இனிய தென்றலே – 15 & 16

தென்றல் – 15

மனதில் கட்டிய காதல்கோட்டை ஒரேநாளில் தவிடுபொடியாகி, அசோக்கிருஷ்ணா பித்து பிடித்தவனைப்போல் சுற்ற ஆரம்பித்தான். தன்னிடம் என்ன குறையென்று, தாயும் மகளும் தன்னை நிராகரித்தனர், என்றெண்ணியே மாய்ந்து போனான்.

வீட்டிலிலும் வெளியிலும் அவனால் தன்காதலியை, காதலை மறந்து சகஜமாய் நடமாட முடியவில்லை. தன்னிடம் நெருங்கிப் பழகும் நண்பர்களிடம், தனது காதல் தோல்வியை பற்றி மூச்சு விடவில்லை.

தனிமை என்னும் அருபெரும் மருந்தை தன்காதல் தோல்விக்கு வடிகாலாக்கி கொண்டவன், எந்தநேரமும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி தனிமையில் புலம்பித் தவிப்பது வாடிக்கையாகிப் போனது.

வேலையில் சரியாக கவனம் செலுத்தாமல்போக, பதினைந்தே நாளில் கம்பெனி நிர்வாகம் அவனை வீட்டிற்கு அனுப்பி இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்னால் சுதந்திரமாக சுற்றித் திரிந்தவன், இப்பொழுது இலக்கில்லாமல் அலைய ஆரம்பித்திருந்தான்.

நந்தினியின் திருமணம் முடிந்த சிலதினங்களில், உயர் ரத்த அழுத்தம் காரணமாக ராணியின் உடல்நிலை மீண்டும் பின்னடைந்து, அவர் தவறிப்போக, அதற்கும் தனது அவசரபுத்திதான் காரணமோ என்ற பொருமலில் மனதை குழப்பிக் கொள்ளத் தொடங்கினான். தன்னால் ஒருஉயிர் பலியாகி விட்டதே என்ற தீவிர குற்றவுணர்வில் மனம் வெதும்பிப் போனான்.

வீட்டில் அவனது அறையும் மொட்டைமாடியும் மட்டுமே அவனது புகழிடமாக மாறிவிட, அங்கேயே தனது நாட்களை விரயம் செய்து கொண்டிருந்தான் அசோக்கிருஷ்ணா.

எதிர்கால வாழ்க்கைக்கு நம்பிக்கை கொடுத்த வெளிநாட்டு வேலையும், அந்த சமயம் கையை விட்டுப் போனது. அந்த அதிர்ச்சியில்தான், மகன் மனமுடைந்து போய்விட்டான் என்றெண்ணிய பெற்றவர்கள், தற்காலிக முயற்சியாக வேறொரு நல்ல இடத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்து, அனுப்பி வைத்தனர்.

அண்ணன் அருண்கிருஷ்ணாவுடன் சேர்ந்து, கொல்கத்தாவில் புதிய வேலைக்கு சேர்ந்தவன் நேரம் காலம் பார்க்காமல், தன்னை வேலைக்குள் புதைத்துக் கொண்டான். அங்கிருந்தே பகுதிநேர முதுநிலை கணினி பொறியியலை பயிலவும் ஆரம்பித்தான். அதன் காரணமாக அவனது தோல்விகள் குற்றவுணர்வுகள் யாவும் அவன் மனதிற்குள் புதைந்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டன.

அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்பை முடிக்கவும் ஆன்சைட் வேலைவாய்ப்பு வரவும், அமெரிக்காவிற்கு பறந்து விட்டான். பலநாட்டு மனிதர்கள், பலதரப்பட்ட பழக்க வழக்கங்கள், சீதோஷண நிலைகள் எல்லாம் பழக்கப்  படுத்திக்கொள்ள சற்றே திண்டாடிப் போனான் அசோக்.

மாறுபட்ட கலாச்சாரத்தை கண்டு முகம் சுளித்து ஒதுங்கினாலும், அவனை சுற்றியுள்ளவர்கள் அவனை தனியாக விடவில்லை. வீம்பாக அவனை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றனர்.

கலாச்சார சீர்கேடுகள் மிகஎளிதாக அரங்கேறும் இடத்தில், எவ்வளவுதான் நம்மை கட்டுப்படுத்திக் கொண்டாலும் உடன் இருப்பவர்களின் வற்புறுத்தலில் நமக்கும் சிறிய சலனம் மனதிற்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடும். அசோக்கின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தான். அவனது இளவயதும் அதற்கு தூபம் போட்டது.

“ரொம்ப ஒதுங்கி போகாதேடா! சாமியார்னு முத்திரை குத்தி உள்ளே வச்சுருவாங்க!” நண்பன் ஒருவன் சீண்ட,

“ஒருவேள அவனா நீ?” என்ற நக்கலுடன் அசோக்கை உசுப்பிவிட்டான் மற்றொருவன்.

வெகுண்டு, அவன் சட்டையை பிடித்து சண்டைக்கு சென்றவனை, அடக்கி வைப்பதற்குள் கோபத்தில் கொதிநிலைக்கு சென்றிருந்தான் அசோக்.

தன்னை தாழ்த்தி பேசும் வார்த்தைகளையே அவமானமாக நினைத்தவன், முயன்று தன்னை மாற்றிக்கொள்ள முன்வந்தான்.

அதன் விளைவு, அங்குள்ள குளிருக்கு இதமாக இருக்குமென்று கருதி வெண்புகையும் மதுவையும் பழகிக்கொள்ள, ஒருவாரத்தில் அவையிரண்டும் அவனது உடன்பிறப்பாகிப் போனது.

புதியபழக்கம், மூளைக்கும் மனதிற்கும் உற்சாகத்தை கொடுக்க, அதனை தொடர்ந்த வீக் எண்ட் பார்டீஸ், டிஸ்கோத்தே போன்ற இடங்களுக்கும் பயணமானான்.

அதன் தொடர் சங்கிலியாக ஆண்பெண் பேதமின்றி பழகும் நட்பு வட்டாரமும் அத்துபடியாகிவிட, முதலில் தயங்கியவன், பின் துணிந்து பெண்களுடன் தன்பழக்கங்களை நீட்டித்துக் கொண்டான்.

பார்வைக்கு அழகனாய், இளமையின் சிகரமாய் மிளிர்ந்தவனை கண்கொத்திப் பாம்பாக கொத்திக்கொள்ள யுவதிகளின் கூட்டமும் போட்டிபோட்டுக் கொண்டனர்.

அனுபவமற்ற பாடத்தை பதறாமல் பயின்றால் மட்டுமே, தொய்வின்றி படித்து தெளிவாக கற்க முடியும். இந்த கோட்பாடு கல்விக்கு மட்டுமல்ல, கலவிக்கும் பொருந்தும்.

ஒழுக்க முறையற்ற பெண்களுடன் நட்பாகவோ காதலாகவோ பழகுவது, பழக்கமில்லாத வேலை மட்டுமல்ல, செய்யக்கூடாத செயலும்கூட! இவையெல்லாம் மாபாதகச் செயல் என்று மனதில் பதியமிடப்பட்டே வளர்ந்திருப்பவன் அசோக்.

அதையெல்லாம் தகர்த்துவிட்டு, முறையற்ற உறவில் காலடி எடுத்து வைக்கும்போது, யாராக இருந்தாலும் பதட்டம் வரத்தான் செய்யும். வெளியில் சிங்கமாக கர்ஜித்தாலும் அந்த நேரத்து உதறல்கள் எல்லாம் ஊரறிந்த ரகசியம்தான்.

இவனோ கூச்ச சுபாவத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவன். சிலநொடி படபடப்பில் தன்னையே வசமிழக்கும் கோபக்காரன். இவனது மெய்(உடம்பு) மொழியையும் அன்றுதான், அவனும் அறிந்து கொண்டான்.

வீம்பாய் தன்மேல் விழுந்து எழுந்த யுவதியுடன் இரவை கழிக்க சென்றான். முதல்முறையாக பெண்ணின் தீண்டலில் கூச்சத்தில் நெளிந்தவனை, தன்வசமாக்கிக் கொள்ளும் வேலைகளை பெண்ணும் ஆரம்பித்தாள்.

மெதுமெதுவாக அசோக்கின் மனதிற்குள் தவறான காரியத்தை செய்கிறோம் என்ற குற்றவுணர்வு மெல்லமெல்ல தலைதூக்கி, உடலும் மனமும் பதைக்க தொடங்கியது.

மனதிற்குள் உறங்கிக் கொண்டிருந்த அழுத்தங்கள் யாவும், அந்த நேரத்தில் மெல்ல உயிர்பெற்று வெளியே வரத் தொடங்கின.

அதே படபடப்புடன் பெண்ணின் செயலை அங்கீகரித்தவன், அவள், தன்னிடம் மோகத்துடன் இதழணைக்கும் நேரத்தில், பயந்து பின்னடைந்தான். அந்த நொடியில் அவன் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் குருதி தோய்ந்த ராணியின் முகமே!

அவனது பயம் என்ற சொல்லிற்கு ராணியின் குருதி வழிந்த முகத்தையே மனதிற்குள் உருவகம் செய்து வைத்திருந்தது அவனே அறியாத ரகசியம்.

அந்த பயவுணர்வே அவனை, பெண்ணிடம் நெருங்க விடவில்லை. அதையும் மீறி, ஆசையாக தன்மேல் தாறுமாறாக வந்து விழுந்த பெண்ணையும், அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

அத்தனை அருகில், விகாரமாக தோன்றிய பெண்ணின் முகத்தை பார்த்து அலறியபடியே அவளை தள்ளிவிட்டவன், வேகமாக அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

உடலும் மனமும் ஒரேசேர நடுக்கம் கொள்ள, தனக்கு உண்டான பிரமையோ என்று அவனது அறைக்குள் வந்து சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

தனக்கு ஏற்பட்ட பின்னடைவை எண்ணி தவிப்புடன் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவன் உதறித் தள்ளியபெண் வந்து, அவனை முடிந்த அளவு வசைமாறிப் பொழிந்ததும் இல்லாமல், இவன் சரியான ஆண்மகன் அல்ல என்று முத்திரையும் குத்திவிட்டு சென்று விட்டாள்.

பெண்ணின் வருகையும் வசைமொழிகளும், அந்த சமயத்தில் உடன் தங்கியிருந்த நண்பர்களுக்கு வெட்ட வெளிச்சமாகிவிட, பெருத்த அவமானத்தில் அங்கேயே மடிந்து சிலையாகி விட்டான் அசோக்.

அவனால் யாரையும் நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரின் பார்வையும் தன்னை ஏளனமாய், இகழ்ச்சியாய் நோக்குவதாகவே அவன் கண்களுக்கு தென்பட்டது.

வம்பை வளர்க்கும் நண்பர்கள் கூட்டமோ ஒருபடி மேலே சென்று, எந்த முறையில் பெண்ணை அணுகினால், அவளை வசப்படுத்தலாமென ஒளிஒலிக் காட்சிகளை எல்லாம் இணையத்தில் ஓடவிட்டு, சிறப்பு வகுப்பு ஒன்றை எடுக்க ஆரம்பித்து விட்டனர். ஒருவர்மாற்றி ஒருவர் அவனை ஊக்கப்படுத்தியதில், அசோக், வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டான்.

“இவ்வளவு மேட்டர பார்த்தும் கேட்டும் உனக்கு எதுவுமே வொர்க் அவுட் ஆகலன்னா, நீ, நிச்சயமா ஜீரோதான்டா!” எள்ளலாய் நண்பன் ஒருவன் முற்றுப் புள்ளி வைத்துவிட, இப்படியொரு அவமானத்துடன் உயிர் வாழத்தான் வேண்டுமா என்ற தன்னிரக்கத்தில் தற்கொலைவரை யோசனையும் செய்து விட்டான்.

வாரத்திற்கு, ஒருமுறை வீட்டிற்கு அழைத்து பெற்றோர்களுடன் பேசுவது அசோக்கின் வழக்கம். கடந்து சென்ற மானங்கெட்ட நாளினை நினைத்தே, அந்த வாரத்தில் வீட்டிற்கு பேச மறந்துவிட, மறுநாள் தங்கமணியின் நச்சரிப்பு தாங்க முடியாமல் ராமகிருஷ்ணன், மகனை அழைத்து விட்டார்.

“ஏன் தம்பி நேத்து பேசல? உன் ஃபோன் வராம எங்களுக்கு  நைட் தூக்கம் போச்சு… நல்லா இருக்கேதானே!” தங்கமணி பாசத்தில் நெகிழ,

“வேலை அதிகமா இருந்ததுமா! அதான்…” என்றிவன் இழுக்க,

“அதிகமான வேலைன்னா வாட்ச்-அப்ல ஒரு மெசேஜ் தட்டிவிட வேண்டியதுதானே? ஏன் உன்னோட குரல் ஒரு மாதிரியா இருக்கு? ஸ்கைப்க்கு வா!” ராமகிருஷ்ணன் கண்டிப்புடன் உத்தரவிட, தந்தை சொன்னதை செய்தான்.

“உடம்பு சரியில்லையா அசோக்? ரொம்ப களைப்பா தெரியுற தம்பி! வேலை கஷ்டமா இருந்தா கிளம்பி வந்துடு. இங்கே வேறவேல பார்த்துக்கலாம்!” தங்கமணி மகனைப் பார்த்து உருகி, இரண்டு சொட்டு கண்ணீரும் வெளியேற்றினார்.

“ஆமாடா… இங்கேயே வந்துடு! நாலு பசுமாடும் ரெண்டு எரும மாடும் வாங்கித் தர்றேன். அப்படியே அம்மாவும் பிள்ளையும் கிராமத்துக்கு போயி விவாசயம் பாருங்க!” கோபத்துடன் கடிந்துகொண்ட ராமகிருஷ்ணன்,

“இங்கபாரு அசோக்… உனக்கு இப்போ எல்லாமே தெரிஞ்சுக்க வேண்டிய வயசு. எதுவுமே ஆரம்பத்துல ஈஸியா வராது. பிடிக்கவும் செய்யாது. போகப்போக தானா எல்லாம் சரியாகிடும்.

ஆரம்பத்துலயே முடியாதுன்னு திரும்பினா, நமக்கான அடையாளமே தோல்வியில ஆரம்பிச்சதா ஆகிடும். அந்ததோல்வி, உன்னை வாழ்நாள் முழுக்க விடாம துரத்தும். அதோட அழுத்தம் உன்னை சேர்ந்தவங்களையும் பாதிக்கும்.

வாழ்க்கை முழுதும் தோல்விய பின்தொடர்றதுக்கு பதிலா, கொஞ்சம் சிரமம் பார்க்காம இப்போ நீ கஷ்டப்பட்டு உன்னை நிரூபிச்சா, உனக்கு மட்டுமில்ல உன்னை சேர்ந்தவங்களுக்கும் பெருமைதான்!” தந்தையாக மகனுக்கு அறிவுரையை நீளமாக கூற,

“போதும்ங்க… புள்ள ஏற்கனவே டல்லா இருக்கான். இதுல, நீங்க வேற அட்வைஸ் பண்ணியே நோகவைக்காதீங்க! அவனுக்கு எப்படி இருக்கணும்னு தெரியும். தம்பி, நீ நல்லபடியா சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பாருப்பா. இனிமே ஃபோன் பேச மறக்காதே! நீயும், உன் அண்ணனும் பேசுற நாள எதிர் பார்த்துட்டுதான், நான் தெம்பா நடமாட்டிட்டு இருக்கேன். அதை மனசுல வச்சுக்கோ தம்பி!” தங்கமணி, தன் அங்கலாய்ப்புகளை எல்லாம் இறக்கி வைத்து அலைபேசியை வைத்தார்.

தாயின் தவிப்பும் தந்தையின் அறிவுரையும் சரியான நேரத்தில் அசோக்கின் மூளையை சென்றடைய, தற்கொலை என்ற குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த மனது தெளிச்சி கொண்டது.

தனது எதிர்மறையான முடிவு, தன் குடும்பத்தாரையும் பாதிக்குமென்ற உண்மையை நன்றாக மனதிற்குள் பதித்து கொண்டவன், தனது தற்கொலை எண்ணத்தை அன்றே தூர எறிந்தான்.

அடுத்த கட்ட முயற்சியாக, தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், தன்னை இழிவாக பார்த்து சிரிக்கும் நண்பர்களின் மத்தியில் எவ்வாறு நிமிர்ந்து நிற்பது என்றும்  சிந்திக்க தொடங்கினான்.

தனது உடல் பலவீனமா அல்லது மனதின் பயமா, எது தன்னை அந்த பெண்ணிடம் இருந்து விலகச் செய்தது என்ற ஆராய்ச்சியில் இருந்தவனை, நண்பனொருவன் கண்டுகொண்டு, மீண்டும் முயற்சித்து பார்த்தால் தெரிந்து போய்விடுமென நம்பிக்கை வளர்த்தான்.

மிதமிஞ்சிய போதையில், பயத்தை புறந்தள்ளி காரியத்தை சாதிக்கலாமென்ற நண்பனின் அறிவுரைப்படி, மீண்டும் பெண்ணை நாடிச்சென்றான் அசோக்.

“போதையில, எந்த காரியத்தையும் சாதிக்கலாம், வீரனா மீசைய முறுக்கிட்டு நிக்கலாம்னு சொல்றதெல்லாம் அபத்தமானது. அப்படிபோன இருக்கிற கொஞ்சநஞ்ச தெளிவும் காணாமபோய், நம்மள அரக்கனாக்கிடுது.

தேவைக்கு அதிகமா குடிச்சா, மனசுக்குள்ள இருக்குற அவமானம், பயம், குழப்பம் எல்லாம் முன்னாடி வந்து தாண்டவமாடி நம்மை கொன்னுபோடுது!” என்று அமைதியான குரலில் கூறினான் அசோக்.

ஹிப்னாசிச முறையில், ஆழ்மன சிகிச்சையில் தனது மன அழுத்தங்களை எல்லாம் உளமருத்துவரிடம், கண்களை மூடிக்கொண்டு தன்னை மறந்து பகிர்ந்து கொண்டே இருந்தான் அசோக்.

இவன் சொல்வதை, வெளியில் இருந்து கேட்ட அனைவருக்கும் ஐயோ என்று அனுதாபப்படவும் முடியவில்லை, அதிகபிரசங்கி, தற்குறி என்று இவனிடத்தில் கோபம் கொள்ளவும் மனம் வரவில்லை.

“எப்படியும் என்னோட பலவீனத்தை மாத்தியே ஆகணும்ங்கிற வெறியிலதான், அன்னைக்கு அந்தமாதிரி பொண்ணை தேடிப்போனேன். ஆனா அப்பவும் என்னால… என்னால முடியல…

அந்த பொண்ணு ஆசையோட வந்து என்னை தொடும்போதே, அவளை அடிக்கிற அளவுக்கு இறங்கிட்டேன். பெண்களை ஆசையா பார்த்து, அவங்களோட சேரணும்னு உடம்பும் மனசும் துடிக்கிற நேரத்திலதான், என்மனசுல பயமும், அந்த ரத்தமுகமும் நினைப்புல வந்து, என்னை, நானே மறந்துபோற அளவுக்கு தடுமாறிப் போறேன்.

அதையும் மீறி, என்னை, தன்வசமாக்கிக்க எதிர்ல இருக்கிறவங்க முயற்சி எடுக்கும்போது, ஏதோ ஒரு ஆக்ரோஷம் வந்து, அவங்கள தாக்கணும்னு வெறி வருது“ என்று உணர்ச்சி பிழம்பாய் சொல்லி முடித்தவன் சற்றுநேரம் அமைதியாக இருந்தான்.

“சோ… உங்களால பெண்களோட பிசிகல்டச்ல இருக்க முடியல. பட், நீங்க பொண்ணுங்ககூட டேட்டிங் போறதா, கேர்ள் ஃபிரண்ட்ஸ்கூட அதிகம் சுத்துறதா கேள்விபட்டேனே? அது எப்படி!” மருத்துவர், அசோக்கின் மனதில் உள்ளதை முழுமையாக வெளியே கொண்டுவர மேலும் கேட்டார்.

“எஸ்… என் பலவீனத்தை மறைக்க, நான் வேஷம் போட ஆரம்பிச்சேன். மத்தவங்களோட கேவலமான பார்வையில இருந்து தப்பிக்க, என்னை நானே மாத்திக்கிட்டேன்.

ஏற்கனவே பழக்கமாகி இருந்த ஸ்மோகிங், ட்ரிங்க்ஸ் எடுக்குற பெண்களோட மட்டுமே ஃப்ரண்ட்ஸ்ஷிப், டேட்டிங் கண்டினியூ பண்ணேன். ஓவரா ஊத்திக் கொடுத்து அவங்கள  மட்டையாக்கிடுவேன்!” என்று சொல்லி, கண்களை மூடியவாறு கிளுக்கிச் சிரித்தான் அசோக்.

“என்னோட வந்த பொண்ணு தெளிஞ்ச பிறகு, நீ ரொம்ப நல்லா கம்பெனி குடுத்த, சோ ஸ்வீட்னு கொஞ்சிப் பேசி, அவங்கள அனுப்பி வச்சுடுவேன்.

டூ ஆர் த்ரீ டைம்ஸ் இப்படியே கண்டினியூ பண்ணேன். அடுத்த கொஞ்சநாள்ல கேர்ள்ஸ் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அசோக் வாஸ் சோ இம்ப்ரசிவ்(impressive) அண்ட் கிளாசி மேன்(classy men). அவன்கூட இருந்தா நம்மள மறக்க வைப்பான்! இப்படி ஃபிரண்ட்ஸ் சர்க்கிள்ல சொன்னதும் என்னை கேவலமா பார்த்தவங்க எல்லாம், என்னை ஆச்சரியமா பார்க்க ஆரம்பிச்சாங்க.

என்கூட பழகுறவங்களுக்கு நெறைய ஊத்திக் கொடுத்தே, என்னை நான் கண்ட்ரோல்ல வச்சுகிட்டேன். எனக்கான லிமிட் மீறும் போதுதான், என்னை, நான் மறந்து போறேன். அத மனசுல வச்சுட்டுதான் ஒவ்வொரு நாளையும் கடத்துவேன்.

வெளியுலகத்தோட பார்வையில நான் ரொம்ப கெட்டவன். இஷ்டத்துக்கு பெண்களோட சுத்துறவன், மோசமானவன்ங்கிற கீழ்த்தரமான பேருதான் கிடைச்சது.

உன்னால முடியாது, நீ ஆம்பள இல்லன்னு இகழ்ச்சியா, கேவலமா பார்க்கிறப்போ உண்டான வலியவிட, என்னை ஒழுக்கம் கெட்டவனா பார்த்தவலி, அவ்வளவு பெரிசா என்னை பாதிக்கல!

அப்படியே தொடரட்டும்னு விட்டுட்டேன். வெளிநாட்டுல போட்ட வேசத்தை இங்கேயும் வந்து கண்டினியூ பண்ணேன். அப்பதான் கல்யாணம், குடும்பம்னு சொல்லி என்னை இம்சை பண்ண மாட்டாங்கணு நினைச்சேன். பட் எல்லாமே தலைகீழா போச்சு!” என்று தூக்கத்தில் உதட்டைப் பிதுக்கினான் அசோக்.

“ஃபிரண்ட்ஸ்கிட்ட சொல்ல முடியல, ஓகே! ஆனா, வீட்டுல உங்க அம்மா அல்லது அப்பாகிட்ட ஷேர் பண்ணியிருக்கலாமே அசோக்? ஏன் அதை செய்யல?” என்ற மருத்துவர், அவனது ஆழ்மனதிடம் கேள்விகளை தொடர்ந்தார்.

“எப்படி சொல்றது? தன்னோட மகன் ஒருமுழுமையான ஆண்மகனா இருக்க தகுதியில்லாதவன்னு பெத்தவங்களுக்கு தெரிஞ்சா, அந்த வேதனை அவங்க வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வருமே?

அதுவுமில்லாம ஏதோ ஒரு வேகத்துல, பேச்சுவாக்குல அவங்க வெளியே சொல்லிட்டா, மறுபடியும் தலைகுனிஞ்சு அவமானப்படுறது நானாதான் இருப்பேன்.

ஒரு பெண்ணை மலடி, குடும்ப வாழ்க்கைக்கு அவளால ஒத்துழைக்க முடியாதுனு தெரியுறப்போ, பாவமா பார்க்குற உலகம், ஒருஆண் தன்னோட ஆண்மைய இழந்துட்டு நிக்கிறான்னு தெரிய வரும்போது, கேலிப்பொருளா நையாண்டியா பார்த்து சிரிக்கிது.

இந்த அவமானம் எந்த தேசத்துக்கு போனாலும் தொடருது. அதான் என்னோட சேர்ந்த எல்லாத்தையும் நான் வெளியே சொல்லாம, எனக்குள்ளயே போட்டு புதைச்சுகிட்டேன்” என்றவனின் குரலில் மிதமிஞ்சிய வெறுமையும் வேதனையுமே தென்பட்டன.

“ரிலாக்ஸ் அசோக்! உங்க திருமண வாழ்க்கைக்கு வருவோம். காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட நீங்க, எதுக்காக உங்க மனைவிய விட்டு பிரிய நினைக்கிறீங்க? இது அவங்கள ஏமாத்துறதா தோணலையா உங்களுக்கு?” என்று மருத்துவர் ஆழ்ந்த குரலில் கேட்க,

“நான் வைஷாலிய லவ் பண்ணவே இல்ல…” தடாலடியாக மிகப்பெரிய குண்டை போட்டு அனைவரையும் அதிர்க்சியடைய செய்தான் அசோக்.