இனிய தென்றலே – 15 & 16

தென்றல் – 16

அசோக் சொன்ன பதிலில், ராமகிருஷ்ணன், தங்கமணி இருவரும் திகைத்து விழிக்க, வைஷாலி அந்த நேரமே விசும்பத் தொடங்கி விட்டாள். இப்படி என்னை ஏமாற்றுவதற்கு பதிலாக, கொன்றிருக்கலாம் என்று மனதோடு அரற்ற, அழுகையும் அதிகமாகியது.

“அழாதேடா! அவன், என்ன சொல்றான்னு கேட்போம். அமைதியாயிரு!” தந்தையாக ராமகிருஷ்ணன், அவளை தோள் சாய்த்துக்கொள்ள, தங்கமணியும் மருமகளின் கண்ணீரை துடைத்தார்.

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியல, அசோக்! கொஞ்சம் டீடெய்லா சொல்லலாமே?” மருத்துவர் மேலும் துருவிக் கேட்க, அசோக் தொடர்ந்தான்.

“நானும் அவளுமா இணையுற காதல், எனக்கு அவமேல இல்ல… அவ இல்லாம நான் இல்லங்கிற அன்பைதான், நான் அவமேல வைச்சுருக்கேன்.” எனச் சொன்னவனின் குரலும் சிலிர்க்க, வைஷாலியின் விழிகளும் பரவசத்தில் விரிந்தன.

“எக்ஸலண்ட்! இது அவங்களுக்கு தெரியுமா?” மருத்துவரும் ஆச்சரியத்தில் கேட்க,

“இந்த விஷயத்த எனக்கு புரிய வச்சதே ஷாலிதான்”

“இஸிட்… இவ்வளவு அண்டர்ஸ்டான்டிங் இருக்கா உங்களுக்குள்ள?”

“அப்படி இருக்கா, இல்லையான்னு தெரியல. பட் ஒருத்தருக்காக, இன்னொருத்தர் முழுமையா விட்டுக் கொடுக்குற அளவுக்கு அதிகப்படியான அன்பு, எங்களுக்குள்ள இருக்குனு நான் நம்புறேன்.

பொண்ணு பார்க்கபோன அன்னைக்கு, நானும் அவளும் கொஞ்சநேரம் ஜாலியா பேசினோம். கல்யாணம் வேண்டாம்னு நாங்க ரெண்டு பேரும் சொன்ன காரணங்கள் எல்லாம், உப்புசப்பு இல்லாத விஷயங்களாதான் இருந்தது.

நான் ஓபனாவே அவகிட்ட சொன்னேன்! இந்த காலத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா சுதந்திரம் எதுவும் பறிபோறதில்ல, எல்லா ஆம்பளைகளும் மோசமில்ல… நான் வேணும்னா நல்ல பையனா பார்த்து சொல்லவான்னு கேட்டேன்.

அப்போதான் அவ உண்மையான காரணத்தை சொன்னா…” என்றவன் வைஷாலி அன்றையதினம் பேசியதை நினைவு கூர்ந்தான்.

‘எனக்கு நினைவு தெரிஞ்சநாள்ல இருந்து என்னோட அத்தனை உறவுகளையும் என் பாட்டிக்கிட்ட மட்டுந்தான் பார்க்குறேன் அசோக். அம்மா, அப்பா, அண்ணா, அத்தைன்னு இன்னும் ஏகபட்ட உறவுகள் யார் எப்படினு எனக்கு தெரியாது.

ஆனா அந்த அத்தனை பேரோட ஒட்டுமொத்த பிரதிபலிப்பா, எனக்கு என் பாட்டி இருக்காங்க! அவங்களுக்கும்  நான், அப்படிதான்… அந்த மாதிரி ஒருத்தர் எனக்கு வேணும். எனக்கான உறவுகள் எல்லாத்தையும் அவரோட அன்பால வெளிப்படுத்தணும்.

இந்த காலத்துல கூட்டு குடும்பம், நெருங்கிய உறவுகள் எல்லாமே தொலைஞ்சுட்டு வருது. அதோட அருமை தெரியாத என்னை மாதிரி பெண்களுக்கு, எல்லாருடைய அன்பையும் சேர்த்து வாரிவழங்குற ஆண், வாழ்க்கை துணையா கிடைச்சா, அதைவிட அதிர்ஷ்டம் வேற எதுவுமே இல்ல. அப்படி ஒருத்தர் என் கண்ணுல தென்பட்டா, நான் எதை பத்தியும் யோசிக்க மாட்டேன். கல்யாணத்துக்கு ஒகே சொல்லிடுவேன் அசோக்!’ என்று முடித்தான்.

“இப்படிதான் வைஷாலி சொன்னா! அவளோட எண்ணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எந்தநேரமும் பணம் அந்தஸ்துன்னு அலையுற இந்த காலத்துல, அன்பு மட்டுமே போதும்னு நினைக்குற பொண்ணா, அவ எனக்கு பெரிய ஆச்சரியமா தெரிஞ்சா!

அவ கேட்குற அன்பை எல்லாம், அவளுக்கு கொடுத்தா என்னனு, என்மனசுல எப்பவும் கேள்வி ஓட ஆரம்பிச்சது. ஒருத்தர்மேல அன்பு காட்டவும் பாசம் வைக்கவும் நெருங்கிய உறவா இருக்க வேண்டிய அவசியமில்லை, அவங்க தொடர்புல இருந்தா போதும்ங்கிற முடிவுக்கு வந்தேன்.

நிச்சயமா நான் அவ பேச்சுல, அழகுல எல்லாம் மயங்கல… அவளோட இந்த குணத்துலதான் நான் விழுந்துட்டேன், எந்திரிக்க மனசு வரல எனக்கு!” என்று சிலாகித்து சொன்ன அசோக் தொடர்ந்தான்.

“எப்படியாவது ஷாலியோட நட்பா இருக்கணும்னுதான் அவள ஃபாலோ பண்ணேன். அப்பவும் எனக்கு எதுவும் தப்பா தெரியல. பாசத்துக்காக ஏங்குற பொண்ணுக்கு ஆதரவு கொடுக்குறது, அத்தனை பெரிய குற்றமில்லைன்னுதான் நினைச்சேன்.

சென்னையில படிச்சு வேலை பார்க்குறவ, ஓகே சொல்லிடுவான்னு எனக்குள்ள ஒரு நப்பாசை. ஆனா அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல அவ, என்னை அவாய்ட் பண்ணி, திட்டிட்டு போனதும், நான் டோட்டலா உடைஞ்சு போயிட்டேன்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு வேதனை, ஏமாற்றம் எல்லாம் ஒருசேர அனுபவிச்சேன். மனசு பொறுக்கல… பெண்களே எனக்கு ராசி இல்லையோ, அவங்ககிட்ட அவமானப்படுறதே என்னோட விதிபோலன்னு உள்ளுக்குள்ள குமிறிட்டு இருந்தேன்.

தேவையில்லாம அந்த நேரத்துல நந்தினி, அவங்க அம்மா நிராகரிச்சது எல்லாம் சேர்ந்து வந்து மொத்தமா என்னை குழப்பி போட்டுடுச்சு. முடிவா, எதுக்காக என்னை அவாய்ட் பண்றான்னு தெரிஞ்சுக்கதான், அவளைத்தேடி போனேன். நான் செஞ்ச பெரிய முட்டாள்தனம் அதுதான்.

அதுக்கு பிறகு நடந்த பிரச்சனையில ரெண்டு பேருக்கும் இடையில இன்னமும் சிக்கலை உருவாக்கிடுச்சு. என்ன செஞ்சும் அவளை, என்னால மறக்க முடியல. வீட்டுலயும் வம்படியா, நான் குடிக்கிறத நிறுத்துறதுக்குனு அப்பா, டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனார்.

அங்கே சொன்னத என்னால ஃபாலோ பண்ண முடியல. என்னை நானே கட்டுப்படுத்திக்க ரொம்ப சிரமப்பட்டேன். எக்காரணத்தை கொண்டும் வைஷாலிய, நான் காதல்ங்கிற கோணத்துல நினைச்சு பார்க்கவே இல்ல. ஆனா என்மனம் முழுக்க அவ பேசுனது மட்டுமே கேட்டுகிட்டே இருந்தது.

ஆறுமாசத்துக்கு பிறகு, திரும்பவும் அவளை பார்க்கும்போது எங்களையும் அறியாம மனசுக்குள்ள இருக்குறத வெளிப்படையா பேசினோம். அதோட பலனா வீட்டுல ஏற்பாடு செஞ்ச கல்யாணத்த தடுத்து நிறுத்தனும், எப்படியாவது அவகிட்ட என் நிலைமைய சொல்லியே தீரணும்னு முடிவோடதான் போனேன்.

ஆனா, பாவிப்பொண்ணு அழுகைய பார்த்ததும் எனக்கு சகலமும் மறந்துபோச்சு. இவளோட கண்ணீர்ல என்னோட எதிர்ப்பு காணமா போயிடுச்சு.

அதுக்கு பிறகு அவகிட்ட பேசினதெல்லாம் என்னையும் அறியாம, என்மனசுல இருந்து வெளிவந்த வார்த்தைகள்தான்.

அப்போதான் அவ இல்லாம என்னால வாழ முடியாதுங்கிற முடிவுக்கே வந்தேன். அந்த முடிவு எனக்கு அப்படி ஒரு சந்தோஷத்தை கொடுத்தது. கல்யாணம் பண்ணிக்கலாம்ங்கிற தைரியத்தை கொடுத்தது.

அதே உற்சாகத்தோட கல்யாணத்துக்கு முன்னாடி, ஒருவாரம் சென்னையில இருந்த நேரத்துல, ஒரு செக்சாலஜிஸ்ட்கிட்ட கவுன்சிலிங் போனேன். பதட்டம் இல்லாத மகிழ்ச்சியோட, பெண்ணை மெதுமெதுவா அணுகினா, தயக்கம், பயமெல்லாம் காணாமப் போயிடும்னு அந்த டாக்டர் நம்பிக்கை கொடுத்தார்.

அந்த தெளிவோடதான் ஃபர்ஸ்ட் நைட்ல அவகூட சந்தோசமா பேச ஆரம்பிச்சேன். உடலைவிட மேன்மையானது மனசு. மொதல்ல மனசை புரிஞ்சுபோம்ன்னு சொல்லத்தான் பேச்சை ஆரம்பிச்சேன். இதெல்லாம் என் ஷாலிக்கு சொல்லித்தான் புரிய வைக்கனும்னு இல்ல. ஆனாலும் என் மனசுல இருக்குறதை சொல்ல ஆசைப்பட்டேன்.

ஆனா, பாழப்போன என்னோட பதட்டம் அப்பவும் வந்து என்னை முழுங்கிடுச்சு. எப்படியோ சுதாரிச்சு ஷாலிகூட பேச்சை வளர்த்தேன். அப்ப இருந்த படபடப்புல என்ன பேசுறேன் என்ன கேக்குறேன்னுகூட என்னால அனுமானிக்க முடியல.

நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் எதிர்பதமாவே வந்து என்னை ரொம்பவே சோதிச்சது. கடைசியா பெரிய குழப்பத்தோட, என் மனசுக்கு பிடிக்காமதான் அவகூட இருந்தேன். எங்களுக்கான இரவு தெளிவில்லாத பேச்சோட தோல்வியில முடிஞ்சது.

அது என்னை ரொம்ப பலமா பாதிச்சது. மறுநாளே அங்க இருக்க பிடிக்காம ஊருக்கு வந்துட்டேன். என் மனைவி எப்படி இருந்தாலும் என்னை தேடி வந்திடுவா, அப்ப அவகூட பேசி தெளிவுபடுத்திக்கலாம்னு அலட்சியமா இருந்துட்டேன்.

அந்த எண்ணத்தோடதான் வரவேற்புக்கான எல்லா ஏற்பாட்டையும் என் இஷ்டத்துக்கு செஞ்சேன். அவளா வந்து பேசட்டும்னு அந்த சமயத்துல திமிரா இருந்தேன். மனசு நெறைய ஆசைய சுமந்துட்டு, பேசமா இருக்கிறது எவ்வளவு கொடுமைன்னு அப்பதான் புரிஞ்சது.

போனது போகட்டும், மறுநாள் அவளை வெளியே கூட்டிட்டு போய் சமாதானப் படுத்துவோம்ன்னு முடிவெடுத்த  நேரத்துல, மறுபடியும் ஷாலி என்கிட்ட சொல்லாம ஊருக்கு போயிட்டா. என்னோட பேசாமலும் இருந்துட்டா… நானா கூப்பிட்டு பேசவும் என்னோட ஈகோ தடுத்துடுச்சு!

அவளோட இந்த பாராமுகம் எனக்கு கோபத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. ஏன் என்னை நிராகரிக்கிறா? என்னோட பலவீனம், என் முகத்துல தெரிய ஆரம்பிச்சுடுசோன்னு, எனக்கு நானே கேட்டு குழப்பிக்க ஆரம்பிச்சேன்.

அவளோட நிராகரிப்புல எப்படி வாழ்றதுன்னு மனசு முழுக்க பயம் வந்து என்னை கூறு போட்டுருச்சு. அவ நெனைப்புல நான் பைத்தியமா சுத்த ஆரம்பிச்சேன். அவள விட்டுட்டு வேறெதையும் என்னால நினைக்க முடியல.

அந்த பதட்டத்துல அளவுக்கு மீறி குடிக்க ஆரம்பிச்சேன். அவளோட சுபாவங்களுக்கு ரசிகனாகி, அவளை பிடிக்க ஆரம்பிச்சு, அவமேல பித்து பிடிச்சு சுத்த ஆரம்பிச்சேன்.

இதுக்கு பேருதான் உண்மையான காதல்னா அப்பிடியே இருந்துட்டு போகட்டுமே! ஆனா, நான் விரும்புறது எல்லாம் அதைவிட மேலான அவளோட அன்பு மட்டும்தான்.

காதல் காமத்தை எதிர்பார்க்கும். ஆனா அன்பு எதையும் எதிர்பார்க்காம பாரபட்சமில்லாம அள்ளி கொடுக்க மட்டுமே சொல்லும். அந்த மாதிரியான பேரன்பைதான் நான் அவளுக்கு கொடுக்க நெனைக்கிறேன்.

அந்த பாசத்துல இருந்த உரிமையிலதான் என்னோட கோபத்தை வெளிப்படுத்த, அன்னைக்கு நைட் பேச ஆரம்பிச்சேன். ஆனா அது, எனக்கே தெரியாம தடம்மாறி, என்னோட மனஅழுத்தத்தை எல்லாம் அவமேல இறக்கிடுச்சு.

இதுக்கு முன்னாடி யாரோடயும் இப்படி கீழ்தரமா நான் நடந்துகிட்டதில்ல. இனியும் நடந்துக்க போறதில்ல! இது முழுக்க முழுக்க என்னோட உரிமைமீறலாதான் நான் பார்க்கிறேன்.

இதை எப்படியாவது கட்டுக்குள்ள வைக்கணும், அதுக்கு அவ என் மனைவியா இருக்ககூடாது. ஒருகணவனா என்னால, அவளோட என்னை பகிர்ந்துக்க முடியாதுன்னு எனக்கே, திட்டவட்டமா தெரிஞ்ச பிறகு, என் சுயநலத்துக்காக அவளை என்னோட வாழச் சொல்றதில என்ன அர்த்தமிருக்கு? அப்படி செஞ்சா என்னோட அன்பு எல்லாம் கேலிகூத்தா, பொய்யா போயிடும்.

அவ யாரு? அப்படி என்ன செஞ்சு, என்னை வேரோட சாய்ச்சா? எந்த புள்ளியில அவமேல அன்பும் ஆர்வமும் வந்ததுன்னு அடுக்கடுக்கா கேள்வி கேட்டா அதுக்கு என்கிட்டே பதிலில்ல!

உருவமில்லாத தென்றலை அனுபவிச்சுதான் உணருற நாமதான், கடலோட ஆழத்த ஒருஅளவுல நிர்ணயிக்க முடியாம முழிக்கிறோம். அதுபோலதான் அவமேல இருக்குற என்னோட அன்பை அனுபவிக்க ஒருஅளவுகோல் இல்லாம தவிச்சுட்டு இருக்கேன். 

மொத்தத்துல என் வாழ்க்கையோட மையபுள்ளியா அவளை பார்க்குறேன். அவ, என்கூட இல்லாம போனாலும் அவளை சுற்றிதான் என்னோட நாட்கள் நகரும். இது மாற்றமுடியாத உண்மை.

எப்பவும் நான் அவ்ளோட நலம் விரும்பியா உயிர்த் தோழனா மட்டுமே இருக்க ஆசைபடுறேன். அவளோட முழுமையான வாழ்க்கைக்கு நான் எப்பவும் தடையா இருக்க விரும்பல… என்னோட பலவீனத்தை வெளியே சொன்னாதான் அவளுக்கு புதுவாழ்க்கை அமையும்னா அதுக்கும் நான் தயாராகிட்டேன்.

எந்த காலத்திலயும் அவளை ஏமாத்தவோ, அவளை அழவைக்கவோ என்னால முடியாது. அந்தளவு தைரியமும் எனக்கில்ல!

என் ஷாலி சொன்னமாதிரி நான் கோழைதான். என் மனசுல இருக்குற அழுக்கை சொல்லாம மறைச்சு, அவளை கேள்விக்குறியா நிக்க வச்ச மோசக்காரன்தான் நான்!” என்று உணர்வுக் குவியலாக சொன்ன அசோக், தன்னை மறந்து அழ ஆரம்பித்தான்.

இவனது பேச்சை கேட்டு பிரமித்த அனைவருக்கும் இதை எந்த வகையான அன்பில் சேர்ப்பது என்ற ஆச்சரிய கேள்வியில் வாயடைத்து நின்றனர். 

கணவனின் வலிய அன்பை உணர்ந்த வைஷாலிக்கும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. தன்னை மீறி எழுந்த அழுகையை அடக்க வழியறியாது, அவனது அன்பில் அவள் மூச்சு மூட்டிப் போனாள்.

எத்தனை அழுத்தமாய், ஆத்மார்த்தமாய் அவள் மீதான அன்பையும் உரிமையையும் பதிவு செய்து விட்டான்.

அவனை மறந்த நிலையில் வார்த்தைக்கு வார்த்தை, அன்பாலயே தன்னை புரட்டி போட்டு விட்டானே! இவனை விடவா, ஒருவன் வந்து தன்னை ஆட்கொள்ள முடியும்?

தனக்குள்ளேயே குமைந்து, தன்னை தொலைத்து என்னை வாழ வைக்க ஒவ்வொரு நிமிடமும் இவன் துடித்த துடிப்பை நினைத்து, தன்னையே வெறுத்துக் கொண்டாள் வைஷாலி.

தனது வாழ்வின் செழிப்பும் மகிழ்வும் இவனையன்றி வேறு யாராலும் கொடுக்க முடியாது என்ற நம்பிக்கையை மனதில் மீண்டும் உருபோட்டு கொள்ள, அவளது அனைத்து வேதனைகளும் பனியாய் கரைந்து போனதாய் உணர்ந்தாள்.

தென்னையாக உச்சியில் இருந்த அவளின் நேசத்தை ஆலவிருட்சமாக தன்மனம் முழுவதும் பரப்பிக் கொண்டவள், எப்படியும் இவனை நல்ல மனிதனாக, இனிய கணவனாக, நல்லதொரு குடும்ப தலைவனாக மாற்ற முடியும் என்ற மலையளவு நம்பிக்கையை மனதிற்குள் பதித்துக் கொண்டாள். 

இனி கணவனின் பேரன்பும், மனைவியின் நம்பிக்கையும் சேர்ந்து வாழ்வை பலப்படுத்துமா? ஊடலும் கூடலுமான வாழ்வு இவர்களுக்கு அமையுமா அல்லது தோழமையும் பேரன்பும் மட்டுமே இவர்களை வழிநடத்திச் செல்லுமா? இனிவரும் பதிவுகளில் காண்போம்…

*************************

ஹிப்னாசிச முறையில் இப்படிதான் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று எனக்கு சரிவரத் தெரியாது. இணையத்தின் வாயிலாக அறிந்ததை என் கற்பனையோடு கொடுத்திருக்கிறேன். ஆகையால் இந்த பதிவை நடைமுறை சிகிச்சை முறையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் நண்பர்களே…

எதார்தத்தை மீறிய காட்சிகள் சில இடங்களில் தென்படலாம். கதையின் தன்மையை மனதில் கொண்டே அவ்வாறு எழுதியது. லாஜிக் என்பதை சற்றே ஒதுக்கி படிக்கவும் நண்பர்களே!   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!