இனிய தென்றலே – 17

இனிய தென்றலே – 17

தென்றல் – 17

அன்பு கொண்ட கண்களும்

ஆசை கொண்ட நெஞ்சமும்

ஆணையிட்டு மாறுமோ…

பெண்மை தாங்குமோ…

வாழ்க்கை மீதான பிடிப்பும் ஈடுபாடும் அசோக் கிருஷ்ணாவின் மௌனத்தை, தயக்கத்தை தகர்த்தெறிந்து கொண்டிருந்தது. வாரம் ஒன்று கடந்துவிட்ட நிலையில் அடுத்தடுத்த அமர்வுகளாக நடந்த மருத்துவ ஆலோசனை, அவனை மொத்தமாக புரட்டி போட்டது என்றே சொல்லலாம்.

மேலும்மேலும் பேச வைத்தே, மெதுமெதுவாக அவன் மனதில் உள்ள பயத்தையும் குற்றவுணர்வையும் வெற்றிடமாக்கினார் மருத்துவர். அவனது நாட்கள் முழுவதும் மனைவியின் அருகாமையில் கழிய, இருவரின் மனமும் அமைதியை தத்தெடுத்திருந்தது.

எந்த கேள்வியும் கேட்காமல் பெற்றோர் அவனை ஏற்றுக் கொண்டதில் அசோக் நெக்குருகிப் போனான். இத்தனை நாட்கள் மறைத்த நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கிய பிறகும், யாரும் தன்னை கடிந்து கொள்ளாததே மனதை பிசைந்தது.

“சாரிப்பா! வெளியே சொல்ல முடியாத என்னோட நிலைமை, ஏதோ ஒருவேகத்துல தடம் மாறிப் போயிட்டேன்” அசோக், தந்தையிடம் மன்னிப்பை வேண்ட,

“தப்பு எங்க மேலயும் இருக்கு அசோக்! நீ அமைதியா இருக்கேன்னு, நாங்களும் அலட்சியமா விட்டுருக்க கூடாது. எங்களோட கவனக்குறைவுதான் உன்னோட பின்னடைவுக்கே அடிதளமா போச்சு. இனியும் இதபத்தி யோசிக்க வேணாம்” ராமகிருஷ்ணனும் சமாதானம் சொல்ல, ஒருவழியாக அமைதியானான்.

கணவனின் அன்பை முழுதாய் உணர்ந்த வைஷாலி, அவனை பார்த்து உருகிக் கரையாமல் அவனை கண்ணில் வைத்து கவனிப்பதிலேயே தன்னை பிணைத்துக் கொண்டாள். அதிகப்படியான பேச்சுகள், செய்கைகள் என எதுவும் அவனை தாக்காத வண்ணம், மிகக் கவனமாக அவனை கையாண்டாள்.

ஒருவழியாக அவனது சிகிச்சைகள் முடிந்து, இறுதியான ஆலோசனைக்கென மருத்துவரிடம் குடும்பம் மொத்தமுமே அமர்ந்திருந்தனர்.

“மிஸ்டர்.அசோக்! உங்களுக்கு ரொம்ப மென்மையான மனசு. பொதுவா இந்தமாதிரி சாஃப்ட் நேச்சர் பெண்களுக்குதான் அதிகம் இருக்கும். அவங்களும், தங்களோட அழுகையில, மனபாரங்களை இறக்கி வச்சுடுவாங்க. உங்களோட ஆண்சுபாவம் அதை செய்யவிடாம தடுத்ததால வந்த கஷ்டம்தான் இதெல்லாம்.

பொதுவா ஒரு விஷயத்தை நல்லவிதமா பார்க்கும்போது சந்தோசத்தை கொடுக்குது. அதுவே பிடிக்காம பார்க்கும்போது பயம், வெறுப்புன்னு அழுத்தமா மனசுல பதிஞ்சு போயிடுது.

அதோட உங்க சாஃப்ட்வேர் வேலை, அதுல இருக்குற டென்ஷன், கோடிங் எரர், ப்ராஜெக்ட் டாஸ்க்னு நீளும்போது, எதையும் இறக்கி வைக்க உங்களுக்கு அவகாசமில்லாம போயிடுது.

இதெல்லாம்தான் உங்களோட ஸ்ட்ரெஸ்க்கு காரணம். நல்லா ரிலாக்ஸ்டா இருங்க. வாழ்க்கையில எது வந்தாலும் பொறுமையா கடந்துபோக பாருங்க அதுவே போதும்.

இதுவரை உங்களோட மனஅழுத்தத்தை குறைக்க மட்டுமே கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. இதுக்கு பிறகான நார்மல் லைஃப்க்கு நீங்கதான் முயற்சி எடுக்கணும். மைண்ட் ரிலாக்ஸ் பண்ண டாப்லேட் ரெஃபர் பண்றேன். கொஞ்சநாள் ஃபாலோ பண்ணுங்க. விஷ்ஷிங் யூ எ லைஃப் டைம் ஆஃப் லவ் அண்ட் ஹாப்பினஸ்(wishing you a lifetime of love and happiness)” என்று வாழ்த்தி விடைகொடுத்தார்.

வீட்டிற்கு வந்தபிறகு தன்நிலை மேம்படுத்தும் பயிற்சிகளை கேட்டறிந்து யோகா, தியானம் மற்றும் பிரணாயாமம் பயிற்சிக்கு சென்றுவர ராமகிருஷ்ணன் உத்தரவிட, அதிகாலை வகுப்பில் சேர்ந்து, தன்முனைப்போடு சென்றுவரத் தொடங்கினான்.

வீட்டில் இவனுக்காக உணவுமுறையிலும் மாற்றங்களை கொண்டுவரத் தொடங்கினர். ஆரஞ்சுபழம், பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் தினமும் உணவில் இடம்பெற்றன.

அஸ்வகந்தா ஆயுர்வேத மருந்தும் தினமும் எடுத்துக் கொண்டுவர, பத்து நாட்களில் அலோபதி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்தியிருந்தான் அசோக். இரவு நேரத்தில் டீப் ஹீலிங் மெடிடேசன் என்ற இசையும் அவனது மனதை அமைதிபடுத்த தொடங்கின.

வீட்டில் ஓய்வாக இருந்த நாட்களில் உணவுநேரம் மட்டுமல்லாமல், மீதி நேரங்களிலும் பெற்றோர் மற்றும் மனைவியுடன் சிரித்துப் பேசத் தொடங்கினான்.

மனைவியாக அவனது தேவைகளை கவனித்து செய்தாள் வைஷாலி. இவனும் முகத்தை பார்த்து ஏற்றுக் கொண்டானே தவிர வேறெதுவும் சொல்லவில்லை. தனிமையான நேரங்களை மறந்தும்கூட இருவரும் ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கவில்லை.

இருவருக்கும் இடையேயான இயல்பான அன்பு, சற்று பலமாகவே கண்ணாமூச்சி ஆடியது. வார்த்தைகளால் வேதனைகளை வேரறுக்க முடியுமென்றால் அந்த முயற்சிக்கும் தடை நின்று தாண்டமாடியது. 

தனது எண்ணங்களில் மனைவியை மீட்டிக் கொண்டு, நேரத்தை பொறுமைக்கு விரயமாக்கி மௌனியாக வலம் வந்தான் அசோக். மனைவியை அருகினில் அமரவைத்து பேச ஆசைபடும் மனம், தன்னையும் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என அஞ்சியே தனக்குள் வேலி போட்டுக் கொண்டான்.

வைஷாலியும் காரணமில்லாமல் கணவனருகே செல்ல விரும்பவில்லை. அவன் போக்கில் சிறிது நாட்கள் விட்டுப் பிடிப்போம் என்ற முடிவில் நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள்.

தினப்படி ஒருசிகரெட்டை குறைத்துக் கொள்ளவேண்டும் என்ற குடும்பத்தாரின் கண்டிப்பில் அவனது புகைப் பழக்கமும் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. மதுவையும் மருந்தாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட, அதை நிறுத்த பெரும் முயற்சியெடுக்கத் தொடங்கியிருந்தான்.

நீண்ட இருபதுநாள் விடுப்பு முடிந்து, சரியாக அசோக் அலுவலகம் புறப்படும் நாளன்று, பலவிதமான சாக்லேட்டுகள், கடலைமிட்டாய், தேன்மிட்டாய், எள்ளுருண்டை பாக்கெட்டுக்களை கலந்து, அவனிடம் வைத்தாள் வைஷாலி.

“இவ்வளவு சாக்லேட்ஸ் சாப்பிடுவியா நீ? அதான் உன் கன்னம் ரெண்டும் நல்லா பஞ்சு மிட்டாயா இருக்கா?” ஆர்வத்தில் மனைவியின் கன்னத்தைதொட வர, அவன் கையை பிடித்து கீழே போட்டவள்,

“இதெல்லாம் உங்களுக்குதான்! ஆபீஸ் போகும்போது பேக்ல போட்டுட்டு போங்க!”

“நான் என்ன கிண்டர் கார்டனுக்கா போறேன்? கேஜி பிள்ளையா ட்ரீட் பண்ணாதே ஷா!” முகத்தை சுருக்கினான் அசோக்

“விளையாட்டு இல்ல, நெஜமாவே கொண்டு போங்க… ஸ்மோக் பண்ணனும்னு தோணுற நேரத்துல, இந்த சாக்லேட்ல ஒன்னு எடுத்து வாயில போட்டுக்கோங்க… அப்படியும் அந்த நினைப்பு போகலன்னா, உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட பேசுங்க அல்லது பிடிச்ச விசயத்த செய்யுங்க!” உத்தரவாக வைஷாலி சொல்ல,

“இதெல்லாம் வெறும் ஹம்பக்டா! அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது”

“மறக்கணும்ங்கிற முடிவுல நீங்க இருக்கீங்கதானே! அப்போ தாராளமா மிட்டாய வாயில போட்டுட்டு, மறக்கணும்னு மனசுல உரு போட்டுட்டே இருங்க! இல்லைன்னா நான் சொன்ன மாதிரி பிடிச்ச விசயத்த செய்யுங்க!” கண்டிப்பும் கறாருமாய் சொல்லிவிட்டாள்.

“எனக்கான, உன்னோட முயற்சி வீணா போகக்கூடாது. அதுக்காவே செய்யுறேன்டா. இப்போ நான் ஆபீஸ் கிளம்பலாமா மேடம்?”

“ஈவ்னிங் சீக்கிரம் வாங்க! ரெண்டு பேரும் சேர்ந்து சிங்காரச் சென்னையை ரவுண்ட் அடிப்போம்”

“இதப்பாருடா! இன்னும் என்னென்ன செய்யப்போற?”

“எல்லாம் என்னோட சுயநலம்தான்! நீங்க சரக்கு பக்கம் போகாம இருக்க, நானும் உங்ககூட ஊர் சுத்த போறேன். உங்களை வீட்டுக்குள்ளயே கட்டிப்போட்டு வெறுப்பேத்த விரும்பல.

உங்க இஷ்டப்படி வெளியே டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. அந்த டைம்ல உங்களுக்கு கம்பெனி கொடுக்குறதா டிசைட் பண்ணிட்டேன். அதையும் மீறி விஸ்கி, ரம், கேர்ள்ஃப்ரண்ட்னு போனீங்க, அன்னபூரணி பேத்தி களத்தில குதிச்சுடுவா, ஆமா!” கண்களை உருட்டி, ஆள்காட்டி விரலால் மிரட்ட, மனைவியின் பாவனையில் சொக்கிப் போனான் அசோக்.

“சோ ஸ்வீட் டா நீ!” என்று சிலாகித்தவன்,

“ஆனா, அவ்வளவு ஈசியா எல்லாம் மாறிடும்னு நீ நம்புறியா ஷா?” அலுப்புடன் கேட்க,

“உங்கமேல, நீங்க நம்பிக்கை வைங்க ஏகே! அதுலயே பாதிக்குபாதி வெளியே வந்துடலாம். மீதி நம்ம ஹாபிட்ஸ்ல மாத்திகிட்டா போதும், ப்ராப்ளம் சால்வ்டு! ரொம்ப அடிக்ட் ஆகி, அதுலேயே மூழ்கிப் போனவங்கள ரெகவர் பண்றதுதான் கஷ்டம்.”

“என் வொய்ஃப் அல்டிமேட் டாலெண்ட்தான் போ! இதெல்லாம் யார் சொன்னா உனக்கு?”

“கூகுள் ஆண்டவர் இருக்க பயமேன்! ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து மூஞ்சி புக்ல குருப் கிரியேட் பண்ணி, மெம்பர்ஸ் டிஸ்கஷன்ல ஒவ்வொருநாள் ஒவ்வொரு டாபிக் அனலைஸ் பண்ணதுல கொஞ்சம் பிடிபட்டு போச்சு! ஃபர்ஸ்ட் இத ட்ரை பண்ணுங்க! முடியலன்னா கவுன்சிலிங் போயிடுவோம் ஏகே!”

“நோ… நோ ஷாலி! திரும்ப ஒரு இடத்துல போய் பொம்மையா உட்கார என்னால முடியாது. இப்போ என்ன? நான் இந்த பழக்கத்தை விட்டொழிக்க, இந்த சாக்கீஸ் சாப்பிடணும், அவ்ளோதானே! விடு செய்றேன்” என்று அலறியபடியே கிளம்பினான்.

அசோக் கிளம்பிச் சென்ற ஒருமணிநேரம் கழித்து, அடுத்த ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் வைஷாலிக்கு கணவனின் அழைப்பு வந்த வண்ணம் இருந்தது.

தேவையில்லாத விசயங்களை பேசிப்பேசியே அன்றைய நாளினை கரைத்துக் கொண்டிருந்தான் அசோக்.

“எதுக்கு இப்படி ஃபோன் பேசி கடுப்பேத்துறீங்க ஏகே?”

“தம் அடிக்கிற நினைப்பு வரும் போதெல்லாம் பிடிச்சவங்ககூட பேச சொல்லி நீதானேடா சொன்ன?”

“அதுக்காக இப்படியா? நீங்க கால் பண்ணறத கணக்கு பார்த்தா நாலு பாக்கெட் சிகரெட் வருது ஏகே? பொய் சொல்லியிருக்கீங்க பிகே!”

“வெயிட், வெயிட்… என்ன குழப்பம் உனக்கு? நேத்துல இருந்து ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வோரு பேர் வச்சு கூப்பிடுற… பி‌கே, வி‌கேன்னு சொல்ற, உன்னோட அகி என்ன ஆச்சு? ஐ லவ் தட் நேம்!” சிலிர்த்து, நீளமாக கேள்விகள் கேட்டு மனைவியை வாயடைக்க வைத்தான் அசோக்.

நெடுநாட்களுக்கு பிறகு மனைவியுடன் மடைதிறந்து பேச்சு இன்றுதான். அவளின் மேலுள்ள ஆர்வத்தில், தன்னையுமறியாமல் அவன் கேட்டுவிட, மகிழ்ச்சியாய் அதிர்ந்து போனாள் வைஷாலி

“வாவ்! நீங்க இப்படி பேசி எத்தனை நாளாச்சு தெரியுமா? நீங்க மறந்து போயிட்டீங்கணு நினைச்சேன்” விழிவிரித்து சிரித்தவள் விடாமல்,

“ஹி இஸ் மை லவ்வர்பாய்… அவன் எங்கயோ காணாம போயிட்டான். திரும்பி வரட்டும் கூப்பிடுறேன்!” கேலியுடன் அடக்கி வைத்திருந்த தனது இயல்பான பேச்சையும் வெளியில் கொண்டு வந்தாள்.

“தொலைஞ்சு போனவன எப்படி தேடப் போற?”

“தொலஞ்சு போனவனுக்கு வரத் தெரியும் ஏகே!”

“சரி… இந்த ஏகேக்கு விளக்கம் சொல்லுங்க மேடம்!” அசோக் தன்னிலையிலேயே நிற்க,

“அது, அது…” என இழுத்து, “சொல்லிடுவேன், பட் நோ கோபம், நோ கடுப்பு, டீல்!” அலைபேசியில் ஒப்பந்தம் பேச,

“கஷ்டம்டா சாமி!” என்று சலித்தவன் “ஒகே டீல்!”

“குட் பாய்! ஏகே – அசட்டு கிருஷ்ணா, அடம்பிடிக்கிற கிருஷ்ணா”

“விகே – வீம்பு கிருஷ்ணா”

“பிகே – பிடிவாத கிருஷ்ணா”

“எஸ்‌கே – சொதப்புற கிருஷ்ணா”

“கேகே – குழப்புர கிருஷ்ணா” என்றிவள் அடுக்கிக்கொண்டே போக,

“போதுமா ஷா? விட்டா 108 ஸ்தோத்திரம் எழுதிடுவ போல!” என கேட்டு இப்பக்கம் இவனும் முகத்தை சுருக்கிக்கொள்ள,

“ஹலோ! நீங்க எல்லாம் அவ்ளோ வொர்த் கிடையாது. கிண்டல் பண்றேன்… அதுக்கு கோபப்படமா ஸ்தோத்திரம், ஜெபம்னு மொக்கை போடுறீங்க, ஏகே!”

“கோபப்படக் கூடாதுன்னு நீதானே சொன்ன…”

“நான் சொன்னா அப்படியே கேட்டுடுவீங்களா பாஸ்?”

“அததானே செஞ்சுட்டு இருக்கேன். இப்ப எல்லாம் உன்னை, அம்மா அப்பாவ தாண்டி, எதுவும் நெனைக்கத் தோணல ஷா!” உணர்வுபூர்வமாய் சொல்ல,

“கூல் அசோக்… எமோஷனல் ஆகாதீங்க!” பதட்டத்துடன் கணவன் பேச்சை தடைசெய்தாள் வைஷாலி.

“பயப்படாதே ஷாலி! இப்போ கொஞ்சம் நார்மலுக்கு வந்துட்டேன்னு நெனைக்கிறேன். மார்னிங் கிளாஸ், டாப்லெட்ஸ், ஃபுட் சார்ட் அண்ட் நிறைய ரெஸ்ட் எல்லாமே கீப்-அப் பண்ணறேன். அதோட எஃபக்ட்ல கூடிய சீக்கிரம் நார்மல் ஆகிடுவேன்டா…” இலகுவாய் சொல்லி பேச்சை முடித்தான்.

மாலையில் மனைவியின் ஆசைபடியே அவளை அழைத்துகொண்டு வழக்கமாய் அவன் செல்லும் மாலுக்கு சென்றான். ஷாப்பிங் முடித்து விட்டு உணவு உண்ண இருவரும் எதிரெதிராக அமர்ந்திருக்கும் வேளையில், அசோக்கின் தோழியொருத்தி, அவர்களை எதிர்பாராத விதமாக சந்தித்து,

“ஹேய் ஹவ் ஆர் யூ மேன்? மேரேஜ் முடிஞ்சதும் இப்படியா காணாம போவ?” கேட்டவாறே, அசோக்கின் தோளில் கை போட்டபடியே, அவன் அருகில் வந்தமர்ந்தாள்.

“வாட் எ சர்பிரைஸ் ரித்து! கமான், ஜாயின் வித் அஸ்!” இவனும் சலிக்காத உற்சாகத்துடன் அவளை வரவேற்று பேசத் தொடங்கினான்.

அந்த பெண் ஆர்பாட்டமாய் அழைத்து, உரிமையாக கை போட்ட நேரத்திலேயே, அவளை கடுகாய் தாளிக்கத் தொடங்கியிருந்தாள் வைஷாலி. 

அவளின் கொதிநிலையை மேலும் அதிகரிக்க வைப்பதுபோல் கணவனின் அருகில் அமர்ந்து பேச, அவனும் வந்தவளுடன் கைகோர்த்துக் கொள்ள, வைஷாலியின் மனம் கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டது.

இருவரும் அவளைப் பற்றிய எந்த நினைவும் இல்லாமல், பேச்சை தொடர,

“என்னை இன்ட்ரடியூஸ் பண்ண மாட்டியா அசு?” ரித்து, அசோக்கிடம் கேட்க,

“வொய் நாட்? ஷாலி, சி இஸ் ரித்து! மை ஃப்ரெண்ட்” என்று அசோக் சொல்லும் போதுதான் மனைவியின் பார்வைக் கடுப்பை கண்டுகொண்டு சட்டென்று பேச்சை நிறுத்தினான்.

“ரொம்ப திக் ஃப்ரெண்ட்ன்னு சொல்லு அசு! அப்போதான் நாம எந்த அளவுக்கு குளோஸ்ன்னு அவங்களுக்கு தெரியும்” கண்ணடித்து சொன்ன ரித்து, வைஷாலியை பார்த்து,

“அசு, எப்பவும் எனக்கு ஸ்பெஷல்தான்! சரியான சாதுப்பசு… இவன்கூட வெளியே போனா, நான் அவ்வளவு ஹாப்பியா பீல் பண்ணுவேன்!” மேலும் வைஷாலிக்கு சூடேற்றிக் கொண்டிருந்தாள்.

“இப்பவும் அப்படிதானா? இல்ல உனக்கு மட்டும் ஸ்பெஷல் அப்பியரன்ஸா?” மேலும் காதுகூச வைக்கும் கேள்விகளை கேட்டு இருவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள் ரித்து.

எக்குதப்பாக மாட்டிக் கொண்டு முழித்தே, சிரித்து வைத்தான் அசோக். முதன்முதலாக மனைவியுடன் வெளியே வந்த நேரம் பெரும் சொதப்பலுடன் கடந்து கொண்டிருக்க, நல்ல வேலையாக ரித்துவின் அலைபேசியில் அழைப்பு வந்து அங்கிருந்து அகன்றாள்

“சாரிடா, ரியலி வெரி சாரி! இவ இப்படி வந்து வாந்தி எடுப்பானு நான் எதிர்பார்க்கல ஷா!”

“ஒழுங்கா பழகியிருந்தா, வந்தவளும் வாழ்த்திட்டு போயிருப்பா..! நம்ம லட்சணம்தான் ஊரறிஞ்ச விஷயமாச்சே! பின்ன ஏன் கவலை படுறீங்க?” வைஷாலி பல்லைக் கடிக்கும் நேரத்தில், ஆர்டர் செய்திருந்த கட்லெட்டும் சூப்பும் வந்து சேர்ந்தது.

கனன்று கொண்டிருந்த கோபத்தில் மேஜையில் நிறைந்து இருந்ததை கைகளால் சீண்டாமல், முகத்தை திருப்பிக் கொண்டாள் வைஷாலி.

மனைவியின் கோபத்தை தணிக்க முடியாமல், தானும் எடுத்துக் கொள்வதற்கு தயங்கியே பார்த்தான் அசோக்.

“வெளியிடத்துல முறைக்காதடா! வீட்டுக்கு போய் சண்டை போடுவீயாம்… இப்போ சாப்பிடு!” சமாதானப்படுத்தி அவள் முன்பு தட்டை நகர்த்த, இவள் தொடவில்லை.

கோபமலையை தற்சமயம் இவள் இறக்க மாட்டாள் என்று அனுமானித்த அசோக், தானாகவே கட்லெட்டை போர்க்கில் வெட்டி, ஊட்டிவிட அருகில் கொண்டு சென்றான். அவள் நெளிந்தபடியே முகத்தை சுருக்கி கொண்டு,

“கையால ஊட்டி விட்டு உங்க பாசத்தை காமிக்கணும் ஏகே!. அநியாயமா, ஒரு கட்லெட்டுக்கு கத்தி குத்து நடத்தி, உங்க பிரியத்த ஸ்க்ரீன் பண்ணக்கூடாது” வீம்பாக முறுக்கிக் கொண்டு சொன்னதில், இருக்கும் இடம் மறந்து பெரிதாய் சிரித்தான் அசோக்.

“வீட்டுக்கு போயி உன் ஆசைய நிறைவேத்துறேன்டா” என்றவன் ஸ்பூனில் இருந்ததை ஊட்ட, அவளும் பெரிய மனதுடன் வாங்கிக் கொள்ள,

“பெர்ஃபெக்ட் ஷாட்… லவ்லி கப்பில்!” கமெண்டரி கொடுத்து, கைதட்டியபடியே வந்த ரித்து, தன்அலைபேசியில் எடுத்த படத்தை காண்பித்தாள்.

அதனை கண்கொட்டாமல் பார்த்த இருவருக்கும் ஒருசேர வெட்கம் வந்துவிட, அந்த காட்சியும் அழகான புகைப்படமானது.

மேலும் அரைமணிநேரம் பேசி, இருவரின் மனதிலும் அவஸ்தையை ஏற்றிவிட்டே சென்றாள் ரித்து. அதே நினைவுடன் வந்த வைஷாலி, வீட்டிற்கு வந்தும், கோபவிரதத்தை தீவிரமாய் கடைபிடிக்க ஆரம்பித்தாள். 

“சாரிடா! இனிமே பீச்சுக்கு போவோம், மால் எல்லாம் வேண்டாம்”

“இப்படி சாரி சொல்லியே உங்க வாழ்நாள் முழுக்க போகப்போகுது ஏகே!”

“நான் இப்படிதான்னு தெரிஞ்சும் நீ, கோபப்படுறதுதான் அபத்தமா இருக்கு. கொஞ்சநாள் இதையெல்லாம் பேஸ் பண்ணியே ஆகணும் ஷாலி! எல்லாத்துக்கும் சண்டைபோட ஆரம்பிக்காதே!” அசோக் நிதர்சனத்தை எடுத்துக்கூற, 

“என்னால இதையெல்லாம் அனுமதிக்க முடியாதுங்க! உங்களை மாதிரி கைம்மாறு இல்லாத பேரன்பு எல்லாம் எனக்கு உங்கமேல இல்ல…

நான், உங்கள லவ் பண்றேன்! மனைவியா என்னோட உரிமைய விட்டுக் கொடுக்க மாட்டேன். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில எது வந்தாலும், அத நாம அவாய்ட் பண்ணப் பார்க்கணும். அப்படி இல்லைன்னா நான் சண்டை போடத்தான் செய்வேன்!” வைஷாலி தன்பொருமலை வெளியே கொட்ட ஆரம்பிக்க,  

“அவளா வந்து பேசினாலும் முகத்தை திருப்பிக்க சொல்றியா?”

“நீங்க, என் பக்கத்துல உட்கார்ந்திருந்தா அவளும் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணியிருப்பா… நீங்கதான் விவேகானந்தருக்கு போட்டியா என்னை தள்ளியே வச்சு பார்த்தா, இப்படிதான்… போற இடத்தில எல்லாம் வீணாப் போன வினை எல்லாம் வந்து சேரும்!” கணவனின் விலகலை சுட்டிக் காட்டிவிட, பதில் சொல்ல முடியாமல் தவித்தான் அசோக்.

“நீங்க எனக்கு பிடிச்ச மாதிரி இருந்தா மட்டுமே, என்னாலயும் சந்தோசமா சிரிக்க முடியும் ஏகே!. உங்கள மாதிரி கொடுக்க மட்டுமே தெரிஞ்ச அன்பெல்லாம் எனக்கில்ல… கிவ் அண்ட் டேக் பாலிசிதான் என்கிட்ட..!” சூடானா மசலா பாப்கார்னாக வெடித்து விட்டாள் வைஷாலி.

“போதும்டா! இனிமே, யார் வந்து முட்டுனாலும் யார் நீன்னு கேக்குறேன்! மலையிறங்கு தாயே!” இவனும் வேறு வழியில்லாமல் சரணடைய,

“நீங்க பாறையா இருக்குறதுமில்லாம என்னையும் கல்லா மாத்த முயற்சி பண்ணாதீங்க! வெடிச்சா சேதாரம் உங்களுக்குதான் வரும் எனக்கில்ல…” தன்கடுப்பை எல்லாம் கொட்டிவிட்டு உறங்கச் சென்றாள்.  

மனைவியின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்தவன், எதிர்பேச்சு பேசாமல் அவனுமே உறங்கிப் போனான். ஒரே கட்டில்தான் இருவருக்கும். எந்தவொரு தடுப்பும் இல்லாமலேயே தனிப் பெருஞ்சுவரை மனதிற்குள் கட்டி, கட்டிலின் விளிம்பிற்கு சென்று படுத்துக் கொள்வான் அசோக்.

தாராளமாக படுத்துகொள் என வைஷாலி சொன்னாலும் அவன் கேட்பதில்லை. அதற்குமேல் வற்புறுத்த பெண்ணாகிய அவளுக்கும் கூச்சம் வந்து தடுப்பணை போட்டுவிட, கட்டிலின் விளிம்புகளே இருவரின் இரவையும் களவாடிக் கொண்டது.

மறுநாள் அதிகாலையில் பேத்தியை காண அன்னபூரணி பாட்டி வந்து சேர,

“இந்த முறையாவது என்கிட்ட சொல்லிட்டு போவியா? இல்ல அஸ் யூசுவல் எஸ்கேபிசம் தானா?” நக்கலுடன் கேட்டு அடுத்த சண்டைக்கு வழிவகுத்தான் அசோக்.

 

விழியில் பூக்கும் நேசமாய்

புனிதமான பந்தமாய்

பேசும் இந்த பாசமே

இங்கு வெற்றி கொள்ளுமே

இளங்கன்னி உன்னுடன் கூட வா வா!

**************************

 

ஆரஞ்சு பழம்:

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கார்டிசோல் எனப்படும் மனஅழுத்த ஹார்மோன்களை குறைக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது.

பச்சை இலை காய்கறிகள்:

கீரைகளில் உள்ள பி-வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் மனஅழுத்தத்தின் விளைவுகளை குறைக்க உதவும். உண்மையில் மெக்னீசியம் இல்லாதது தலைவலி, சோர்வு மற்றும் மனஅழுத்தத்தின் விளைவுகளைத் தூண்டும்.

அஸ்வகந்தா:

இது ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். நெய்யில் ஒரு அவுன்ஸ் அஸ்வகந்த தூளை எடுத்து சிறிது சர்க்கரை, தேன், வெல்லம், தேங்காய் இவற்றில் ஏதாவது இனிப்பு சுவையை சேர்த்துக் கொள்ளவும். காலை உணவுக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு அல்லது பகலில் ஒருகப் பாலுடன் சாப்பிட்டு வரலாம். இரவில் அஸ்வகந்தாவை உட்கொள்வது மிகச் சிறந்தது. இது தூக்கத்தை தூண்ட உதவும். காலையில் மனஅழுத்தத்தின் அளவைக் குறைப்பதற்கும் சிறந்த முறையில் செயல்படுகிறது.

யோகாசனம்:

தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெறும். இதனால் மனஅழுத்தம் கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது. யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் பொழுது, மனமானது சாந்தமாகி பின்னர் அமைதி அடையும்.

தியானம்:

கவலையும் அழுத்தங்களும், செயற்கையாக நாம் கற்றுக் கொண்ட பழக்கதோஷங்களும் உள்ளடங்கிய மனதை, இயல்பாக அதன் ஆரோக்கியமான அமைதி நிலைக்கு நிரந்தரமாக எடுத்துச் செல்லும் நிலையே தியானம்.

பிராணயாமம்:

இது ஒரு யோக வழிமுறையாகும். பிராணனை ஒழுங்குபடுத்துதல் என்று இதற்கு பொருள். நாம் உள்வாங்கி வெளிவிடும் மூச்சை, விழிப்புணர்வோடு நெறிப்படுத்துவதே பிரணாயாமம் எனப்படும்.

மூச்சை நம் விருப்பப்படி விடுவதும், வேண்டுமென்றால் நிறுத்திக் கொள்வதுவுமான ஒரு யோக விழிப்புணர்வு நிலையை இந்த பிரணாயாமம் தருகிறது.

எட்டு வகையான ப்ரணாயாமங்கள் உள்ளன. எல்லாவற்றையும் முழுவதுவாக செய்து முடிக்க 45 நிமிடங்கள் ஆகும்.

தியானம் மற்றும் பிராணாயமம் செய்வதினால் கிடைக்கும் பலன்கள்:

மனஅமைதி கிடைக்கும், படபடப்பு குறையும், நினைவாற்றல் அதிகரிக்கும், நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும், வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும், ரத்த அழுத்தம் குறையும், ஆஸ்துமா குறையும், ஆயுள் அதிகரிக்கும். இப்படி பட்டியல் சொல்லிக் கொண்டே போகலாம். 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!