இனிய தென்றலே

இனிய தென்றலே

தென்றல் – 7

சில மௌனங்கள் கொடுமையானவை. விடையில்லா கேள்விகளுக்கு பதிலாக அவை வெளிப்படும்போது, எதிராளியின் மனநிலை முற்றிலும் நிலைகுலைந்து போய்விடும் அபாயத்தை கொடுக்கக் கூடியவை.

அந்த எதிராளியாய் அசோக்கிருஷ்ணா… தனது அத்துமீறல்களுக்கு வெகுமதியாக, வைஷாலியின் மௌனமும் அதனைத் தொடர்ந்து அவளுக்கு கிடைத்த கன்னத்து அடியும் அவனை முழுவதும் தடுமாற வைத்து, அவனது தவறை நன்றாகவே புரிய வைத்தது.

தனது விருப்பத்திற்கான சம்மதமும், கேள்விக்கான பதில்களும் வைஷாலியிடம் இருந்து எப்பொழுதும் கிடைக்கப் போவதில்லை என்பதை அறிந்தவன், தன்மனதை வெகுவாய் முயன்று நிதானப்படுத்திக் கொண்டான். 

அவளுடனான கடைசி அத்தியாயம் என்ற முடிவில், அவனது இறுதி முயற்சியாக, அவளுடன் பேச முடிவெடுத்தான். அதற்கும் தடைகள் விதித்து ஏகத்திற்கும் குழப்பி அடித்து விட்டனர் அவனது குடும்பத்தார்.

அவற்றை கேட்கக்கேட்க அசோக் தலைசுற்றித்தான் போனான். குமாரசாமியின் வீட்டில் தங்கியிருந்த தாத்தா, தந்தை, அண்ணன் என்று அனைவரும் அவனுக்கு அறிவுரை கூறிய வண்ணமாய் இருக்க, இவன் கிறுகிறுத்துப் போனான்.

‘போதும் இந்த ஒரு அனுபவமே! இனி எந்தப் பெண்ணையும் எட்டி நின்று பார்க்கும் ஆசையைக்கூட வளர்த்துக் கொள்ள மாட்டேன்’ என மனதோடு சபதமிட்டு வெறுத்த மனநிலைக்கும் வந்திருந்தான். 

ஆனாலும் ஆசை கொண்ட மனது, நடந்தவைகளை தூசியாய் தட்டி விட்டு மீண்டும் உயிர்த்துக் கொண்டது.

‘இதற்கெல்லாம் அஞ்சி, தளர்ந்து போய் விடலாமா? நீ எப்பேற்பட்டவன் என்பதை தெளிவாக தெரியப்படுத்தாமல் அமைதியாக இருந்தால், உண்மையிலேயே நீ தப்பானவன் என்னும் முத்திரை, அவள் மனதில் அழியாத கோலமாய் நிலைத்துவிடும்’ என பொல்லாத மனசாட்சி ஆணையிட, மீண்டும் பழைய நிலைக்கே வந்து நின்றான்.

அதாவது வைஷாலியிடம் தன்னை பற்றிய விளக்கத்தை கொடுக்க வேண்டும், இன்றைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு விடவேண்டும் என்ற முடிவிற்கு…

இந்தமுறை அவளிடம் பேச நேரில் செல்லவில்லை. வீட்டினரின் அறிவுரைகளை கிடப்பில் போட்டுவிட்டு குமாரசாமியிடம் கெஞ்சிக் கூத்தாடி, வைஷாலி வீட்டு தொலைபேசி எண்ணைப் பெற்றுப், பேச அழைத்து விட்டான்.

செய்கின்ற காரியம் நல்லதோ கேட்டதோ ஒன்றை முடிவெடுத்து விட்டால், அதனைச் செய்யும் தைரியம் பொங்கிய நீருற்றாய் அசோக்கிற்கு தானாகவே வந்து விடும்.

இதில் எந்தவித பயமோ தயக்கமோ அவனை தாக்குவதில்லை. கனகச்சிதமாக தான்நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் வரையில் உறுதியுடன் நிற்கும் பிடிவாதக்காரன் அவன்.

காலையில் வைஷாலியின் வீட்டில் தான்நடந்து கொண்ட அதிமேதாவித்தனத்தை(!!!) ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, எந்தவித நெருடலும் இல்லாமல் அவளை அழைத்தான்.

படபடத்த மனதுடன் தன்னை தயார்படுத்திக் கொண்டு, வீட்டுத் தொலைபேசியில் அழைத்தவன்,

“நான் அசோக் பேசுறேன்…” இப்பக்கம் தயங்கியே இவன் சொன்னதும், மறுபக்கம் அழைப்பினை எடுத்த வைஷாலி, தன்பாட்டியை பார்த்து ‘அசோக்’ என சத்தமின்றி வாயசைக்க,

‘பேசு, என்னதான் சொல்றான்னு பார்ப்போம்’ என்று பாட்டியும் அவ்வாறே அனுமதியளிக்க, உடனே லவுட் ஸ்பீக்கரில் போட்டு பேச்சுக்களை வெளியே பாட்டியும் கேட்கும்படிச் செய்தாள்.

இவனது குரலைக் கேட்கவும் இவளுக்கும் மனம் பதபதைக்கத்தான் செய்தது. இப்பொழுது என்ன மாதிரியான கோமாளித்தனத்தை அரங்கேற்றப் போகிறானோ என்ற கோபமும் தவிப்பும் தோன்றி மனதை அலைகழிக்கவும் வைத்தன.

நடப்பதை மாற்ற முடியாது என்ற பெருமூச்சோடு, அவன் பேசுவதை கேட்க தன்னை தயார்படுத்திக் கொண்டவள், பாட்டியை பார்க்க அவரும் பேத்தியின் நிலையில்தான் இருந்தார். 

அன்னபூரணி பாட்டிக்கும் சற்று ஆச்சரியம்தான். இத்தனை நடந்தும், மீண்டும் இவளை அழைத்து பேசுகிறான் என்றால், இவன் மனதிலும் ஆசை இருக்கத்தானே செய்கிறது என்று அனுமானித்து கொண்ட நேரத்தில் அவனது பேச்சினையும் கேட்க ஆவலானார். 

“நான் அசோக் பேசுறேன்” என இரண்டாம் முறை அழுத்திச் சொன்னதும் நடப்பிற்கு வந்தவள்,

“ம்… வைஷாலி ஹியர்” மௌனத்தை உடைத்து விட்டு பேச ஆரம்பித்தாள்.

“ஃபோன வச்சுராதே ஷாலி! தயவு செய்து சண்டைக்கும் நிக்காதே… என்னைக் கொஞ்சம் பேச விடு!” என்றவன் இவளின் பதிலை எதிர்பார்த்து அமைதியாக இருக்க, பாட்டியும் சைகையின் மூலம் பேச்சினைத் தொடர்ச் சொன்னார்.

“சொல்லுங்க அசோக்”

“நான் தப்பானவன் இல்ல ஷாலி! ஃபர்ஸ்ட் டைம் உன்னை பார்க்கும் போது சொன்னதுதான். ஃப்ரண்ட்ஷிப் தாண்டின பிசிகல் ரிலேஷன் கண்டினியூ பண்ற, செகண்ட் கேட்டகிரி நான் இல்ல… இன்னைக்கு என்னோட முட்டாள்தனமும் அவசரமும் சேர்ந்து ஒரு தேவதையை இழக்க காரணமாயிடுச்சு…” படபடவென்று வலிகளோடு இவன் வார்த்தைகளை கொட்ட ஆரம்பிக்க,

‘ஆண்டவா! இவன் இத விடவே மாட்டானா, சரியான பிடிவாதக்காரனா இருக்கான்’ தனது முணுமுணுப்பை மனதோடு சொல்ல ஆரம்பித்திருந்தாள் வைஷாலி. பாட்டியும் இதைக் கேட்டு சங்கடத்துடன் முகம் சுளிக்க, அவன் பேச்சினை தொடர்ந்தான்.

“கேட்குறியா ஷா!”

“ம்… சொல்லுங்க”

“அன்னைக்கு நீ திட்டிட்டு போனதும் எனக்குள்ள நிறைய டிப்ரஷன். அதையும் தாண்டி உன்னை பார்க்கணும்… நான் தப்பானவன் இல்லன்னு சொல்லத்தான், உன்னைத் தேடி திரும்பவும் வந்தேன். பட், அது உன்னை காயப்படுத்தும்னு நான் நினைக்கல…” என்று பரிதவித்த குரலில் கூற,

“வேற எப்படி எதிர்பார்த்தீங்க?” சட்டென்று கேட்ட இவளுக்கும் கோபம் துளிர்த்தது.

“கூல் ஷா! தப்பு என் மேலதான்… பெரியவங்க கரெக்டா ட்ரீட்மெண்ட் குடுத்துட்டாங்க… அதனாலதான் என்னோட மிஸ்டேக் என்னன்னு, என்னால அனலைஸ் பண்ண முடிஞ்சது. நேர்மையில்லாத முறையில்லாத வாழ்க்கை வாழ நினைக்கிற ஆள், நான் கிடையாது” என்றவன் தீவிர மனோபாவத்தில் தன்னிலை விளக்கம் கொடுத்து, ஆசுவாசப் படுத்தியும் கொள்ள,

“ஓ… நல்லது” சுவாரசியமற்ற மனதோடு இவளும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இப்பவும் சொல்றேன், உன்னை, எனக்கு ரொம்ப பிடிக்கும் ஷாலி… அஸ் எ ஃப்ரெண்டா, உன்கூட லைஃப் லாங் டிராவல் பண்ண ஆசைப்படுறேன். எப்பவும் என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. நீ என்னை ஹண்ட்ரட் பெர்ஸெண்ட் நம்பலாம்” என்று மீண்டும் தனது பழைய பல்லவியையே பாட, இப்பக்கம் இருவருக்கும் பற்றிக் கொண்டு வந்தது.

சர்வ நிச்சயமாய் இவன் குழப்பக்காரன் மட்டுமே! இத்தனை நேரம் தெளிவாய் தன்னைப் பற்றிய சுயஅலசல்களைச் சொன்னவன் மீண்டும் அசட்டுத் தனத்தை கையில் எடுப்பானா?

வேண்டாமென ஒதுக்கி வைத்தவர்களிடமே வீம்பாக தன்னை நிரூபிக்க ஏன் இத்தனை மெனக்கெடல்கள் அவனுக்கு? இப்படியான கேள்விகள் வைஷாலியின் மனதை ஆக்கிரமிக்க, அசோக்கை ஒரு நிலையற்ற மனிதனாய் சித்தரித்துக் கொண்டாள்.  

தன்னை ஒருநேரம் ‘ஷாலி’ என்றும் சிலநேரம் ‘ஷா’ என்றும் கலந்துகட்டி அழைக்கும் விதமே, இவனது மனக்கலக்கத்தை வெளிப்படையாகக் காட்டுகிறதே என்று தனக்குள்ளாகவே ஊகித்து, பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள்.

அன்பும் நேசமும் அடி வாங்கிய இடத்தில்தான், ஆறுதலையும் அரவணைப்பையும் பெற்றுக் கொள்ளும் என்பதை அத்தனை எளிதில் யாரும் அறிந்து கொள்வதில்லை.  

“ஏதாவது பேசு ஷா!” மறுமுனையில் இருந்து இவன் கட்டாயப்படுத்த,

“என்ன பேச?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்தியவள்,

“நானும் சொல்றேன், எனக்கு இந்த மாதிரி ஜென்ட்ஸ்கூட ஃபிரண்ட்ஸ்ஷிப் வச்சு பழக்கம் இல்ல… நான் அப்படி வளர்ந்தவ கிடையாது. காலம் மாறிடுச்சுன்னு நீங்க சமாதானம் சொன்னாலும், நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல…” தெளிவாக தனது நிலைப்பாட்டை பொறுமையாக விளக்கினாள்.

“அப்போ ஃப்ரெண்டுன்னு சொல்லாம, ஸ்ட்ரைட்டா லவ் புரபோஸ் பண்ணியிருந்தா, ஒகே சொல்லி இருப்பியா?” சட்டென்று கேட்டவனின் குரலில் ஏகத்திற்கும் குதர்க்கம் இழையோட, வைஷாலிக்கு பேச்சொடு மூச்சும் நொடிநேரம் நின்று வெளியேறியது.

“இதுக்கான பதில் ஆமான்னு நீ சொன்னாலும் அதை ஏத்துக்குற மனசு எனக்கில்ல… நான் விரும்புறது, எனக்கு பிடிச்ச மாதிரி, நான் விரும்புற மாதிரி மட்டுமே எனக்கு வேணும். உன்னோட பதிலுக்காக ஏங்கிட்டு இருந்த மனசு இப்போ இல்ல… நான் நொறுங்கிப் போயிட்டேன்…” ஒவ்வொரு வார்த்தையிலும் பிடிவாதத்தை தெறிக்க விட்டு, உணர்வும் அறிவும் மாறிமாறி பயணிக்கும் கலவையாக பேசிக் கொண்டே இருந்தான்.

“காதலிச்சு ஏமாத்திட்டு போறவனுக்கு கிடைக்கிற ஆதரவு, நட்பு பாராட்டுறவனுக்கு கிடைக்காதா ஷா!” வேதனையில் புண்பட்ட தன்மனதை, அவளுடனான குதர்க்கப் பேச்சில் சமன்படுத்திக் கொண்டிருந்தான் அசோக்.

இவன் எதைத்தான் தன்னிடம் எதிர்பார்க்கிறான் என்ற ஆயாசம் அன்றைய நாளின் நூறாவது முறையாக வைஷாலிக்கு எட்டிப் பார்க்க, இவனது கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்ற யோசனையிலேயே வாயடைத்துப் போனாள். இவளது அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியாதவன்,

“பேசமாட்டியா ஷாலி!” என்று மென்மையாக அழைக்க,  நடப்பிற்கு வந்தவளால் இவனைப் பற்றி எந்தவொரு முடிவிற்கும் வர முடியவில்லை.

இந்த பத்து நிமிடத்திலேயே தன்னை மொத்தமாய் குழப்பியடிக்கும் செயலை மிகவெற்றிகரமாய் செய்து தன்னை ஊமையாக்கி விட்டானே என்ற ஆத்திரம் மட்டுமே அவளிடம் எஞ்சி நிற்க, அதையும் வெளிப்படுத்த முடியாத தனது நிலையை நினைத்து நொந்தே போனாள். 

இவனை பார்க்கும் பொழுதெல்லாம் மனச்சங்கடத்துடன் தன்னை கட்டுபடுத்திக் கொள்வது இந்த ஜென்மத்தில் தனக்கிட்ட சாபமோ என்ற கனன்ற மனதுடன் அலுத்துக் கொண்டவள், 

“லுக் அசோக்… ஏன், என்னை இப்டி டார்ச்சர் பண்றீங்க? நீங்க வேண்டாம்னு மனசளவுல தீர்மானம் பண்ணிட்டேன். உங்களோட எந்த விளக்கமும் எனக்கு தேவையில்ல… இனிமே இப்படி ஃபோன் பண்ணி பேச முயற்சி பண்ணாதீங்க…” என்று படபடவென்று பேசி முடித்து, தொலைபேசியை வைத்தாள்.

எவ்வளவுதான் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாலும் வைஷாலியால் அத்தனை எளிதாய் மீண்டு வர முடியவில்லை. அசோக் தன்இஷ்டத்திற்கென செய்தது இவளுக்கு அவஸ்தையாய் வந்து முடிய, தன்னை மீட்டுக் கொள்ள மனதோடு பெரிய போராட்டத்தையே நடத்திக் கொண்டிருந்தாள்.

அன்னபூரணி பாட்டியும் இவனை பற்றிய எந்த ஒரு நல்ல அபிப்பிராயத்திற்கும் வர இயலாமல் குழம்பிப் போனார். மேலும் அவனைப் பற்றிப் பேசி பேத்தியின் மனதை ரணப்படுத்த விரும்பாமல் முயன்றவரை அமைதி காத்தார்.   

அன்று தொலைபேசியில் பேச்சை முடித்த அசோக், அடுத்து வைஷாலியை பார்க்கவோ பேசவோ முயற்சிக்கவில்லை. வேறு காரணங்களை சொல்லிக் கொண்டு கிராமத்திற்கும் வருகை தரவில்லை. தனக்கேற்பட்ட அவமதிப்பிலும் நிராகரிப்பிலும் அவனது உள்ளம் குமைந்து கொண்டுதான் இருந்தது. 

தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளும் பெருமுயற்சியையும் கையில் எடுத்தான் அசோக். ஆனால் அதிலும் தோல்வியே அவனுக்கு… மனம் ஒரு நிலையில் நிற்காமல் தவிக்கின்ற வேளையில் எந்தவொரு உறுதியும் நிலைத்து நிற்கவில்லை.

இரண்டு நாட்கள் அனைத்தையும் தவிர்ப்பவன் மீண்டும் வெண்குழலையும், போதையையும் நாடி விடுவான். மனதிற்கு பிடித்தமான விடயங்களில் கவனத்தை செலுத்தினால் கண்டிப்பாய் இவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ள முடியுமென மருத்துவ ஆலோசனையில் அறிவுறுத்தப்பட, தனக்கான பிடித்தம் என்ன என்பதை இவனும் அலசி ஆராய, அது வைஷாலியிடம் முடிந்தது.  

அவளுடைய இயல்புகளின் ரசனையாளன் என்ற நிலையையும் தாண்டி, அவளை மனதில் வைத்து ஆராதிப்பவன் என்ற உச்சநிலைக்கு மாறிய தன்நிலையை தெளிவாகவே புரிந்து கொண்டான் அசோக்.  

மனதில் ஆசை வேரூன்றிப் போய் இருந்தாலும், கொண்ட கொள்கையில் இருந்து பின்வாங்க விரும்பாமல் தன்னை பெரும் பாடுபட்டு அடக்கிக் கொண்டான் அசோக்.

ஆக மொத்தம் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவிப்பவளுக்கும், உணர்வுகளை அடக்கி ஆள்பவனுக்கும் இடையே கண்ணாமூச்சி ஆட்டம் வெகு ஜோராய் நடந்தது.

வைஷாலியின் நாட்களும் சுவாரஸ்சியமின்றி கழிய ஆரம்பித்தன. ஆசை கொண்ட மனதினை அடக்கிக் கொள்ளப் பழகிக் கொண்டாலும், அதன் வருத்தம் அவளது செயல்களில் பட்டவர்த்தனமாய் தெரிந்தது.

பேத்தியின் முகத்தை வைத்தே அவளை எடை போட்ட அன்னபூரணி, அவளை சகஜமாக்க அவர்கள் நிலத்தின் வரவு செலவுகளை நிர்வகிக்கும் வேலை முழுவதையும் அவள் வசம் ஒப்படைத்தார்.

வீட்டில் கணக்குகளை ஒப்படைக்க வரும் பெரியவரின் உதவியுடன் அவளும் எளிதாகப் பார்க்கத் தொடங்கினாள். வருமானத்திற்கென செய்து கொண்டிருந்ததை, பொழுதைப்  போக்கிக் கொள்ளவென செய்ய ஆரம்பித்தாள்.

மனதிற்கு பிடித்தமான வேலைகளை செய்யச் செய்ய, மனபாரங்களும் குறைந்து போனதைப் போன்ற இலகுவான மனநிலை அவளுக்கு வந்தது.

வரிசையாக தனது நிலபுலன்களை பட்டியலிட்டு, அதன் லாபநஷ்டங்களை கணக்கிடச் சொன்ன அன்னபூரணி, அசையும் மற்றும் அசையாத சொத்துக்களைப் பற்றிய அனைத்துவித விளக்கங்களையும் கொடுத்தார்.

அவளும் மடிக் கணினியில் அனைத்தையும் சேமித்து, அதற்கு தகுந்தாற்போல் பிரித்தும் தனித்தனி கோப்புகளில் பத்திரப்படுத்தினாள். அதற்கடுத்து தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வீட்டுமனைகள் என சிறுகச்சிறுக சொல்ல அதன் மதிப்போ கூடிக்கொண்டே போனது.

“பயங்கரமான ஆளு பாட்டி நீ! சத்தமே இல்லாம ஒரு கோடீஸ்வரியா மாறியிருக்கே” என்று விழிகளை உயர்த்தி மெச்சிக் கொள்ள,

“நீதான்டி கோடீஸ்வரி. எல்லாம் உன் பேர்லதான் இருக்கு… என் பேத்திக்கு ஏதோ என்னால முடிஞ்சத சேர்த்து வச்சுருக்கேன். இதுல என்னை ஏமாத்திட்டு பணத்தை கையாடல் பண்ணினவங்க கணக்கும் தனியா இருக்கு” என்று தான்ஏமாந்த கதையை சொல்ல,

“போலீசுல பிடிச்சு கொடுக்கலையா அன்னம்மா!”  

“எதுக்கு? ஊரெல்லாம் இவகிட்ட பணம் காசு இருக்குனு தெரிஞ்சு, கூட நாலுபேர் வந்து திருட்டுத்தனம் பண்ணி ஏமாத்திட்டு போறதுக்கா?

அதுவுமில்லாம அவனை பிடிச்சு கொடுத்த பிறகு, என்னை பார்க்கிறப்ப எல்லாம் வன்மமா முறைப்பானே… எப்போ என்ன செய்வானோன்னு நானும் பயந்து சாகவா? மடியில உன்னை வச்சுகிட்டு தேவையா எனக்கு?” என்று பாட்டி வெளியுலகத்தின் எதார்த்தங்களை சொல்லச் சொல்ல, பேத்திக்கும் உலகியலின் நெளிவுசுளிவு நன்றாகவே புலப்பட ஆரம்பித்தது.

“இப்போ என்ன ஆச்சு? என்னை பாக்குறப்ப எல்லாம், அவன் தலைகுனிஞ்சு போயிட்டு இருக்கான். இந்த அப்பாவி கிழவிய ஏமாத்திட்டோமேன்னு மனசுக்குள்ள தெனமும் நொந்துட்டு இருப்பான். என்னை ஏமாத்தின காசுல அப்படி ஒன்னும் அவன் சுகமா வாழ்ந்துடல…” எதையும் ஏற்றுக் கொள்ளும் மனதை தன்பாட்டியிடம் கண்டுகொண்ட வைஷாலிக்கு அவரின் மேல் உள்ள பிடித்தம் இன்னும் அதிகமாகிப் போனது.  

தனக்குள் ஆர்பரிக்கும் பேரலையில், தன்உணர்வுகள் செய்த பிழையில் இருந்து வெகுவாக முயற்சித்து வெளிவர ஆரம்பித்தாள் வைஷாலி. அவளது கவனம் முழுக்க கணக்கு வழக்கு பார்ப்பதில் தொடர, பாட்டி வரன் பார்க்கும் வேலையை தீவிரப்படுத்தி இருந்தார்.

முன்புபோல் வைஷாலி தனக்கு திருமணம் வேண்டாம் தனியாக வாழ்கிறேன் என்றெல்லாம் போர்க்கொடி தூக்குவதில்லை. அசோக்கை மறக்க வேண்டும், பாட்டி தன்கடமையை நிறைவாக முடிக்க வேண்டும் என்ற நினைவே அவளை திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்திருந்தது. எந்த வரனைப் பற்றிய அபிப்பிராயம் கேட்டாலும்,

“உனக்கு பிடிச்ச மாதிரி பாரு பாட்டி! ஆனா இந்த ஊர்லயே உனக்கு பக்கத்துலயே இருக்குற மாதிரி பாரு! என்னால உன்னைத் தனியா விட்டுட்டு இருக்க முடியாது. அதுக்காக வீட்டோட மாப்பிளையா பாருன்னு நான் அடம் பிடிக்கல… என்னைப் புரிஞ்சுக்கோ!” வைஷாலி தன்நிலையை விளக்கிவிட, பாட்டிக்கும் தன்பேத்தி இத்தனை இறங்கி வந்ததே அதிகமென்று அடுத்தடுத்த காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆனால், அவர் நினைத்தது போல் வரன் அத்தனை எளிதில் அமையவில்லை. ஜாதகம் பொருந்தி, அடுத்த கட்டப் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும்போது, அவர்களின் முதற் கேள்வியே அசோக் வந்து பெண் பார்த்தது, பின்பு அதிரடியாக வீட்டிற்கு வந்து பேசிச் சென்றதைப் பற்றியே நாசூக்காய் கேட்பதைப்போல் இருந்தது.

‘இந்த காலத்துல இதெல்லாம் சகஜம்தான்’ என்று பெருந்தன்மையாக ஆமோதித்தவர்கள், ‘எத்தனை நாள் பழக்கம்’ என்று அடுத்த கேள்விக்கு தாவி, அன்னபூரணியை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்கினார்.

அவன் வரவுதான் வீட்டு வேலையாட்களின் மூலம் ஊரறிந்த கதையாகி இருந்ததே! கிராமத்தில் ஒன்றை மூடி மறைத்து வைக்கப் பெரும்பாடு படவேண்டும். அது எந்தக் காலமாக இருந்தாலும் சரி!

யாரைச் சொல்லி யாரை நோவது என்று புரியவில்லை. மனதில் மூண்ட கடுப்பில், அசோக்கின் குடும்பத்தாரிடம் சண்டை பிடிக்க வேண்டுமென்றே ஆத்திரம் பாட்டிக்கு ஏற்பட, இதனால் என்ன லாபமென்று மனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள்தான் இல்லை.

முகத்திற்கு நேரே சற்றும் தயக்கமின்றி விருப்பமில்லையென்று சொல்லும் இருவரை இணைத்து வைத்து கிராமத்து கட்டுப்பாடு, கோட்பாடு என்று வேடிக்கை பார்க்கும் சக்தி இரு குடும்பத்தாருக்கும் இல்லை.

மனத்தாங்கலில் மாதங்கள் கரைய, வந்த வரன்களும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நழுவிக் கொண்டன. ஆறு மாதங்கள் கடந்த நிலையில், தோழி நிஷாந்தினி தனது திருமணத்திற்கு அழைக்க வருகை புரிந்தாள்.

“கல்யாணம் எங்க ஊர் சேலத்துல நடக்குது. வரவேற்பு திருச்சியில நடக்குது. வைஷூவ கூட்டிகிட்டு அவசியம் வரணும் பாட்டி” என்று அழைப்பு விடுக்க,

“இப்போ எல்லாம் பஸ்ல போயிட்டு வர என்னால முடியுறதில்ல கண்ணு! இவ வருவா…” என்று பேத்தியை கைகாட்டினார் பெரியவர்.

“நான் பாட்டிகூட திருச்சிக்கு வர்றேன் நிஷூ! கல்யாணத்துக்கு வர எனக்கும் தோதுபடாது” வைஷாலியும் ஒரு எல்லைக்குள் தன்னை முடக்கிக் கொண்டாள்.

இவளது சுபாவம் இதுவல்லவே! எங்கேயும் எப்பொழுதும் தோழிகளின் விஷயத்தில் எந்தவொரு பாகுபாடும் பார்க்காமல் தோள் கொடுப்பவள், இன்று தனது அடையாளம் மொத்தமும் மறைத்து கொள்கிறாள் என்றால், அதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.

அன்றைய நாளில் அசோக்கின் அடாவடியை தோழிகளுக்கும் தெரியப்படுத்தி, கண்டித்து இருந்தார் அன்னபூரணி. அதனால் இவளின் மறுப்பிற்கு நிஷாவும் காரணத்தை கேட்டு வற்புறுத்தவில்லை.

“ஏண்டி இப்படி இருக்க? சரியான எமோசனல்ஃபூல் நீ! அதை விட்டு வெளியே வா வைஷூ! அவன் தப்பு செஞ்சதுக்கு நீ ஏன் பீல் பண்ணிட்டு இருக்க?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல… எனக்கு எங்கேயும் வர பிடிக்கல நிஷூ… என்னை கம்பெல் பண்ணாதே!” என்றவள் அவளின் மாப்பிள்ளை பற்றிய விவரங்களை கேட்க,

“எல்லாம் சென்னைவாசிதான். ஐடி ஃபில்ட், **** கம்பெனில ப்ரோக்ராம் அனலிஸ்ட்…”

“அப்பிடியா? கிளியரா கேட்டுகிட்டியா… தண்ணி, சிகெரட் எக்ஸட்ரா எல்லாம் இருக்கான்னு” இயல்பான குறும்பில் வைஷூ கேட்க,

“யாருக்கு தெரியும்? இது வரைக்கும் ரொம்ப டீசண்டாதான் போயிட்டு இருக்கு. எல்லாரும் உனக்கு வந்த நல்லவன் மாதிரி வான்டடா வந்து தன்னைத்தானே டாமேஜ் பண்ணிப்பாங்களா?” என அசோக்கை முன்னிறுத்தி நிஷா பேச,

“நான் நல்லவன் லிஸ்ட்ல அவரை சேர்க்கல நிஷூ!”

“இன்னும் அவர்ன்னு சொல்லும்போதே தெரியுதே! நீ சேர்த்த லட்சணம்” நக்கலில் இறங்க,

“போதும்டி! திரும்பவும் ஆரம்பிக்காதே… நான் டென்ஷன் ஆகிடுவேன். சிவப்பி எப்படி வர்றா? அந்த விவரத்தை எனக்கு கேட்டு சொல்லு… பாட்டியோட திருச்சிக்கு கண்டிப்பா வர்றேன்” என்று பேச்சினை முடித்தாள்.

நிஷாந்தினியின் திருமணம் சேலத்தில் முடிந்திருக்க, வரவேற்பு மாப்பிள்ளை ஊரான திருச்சியில் நடந்தது. மாலை வரவேற்பிற்கு பாட்டியுடன் சென்ற வைஷாலி தனது தோழிகளுடன் ஐக்கியமாகிவிட, அன்னபூரணி பாட்டி தனித்து அமர்ந்திருந்தார்.

அந்த சமயத்தில் அசோக் தனது தாயுடன் அங்கே வர, தங்கமணி இயல்பான பழக்கத்தில் புன்னகைத்தாலும் பாட்டி சின்ன தலையசைப்பில் முடித்துக் கொண்டார்.

“மாப்பிள்ளை, என் தாய்மாமனோட பேரன். கல்யாணத்துல கலந்துக்க முடியல…” சகஜமான பேச்சில் இறங்கிய தங்கமணி, மணமகளின் தோழியாக வைஷாலி வந்திருப்பதை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அசோக் தனது சகாக்களுடன் சென்றுவிட, பாட்டியும் தங்கமணியும் முதலில் தயங்கினாலும், அடுத்த வந்த நிமிடங்களில் சின்ன சிரிப்பில் ஆரம்பித்து ஊர்ப்பேச்சில் தங்களை மறந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

வைஷாலி தோழிகளுடன் சேர்ந்து கொட்டம் அடித்தவாறே சுற்றிக் கொண்டிருந்தாலும், அசோக்கின் வருகையை கண்டு அவன் பக்கம் திரும்பாமல் தன்மனதை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். 

அவனும் யாரும் அறியாமல் அவளைப் பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தான். இவள் வேண்டாம் என்று மூடி வைத்த அவனது உள்மனதின் ஆசைகள் யாவும் மேலெழும்பி வெளியேறத் தயாராய் இருந்தது.

இருவரின் உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஒன்றாகுமா? இருவரும் மனதை வெளிபடுத்திக் கொள்ளும் தருணம் அமையுமா? அடுத்த பதவில் காண்போம்…

காதல் தந்த நினைவுகளை

கழற்றி எறிய முடியவில்லை

அலைகள் வந்து அடிப்பதனாலே

கரைகள் எழுந்து ஓடுவதில்லை

என்னை மறக்க நினைக்கையிலும்

அவளை மறக்க முடியவில்லை

உலைமூட மூடிகள் உண்டு

அலைகடல் மூடிட மூடிகள் இல்லை

காதலின் கையில் பூக்களுமுண்டு

காதலின் கையில் கத்தியுமுண்டு

பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா

கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா

என் வாழ்விலே என்ன சோதனை

நான் வாழ்வதில் என்ன வேதனை

மனமே நீ தூங்கிவிடு

என்னை நினைவின்றி தூங்கவிடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!