இனிய தென்றலே – 11

தென்றல் – 11

வளர்பிறையின் கண்சிமிட்டலில் ஒருவாரம் விரைவாய் தேய்ந்திருந்தது. தனது அலுவலக அறையில் கணிணியின்முன், கரங்களால் தலையை அழுந்தப் பிடித்தபடி கண்களைமூடி தீவிர சிந்தனையில் இருந்தான் அசோக்கிருஷ்ணா.

இன்றோடு மனவியோடு பேசியும் திருமணம் முடிந்தும் எட்டு நாட்கள் முடிந்திருக்க, இவன் முடிவில்லா கலக்கத்தில் மூச்சு முட்டிக் கொண்டிருந்தான்.

பிடிக்கவில்லையென்று பிடிவாதம் செய்தே, தன் மனதிற்கினியவளிடம் இனங்காணாத பிடித்தத்தை வைத்து, நிறையவே நேசித்து விட்டான்.

இவனது மூச்சிலும் பேச்சிலும் மனையாள் வைஷாலியே செங்கோலாட்சி செய்து கொண்டிருக்க, இவன் குழப்பக் காட்டில் அடைமழை பெய்து கொண்டிருந்தது.

எல்லாமே பிடிப்பற்றதாய் இருந்தது அவனுக்கு… குடும்பத்தாரின் மாயமந்திரங்களுக்கு ஆட்படாமல் இருந்திருந்தால்… கௌரவத்தை காப்பாற்ற, சொல்லாத காதலை வாழவைக்க திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால்… இந்த அவஸ்தை தனக்கில்லை என்றே முடிந்த போனவைகளின் எதிர்பதமாகவே நினைத்து மனம் வெதும்பிப் போனான்.

திருமண நாளில் ஆரம்பித்த அவனுடைய போராட்டம் நொடிக்குநொடி அவன் உணர்வெல்லாம் கொந்தளிக்க வைத்து, எந்நேரமும் தீப்பற்றி எரிந்துகொண்டே இருக்கிறது.

இதுநாள் வரையில் அவளும் அழைக்கவில்லை, இவனும் முயற்சிக்கவில்லை. இவனது மடமையை எளிதில் மறந்துவிட்டு ஒட்டுமொத்த தவறையும் மனைவியின்மேல் சுமத்தி குற்றம் சாட்டிக் கொண்டிருந்தான். ஒன்றுமில்லாத உப்புசப்பற்ற விசயத்திற்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யாத குறைதான் இவனிடத்தில்…

தன்னுடன் வாழ்வதை தகுதிக் குறைவாக நினைத்து விட்டால் போலும். அவள் பாட்டியின் கௌரவத்தை காக்கவே தன்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் பழிகாரி! இன்னும் பல கற்பனைக்கும் எட்டாத குற்றச்சாட்டுகளை மனைவியின்மேல் ஏற்றி வைத்து தன் கோபத்தணலை குளிர்விக்க முயன்று தோற்றான்.

மனைவியின் அலட்சியத்திலும், தீச்சுட்டாற்போல் அவளின் நிராகரிப்பிலும் கொதித்தவனின் மனஎரிச்சலை அவளை கடிந்துகொண்டே சமன்படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் முடியவில்லை.

மனைவியை வெறுத்து, தானும் இப்படி அலைக்கழிப்பதற்கு வித்திட்ட தனது திருமண இரவை அத்தனை துவேசமாய் நினைத்துப் பார்த்தான். அதனைத் தாண்டி வரமுடியாமல், அன்றையநாளை மீட்கவும் முடியாமல் உள்ளக்கடல்  பொங்கிக் கொண்டிருந்தது.

நான் தோழமையைத்தானே வேண்டினேன். இவள்தானே அழுது ஆர்பாட்டடம் செய்து, என்னை தடம்மாற வைத்தாள் என்று தன்னை மதியிழக்க செய்த, மனைவியிடம் மதிப்பிழக்க வைத்த திருமணத்தை அறவே வெறுக்கும் நிலைமைக்கு வந்திருந்தான் அசோக். அவசரப்பட்டு திருமண வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டோமே என்ற ஆதங்கமே அவன் மனதில் மேலோங்கி நின்றது.

அவளை விட்டு நொடிநேரம் கூட பிரியக்கூடாது என்ற அகலா நேசத்தை கோபமாக மாற்றி குழம்பிக் தவித்தான். மனக்கலக்கத்தின் கூக்குரல் இவனை ஒட்டுமொத்தமாகக் புரட்டிபோட, நிகழ்காலத்தை மறந்தவனாய் தனக்குள்ளே பொருமிக் கொண்டிருந்தான்.

அவன் சிந்திக்கச் சிந்திக்க தலைவலிதான் அதிகமானது. ஒரே வாரத்தில் அத்தனை கனவுகளும் கற்பனைகளும் கலைந்து போகுமா என்ன? தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தவன் அலுவலக மேஜையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

“என்ன அசோக்… சாப்பிடப் போகாம, இன்னும் இங்க என்ன பண்றீங்க? புதுப் பொண்டாட்டிய விட்டுட்டு தனியா சாப்பிட மனசு வரலையா?” சிரித்தபடி கேட்டவன், அசோக்கின் உயர் அதிகாரியாகப் போய் விட்டான்.

இல்லையென்றால் இப்போது அவனுக்கு இருக்கும் கோபத்தில், கேள்வி கேட்டவனை தன்பார்வையாலேயே எரித்திருப்பான். இப்படிதான் அவனது சகஅலுவலக நண்பர்களை கடிந்தும் முறைத்தும் தன் மனவுளைச்சல்களுக்கு மருந்திட்டு வருகிறான்.  

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல சர்… கொஞ்சம் தலைவலி, அவ்வளவுதான்…” சமாளித்தவன், போலியான புன்னைகையை பூசிக் கொண்டான்.

“அதுவும் உங்க வொய்ஃப் பக்கத்துல இல்லாததால வந்த தலைவலியாதான் இருக்கும், கரெக்டா அசோக்?” அதிகாரி கேலியில் இறங்க,

‘அட தடித்தாண்டவராயா! அவ பக்கத்துல இருந்தாதான்டா எனக்கு தலைவலியே!’ மனதிற்குள் கடித்து துப்பியவன், வெளியே சொல்ல முடியாமல் அசடு வழிந்தபடியே சிரித்து வைத்தான்.

“அப்படி என்ன மேன், உனக்கு இங்க வெட்டி முறிக்கிற வேலை? கல்யாணமான மூணாம்நாளே கம்பெனியில வந்து உட்கார்ந்துட்ட…” விடாமல் துருவினார் அதிகாரி.

‘ம்‌ம்‌ம்… என் பொண்டாட்டிதான் பிரச்சனை, அத உன்கிட்ட சொல்லவா முடியும்?’ மனதோடு புலம்பியவன்,

“நத்திங் சர்… ஒரு புராஜக்ட் ஃபைனலிஸ்ட்ல இருக்கு. அத முடிச்சுட்டா லாங்லீவ்ல ஹனிமூன் போகலாமுன்னு இருக்கேன்… அதான்!” அவன் வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்துவிட,

“ஓஓஓ… அப்படிப் போகுதா கத?” அதிகாரியும் பேச்சை இழுத்து சிரிக்க,

“ஹிஹி… யாஹ்… அஃப்கோர்ஸ்… அப்படியேதான் போகுது,” வேண்டுமென்றே அசடுவழிந்தான் அசோக்.

“என்ஜாய் யங்மேன்…” வாழ்த்திவிட்டு அதிகாரி அகன்றுவிட,

‘ம்க்கும்… நான் இருக்குற இருப்புக்கு அது ஒண்ணுதான் கொறச்சல்… ஒருத்தன் புதுமாப்பிள்ளை ஆகிடக்கூடாது… எத்தனை பேர் கண்கொத்திப் பாம்பா வந்து கேள்வி கேட்டுட்டு போறாங்க?

கல்யாணமான மூணாம்நாளே வேலைக்கு வந்தது, அவ்வளவு பெரிய தெய்வகுத்தமா? எத்தன பேருக்கு எத்தன விதமாதான் பதில் சொல்லி சமாளிக்கிறது’ மனதோடு அலுத்துக் கொண்டவன், இதற்குமேல் யாரும் கேள்வி கேட்டால் பதில் சொல்ல தனக்கு தெம்பில்லை என்று நினைத்து, விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்ப தயாரானான்.

சரியாக கிளம்பி நிற்கும் வேளையில் மேலும் அவனை கடுப்படிக்க, ஒருவன் வந்து,

“என்ன அசோக்? பொண்டாட்டி ஞாபகமா…. அதுக்குள்ள கிளம்பிட்டீங்க?” கேலியுடன் கேட்க, அவனை வெட்டிப் போடும் ஆத்திரம் வந்தது.

‘உங்களுக்கு எல்லாம் என்னதான்டா பிரச்சன? எப்பபாரு அடுத்தவன் என்ன பண்ணறான்னு பார்க்காம, போய் பொழப்ப பாருங்கடா…’ மனதிற்குள் அவனை திட்டி முடித்தவன், ஒன்றும் சொல்லாமல் தனது டிரேட்மார்க் சிரிப்பை உதிர்த்துவிட்டு கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு சென்றாலும் அவன் அறைக்கு செல்லும்  எண்ணம்தான் வரவில்லை. அறைக்குள் சென்றால்தான் வரவேற்பன்று இரவு, உரிமையாக அவனருகில் உறங்கியவளின் நினைவு அலையாய் ஆர்ப்பரித்து கொட்டுகிறதே! தீண்டலும் சீண்டலும் இல்லாத போதிலும் அவள் அருகாமையை ரசித்து, உறங்கும் அழகை பார்த்தே மனம் நிறைந்தவனாயிற்றே!

அத்தனை எளிதில் அந்த மயக்கம் மரத்துப் போய்விடுமா என்ன? இந்த வம்பிற்குதான் மிதமிஞ்சிய போதையை ஏற்றிக் கொண்டு நடுநிசியில் வருவது என்றே தன்நிலையை நொந்து, மீண்டும் வெளியே செல்ல முயன்றவனின் கால்களை தாயின் குரல் கட்டிப்போட்டது.

“இப்போதானே வந்த அசோக் எங்கே போற? வந்து சாப்பிட்டு படு!” தங்கமணி அழைக்க

“கொஞ்சம் வேலையிருக்கு, வந்து சாப்பிடுறேன்!” இவனும் கிளம்ப எத்தனிக்க,

“சார், அவரோட பரிவாரத்த திரும்பவும் ஆரம்பிச்சுட்டாரு தங்கம். நீ சொன்னா கேட்குற ஆளா அவரு?” மனதில் கொண்ட ஆங்காரத்தில் தந்தை ராமகிருஷ்ணன், மகனை சிலையாக நிறுத்தி வைத்தார். 

“கல்யாணமானா சரியாகிடும்னு எல்லோரும் சேர்ந்து, ஒரு அப்பாவி பொண்ணு வாழ்க்கைய கேள்விக் குறியாக்குனதுதான் மிச்சம்” வைஷாலியின் மேலுள்ள வாஞ்சையில் அவர் கசப்பாய் சொல்ல,

“நான், மறுபடியும் அந்தபக்கம் போறதுக்கு காரணமே உங்க மருமகதான்” அசோக்கின் கடுகடுத்த பேச்சில் உள்ளே இருப்பது தானாய் வெளியே கொட்டியது.

“ஏறுக்குமாறா யோசிக்கிறத விட்டு தொலைடா! நீயா இல்லாதத கற்பனை பண்ணிட்டு, மத்தவங்கள கொற சொல்லுவியா? உன் மனசுல என்ன ஓடுதுன்னு நான் சொல்லவா?” நேர்பார்வையில் அவனை குற்றவாளியாக்கியவர்,  

“கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க பாட்டி செஞ்சத மனசுல வச்சுக்கிட்டுதானே அன்னைக்கு அவ்வளவு அவசரமா புறப்பட்டு வந்த..! அப்போ நீ மூணாம் மனுஷன் அவங்களுக்கு… வயசுப் பொண்ண வைச்சுருக்கவங்க என்ன செய்யனுமோ அததான் செஞ்சுருக்காங்க…

ஆனா, இப்போ நீ, அவங்க வீட்டு மாப்பிள்ளை! சுருக்கமா சொல்லப்போனா, அந்த குடும்பத்துல இருக்குற ஒத்த ஆம்பள நீதான். உன்னை நம்பி வைஷாலி மட்டுமில்ல அவங்க பாட்டியும் இருக்காங்க… பொறுப்பா நடந்துக்க பாரு! நம்ம குடும்பத்த பார்த்து பொண்ணு கொடுத்திருந்தாலும், உன்மேல இருக்குற நம்பிக்கையிலதான் துணிஞ்சு கல்யாணம் முடிச்சிருக்காங்க… அந்த நம்பிக்கைய வீணாக்கிடாதே!” அறிவுரை மழைகளை தந்தை பொழிய,

அவன் காதுகள் ஏற்றால்தானே மனதில் பதிவதற்கு… உள்ளர்தத்தோடு தந்தை கூறிய வார்த்தைகளையும் குற்றக்கண் கொண்டு பார்த்தவன்,

‘என்மேல முழு நம்பிக்கை வச்சு இவங்க பொண்ணு தரலையா? அதான் இவளும், தானா வந்து என்கூட பேசாம இருக்காளா?’ மனதோடு புலம்பி வீணாய்போன குழப்பம் மீண்டும் தன்னிருப்பை உறுதி செய்ய, பெற்றோர்களின் புத்திமதிகளை மூளைக்குள் கடத்தாமல் தனது தீர்த்த யாத்திரைக்கு கிளம்பி விட்டான்.

மனமெங்கும் மனைவி தன்னை அழைத்துப் பேசாததையும், தன்னிடம் கேட்காமல் கிராமத்திற்கு சென்றதையும் அசைபோட்டுக் கொண்டிருக்க, அவனது மனக்குழப்பங்கள் தூர்வாராத சாக்கடையாக மிகுந்து போனது. 

மேலும் இரண்டு நாட்கள் அதே வெறுப்புடனும் கோபத்துடனும் செல்ல, எப்பொழுதும்போல் நடுநிசியில் தள்ளாட்டத்துடன் வீட்டிற்கு வந்தவன், அதீத களைப்புடன் தன்அறையின் சோபாவில் அமர்ந்து கண்களை மூடினான், 

“சாப்பிட்டு படுக்கலாம் அசோக்!” மனைவியின் குரல் காதினில் தேனாய் வந்து விழ,

“இந்த தொல்லைக்குதான் ரூமுக்கு வர்றதே இல்ல… ம்ப்ச்… இவளோட வாய்ஸ்கூட என்னை நிம்மதியா இருக்க விடாம கொன்னு போடுது!” மூடிய கண்களை திறவாமல் உளறினான்.

“அடக்கடவுளே! கண்ணு முழிச்சு பாருங்க… நெஜமாவே நான்தான்…” வைஷாலி, கணவனை பிடித்து உலுக்க, மிரண்டு விழித்தான்.

மேலும் தெளிய வைப்பதற்கு அறையின் பெரிய விளக்கினைப் போட்டவள், கணவன் முகத்தை உற்றுப் பார்க்க, இவனுள் இறங்கியிருந்த போதை, இவனது மிதமிஞ்சிய மனஅழுத்தத்தை அப்பட்டமாய் காண்பித்தது.

எரிமலைக் குழம்பாய் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருப்பவனுக்கு, அதிலுள்ள தீப்பிழம்பே நேரில் வந்து நின்றதைபோல் அவளை அயராமல் உற்று நோக்கினான் அசோக்.

வைஷாலியும் முதன்முறையாய் குடிபோதையில் கணவனைப் பார்க்கிறாள். ஆண்களிடம் அலுவல்ரீதியாக மட்டுமே பேசுபவள், இப்பொழுது ஒருஆடவனை, தனது சரிபாதியானவை போதையின் தள்ளாட்டத்தில் பார்த்து மனமொடுங்கிப் போனாள்.

அவனது பார்வையே அவளுக்கு அருவெறுப்பைதர, நடுக்கத்துடன் அவனை விட்டு பின்னடைந்தாள். இவளுக்கு பிடிக்காத பார்வை… இவளை மூச்சடைக்க வைக்கும் அழுத்தம், மீண்டும் அவன் முகத்தில் தாண்டவமாடியது.

கண்களில் சிவப்பு மேலிட, உஷ்ணப் பெருமூச்சுடன் தன்னைக் கண்டு பின்னடைபவளை நோக்கி முன்னேறியவன்,

“என்னாச்சு ஷா! எதுக்கு பயப்படுற? ஒண்ணும் பண்ணமாட்டேன் நில்லு!” அவளை பிடித்து ஓரிடத்தில் நிற்க வைத்தான்.

போதையில் இருப்பவன் என்று முகமும் மூச்சும் காட்டிக் கொடுத்தாலும் அவனது பேச்சு என்னவோ வெகுநிதானமாக, அழுத்தத்துடன் வெளிவந்தது.

“இந்த பழக்கம் எல்லாம்… இன்னும் விடலையாங்க?” எச்சிலை மென்று முழுங்கியபடியே கேட்டவள், கைகளையும் விடுவித்துக் கொள்ள பிரயத்தனப்பட்டாள்.

“அத கேக்கதான் வந்தியா?” அமைதியான கேள்வியில் அவளை கூர்மையாக பார்க்க,

“மறக்க முயற்சி பண்றேன்னு நீங்க சொன்னீங்களே!” இருவரிடத்திலும் கேள்விகள் மட்டுமே பரிமாறப்பட, பதில்கள் காணாமல் போயின.

“உங்க பாட்டிய விட்டுட்டு வர மனசு வந்துடுச்சா ஷா?” அதே அழுத்தக் குரலில் மீண்டும் கேட்க, வெலவெலத்துப் போனாள் வைஷாலி. இரும்பாய் அவனின் கைப்பிடி வேறு வலியைக் கொடுக்க, உடலெங்கும் பெருநடுக்கம் கண்டது. 

“இப்போ எதுக்காக வந்திருக்க? உனக்கு புருஷன்னு ஒரு கேணையன் இருக்கான். அவன் தெளிவா இருக்கானா இல்ல, பித்து பிடிச்சு கெடக்கானான்னு பார்த்துட்டு வரச் சொன்னாங்களா?” வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் ஊசிமுனையின் கூர்மையை மிஞ்சுபவையாக இருக்க,

வைஷாலிக்கு முதன்முறையாக மனமெங்கும் ரணம் கண்டது. ஆனாலும் தன்னைத்தானே முயன்று சமன்படுத்திக் கொண்டவள், இவனது தள்ளாட்டத்தை பார்த்தே,

“இப்போ நீங்க நிதானத்துல இல்ல… காலையில பேசிக்கலாம் படுங்க…” ஏறெடுத்தும் பார்க்காமல் பேச,

“குடிகாரன்னு குத்திக் காட்டுறியா? தெரிஞ்சுதானே கட்டிகிட்ட…” என்றவன் வன்மையாக இவளது முகத்தை பிடித்து நிமிர்த்திட,

“நீங்களும் இந்த பழக்கத்தை விடுறேன்னு சொல்லித்தான் கல்யாணம் பண்ணீங்க அசோக்…” நடுங்கிய குரலில் வெடித்து விட்டாள்.

“நீ, என்கூட இருந்தா மட்டுமே அது முடியும்னு சொல்லியிருக்கேன். அதையும் மீறி உன் இஷ்டத்துக்கு நீ போனா, நான் என்ன அவ்வளவு பெரிய யோகியா? தானா சரி பண்ணிக்க…” ஏறிய போதையிலும் மனைவியின் மீது குற்றம் சுமத்த தவறவில்லை அசோக். இவளால் தான்பித்தனாகி திரிந்த வலியை சுடுசொற்களால் வதைத்தே பழிதீர்த்துக் கொண்டான்.

“நான் வம்படியா கைய பிடிச்சு சொல்லிக் கொடுத்த மாதிரி பேசுறது கொஞ்சமும் நல்லாயில்ல அசோக்… தாலிய கட்டிட்டா உங்க இஷ்டத்துக்கு ஆடலாம்னு கனவு காணாதீங்க… என்கூட பேசமா இருந்தது நீங்க… அத கண்டினியூ பண்ணினது மட்டுமே நான்… எனக்கும் பேசத் தெரியும்”

“ஆமாமா… உன்பாட்டிக்கு பிடிச்சதுதான் உனக்கும் பிடிக்கும்னு பேசத்தெரியும். ஏன்? நான் இத்தன சொன்னேனே! சரி இனிமே ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்னு சொல்ல முடிஞ்சதா உன்னால… எதுலயும் பொருத்தமில்லாம இருக்குற உன்கூட எவன் பேசுவான்? எப்படி காலம் முழுக்க வாழ்றது உன்னோட?” கணவன் வரிசையாக தன்மடத்தனத்தை அவிழ்த்துவிட, வைஷாலிக்கு எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம்போல் இருந்தது.

‘படுபாவி! எதற்கும் எதற்கும் முடிச்சுப் போட்டு பார்க்கிறான்! அன்பிற்கும் விருப்பத்திற்கும் வித்தியாசம் தெரியாத மேதாவியா இவன்? எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் என்ற கோட்பாட்டை கூட அறிந்திருக்க மாட்டனா? இந்த மேதாவிக்கு நான்குபேர் கௌரவமா மதிக்கும்படியான உத்தியோகம் வேறு… கடவுளே! இவனுக்கு எப்படி புரியவைக்க?’ மனதிற்குள் தோன்றியதை வெளியில் கொட்ட முடியாமல் திருதிருத்து நின்றாள்.   

“காலையில நம்ம சண்டைய கண்டினியூ பண்ணலாம் இப்போ படுங்க!” அடக்கப்பட்ட குரலில் வைஷாலி கூற, அமைதியானவன்,

“யார்கூட வந்த? எப்படி வந்த?” கணவனாக அதிகாரமாய் கேள்விகளை அடுக்க,

“ஈவினிங் வந்துட்டேன்… பாட்டியும் வர்ற மாதிரி இருந்தது. அறுவடை நேரமா போனதால வரமுடியல… அதான் நான் மட்டும் புறப்பட்டு வந்தேன்.”

“உன் கண்ணுக்கு நான் இருக்குறது தெரியாதா ஷா? பாட்டிதான் உன்னோட வரனுமா? எனக்கு போன் பண்ணி கூப்பிடனும்னு தோணலையா உனக்கு? அவ்வளவுக்கு வேண்டாதவனா போயிட்டேனா? இல்ல என்கூட வர உனக்கு கௌரவக் கொறைச்சலா இருக்கா?” மனதிற்குள் புகைந்த கோபம், தீயாக பற்றிக் கொள்ள, பைத்தியமாகி கேள்விகளால் அவளை சுழற்றியடித்தான்.

பழக்கமில்லாத கேள்விகள், அனுபவிக்காத வலிகள் ஒன்றுசேர தன்னாலேயே அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

“உங்ககிட்ட சொல்ல ஃபோன் பண்ணேன், உங்க மொபைல் ஸ்விட்ச் ஃஆப்ல இருந்தது.” என்று விளக்கம் கொடுத்தவள்,

“எனக்கு இந்தமாதிரி பேச்செல்லாம் கேட்டு பழக்கமில்ல அசோக்! மேலமேல பேசி என்னை சங்கடப்படுத்தாதீங்க” என்று கரகரக்கும்போதே குளம் கட்டிய கண்ணீர் கரை தாண்டிவிட,

“அழுகாதே ஷாலி! இப்படி அழுதழுதுதான் அன்னைக்கு என்னையே, நீ மறக்க வைச்ச… அதுக்கு பலனா உனக்கு தாலிய கட்டி என் கழுத்துக்கு சுருக்கு கயிற, நானே, என்கையால சுத்திகிட்டு அவஸ்தைப்படுறேன்” என்றவனின் கோபபேச்சினை வைஷாலியால் உளறல் என்று சமாதனாப் படுத்திக்கொள்ள முடியவில்லை.

கணவனின் வார்த்தை அமிலங்கள் மனதிற்குள் நங்கூரமிட்டுக் கொண்டன. காலுக்கு கீழே பூமி காணாமல் போய், அந்தரத்தில் சுவாசத்திற்கு தவிப்பதைபோல் பரிதவித்தாள்.

அன்று நம்வாழ்க்கை நமக்கான புரிதல் என்று சொன்னதெல்லாம் பொய்தானா? இவன் தன்னிடம் நடித்திருக்கிறானா? அதற்கு அவசியம்தான் என்ன? தடலாடியாக அடுத்தடுத்த கேள்விகள் முளைத்து, அவளது எதிர்கால கனவை கலைத்தே விட, அந்தநொடி முதல் வாழ்க்கை முற்றிலும் புரண்டு கொண்டது அவளுக்கு…

கனிவில் உருவான நேசம் இன்று முறுக்கிக்கொண்டு சரிந்தே போனதில் பெரும் கேவல் எழ, கணவனின் உறுத்து விழிக்கும் பார்வைக்கு பயந்தே, விழிகள் பதட்டத்தில் திணறுவதையும் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

சிற்றெரும்பு கடிக்கும் சன்னமான அதட்டலுக்கும் அழுகையில் கரையும் வெகுளிப்பெண், இன்று கணவனின் உறுமலுக்கு பயந்து தன்னை அடக்கிக் கொள்கிறாள்.

மதுவின் தாக்கம், குடிப்பவரை மட்டுமல்ல அவர்களைச் சார்ந்தவர்களையும் துண்டு துண்டாய் மனதளவில் உடலளவில் வெட்டிப் போடுகிறது என்பதை தன்முதல் அனுபவத்திலேயே உணர்ந்து கொண்டாள்.

நல்லதொரு அனுபவப் பாடம்தான் இது! எனக்கு வேண்டியதுதான்… என் கண்ணீர் எனக்களித்த அன்பளிப்பு…   இதனால் வரும் இன்ப துன்பங்களையும், ஏற்ற இறக்கங்களையும் தாங்கிக்தானே ஆகவேண்டும், ஏமாற்றப் பட்டத்தின் பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்று முடிவெடுத்தவளின் மனதில் நொடியில் தெளிவு பிறந்தது.

எக்காரணம் கொண்டும் இனிமேல் அழுகையில் கரையக்கூடாது. தன்னை மோசக்காரியாக சித்தரித்த தனது கண்ணீரை இனி விரயம் செய்வதில் பலனில்லை எனப் பலவாறு தன்னை தேற்றிக் கொண்டாள்.

அவனிடம் வார்த்தையாடாமல், கைகளை விடுவிக்க பெருமளவு முயற்சி செய்யும் நேரத்தில், தனது பிடியை இன்னமும் இறுக்கினான் ஆசைக் கணவன்.

“என்கூட கொஞ்சநேரம் பேசணும்னுகூட தோணலையா ஷா” நொடியில் பனியாய் உருகிய அசோக், வம்படியாக அவளை சோபாவில் அமர வைத்து, அவளருகில் தரையில் அமர்ந்தான்.

“நீங்க நிதானத்துல இல்ல அசோக்… உங்கக்கூட பேசாம வேறயார் கூட பேசப்போறேன்! மேலே உக்காருங்க…” தைரியமாக அவனுக்கு பதில் கொடுத்தாலும் மனதிற்குள் சொல்லாத பயம் கூடு கட்டிக் கொண்டது.

தன்னை ஒரு பலியாடாகவே நினைத்துக் கொண்டவள் கணவனின் அடுத்த செயல் யாதெனத் தெரியாமல் முழித்த வண்ணம் தன்பார்வையை அவனிடம் பதித்தாள்.

“நான் இந்த பழக்கத்த எல்லாம் விட்டுடுவேன்டா… என்மேல நம்பிக்கை இருக்குதானே!” தன்னிரக்கத்தில் இவனது குரல் இறங்கியே ஒலிக்க, 

‘இதோ ஆரம்பித்து விட்டான். இனி வாய்க்கு வந்ததை பேசி தலைசுற்ற வைப்பானே’ அன்றொருநாளின் அனுபவம் வந்து அவளை மிரட்ட, இவளது காதல் முற்றிலும் மறைந்து போனதொரு தோற்றம் கொண்டது.

தனது அவசரத் திருமணத்தின் பலன் இன்றிலிருந்து ஆரம்பமா? மனம் விரும்பி இருந்தாலும் பொறுமையுடன் இவனை கைபிடித்திருக்க வேண்டுமோ? என்றே பெண்மனம் தன் பின்புத்தியால் யோசித்தது.  

இருவரும் நடந்த திருமணத்தை நினைத்து வருத்தப்படுவதில் மிக ஒற்றுமையாக இருந்தனர். அவளை அப்படியே விட்டுவிட்டால் அவன் அசோக் அல்லவே!

“நான் கெட்டவன் இல்லடா… என்னை புரிஞ்சுக்கோ!” தன்னிலையை விளக்கி, அவளின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தவன்,

“இனி என்னை விட்டு போகமாட்டேன்னு பிராமிஸ் பண்ணு!” கீழே அமர்ந்தபடியே இவன் கைகளை நீட்ட, கணவனுக்கு தன் ஆதரவைதர அத்தனை தயக்கம் வந்திருந்தது இவளுக்கு.

நொடிக்குநொடி தன்சுயத்தை மாற்றிக்கொண்டு பல பாவனைகளை காண்பித்து கொண்டிருப்பவனிடம் பேசுவதே கடினம் என்றென்னும் போது, அவனது வார்த்தைகளுக்கு ஆமாம்சாமி போட்டு தலையாட்டுவது எவ்வாறு சாத்தியமாகும்?

கணவன் நீட்டிய கைகளை கீழே இறக்கி விட்டவள், “இதுக்கென்ன அவசியம் வந்தது இப்ப? போய் தூங்குங்க அசோக்…” இவள் அலுப்பாய் சொல்ல

“என்மேல நம்பிக்கை வரல, அப்படிதானே! அப்புறம் எதுக்கு என்னைதேடி வந்த? உன் பாட்டிக்காகதானே வந்திருக்க… கௌரவமா நானும் புருஷன்கூட இருக்கேன்னு வெளியுலகத்துக்கு காட்டத்தானே வந்திருக்க…” சாதாரணமாய் பேச ஆரம்பித்தவன் ஆவேசத்தில் முடித்தான்.

குரங்கிற்கு பங்காளியானவன், நிமிடத்தில் பல்டி அடித்தே தன்னை மிரள வைக்கிறான் என்று சுரத்தில்லாமல் இவள் எண்ணும் நேரத்தில், ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணிவிட்டான் கணவன்.

“நான், உனக்கு வேண்டதவனா ஆகிட்டேனா?” என்று கத்தியவன், தனது கோபத்தை ஆதங்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கண்ணாடி டீபாய் மீது தன்கைகளை பலமாக அடிக்க, அது சுக்குநூறாய் உடைந்து, அவனது வலதுகையை பதம் பார்க்க, இரத்தம் கொட்டியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அசம்பாவிதத்தில் அவளுக்கும் உடலெங்கும் நடுக்கம் கண்டு, முழுதாய் உறைந்தே போனாள்.

நன்றாக கண்ணாடி கீறி இருந்ததில் ரத்தம் பீறிட்டு வெளியேவர, கணவனின் ஆவேசப் பேச்சையும், அவனின் கைகளில் வழிந்த குருதியையும் பார்த்தவள் பயத்தில் அலறிவிட்டாள்.

“கையில ரத்தம் வருது… ஏன் இப்டி பண்றீங்க? நான் மாமாவ கூட்டிட்டு வர்றேன்” நடுங்கிய குரலில் தட்டுத்தடுமாறி கூறி முடித்தவள் எழ முயற்சிக்க,

“நான் நார்மலாதான் இருக்கேன் ஷாலி! பயப்படாதே… எனக்கு அடி ஒன்னும்படல!” என்றவனின் போதையும் அழுத்தமும் ஒன்றாய் சேர்ந்து, அவனுக்கு அடிபட்ட வலியை உணர வைக்கவில்லை.

“கையில ரத்தம் கொட்டுது…” அழுகையோடு அவனது கையை தூக்கிக் காட்ட, அதை கவனத்தில் கொள்ளாதவன்

“அழுகாதே ஷா! நீ அழறத என்னால பார்க்க முடியல…” வாஞ்சையுடன் தனது ரத்தக்கையால் அவளது கண்ணீரை துடைக்க முயற்சித்து, அவளது முகம் முழுவதும் ரத்தக்கீற்றால் கோலங்கள் போட்டான்.

அவள் உடுத்தியிருந்த ரோஜாநிற சல்வாரிலும் சொட்டு சொட்டாய் ரத்தம் இறங்கிவிட, கணவனின் கைகளை உதறித் தள்ளியவள்,

“என்னை விடுங்க! நான் போயி அத்தை மாமாவை கூட்டிட்டு வர்றேன்” அவனையும் மீறி செல்ல முற்பட,

“எனக்கு ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல… சொன்னா கேக்க மாட்ட…அவங்கள கூப்பிடாதே!” என பல்லைகடித்தவன்,

அவளது கன்னத்தை வலிக்கப் பிடித்து தன்முகத்திற்கு அருகே கொண்டுவர, ரத்தகறை படிந்திருந்த அவளது முகத்தை கண்டவனின் உடல் விறைத்துக் கொண்டது. 

நொடியில் அவனது முகம் விகாரமாய் மாறவிட, அதில் சொல்லத்தெரியாத பல பாவனைகள் மாறிமாறி மோதிக் கொண்டன. புருவ நெறிப்பின் ஏற்ற இறக்கங்கள் அவன் பலவிதமாய் சிந்திக்கிறான் என்று வைஷாலிக்கு தெளிவாய் விளங்கியது.

“அசோக்!” நடுக்கத்துடன் அழைத்து, தோளினை தொட, மின்சாரம் தாக்கியதைப் போல் சுயத்தை உணர்ந்தான்.

“ஷாலி!… நான்… எனக்கு…” தடுமாற்றத்துடன் ஆரம்பித்து, தன் கையையும் அவளது முகத்தையும் மாறிமாறிப் பார்த்து, அவள் மீதே மூர்ச்சையாகி விழுந்தான்.