாரு… நீ கொடுத்த வச்சவ ராசாத்தி!” என்று அன்னபூரணியும் கைகளால் இருவரையும் நெட்டி முறித்தார்.

ஆசை மனைவிக்கு பார்த்து பார்த்து ஆடை அணிகலன்களை தேர்ந்தெடுத்தவன், தானும் அவளுக்கு சரிக்கு சரியாய் கம்பீர ஆணழகனாய் தயாராகியிருந்தான். 

க்ரீம் ஜாக்வார்ட் வெட்டிங் ஷெர்வானியில் வந்து நின்றவனை பார்த்து விழி விரித்தவளை, தன்கைகளுடன் பிணைத்துக் கொண்டே மேடைக்கு அழைத்து வந்தான். 

மனைவியின் அழகிற்கு பொருத்தமாய் இருக்கிறேனா என்று அடிக்கடி அவளின் அருகில் உரசியபடியே நின்று சரிபார்த்தும் கொண்டான். மேம்போக்கான பார்வை பரிமாறல்களை மட்டுமே தங்களுக்குள் நடத்திக் கொண்டனர் இளஞ்ஜோடிகள்.

வீடியோவும் ஃபோட்டோவும் போட்டி போட்டுக் கொண்டு மணமக்களை ஒட்டி நிற்கவைத்தே நிகழ்வுகளையும் நிழற்படங்களையும் எடுத்து தள்ளிக் கொண்டேயிருக்க, உள்ளே இருந்த மனசுணக்கத்தை மறந்து இருவரும் பொருத்தமான ஜோடியாய் வஞ்சனையின்றி புன்னகைத்தனர்.

அந்த நேரத்தில் இருவரின் உரிமையான பார்வைகளும் தீண்டல்களும் ஒருவரையொருவர் மிஞ்சி நிற்க, பார்ப்பவர்களின் கண்பட்டுப் போனது.

‘உங்க செலக்சன் நல்லா இருக்கு… நீங்களும் அழகா இருக்கீங்கன்னு ஒரு வார்த்தை சொல்றாளா… அத்தனையும் கொழுப்பு” உணவு உண்ண அமர்ந்திருக்கும் இடைவெளியில் அசோக் மனதில் பாட்டு படிக்க,

“இப்பிடியெல்லாம் உரசிட்டு இருந்தா, கோபப்பட்டு நானா பேசிடுவேன்னு நினைக்கிறாரா? இவர்தானே எதுக்கோ பயந்த மாதிரி என்னை விட்டுட்டு வந்தாரு… இவரே பேசட்டும், அது வரைக்கும் எதிரே வந்து முட்டுனாகூட ஏன்னு கேக்க கூடாது’ என்ற எதிர்பாட்டும் இவள் படிக்க, அன்றைய வரவேற்பு விழாவை இனிதே சிரிப்புடன் முடித்தனர். 

விழா முடிந்து வீட்டிற்கு வந்தவர்கள் களைப்பு மிகுதியில் எதுவும் பேசமால் உறங்கியும் போயினர். அசோக்கின் அறையில் இவளுக்காகவென பிரத்தேயக மாற்றமும் செய்யப்பட்டு இருந்ததை தங்கமணி மருமகளிடம் கோடு காட்டிவிட, அன்று காலையிலிருந்தே அவனது அறையை பயன்படுத்த ஆரம்பித்திருந்தாள் வைஷாலி.

சரியாய் வரவேற்பு முடிந்த மறுநாளே வைஷாலிக்கு மாதாந்திர பிரச்சினை வந்துவிட, தனது அசௌகரியத்தினை கூறி தன்பாட்டியுடன் பிடிவாதத்துடன் கிராமத்திற்கு சென்று விட்டாள். இங்கேயே இருந்து கொள் என்ற மாமியாரின் உத்தரவு மருமகளின் கெஞ்சலில் காணாமல்போக வேறு வழியின்றி அவரும் அனுப்பி வைத்தார்.

இதெல்லாம் தெரியாத அசோக்கின் மனமோ, மனைவியின் நினைவில் மீண்டும் சலித்துக் கொண்டு முடங்கிக் கொண்டது.

‘இப்பொழுது என்ன செய்து விட்டேன் என்று என்னை விட்டு போகிறாள்? அவ்வளவுதானா இவளது காதல் பாசம் எல்லாம்… அல்லது நான்தான் அதற்கெல்லாம் தகுதியற்றவனாகி விட்டேனா?’ தன்னைத் தாழ்த்திக் கொண்டு மனதிற்குள் குமைந்தே போனான். 

ஆசையாய் ஆரம்பித்த வாழ்க்கை நான்குநாளில் இத்தனை பாரங்களை கொடுக்குமா என்ற ஆற்றாமை மனதை உலைக்களமாக்க அலுவலக விடுமுறையை ரத்து செய்துவிட்டு அலுவலகம் சென்று விட்டான்.

தொடர்ந்த வந்த நாட்கள் அசோக்கின் மனக்காய்ச்சலை அதிகப்படுத்திவிட, இவனது இரண்டு பாக்கெட் சிகெரெட் கணிசமாய் நான்காக உயர்ந்திருந்தது. பியரும் ரம்மும் பட்டும் படாமலும் இருந்தாலும் முற்றிலும் ஒதுக்கவில்லை. மீண்டும் பெண் நண்பர்களை சந்திப்போமா என்ற ஒத்தையா ரெட்டையா கேள்வியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தான்.

இவனது மனைவியோ கணவனாக வந்து பேசாதவரை தானும் அவனிடத்தில் மௌனவிரதத்தை கடைபிடிப்பது என்ற தளர்வில்லாத சட்டத்தை மனதில் போட்டுக்கொண்டு அமைதியாக நாட்களை கடத்தினாள்.

உணர்வுகளின் உச்சத்தில் மட்டுமே அன்பைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு, யதார்த்தத்தின் சாலையில் நடந்து செல்ல அத்தனை எளிதாய் பாதைகள் அமைந்து விடுவதில்லை. இதை உணரும்பொழுது வாழ்க்கை நமக்கு வசப்பட்டுவிடும்…

வைஷாலி மீண்டும் வருவாளா? இவன் அழைப்பனா? இவர்களின் நிலை??? அடுத்த பதிவில் காண்போம்….

ஆசை என்னும் தூண்டில் முள்தான்

மீனாய் நெஞ்சை இழுக்கும்

மாட்டிக் கொண்டபின் மறுபடி

மாட்டிட மனம் துடிக்கும்

சுற்றும் பூமி என்னை விட்டு

தனியாய் சுற்றி பறக்கும்

நின்றால் நடந்தால் நெஞ்சில்

ஏதோ புது மயக்கம்

இது மாயவலையல்லவா

புது மோகநிலையல்லவா

உடை மாறும் நடை மாறும்

ஒரு பாரம் என்னை பிடிக்கும்