இனிய தென்றலே

தென்றல் – 2

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா..!

தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா..!

அள்ளி கொடுத்தேன் மனதை

எழுதி வைத்தேன் முதல் கவிதை

கண்ணில் வளர்த்தேன் கனவை

கட்டிபிடித்தேன் தலையணையை

குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ..!

அசோக் கிருஷ்ணா… வயது இருபத்தியொன்பது… முதுநிலை கணினி பொறியியல் பட்டதாரி. எளிதில் நட்பு கொள்ளும் சுபாவம். நேர்த்தியான பணித்திறன் இவனது அடையாளம். முன்கோபம், அவசரம் இரண்டையும் மேல்சட்டையாக போட்டுக் கொள்பவன். உயர்மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன்.

இவனது அப்பா ராமகிருஷ்ணன், கிராமத்து நிலபுலன்களை விட்டு, மத்திய அரசு வேலைக்காக நகரத்திற்கு இடம் பெயர்ந்த மனிதர். தற்பொழுது பிரபல அரசு வங்கியின் சென்னைக்கிளை ஒன்றில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பழகுவதற்கு இனியவர், கண்டிப்பான தந்தை.

அம்மா தங்கமணி பெயருக்கேற்றபடி தங்கமானவர். தன்வீடே அவருக்கு உலகம். பிள்ளைகளே அவரின் சொந்த பந்தம் என்று வாழ்ந்து வருபவர். கணவரின் எண்ணத்திற்கு மறுப்பு சொல்லாத பெண்மணி.

இரண்டு ஆண் சிங்கங்கள் இவர்களின் வாரிசாக இருக்க, இளையவன் அசோக் எப்பொழுதும் அம்மாவிற்கு செல்லம். மூத்தவன் அருண்கிருஷ்ணா, வேலை குடும்பம் என்று தன் வாழ்க்கையில் பொருந்தி, கல்கத்தாவில் வாழ்க்கைப்  பயணத்தை தொடர, அசோக் தனிக்காட்டு ராஜாவாக சுற்றித் திரிபவன்.

பிரபல மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின், சென்னை கிளை உதவி மேலாளராய் பணிபுரிந்து வரும் அசோக், நான்கு வருடம் வெளிநாட்டு தலைமை அலுவலகத்தில் தனது திறமையை நிரூபித்து விட்டு, சென்ற வாரம்தான் சென்னைக்கு திரும்பியிருந்தான்.

பெண் பார்க்க வந்த இடத்தில், வைஷாலியின் எண்ணமும், தான்மனதில் நினைப்பதும் ஒன்றாக இருக்க, அந்த நிமிடமே அசோக்கின் மனதில் மெலிதான சலனம் எட்டிப் பார்த்தது.    

அவளின் பேச்சினை ஆமோதித்து, பதிலளித்தவனின் பார்வையிலும் பாஷையிலும் புன்னைகை குடியேற, வைஷாலியை எந்த விகல்பமும் இல்லாமல் தயங்காது பார்த்தவன்,

“எனக்கும் கல்யாணத்துல இஷ்டமில்ல… எங்க அப்பா பொறந்த ஊர, சுத்திப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்… திடீர்னு என்னை மாட்டி விட்டுட்டாங்க… இப்போ என்ன பண்றதுன்னு தெரியல…” சிநேகித பாவனையில் அவளிடம் சொல்ல…

“அப்போ நீங்களும் என் கேஸ்தான்… இங்கேயும் பாட்டி மாட்டி விட்டதுலதான், நான் உங்க முன்னாடி நிக்கிறேன்…” பின்பாட்டு பாடியவள்,

“எனக்கு ஃப்ரீடம் வேணும், பொம்பளைன்னா கல்யாணம் பண்ணிக்கணும், குழந்தை பெத்துக்கணும், சமையல் செய்யனும்னு ஒரு கோட்டுல நின்னு வாழ்றது எனக்கு பிடிக்கல… அதுல எனக்கு உடன்பாடும் இல்ல… ஒரு பொண்ணால, தனியா இருக்க முடியும்ங்கிறத, வாழ்ந்துகாட்டி நிரூபிக்கப் போறேன்…” என்று தன்வாழ்நாள் லட்சியத்தை விளக்கமாக எடுத்துக் கூற, ‘அட பரவயில்லையே’ என்ற தோரணையில் அசோக், அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.

கிராமத்தில் வளர்ந்த பெண்ணிடம், தன் எண்ணத்தை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பதென இவன் யோசனையில் உழன்று கொண்டிருக்க, வைஷாலியின் மடை திறந்த பேச்சு, அவனது செயலை எளிதாக்கியது. 

“கரெக்ட், கரெக்ட்… எனக்கும் எந்த ஒரு எல்லையிலயும் நின்னு பழக்கமில்ல… நானும் ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட் சிகெரட் பிடிப்பேன்… நிறைய ஃபிரண்ட்ஸ், வீக் என்ட் பார்டீஸ்… நிறைய பியர் அண்ட் ரம், டேட்டிங் வித் குட் லுக்கிங் கேர்ள்ஸ்… எனக்கே எனக்கான தனிவீடு, இதையெல்லாம் அனுபவிச்சிட்டு ரொம்ப ஹாப்பியா இருக்கேன்…” என்று இவனும் தன் பழக்க வழக்கங்களை சங்கோஜமில்லாமல் வரிசைப்படுத்தி விட, இவளோ ‘என்ன கன்றாவிடா சாமி’ என்ற சுளித்த பார்வையை பரிசாகத் தந்தாள்.

“லுக் வைஷாலி… டேட்டிங்ன்னா ஜஸ்ட் பிரிண்ட்ஸாதான் என்ஜாய் பண்ணுவேன். நாட் பிசிகல் ரிலேஷன்… நானும் கட்டுப்பாடு, கரும்புச்சாறுன்னு வளர்ந்த அப்பாவிதான்… நாலு வருஷ யுஎஸ் வாழ்க்கையில இதெல்லாம் பழக்கமாயிடுச்சு… விட முடியல… அதர்வைஸ் நானும் குட் பாய்தான்” சிறுவனின் மனோபாவத்தில் தன்னிலை விளக்கம் கொடுக்க, அவளும் ‘நம்பிட்டேன், நம்பிட்டேன்…’ என்ற மெத்தனமான பார்வையை அவன் மீது படர விட்டாள்.

“நீயே சொல்லு… ஃபாமிலி லைஃப்ல இதவிட ஹாப்பி கிடைச்சிடுமா? ஜாலி லைஃப்க்கு கண்ட்ரோல் ஆல் டெலிட் குடுக்க வைக்கிற கல்யாணத்தை நான் எதுக்கு பண்ணிக்கணும்?” நேரடியாகவே அவளிடம் அசோக் கேட்க,

“பண்ணிக்காதீங்க… பண்ணிக்காதீங்க… நம்ம வாழ்க்கை, நம்ம இஷ்டபடி வாழ்வோம்… ஆல்வேஸ் ப்ரீடம், ஆல்வேஸ் ஹாப்பி பாஸ்…” என்று கட்டை விரலை உயர்த்தி, தன் நியாயத்திற்கு ஆதரவு தெரிவித்தவளை ரசனையாகப் பார்த்தான். 

வைஷாலியும் தன் மனதில் இருப்பதை, தோழமையுடன் ஒருவரிடம் பங்கு போட்டுக் கொண்டதில் மகிழ்ச்சி அடைந்திருக்க, வந்தவனுடன் எந்த வித சுணக்கமும் இல்லாமல் வார்த்தைகளைக் கோர்த்தாள். 

இருவரின் எண்ணப் போக்கும், ஒரே தடத்தில் பயணிப்பது போன்ற எண்ணம் தோன்ற, அடுத்த சில நிமிடங்கள் அவரவர்களின் எதிர்கால லட்சியங்களை மனம் திறந்து அசைபோட்டு விட்டு கிளம்பும் நேரத்தில்,

“இப்போ வெளியே இருக்குற ஓல்டு அசோசியேஷன்க்கு என்ன பதில் சொல்றது?” ஒரே நேரத்தில், ஒரே கேள்வி இருவரின் மூலம் வெளிப்பட்டதில், ஒரு நொடி அமைதியாகி பின் அங்கே சிரிப்பலையடிக்க, தொலைவில் இருந்து பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாகிப் போனது.

“நான், உங்க அப்பாகிட்ட, உங்களை பிடிக்கலன்னு சொல்லிடுறேன்… நீங்க, என் பாட்டிக்கிட்ட உங்க பேத்தி அதிகப்பிரசங்கி, ரொம்ப வாய் பேசுறான்னு சொல்லிடுங்க… ப்ராப்ளம் சால்வ்டு…” தீர்வை கண்டுபிடித்தவள் குதூகலத்துடன் அசோக்கிடம் பகிரவும்,

“யாஹ்… தட்ஸ் குட்…” என ஆமோதித்தவன், “டீல்..!” என்று கட்டை விரலை உயர்த்த, அவர்களின் பிரச்சனை அத்துடன் முடிந்தது.

மொத்தத்தில் திருமணம் என்ற நடைமுறை மட்டுமே பிடிக்காத காரணியாக முன்நிற்க, அதனை முன்னிட்டே இருவரும் பிடிக்கவில்லை என்ற காரணத்தை முன்னிறுத்தி இருந்தனர்.

இவர்களின் சிரிப்பு சத்தத்தில், திருமணத் தேதியை முடிவெடுக்கும் நிலைக்கு வந்திருந்த வீட்டுப் பெரியவர்களின் ஆசையை, குழி தூண்டி புதைத்து விட்டு, தங்களின் முடிவு இதுதான் என்ற உறுதியோடு, அன்றாட வேலைகளில் தங்களை மூழ்கடித்துக் கொண்டனர்.

                                                                                          **********************************************

சென்னை ஃபோகஸ் ஆர்ட் கேலரி… மிகுந்த கலைநயத்தோடு நேர்த்தியாக அடுக்கப்பட்ட ஓவியங்கள், புகைப்படங்களை தனக்குள் அடக்கிக் கொண்டு விஸ்தாரமாய் பறந்து விரிந்து காணப்பட்டது. வைஷாலியோடு பத்து பேருக்கும் குறையாமல் வேலை பார்க்கும் அந்த கலைக்கூடம், மானேஜர் மனோகரின் தலைமையில், அன்றைய நாளில் இயங்க ஆரம்பித்திருந்தது.  

தனது ஆர்ட் கேலரி அலுவலகத்தில் நுழைந்த வைஷாலி, மானேகருக்கு “குட் மார்னிங் சார்..!” என்று காலை வணக்கத்தை கூறி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட, 

“திங்கட்கிழமை… வாரத்தோட முதல்நாள்… பதினைஞ்சு நிமிஷம் லேட்…” ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு அழுத்தமாக, அவளின் தாமத வரவை குற்றமாக சொல்லி முடித்த மனோகர், ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்தார்.

அங்குள்ள அனைவரிடத்திலும் தோழமை சுபாவத்தில் தட்டிக் கொடுத்தே வேலை வாங்கும் காரியவாதி. தனது தூரத்து உறவு என்ற முறையில் வைஷாலியிடம் சற்று உரிமை எடுத்துப் பழகுபவர்.  

“உங்களுக்கு வயசாயிடுச்சு சார்… தூக்கம் வராது, ஏழு மணிக்கு எழுந்திருச்சு, ஏழரைக்கு கேலரியில வந்து உக்காந்துருவீங்க..! நான் அப்பிடியா? ஊர்ல இருந்து வந்து, சென்னை ட்ராஃபிக்ல மிதிபட்டு, இவ்ளோ தூரம் வந்து சேர வேண்டாமா?” தனது நியாயத்தை சற்றும் தயக்கம் இல்லாமல் துடுக்காகக் எடுத்துச் சொல்ல,  

“ஊறுகா கொண்டு வந்தியா?” அவளின் பேச்சிற்கு செவி சாய்க்காமல், மீண்டும் தனது அடுத்த கேள்வியிலேயே மனோகர் நிற்க, அவர் கேட்டது புரியாமல் என்னவென்று பார்த்தாள் வைஷாலி.

“அதான்… பாட்டி போட்ட ஊறுகாய் கொண்டு வரச் சொன்னேனே…” அமர்த்தலாக, தான் கூறியதை நினைவுபடுத்த, 

“ஓ… ஓ…” என இழுத்து, “கொண்டு வரலன்னா..?” அவரின் பார்வைக்கு சளைக்காமல் இவள் எதிர் பார்வை பார்த்து நிற்க, 

“அப்பிடியே வேலைய விட்டு அனுப்பிச்சுடுவேன்… நீ போகலாம்..! உன் பாட்டி வாராவாரம் ஊறுகா போட்டு குடுக்குறதாலதான், உன்னை இங்கே வேலைக்கு வச்சுருக்கேன்…” சட்டம் பேசினார் மனோகர்.

“அப்பிடியா..! அப்போ நான் இல்லாம நீங்க தனியா சமாளிச்சுடுவீங்க அப்படிதானே?” என்று நக்கலாக அவள்  பேசினாலும்,

“வேர் இஸ் மை ஊறுகாய்..?” என்ற அவரின் கேள்வியில் சற்றும் மாற்றமில்லை.

“போன மாசம் நம்ம கேலரியில எத்தனை எக்ஸ்பிஷன் நடந்தது?” தலைமை கணக்காளராய் இவள் கேட்ட கேள்வியை காதில் வாங்காமல், பெரியவர் அவளது மதிய உணவுப் பையை குடைய ஆரம்பிக்க,

“கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்…” என்று இவள் மீண்டும் அழுத்த, அவரோ ‘தற்சமயம் என்காது, தொலை தொடர்பிற்கு அப்பால் உள்ளது’ என்ற பாவனையில் தனது தேடுதல் வேட்டையில் மூழ்கியிருந்தார்.

“நெக்ஸ்ட் எக்ஜிபிஷனுக்கு எத்தனை நாள் கேலரி புக் பண்ணிருக்கு?”

“—–“

“தெரியாது…”

“இந்த பெயிண்டிங்க்கு ஆர்டிஸ்ட் யாருன்னு சொல்லுங்க? பார்க்கலாம்…” பக்கத்தில் சட்டம் போடத் தயாராக இருந்த ஓவியத்தை பார்த்து கேட்க, அதற்கும் பதில் வரவில்லை.

“—–“

“அதுவும் தெரியாது…” கேள்விக்கான பதிலையும் தானே சொன்ன வைஷாலி,

“ஆர்டிஸ்ட் லிஸ்ட்ல இருந்து, பாங்க் வரைக்கும் எல்லாமே நாங்கதான் பார்த்துட்டு இருக்கோம்… நாங்க மட்டும் இல்லைன்னா இந்த கேலரிய இழுத்து மூட வேண்டியதா இருக்கும். பத்து பேருக்கு அட்டெண்டென்ஸ் போடுற வேலைய மட்டும் பார்த்துட்டு வீராப்பு வேற…” சிரிப்புடன் அவரை சீண்டிக் கொண்டிருக்க, அவளுடைய பேச்சை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் ஊறுகாய் பாட்டிலை வெளியே எடுத்து, சுவை பார்க்க ஆரம்பித்திருந்தார் பெரியவர்.

“ஒழுங்கா அடுத்த மாசத்துல இருந்து இன்கிரீமென்ட் போட்டுக் குடுங்க… என்ன சொல்றீங்க சார்?”

“ஷ்ப்பா… ஊறுகா பிரமாதம்…” சப்பை கட்டு கட்டியவர், விரல்களால் ஏஒன் சர்டிபிகேட்டை கொடுத்து, அவளது கேள்விகளை குப்பை தொட்டியில் போடாத குறையாக காற்றில் பறக்கவிட, இவள்தான் தலையில் அடித்துக் கொண்டு தன்பேச்சை நிறுத்த வேண்டியதாய் இருந்தது.

“ஏண்டி அவர்கிட்ட கேள்வி கேட்டு உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ணிக்கிற?” என்று கேட்டபடியே தோழியும் அவளுடன் வேலை பார்ப்பவளுமான நிஷாந்தினி அவளருகில் வர, 

“இவர் அசந்த நேரத்துல இன்கிரிமென்ட்க்கு, இவர தலையாட்ட வைக்கலாம்னு பாக்குறேன்… எங்கே அதெல்லாம் நடக்குது? ஊறுகா மட்டுந்தான் பாட்டில் பாட்டிலா காலியாகுது…” என்று பெருமூச்சு விட்டபடியே வைஷூ அலுத்துக் கொள்ள,

“ஹாஸ்டல்ல இருந்து வர்றதால லஞ்ச் நமக்கு கிடைக்குது. இல்லன்னா… அதையும் விடாம உள்ளே தள்ளுவாரு, இந்த மானேஜர்..!” என்று நிஷாவும் பதிலுக்கு குறைபட்டுக் கொள்ள,

“மாமிகிட்ட சொல்லி, மூணுவேளைக்கும், இவருக்கு கஞ்சி மட்டுமே குடுக்க சொல்லணும்…” கிண்டலைத் தொடர்ந்து கொண்டே அன்றைய வேலைகளை கையில் எடுத்தாள் வைஷாலி.  

அன்று மாலை வைஷாலி, தன் தோழிகளுடன் ஐஸ்க்ரீம் பார்லரில் அமர்ந்திருக்க…

“இன்னைக்கு எத்தனை ஐஸ்கிரீம் வேணும்னாலும் சாப்பிடு வைஷூ…” என்று நிஷா சூடேற்ற,

“எதுக்கு நிஷூ?”

“காதல் தோல்வி… காதல் தோல்வி… நம் ஆருயிர் தோழி ஸ்வப்னாக்கு காதல் தோல்வி…” என்று கைகளால் சோக வயலின் வாசித்து,

“அத செலிபிரெட் பண்ணத்தான் இந்த ட்ரீட்…” என்றவள் கூற, அருகில் அமர்ந்திருந்த ஸ்வப்னாவும் ஆமென தலையை உருட்டினாள். ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவள். விடுதியில் ஒரே அறையில் தங்கிய பழக்கம், தற்பொழுது நெருங்கிய நட்புறவில் மேன்மை அடைந்திருக்கின்றது.

“நெஜமாவா சிவப்பி? நம்ப முடியவில்லை… இல்லை… இல்லை…” என்று வைஷூவும் ஸ்வப்னாவைப் பார்த்து எக்கோ அடிக்க,

“ஆமாடா ஷாலிகுட்டி! எனக்கும் பிரபுக்கும் பெரிய சண்டை… என்னை பார்க்காதே! என்கூட பேசாதே! ஹாஸ்டல் கீழே இருந்து சனா… சனான்னு கூப்பிடாதே! மெசேஜ் பண்ணாதே… வாட்ஸ்-அப், மூஞ்சி புக்ல எல்லாம் வந்து, உன் தீஞ்ச முகத்தை காட்டாதே… என்னை விட்டுடுன்னு சொல்லிட்டேன்…” மிதமிஞ்சிய சோகத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, தனது காதல் முறிந்த கதையை வேகமாய் சொல்லி முடித்தாள் ஸ்வப்னா.   

“உன்னால முடியுமா… சிவப்பி!?” சந்தேக கேள்வியை வைஷூ முன்வைக்க,

“ஏன்… ஏன் முடியாது?” வீராவேசமாக சிலிர்த்தவள். “பார்க்கலாம்…” என்று நொடியில் பின் வாங்கிட,

“இவளால எப்படி முடியும் ஷாலி? இது சரியான மில்ஸ் அண்ட் பூண்ட்ஸ் கேசுடி… இந்த மாதிரி பத்தொன்பது தடவ சண்டை போட்டு, இருபது தடவ சேர்ந்தாச்சு…” நிஷா தோழியின் பலவீனத்தை சொல்லியடிக்க,

“நோ… நோ… இந்த தடவ டெஃபனெட்டா பிரேக்-அப்தான்…” ஸ்வப்னா உறுதியளித்தாள்.

“போன தடவ இப்பிடிதான் சொன்ன சிவப்பி…” நிஷா நம்பாத பாவனையில் சொல்ல,

“அந்த நேரம் நம்ம சிவப்பி, காதல் கப்பல ஓட்டுற கட்டுமரமா இருந்தா நிஷூ… இப்போ காதலும் வேணாம் கப்பலும் வேணாம்னு கரையேறிட்டா… அப்பிடிதானேடி சிவப்பி கண்ணு…” வைஷூ அவளின் சார்பாக பேச…   

“ஆமாண்டி என் ராசாத்தி..!” வைஷூவை நெட்டி முறித்தபடியே கொஞ்சிக் கொண்டாள் ஸ்வப்னா,

“நவ் ஐயாம் எ ஃப்ரீபேர்ட்… அவுட் ஆஃப் லவ்… அவுட் ஆஃப் ரொமான்ஸ்… நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிட போறேன்… ஜாலியா ஊர் சுத்த போறேன்… உன்னோட ஆல்வேஸ் ப்ரீடம் குருப்ல நானும் மெம்பர் ஆகப் போறேன் ஷாலிகுட்டி…”

“அப்பாடா… ஒரு வழியா உன் மொபைலுக்கு விடிவுகாலம் வந்தாச்சுடி… லவ் பண்ணற பேர்வழின்னு முத்தம் குடுத்தே எத்தன தடவ, டச் ஸ்க்ரீன் மாத்தியிருப்ப…” நிஷா கலாய்க்க,

“இறந்த காலத்தை பத்தி ஞாபகப்படுத்தாதே நிஷூ..!” – வைஷூ,

“உன் சாமியார் குருப்ல சேர, எக்ஸ்ட்ரா ஒரு மாமி கிடைச்சுட்டா… நீயும் என்ஜாய் பண்ணு ஷாலி…” – நிஷா,

“அப்போ நீ!?” – ஸ்வப்னா

“நானும்தான்…” என்ற நிஷா ஹைஃபை கொடுக்க,

மூன்று தோழிகளும் சேர்ந்து அரட்டை அடித்தபடியே, அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் தங்கள் சந்தோசத்தை கொண்டாடி மகிழ, அந்த தருணத்தில் அசோக், தன் நண்பர்களுடன் உள்ளே நுழைந்தான்.

அவனை வைஷூ கண்டுகொள்ள, அவனோ இவளின் புறம் திரும்பாமலேயே, இவளுக்கு முதுகு காட்டி, தூரத்தில் தன்னுடன் வந்தவர்களோடு அமர்ந்து கொண்டான். அந்த செயலில் அவளது மனம் சன்னமாக சுணக்கம் கொண்டது.

‘இவர் சென்னையிலதான் வேலை பார்க்கிறாரா? சொல்லவேயில்ல பாரேன்…’ மனதோடு அவனை சாடிக் கொள்ள, பதிலுக்கு அவளது மனமும் ‘நீ கேட்டியா வைஷூ? உன்னை பத்தி, அவர் விசாரிச்சு தெரிஞ்சுகிட்ட அளவுக்கு கூட, நீ தெரிஞ்சுக்கல’ என்று கொட்டு வைக்க, மனசாட்சியிடம் அசடு வழிந்தாள்.

பெண் பார்க்க வந்த அன்று அசோக், அவள் வேலை செய்யும் இடத்தையும், விடுதியின் முகவரியையும் சேர்த்தே கேட்டுத் தெரிந்து கொண்டான். இவளுக்கு அப்படி தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாமல் போக, கேட்க மறந்து போனாள்.

இதுநாள் வரையிலும் கிராமத்தில், அவன் பெண் பார்த்து சென்ற விவரத்தை கூட தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளாமல் மறைத்தும் விட்டாள்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் எந்தவித மாற்றமும் இன்றி நகல, தோழிகள் மூவரும் தங்களின் ஓய்வுப் பொழுதினைக் ஊர் சுற்றலுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.

ஸ்வப்னாவின் காதல் தோல்வியை கொண்டாடும் சாக்கில் தினமும் ஒரு மாலுக்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவதை வாடிக்கையாக்கி கொண்டிருந்தனர்.

வார இறுதியில் பிரபல மால் ஒன்றில் படம் பார்த்து விட்டு, வெளியில் வரும் பொழுது,

“நம்மள மாதிரி, எல்லாரும் காதல் தேவையில்லன்னு முடிவெடுத்துட்டா, நாட்டுல முக்கால்வாசி டாஸ்மார்க் வியாபாரம் படுத்துடும்டி…” வைஷூ பெருமையுடன் சொல்ல,

“அது மட்டுமா? லவ்வர் கிட்ட கெத்த காமிக்கனும்னு எத்தனை எத்தனை செலவு செய்றாங்க இந்த பசங்க..? அதுக்கு எவ்வளவோ பொய் சொல்லி வீட்டுல காசு வாங்குறாங்க..? அதுவும் குறையும். மொத்தத்துல நாட்டோட பொருளாதாரம் இன்னும் உயரத்துக்கு போய், உலக நாடுகளுக்கு இந்தியா கடன் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை…” என்று நிஷா நீட்டி முழக்க, 

‘ஆண்டவா! இந்த சாமியாருங்க கூட தெரியாத்தனமா சேர்ந்துட்டேனே..! விட்டா இந்தியப் பொருளாதாரமே எங்களாலதான் தலை நிமிர்ந்து நிக்குதுன்னு, ஐநா சபையில போய் பீத்திக்கும் போலேயே!’ என்ற புலம்பலை ஸ்வப்னா மனதோடுதான் சொல்லிக் கொள்ள முடிந்தது.

“என்ன சிவப்பி? நீ ஒன்னும் சொல்லாம வர்ற…” அவளை பார்த்தபடியே கேட்ட வைஷாலி, எதிரில் வந்தவனை கவனத்தில் கொள்ளாமல் தோளோடு மோதிக் கொண்டாள்.

மோதியவனை கண்டிக்கும் நோக்கத்தில், ஏறிட்டு பார்க்க, அசோக் அவளைப் பார்த்து புன்னகைத்து ‘ஹாய்’ சொல்லி சிரித்தான். அவனும் நண்பர்களுடன் வந்திருந்தான் போலும்! உடனடியாக ஒரு தலையசைப்புடன் அவளை கடந்து செல்ல, இவள்தான் அவன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்.  

“என்ன பார்வை அங்கே?” – நிஷா.

“சைட் அடிக்கிறியா ஷாலி? அந்த ஃபிகரும் உன்ன பார்த்து இளிக்குது…” – ஸ்வப்னா.

“ஸ்டாப்… ஸ்டாப்… நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்ல…” தோழிகளின் கேள்விக்கணையில் தன்னிலைக்கு திரும்பிய வைஷூ வேகமாய் மறுத்தாள்.

“ம்ஹும்… சம்திங் இருக்கு போல… அதுதானா?” ஸ்வப்னாவைப் பார்த்து நிஷா கண்ணடித்துக் கேட்க,

“அதேதான்… டபிள் டிகிரி வாங்குன நான் சொல்றேன் அதுவேதான்…” ஸ்வப்னா உறுதியாகச் சொல்ல,

“சேச்சே… அப்படியெல்லாம் இல்ல பக்கீஸ்… என்னோட திட்டுல இருந்து தப்பிக்க, அவர் ஈன்னு இளிச்சு வைச்சுட்டார், தட்ஸ்ஆல்… பிலீவ் மீ கேர்ள்ஸ்…!” சத்தியம் செய்யாத குறையாக வைஷூ சொன்ன பிறகும் தோழிகள் நம்பாத பார்வை பார்க்க,  

“நத்திங் கேர்ள்ஸ்… லெட்ஸ் என்ஜாய்…” பலமுறை தன்னிலை விளக்கம் கூறியே, அவர்களின் எண்ணத்தை திசை திருப்பினாள் வைஷாலி. மறந்தும் கூட அவன் தனக்கு பரிச்சயமானவன் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

இவனை மறக்கவும் மறுக்கவும் வைஷாலி காரணங்கள் தேடிக் கொண்டிருக்க, மோதியவனின் உள்ளமோ அவளை மறுபடியும் பார்க்கும் நிமிடங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!