இனிய தென்றலே – 20

தென்றல் – 20

அன்பெனும் அரியாசனத்தில் இருமனங்களும் ஆரோகணித்த வேளையில் சிறு உரசலாய் அசோக் கிருஷ்ணாவின் வெளிநாட்டுப் பயணம் இருவரையும் முட்டிக் கொள்ள வைத்தது. நீயா நானா பிடிவாதத்தில் இருவரும் தீவிர போட்டியாளர்களாக நின்றனர்.

எலக்ட்ரிக் டிரிம்மரில் கன்னத்தை வழமை செய்து கொண்டிருந்தான் அசோக். “ஏகே!” என்ற அழைப்பிற்கு திரும்பாமல் நிற்க, பின்னால் வந்து அவன் முதுகை தட்டினாள் வைஷாலி.

“உங்களைத்தான்… கார் கீ கொடுங்க! கிளீன் பண்ணி சீட் கவர் மாத்தனும்” மனைவியின் பேச்சை கருத்தில் கொள்ளவே இல்லை அசோக். கணவனின் மௌன விரதத்திற்கு காரணம் தெரிந்தாலும் அசராமல் வார்த்தை வளர்த்தாள் வைஷாலி.

“இப்படி திரும்பி பார்க்காம இருந்தா என்ன அர்த்தம்?” என்றவள் தன்மூக்கை கணவனின் முதுகோடு சேர்த்து தேய்க்க, விருட்டென்று மனைவியின் கையிழுத்து தன்முன்னே நிற்க வைத்து, அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்தான் அசோக்.

“அம்மாடி! இந்த பார்வைக்கு என்னனுதான் நான் அர்த்தம் கண்டுபிடிக்க? ரொமான்சுக்கு இன்னும் நாம ரெடியாகல பாஸ்!” தோள் குலுக்கி சிரிக்க,

“நடக்காதுனு நினைச்சியா ஷாலி?” சீண்டலுடன் மூக்கைத் திருகினான் அசோக்.

“வெயிட்டிங் பாஸ்!” என்று கண் சிமிட்டியவள், “ஷப்பா… இந்த முரட்டுதனம் எங்கே இருந்துதான் வருதோ? கோபம் வந்தா மட்டும் ஏலியனுக்கு மச்சானாகுறீங்க!” பகிரங்கமாய் குற்றம் சாட்டி, மூக்கினை தேய்த்துக் கொள்ள,

“நான் மச்சான்னா, நீ தங்கச்சியா இருக்க… இன்னைக்கு ஒரு முடிவு எடுத்தாகனும் ஷா! உன்னோட பிடிவாதத்த பரண்ல போட்டுட்டு என்னோட ஃபிளைட் ஏற ரெடியாகிக்கோ!” கணவனாக காட்டமாய் உத்தரவிட்டான்.

“நீங்களே முடிவெடுத்து, என்னை அக்சப்ட் பண்ண சொல்றீங்க ஏகே! என்னால அங்கே வந்து இருக்க முடியாது?”

“உன்னை பிரிஞ்சு இருக்கனுன்னு நினைச்சாலே, அவ்வளவு கஷ்டமா இருக்கு ஷாலி! என்னை புரிஞ்சுக்கோ!” கணவன் உருகிக் கரைய, அசரவில்லை மனைவி.

“எனக்கு அங்கே வந்து உங்களை மட்டுமே பார்த்து நாளை கடத்த முடியாது ஏகே! ஆறுமாசம்தானே சீக்கிரம் முடிஞ்சுரும். நாலு வருஷம் தனியா இருந்தவருக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல!”

“அப்போ இருந்த அசோக், கெட்ட பையன்டா!”

“ஆபிஸ்க்கு டைம் ஆகுது ஏகே! ஆர்கியு பண்ணாம கீ குடுங்க… அப்பறம் என்னாலதான் லேட்டுன்னு அதுக்கும் சேர்த்தே முறைப்பீங்க!” பேச்சை முடித்து விட்டதன் அடையாளமாய் அங்கிருந்து அகன்று விட்டாள்.

“இப்ப நீதான்டி கடிச்சு வைக்கிற… பிடிவாதக்காரி! இவ என்ன சொல்றாளோ அதுதான் நடக்கணும்னு பாக்குறா… நானே செல்லம் குடுத்து, இவளை கெடுத்து வச்சுருக்கேன்,” வாயில் பற்கள் கடிபட, தன்வேலையை பார்க்க சென்றான் அசோக்.

இவனது பொறுமையின் அளவுகோலை அதிகப்படுத்தும் முயற்சியில் வெற்றிநடை போடுகிறாள் இவனின் மகாராணி. 

கடந்த ஒருவாரமாகவே இந்த வார்த்தை போர்தான் இருவருக்கும் இடையேயும் களைகட்டிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டு உத்தரவை ஆசையுடன் இவன் வந்து சொல்ல, அதை சுவாரசியமின்றி கேட்டவள், தான் வரவிரும்பவில்லை என்று பிடிவாதத்தில் நின்றாள்.

“எனக்கு நாக்கு மடக்கி, வளைச்செல்லாம் இங்கிலிஷ் பேச வராது ஏகே!”

“நான் இருக்கும்போது இந்தக் கவலையெல்லாம் உனக்கெதுக்கு? எல்லாமே பழகிடும்டா!”

“கிளைமேட் ஒத்துக்காது, கம்பெல் பண்ணாதீங்க!” ஒன்றுமில்லாத காரணத்தைகூறி அவனுடனான பயணத்தை தவிர்ப்பதில் குறியாய் இருந்தாள்.

“கரெக்டான ரீசன் சொல்லு, நானும் ஒத்துக்குறேன்! இப்படி எதுவுமே இல்லாம அடம்பிடிச்சா, உன்னை பார்சல் பண்ணிட்டு போகவும் ரெடியா இருக்கேன்!” தன்பங்கிற்கு அவனும் பிடிவாதத்தில் நிற்க அன்றிலிருந்து இருவருக்கும் தர்க்கப்போர் குறைந்த பாடில்லை.

இன்னதென்று இல்லாமல் ஏதேதோ காரணங்களை சொல்லி தன்னை தவிர்ப்பதை நினைத்து அத்தனை ஆத்திரமும் கோபமும் அசோக்கை சூழ்ந்து கொள்ள, எந்நேரமும் கோபத்தை வெளிப்படுத்தி குறையாத கடுகடுப்பில் வலம் வந்தான்.

இப்படியே ஒருவாரம் கழிந்திருக்க, இன்று அதற்கு கெடுவிதித்து அலுவலகத்திற்கு சென்று விட்டான். இரவில் தனக்கு சாதகமான பதிலை மனைவி சொல்வாள் என்று எதிர்பார்த்துவர, அவளோ எப்பொழுதும்போல் ‘மாட்டேன்’ என்ற முடிவில் நிற்க ஏகத்திற்கும் ரௌத்திரமாகி விட்டான்.

“அப்படியென்ன வீம்பு உனக்கு? என்னை நம்பி நீ, தனியா வரமாட்டியா?” நிலா வெளிச்சத்தில் மொட்டைமாடியில் நடைபயின்று கொண்டிருந்தவளை அசைய விடாமல் நிற்க வைத்து கேள்வி கேட்டான் அசோக்.

“காரணம் ஏற்கனவே சொல்லிட்டேன் ஏகே!”

“உனக்கு எல்லாமே பார்த்து செய்ய நான் இருக்கேன்! நீ வேற ஏதோ மனசுல வச்சுட்டு பேசுற… உண்மைய சொல்லு ஷாலி!” கிடுக்கிப்பிடி போட, கூர்மையாய் அவனை பார்த்தவள்,

“புரியுதுல்ல… எல்லாம் உங்க நல்லதுக்குதான்! இந்த பேச்சை இதோட விடுங்க”

“இப்பிடி சொல்லியே நீ, என்னை விட்டு ரொம்ப தள்ளிப் போற ஷா! உனக்காக என்னை நிறையவே மாத்திட்டு வர்றேன். இருந்தும் உனக்கு என்மேலே நம்பிக்கை வரலையா?” சிறுகுழந்தையை போல் தன்நிலையில் மாறாமல் நின்று கேள்விகள் கேட்பவனை என்னவென்று சொல்லி புரிய வைக்க?

“ஊப்ப்… என்னை பேச வைக்கிறீங்க ஏகே! இங்கே உங்களோட இருக்குற நேரம் தவிர, மற்ற நேரங்கள்ல என் கவனத்தை வேறபக்கம் திசை திருப்பிடுவேன். அங்கே போனா இருபத்திநாலு மணிநேரமும் உங்களை மட்டுமே நினைச்சு, உங்ககூடவே இருக்க என் மனசு ஆசைப்படும்”

“நல்லதுதானேடா! எனக்கும் அதுல விருப்பம்தானே?”

“அதுதான் வேண்டாம்னு சொல்றேன். ஒருதடவ என்னை மறந்து உங்களை காயப்படுத்தினத, மறக்க முடியாம நான் தவிச்சுட்டு இருக்கேன். இதுல திரும்பவும் உங்ககூட தனியா வந்து உங்களை சோதிக்க, நான் விரும்பல”

“அவ்வளவு கஷ்டம் குடுக்குறேனா ஷா! இதுக்கு விமோசனமே கிடையாதா?”

“பெரிய வார்த்தை எல்லாம் வேணாம் ஏகே… ஏற்கனவே என்னை, உங்ககிட்ட தொலைச்சிட்டு நிக்கிறேன். இன்னும் உங்கள சங்கடபடுத்தி, என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காதீங்க! கீழே போறேன், சீக்கிரம் வந்து சேருங்க” அவனை விட்டு விலக முயற்சிக்க,

“ஏன் ஷாலி? ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப் ரிலேசன்ல செக்ஸ் இல்லாம குளோசா இருக்கவே கூடாதா இல்ல முடியாதா?”

“இத்தனை நாள் நாம அப்பிடிதானே இருக்கோம் ஏகே! இதுல என்ன குறை கண்டீங்க?”

“பின்ன ஏன், உன் கற்பனைய இஷ்டத்துக்கு ஓடவிட்டு என்னை விட்டு விலகி நிற்க பார்க்கிற?”

“இதுக்கு எப்படி பதில் சொல்ல? அன்போட வெளிப்பாடு அக்கறையில முடிஞ்சா, ஆசையோட வெளிப்பாடு ஸ்பரிசத்துல முடியுது. இது எல்லாவகை உறவுக்கும் பொருந்தும். ஆத்மார்த்தமான உறவு ரணகளமா தொடங்கக்கூடாது. அதுதான் என்னோட வேண்டுதலும் மெனக்கெடலும் கூட…

“அப்படின்னா நம்ம உறவு முழுமையடையலன்னு சொல்ல வர்றியா?”

“அன்பிற்கான நிறைவு தாம்பத்தியத்துலதான் முடியுதுன்னு நம்பிட்டு இருக்கேன். வாழ்க்கையோட பூரணத்துவம் அது. நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையானதும் கூட…

அதுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவும் நான் தயாரா  இருக்கேன். ஆனா, அவசரப்பட்டு அதோட புனிதத்தை சின்னாபின்னமாக்கி பின்னாடி வருத்தப் படவேண்டாம்னுதான் மெனக்கெடுறேன். இதுக்கும்மேல என்னை பேசவைக்காதீங்க!” என்றவள் கீழே சென்று விட்டாள்.

இல்லற வாழ்விற்கான தெளிவை தன்போக்கில் ஆணித்தரமாக உரைத்து விட்டாள். இவனது அதிசயம், இவனின் அற்புதம் இன்னும் எத்தனை விசயங்களைத்தான் இவனுக்கு கற்றுக் கொடுக்கப் போகிறதோ?

இவள் என்னமோ தெளிவாய்தான் இருக்கிறாள். நாம்தான் ஒன்றுமில்லாததை எல்லாம் சேர்த்து வைத்து குழம்பிக் கொண்டிருக்கிறோம் என தன்மடமையை நினைத்து வெட்கிக் கொண்டு, மனைவியின் நினைவில் ஆழ்ந்து போனான்.

அதுவே அவனுக்கு ராஜபோதை தருவதாய் இருக்க, இப்படி நினைக்க வைத்தே தன்னை கிறுக்கு பிடிக்க வைத்து விடுகிறாள் என்ற பரவச உணர்வில் தன்னை மறந்து மொட்டைமாடியில் நெடுநேரம் அமர்ந்து விட்டான்.

பால்நிலவும் நடுநிசியை தீண்டி விட்டு, தனது யாத்திரையை துரிதப்படுத்திய நேரத்தில், இவன் தோளில் வந்து முகம் புதைத்தாள் இவனது அழகி.

திடுக்கிட்டு அவளைப் பார்க்க, கண்சிமிட்டி சிரித்தவள்,

“பேய் நடமாடுற நேரத்துல என்ன யோசனை ஏகே? காத்துல கோடிங் எழுதி முடிக்கிறீங்களா?” சீண்டலுடன் மனையாள் கேட்டு முடிக்க, விழி விரித்து அவளை விழுங்கிக் கொண்டான்.

“தூங்கலையாடா, ஏன் எழுந்து வந்த?”

“நீங்க நிம்மதியா தூங்கின பிறகுதான், எனக்கு தூங்கிப் பழக்கம் ஏகே! என் பின்னாடி வருவீங்கன்னு கீழே போய் வெயிட் பண்ணினா, இங்கே உட்கார்ந்து தவம் பண்றீங்க! எதையும் போட்டு மனசுல குழப்பிக்காம வாங்க!” என்றவள் அவனது கைகளை இழுத்துக் கொண்டு வந்து படுக்கவும் வைத்து, ஐந்தே நிமிடத்தில் அவள் உறங்கியும் போனாள்.

இருவரின் அருகாமையே அவர்களை அமைதிபடுத்த, அதிகநேரம் எடுத்துக் கொள்ளாமல் உறங்கியிருந்தனர். வெளிநாட்டு பயணத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இடையில் இருக்க, விதவிதமான முறையில மனைவியிடம் தனது கோரிக்கையை வைக்கத் தொடங்கினான் அசோக்.

“உனக்கு அடிக்கடி புரை ஏறினா கஷ்டமா இருக்குமா ஷாலி?” மிகஅக்கறையாக அர்த்தமில்லாத கேள்வி ஒன்றை கேட்டு மனைவியை அதிர வைத்தான் அசோக்.

“ஏதாவது புரியுர மாதிரி கேளுங்க ஏகே!” அலுத்துக் கொண்டவளை வாஞ்சையுடன் நோக்கியவன்,

“இல்லடா… நான் மட்டும் தனியா யுஎஸ் போனா, எந்த நேரமும் உன்னையே நினைச்சிட்டு இருப்பேன்! அப்போ எல்லாம் உனக்கு புரையேறி, நீ கஷ்டபடணும். அதுக்கு பதிலா என்கூட வந்தா என்னவாம்?”

“ஏன் இப்படி அல்பத்தனமா யோசிக்கிறீங்க! நிஜத்தை அவ்வளவு எடுத்து சொல்லியும் உங்க பிடிவாதம்தான் உங்களுக்கு பெருசா போகுதா?”

“ஏன், அதுல இருக்குற என்னோட அக்கறைய நீ பார்க்க மாட்டியா?”

“உங்க அக்கறைக்கு தௌசண்ட் கிஸ் குடுக்கணும்னுதான் ஆசையா இருக்கு! ஆனா, அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜான்னு நீங்க உர்றங்கொட்டானா முறைப்பீங்க!” என்றவளின் பார்வை கணவனை ஆசையுடன் பார்த்தது.

இந்த ஆறு மாதங்களாய் மனைவியின் அன்பான அக்கறையிலும், அதிகப்படியான கவனிப்பிலும், மயக்கும் வசீகரனாய் மாறியிருந்தான் அசோக். தன்நிலை மேம்படுத்தும் பயிற்சிகள் அவனின் ஆளுமையை மேலும் கம்பீரமாக்கிக் காட்டியது.

கணவனின் மெருகேறும் அழகில் வைஷாலியும் தன்னை தொலைக்க ஆரம்பித்திருந்தாள். இவனுக்கான இவளது காத்திருப்பும் புரியாத சுகத்தை கொடுக்க, அதை அனுபவிக்கவும் கற்றுக் கொண்டாள்.

“இன்னும் ரெண்டுநாள் மனசை போட்டு உளப்பிக்காம நிம்மதியா இருங்க ஏகே! அங்கே போய் சேர்ந்ததும் ஒரு மணிநேரத்துக்கு ஒருதடவ வீடியோகால் பேசுங்க! உங்க அக்கபோர தாங்கமுடியாம உங்க மேலிடம் உங்க சீட்ட கிழிச்சே வீட்டுக்கு அனுப்பிடும்” சிரித்தபடியே ஏகத்திற்கும் நக்கலடித்தாள் வைஷாலி.

“அடிப்பாவி! அப்பறம் புவ்வாவுக்கு என்ன பண்றது?”

“இருக்கவே இருக்கு ஊரும் வயலும்… அதோட நம்ம வாழ்வை பிணைச்சுப்போம். இன்னும் குளோசா இருக்கலாம்” கிண்டலுடன் சொல்ல,

“உன் மாமனார் முன்னாடி சொல்லி வைக்காதடி! சும்மாவே என்னை கூட்டிட்டு போக நல்லநாள் பார்க்குறவரு!!” பார்வையால் கடுகடுக்க

“கோபமா பேசும்போது மட்டும் டி போடுற கெட்ட பையன் எட்டி பார்க்குறான்! என்ன டிசைனோ?”

“உனக்கு செல்லம் கொடுத்து, கெடுத்து வச்சதோட டிசைன்தான் அது. என்னை டீல்ல விட்டு வேடிக்கை பார்க்கிறதே ஃபுல் டைம் ஜாப்பா வச்சுருக்க நீ!” என்று கடிக்காத குறையாக அலுவலகம் புறப்பட்டு சென்றான்.

விமானமேறும் நாள் பக்கத்தில் வரவர இவனது அலம்பல்களை தாங்கிக் கொள்ள இயலாமல் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் வைஷாலி.

“ஊருக்கு நீங்க போறீங்களோ இல்லையோ நான் போறேன்! பாட்டி வீடுதான் சொர்க்கம்னு நினைக்க வைக்கிறீங்க!” என்று அவன் காதிற்குள் புகை வருமளவிற்கு கடுப்பேற்றிவிட முயன்று  அமைதியானான்.

அதிகாலை ஐந்து மணிக்கு விமானம்… கடைசிநேர பரபரப்பாய் அனைத்தையும் எடுத்து வைத்து முடித்தவன், உணவை கொறித்து விட்டு மனமெங்கும் உண்டான அலைகழிப்பில் அறையில் குட்டிக்கரணம் போட்டுக் கொண்டிருந்த நேரம் இரவு பத்துமணி.

“ரிலாக்ஸ் ஏகே! ஏன் இவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க?”

“அங்கே போயி நான் திரும்பவும் பழைய நிலைக்கு மாறிடுவேனோன்னு பயமா இருக்கு. மெடிசன், யோகான்னு எவ்வளவுதான் ஃபாலோ பண்ணிட்டு இருந்தாலும், இந்த பயமும் தயக்கமும் என்னை விட்டு ஒழிய மாட்டேங்குது” தனது பரிதவிப்பை முழுதாய் மனைவியிடம் கொட்ட,  ஆதரவாய் அவன் தலைகோதினாள் வைஷாலி.

“மனச அமைதியா வச்சுக்கோங்க ஏகே! வேண்டாத விசயங்களை, இப்போ இருந்தே நினைச்சு ஏன் குழப்பிக்கிறீங்க? அத விட்டு வெளியே வாங்க!

ஆறுமாசம் கழிச்சுதான் என்னை நேர்ல பார்க்க போறீங்க… ஷோ, நீங்க புறப்படுற நேரம் வரைக்கும் உங்க பார்வை, உங்க மனசு என்னை தவிர வேற எதையும் சிந்திக்க கூடாது, ஓகே!” கண்டிப்பான உத்தரவில் அவனை அமைதிப்படுத்தி உறங்க வைத்தாள்.

குடைராட்டினச் சுற்றலாய் அவனது எண்ணங்கள் மனைவியை மட்டுமே வலம்வர ஆரம்பிக்க, அவள் முன்னர் பேசிய பேச்செல்லாம் மனதில் தோரணம் கட்டியது. அந்த நினைவில் அவளை சீண்டவும் தொடங்கினான் அசோக்.

“ஷாலி அன்னைக்கு தௌசண்ட் சொன்னியே? அதுல, ஒன்னு இப்போ கிடைக்குமா?” கணவனின் எதிர்பாரா கேள்வியில் திடுக்கிட்டவள், தன்னை சீண்டிப் பார்க்கிறான் என்று  சுதாரித்துக் கொண்டு.

“குட்பாய்!” என்று அவனின் உச்சி முகர்ந்து நகர, அது கணவனுக்கு போதவில்லை. இப்பொழுது தனது விளையாட்டுதனத்தை கைவிட்டு தீவிரமாகவே தன் தேவையை வெளிப்படுத்தினான்.

“அங்கே இல்ல, இங்கே வேணும்” என்று தன் இதழை காண்பிக்க,

புதிராக கணவனை நோக்கியவள், “சந்தோசமா ஊருக்கு கிளம்பனும், சீக்கிரம் படுங்க!” கன்னத்தை தட்டிக் கொடுத்து உறங்க முயன்றாள்.

மனைவியை நிராசையுடன் பார்த்தவன், ”ஒன்னு குடுத்தா உன் ஞாபகமா வச்சுப்பேன்டா!” பாவமாய் கெஞ்ச,

“வேண்டாம் ஏகே!” என்றிவள் தடுக்க, “ம்ப்ச்…” சலித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

கணவனின் ஏக்கமுகம் மனைவியின் மனதை கலங்க வைத்தது. ‘முதன் முறையாக ஆசையுடன் கேட்டிருக்கிறான், இந்த நேரத்தில் நிராகரித்தால் வெகுவாய் வருந்தி விடுவான்’ என்றெண்ணி, தன்மனதை கடிவாளம் போட்டு கணவனின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தாள்.

முதுகை காட்டிக் கொண்டு உறங்குபவனிடம், “அந்த பக்கம் திரும்பி படுத்தா எப்படி கொடுக்கிறதாம்?” சன்னக் குரலில் கேள்வி எழுப்ப

“நீ பயந்துட்டு குடுக்க வேணாம்டா!” வெறுமையான குரலில் சொல்ல,  

“பிகு பண்ணாதீங்க பாஸ், திரும்புங்க!” என அவனை திருப்ப முயற்சிக்க, அவனோ அசையவில்லை.

“உங்க கோபத்தை சால்வ் பண்றதே, எனக்கு பெரிய வேலையா இருக்கு!” பொய்யாய் சலித்துக் கொண்டவள், அவன் முதுகை ஒட்டிக்கொண்டு அவனின் முகத்தை தன்னை நோக்கி முயன்று திருப்ப, இம்முறை மின்சாரம் பாய்ந்தது அசோக்கின் உடம்பில்.

இருவரின் உடலும் உரசிக் கொண்ட மிகநெருக்கமான நிலைதான். புரியாத பரவசத்தில் அந்த இன்பவுராய்வு மீண்டும் வேண்டுமென்று மனம் துடிக்க, கணவனின் கைகள் மனைவியின் பாதி உடலை தானாகவே, தன்மேல் போட்டுக் கொண்டது.

“என்ன பண்றீங்க?” வைஷாலி விழி விரித்து கேட்க, விரலால் தன்இதழை காட்டினான்.

“காரியத்துல கெட்டிதான்” நமட்டு சிரிப்பில் முணுமுணுத்து, நெற்றி, கன்னம் என வலம் வந்து தன்னிதழை அவனிதழுடன் ஒற்ற, அடுத்தநொடி மனைவியின் இதழை தனக்குள் அடக்கிக் கொண்டான் அசோக்.

தனக்கானவளை முதன்முதலாய் காதலுடன் அணைக்கும் அணைப்பு, இத்தனை நாளும் தான்பட்ட பரிதவிப்பின் உச்சமென எல்லாம் சேர்ந்து அசோக்கின் உணர்வுகளை தூண்டிவிட, மனைவியை விடுவிக்கவும் இல்லை.

அலைபுற்றிருந்த மனம் அந்த நேரத்து தீண்டலில் அமைதி கொள்வதாய் அவன் உணர, மனைவியை விலக்க விரும்பாமல் மூச்சுமுட்டும் அளவிற்கு அணைப்பினை இறுக்கினான்.

மனமும் உடலும் மோகத்தில் முக்குளித்துவிடு என்று ஆணையிட்டதில், மனைவியிடம் பார்வையால் சம்மதம் கேட்க, அவளோ, “ஆர் யூ ஆல்ரைட்?” என்ற சந்தேக கேள்வியில் கணவனின் வேகத்திற்கு தடைகல்லாய் நின்றாள்.

தனது செயல்களினால் மட்டுமே மனைவியின் சந்தேகத்தை தீர்க்க விரும்பியவன், அவளை தன்ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து தன்னிதழால் மெதுமெதுவாக ஆசைகளை பட்டியலிடத் தொடங்க, வைஷாலியின் கண்கள் தாமரையாய் விரிந்து கணவனை கண்டது

புரியாத பாலபாடத்தை சொல்ல தொடங்கியவனின் உடல் மொழிகள், வைஷாலிக்கு வியப்போடு அதிர்வையும் ஒருசேர உண்டாக்கியது. கலவரம் கொண்டு, வருத்திக் கொள்வானோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நொடியும் அவன் முகத்தைதான் பார்த்திருந்தாள்.

ஆர்ப்பாட்டம் இல்லாத தொடக்கத்தில் மனைவியை ஆராதிக்க முயன்றவனும் அவளுக்கு வலித்துவிடுமோ என்ற கரிசனத்தில் அவளின் முகம் பார்த்தே முன்னேறினான்.

அறியாத விசயத்தை தட்டுத் தடுமாறி இருவரும் அறிந்து வெற்றி கண்டபோது சொல்லாத வெட்கம் வந்து இருவரையும் முகம் சிவக்க வைக்க, ஒருவருக்குள் ஒருவராய் ஒளிந்தே இளைப்பாறிக் கொண்டனர்.

“தாங்க்ஸ்டா ஷாலி!” ஆனந்தக் கண்ணீருடன் மனைவியை அணைத்துக் கொள்ள,

“வெல்கம் அகி!” என்று கணவனை, தன்னுடன் பிணைத்துக் கொண்டாள் மனைவி.

வாழ்வின் முழுமையை உணர்ந்த மகிழ்வில் தன்னையும் மீறி கண்ணீர் வழிந்தது அவனுக்கு. கணவனின் உணர்ச்சி வசபட்ட நிலையை மாற்ற நினைத்தவள்,

“இதெல்லாம் எதார்த்தம்தான் அகி! அமைதியா இருங்க” அவனை இயல்பிற்கு இழுக்க,

“டோட்டலா என்னை மாத்தியிருக்கடா! உன்னால மட்டுமே, எனக்கு சாத்தியமாகி இருக்கு!” நெகிழ்ந்தவன் தன்அன்பின் வெளிப்பாட்டை ஆசையாக முத்தமிட்டே கொண்டாடிக் கொண்டான்.

அளவில்லா புரிதலில் ஆழமான நேசத்தில் திளைத்தவர்கள் அழகான இல்லற பாடத்தை முடிவில்லாமல் படிக்க தொடங்கினர்.

மனதின் சஞ்சலமெல்லாம் எல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தது இருவருக்கும். இதே தனிமையும் இனிமையும் இன்னுமின்னும் வேண்டுமென இருவரின் உடலும் உணர்வும் இனிமையாய் இசைக்க ஆரம்பிக்க, அழகான இல்லறக் கவிதை அரங்கேற்றம் கண்டது.

கண்ணும் கண்ணும்

சுகம் பின்னும் பின்னும்…

அந்த மன்மத மின்னல் ஒன்றே

பிரம்மனை காயம் பண்ணும்…

அதிகாலை மூன்று மணிக்கு விமானம் நிலையம் செல்ல வேண்டும் என்றிருக்க, அது வரையிலும் மனைவியிடம் கட்டுண்டு கிடந்தது கணவனுக்கு போதவில்லை.

“ஆசையா கொஞ்சிப்பேசி, ரொமான்ஸ் பண்ணி இப்படி என்னை தனியா போகச் சொல்றியே ஷா?” முழுதாய் துவண்டிருந்தவளின் இடைவளைத்துக் கொண்டு, தன்னுடன் வருமாறு மீண்டும் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான் அசோக்.

கூடல் ஆரம்பித்த வேளையிலிருந்து கணவனின் அத்துமீறலை தடுக்க இயலாமல் தத்தளிக்க தொடங்கியிருந்தவள், அவனிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்ளவே பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தாள்.

“நாலு மணிநேரம் ரெமோ அவதாரம் எடுத்தது பத்தலையா? சீக்கிரம் கிளம்புங்க! மனசுல இருக்குற குழப்பம் எல்லாம் இப்ப காணமா போயிருக்கும். சந்தோசமா போயிட்டு வாங்க அகி!” கண்டிப்பும் காதலும் போட்டிபோட வம்படியாக அவனை எழுப்பி தயார்படுத்தினாள்.

“ரொம்ப கொடுமைக்கார டீச்சர்டி நீ! இப்படியா ஒரு புருஷனை அம்போன்னு தனியா விடுவ? உன்னை நினைச்சே கரைஞ்சு காணமா போகப்போறேன் பாரு!” என்றவனின் வாயில் சப்பென்ற அடி, மனைவியின் கைவண்ணத்தில் கிடைக்க,

“இது மட்டுந்தான் பாக்கி இருந்தது. அதையும் செஞ்சு முடிச்சியா? என்னோட அருமை உனக்கு எப்போதான் தெரியுமோ?” கணவனின் ஆதங்கத்தில் அவளும் தளர்ந்தே போனாள்.

“எதுக்கு இவ்வளவு பிடிவாதம் அகி? உங்களைப் பத்தி நீங்க எப்போதான் தெரிஞ்சுக்க போறீங்க? பி ஸ்ட்ராங்!” என்றவளின் கரம் வாஞ்சையாய் கணவனின் தலைகோதிவிட, அவள் கண்களுடன் தன்கண்களை கலக்க விட்டான் அசோக்.

இத்தனை நேரம் ஆசையும் தாபமும் விளையாடிய இருவரின் கண்களும், இப்பொழுது அன்புடன் தங்களது இணையை ஆராயத் தொடங்கியிருந்தது.

“என் இஷ்டத்துக்கு உன்னை….” என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணறியவன், “ரொம்ப கஷ்டமா இருந்ததாடா? உனக்கு வருத்தமில்லையே!” என அக்கறையாக கேட்க,

அவனின் இதழினை ஆசையோடு வருடி, தனக்குள் புதைத்து, அவன் மூச்சுக்கு தடுமாறும் போதுதான் விடுவித்தாள்.

“இனி ஒருதரம் இப்படியொரு அர்த்தமில்லாத கேள்வி கேட்டா உங்களை கடிச்சு வைச்சுடுவேன்!” இயல்பிற்கு திரும்பி, அவனை கிளப்ப ஆயத்தமானாள்.

விமான நிலையத்திற்கும்கூட வரமாட்டேன் என்று தனதறைக்குள் முடங்கிக் கொண்டாள் வைஷாலி. இதிலும் அவனுக்கு பெரும் வருத்தம்தான்.

உடல் அயர்ச்சியில்தான் தவிர்க்கிறாள் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, விமானம் ஏறும் நேரம் மனைவியுடன் பேசவென அவளை அழைக்க,  

“ஹாப்பி ஜர்னி அகி!” எடுத்த எடுப்பிலேயே அவளும் வாழ்த்த,

“ஹேய் உன்னோட லவ்வர்பாய் கிடைச்சுட்டான் போல!”

“போனாப்போகுதுனு உங்களை ப்ரொமோட் பண்ணிட்டேன். இதையே இப்போதான் கண்டுபிடிக்கிறீங்களா?”

“என்ன பண்றது ஏறியிருந்த போதை எதையும் யோசிக்க விடலையே? அங்கே எப்படிடா? எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதா?” என்று சீண்டலில் இறங்க,

“அதெல்லாம் உங்களுக்குத்தான் பாஸ்! நாங்க இதுக்கெல்லாம் அலட்டிக்க மாட்டோம்” நையாண்டியுடனும் நக்கலுடனும் மேற்கொண்டு பத்து நிமிடங்கள் பேசி வைத்தவளுக்கு, அறையில் தனது படுக்கையே தகிக்க ஆரம்பிக்க, தனியாளாக திண்டாடிப் போனாள் வைஷாலி.