இனிய தென்றலே

தென்றல் – 3

 

தென்றல் எந்தன் நடையை கேட்டது தத்தோம் தகதோம்

தாழம்பூவின் வாசம் கேட்டேன் தித்தோம் திகிதோம்

மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம்

முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம்

ஞாயிற்றுக்கிழமை காலை பதினோருமணி… மகனை எழுப்ப வந்த தங்கமணி, அலுப்பும் சலிப்புமாய் காபி கோப்பையை வைத்த ஓசையில், தன் ஒற்றை கண்ணால் அன்றைய விடியலை வரவேற்றான் அசோக்கிருஷ்ணா.

“எதுக்கும்மா இந்த வேலையெல்லாம் நீ செய்ற? எனக்கு தேவைன்னா நானே போட்டுப்பேன்…” என்றவாறே எழுந்து அமர்ந்தவன், குடிக்கவென கோப்பையை கைகளில் எடுத்து, தாயின் கோபத்தின் அளவை இன்னும் கொஞ்சம் ஏற்றி வைத்தான்.

“காலையில எழுந்ததும் பல்லு விளக்குற நல்ல பழக்கத்தையும் விட்டாச்சா? ஒருநாளும் பொழுதோட வீட்டுக்கு வர்றது கிடையாது. எப்பவும் திருடனுக்கு வலதுகையா, சொந்த வீட்டுக்குள்ளேயே பதுங்கி பதுங்கி நுழையறது… இதெல்லாம் பார்க்க நல்லாவாடா இருக்கு..!” ஆதங்கத்தில் கடுகடுத்தவர்,

மேலும் பல சிறப்பான அர்ச்சனைகளை தடையின்றி நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், சத்தமில்லாமல் அசோக் காலைக்கடனை முடித்து விட்டு காபியை பருக ஆரம்பித்திருந்தான்.

“ஆறிப் போயிடுச்சும்மா… இதுக்குதான் நான் எழுந்தபிறகு போட்டு குடிச்சுக்கிறேன்னு சொல்றேன்…” எனக் குறைபட்டுக் கொண்டவன்,

“பரவாயில்ல கூல்டே… கூல்காஃபின்னு நினைச்சு குடிக்கிறேன். யு டோன்ட் வொர்ரி மாம்…” தன்னை முறைத்த தாயை சமாதானம் செய்தான்.

“இந்த ஆறிப்போன காபியாவது கிடைக்குதேன்னு சந்தோசப் பட்டுக்கோடா மகனே! கல்யாணம் வேண்டாம்னு சொல்றவனுக்கு கால்கிளாஸ் கஞ்சிகூட ஊத்தாதேன்னு உங்கப்பா, எனக்கு ஆர்டர் போட்டுருக்கார்… நீ என்னடான்னா அரைகப் காபிக்கு வியாக்கியானம் பேசிட்டு இருக்க…” ஏகப்பட்ட சிடுசிடுப்பில் மகனை கடிந்து கொள்ள ஆரம்பித்தார் தங்கமணி. 

“என் போக்குல நான் வாழ நினைக்கிறேன். இதுல என்ன கஷ்டம் உங்களுக்கு? அடுத்த மாசம் புது புராஜக்டுக்காக பெங்களூர் போகப்போறேன் மிசஸ்.கோல்ட்பெல்… இப்படி எதையாவது சொல்லி நச்சரிச்சுக்கிட்டே இருந்தா, அங்கேயே செட்டில் ஆகிடுவேன் சொல்லி வைங்க மிஸ்டர்.ராம்கிகிட்ட…” என்று தந்தை ராமகிருஷ்ணனையும் வம்பிற்கு இழுக்க, மகனை வெகுவாக முறைத்தார் தங்கமணி. 

“ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு எங்கேனாலும் போடா ராசா… தெனமும் நீ எந்த நிலமையில இருக்கேன்னு தெரிஞ்சுக்க, என்னால சிஐடி வச்சு உளவு பார்க்க முடியாது”

“என்னை வேவு பாக்க, உங்களுக்கு ஒருஆள் வேணும், அதுக்கு என்னை நானே பழி கொடுக்கனுமா? நோ… நெவர்…”

“நீ உருப்படுறதுக்கு அதுதான் சரியான வழி… வெளிநாட்டுல இருந்து வந்த இந்த மூணுமாசமா நானும் பாக்குறேன், உன் இஷ்டத்துக்கு ஊர்சுத்திட்டு, விளங்காதத குடிச்சிட்டு வந்து கவுந்தடிச்சு படுக்குறது, குறையுற வழியக் காணோம். உனக்கு கால்கட்டு போட்டாலாச்சும் இந்த கருமம் எல்லாம் விட்டு ஒழியாதான்னு நினைச்சுதான், கல்யாணத்துக்கு உங்கப்பா அவசரப்படுறார்…. கிளியா பொண்ணு பார்த்து, பேசி வைச்சாலும் ஏதாவது ஒரு குறை சொல்லி தட்டி கழிக்கிறத வாடிக்கையா வச்சுருக்க…” 

“எனக்கு பிடிக்கணுமே தங்கம்… நீங்க பாக்குற கிளிங்க  எல்லாம் என் கண்ணுக்கு கழுதையாதானே தெரியுது..! என்ன பண்ண?” தாயின் பேச்சிற்கு சற்றும் குறையாமல் எதிர்வாதம் செய்தான் அசோக்.

“போன மாசம் கிராமத்துல பார்த்தோமே அந்த பொண்ணுக்கு என்னடா கொறைச்சல்? தங்கச் சிலையாட்டம் இருந்தா… நல்ல குடும்பம், அவ்வளவு அடக்க ஒடுக்கமா, உனக்கு பொருத்தமா தெரிஞ்சா… அவள வேணாம்னு சொல்ற நீதான்டா, கழுதைக்கும் கிளிக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாத முட்டாளா இருக்க…’ ஆற்றாமையுடன் ஏகத்திற்கும் நொடித்துக் கொண்டார் தங்கமணி.

“தங்களின் கனிவான கவனத்திற்கு ஒன்னு சொல்றேன் தங்கமணி… தாங்கள் குறிப்பிடும் அடக்க ஒடுக்கம், டெய்லி ஈவினிங் சிங்காரச் சென்னையை கலக்கிக் கொண்டிருக்கிறது” என்று அறிவிப்பாளர் தோரணையில் சொல்லி, அவரின் எண்ணத்தில் மண்ணைப் போட்டான் அசோக்.

தன்னை விட்டுவிட்டு, அடுத்த வீட்டுப்பெண் நல்ல பிள்ளை என கொண்டாடிக் கொண்டதை, அந்த வாலிபக் குழந்தைக்கு பொறாமையைக் கிளப்பிவிட, அவளது குறைகளை சொல்ல நினைத்து, தனது வண்டவாளத்தை வெளிபடுத்திக் கொண்டிருந்தான். 

“உனக்கெப்படி தெரியும்? நீ அவ பின்னாடி சுத்துறியா?”

“அந்த வேலையக்கூட எனக்கு வைக்காம, நான் போற இடத்துல எல்லாம், எனக்கு முன்னாடி அவதான், என்னை சைட் அடிக்க வெயிட் பண்ணிட்டு இருக்கா… சும்மா சொல்லக்கூடாது, ரெண்டு கைபுள்ளைய காவலுக்கு வச்சுட்டு செம்ம கெத்து காட்டுறா, உன்னோட கிராமத்துக்கு பச்சகிளி…”

“பிடிக்கலன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் பார்த்துகிட்டு இருக்கீங்களா? உங்கப்பா என்னடான்னா, அன்னபூரணி அம்மாவ நேருக்குநேர் பார்த்து பேச முடியாத அளவுக்கு, நீ சிக்கல்ல மாட்டி வச்சுட்டேன்னு புலம்பிட்டு இருக்கார். அந்த கோபத்துலதான், நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ற வரைக்கும் உனக்கு கஞ்சி மட்டுமே ஊத்தச் சொல்லியிருக்காரு… இந்த பொண்ணு இல்லன்னா உனக்கு பிடிக்கிற மாதிரி, வேற எந்த பொண்ணாவது இருந்தா சொல்லு தம்பி! நான் உங்கப்பாகிட்ட பேசுறேன்…” கனிவுடன் அவர் எடுத்துக் கூற,

“அம்மா… நான் கல்யாணம்தான் வேண்டாம்னு சொன்னேனே தவிர, அந்த பொண்ணை இல்ல…” தானே அறியாமல் தன் மனதினை படம் போட்டுக் காண்பிக்க,

“தேதி பார்க்க சொல்லவா அசோக்..! உனக்கு பொண்ணு பிடிச்சுதானே இருக்கு…”

“பிடிச்சிருந்தா… கழுத்துக்கு கத்தியா கட்டிட்கிட்டு சுத்த முடியுமா? நோ சான்ஸ்… வேணும்னா ரெண்டு நாள் அந்த பொண்ணுகூட டேட்டிங் பிளான் பண்றேன்…” என்று இவன் கண்ணடித்துக் கூற….

“மாப்பிள்ளையா போகச் சொல்றேன்… கழிசடையா போயி அசிங்கப்படுவேன்னு நீ அடம் பிடிக்கிற… பட்டுத்தான் திருந்தனும்னு இருந்தா அத மாத்தவா முடியும்…”

“எப்பிடியோ போயிட்டு போறேன்… இனிமே கல்யாணப் பேச்சை எடுத்து, வீணா நீயும் சங்கடப்பட்டு, என்னையும் சங்கடப் படுத்தாதே!” கடுப்புடன் கலந்த அசட்டுப் பிடிவாதத்தில் தாயுடன் தர்க்கத்தில் நின்றான்.  

“ஆண்டவா! படிக்கிற வயசுலதான் குழம்பிட்டு நின்னான்னா… கல்யாண வயசு வந்தும் அப்படியே இருக்கான்..! இவனுக்கு நல்ல புத்தி எப்போதான் வரப் போகுதோ?” என ஆதங்கப்பட்டவர், மகனை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது எவ்வாறு என்ற கவலையில், தன் வேலைகளை கவனிக்கச் சென்றார்.

         ********************************************

தோழிகளின் கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல் நாட்கள் கரையத் தொடங்க, சரியாக ஒரு வாரம் கழித்து ஸ்வப்னா இரண்டு கைகளிலும் இரண்டு சிவப்புநிற ரோஜா பூங்கொத்துக்களுடன் அறைக்கு வந்தாள்.

“ஏய் சிவப்பி, என்ன? கையில ஃபிளவர்ஸ் எல்லாம்!?” வைஷூவின் கேள்வியில் ஸ்வப்னா வெட்கப்பட்டு தலைகுனிந்து சிரிக்க,

நிஷாவும் வைஷூவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு,

“பிரபுவா..?” ஒரே குரலில் கேட்க,

“ஆமா…” என்று வெட்கம் குறையாமல் தலையாட்டினாள்.

“போச்சுடா…” என்றபடியே வைஷூ தலையில் கை வைத்துக் கொள்ள,

“இருபத்தியொன்னாவது ரீயூனியனா?” அலுத்துக்கொண்டே கேட்டாள் நிஷா.

“ம்ம்… ஆமா” என்ற ஸ்வப்னா, கால் விரலால் தரையில் கோலம் போட,

“செலிபிரேஷன்ஸ் நல்லா போச்சா?” பல்லை கடித்தபடி நிஷா கேட்க,

“என்ன சிவப்பி? இப்படி டபாய்ச்சுட்டியே! எங்கே போச்சு உன் வீரம், ரோஷம் எல்லாம்…” ஆதங்கமாய் வைஷூவும் கவலைப்பட,

“ஒட்டு மொத்த கான்ட்ராக்ட்ல, பிரபுகிட்ட அடமானத்துல இருக்குடி…” சந்தோஷ அங்கலாய்ப்பில் பெருமையடித்தாள்  ஸ்வப்னா.

“அடிப்பாவி, இப்படி கவுந்துட்டியே! என்ன நடந்தது?” – நிஷா. 

“இவ்வளவு ஃபிளவர்ஸ் குடுத்து, உன்னை என்னால மறக்க முடியல… நீ இல்லாம நான் ஜடமா இருக்கேன்னு, என் முன்னாடி மண்டி போட்டு பாவமா சொல்றான்… நான் என்ன சொல்றது?” தனது காதலனுக்கு, வக்காலத்து வாங்கி ஸ்வப்னா கேட்க,

“சோ… உன்னோட வீரத்த, கூவம் ஆத்துல கரைச்சுட்டியா சிவப்பி?” – வைஷூ.

“உடனே எல்லாம் சமாதானம் ஆகலடி… நாலு நாளா ஒரே பீலிங்ஸா அவன் போட்டோவ அனுப்பிகிட்டே இருந்தான்…” ஸ்வப்னா

“எதுல பக்கி?” – நிஷா

“வாட்ஸ்-அப்ல!” – ஸ்வப்னா

“எல்லாமே பிளாக் பண்ணிட்டேன்னு சொன்னியே சிவப்பி..!” – வைஷூ

“அது… அவன் ஃப்ரண்ட் நம்பர்ல இருந்து அனுப்பினான்… நான் பேசாம இருந்த, இந்த ஒன் வீக்ல தாடி ட்ரீம் பண்ணாம, தலைக்கு ஜெல் தடவிக்காம, பரதேசியா மாறிட்டான். ரொம்ப பாவமா போயிடுச்சுப்பா…” ஸ்வப்னா வருத்தம் தோய்ந்த குரலில் பேச,

“அவன் சோம்பேறித்தனத்துக்கு, நீ பீலிங்ஸ் ஆஃப் லவ்னு முத்திரை குத்திட்டியா?” நிஷாவின் வார்த்தைகளில் கேலிக் கூத்தாட,

“அப்படியில்ல நிஷு… அவன் ரொம்ப கெஞ்சினான்ப்பா… வீட்டுல உடனே பேசி மேரேஜ்க்கு ஏற்பாடு பண்ணறேன்னு சொல்லியிருக்கான்…” சொன்ன ஸ்வப்னாவின் கண்களும் கல்யாணக் கனவில் மின்னியது.

“அதுக்கு தலைவியோட எக்ஸ்பிரஷன் என்ன?” – வைஷூ.

“காதல் தோல்விய, சூப்பர் பாஸ்ட்ல கீழே தள்ளி விட்டுட்டு, காதல் காவியத்த எக்ஸ்பிரஸ் ரதத்துல ஏத்தியிருப்பா… அப்படித்தானே சிவப்பி?” நிஷா சிரிக்காமல் நக்கலடிக்க,

“எஸ்… என்னோடது ட்ரூ லவ் ஷாலிகுட்டி… வாட் டு டூ? அதான் ஐ லவ் யூ சொல்லிட்டேன்…” நிமிர்வாய் ஆரம்பித்து, வெட்கமாய் முடித்தாள். 

“ஃபார் மை கைண்ட் அட்வைஸ்… சில்வர் ஜூப்ளி ரீயுனியன் வர்றதுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கோ சிவப்பி செல்லம்..!” என்ற வைஷூ, ஸ்வப்னாவின் கைகுலுக்க,

“வைஷூ மாதா! நம்ம ஆசிரமத்து கூட்டை விட்டு சிவப்பு குருவி பறந்து போயிடுத்து! அந்த துக்கத்தை நாம கொண்டாடியே ஆகணும்” பொய் அழுகையில் நிஷா அந்த இடத்தை கலகலப்பாக்கினாள்.

“சும்மா இருடி! சிவப்பி ஹாப்பின்னா, நாங்களும் ஹாப்பிதான்… கல்யாணத்துக்கு பிறகு அவ குடும்பத்தையே நம்ம ஆசிரமத்துல சேர்த்துக்கலாம். சரிதானே கல்யாணப் பொண்ணு!” வைஷூ ஸ்வப்னாவிடம் கேட்க,

‘அடிப்பாவிகளா! எனக்கு விமோசனமே குடுக்க மாட்டீங்களாடி? இப்டி என் குடும்பத்தையே பலி கேக்குறீங்களே!’ ஸ்வப்னா, தனது நியாயத்தை மனதிற்குள் மட்டுமே கேட்டுக் கொண்டு, வைஷூவின் கேள்விக்கு ஆமாம் என்று தலையசைக்க, மூவரின் உற்சாக ரகளையில் அன்றைய பொழுது கழிந்தது.

நாட்கள் அதன்போக்கில் செல்ல, ஸ்வப்னாவின் காதல், திருமணப் பேச்சில் முடிந்திருந்தது. கல்யாணப் பெண்ணின் மனமகிழ்ச்சி மற்ற இரு பெண்களுக்குமே சந்தோசத்தை கொடுக்க, வழக்கம் போல் வெளியே சுற்றி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டனர்.  

அன்றைய தினம் முன்னிரவுப் பொழுதில், தோழிகள் மூவரும் சிக்னலுக்காக ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருக்க, அவர்களின் வண்டிக்கு அருகில், வெள்ளைநிற ஸ்கோடா வந்து நின்றது.

அதில் அசோக், ஒரு பெண்ணின் தோளில் கைபோட்டுக் கொண்டு நெருங்கி அமர்ந்திருக்க, வைஷாலி அவனையே எரிச்சலுடன் உற்று நோக்கினாள். அவளின் பார்வையை கண்டு கொண்ட தோழிகள் கேள்வியால், அவளை வளைக்க ஆரம்பித்தனர்.  

“ஏய்! ஷாலி… பேட்கேர்ள்… என்ன சைட் அடிக்கிறியா?” – ஸ்வப்னா.

“வரவர நீயும் கெட்ட பொண்ணாயிட்ட…” – நிஷா

“அதெல்லாம் ஒண்ணுமில்ல…” முகத்தை சுளித்துக் கொண்டு வைஷாலி சொன்ன நேரத்தில், அசோக், தன் தோழிக்கு தெரியாமல், பின்புறமாய் இவளை எட்டிப் பார்த்து சினேகமாய் புன்னைகைக்க, இவளும் பதிலுக்கு வேண்டா வெறுப்பாய் மில்லிமீட்டரில் சிரிப்பை இறக்குமதி செய்தாள்.

“என்னாங்கடா நடக்குது இங்க..? அவன் சிரிக்கிறான், இவளும் சிரிக்கிறா…” ஆராய்ச்சி பார்வையை இருவரின் மீதும் நிஷா செலுத்த, அப்பொழுது தனது பெண் தோழிக்கு தெரியாமல் தன்கையை பின்புறமாக கொண்டு வந்து, ஹாய் என வைஷூவிற்கு கையசைத்தான் அசோக்.

“ஐயோ… இத பாருடா, கை ஆட்டுறான்…!” என்று ஸ்வப்னா சொல்ல,

“அன்னைக்கு மால்ல மோதிட்டு, இளிச்சவன்தானே இவன்?” நிஷா கேட்கும்போதே, சிக்னல் விழ, அவன் கிளம்பி விட்டான்.

“ஏய் கிராமத்து சிட்டு! சென்னையில அராஜகம் பண்ணிட்டு இருக்க நீ! என்ன விசயம்?” நிஷா அடுக்கிய கேள்விகளில் சமாளிக்க முடியாமல் கைகளை பிசைந்தவள், நொடியில் சுதாரித்துக் கொண்டு,

“அவர் எனக்கு தெரிஞ்சவர் நிஷூ… சும்மா பார்மாலிட்டிக்குதான் அன்னைக்கும் சிரிச்சார், இன்னைக்கும் சிரிச்சார்… அவர் பக்கத்துல பொண்ணு இருக்கு, பார்த்ததானே..! அவரெல்லாம் டேட்டிங்கோட ரீலேசன்ஷிப் ஃபினிஷ் பண்ற ஆளு, சிவப்பி…!” தோழிகளுக்கு விளக்கம் சொல்ல,.

“அப்படீங்குற!?” – ஸ்வப்னா

“அட ஆமாங்குறேன்..!” – வைஷூ.

“என்னமோ இவ போற ரூட் சரியில்லன்னு தோணுது, எதுனாலும் சொல்லிட்டு செய் வைஷூமா!” – நிஷா

“ஹூம்… உன் ஃப்ரண்ட் கூட வந்தவ, ரொம்ப லக்கி கேர்ள்டி வைஷூ!” பெருமூச்சில் ஸ்வப்னா அங்கலாய்த்துச் சொல்ல,

“எத வச்சு சொல்ற?” – வைஷூ

“ஸ்டைலிஷ் கார், ஹாண்ட்சம் ஃபிகர் கூட கம்பெனி கிடைக்க குடுத்து வைக்கணும் இல்லையா! என்னைப் பார்த்தியா? ஷேர் ஆட்டோல, ரெண்டு சாமியார் குந்தாணிகளுக்கு நடுவுல… மேரேஜ் பிக்ஸானத செலிபிரேட் பண்ணிட்டு இருக்கேன்…” என்று ஸ்வப்னா சலித்துக் கொள்ள,

“அடிங்க மவளே..!” என்று உடனிருந்த இருவரும், அவளை ஒருசேர தாக்க அவர்களின் பயணம் தொடர்ந்தது. அசோக், பெண் பார்த்து விட்டுப் போனதை, இதுவரையிலும் தோழிகளிடம் பகிராமல் ரகசியம் காத்தாள் வைஷாலி.

**************************************

அந்தவார இறுதியில், தன் வழக்கமாய் கிராமத்தில்  பாட்டியுடன் கோவிலுக்கு வந்திருந்தாள் வைஷாலி. 

“பாட்டி… அன்னைக்கு நான் வந்தப்ப, நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்களே…” பிரகாரம் சுற்றியபடியே இவள் கேட்க,

“யாரு?”

“அதான், குமாரசாமிக்கு சொந்தம்னு சொல்லி, பொண்ணு பார்க்க வந்தாங்களே, அன்னம்மா..!”

“அவங்க பேச்ச எடுக்காதே…!” என்று சிடுசிடுத்த பாட்டி, நடையில் சற்று வேகத்தைக் கூட்ட, 

“வயசு திரும்புதா உனக்கு? கொஞ்சம் மெதுவா நட! நா என்ன சொல்ல வந்தேன்னா… அந்த அசோக்க, நான் சென்னையில பார்த்தேன்…” வைஷூ சொன்ன மறுகணமே,

“அவங் கெடக்கிறான்… கடங்காரன்! நாசமா போக… எங்கிட்டயே வந்து, உங்க பேத்தி அதிகப்பிரசங்கி, குடும்பத்துக்கு லாயக்கில்லன்னு சொல்றான்… அறிவுக்கெட்டவன்!” அசோக்கை சரமாரியாகத் திட்டிவிட்டு மூச்சு வாங்கினார் அன்னம் பாட்டி.  

“ஐயோ பாட்டி! அவர் எங்கே வேலை பார்க்கிறாருன்னு விவரம் தெரிஞ்சுக்க கேட்டேன்…”

“அவன் எக்கேடோ கெட்டுப் போகட்டும்… நான், உனக்கு இவன விட நல்ல மாப்பிள்ளையா பாக்குறேன்டா கண்ணு…” என்ற பாட்டி,

“திருச்சியில இருந்து, நல்ல வரன் வந்திருக்கு… ஜவுளிக்கடை வச்சுருக்காங்க…” மெதுவாக பேச்சை மாற்ற,

“அன்னம்மா… வேண்டாம், நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. உன்னை விட்டுட்டு, இந்த ஊரை விட்டுட்டு ஓடிப் போயிருவேன்…” என்று பல்லை கடித்தபடியே முறைத்து, மேற்கொண்டு அதனைப் பற்றி, தன்பாட்டி பேச முயற்சிப்பதையும் தடுத்து விட்டாள்.

***********************************

சென்னை… கேலரியில் மொத்தமாக நடுத்தர வயதுப் பெண்களின் கூட்டம் ஒன்று, ஓவியங்களை பார்வையிட்டுக்  கொண்டிருந்தது. அவர்களுக்கு விளக்கம் கூறியபடி நின்ற மனோகர், அதற்கென இருக்கும் உதவியாள் வந்தவுடன் தன் இருக்கைக்கு வந்தமர்ந்தார்.

“என்ன சார்? ரொம்ப பிஸியா, மாமீஸ் கூட சாட்டிங்கா?” கணினியில் வரவு செலவுகளை பதிவேற்றிக் கொண்டிருந்த வைஷாலி, அவரை வம்பிழுக்க,

“அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்ல குழந்த… என்ன மாதிரி பெயிண்டிங்ஸ் எதிர்பார்க்கிறாங்கன்னு கேட்டு வைச்சேன்…” சிரித்தபடியே தனது செயலுக்கு விளக்கம் கூற,

“அதெப்படி..! அந்த புளூசாரி மாமி பார்த்து சிரிச்சா போதும்… அப்பிடியே விழுந்தடிச்சு ஒடுறீங்க..!” அங்கே வந்த நிஷாவும் கூட்டு சேர,

“கொஞ்சம் வாய மூடுறீங்களா?” சங்கோஜத்தில் நெளிய ஆரம்பித்தார் மானேகர்.

“ஜென்ட்ஸ் வந்திருந்தா, இந்நேரம் பெயிண்டிங்ஸ் இல்லன்னு சொல்லி விரட்டி அடிச்சுருப்பீங்க… உங்க வயசுக்கு, உங்களுக்கு ஒரு ஆம்பள ஃப்ரெண்ட் இருக்கா?” நிஷா கேலியில் இறங்க,

“எல்லாம் மிசஸ்.கிருஷ்ணா, மிசஸ்.வெங்கட், மிசஸ்.கோபால்… எல்லாரும் பொம்மானட்டிகளாத்தான் இருக்கா… உங்க வீட்டு மாமிகிட்டதான் இந்த ரகசியத்தை கேக்கணும்…” வைஷாலி கிண்டலடித்து, தலைநிமிரும் பொழுது, அசோக் கேலரியின் கண்ணாடிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை பார்த்துக் கொண்டுடிருந்தான். 

வழக்கம் போல் இவள் அவனைப் பார்க்க, அவனும் இவளைப் பார்த்தபடியே அவளை நோக்கி வந்தான்.

“வெல்கம் மிஸ்டர்.அசோக்… என்ன இந்த பக்கம்?” கேட்டபடியே வைஷூ முன்னே வந்து வரவேற்க,

“ஆன்ட்டி கூட வந்தேன்…” என்று பார்வையால் அரக்கு சேலை பெண்மணியை அவன் சுட்டிக்காட்ட,

“ஓ… குட் லுக்கிங் கேர்ள் பிரண்ட்ஸ் கூட டேட்டிங்கா?” நமட்டுச் சிரிப்புடன் இவள் கேட்க,

“அப்கோர்ஸ்… என்னை தேடி வந்தவங்கள, நான் கைவிட மாட்டேன்…” இவனும் பூடகமாய் ஆமோதித்து, மேற்கொண்டு பேச்சினைத் தொடர, நிஷாவும் மனோகரும் கவனித்து விட்டனர்.

வந்தவர்களுக்கு பிடித்த ஓவியங்களை விலைபேசி, தகுந்த முறையில் பார்சல் செய்து, அனுப்பி வைக்கும் வரை, அசோக்குடன் பேச்சினைத் தொடர்ந்து கொண்டிருந்த வைஷாலியை, தனிமையில் நிஷாவும் மனோகரும் பிடித்துக் கொண்டனர்.

“இனி தப்பிக்க முடியாது… யாரு அவன்? ரொம்ப பழக்கமான மாதிரி பேசிக்கிறீங்க?” என்று விடாமல் கேட்க, இவளும் அசோக் பெண் பார்க்க வந்ததை கூறி, இருவரும் சேர்ந்து திருமணத்தை தடுத்து விட்டதையும் கூறினாள்.

“சரியான அமுக்குணிடி நீ! எவ்ளோ நாளா மறைச்சிருக்க?” ஏகத்துக்கும் கடிந்து கொண்டு நிஷா முறைக்க,

“நானே மறந்து போன விஷயம், நிஷூ…”

“இப்படி பார்த்த உடனே, சிரிச்சு வைக்கிறதும், வேலைய மறந்து பேசிட்டு நிக்கிறதுமா இருக்கிறவதான், இவர் பொண்ணு பார்க்க வந்த விஷயத்தை மறந்து போனியாக்கும்!” நிஷா மேலும் பழிப்புக் காட்டி முறுக்கிக் கொண்டாள்.

“தெரிஞ்சவர்ங்கிற முறையில பேசினாக் கூட, ஏதாவது கதை கட்டுவியாடி?” வைஷூ அதிருப்தியாய் சொல்ல,

“பரவாயில்ல… பையன் நல்லா இருக்கானே! நீ ஏன் வேண்டாம்னு சொன்ன..?” என்று மனோகர் கேட்க, 

“நான், இவர வேண்டாம்னு சொல்லல சார்… நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து, கல்யாணமே வேண்டாம்னு சொன்னோம்…” வைஷூ, இருவரின் லட்சியங்களை தெளிவுபடுத்தினாள்.

“ஆழ்ந்த கருத்துக்கள் ஆழமான சிந்தனைகள்… கேட்க ரொம்பவே மலைப்பா இருக்கு… புக்கா போட்டு பப்ளிஷ் பண்ணுங்க!” மனோகர் நக்கலில் இறங்க,

“ரெண்டு பேருக்கும் பேசும்போது, முகத்தில தவுசன் வாட்ஸ் பாஸ் ஆகுது… இல்லன்னு பேச்ச மாத்தாதே… வைஷூ..!”  நிஷா கோபத்துடன் கடிக்க,  

“சால் ஐ டெல் யூ சம்திங்… அவனுக்கு, உன்மேல ஒரு சாஃப்ட் கார்னர் வந்திருச்சு…” மனோகரும் கூட்டு சேர்ந்தார்.

“சேச்சே… அதுக்கெல்லாம் சான்ஸ் இல்ல… குட் லுக்கிங் கேர்ள் ஃபிரண்ட்ஸ் தேடி போற ஆசாமி, அவர்… நோ வே..!”  என்று இவள் நழுவ,

“நான் இன்னொன்னு சொல்லட்டுமா? உனக்கும் அவன்மேல ஒரு சாஃப்ட் கார்னர் வந்திடுச்சு… காதல் வாசனை அடிக்குது, ரொமான்ஸ் உன் மனசுல கள்ளத்தோணியில ஏறி, ட்ராவல் பண்ண ஆரம்பிச்சிடுச்சு… அதான் இத்தன நாளா பொண்ணு பார்த்துட்டு போன விசயத்தையும் சொல்லாம மறைச்சிருக்க…” நிஷாவும் தன் பங்கிற்கு ஏற்றிவிட,

“போடி இடியட்! அந்த மாதிரி எல்லாம் இல்ல…” வைஷூ மறுக்க,

“யாரு இடியட்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சுடும்…” சண்டையிட்ட நிஷாவிடம், மறுப்பு சொல்லியபடியே விடுதி அறைக்கு வந்த வைஷாலி,

“ரொமான்ஸ்னா என்ன சிவப்பி..!” ஸ்வப்னாவிடம் சாதாரணமாய் கேட்டாள்.

நிஷா, ‘இது முத்திப் போச்சு!’ என்கிற ரீதியில் வைஷூவைப் பார்க்க,

ஸ்வப்னாவோ, நெஞ்சுவலி வந்தவளைப்போல், தன் இதயத்தை பிடித்துக் கொண்டு, கண்கள் வெளியே தெறித்துவிடும் அளவிற்கு இருவரையும் முழித்துப் பார்த்தாள்.

“ரிலாக்ஸ் சிவப்பி… கொஞ்சம் தண்ணி குடி!” என்று வைஷூ அவளை ஆசுவாசப்படுத்த, தன்னிடம் கேள்வி கேட்டவளை மேலும் கீழும் உற்றுப் பார்த்த ஸ்வப்னா,

“ஷாலிகுட்டி… ஆர் யூ ஆல் ரைட்? உடம்புக்கு ஏதும் பண்ணுதாடா?” வாஞ்சையுடன் கேட்க,

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு பக்கி!” – நிஷா

“ஹான்… இவ என்ன கேட்டா?” இன்னமும் நம்பாமல் தோழியை பார்த்து, மீண்டும் ஒரு தடவை கேள்வியை கேட்டாள் ஸ்வப்னா. 

“ரொமான்ஸ்னா என்ன?”

“வாட் இஸ் லவ்?” என்று அடுக்கடுக்காய் வைஷூ கேள்விகளை அடுக்க,

“என்ன ஆச்சு ஃப்ரீடம் ஃபைட்டர்க்கு..? ரொமான்ஸ் பத்தியெல்லாம் பேசுது… திருந்திட்டியா சாமியாரிணி!” ஸ்வப்னா அதிர்ச்சி விலகாமல் கேட்க,

“நோ டவுட்… நம்ம சங்கத்து ஆளுதான் சிவப்பி! நீ பதிலைச் சொல்லு…” கேலிச் சிரிப்பில் நிஷா உறுதியளித்தாள்.

“யார் அந்த பார்ட்டி?” என்று ஸ்வப்னா நிஷாவிடம் கேட்க, 

“அன்னைக்கு சிக்னல்ல பார்த்தோமே… ஒயிட் ஸ்கோடா…” – நிஷா.

“யாஹ்.. யா… ஸ்கோடா- 5599தானே?” ஸ்வப்னா சந்தேகத்துடன் கேட்க,

“அவர் பேர் ஒன்னும் ஒயிட் ஸ்கோடா இல்ல… அசோக் கிருஷ்ணா…” சிலிர்த்துக் கொண்டே பதில் சொன்னாள் வைஷாலி.

“பாருடா… பேர் கூட தெரியுது!” என்று கிண்டலில் இறங்கிய ஸ்வப்னா,

“என்ன நீ? எங்களுக்கு தெரியாம இப்டி கோல்மால் பண்றே..?” பொய் கோபத்துடன் முறைத்துப் பார்க்க,

“வெளியே சொல்லாம கமுக்காம இருக்கா..! இப்படி எதையெல்லாம் மறைச்சாளோ?” – நிஷா கோபத்துடன், கேலரியில் நடந்ததை எல்லாம் ஸ்வப்னாவிடம் கொட்டி முடிக்க,  

“வேணும்னு எல்லாம் சொல்லாம இருக்கல கேர்ள்ஸ்! கிராமத்துல திடீர்னு பாட்டி, மாட்டி விட்டுட்டாங்க… பொண்ணு பார்க்க வந்தாரு, மாட்டேன்னுட்டேன். இப்போ சென்னையில் பார்க்குறேனா, ஒரு கியூரியாசிட்டி, தட்ஸ் ஆல்… சரி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கடி… வாட் இஸ் லவ்?” ஆரம்பித்த இடத்திலேயே வைஷூ வந்து நிற்க,

“எனக்கெல்லாம் அதோட வாசனை தெரியாது, பக்கத்துல ஒரு யுனிவர்சிட்டியே உக்காந்திருக்கு… அதுகிட்ட கேளு!” என்று ஸ்வப்னாவை கைகாட்டிய நிஷா, “சொல்லுடி, காதல் ராணி!” என முடித்தாள்.

“ம்ம்… பக்கத்துல நின்னா தலையில இருந்து கால் வரைக்கும் எலெக்ட்ரிசிட்டி பாஸ் ஆகுற மாதிரி இருக்கும். நைட் எல்லாம் தூக்கமே வராது… உன் ஆளைப் பார்க்க முடியாம போனா, செத்து போயிடலாமான்னு தோணும்… இந்த கல்யாண குணங்கள் எல்லாம், உனக்கும் இருந்தா, நீ லவ் பண்றேன்னு அர்த்தம்…” என்று காதலின் அறிகுறிகளை சொல்லி முடிக்க,

“உனக்கு இந்த மூணுல, ஒன்னாவது இருக்கா ஷாலிகுட்டி!” – ஆர்வக்கோளாறில் நிஷா கேட்க,

“தெரியலையே? இதெல்லாம் நான் எப்படி கண்டுபிடிப்பேன்?” தோள்களை குலுக்கியபடியே வைஷாலி அப்பாவியாக இருவரையும் பார்த்தாள்.

“ஹேய்… உனக்கு, அவன் மேல இண்டரெஸ்ட் இருக்குடா… அதான் இவ்ளோ ஃபீல் பண்ணி கேள்வி கேட்குற…” என்ற ஸ்வப்னா,

“நாங்க எதுக்குடா இருக்கோம்… உங்களுக்குள்ள என்னன்னு கண்டுபிடிச்சிடுவோம்..!” என்று கூறியவள் நிஷாவின் கைகோர்க்க, இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.

மனம் நிறைந்த குழப்பமும், புதுவித மயக்கமும் வைஷாலியை ஆட்கொள்ள, கலவையான உணர்வில் தோழிகளின் உத்தேசமான பேச்சிற்கு எல்லாம் சரியென்று தலையாட்டினாள்.

பகலில் வராத பால் நிலவே

ஏன் என்னைத்தேடி வந்தாய்

எதையோ கேட்க ஏங்கி நின்றாய்…

இரவில் வராத சூரியனே

ஏன் என்னைத்தேடி வந்தாய்

எதை இரவல் வாங்க நின்றாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!