தென்றல் – 14
எட்டு வருடங்களுக்கு முன்…
இருபத்தியொரு வயது அசோக் கிருஷ்ணா… இளநிலை கணினி பொறியியல் இறுதியாண்டு படிக்கும் பட்டதாரி. படிப்பில் மிககெட்டிக்காரன். விளையாட்டுகளில் பின்தங்கியவன். கூச்ச சுபாவம் நிறைந்தவன்.
அப்பா பேச்சை தட்டாமல் கேட்கும் அமைதியான பிள்ளை. அம்மா செல்லம், அதிர்ந்து பேசாதவன். ஆனால் பிடிவாதமும் முன்கோபமும் ஒன்றாய் அமைந்த அதிபுத்திசாலி.
இவனது படிப்பிற்கு சொந்த நாட்டில் வேலை கொடுக்க பலநிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்க, வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முயற்சிகள் எடுத்து வருபவன்.
அதற்கு சாதகமாக தன்தந்தையின் நண்பர் ஒருவரும் அவனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்க, வேற்றுநாட்டு மொழிகளை ஆவலோடு கற்க ஆயத்தமானவன்.
ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழியை கற்க, அதற்கான பயிற்சி நிலையத்தில் சேர்ந்த வருடம் அது. மூன்றுமாத கால படிப்பு. ஒவ்வொரு வகுப்பிற்கும் தினமும் இரண்டு மணிநேர பயிற்சி.
இறுதி பருவத்தேர்வுக்கு மட்டுமே கல்லூரிக்கு சென்றால் போதுமென்ற நிலையில், நேரத்தை விரயமாக்காமல், முழுமூச்சாய் மொழிப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து விட்டான். அன்று முதல்நாள் வகுப்பு,
‘கோச்சிங் கிளாஸ்க்கு நம்மகூட எத்தனபேர் இருக்கப் போறாங்களோ? தெரியலையே’ மனதில் நினைத்தபடியே பயிற்சி நிலையத்திற்குள் நுழைந்த அசோக், அங்கிருந்த பயிற்சியாளருக்கு காலை வணக்கத்தை வைத்து, தன்வருகையை தெரிவிக்க,
“குட்மார்னிங் அசோக்! இன்னைக்குதானே நீங்க கோர்ஸ் ஸ்டார்ட் பண்றீங்க? அந்த ரூம்ல கொஞ்ச நேரம் உட்காருங்க… உங்க டுவிட்டர்(பயிற்றுவிப்பாளர்) இப்ப வந்திடுவாங்க…” என்றவர், சற்றுத் தள்ளியிருந்த சிறிய வகுப்பறையை கைகாட்டினார்.
‘எத்தனை பேர் இந்த பாட்ஜில்?’ அசோக் கேட்க நினைத்தான். ஆனால் கேட்கவில்லை. தயக்கமும் கூச்சமும் அவனது உடன்பிறப்பாக இருந்தன.
காலை எட்டு முதல் பத்துமணி வரை ஜெர்மன் மொழிக்கும், மாலை மூன்று முதல் ஐந்துமணி வரை பிரெஞ்சு மொழிக்கும் பயிற்சிநேரம் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. காத்திருக்கும் நேரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தான்.
மணி 8.15 ஆனது,
“ஹாய்பா… நீதானே அசோக்? எப்ப வந்த?” உரிமையாக கேட்டபடியே இவன் அருகில் வந்தமர்ந்தாள் ஒரு இளம்பெண்.
‘யார் இவள்? ஒருமையில் வேறு அழைக்கிறாளே?’ மனதில் நினைத்தவாறே, அவளை நிமிர்ந்து பார்க்க,
“என்ன அப்படி பார்க்கிற? ஐயாம் நந்தினி” வந்தவள் கைகொடுக்க, இவனும் கைகுலுக்கினான்.
“நானும் இந்த பேட்ஜ்தான்” மேலும் அவள் தெளிவுபடுத்தினாள்.
அவளது குரலும் செய்கையும் இவனுக்கு கூச்சத்தை கொடுத்தாலும் தேனாய் இனித்தது. அசோக் படிக்கும் காலத்திலேயே எந்த பெண்ணிடமும் நின்று பேசியதில்லை. மறைவாய் ரசிப்பதோடுசரி. அப்படி உள்ளவனுக்கு நந்தினியின் வருகை, அவனே அறியாத புதுஉவகையை கொடுத்திருக்க,
‘என்னடா இது? இந்த பொண்ணு, தானா வந்து பேசுதே!’ மனதோடு எண்ணியவன்,
“அப்படியா, எனக்கு தெரியாதே? ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?” வரவழைக்கப்பட்ட புன்சிரிப்புடன் கேட்டான்.
“நான் இங்கேதான் போனவாரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் முடிச்சேன். ஜெர்மன் கிளாஸ்க்கு கேட்டு வச்சிருந்தேன். புதுபேட்ஜ் ஆரம்பிச்சதும் கூப்பிட்றேன்னு சொன்னவங்க, இன்னையில இருந்து அசோக்னு ஒருத்தர் வரப்போறதா சொல்லி, என்னையும் இதே டைம்க்கு வந்து கிளாஸ் அட்டெண்ட் பண்ணச் சொல்லிட்டாங்க, இப்போதைக்கு நாம ரெண்டுபேர் மட்டும்தான் போல…” என நீண்ட விளக்கம் அளித்தாள் நந்தினி.
முதல்முறையாக ஒருபெண் தன்பக்கத்தில் அமர்ந்து பேசுவது புதுவித அவஸ்தையாக இருந்தாலும் ஏனோ மனது, அந்தப் பொழுதை ரசிக்கச் சொல்லித் தூண்டியது. அவள் பேசும் விதத்தை அவளறியாமல் ரசிக்க ஆரம்பித்தான்.
நந்தினி மாநிறத்தை ஒட்டிய கோதுமை நிறம், முதுகைத் தாண்டிய தன்கூந்தலை நடுவில் கிளிப் போட்டு அழகாய்சீவி, விரித்து விட்டிருந்தாள். அவள் சிரிக்கும்போது கண்களும் சேர்ந்து சிரிக்க கொள்ளையழகாய் தெரிந்தாள்.
ஆரஞ்சுநிற சல்வாரும், கருப்புநிற பட்டியாலாவும் அவளுக்கு மிகப்பொருத்தமாய் இருந்தது. உதடுகளின் பேச்சை கண்களும் பேசிட, அந்த பாவனையில் லயித்தவன் அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
ஏற்கனவே பழகிய இடமாதலால், அவளும் ஓரிடத்தில் அமராமல் அங்கும் இங்குமாய் நடந்து அனைவரிடமும் கதை பேசிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று கழுத்தில் ஐடி கார்டு மாட்டிக்கொண்டு வந்த டுவிட்டர்,
“இன்னைக்கு ஃபர்ஸ்ட்டே, அரைமணி நேரம் மட்டும் கிளாஸ் எடுக்குறேன். நாளையில இருந்து ஒன்ஹவர் தியரிகிளாஸ், ரூம்நம்பர் ஃபோர்ல நடக்கும். நெக்ஸ்ட் ஒன்ஹவர், வொர்க் அவுட் பண்ணிப் பார்க்கலாம்.” என்றவாறே நேரடியாக பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.
“உனக்கு எதுல இன்ரெஸ்ட் அசோக்? உன்னோட ஹாபீஸ் என்ன?” வகுப்பு முடிந்தவுடன் எதார்த்தமாய் நந்தினி கேட்க, அவள் நளினமாக பேசுவதாக அசோக்கிற்கு தெரிந்தது.
அவளின் கேள்விற்கு தனக்கு பரிச்சயமானதை சொன்னவன்,
“உன்னோட டேட் ஆஃப் பெர்த் என்ன? நீ என்ன படிச்சிருக்க?” வரவழைத்த தைரியத்தோடு கேட்க,
“நான் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிட்டு, ஜாப்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்…” என்றவள், தனது பிறந்த வருடத்தை மட்டும் சொன்னதோடு,
“எதுக்கு கேட்கிற? ஏதாவது வேலை போட்டு குடுக்கப் போறியா?” கேலியுடன் பதில் கேள்வி கேட்டாள்.
நந்தினியின் பதிலில், இவள் தன்னைவிட சிறியவள் என அறிந்து கொண்டவனுக்கு, அவள் சொன்ன தகவல் பனிச்சாரலாய் மனதை குளிர்வித்தது.
“இல்ல… என்னோட வயசும் தெரிஞ்சுக்கமா நீ ஏன் என்னை, ஒருமையில நீ, வா, போன்னு கூப்பிடுற?” என அவளிடம் மரியாதையை எதிர்பார்த்து இவன் கேட்டிட,
“எந்த காலத்துல இருக்க அசோக்? ஃப்ரண்ட்ஸ்குள்ள இதல்லாம் சகஜம்” என்றபடி அவனுடன் சாதாரணமாய் பேச்சை தொடர்ந்திட,
“எனக்கு, முன்னபின்ன தெரியாதவங்கள இந்த மாதிரி கூப்பிட்டு பழக்கமில்ல, அதான் கேட்டேன்…” தன்னிலையை நொந்தபடியே இவனும் விளக்கினான்.
“இந்த காலத்தில இப்படியும் ஒரு பையனா? நீ ரொம்ம்பப நல்லவன்டா!” இவள் இழுத்துப்பேசி சிரித்திட,
அந்தச் சிரிப்பினில் தன்னைத் தொலைத்தவன், அணுஅணுவாய் அவளை ரசிக்க ஆரம்பித்தான். இப்படியே நாட்கள் இனிமையாகச் செல்ல மூன்றுமாத படிப்பு முடியும் முன்பாக காதலில் விழுந்தான்.
ஹார்மோன்களின் கிளர்ச்சியும், பேச்சில் இனிமையும் சேர்ந்திட, அதனை காதல் என்றே நம்பினான். அவளின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலையில் தத்தளிக்க தொடங்கியிருந்தான். காதல் அணுக்கள் அவன் உடலெங்கும் வியாபித்து, அவனை வெகுசுறுசுறுப்பாய் காதலிக்க செய்தது.
அவளுக்கு முன்பாக சென்று அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அவள் வகுப்பிற்கு வராத நாட்களில், இவனும் விடுப்பு எடுத்துக்கொண்டு, அவளின் வீடு தேடிசென்று, அவளுக்கே தெரியாமல் மறைவாக பார்க்கும் அளவிற்கு காதலில் முன்னேறியிருந்தான்.
இவனுக்கு தப்பாமல், நந்தினியும் வலிய வந்து இவனுடன் நட்பை வளர்த்து வந்தாள். பயிற்சிகாலம் ஒருவழியாக முடிந்தது.
அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டு, மணிக்கணக்கில் தங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இருவருக்கும் ஈர்ப்பு இருந்தபோதிலும் இன்னும் காதலை சொல்லிக் கொள்ளவில்லை. சொல்லாத காதலில், லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்களாய் இருவரும் மாறியிருந்தார்கள்.
இறுதி பருவத்தேர்வு முடிந்து, வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரும்வரை, கிடைத்த உத்தியோகத்தில் தன்னை பொருத்திக் கொண்டிருந்தான் அசோக். தன்உடல் உழைப்பின் பலனை வருமானமாகப் பார்த்தவன் முழு ஆண்மகனாய் நிமிர்ந்து நின்றான். மனதளவில் மிகவும் சந்தோசமாக இருந்தான்
மிகஏழ்மையான குடும்பம் நந்தினியினுடையது. அம்மா ராணி, பெயரில் மட்டுமே ராணியாக இருப்பவர். பக்கத்தில் உள்ள பண்ணையில் தினக்கூலியும் மற்ற நேரங்களில் வீட்டு வேலையும் செய்து குடும்பத்தை தாங்கிக் கொண்டிருப்பவர்.
மூன்று பெண்பிள்ளைகள் பிறந்த பிறகு, பெண்கள் என்ற காரணத்தை சொல்லியே, கணவன் ஊரை விட்டு ஓடிவிட ராணியின் நிலைமை மிகுந்த துரதிஷ்டவசமாகிப் போனது
தன்விதியை நொந்தபடியே பண்ணை வேலைக்கும் வீட்டுவேலைக்கும் சென்று, இரண்டு பெண்களையும் தூரத்து உறவு முறைகளுக்கு கட்டிக் கொடுத்து விட்டார்.
வீட்டில் நந்தினி மட்டும்தான் படித்தவள். அவளை மட்டுமாவது வசதியான வீட்டில் வாழவைக்க வேண்டும் என்று ராணி தீர்மானித்திருந்தார்.
அசோக் வேலைக்கு சேர்ந்து ஆறுமாதங்கள் கடந்திருந்தது. எப்படியாவது தன்மனதில் உள்ளதை நந்தினியிடம் வெளிப்படுத்தி, காதலை உறுதிபடுத்திக் கொள்ள நினைத்து, ஒருவிடுமுறை நாளில் அவள் வீட்டிற்கு சென்றான்.
அவன் கெட்டநேரம் நந்தினியின் தாய், அன்று வீட்டிலிருக்க, அதை அறியாமல்,
“நந்தினி… நந்தினி!” இவனும் அழைக்க,
அதைக் கேட்டு வெளியே வந்த ராணியும்,
“யாருப்பா நீ? என் மகள உனக்கு எப்படி தெரியும்? என்ன விஷயமா அவளை தேடி வந்திருக்க?” அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க, இவன் பதில் சொல்லவும் தடுமாறினான்.
பேச்சு சத்தம் கேட்டு வந்த நந்தினியும், “அம்மா! இவன் அசோக்… என் கோச்சிங் கிளாஸ் ஃப்ரண்ட்” என அறிமுகப்படுத்தினாள்.
“படிப்புதான் முடிஞ்சிருச்சே? அப்புறம் எதுக்கு தேடி வந்திருக்கான்?” மகளை கண்டிக்கும் பார்வையில் ராணி கேட்க,
“எனக்கு தெரிஞ்ச கம்பெனியில நல்லவேலை காலியிருக்கு. அதுக்கு நந்தினியை அப்ளை பண்ணச் சொல்லலாம்னு வந்தேன் ஆண்ட்டி..!” அவசரகதியில் வாயில் வந்ததை படபடப்புடன் கூறினான் அசோக்.
“அப்படியா? எங்கே அசோக்?” நந்தினியும் ஆர்வத்தோடு கேட்க.
அதற்கு அவன் பதில் சொல்லும்முன்,
“அவள வேலைக்கு அனுப்புற ஐடியா இல்லப்பா… ரெண்டு மாசத்துல கல்யாணம் அவளுக்கு…” ராணி மெதுவாய் குண்டை தூக்கிப்போட, நந்தினி புரியாமல் விழித்தாள்.
அசோக் தலையில் இடி விழுந்ததுபோல் அசையாமல் நிற்க, அதிர்ச்சியில் அவன் கண்களும் சற்றே கலங்கியது. மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் கனத்த இதயத்தோடு அங்கிருந்து புறப்பட்டவனின் முகமாறுதல்களை ராணி கவனித்து விட்டார்.
மூன்று பெண்களை கண்ணில் வைத்து வளர்த்து வருபவருக்கு, வயதிற்கு வந்த பெண்ணின்மேல் ஏற்படும் சந்தேகம் தப்பாமல், அவரின் மனதில் விதையாய் விழுந்தது.
அசோக் அங்கிருந்து சென்றவுடன்,
“ஏண்டி எத்தன நாளா இது நடக்குது?” என்று கோபத்துடன் கேட்க,
நந்தினியோ புரியாமல் அதிர்ந்த முகத்தோடு தாயை பார்த்து, “எதும்மா?” நடப்பது என்னவென்று விளங்காமல் முழிக்க,
“யாருடி அவன்? பார்வையே சரியில்ல” என பல்லை கடித்தார் அன்னை.
“அதுதான் சொன்னேனேம்மா! ஃப்ரெண்டுன்னு… ஆமா, நீ ஏன் எனக்கு கல்யாணம்னு அவன்கிட்ட பொய் சொன்னே?” பதிலுக்கு நந்தினியும் சீறினாள்.
“நான் சொன்னது நிஜம்தான்… உன் ஃப்ரெண்டுகிட்ட சொன்னதுல என்ன தப்பு?”
“இதபத்தி என்கிட்ட எதுவும் நீ பேசலயேம்மா?” தன்திருமணம் பற்றி தனக்கே தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் மகள் கேட்க,
“எல்லாத்தையும் உன்கிட்ட கேட்டுத்தான் செய்யனுமா? நாளை மறுநாள் உன்ன பொண்ணு பார்க்க வர்றாங்க… பேசாம உள்ளேபோ!” அதீத அதட்டலில் பேசிய அம்மாவை, என்றுமில்லாத அதிசயமாக பார்த்தாள் நந்தினி.
‘என்னவாயிற்று அம்மாவிற்கு? அசோக் ஏன் திடீரென்று வீடு வரைக்கும் வந்தான்’ எனப் பலவித குழப்பத்தில் இருக்க, அசோக் அவளை அலைபேசியில் அழைத்தான்.
அழைப்பை ஏற்று இவள் “ஹலோ” என்க, மறுமுனையில் நிசப்தம்.
மறுபடியும் இவள், “ஹலோ அசோக்!” என்றழைக்க, “ம்…” என்றான்.
“ஏன் அசோக் வீட்டுக்கு வந்த?” அவனது ஹூங்காரத்தில் கடுப்படைய,
“ஏன் வரக்கூடாதா?” குறையாத கடுப்பில் அவனும் கேட்க,
“நீ வந்ததால அம்மா என்மேல கோபமா இருக்காங்க… நீ ஃபோன்லயே பேசியிருக்கலாமே? உண்மையில வேலை விஷயம் சொல்லத்தான் வந்தியா?” அவனது வருகையைப் பற்றி அறிந்து கொள்ளும் துடிப்பு அவளிடத்தில் எதிரொலித்தது.
“இல்ல… உனக்கு கல்யாணமா?” குரலில் சுவாரசியமின்றி இவன் தொடர,
“அம்மா அப்படிதான் சொல்றாங்கடா” இவளும் புரியாத பாவனையில் சொன்னாள்.
“உனக்கு இதில் சம்மதமா நந்தினி?” இவனது தவிப்பு பேச்சிலே தென்பட்டது.
“இந்த விசயத்தில எனக்குனு தனிப்பட்ட விருப்பம் எதுவும் கிடையாது அசோக். அம்மா என்னோட நல்லதுக்குதான் செய்வாங்க..!” நந்தினியின் பதிலில் மேலும் பரிதவித்து போனான்.
“நீ என்னை பத்தி என்ன நினைக்கிற நந்தினி?” அவள் மனதில் தன்னைப் பற்றிய எண்ணத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கிட,
“நீ, எனக்கு நல்ல ஃப்ரெண்ட்!”
“அவ்வளவு தானா, நந்தினி?”
“ரொம்ப நல்லவன், வேறென்ன என்னோட பதிலா நீ எதிர்பார்க்கிற அசோக்?” இவளும் சற்று பூடகமாய் கேட்க,
“நீதான், என் வாழ்க்கைன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் நந்தினி. என்மனசெல்லாம் நீதான் நெறஞ்சு இருக்க… நீயும் என்னை விரும்புறியா?” ஒருவழியாய் தன்மனதை வெளிப்படுத்தி விட்டான்.
நந்தினிக்கு, அவனை மிகவும் பிடிக்கும். அது காதலா என சொல்லத் தெரியவில்லை. அவன் அருகில் இருந்தால் அவளுக்கு வேறு எந்த நினைப்பும் இருப்பதுமில்லை.
இப்பொழுது வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அழைப்பை துண்டித்து விட்டு, அலைபேசியை வெறித்துக் கொண்டிருந்தாள்.
ஏனோ அவளையறியாமல் கண்ணீர் ஊற்றெடுத்தது. அது அவன் மீதுள்ள நேசத்தின் வெளிப்பாடா என்று அவளால் பகுத்தறிய முடியவில்லை.
மீண்டும் அசோக் அழைக்க, தாயிடம் பேச்சு வாங்க வேண்டாமென முடிவெடுத்து, அவனது அழைப்பை ஏற்காமல் அணைத்து வைத்தாள்.
மாலையில் கோவிலுக்கு செல்லவென ராணி வெளியே கிளம்ப, நந்தினி அலைபேசியை மீண்டும் செயல்படுத்த(on), அடுத்தநொடி அசோக்கிடமிருந்து அழைப்புவரவும், அதை ஏற்று பதிலளித்தாள் நந்தினி.
“ஏன் ஃபோன ஆப் செஞ்ச? என்னை உனக்கு பிடிக்கலையா? எனக்கு நல்ல பதிலை சொல்லு நந்தினி!” மனத்தாங்கலுடன் அசோக் கேட்க,
“எனக்கும், உன்னை ரொம்பப் பிடிக்கும் அசோக்… ஆனா அது லவ்வா இருக்குமானு முடிவு பண்ணத் தெரியல… அப்பா ஆதரவு இல்லாம தனியாளா எங்களை வளர்த்து, எங்களுக்காகவே வாழ்ந்துட்டு இருக்குற, என்அம்மாவோட சம்மதம்தான் எனக்கு முக்கியம்” என்றாள்.
“உங்கம்மாகிட்ட நான் வந்து பேசவா நந்தினி?” பெண்ணவளின் பதிலில் குளிர்ந்தவன், மனதில் தைரியம் வரப்பெற்று தங்கள் உறவை உறுதி செய்துவிடும் நோக்கத்தில் விரைய,
“கொஞ்சம் நிதானமா, யோசிச்சு பேசுவோம் அசோக், அவசரப்படாதே…”
“இல்ல நந்தினி… உங்கம்மா அவசரப்படுறாங்க, அதனால இன்னைக்கே வந்து பேசுறேன். நானும் இன்னும் ரெண்டு மாசத்துல வெளிநாடு போயிடுவேன். அதையும் சொல்லி தெளிவுபடுத்துறேன்!” நிலைகொள்ளாத இன்ப உணர்ச்சியில் தவித்தவன், அவளின் மறுப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அழைப்பை துண்டித்து, ராணி இருக்கும் நேரம் பார்த்து அவர்கள் வீட்டிற்குச் சென்றான்.
எந்த காரியத்திற்கு எப்படி செல்ல வேண்டுமென்ற வரைமுறை உண்டு. பெண்ணின் அன்னையிடம் திருமணத்திற்குபேச, இவனது தாயை அழைத்து சென்றிருந்தால், அன்றைய சூழலே வேறுபட்டிருக்கும். ஆனால் இவனது அவசரபுத்தி, தனது காதல் உண்மையானதா என்று ஆராயாமல், தான் எடுத்த முடிவிலிருந்த பிடிவாதம் இவனை யோசிக்கவும் விடவில்லை.
மனிதமனம் ஒன்றை செயலாற்ற நினைத்தால், அதன் சாதக பாதங்களை ஆராய வேண்டும். பிடிவாதத்தில், உணர்ச்சிவசப்பட்டு செய்யும் காரியங்கள் யாவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆறாத ரணத்தையும், தீராத துன்பத்தையும் பரிசாக கொடுத்து விடுகிறது. இந்த பாதகம் ஒன்றுதான் அசோக் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, அவன் பின்னாளில் தலைகீழாய் சீரழிய காரணமாகிப் போனது.
நந்தினியின் வீட்டிற்கு இவன் மட்டுமே சென்று, வரவழைத்த மனத் துணிவுடன்பேச ஆரம்பித்தான்.
“அத்தை… நான் நந்தினிய விரும்புறேன்… அவளை நல்லா புரிஞ்சு வச்சுருக்கேன்… நீங்க சம்மதிச்சா, முறையா எங்க வீட்டுல உள்ளவங்கள கூட்டிட்டு வந்து பேச சொல்றேன். அவளுக்கும் இதுல சம்மதம்.” அவன் அமைதியாக சொல்லி முடிக்கவும், ராணி பொங்கி விட்டார். அவரும் தனது நிதானத்தை அந்த நேரத்தில் தவறவிட்டார்.
“யார்டா உனக்கு அத்த? வெளியே போ! என்மகளுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். கலாட்டா பண்ண வந்திருக்கியா?” ஆவேசமாக பதில் கூறிய ராணி, மகளைப் பார்த்து,
“நீதான் இவன வரச் சொன்னியாடி? அவ்வளவு தைரியமா உனக்கு” என்றவாறே மகளை ஓங்கி அறைவிட, ஓடி வந்து அசோக் தடுக்க, அவனுக்கும் சேர்த்து அடிகொடுத்தார் ராணி.
திடீரென விழுந்த அடியில் நிலைகுலைந்தவன், தன்னை சுதாரித்துக் கொண்டு சுயத்தை அடைந்த பொழுது, நந்தினியை மீண்டும் அடிக்க கை ஓங்கியிருந்தார் ராணி.
அவரை தடுக்கும் பொருட்டு பலத்துடன், பின்புறம் அவரை, அசோக் இழுத்து தள்ளிவிட, பலகீன உடல்கொண்ட ராணி அவனது இழுவையில் பின்னால் இருந்த சுவற்றில், வலப் பக்கமாய் மிகப்பலமாக மோதிவிட்டார். பார்ப்பவரின் கண்களுக்கு அசோக் தள்ளி விட்டுத்தான், அவர் மோதியதைப்போல் தோன்றும்.
நந்தினியின் பார்வையும் இதற்கு விதி விலக்கல்ல… தன் கண்ணெதிரிலேயே, தன்தாயை தள்ளி விட்டவனின் மீது, அவளுக்கு அடங்காத ஆத்திரத்தோடு ஆவேசமும் வந்துவிட்டது.
“என் அம்மாவை தள்ளிவிட நீ யாருடா?” என்றபடியே நந்தினியும் தன்பங்காக அவனை அறைந்து விட்டு, தன்அன்னையை பார்க்க அந்தோ பரிதாபம்! அவர் முகம் முழுக்க ரத்தம் தெறித்து, கீழே மயங்கிக் கிடந்தார்.
அன்றைய தினத்தில் தனது அவசரபுத்திக்கு பரிசாக இரண்டு பெண்களின் கையால் அடிகிடைத்தது அசோக் கிருஷ்ணாவிற்கு…
நந்தினி குடியிருந்தது பழமையான ஓட்டுவீடு. சற்று அதிர்ந்து பேசினாலே சுண்ணாம்பு காரை பெயர்ந்து விழும் நிலையிலிருக்கும் சுவர்.
அந்தச் சுவரில் மாட்டப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் பக்கச்சட்டம் பாதியாக உடைந்து, சிறியஆணி துருத்திக் கொண்டு வெளியே நிற்க, அசோக் பிடித்து தள்ளியதில், ராணி மிகச்சரியாக கண்ணாடியில் சென்று மோதியிருக்க, கண்ணாடி உடைந்து, சிதறி, ஆணியும் வேகமாக கீறி, அவரது கன்னத்தில் ரத்தக்கீறல்களை மிகநன்றாக வரைந்திருந்தது.
பலவீனமான உடல், அதிகபட்ச கோபம் எல்லாம் சேர்ந்து ராணியை மயங்க வைக்க, சிறியவர்கள் உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
நந்தினி எத்தனை விதமாக தட்டி எழுப்பியும் ராணி முழிக்கவில்லை. அவரின் முகத்தில் வழியும் குருதியும் நிற்காமல் வடிந்து கொண்டேயிருக்க, அதை மிகஅருகில் பார்த்தவனுக்கு மூர்ச்சை அடையும் நிலைதான்.
தன்மனதை தைரியப்படுத்தி கொண்டு அவரின் காயம்படாத கன்னத்தை தட்டி, எழுப்பிக் கொண்டிருந்ததே அவனுக்கு பெரும் அவஸ்தையாகிப் போனது. அந்த குருதி தோய்ந்த முகம் அழியாத கல்வெட்டாய் அவன் மனதில் அப்படியே பதிந்தும் போயிற்று.
சாதாரணமாக திரையில் வன்முறைக் காட்சிகள் தோன்றினாலே முகத்தை சுளித்துக் கொண்டு செல்பவனுக்கு இது அதிகபட்ச அதிர்ச்சிதான். விட்டுவிட்டு செல்லவும் மனம் இடம் கொடுக்கவில்லை.
இருக்கும் சூழ்நிலையில் தானும் மயங்கி விட்டால், நந்தினி எப்படி சமாளிப்பாள் என்று மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு சாமளித்தவன், ஒருகட்டத்தில் வீட்டின் வெளியில் சென்று வாந்தியும் எடுத்து விட்டான்.
பொறுப்பானவனாய் அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யாமல், அடிபட்டவரை பார்த்துக் கொண்டே இவன் வாந்தி எடுத்து வைக்க, நந்தினியோ அழுகையில் கரைந்து கொண்டு தன்பெரிய அக்காவிற்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.
ஒருவழியாக தன்னை சமாளித்துக் கொண்ட அசோக், ஆட்டோ பிடித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில், நந்தினியின் அக்காவும் வந்து அவனை கேள்வியாக பார்த்து, உடன் வரவேண்டாம் என்று தடுத்து விட்டாள்.
இவன், ஏன்? எதற்காக வீட்டிற்கு வந்தான்? தங்கைக்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்? போன்ற ஆயிரம் கேள்விகளுக்கு மற்றவர்களிடம் பதிலளிக்க முடியாது என்ற அச்சம் காரணமாக இவன் வந்ததை மறைத்து விட்டு, தலைசுற்றி விழும்போது அடிபட்டது என்று காரணத்தை சொல்லியே மருத்துவமனையில் சேர்த்தாள் நந்தினியின் அக்கா.
அதுதான் அசோக், நந்தினியை இறுதியாக பார்த்தது. நடந்த நிகழ்வுகளை அசோக்கினால் தைரியமாக யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் தவிப்பையும் தன்மனதிற்குள் புதைத்துக் கொண்டு மூச்சுமுட்டிப் போனான்.
வெகுஅருகில் குருதி வழிந்து கொண்டிருந்த ராணியின் முகத்தை பார்த்த அதிர்ச்சி வேறு, அவன் கண்களை விட்டு அகலாதிருக்க, அவரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து உண்டாகிவிடுமோ என்ற பயத்தில் தேகம் முழுவதும் நடுக்கம் கொள்ள, படபடப்புடன் நடமாடிக் கொண்டிருந்தான்.
குருதியின் அருவெறுப்பும், நடந்த நிகழ்வுகளும் எந்நேரமும் கண்முன்னே வந்து நிற்க, அந்த பயத்தில் மறுநாள் தீராத காய்ச்சலில் படுத்தவன் சரியாகிவர முழுதாய் ஒருவாரம் பிடித்தது.
நடந்தவற்றை மனதில் போட்டு தனிமையில் குமைந்து கொண்டிருந்தான் அசோக். பொதுவாக அமைதியுடன் இருப்பவன் இப்பொழுது தனியாகவும் இருக்க, அவன் பெற்றோர்களுக்கு சந்தேகத்தை வரவைக்கவில்லை.
உடல் சற்று தேறியபின், ராணியை பார்க்க அசோக் மருத்துவமனைக்கு சென்றாலும், நந்தினியை பார்க்க அவளது உடன்பிறப்புகள் விடவில்லை.
ராணியும் அத்தனை சீக்கிரத்தில் தேறவில்லை. தொடர்ந்த உயர்ரத்த அழுத்தத்தோடு, உடல் சர்க்கரையின் ஏற்ற இறக்கமும் சேர்ந்து கொள்ள, காயமும் எளிதில் ஆறவில்லை.
இவற்றையெல்லாம் அறிந்தவனுக்கு, தன்னால்தானே இந்த இன்னல்கள் என்ற குற்றவுணர்வில் பெரிதும் தவித்துப் போனான். எப்படியாவது நந்தினியை பார்த்து மன்னிப்பு கோர வேண்டும் என்ற உறுதியோடு, மீண்டும் அவள் வீட்டிற்கு சென்றவனை, தன்திருமண பத்திரிக்கையை கொடுத்து அதிர வைத்தாள் நந்தினி.
“வெளியே போயிடு அசோக்… அன்னைக்கு மாதிரி எதாவது பிரச்சனை பண்ணாதே… இன்னும் ஒருமாசத்துல எனக்கு கல்யாணம். நம்ப முடியலன்னா பத்திரிக்கைய பாரு… தயவுசெய்து கல்யாணத்துக்கு வந்து என்அம்மாவ கோபப்படுத்தாதே! இப்போதான் பழைய நிலைமைக்கு திரும்புறாங்க. இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல…” வெறுப்புடன் வார்த்தைகளை உமிந்து விட்டு அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள்.
காதலின் வாசனையை நுகரும் முன்பே அதைக் கருகலில் விட்ட இருவரின் மனமும், அவரவர்கள் பார்வையில் நடந்ததை நினைத்து கொந்தளித்துக் கொண்டிருந்தது.
சிறு வயது முதலே அம்மாவின் பேச்சைமீறி எந்தவொரு காரியத்தையும் செய்து பழக்கமில்லாதவள் நந்தினி. அன்னையின் கூண்டுக்குள் இதுநாள் வரை வளர்ந்தவளுக்கு அவரின் வார்த்தையைமீறி எந்த காரியத்தையும் செய்ய அவளுக்கும் தைரியம் வரவில்லை. அன்றோடு அசோக் என்பவனை மறந்தும் போனாள்.
அத்தனை எளிதாய் காதல் தோல்வியை ஏற்றுக் கொண்டானா அசோக்? அடுத்த பதிவில் காண்போம்…