இனிய தென்றலே – 21

இனிய தென்றலே – 21

தென்றல் – 21

அலைபேசியின் வழியாக தனது ஓவியங்களை காணொளியில் காண்பித்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. மறுபக்கத்தில் இருந்து அசோக் கிருஷ்ணா மனைவியின் கைவண்ணத்தை சிலாகிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான்.

இவன் வெளிநாட்டிற்கு பறந்து வந்து பதினைந்து நாட்கள் முடிந்திருந்தது. தினமும் இந்தியாவின் அதிகாலை நேரத்தில் மனைவியுடன் காணொளியில்(வீடியோ கால்) பேச ஆரம்பிப்பவன், தனது அன்றாடப் பொழுதுகளைகூறி முடிக்கும்போது ஒருமணிநேரம் தாண்டிச் சென்றிருக்கும்.

பிடிவாதத்தில் கணவனுடன் செல்லாமல் இருந்தவளால் அவனில்லாத அறையில் தனியாக இருக்க முடியவில்லை. நொடிக்குநொடி அவனது நினைவே இவளை ஆக்கிரமிக்க தொடங்கியதில் வெகுவாய் நொந்து போனாள்.

‘தயவு செய்து பழைய வைஷாலியாக இருக்க விடேன்’ என தன்மனதிடம் அவளே மண்டியிட்டு கெஞ்சினாலும் மனமோ அவளது வார்த்தைக்கு கட்டுப்பட மறுத்து, காதலெனும் மாயப்பிசாசின் பிடியில் அவளை வளைத்து விட்டது.

கணவனுடன் ஆசையாக கூடிக்கலைந்த காதல் பொழுதுகளை நினைவூட்டும் அவளது மெத்தையும் தணலாய் உஷ்ணப்படுத்திவிட, அறையில் இருப்பதையே வெறுத்தாள்.

உள்ளத்தின் கொதிப்பு உடலிலும் எதிரொலித்து, தூக்கமும் உணவும் தொலைதூரமாகிவிட, சோர்வோடும் உடல் மெலிவோடும் வலம்வர அதுவே காரணமாகிப் போனது. கணவனுக்கு, தன்நிலை தெரிந்தால் கிடைத்தது காரணமென்று, தன்னை அங்கே அழைத்துக் கொள்வதிலேயே குறியாய் இருப்பான் என்பதும் விளங்க, தனது பசலைநோயை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

தினந்தோறும் அலைபேசியில் கணவனை கண்டதும் மனைவியின் விழிகள் கருந்திராட்சைகளாய் பளபளத்து விடும். ஆசைப் பார்வையை மாற்ற முடியாமல் தவிக்கும் மனைவியின் அழகை கண்டு கொள்வான் அசோக். இன்னும் எத்தனை நாள்தான் எனக்கான தேடலை நீ சொல்லாமல் மறைப்பாய் என்றே அவன் கண்களும் கேலி பேசிவிடும்.

மனைவியுடன் பேசும் ஒவ்வொரு நொடியும் பொக்கிஷமான நிமிடங்கள்தான் அவனுக்கு. அவளுடன் பேசும்போது உண்டாகும் பரவசத்தை தனக்குள் அடக்கிக்கொள்ள நன்றாக பழகிக் கொண்டான். யோகாவில் கற்றுக்கொண்ட பொறுமை அவனுக்கு நன்றாக கைகொடுத்தது.

ஆகமொத்தம் தன்னால் பிரிந்திருக்க முடியாது என்று முகாரி பாடியவன் சாந்தமாய் இருக்க, அவனுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வழியனுப்பி வைத்தவளோ, எந்நேரமும் உச்சபட்ச அலைகழிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தாள்.

தனது அவஸ்தையை கணவனுக்கு தெரியாமல் மறைப்பதில் திண்டாடிப் போனாள். மூச்சுமுட்ட வைக்கும் தனது தனிமைப் பொழுதுகளை வண்ணம் தீட்டுவதில் விற்று ஓவியங்களாக லாபம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பெருமுயற்சியுடன் தீவிரமாய் ஓவியம் தீட்டுவதில் முனைப்போடு செயல்பட்டாள். பத்து ஓவியங்கள் தயார் நிலையில் அணிவகுத்து நிற்க, அதை கணவனின் பார்வைக்கு அலைபேசியின் வாயிலாக கடத்திக் கொண்டிருந்தாள்.

“நீ கலர்ஸ் யூஸ் பண்றதவிட, ப்ளாக் அண்ட் க்ரேதான் ரொம்ப யூஸ் பண்றே! ஏன் ஷாலி?”

“எல்லா கலர் பேஸ்டும் எந்த நேரமும் கையில இருக்காது அகி! அதோட, ஓவியத்துல என்னை ரொம்ப ஈர்க்கிறது கருப்பு நிறம்தான். ஒவ்வொரு நிறத்துக்கும் குணமும் தேவையும் மாறுபடும். பொதுவா வண்ணங்கள் நம் உணர்வுகளை பிரதிபலிக்கும்.

ஒரு ஒவியத்தில நிறைய நிறங்கள் இருந்தா, அது முதல்ல நம்மை பிரமிக்க வைக்கும். என்னனு புரியாம நம்மை திணறடிக்கும். அதெல்லாம் தாண்டி ஓவியத்தை கூர்ந்து பார்த்தா மட்டுமே அதோட அர்த்தத்தை புரிஞ்சுக்க முடியும்” பாடமாகவே எடுக்க ஆரம்பித்து விட்டாள் வைஷாலி.

“இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? நான் ரொம்ப ஈசியா நினைச்சேன் ஷா!”

“ஆனா, கருப்பும் சாம்பல் நிறமும் அப்படியே நம்மை உறைய வைக்கும். நம்ம கவனத்தை அதை நோக்கியே மட்டும்  குவிக்கும். அந்த ஓவியத்தோட அமைதியான ஆழத்திற்கு நம்மையும் அறியாம இழுத்திட்டு போற ஒரு உணர்வை உண்டாக்கும். கடைசியில அந்த ஓவியமே நாமதான்னு அதோடவே கலந்து போயிடுவோம்” தன்முன்னிருந்த ஓவியத்தினுள் தன்னை தொலைத்துக்கொண்டே, கணவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் வைஷாலி.

மனைவியின் தீவிரமான முகபாவம் கணவனை அசர வைத்தது. பொழுதுபோக்கிற்காக மட்டுமே ஓவியம் தீட்டுகிறாள் என எளிதாக எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு, இவளின் ஓவிய வேட்கை ஆச்சரியப்படுத்தியது. 

“அந்த சாம்பல்நிற ஓவியத்தைவிட, கீழே சின்னதா அகி-ன்னு சிகப்பு கலர்ல உன்னோட பேர்தான் ரொம்ப அழகா இருக்குடா! லவ்லி ஷா!”

“இத்தனை பெரிய க்ரேஷேட் பெயிண்டிங்ல ரெண்டு ரெட்கலர் லெட்டர்ஸ்தான் உங்க மொத்த கவனத்தையும் கவருதா?”

“பின்ன இல்லையா? தவம் பண்றவனுக்கு இஷ்டதெய்வம் எப்படி இருந்தாலும் அழகாதான் தெரியும்”

“ஹஹா… தவம் பண்றவரா நீங்க? வரவர வாய் அதிகமாயிட்டு வருது உங்களுக்கு!”

“உன்னை கருப்பு ஓவியம் கவர்ந்த மாதிரி, நீ, என்னை கவர்ந்து, உன் முந்தானையில சுருட்டி வைச்சுருக்கடா! வேற எப்படி சொல்ல?

“அய்யோ என்ன பேச்சு இது?” வெட்கத்தில் இவள் முகம் சுளிக்க,

“உண்மையை உரக்கச் சொல்றேன்! என்னோட ஒவ்வொரு செல்லும் உன்னையே தேடுது ஷா” தாபத்துடன் அவளை உற்று நோக்க, இவளுக்கும் இங்கே தாளம் தப்பியது.

“உங்களை சுத்திதான் அங்கே நிறைய்ய்ய கலர்ஸ் இருக்கும்னு சொல்வீங்களே! அதுங்களை தேடி போகவேண்டியதுதானே?” தவிப்பை மறைத்து சீண்டலை ஆரம்பித்தாள் வைஷாலி.

“யாரை பார்த்தாலும் உன்னோட பேசுற மாதிரி வராதுடா! உன்னோட இடத்தை யாராலயும் ஈகுவல் பண்ண முடியாது. சோ, நான் எல்லாத்தையும் மறந்து உன்னை தேட ஆரம்பிக்குறேன்”

“என்னை தேடுற அளவுக்கா நீங்க வெட்டியா இருக்கீங்க?”

“ரொம்ப டேமேஜ் பண்ற நீ!”

“ஹஹா… நானும், உங்கள மாதிரிதான். ஓவியத்துல நிறங்களை தவிர்த்தாலும், கலர்ஸ் சுத்தி இருக்குற என் வீட்டுகாரரை, நான் தேடத்தான் செய்றேன். நீங்க யூனிக்பீஸ் அகி!” கண்சிமிட்டலுடன் சொல்லிவிட்டு, சிரித்தவளை பார்த்தவனின் முகமும் புன்னைகையில் நிறைய,

“இப்போவாவது ஒத்துகிட்டியே! என்னைதேடி நீதான் வந்தேன்னு!”

“யார் சொன்னா? அய்யோ பாவம்னு நான்தான், உங்களுக்கு மாங்கல்யபிச்சை போட்டேனாக்கும்!” புருவத்தை ஏற்றி இறக்கி சொன்னவளைப் பார்த்து,

“என்னே, என் பாக்கியம் தேவி!” மனைவியை போல கண்களை உருட்டி காட்டினான்.

“எதுக்கு இப்ப பெயிண்டிங் சேல்(sale) பண்றே? நம்ம வீட்டை சுத்தியும் மாட்டி வைக்கலாமே?”

“இதுல வர்ற ஃபண்ட்ல ஒருநல்ல காரியம் செய்ய போறேன் அகி! ஊர்ல விவசாயிகள் நலசங்கம்னு ஒண்ணு பேரளவுலதான் இருக்கு. தரிசு நிலங்கள சீர்படுத்த ஊர் பெரியவங்க எல்லாம் தங்களால முடிஞ்ச தொகைய கொடுக்க சொல்லி, விவசாயிகள் ரிக்குவஸ்ட் பண்றாங்க… அதுக்கு கொடுக்க போறேன்!” என்று சொல்லவும் அவனுக்கு சட்டென்று கோபம் மூண்டது

“அதுக்குனு நீ கஷ்டபடுவியா? என்கிட்ட கேட்டிருந்தா நான் கொடுக்க மாட்டேனா? இப்பவே பாரு, கண்ணு உள்ளே போயி மெலிஞ்சு போன மாதிரி தெரியுற”

“எதுடா சாக்குன்னு ஆரம்பிக்காதீங்க! உங்ககூட எயர்லி மார்னிங் பேசிட்டு, அப்பிடியே என்னோட வேலையில ஐக்கியமாயிடுறேன்! அதான் கொஞ்சம் டல்லா தெரியுறேன்”

“சமாளிக்காதடி, பணம் வேணும்னா கேக்க வேண்டியது தானே?”

“இதுக்கும் கோபமா? எனக்கு டைம்பாஸ் ஆகணுமே… இனிமே கொஞ்சம் மெதுவா செய்யுறேன்” என்று சமாதானம்  செய்தாலும் முகத்தை சுருக்கி கொண்டு அமர்ந்திருந்தான்.

“நேத்து லிக்கர் எடுத்தீங்களா அகி? ஏறினது இறங்காம கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு…” கணவனின் கோபமுகத்தை மாற்றவென நாக்கை வாய்க்குள் துருத்திக் கொண்டு, அவனை வம்பிழுக்க,

“நாலு லார்ஜ் வோட்கா உள்ளே இறக்கினேன், அப்படியே புதுபிராண்ட் சிகரெட் ஒன்னு ட்ரை பண்ணேன்… சூப்பரா இருக்கு” மனைவிக்கு சளைக்காமல் இவனும் கோதாவில் இறங்க,

“அடப்பாவி! ஒருபேச்சுக்கு கேட்டா லிஸ்ட்டா எடுத்து விடுற!” என்று இவளுக்குத்தான் கோபம் ஏறியது.

“நீ இல்லாத ஏக்கத்தை புகையும் போதையும் ஏத்தி ஆத்திக்கிறேன். என் கஷ்டம் எல்லாம் உனக்கெங்கே தெரியப் போகுது?”

“கடங்காரா! இங்கே, நீ இல்லாம தூக்கம்கூட ஒழுங்கா வந்து தொலைய மாட்டேங்குது! உனக்கு என்னடான்னா… வெரைட்டி கேக்குதா?” இவள் பல்லைக் கடிக்க,

“அவ்வளவு மயங்கிட்டியா டார்லிங்! இப்பகூட டிக்கெட் மெயில் பண்றேன் வந்துடுறியா?” ஆசைமீதுற இவன் கேட்டதில் வகையாய் அகப்பட்டு கொண்டாள்.

ஆனாலும் மிதப்பான பார்வையில், “இப்போ நோவே! நெக்ஸ்ட் டைம் டெஃபனட்டா வர்றேன் அகி! இப்போ பெயிண்டிங் முடிச்சு கொடுக்குறதுல ஃபிக்ஸ் ஆகிட்டேன். அது முடியுற வரைக்கும் எங்கேயும் அசையப் போறதில்ல…” என்றவளின் உறுதி, அடுத்த வந்த நாட்களில் காணாமல் போனது.

தொடர்ந்த நாட்களில் வைஷாலிக்கு உடல் சோர்வும் முகவாட்டமும் மேலும் வாட்டி வதைக்க, அவளை மருத்துவமனைக்கு சென்றுவா, நன்றாக ஓய்வெடு என்று அசோக் வற்புறுத்த ஆரம்பித்தான்.

கணவனின் வார்த்தைக்கு சரியென்று தலையாட்டிக் கொண்டாளே தவிர, தன்னை கவனித்துக் கொள்ளவில்லை. அடுத்த ஒருவாரம் கழித்து அசோக் மனைவியை அழைத்த தினத்தில் தன்னை மறந்து அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அடுத்தடுத்த அழைப்புகளில் இவள் எடுக்காமல்போக இவனுக்கு இங்கே பதட்டம் கூடிக் கொண்டது.

எந்த நேரமாக இருந்தாலும் தன்னை அழைத்துபேசு என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அமைதியானான்.

உறக்கம் என்பதைவிட, தலைசுற்றலும் தள்ளாட்டமும் ஒருவாரமாய் இவளை இம்சிக்க, தன்னையும்மீறி ஆழ்ந்து உறங்கியிருந்தாள் வைஷாலி.

கணவனின் கண்டிப்பான கட்டளை செய்தியை படித்தவளுக்கு, “அய்யோ! முசுடு ரோமியோ இப்போ மூஞ்சிய தூக்கி வச்சே கடுப்படிக்குமே? ரெண்டு மணிநேரம் கோவிந்தாதான்!” அலுப்புடன் அழைத்தாள் வைஷாலி.

“வாட் ஹாப்பெண்ட் ஷாலி? நீ இப்படி இருக்க மாட்டியே?” கணவனின் அக்கறையுடன் கூடிய பதட்டத்தில் அவளுக்கு கண்ணீர் துளிர்த்தது.

“பதில் சொல்லாம என்ன பார்வை வேண்டி கிடக்கு? உன்னோட முகமெல்லாம் அவ்வளவு டல்லாடிக்குது என்னதான் ஆச்சு?”

“நத்திங் அகி! கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸா பீல் பண்றேன்.”

“ட்ரெஸ் ரிஃப்ளக்ட் யுவர் பெர்சனாலிட்டி ஷாலி! உன்னோட ட்ரெஸ்ஸும் நல்லா இல்ல, முகமும் சரியா இல்ல! ஏன்டா ரொம்ப டல்லா தெரியுற?” வருத்தம் தோய்ந்த கணவனின் கேள்வியில் தன்னைத் தொலைத்தாள் வைஷாலி.

முகமெல்லாம் சிவந்து, கண்கள் படபடக்க விரல்களை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தவளை பார்வையால் தழுவிக் கொள்ள மட்டுமே முடிந்தது அவனால்…

கணவனின் ஒவ்வொரு கேள்விக்கும் பல்வேறு உணர்வுக் கலவையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவளால் அவனை ஏறெடுத்தும் பார்க்க முடியவில்லை.

“ஏதாவது பேசுடா! இங்கே வந்துடுறியா? அப்பாகூட போய் விசா அப்ளை பண்ணு! நான் சொல்றேன்” என்று அடுக்கடுக்காய் இவன் கட்டளையிட,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இன்னும் ஃபைவ் மன்ந்த்ஸ்ல நீங்க ரிடர்ன் ஆகிடுவீங்கதானே! அப்போ மொத்தமா சேர்த்து வைச்சு உங்களை லவ் பண்றேன்!” வெட்கச் சிவப்பில் தன்ஆசையை வெளிப்படுத்தினாள்.

“ஷ்யூர் டார்லிங்… நம்ம செகண்ட் இன்னிங்க்ஸ் பாட்டி வீட்டுலதான்” மந்தகாச புன்னகையுடன் சொன்னவனை புரியாமல் நோக்கியவள்,

“எல்லாரும் ஹனிமூன் போவாங்க… நீங்க என்னடான்னா கிராமத்துக்கு ரூட் போடுறீங்க!” என்று ‘அட அல்பமே’ பாவனையில் கணவனை பார்த்தாள்.

“ரெண்டு அட்டெம்ப்ட் அங்கே பெயிலியர் ஆகியிருக்கு. அத பாலன்ஸ் பண்ண வேணாமா? என் வரலாற்றுல கருப்பு பக்கம் அது. சோ… அங்கே போறோம். நம்ம மசோதாவ அங்கே வெற்றிகரமா தாக்கல் பண்றோம்” கடமை வீரனாய் சொல்லிவிட, அடக்க முடியாமல் சிரித்தாள்.

அடுத்த இரண்டு நாட்களில் உணவு சுத்தமாய் இறங்காமல்போக, தங்கமணி வற்புறுத்தியே அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

நாள்தள்ளிப் போனதாய் இதுவரை மருமகள் சொல்லவில்லை. மாதந்திர நாட்களை முயன்றளவு சமாளிக்க கற்றுக் கொண்டவள், அந்த நாட்களின் அவஸ்தையை வெளிப்படுத்தாமல் கடந்திருப்பாள் என்றே அவர் நினைத்திருந்தார். பெரிய மருமகள் மற்றும் பேரனின் வரவில், சின்ன மருமகளின் நடவடிக்கையை கவனிக்க தவறியிருந்தார்.

மனக்கவலையுடன் அழைத்து சென்றவர், மருமகளின் மாற்றத்தில் மொத்தமாய் மலர்ந்தே போனார். எட்டாக்கனியா, சாத்தியமாகுமா போன்ற சந்தேகங்களை எல்லாம் குப்பை தொட்டியில் போட்ட நிகழ்வுதான். மனமெல்லாம் பூரித்தே அடங்கியது.

பிரிவாற்றாமையிலும், ஓவியத்திலும் லயித்து போனவளின் மனம், பதினைந்து நாட்கள் தள்ளிப் போனதை மறக்கச் செய்திருந்தது. தாய்மை அடைந்திருப்பதை அறிந்து கொண்ட நேரம், சந்தோஷ படபடப்பில் கணவனை அழைத்தவளுக்கு பேச்சு வரவில்லை.

கண்ணீரும் புன்னகையும் கரைகட்டி நிற்க, மௌனமாக நொடிநேரம் அலைபேசியில் கணவனை ஆசையாய் பார்த்திருந்தாள் வைஷாலி. எப்படி சொல்வது எனத் தெரியாமல் வார்த்தைகள் தந்தியடித்தது அவளுக்கு.

“ட்யூட்டி டைம்ல கால் பண்ணிட்டு என்ன விளையாட்டு ஷாலி? சீக்கிரம் பேசி முடி!” என்றிவன் கடுகடுக்க, இவள் முகம் கூம்பினாள்.

“சாரிடா! வொர்க் ஹவர்ல இருக்கேன், ஈவ்னிங் ஃபோன் பண்றேன்…” கெஞ்சி மனைவியை சாமதானம் செய்ய,

“நமக்கு பேபி வந்தாலும் சாரி சொல்றத விடமாட்டீங்களா அகி?”

“இப்போ இந்த ஆராய்ச்சிதான் முக்கியமாடி?” என்று பல்லைக் கடித்தவன், மனைவியின் கன்னச் சிவப்பிலும் சன்ன முறுவலிலும் அவளின் கேள்வியை யோசிக்க,

“ஹேய் நிஜமாவாடா குட்டி? எப்படி இதெல்லாம்? எங்கே இருக்க? எப்ப கன்பார்ம் பண்ண?” உற்சாகத் துள்ளலுடன் கேள்விகளை அடுக்க, ஆசுவாசமாய் அவனுக்கு பதிலளித்தாள்.

அசோக்கிருஷ்ணாவிற்கு சந்தேகம் தீர்ந்த பாடில்லை. மீண்டும் தனக்குள் எழுந்த கேள்வியை வெளிப்படையாக மனைவியிடம் இரவில் கேட்டே விட்டான்.

“ஒருநாள்ல எப்படி? நல்லா செக் பண்ணாங்களா?” அசட்டு புன்னைகையுடன் கேட்க,

“கொஞ்சமாவது மனசாட்சி வேணும் பாஸ்!” கோபமாக முறைத்தாள் மனைவி.

“ரிலாக்ஸ் ஷா! டென்சன் ஆகாதடா! இனி எந்த கேள்வியும் கேக்க மாட்டேன்” இப்பக்கம் இவன் பதறிவிட,

“ஹலோ மிஸ்டர்! உங்களுக்கு நாள்கணக்கு தவிர வேறெந்த கணக்கும் மனசுல நிக்காதோ?” என்றிவள் பல்லைக் கடிக்க, அசோக் மொத்தமாய் சிவந்து போனான்.

கணவனின் வெட்கத்தில், அவனது முகமெல்லாம் ரோஜாபூவாய் சிவந்துபோக, எப்பொழுதும் போல் இப்பொழுதும் மனைவி மயங்கியே போனாள்.

அதன்பின் தொடர்ந்த நாட்கள் எல்லாம் அவள் வசத்தில் இல்லாமல்தான் போனது. மிதமிஞ்சிய சோர்வும் மசக்கையும் அல்லல்படுத்த, எந்த நேரமும் கண்களை மூடியே நாட்களை கடத்த தொடங்கினாள்.

பேத்தியை தாங்கிக் கொள்ள அன்னபூரணி உடனே புறப்பட்டு சென்னை வந்திருந்தார். பாட்டியின் அதட்டலும்

மாமியாரின் அன்பான கண்டிப்பிலும் வைஷாலியின் மசக்கை தன்னை பலப்படுத்தியே ஆட்டம் காண்பித்தது.

“ஊருக்கு கூட்டிட்டு போறேன் தங்கமணி… கிராமத்து காத்து மனச லேசாக்கும். வயல் வரப்புன்னு இவளும் ரெண்டுநடை நடந்து போயிட்டு வந்தா உடம்பு சுணங்கிப் போறதும் குறையும்” என்றவர், கையோடு பேத்தியை அழைத்துக் கொண்டு துறையூருக்கு வந்து விட்டார்.

நாள்தோறும் மனைவியை அலைபேசியில் பார்த்து பேசுபவனுக்கு, அவளின் சோர்வும் மெலிவுமே கண்ணில் நிலைத்து, மனம் சஞ்சலம் கொள்ள வைத்தது. மசக்கையின் எதிரொலியில் முன்னைவிட அதிகமாக கணவனை தேடத் தொடங்கினாள் வைஷாலி.

கணவனிடம் பேசும் பொழுது உற்சாகத்துடன் பேசினாலும் அவளது விழிகள் என்னமோ அவனை விழுங்கி விடுவதை போலத்தான் பார்க்கும்.

தனது நிதானத்தை இழந்தவளாய் ஒருநாள் தன்னையும் மீறி தனது வேட்கையை வெளிப்படுத்தி விட்டாள் வைஷாலி.

“ஐ நீட் எ டைட் ஹக் ஃபிரம் யூ! சாரி அகி… எனக்கு உங்ககிட்ட எதையும் மறைச்சு பேச தெரியல…” என்று மூக்குநுனி சிவந்து சொல்லும்போதே அவளை அணைத்துக் கொள்ள முடியாத தனது துரதிர்ஷ்டத்தை நினைத்து வெறுத்து போனான்.

தாய் பறவையின் சிறகில் ஒளிந்து கொள்ளும் குட்டியைபோல, அவனுள் ஒடுங்கிக் கொள்ளும் இதம் கேட்கிறாள். தனது அன்பான கரிசனத்தில் கரைந்துபோக துடித்துக் கொண்டிருக்கிறாள் என்ற சிந்தனையே அவனை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்தது.

இவளின் அலைப்புறுதலை பார்த்தே, அலுவலகத்தில் விடுப்பு கேட்டான் அசோக். கிடைக்காது என்று தெரிந்தும் மனைவியின் முகவாட்டம் அவனை கேட்கச் சொல்லியது.

இவனது முயற்சி தோல்வியில் முடிய, மனதை கல்லாக்கிக் கொண்டு தனது வேலைகளில் கவனத்தை செலுத்கினான். கண்களில் தாங்கிக் கொள்ளும் பெரியவர்களின் உற்ற துணை அருகில் இருப்பது, அவனுக்கு தைரியத்தை கொடுக்க, அலுவகப் பணியில் முழுதாய் ஈடுபட்டான்.

சரியாக ஐந்தாம்மாத முடிவில் மனைவியை பார்க்க ஓடோடி வந்து விட்டான் அசோக். ஒத்துக் கொண்ட அலுவலை விரைவாக திறம்பட முடித்தே திரும்பி இருந்தான். தூரத்தில் பார்த்து பெருமூச்சு விடும் ஏக்கங்கள் தொலைந்து போய்விட, தன்உயிரின் உயிரானவளை கண்களில் நிறைத்துக் கொண்டு, மார்புக் கூட்டுக்குள் அடைகாக்க வந்து நின்றான்.

மனைவியின் முகத்தை கண்கொட்டாமல் பார்த்து நின்றவனின் பார்வை, தாவி அவளின் மேடிட்ட வயிற்றில் நிலைக்க, தானாக கைநீட்டி வாஞ்சையுடன் தடவினான்.

“பேபி ரொம்ப கஷ்டபடுத்துறாங்களா?”

“உங்க பேபி… அதை செய்யாம இருந்தாதான் ஆச்சரியம் அகி!” என்ற பதிலுக்கு, இருவரின் சிரிப்பிலும் விழிநீர் தெறித்தது.

இந்த நிமிடத்திற்குதான் எப்படியெல்லாம் தவித்து போனோம் என்றே இருவரும் தங்கள் நினைவில் வெட்கபட்டுக் கொள்ள, காதலாய் பரிமாறிக் கொண்ட இதழொற்றலில் இருவரும் கரைந்தே போனார்கள்.

முதன் முறையாக கணவனின் தீண்டலில் தன்னையே தொலைத்து கொண்டிருந்தவளுக்கு இமை தாண்டிய வெள்ளம் தானாய் வெளியேற,

“அழறியா ஷாலி? இந்த சின்ன விசயத்துக்கா… அடகடவுளே!” அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

“இந்த மல்லிகைப்பூ வாசத்தை எப்படி மிஸ் செய்தேன் தெரியுமா?” அவள் கூந்தலின் மல்லிகைச் சரங்களில் முகம் புதைத்து சுவாசத்தை ஆழ இழுத்தவனின் கரங்கள், இடையினில் அழுத்தமாய் பதிந்து, அவளின் தவிப்பை தணியச் செய்தது.

கணவனின் அருகாமையில் முதன் முதலாய் தன்னை உணர்ந்து கொண்டாள் வைஷாலி. இவனின் அணைப்பிற்கு அடிமையானவளாக ஆசுவாசமாய் அவனது நெஞ்சில் சாய்ந்து விட்டாள்.

“வர்ற பத்துநாள் ஃபுல்லா செலிஃபிரேசன் டேய்ஸ்தான் ஷா!”

“என்ன விசேஷம் அகி?”

“சொல்லேன் பார்ப்போம்! நம்ம ரெண்டு பேருக்குமே  ஸ்பெசல்தான்” என்றவன் முடிக்க, சற்றுநேரம் சிந்தித்தவள்,

“நம்ம ஃபர்ஸ்ட் வெட்டிங் ஆனிவெர்சரி அண்ட் மலைக்கோவில்ல நாம ப்ரபோஸ் பண்ணிக்கிட்ட நாள், கரெக்டா?” விழி விரித்தபடியே கேட்டாள்.

“எக்ஸாட்லி டார்லிங்!” என்று கொஞ்சியவன், “தேர்ட் ஒன், உன்னோட வளைகாப்பு. இப்போதான் அப்பாகிட்ட பேசிட்டு வர்றேன். இந்த வாரத்துலயே முடிக்க பிளான் பண்ணிட்டேன்”

“எதுக்கு இவ்வளவு அவசரம்?”

“டபுள்விட ட்ரிபிள்தான் மோஸ்ட் அட்ராக்டிவ்! முப்பெரும்விழான்னு சொல்றது நல்லா இருக்குல்ல… அதுக்குதான்!” மேதாவியாய் விளக்கம் கூறினான்

“நீங்க இருக்கீங்களே… வச்சா குடுமி…” என்றவளை இடையிட்டவன்,

“நீ என்னதான் கலாய்ச்சாலும் பங்க்ஷன் நடந்தே தீரும். ரெடியாகிக்கோடா!” என சொல்லிவிட்டு, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டான்.

நெஞ்சம் நிறைந்த மகிழ்வினை கொண்டாட மனிதர்களுக்கு என்றும் கசப்பதில்லை. இளையவர்களின் நல்வாழ்வு ஒன்றையே கருத்தில் கொண்ட பெரியவர்களும் அசோக்கின் ஆசைக்கு செவிசாய்த்திட, மொத்த குடும்பமும் சந்தோசத்தில் ஆர்ப்பரித்தது.

ஊரையே அழைத்து பேத்தியின் வளைகாப்பினை சீறும் சிறப்புமாக அமர்க்களப்படுத்தி விட்டார் அன்னபூரணி. கோவிலில் சிறப்பு அர்ச்சனை, அன்னதானம், விருந்து என்று திருமணநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

சற்றும் அலட்டிக் கொள்ளாமல் மனைவியை நொடிநேரமும் பிரியாமல் இருந்தான் அசோக். கணவனின் அருகாமையில் வைஷாலியை ஆட்டிப்படைக்கும் மசக்கையும் ஓரங்கட்டி நின்றது.

“சரியான ஃபிராடு குட்டி… அப்பா பக்கத்துல இருக்கும்போது வாலை சுருட்டிட்டு இருக்கு” வைஷாலி அங்கலாய்க்க,

“நீ, என்னையே நினைச்சுட்டு புள்ளைய கவனிக்கலடி! அதான் நம்ம பேபிக்கு கோபம்” சீண்டு முடித்தான். 

மூன்று நாட்களாய் விழாவிற்கான ஏற்பாடுகளில் தன்னை மூழ்கடித்து கொண்டவன், மனைவியிடம் அன்பான பேச்சில் அவளை ஆசுவாசப்படுத்தியிருந்தான். 

இருவரின் அருகாமையே அவர்களுக்கு நிறைவைக் கொடுக்க, இளமையின் தேவை சற்று தூரமாகித்தான் இருந்தது. வளைகாப்பு இரவினில் விழா களேபரங்கள் முடிந்து வளையோசை கலகலக்க, மெல்லியபட்டில் வந்தவளை தன் கைவளைவில் இழுத்துக் கொண்டான்.

“உன் அழகு, என்னை மூச்சுமுட்ட வைக்குதுடா! உன்கூட தனியா பேச, எவ்வளவு நேரம் வெயிட் பண்றது நான்?”

அறைக்குள் வந்த வேகத்தில் இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, தன்தேவையை குறிப்பால் உணர்த்தினான் அசோக்.

“டாக்டர் ஓகே சொல்லிட்டாரா? கேட்டியா ஷாலி?” எக்குதப்பாய் கைகளை அவளின்மேல் படரவிட்டு, தாபத்துடன் இவன் முணுமுணுக்க.

“கண்ணாடிப் பொருளை பக்குவமா ஹாண்டில் பண்ணத் தெரிஞ்சா போதும் அகி!” கணவனின் செயலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டு, கணவனின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள் வைஷாலி.

மனைவியின் காது மடல்களில், தனது மூச்சுக் காற்றின் உஷ்ணத்தை கடத்தியவனின் கைகள், மெல்ல அவள் இடைவளைவில் படிய, அதன் பிறகான வினையாற்றலில் இருவருக்கும் சரிபங்கே!

பேச்சிற்கும் மூச்சிற்கும் நடந்த யுத்தத்தில், வேகமூச்சுக்கள் தொடர் வெற்றி பெற்று, மனைவியுடன் தனது வரலாற்று பக்கங்களின் நிறத்தை மாற்றியமைத்தான் அசோக்.

காதலின் வெப்பத்தை காமம் அணைத்து விட்ட நிலையில் இருவரின் விழிகளும் கலந்து கவிதை பேசியே இளைப்பாறின.

அன்பின் கரைசலும், நேசத்தின் நெகிழ்வும் குழைந்து கொண்டாடிய நேரத்தில் மீண்டும் இதழ் சிறைபிடிக்கும் தீவிரவாதியாகிப் போனான் அசோக்.

தன் மகரந்ததேனை உடையவனுக்கு அளித்துவிட்ட திருப்தியில் மனைவியும், அவன் முத்தங்களை தாங்கிக் கொண்டாள். 

“உனக்கு ஒண்ணும் கஷ்டமில்லையேடா!” நிறைவான கூடலின் முடிவில் கேட்டவனின் விழிகளைப் பார்த்து,

“எனக்காக, எந்த நிமிசமும் உருகிட்டு இருக்குற உங்க மனசுக்கு, என்னைத்தவிர வேற எதையும் கொடுக்க முடியாது, அகி…” உணர்வுக் குவியலில் உச்சரித்த உதடுகளை, மீண்டும் சிறை பிடித்தான். தன்னிதயம் நுழைந்து உயிரில் கலக்கத் துடிக்கும் மனைவியை ஆதுரமாய் அணைத்துக் கொண்டான்.

வாரம் ஒன்று சுலபமாய் கடந்திருந்தது. தொடர்ந்து வந்த பகல்பொழுதுகளை இரவாக்கிய காதல் பறவைகளாய் தங்கள் நேசத்தை கொண்டாடித் தீர்த்தார்கள்.

“இருபதுநாள் லீவ்ல வந்திருக்கேன்டா! சீக்கிரம் ட்யூட்டில ஜாயின் பண்ணனும்” மனைவியின் மடியில் தலைவைத்தபடி, தனது அடுத்த பயணத்தை சொல்ல ஆரம்பித்தான்.

“எப்போ கிளம்பனும்? நானும் ரெடியாகுறேன்” இவளும் சேர்ந்துகொள்ள,

“நான் மறுபடியும் யூஎஸ் போறேன்டா!” என பெரிய குண்டைப் போட்டு அவளை திகைக்க வைத்தான் அசோக். 

இத்தனை நாட்கள் சந்தோஷச் சாரலில் குளிரச் செய்தவன் மீண்டும் தன்னை தவிக்க வைக்க முடிவெடுத்து விட்டான் என்றே மனம் சுணங்கிக் கொள்ள, கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“இந்த வேலை வேண்டாமே அகி… இங்கேயே விவசாயத்தை கவனிச்சுட்டு இருக்கலாமே!” மனம் தாளாமல் கண்களும் குரலும் கெஞ்சியபடி கணவனிடம் தன் கோரிக்கையை வைக்க,

“இன்னுமொரு அஞ்சு வருஷம் கழிச்சு, தாராளமா செய்யலாம்டா!”

“அதென்ன அஞ்சு வருஷம்… இப்பவே தொடங்கினா என்னவாம்?”

“இப்போ இருக்கிறதெல்லாம் பெரியவங்க நமக்காக சேர்த்து வைச்சது. அதை விரிவுபடுத்த, காலம் நேரம் நிறைய கைவசம் இருக்கு. ஆனா எனக்கான தகுதியை மேம்படுத்திக்க இதுதான் சரியான நேரம். என்னோட வழி இதுதான்னு முடிவான பிறகு, அதோட பாதை எங்கே எப்படி இருந்தாலும் நான் பயணப்பட்டுதான் ஆகணும்!”

“அப்படின்னா… இனிமே, உங்களுக்கு வேலை சென்னையில கிடையாதா? வாழ்க்கை முழுக்க வெளிநாட்டுலதான் இருக்க போறீங்களா?”

“அப்பிடியில்லடா… மிஞ்சிபோனா பத்து வருஷம் போதும். என்னை, நான் ஸ்டடி பண்ணிக்க, அதுக்குமேல டைம் தேவைப்படாது. நானே ரீலீவ் ஆகிடுவேன்!”

“உண்மைய சொல்லுங்க! இந்த முடிவ பேபி கன்பார்ம் ஆன பிறகுதானே எடுத்தீங்க?” என்றவளுக்கு, எதிர்காலத்திற்காக இப்போதிருந்தே முடிவுகளை எடுப்பவனை பார்த்து கர்வமே உண்டானது.

“புத்திசாலிடி நீ! பெரியவங்க நமக்கு சேர்த்து வச்சு குடுத்த மாதிரி நானும் என் பிள்ளைகளுக்கு கொடுக்க வேணாமா? அதுக்காக சின்ன முயற்சி எடுக்குறேன்!” தன்நிலைக்கு அசோக் விளக்கம் அளித்தான்.

“என்னை விட்டு பிரிஞ்சு இருக்க பிளான் பண்ணியாச்சு… கங்கிராட்ஸ் மிஸ்டர்!” என்று ஏகத்திற்கும் முறைத்து வைக்க,

“பேபி வந்தபிறகு, அம்மா இல்லன்னா பாட்டிய கூட்டிட்டு நீயும் அங்கே வந்திரு டார்லிங்! ஏன் நாம பிரிஞ்சு இருக்கணும்?”

“என்னை அங்கே வந்து வெட்டியா இருக்க சொல்றீங்களா?”

“நோ, நோ… உன்னோட பெயிண்டிங்ஸ் அங்கே வந்து கண்டினியூ பண்ணிக்கோ! இங்கேவிட அங்கே ரசனைகள் ஜாஸ்தி. உனக்கும் ஒரு அடையாளம் கிடைக்கும். அதுக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்ய நான் ரெடியா இருக்கேன். வருசத்துக்கு ஒருமுறை ஊருக்கும் வந்து போவோம் சரியா?” தீர்மானமாய் முடிவெடுத்து விட்டு மேம்போக்காய் சம்மதம் கேட்பவனை பார்த்து பல்லைக் கடித்தாள் வைஷாலி. 

“வேண்டாம், மாட்டேன்னு சொன்னா நீங்க முடிவ மாத்திக்க போறீங்களா?”

“உன்னோட அன்பிற்கினியவன், உன் குழந்தைகளுக்கும் அப்படியே இருக்க ஆசைபடுறான். அதுக்காவே தன்னை கொஞ்சங்கொஞ்சமா செதுக்கிக்க ஆரம்பிச்சுருக்கான். அவனை நீ மோட்டிவேட் பண்ண மாட்டியா ஷாலி?” என்றவன் மனைவியின் நெற்றியில் முட்டி முத்தம் பதிக்க,

“சரியான மருந்து கொடுத்து என்னை ஆஃப் பண்ணிடுங்க!” புன்முறுவலுடன் பதில் முத்தம் கொடுத்து சம்மதம் தெரிவித்தாள்.

“இன்னும் என்னவெல்லாம் யோசனை பண்ணியிருக்கீங்க? இனியவன்! கொஞ்சம் முன்கூட்டியே சொல்லி வச்சா நானும் தயாரா இருப்பேன்”

“ஹாஹா… இனியவன்… ஹௌ நைஸ்! இப்படி விதவிதமா பேர் வைக்க உன்னால மட்டுமே முடியும்டா”

“ஆஹான்… ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்கே! வேணும்னா நீங்களும் எனக்கொரு பேர் வைக்க ட்ரை பண்ணுங்க அகி!”

“வறண்டுபோன என் வாழ்க்கையில, தென்றலா நீ வராம இருந்திருந்தா, இந்த இனியவனும் அட்ரஸ் இல்லாம தொலைஞ்சு போயிருப்பான். எத்தனை சோதனைகள் எனக்கு… அதெல்லாம் உன்னால மட்டுமே காணாம போயிருக்கு. இனிமே என்னோட வாழ்க்கையில இனிமையான தென்றல் மட்டுமே, உன்னோட ரூபத்துல என் வாழ்க்கை முழுக்க வரும். இந்த அன்பிற்கினியவனோட தென்றல்… இனிய தென்றல் நீதான்…” என்றவன் மனைவியின் கரங்களை தன்கரங்களுக்குள் பொத்தி வைத்து தன்மார்பில் தஞ்சமாக்கிக் கொண்டான்.

கணவனின் கனிந்த முகத்தை பார்த்த வைஷாலிக்கு, மனம் முழுக்க நிம்மதி விரவிக் கிடந்தது. பேரன்பிற்கும் நேசத்திற்கும் வசியபட்டு வீசும் இனிய தென்றலாய், இவனின் ஜீவனை வருடிக்கொள்ள என்றும் தயாராய் இருந்தாள்.

 

****சுபம்***

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!