இனிய தென்றலே – 18

இனிய தென்றலே – 18

தென்றல் – 18

அன்னபூரணி பாட்டியின் நினைவெல்லாம் ஆருயிர் பேத்தி வைஷாலி மட்டுமே… மறுவீட்டு விருந்திற்கு கணவனுடன் வருகிறேன் என்று சென்றவள், ஒருமாதம் முடிந்தும் வராமல்போக, பெரியவருக்கு சொல்லத் தெரியாத பயம் வந்து மனதை கவ்விக் கொண்டது.

தொலைபேசியில் பட்டும்படாமல் நாளுக்கொரு முறைமட்டுமே பேசி வைக்கும் பேத்தியிடம் விவரங்கள் எதையும் கேட்க முடிவதில்லை.

அவ்வப்பொழுது தங்கமணியிடம் பேசும் போதும் அவரின் அன்பான வார்த்தையிலோ மரியாதையிலோ எந்தவொரு  குற்றம் குறையும் சொல்லும் படியில்லை. ஆனால், அவரின் பயமெல்லாம் மாப்பிள்ளையான அசோக் என்பவனை பற்றித்தான்.

பழக்கவழக்கம் சரியில்லாதவன் என்று தெரிந்த பின்தான் பெண்ணை கொடுத்தது என்றாலும், இருவரின் நேசம் வெகுவாய் அவனை மாற்றி விடுமென நம்பியே திருமணம் முடித்தார். இதுநாள் வரையில் அன்பாக வேண்டாம் அவசியத்திற்குகூட அசோக் அவரிடம் பேசவில்லை.

திருமணம் முடிந்த மறுநாளே இவன் முறுக்கிக் கொண்டு போனதை பார்த்து மனம் பதறியவர், வரவேற்பன்று தன்பேத்தியை கவனித்துக் கொண்டதை கண்டு மனபாரம் அகன்றார். அன்றும் அசோக், பாட்டியிடம் பேசவில்லை. வேலைப்பளுவில் மறந்து விட்டான் என்றே அவரும் நினைத்து விட்டார்.

வரவேற்பிற்கு சென்னைக்கு அழைத்து வந்த அன்னபூரணியின் உறவுகளை, மறுவீட்டு விருந்திற்கும் சேர்த்தழைத்து தங்கள் தரப்பு செய்முறைகளை முடித்திருந்தார் தங்கமணி.

அதன் பிறகு வைஷாலி பிடிவாதம் பிடித்து தன்னுடன் கிராமத்திற்கு வந்தது பாட்டிக்கு சற்றும் மனம் ஒப்பவில்லை என்றாலும், புதிய இடத்தில் அவளின் சிரம நாட்களில் ஏங்க வைக்க வேண்டாமென்றே உடன் அழைத்து சென்று விட்டார்.

மாதவிலக்கான நாளில் தன்பேத்தி செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவர். அந்த நாட்களின் வயிற்றுவலி மற்றும் பிறவுபாதைகளை போக்க, நல்லெண்ணெய் ஒத்தடம், கஞ்சி மற்றும் காஷாயம் செய்து கொடுத்தால் மட்டுமே பேத்தி அமைதியாக இருப்பாள். இல்லையென்றால் அப்போதைய வலிகளுடன் கூடிய சுகவீனத்தில் முகாரி ராகம் பாடியே வீட்டை இரண்டாக்கும் ரகம் அவள்.

விடுதியில் இருக்கும் பொழுதும் விடுப்பு எடுத்து தொலைபேசியில் அழுதே ஓய்ந்து விடுவாள் வைஷாலி. இதற்காகவே அவளை அழைத்து சென்றது. அவளும் ஐந்து நாட்கள் அறையில் முடங்கிக் கொண்டு அதற்கடுத்த நாட்களில் வீம்பு பிடித்து, தான்மட்டுமே செல்வதாகவும் கணவனுடன் முறையாக மறுவீடு வருவதாகவும் கூறிவிட்டு கிளம்பினாள்.

மாப்பிள்ளை வீட்டினரை அழைத்து மறுவீட்டு விருந்து வைப்பது மட்டும் தொங்கலில் விடப்பட்டதை எண்ணி அன்னபூரணி கவலை கொள்ளாத நாளில்லை. 

வைஷாலி சென்னை வந்து ஒருமாதம் முடிந்து விட்டது. கணவனை அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு வரும் வழியும் காணோம், சென்ற மாதத்தில் அந்த நாட்களின் புலம்பலையும் இதுவரையில் பேத்தி சொல்லக் காணோம்.

ஒருவேளை பேத்தி பக்குவமடைந்து விட்டாளா அல்லது நாள் தள்ளிப்போன நல்லசேதியா அல்லது கணவனின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் மனமுடைந்து தன்னை பற்றிய நினைவுகளை மறந்து போய்விட்டாளா போன்ற பலகேள்விகள் பெரியவரின் மனதை போட்டு குடைய ஆரம்பிக்க, பொறுத்து பார்த்து சென்னைக்கு வாடகைகார் அமர்த்தி, எந்தவொரு முன்னறிவிப்புமின்றி இரவில் கிளம்பி வந்துவிட்டார்.

அசோக் தியான வகுப்பிற்கு சென்ற அதிகாலை நேரத்தில், இவர் வந்து சேர்ந்திருக்க, அவரை அறையில் ஓய்வெடுக்க அனுப்பி விட்டார் தங்கமணி. பேத்தியை ஆசைதீர கண்களில் நிறைத்து கொண்ட பாட்டியும், அசோக் வந்ததும் தன்னிடம் தெரியப்படுத்த சொல்லி கண்ணயர்ந்து விட்டார்.

அவனும் தனது தினப்படி பயிற்சிகளை முடித்து இரண்டு மணிநேரம் கழித்துவர, முன்தின கோபங்களை மறந்து தானாகவே சென்று பேசினாள் வைஷாலி.

“ஊர்ல இருந்து பாட்டி வந்திருக்காங்க ஏகே! உங்கள பார்க்க ஆசையா இருக்காங்க. நீங்க இவ்வளவுநாள் மும்பை போயிட்டு ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் வந்ததா சொல்லியிருக்கேன். அதையே சொல்லுங்க!” மனம் பூரித்த புன்னகையில் தன்பாட்டியின் வரவை தெரிவிக்க,

அவனின் மனமோ, மனைவி அன்று தன்னிடம் சொல்லாமல் சென்ற நாளிற்கு காரணமில்லாமல் தாவிச்செல்ல, அதன் தாக்கத்தில்,

“ஆமாமா வரவேற்பு கொடுக்க மட்டுந்தான் நான் வேணும். கிளம்பி போறதுக்கு நான் தேவையில்லதானே! இந்த தடவ எப்படி? சொல்லிட்டு போகப் போறியா இல்ல ஆஸ் யூஷுவல் எஸ்கேபிசமா?” எடுத்த எடுப்பிலேயே குதர்க்கமாய் கேட்க வைஷாலி விக்கித்து போனாள்.

அனைத்திற்கும் முடிவு கட்டியாகி விட்டதென்று நிம்மதியுடன் நடமாடிக் கொண்டிருக்க, இவன் என்னடாவென்றால் மீண்டும் ஆரம்பிக்கிறானா என்ற ஆயாசமும் துக்கமும் ஒருசேர அவளை மிரள வைத்தது.

ஆனாலும் அன்று தான்செய்ததும் மிகப்பெரிய தவறுதானே? அந்த வலியை மறக்க முடியாமல்தானே அத்தனை வேதனையில் உழன்றான். அதன் பாதிப்பு இருக்கத்தானே செய்யும் என்று மனதை சமன்படுத்திக் கொண்டு,

“அன்னைக்கு நான் செஞ்சது தப்புதான். உங்கமேல கோபம் இருந்தது, அந்த வேகத்துல போயிட்டேன். அதுக்காக காலத்துக்கும் இத சொல்லியே என்னை கஷ்டப்படுத்தாதீங்க!”

உண்மை நிலையை எடுத்துக்கூற சங்கோஜபட்டு தனது மனநிலையை மட்டும்கூறி வருத்தத்துடன் தலைகுனிய, மனைவியின் முகவாடலில் துடித்தவனாக நொடியில் தன்பேச்சை மாற்றிக் கொண்டான்.

“ஹேய்! இப்ப எதுக்கு மூஞ்சிய தொங்க போடுற? ஏதோவொரு வேகத்துல நானும் சொல்லிட்டேன். அந்த சமயத்துல பிரச்சனைய ஆரம்பிச்சு வைச்சதே நான்தானே? என்னையும் மீறி வாய்தவறி வந்துடுச்சு, சாரி!” கெஞ்சலில்   முகத்தையும் சுருக்க, கணவனின் பாவனையில் பக்கென்று சிரித்தாள் வைஷாலி.

“சாரி சொல்ல ஆரம்பிச்சாச்சா? நான், உன்னில் சரிபாதி ஏகே! இத ஆழமா மனசுல பதிய வைங்க… என்னால ஓயாம ஞாபகப்படுத்த முடியாது. விளக்கம் சொல்லுங்க, சாரி வேண்டாம்” என்றவள் கீழிறங்கிச் செல்ல, அவள் பின்னே சென்று பெரியவரை வரவேற்றான்.

“வாங்க பாட்டி! எப்படி இருக்கீங்க?” அசோக் நலம் விசாரிக்க,

“எனக்கென்ன தம்பி! கடப்பாரைய முழுங்கினவளாட்டம் நல்லா இருக்கேன். நீங்கதான் ரொம்ப இளைச்ச மாதிரி தெரியுறீங்க? என்பேத்திய சமாளிக்க முடியாம கஷ்டபடுறீங்களா?” கேட்டவாறு பேத்தியிடம் திரும்பி,

“கொஞ்சம் பொறுப்பா நடக்க கத்துக்கோ, கண்ணு! தம்பி ரொம்ப வாடிப்போய் தெரியுறாரு” உடனடி அறிவுரையையும் அவிழ்த்துவிட,

“பெரியம்மா… அவ நிறையவே பக்குவப்பட்டிருக்கா! இவன்தான் வேல வேலன்னு சாக்கு சொல்லி பொண்டாட்டிய கவனிக்கிறதில்ல…” தன்பங்கிற்கு மருமகளை தாங்கி தங்கமணியும்பேச, அதிலேயே மனம் நிறைந்தது பாட்டிக்கு.

புகுந்த வீட்டில் நல்லபெயர் அதுவும், தன்முன்னே சொல்லக் கேட்க வேறென்ன வேண்டும் அந்த முதியவருக்கு… ஆனாலும் மனது கேட்காமல்,

“இவள அவ்வளவு சீக்கிரத்துல நல்லபிள்ளைனு எடை போட்டுட்டாதே தங்கம்! எந்த நேரத்துல எப்படி கழுத்தை பிடிச்சு காரியம் சாதிப்பானு தெரியாது” பேத்தியை வம்பிழுத்து சொல்ல,

“அதெல்லாம் வெளியே தெரியாத மாதிரியே நடந்துக்குற  ஷார்ப் பெர்சனாலிட்டி நம்ம மேடம்! அப்படிதானே பாட்டி?” பாட்டியுடன் கைகோர்த்தான் அசோக்.

‘அடப்பாவி! மேல என்னை பயமுறுத்திட்டு, இங்கே பாட்டிகூட சேர்ந்து வாரி விடுறியா?’ மனதில் நொடித்துக் கொண்டவள்,

“உங்களை கல்யாணம் பண்ணிட்டு, நான் ஷார்ப்பா இல்லைன்னா நீங்க காணாம போயிடுவீங்க, ஏகே!” என்று பதில் கொடுக்க, அசோக்கின் கை, தன்னால் வாயை மூடிக்கொள்ள,

“அப்படி சொல்லுடாமா… உன்னோட ஹார்ட் வொர்க்கு இவன் இந்தளவுக்குகூட வாய மூடலன்னா எப்படி?” மருமகளுக்கு ஹைஃபை கொடுத்து, மகனை வாரிவிட்டார் ராமகிருஷ்ணன்.  

“என் முன்னாடி தம்பிய, பேர்சொல்லி கூப்பிடாதடி, மாமா, வாங்க போங்கனு கூப்பிட பழகு. சேலை கட்டாம பாவாடை சட்டையில ஏன் திரியுற? தங்கமணி நீ இதெல்லாம் சொல்றதில்லையா?” பாட்டி தன்போக்கில் கண்டித்துக் கொண்டே போக,

“உம்ம தம்பி ஜீன்ஸ், டி-சர்ட் போடச் சொல்றாரு பாட்டி! மாமா அத்தான்னு கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது. அவருக்கு பிடிச்ச மாதிரி இருக்கவா இல்ல நீ சொல்றத கேட்கவா?” கேள்வியை திருப்பி கேட்ட வைஷாலி, பழுப்புநிற லாங்ஸ்கர்ட்டும் அடர்நீலநிற குர்தியிலும் இருந்தாள்.

முன்தினம் மனைவியை அழைத்து வெளியே சென்றவன் அவனுக்கு பிடித்த மாதிரியான உடைகளை வாங்கிக் கொடுத்து போட்டுக்கொள் என்று அன்பாக உத்தரவும் போட்டிருக்க, வைஷாலியால் மீற முடியவில்லை. தங்கமணி இதையெல்லாம் பெரிதுபடுத்தும் ரகம் கிடையாது என்பதால் இவளும் சங்கோஜமின்றி உடுத்தி நடமாடிக் கொண்டிருந்தாள்.

“இந்தகால பசங்களுக்கு நீங்க சொல்றதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது அத்தை. மரியாதையும் பாசமும் மனசுல இருந்தா போதும். வீட்டுல இருக்கும்போது அவ சௌகரியத்துக்கு இருக்கட்டும்” பாட்டியை, தங்கமணி சமாதானப்படுத்திவிட,

அப்பொழுதே, தான்வந்த காரணத்தைகூறி மறுவீட்டிற்கு அழைத்தார் பாட்டி.

“கிராமத்துல எல்லாம் முறையா நடக்கணும் தம்பி! கொஞ்சம் சிரமம் பார்க்காம மறுவீட்டு விருந்துக்கு வாங்க! மாட்டேன்னு சொல்லி மறுக்காதீங்க…” பாட்டி அசோக்கிடம் கோரிக்கை வைக்க,

“பாட்டி, நான் உங்க பேரன். எனக்கு மரியாதை கொடுத்து தூரமா வைக்காதீங்க. பேர் சொல்லி கூப்பிடுங்க! இப்போ கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு. ரெண்டுவாரம் கழிச்சு மூணுநாள் அங்கே இருக்குற மாதிரி வர்றேன்” தன்னால் இயன்றவரை சமாளித்தான் அசோக்.

“இல்லப்பா… அடுத்து திருவிழா வருது. அப்போ எல்லாரும் அங்கே இருக்கணும். அதுக்கு முன்னாடி ஒருஎட்டு வந்து போயிட்டா நல்லா இருக்கும்” பாட்டி மீண்டும் வற்புறுத்த,

“அவர் இப்போதான் ஊர்ல இருந்து வந்திருக்காரு பாட்டி…” கணவனின் சார்பாக வைஷாலியும் பேசினாள்.

“லீவ் கிடைக்கிறதுதான் கஷ்டம். நான் ஆபீஸ்ல கேட்டு சொல்றேன் பாட்டி!” அசோக் சொல்ல,

“மனசுல வேறெந்த நெருடலும் இல்லையே தம்பி! நீங்க அன்னைக்கு கோவிச்சுட்டு கிளம்பினதும், எக்குதப்பா யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். இந்த கட்டைக்கு பேத்திய தவிர வேற நாதியில்லப்பா! அதான் நீங்க வராம இருக்கவும் ரொம்பவே தவிச்சு போயிட்டேன்” தனது ஆதங்கத்தை எல்லாம் இறக்கி வைத்தார் பெரியவர்.

“பெரியம்மா, உங்க வருத்தம் எதுவானாலும் மனசு விட்டு ரெண்டு வார்த்தை கேளுங்க. உங்க பேரனை நீங்க தாராளமா கேள்வி கேட்டு, உங்க சந்தேகத்தை தீர்த்துக்கலாம்” ராமகிருஷ்ணன் அவருக்கு ஆறுதல்கூற,

“ஆபிஸ்ல ஒருவேலை தப்பா போயிடுச்சு பாட்டி! அந்த அவரசரத்துலதான் அன்னைக்கு வேகமா கிளம்பி வந்துட்டேன். வேறெந்த காரணமும் கிடையாது. இனி இப்படி நடக்காது” அசோக்கும் தந்தையுடன் சேர்ந்து சமாதானம் செய்தான்.

“உனக்கு எத்தன தடவ சொல்றது அன்னம்மா! எப்பவும் என்னை பத்தி யோசிச்சுதான் உடம்புக்கு ஏதாவது ஒன்னு வரவைச்சுக்குற!” உரிமையுடன் வைஷாலி கோபித்துக் கொள்ள,

“உன்னை நினைக்காம இருக்கணும்னா, காலகலத்துல ஒரு கொள்ளு பேரனையோ பேத்தியையோ பெத்துகுடு ராசாத்தி! இந்த காலத்து பிள்ளைங்க மாதிரி தள்ளிப் போட்டு என்னை காக்க வைக்காதீங்க சொல்லிட்டேன்” இருவரையும் பார்த்து பொத்தம்பொதுவாய் சொல்ல, வைஷாலி முகத்தை சுருக்கிக் கொள்ள, அசோக் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

‘பாடம் படிக்க ஆரம்பிக்கவே யோசிக்கிறவர்கிட்ட போய், பரீட்சை எழுதினயா? ரிசல்ட் எப்போன்னு கேக்குறியே பாட்டி’ மனதோடு நொடித்துக் கொண்ட வைஷாலி, சலித்த பார்வையில் கணவனை நோக்க, அவனோ அவஸ்தையாய் எச்சிலை முழுங்கிக் கொண்டான்.

“என்னடி ஒருபதிலும் சொல்லாம இருக்க? ஆமா, இந்த மாசம் என்ன பண்ணின? உன்னோட கச்சேரிய கேக்காம எனக்கு மாசம் முடிஞ்ச நினைப்பே வரல! ஒருவேளை நல்லசேதி சொல்லப் போறியா கண்ணு!” பேத்தியை அருகமர்த்திக் கொண்டு பாட்டி மெதுவாக கேட்க,

“உன்னோட ஆசைக்கு அணைகட்டிக்கோ பாட்டி! நான் இங்கே இருந்தே சமாளிக்க பழகிட்டேன்” பூடகமாய்பேசி பதிலளித்தாள்.

தன்பாட்டி சொன்னதும்தான் அவளுக்கு அந்த நாளின் நினைவே வந்தது. அப்பொழுதெல்லாம் கணவனின் சிகிச்சைக்கென அவன் பின்னே சுற்றிக் கொண்டிருக்க, அவளின் இன்னல்களை எல்லாம் அத்தனை சுலபமாய் மறந்து போயிருந்தாள்.

அதை இப்போது நினைத்து, ‘என்னையே மறந்துபோற அளவுக்கு இவர் பின்னாடி சுத்தியிருக்கேன். இவர் என்னடான்னா என்கூட வாழ இன்னமும் யோசிக்கிறாரு… இதெல்லாம் எப்ப தெளிஞ்சு, எப்ப சரியாக?’ என்ற நினைவே அலுப்பைக் கொடுக்க, அந்தநேர வேலைகளை கவனிக்கவென உள்ளே சென்று விட்டாள்.

அன்னபூரணி இருந்த இரண்டு நாட்களில் வீட்டில் கலகலத்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. இத்தனை குறும்பையும் சிரிப்பையும் மறைத்துகொண்டா இவள் நடமாடி வந்தாள் என்றே கவலையுடன் அசோக் மனைவியை பார்க்க, அவள் என்னவென்று புருவம் உயர்த்தி கேட்ட விதத்திலேயே வீழ்ந்து போனான்.

இப்பொழுதெல்லாம் அடிக்கடி இவன் சொக்கிப் போவது சகஜமாகிக் கொண்டு வருகிறது. ஆர்வத்துடன் மனைவியை அணைத்துக் கொள்ளும் ஆவேசமும் உண்டாகிறதுதான்.

ஆனாலும் தன்னையும்மீறி அவளை காயப்படுத்தி விடுவோமோ என அஞ்சியே மனைவியின் மேலுள்ள அன்பில், அக்கறையில் அவளை தவிர்த்து விட்டு தவித்தான். வைஷாலியும் அவனை விட்டு விலகி நிற்க, மனமற்று அவன் பின்னே பரிதவித்து வந்தாள்.

ஒரு வழியாக வொர்க் அட் ஹோம் ஒப்பந்தத்தில் ஒருவாரம் கிராமத்திற்கு மனைவியோடு வந்து விட்டான் அசோக். ஊரையே அழைத்து விருந்து வைத்தார் அன்னபூரணி.  அனைத்து சொந்த பந்தங்களும் கூடியிருந்த வேளையில், செய்ய வேண்டிய சீர்வரிசைகளை பெருமையுடன் சிறப்பாக அடுக்கி விட்டார்.

மனதில் எந்தவித விகல்பமும் இன்றியே பாட்டியும் பேரனும் வார்த்தைகளை வளர்த்துக் கொள்ளவும் தொடங்கி இருந்தார்கள். அவரின் ஆர்பாட்டத்தை பார்த்த அசோக் முதலில் மலைத்து, மகிழ்ந்து பின், யோசனையில் ஆழ்ந்து போனான்.

இத்தனை பாசத்துடன் பேத்தியை தாங்குபவரிடம் தன்னை பற்றிய உண்மைநிலை தெரிய வந்தால் எப்படி ஏற்றுக் கொள்வார்? ஒருவேளை மொத்த குடும்பத்தையும் ஏமாற்று பேர்வழியென்று நினைத்துக் கொள்வாரோ என தனது வழக்கமான குழப்பத்தில் மனதை அலைபாய விட்டான்.

அவனின் தீவிர சிந்தனையை கண்ட வைஷாலியும், “என்ன ஆச்சு? டீப் திங்கிங்ல இருக்கீங்க! எதையாவது மனசுல போட்டு உளப்பிக்காதீங்க… கடிச்சு மென்னு வெளியே துப்பிடுங்க ஏகே!” கண்டிப்புடன் உத்தரவிட்டாள்.

கணவன் பார்க்கும் பார்வையிலேயே அவனை கணிக்க பழகியிருந்தாள் வைஷாலி. இவனது யோசிக்கும் பாவனையும் அத்தனை நல்லவிதமாக தோன்றாமல்போக, வெளிப்படையாக கூறிவிட்டாள்.

“என்னை சந்தேகத்தோடு பார்க்குறதயே முழுநேர வேலையா வைச்சுருக்கியா, ஷாலி?”

“நான் கவனிச்சு எல்லாம் பார்க்க வேணாம் ஏகே! உங்க பார்வையே சொல்லுது… இவ்வளவு ஏன்? உங்க மூச்சு காத்துகூட குழப்பத்தோடதான் வேகமாவும் மெதுவாவும் வருது. இல்லன்னு மட்டும் பொய் சொல்லாதீங்க” ஊடுருவிப் பார்த்தவளின் அன்பில், அதிசயித்தே அடங்கினான் அசோக்.

“அந்தளவுக்கா என்னை புரிஞ்சு வைச்சுருக்க? உன்னை நினைச்சு பெருமையா இருக்குடா! நான், உன்னை எப்படி பார்த்துக்க நினைச்சேனோ, அத நீ செஞ்சுட்டு இருக்க… ரியலி ஐயாம் லக்கி சார்ம்!” சிலிர்த்துக் கொண்டவனின் பேச்சை இடைவெட்டினாள் வைஷாலி.

“பேச்சை மாத்த வேணாம் ஏகே! என்ன குழப்பம் உங்களுக்கு?”

“என்னோட ட்ராபேக்(குறைபாடு) பாட்டிக்கு தெரிஞ்சா, எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைச்சாலே பயமா இருக்குடா?”

“உங்க விசயத்தை அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறது அத்தனை ஈஸியில்ல ஏகே! அப்படி தெரிஞ்சு அவங்களும் கவலைபட்டு நிக்கிறத பார்க்க எனக்கும் சக்தியில்ல. முடிஞ்ச போனத திரும்பவும் தூர்வார நினைக்காதீங்க!”

“நீ சொல்றது புரியுது. அதேபோல அவங்க பாசத்தைவிட அதிகமான அன்பை உன்மேல நான் காட்ட முடியுமான்னும் சந்தேகமா இருக்கு” தன்மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை அவன் வெளியே கொட்டிவிட,

“இதுல பயம், சந்தேகத்துக்கு எல்லாம் இடமில்ல! ஆரம்பத்துல நான் சொன்னதுதான். அவங்களோட எல்லா உறவையும் என்கிட்ட பார்க்குறாங்க அதான் இத்தனை ஆர்பாட்டம் பண்ணி எல்லாரையும் மிரள வைக்கிறாங்க. கொஞ்சநாள் முன்னாடி நானும் இப்படிதான் பாட்டி பக்கத்துலயே இருந்து அவங்க கழுத்தை பிடிச்சு தொங்கிட்டு இருந்தேன்.”

“இப்ப, அப்படி செய்றதில்லையா நீ?”

“என்னோட ஒவ்வொரு நொடியும் உங்களை நோக்கியே நகர ஆரம்பிச்சுடுச்சு. என்பாட்டியோட அன்பை உங்ககிட்ட எதிர்பார்க்க தொடங்கி, நான் ஏக்கத்தோட சுத்திட்டு இருக்கேன். உங்களை தவிர வேற எதுவும் எனக்கு பெரிசா தெரியுறதில்ல” என்றவளின் பேச்சில் சொல்லத் தெரியாத சோகம் எட்டிப் பார்க்க, அதிர்ந்து போனான் அசோக்.

“என்ன வார்த்தை சொல்லிட்ட நீ? இப்படி உன்னை வேதனைபடுத்தி பார்க்கவா, உன்னை கைபிடிச்சேன்? இன்னும் கொஞ்சநாள் டைம்குடு ஷா! என்னை நிச்சயமா  சரிபண்ணிப்பேன்டா!” தழுதழுத்த குரலில் மனைவியை அமைதிபடுத்தினான்.

எந்த ஒன்றையும் உள்ளே பூட்டிக் கொள்ளாமல் வெளியே சொல்ல பழக்கப்படுத்திக் கொண்டதில், இருவரும் தங்களின் சகலத்தையும் அலசி ஆராயத் தொடங்கியிருந்தனர். ஆனால் இதில் மீண்டும் பின்னடைந்தது அசோக் மட்டுமே.

என்னதான் மருந்து மாத்திரை மற்றும் பயிற்சிகள் எடுத்து தன்னை நேர்படுத்திக் கொண்டாலும் அவனது குழப்பகாடு அத்தனை எளிதில் அழியவில்லை. எப்பொழுதும்போல் அவனது தாழ்வு மனப்பான்மை மீண்டும் அவனை ஆக்கிரமிக்க தொடங்கியது.

தியானம் மற்றும் யோகா பயிற்சிகளுக்கு செல்லத் தொடங்கி ஒருமாதம் முழுமையாக முடியவில்லை. அதற்குள் ஒருவாரம் இடைவெளி உண்டாகிவிட, அனைத்து பயிற்சிகளும் தடைபட்டுப் போனது. வீட்டில் இருந்து செய்வதற்கும் மனம் லயிக்காமல் போனது.

கிராமத்தில் பகல் பொழுதுகளில் உறவினர்களுடன் கழிய, மாலையில் தனது அலுவலை பார்க்க, மடிக்கணிணியுடன் அமர்ந்து விடுவான் அசோக்.

வைஷாலியும் அவனை தொந்தரவு செய்யாமல் பாட்டியுடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பாள். இரவுநேரத்தில் தோட்டத்தில் நடைபயின்றவாறே இலகுவான பேச்சில் இருவரும் தங்களை தொலைத்துக் கொண்டனர்.

அடுத்த இரண்டு நாட்களில் சென்னைக்கு கிளம்பும் சூழ்நிலையில், அசோக் தனது இறுக்க மனநிலையை மறந்து சகஜமாய் நடமாட ஆரம்பித்திருந்தான்.

அன்று மதிய உணவை முடித்த நேரத்தில், மாடியறையில் தங்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் எல்சிடி திரையில் ஓடிக் கொண்டிருக்க, மணப்பெண்ணாய் வலம் வந்த மனைவியை கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் அசோக்.

அன்றைய நிகழ்வுகளை, புகைப்படங்கள் எடுத்த இனிய பொழுதுகளை எண்ணிப் பார்க்க, தன்னால் இருவருக்கும் புன்னகை மலர்ந்து ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

வரவேற்பு தினத்தில் புகைப்படம் எடுக்கும் பொழுது இவன் செய்த சீண்டல்களை, இப்பொழுதும் நினைத்தாலும் வைஷாலிக்கு உடலெங்கும் மயிர்கூச்செறிந்து விடும்.

இருவரும் சேர்ந்து சுயமி(செல்ஃபி) எடுத்துக் கொள்வதுபோல் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டுமென போட்டோகிராஃபர் யோசனை சொல்ல, சரியென்று தலையசைத்து விட்டாள் வைஷாலி. அதற்கு பிறகுதான் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் எல்லாம் அவளுக்கு தெரிய வந்தது.

கணவனுடன் ஒட்டிக் கொண்டு நிற்க வேண்டும். அதிலும் அவன் கைகள் தாராளமாக இவளது இடையில் உறவாட, பின்னோடு அணைத்தவாறு, மனைவியின் தோளில் அவனும் முகத்தை பதித்து கொண்டு காதலாய் சிரித்தபடி அலைபேசியில் வைஷாலிதான் படம் பிடிக்க வேண்டும்.

அவனது ஒவ்வொரு தொடுகையிலும் அன்றைய நாளில் நாணிச் சிவந்து கொண்டிருந்தவள், இந்த விளக்கமெல்லாம் கேட்டதும் கூச்சத்தில் நெளியத் தொடங்கி விட்டாள்.

நண்பர்கள் பட்டாளம் வேறு, இதற்கெல்லாம் வெட்கப்படுவதா என்று கலாய்க்க முடிவில், அசோக் எடுத்தே ஆகவேண்டும் என்று தீர்மானத்துடன் நின்று விட்டான்.

பார்வைகளில் மட்டுமே வார்த்தைகளை பகிர்ந்துகொண்ட அழகான தருணமது. அப்பொழுதும் அவளிடம் தனது ஆளுமையை காண்பிக்காமல் கண்களால் கொஞ்சியபடியே எப்படியாவது சம்மதித்துவிடு என்று கெஞ்ச, அவளின் அனுமதியின்றியே மனைவியின் தலை சரியென்று சம்மதம் சொல்லியது.

இருவரின் உடலும் மனமும் ஒன்றாய் சிலிர்த்து அடங்க, மிதமிஞ்சிய கன்னச்சிவப்பில், கணவனின் காதல் பார்வையை அள்ளிப் பருகியபடியே கச்சிதமாய் சுயமியை சொடுக்கி முடித்திருந்தாள் வைஷாலி. அதே பாவனையில் இருவரையும் நிற்க வைத்து மேலும் சில நிழற்படங்களை சொடுக்கியிருந்தார் போட்டோஃகிராபர்.

புகைப்படம் எடுக்க தோதாக இருவரும் அணைத்தபடி நின்ற தோரணையை பார்த்து,

“வேண்டாம்னு பிகு பண்ணவங்க எவ்ளோ கச்சிதமா நிக்கிறாங்க… இதுதான்டா சூப்பர்ஜோடி ரியல் ஃபீஸ் இதுதான்டா!” நண்பர்களின் கிண்டலும் கேலியுமாக அந்த நிமிடங்கள் முடிந்தன.

“சஸ் எ பியூட்டிஃபுல் மொமென்ட், இல்ல ஏகே?“ என்று அந்தநாளின் நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டு, அதே சிலிர்ப்போடு கணவனிடம் வைஷாலி சிலாகித்துக் கொள்ள,

“ம்ம்… லைஃப்ல மறக்க முடியாத ப்ளசன்ட் டைம் அது” அமைதியாக சொல்லி அடுத்த புகைப்படத்திற்கு தாவினான்.

“இப்ப இந்த மாதிரி ஒரு செல்ஃபி… ஜஸ்ட் ஒன் ட்ரை, ப்ளீஸ்!” மெலிதாய் புன்னகைத்த வைஷாலி ஆசையாக சொல்ல,

“வேண்டாம் ஷாலி!” அசோக் சுரத்தில்லாமல் கூறி கட்டிலில் அவளுக்கு எதிரே அமர்ந்துவிட, வைஷாலிக்கு சட்டென்று கோபம் பொங்கி விட்டது.

“லைஃப் லாங்கா ஃப்ரண்டா இருக்குறேன்னு சொன்னவரு ஃப்ரண்டோட ஆசைய தட்டிக் கழிக்குறாரு, சரியான எஸ்கே(சிடுமூஞ்சி கிருஷ்ணா)!” சிணுங்கலுடன் முகம் தூக்கி வைத்துக் கொள்ள

“ஃப்ரண்ட்ஸ் இப்படியெல்லாம் ஸ்னாப் எடுக்க மாட்டங்கடா!”

“வொய்நாட்? குளோஸ் ஃபிரண்ட்ஸ் அண்ட் ரிலேடிவ்ஸ்கூட இப்படி ஹக் பண்ணி போட்டோ சூட் வைக்குறாங்க ஏகே!”

“இப்ப வேண்டாம், அடுத்து பார்ப்போம் ஷா!”

“எப்ப எடுத்தாலும் நாங்க மட்டும்தானே பாஸ்! கமான், இல்லன்னா எக்ஸ்ட்ரா இன்னொருபேர் உங்க ப்ரஃபைல்ல சேர்த்துடுவேன்” சிரிக்காமல் மிரட்டியதில் அசோக்கின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“வேணாம் அழுதுருவேன்…” வடிவேலு பாஷையில் கூறியவன், அவளது பொய்கோபத்தை பார்த்து,

“மறுபடியும் இந்த வைஷூமாதா கோவிச்சிட்டு பேசாம இருந்தா, எந்த கோவில்ல கூழ் ஊத்தி சமாதானப்படுத்தனும்னு சொல்லிட்டு, கோவிச்சுக்கோ தாயே!” என்று சீண்டலை வளர்க்க,

“ஓ… அவ்வளவு பெரிய பக்திமான்தான் பொண்டாட்டி ஆசைய தட்டிக் கழிப்பாரா? அவளா இழுத்து பிடிச்ச நிறுத்தினாலும் நழுவிட்டுப் போறாரு…” விடாமல் இவளும் வம்புபேசி பிடிவாதத்தில் நின்றாள்.

“அடபாவமே! இத்தனை ஆசையாடா உனக்கு? ஐ யாம் ரெடி!” எழுந்து அவள் அருகில் நிற்க, அவனின் முன்புறம் ஒட்டிக் கொண்டு நின்றவள், சுயமி எடுக்க ஆயத்தமானாள்.

எளிதாய் இவனும் எழுந்து நின்று விட்டான்தான். ஆனால் மனைவியுடன் மிகநெருக்கமாய் இவன் ஒட்டி நிற்கும்போதே பதட்டம் மெல்ல அவனை சூழ்ந்து கொண்டது. அதனை மறைக்க போராட்டம் நடத்த தொடங்கி, மேற்கொண்டு முன்னேறாமல் இருந்தான் அசோக்.

அன்றைய தினத்தில் நண்பர்களின் முன்னிலையில் அவனது கவனம் எல்லாம் விழா நாயகனாய் வெற்றியடைய வேண்டும் என்பதிலேயே இருக்க, இத்தனை அவஸ்தைகள் இல்லை.

ஆனால் இன்றோ மனைவியின் மீதான ஏக்கப் பார்வை கூடிகொண்டே இருக்கும் சமயத்தில், மனம் தன்வசப்பட்டு, இவளின் அருகாமையை ஏற்றுக் கொள்ளுமா என்பதே இவனுக்கு கேள்விக்குறியாகிப் போனது.

கணவனுடன் ஒட்டி நிற்பதே வைஷாலிக்கு கூச்சத்தை வரவழைக்க, அணைத்துக்கொள் என்று இவளும் சைகையில் சொன்னாள். ஆனால் அவன் தன்கைகளை அத்தனை எளிதில் இவளின் இடுப்பிற்கு கொண்டு வராமல், முடியாது என்ற வீம்பில் நின்றான்.

“ஜஸ்ட் பக்கத்துல நிப்போம்டா… நீ எடு” அசோக் உத்தரவிட,

“நோ ஹக், நோ கிஸ், லிட்டில் டச்தான். அதுக்குகூட முரண்டு பிடிப்பீங்களா எம்கே?(முசுடு கிருஷ்ணா!)” என்று மற்றுமொரு புதிய பெயரை வைத்துவிட,

“நீ எத்தனைபேர் வச்சாலும் எப்பிடி கெஞ்சினாலும் இப்படிதான் போஸ் கொடுப்பேன்!” இவனும் முறுக்கிக்கொள்ள, அவனை முறைத்து பார்த்தவள்,

“இப்படியே நில்லுங்க… ஆடாம அசையாம நிக்கணும்” உத்தரவிட்டு, அவனின் பின்புறம் சென்று, சற்று எம்பி அவன் தோளில் முகத்தை பதித்தவாறே, கணவனின் இடுப்பை கட்டிக்கொள்ள, முதல்முறை உரிமையான தீண்டலில் வைஷாலியின் இளமை சாம்ராஜ்யம் தீ பற்றிக்கொள்ள தயாராய் இருந்தது.  

அசோக்கிற்கு புகைப்படம் சீக்கிரம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம், வைஷாலிக்கோ எடுக்கும் சுயமி மிகதத்ரூபமாக வரவேண்டும் என்ற ஆசை. இவையிரண்டும் சேர்ந்து இவர்களின் உணர்வுகளை அடக்கம் செய்ய,

“ஸ்மைல் பண்ணுங்க ஏகே! முகத்த நல்லா வச்சுக்கோங்க…” பலகட்டளைகளை இட்டாலும் அவனது முகம் உணர்ச்சியற்று இருந்தது.

“கடவுளே! எவ்வளவு நேரம்தான் கால் எம்பிட்டு நிக்கிறது” என்றவளுக்கு இவனது அசையாநிலை, கோபத்தை கொடுக்க,

‘என்னை தொடக்கூடாதென்று அப்படியென்ன வீம்பு இவனுக்கு?’ மனதிற்குள் கருவிக் கொண்டவள், அதிர்ச்சி வைத்தியம் செய்கிறேன் பேர்வழி என்று அவனது கன்னத்தில் பட்டும் படாமலும் அவசரகதியில் தன் இதழை ஒற்றியெடுத்தாள்

அதற்கும் தன்முகத்தை மாற்றிக் கொள்வேனா என்று அடமாய் அசோக் நிற்க,

இது சரிவராதென்று முன்னே வந்து கன்னத்தை கடிக்கவர, சரியாய் அந்த நேரம் பார்த்து, அசோக் கட்டிலில் அமர்ந்துவிட, அவன்மேல் விழுந்து, அவனையும் மல்லாக்க விழ வைத்தாள் வைஷாலி.  

“நார்மலுக்கு வாங்க அசோக்! நான் உங்க ஷாலி… யாரோ எவளோ இல்ல. என்னை மட்டுமே நினைங்க!” உள்ளார்ந்து சொன்னவளின் கண்கள் கணவனை ஆசையாக மயக்கத்துடன் பார்த்தது.

தான்விழுந்த நிலையில் இருந்து எழாமல் அவனது மனநிலையை மாற்ற, கன்னத்தோடு கன்னம் உரசிவிட்டு அவனின் இதழ் நோக்கி தன்முதல் முத்திரையை பதியமிட்டாள்.

கணவனின் தோளினை அழுத்தி, இதழ் ஒத்தடத்தை அழுத்தமாய் கொடுக்க, அவளுள் அடங்கியிருந்த ஹார்மோன்கள், ஆசை உணர்வுகளை எழுப்பிவிட, அவளது கைகள் தானாகவே கணவனின் பின்னத்தலையை இறுகப் பற்றிக் கொண்டது.

தனது முத்திரையை கணவனின் இதழோடு தொடர்ச்சியாக பதித்துக் கொண்டிருந்தவள், அவனது நிலையை அறிய முற்படவில்லை.

இதழொற்றலை உள்வாங்குபவனின் நிலையோ பெரும் ஆபத்தாய் மாறிக் கொண்டிருந்தது. மனைவியின் அணைப்பிற்கு உணர்ச்சிகளை தொலைத்திருந்தவன், மேலும் இறுகிப் போனான்.

விட்டு விலகிட முயன்றாலும், தானாகவே வந்து இதழ் ஒற்றியவளின் தீண்டலில் மொத்த இறுக்கமும் ஒன்றாகி உடலும் விறைக்க ஆரம்பித்தது.

சூழ்நிலை சரியில்லை அவளை விலக்கிவிடு என்று மனம் எச்சரிக்கை செய்ய, அவளை தள்ளி நிறுத்த நினைத்து அவள் முகத்தை நேர்கொண்டு பார்த்தவனின் மனதில் அன்றைய நாளின் அவளது ரத்தகீற்று முகமே தெரிந்தது. ஆவேசம் கொண்டு அவளின் முகத்தை வன்மையாக உயர்த்திப் பிடிக்க,

“என்னை மட்டுமே மனசுல நிறுத்துங்க அசோக்! நான் உங்க வொய்ஃப்!” மீண்டும் அவள் இறங்கிய குரலில் வலியுறுத்த, தன்உணர்வுகளோடு பெரும் போராட்டம் நடத்தியவன், ஒரே உதறலளில் அவளை விட்டு விலகினான்.

“எனக்கு பிடிக்கல ஷாலி! என்னை கம்பெல் பண்ணாதே… என்னால முடியல…” அவளை நேர்கொண்டு பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள, வைஷாலி முற்றிலும் உடைந்து போனாள்.

“எந்த நெலையிலயும் உங்களை மாத்திக்க, எந்த முயற்சியும் பண்ணவே மாட்டீங்களா அசோக்?” ஏமாற்றமும் வேதனையும் சுமந்து வந்த மனைவியின் விரக்தியான கேள்வியில், அசோக் கிருஷ்ணா சிலையாய் உறைந்து நின்றான்.

அவனின் மனமோ இன்னமும் முழுதாய் அழுத்தத்தில் இருந்து மீளாத நிலை. இவளுக்கோ கணவனை நன்றாக புரிந்து வைத்திருந்தாலும், பொறுமையுடன் அவனை கையாளத் தெரியாத விவேகமற்ற குணம்.

மனதால் ஒன்று பட்டவர்கள், தங்களின் உண்மை நிலையை ஆராயாமல், வெளியில் வேறுபட்டு நின்றனர். மனித மனத்தின் விசித்திரங்களை அத்தனை எளிதில் எடைபோட முடிவதில்லை.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!