இரட்டை நிலவு – 10

eiVCMWU67234-1cf48ee4

வீட்டினை அடையும் பொழுதே மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.. பத்ரியின் குடும்பத்தார் அனைவரும் அங்கே வருகை தந்திருக்க, குகனின் முகம் சங்கடத்திலும் நிர்மலா வாசுகியின் முகம் குழப்பத்தினாலும் சுருங்கியிருந்தது.. என்ன நடந்திருக்கும் என்றே யூகிக்க முடியாத கலக்கத்துடன் உள்ளே நுழைய, பரிமளாவின் உஷ்ணமான பார்வை தீண்டி சென்றது..

மும்பையிலிருந்து கிளம்பி வந்த பத்ரி மனபாரம் தாங்காமல் அன்னையிடம் அங்கு நடந்தவற்றை கொட்டி தீர்த்திருந்தான்.. “ப்பா.. என்னாச்சு??” என எவருக்கும் கேட்காத வகையில் அமீக்கா வினவ முயல மயான அமைதியான வீட்டில் அது சாத்தியமா.. “அதை ஏம்மா அங்க கேக்குற.. என்ன கேளு.. உன் சாயம் எல்லாம் வெளுத்து போச்சு.. பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே உன்னை பார்த்ததும் எனக்கு சந்தேகமாவே இருந்துச்சு.. இப்போ தானே விஷயம் எல்லாம் தெரியுது.. பொண்ணே இல்லன்னு.. உன்னை நம்பி எப்படி எங்க வீட்டுக்கு வரப்போற பொண்ணை கூட வைக்குறது.. நான் சொல்லும் போது நீங்க நம்பலையே.. உங்க பொண்ணே வந்து நிக்குறா உண்மைய கேட்டு தெரிஞ்சிக்கோங்க..” என்றவரின் கூற்றில் இருந்து ஒரு விஷயம் நன்றாக புரிந்து விட்டது.. தன்வியை பற்றிய உண்மைகள் வெளிவரவில்லை..

“பாருங்க.. இன்னும் பிடிச்சு வச்ச சிலையாட்டம் நிக்குறதை.. உண்மை தெரிஞ்சு போச்சே.. இனி என்ன சொல்லி தப்பிக்குறதுன்னு யோசிக்குறா.. நீ என்ன பண்ணினாலும் உன்னோட குறையை மறைக்க முடியாது.. ச்சே.. இப்படி ஒரு பிறவியா இருந்துட்டு எந்த தைரியத்துல திரும்ப வந்தாளோ.. நானா இருந்திருந்தா வீட்டு பக்கமே தலைவச்சு படுத்திருக்க மாட்டேன்..” என சரமாரியாக பேசி கொண்டவரை திட்டுவதற்காக வாயெடுத்த தன்வியின் கைகளில் அழுத்தம் கொடுத்து தடுத்தாள் அமீக்கா..

பரிமளாவின் அருகே நெற்றிக்கு முட்டுகொடுத்து கவிழ்ந்திருந்த பத்ரியை நோக்கிய அமீக்கா, “பத்ரி, உங்களுக்கு தெளிவா புரியலைன்னா நானே எடுத்து சொல்லியிருப்பேன்.. உங்களோட பீகைவியர் வச்சு நீங்க ரொம்ப ப்ராக்டிகலான ஆளு.. ப்ராடா பேசுவீங்கன்னு நினைச்சேன்.. ப்ச்.. இன்னும் சின்ன குழந்தைன்னு காட்டிட்டீங்க..” என்றவள் பரிமளாவிடம் சென்றாள்..

“ஆண்ட்டி, நீங்க சொல்ற மாதிரி என்னோட உடம்புல குறை இல்லை.. உங்க மனசுல தான் இருக்குது.. எஸ் ஐ யம் லெஸ்போ.. சோ வாட்?? என்ன பண்ண போறீங்க?? மை செக்ஸுவாலிட்டி இஸ் மை பிஸ்னஸ்.. இதுல டேஷிஷன் எடுக்க வேண்டியது நான் தான்.. தன்வி என்கூட இருக்குறதுனால எந்த ப்ராப்ளமும் வரப்போறதில்லை.. இது பத்தி பத்ரி கிட்ட அல்ரெடி பேசியிருக்கேன்.. நீங்க அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. இதுக்கு மேல உங்க விருப்பம்.. அண்ட் என்னோட லைப்ல இண்டர்பியர் ஆகுறதை இன்னையோட நிறுத்திக்கோங்க. அண்ட் பி கேர்புள்..” என எச்சரித்தாள்..

தன்வி யாரிடம் என்னவென்று கூறி விளக்குவது என்ற பயத்தில் வாயை மூடி மருகி கொண்டிருக்க முடிவுகள் மடமடவென்று எடுக்கப்பட்டது.. அமீக்கா போட்ட போடு பரிமளாவை முகத்தை திருப்பி கொண்டு கிளம்ப செய்தது.. அடுத்த நிமிடமே, அமீக்காவின் கன்னத்தினை பதம் பார்த்தது வாசுகியின் கரங்கள்.. “என்ன நினச்சிட்டு இருக்குற உன்மனசுல என்ன நினைச்சிட்டு இருக்குற.. பெரிய இவன்னா??” என ஆத்திரத்தில் கத்தி கொண்டிருக்க குகனோ தலை கவிழ்ந்து கொண்டார்..

“ம்மா.. நான் சொல்றதை நீங்களாவது கொஞ்சம் பொறுமையா கேளுங்க ப்ளீஸ்.. அத்த..” என்ற அமீக்கா நிர்மலாவை திரும்பி நோக்க, தீயாய் முறைத்து கொண்டிருந்தார்.. அதற்குள் முந்தி கொண்ட தன்வி, “ம்மா, அமீக்கா மேல எந்த தப்பும் இல்லைம்மா.. நீங்களாவது கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. அவ தப்பு பண்ற ஆளாம்மா..” என கெஞ்ச துவங்க “நீ பேசாத.. நான் வேணும்னு நினைச்சா ஒழுங்கு மரியாதையா என்கூட வா..” என கரம் பிடித்து இழுத்தார்..

ஒற்றை கரம் தாயிடமும் மற்றொரு கரம் தன்னவளிடமும் இருக்க, எதை தான் தேர்ந்தெடுப்பாள்.. தேர்ந்தெடுப்பதை காட்டிலும் எதையும் தவிர்த்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்க, இறுக்கி பிடித்த அமீக்காவின் கரத்திற்கும் காலம் புரிந்து விட்டது போலும்.. கண்ணீராக வியர்வை வழிந்துவிட, வழுக்கி கொண்டு செல்லாமல் இருப்பதற்காக மனம் வலுக்க தொடங்கியது.. காலம் கடந்த பின் செய்யும் எந்த பரிகாரமும் பயனளிப்பதில்லையே..

காலம் ஒரு புறம் கயமையை காட்டி கொண்டிருக்க, காதல் கொண்டவள் காயம் கண்டவளாக தானே கரத்தினை பிரித்து விட்டாள்.. அமீக்காவின் இச்செயலில் அதிர்ந்து போன தன்வி, “ப்ளீஸ்.. மீகா.. ப்ளீஸ்..” என கெஞ்ச கண்களோ பனித்து கொண்டது.. கலங்கும் தன் காதலியை கண்டு காயப்படும் திண்மம் இல்லாத அமீக்காவோ வேறுபுறமாய் திரும்பி கொண்டாள்.. இது அவளுக்கு கடினமானது தான்.. ஆனால் இதனை செய்து தானே ஆகவேண்டும்..

குகனையோ வாசுகியையோ காணாது தனதறைக்கு ஓடிய அமீக்கா, அமைதியாக படுக்கையில் அமர, தன்வியோ தாரை தாரையாக அழுது தீர்த்தாள்.. இறுதி வரை அவளின் இறுக்கமான கைகோர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பயணித்த சில மணித்துளிகளிலேயே மரணிக்கும் என்று எதிர்பார்த்திடவில்லையே.. கரம் கோர்த்து இருவரின் காதலையும் எடுத்து கூறி இவ்வுலகிற்கு புரிய வைக்க வேண்டும் என்ற தீராத ஆவல் தான்.. இவளுக்கோ தைரியமில்லை.. அவளுக்கோ தேம்பலில்லை..

அன்று தன் மகளை அழைத்து கொண்டு சென்ற நிர்மலா, திரும்பவே இல்லை.. பரம்பரை வீடு தான் என்றாலும் இரண்டு பிரிவாக கட்டி நடுவில் ஒரே கூடமாக தான் கட்டப்பட்டிருந்தது.. கூடத்தின் நடுவே பிரிவினை கோடு இட்டது போல விலகியே நடக்க பெரியவர்களுக்குள் பேச்சு வார்த்தை அற்று போனது.. குகனும் வாசுகியுமே பேசி கொள்ளவில்லை.. சரியான நேரத்திற்கு சாப்பாடு மட்டும் டேபிளில் இருக்க தனித்தனியான நேரங்களில் உண்டு முடித்தனர்..

இத்துடன் ஒரு வாரம் கடந்திருந்தது.. எப்படிபட்ட இறுக்கமாக இருந்தாலும் காலம் இளகவைத்து தானே ஆக வேண்டும்.. அமீக்கா தான் எதுவுமே நடவாதது போல வெளியில் சென்று வருவது, அறையில் பாட்டு ஒலிப்பது என்று சகஜமாக இருந்து வர, வீடானது இயல்பிற்கு வருவதாயில்லை.. தன்வியின் நிலை இன்னும் பரிதாபகரமானதாய் போனது.. அறையினுள்ளே அடைந்து கிடந்தவளை வெளியில் சென்று வருமாறு நிர்மலா பணிக்க, கிளம்பினாள்..

இக்காட்சியை மொட்டை மாடியில் நின்று வாக்கரில் பாட்டு கேட்டு கொண்டிருந்த அமீக்கா கண்டு விட, மனமோ பின்னால் சென்று பேசு என்க சிந்தையோ வேண்டாமென்று மறுத்திட மருகி நின்றாள்.. அதற்குள் தன்வி காம்பவுன்ட் சுவரினை கடந்திருந்தாள்.. வாசலிலேயே நிர்மலாவும் நின்றிட, உள்ளே நுழைந்தான் ஷ்ரவன்.. ‘இவன் எங்கே இங்கே??’ என்ற யோசனையோடு அமீக்கா கீழிறங்கி வரவேற்றிட, நிர்மலா திருப்பி கொண்டு நடந்தார்.. தன் மகளை காபற்றியவன் என்ற நன்றி இல்லையென்றாலும் வீட்டுக்கு வந்தவன் என்ற மரியாதையாவது கொடுத்திருக்கலாம் என்ற வருத்தத்துடனே அமீக்காவை பின்தொடர்ந்தான்..

கூடத்தில் அமர வைக்காமல் அவளறைக்கு அழைத்து செல்லவுமே அவனுக்குள் சந்தேகத்தை கிளறிட உள்ளே நுழையவுமே கேட்டுவிட்டான்.. அன்று நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தவளை முறைத்து விழித்தான் அவன்.. “அமீக்கா, நடந்தது எல்லாத்தையும் கேக்குறப்போ கஷ்டமா தான் இருக்குது.. ஆனா நீ பண்ணியிருக்குறதை என்னாலேயே அக்செப்ட் பண்ணிக்க முடியலன்றப்போ தன்வி நிலைமையை யோசிச்சு பாரு.. எப்பவும் உன்னையே டிபென்ட் பண்ணி உன்னை மட்டும் சுத்தி வந்த பொண்ணு எப்படி உடைஞ்சு போயிருப்பா.. என்ன ஆனாலும் நீ பண்ணினதை என்னால ஏத்துக்க முடியலை.. இந்த பிரச்சினைக்கு இது சரியான தீர்வு இல்லை..” என்றவன் ஆறுதல் கூறி விட்டு கிளம்பினான்..

அவன் சென்ற பின்னும் யோசனையிலேயே உழன்றவள், ஜன்னலருகே இளைப்பாறலுக்காக வந்து நிற்க கண்கள் நிறை கண்ணீரோடு பித்து பிடித்தவள் போல வீட்டினுள் ஓடிகொண்டிருந்தாள் தன்வி.. இதுநாள் வரை, சமூகம் அவளை தவறாக எண்ணி விட கூடாது.. எந்த தவறான பிம்பமும் அவள் மீது படிந்து விட கூடாது என்று பலவாறாக தனக்குள்ளே கொள்கைகள் வகுத்திருந்தவள் தன்னவளின் கண்ணீரை கண்டதுமே மடை உடைத்து தகர்த்திருந்தாள்.. தன் மீது சுமத்தப்படும் குற்றங்களை கூட ஏற்றுக்கொள்வாள் தன்வி மீது சிறு சாடல் என்றாலும் தாங்கி கொள்ள இயலாது..

வேறு வழியில்லை.. அவளின் கொள்கைகளும் கட்டுப்பாடுகளும் பலமிழந்து வழிவிட, அவசரமாக பால்கனி வழியே தன்வியின் அறை இருக்கும் வராண்டாவில்  குதித்து நுழைந்தவள் வேகமாக தாளிட்டாள்.. அறை முழுவதும் தன்வியை தேட, பீரோவிற்கும் அலமாரிக்கும் இடையேயான இடைவெளிக்குள் தன்னை குறுக்கி மடக்கி அமர்ந்திருந்தாள்.. கன்னங்களில் கண்ணீர் கொடு தடமாக பதிந்திருக்க, கண்களோ மேலே வெறித்து கொண்டிருந்தது..

வெளியே இழுக்க முற்பட, விரக்தியான தன்வியின் உடலோ அசைவற்று பொம்மை போல மாறியிருந்தது.. அவளை தூக்கி படுக்கையில் அமர்த்த, “தனு.. என்னாச்சு டி.. ஏன் இப்படி இருக்குற??” என பொங்கி வந்த கண்ணீரை அடக்க முயற்சித்தவளாக கேட்டாள் அமீக்கா.. வெளியில் எவ்வளவு தைரியமிக்கவளாக விளங்கினாலும் தன்வி என்ற தடாகத்தில் விழுந்த தாமரை தான் அமீக்கா.. அவள் அப்படி என்றாள் இவளோ அமீக்கா என்றாலே பைத்தியம்.. இருவரும் மாறி மாறி கொண்ட அன்பு தற்பொழுது இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டிருந்தது..

“தனு.. பேசுடி..” என அணைக்க முற்பட்ட அமீக்காவின் நெஞ்சில் கரம் வைத்து பின்னுக்கு தள்ளி விட்ட தன்வி, “பக்கத்துல வராத மீகா.. உன்னை மாதிரி ஒரு செல்பிஷை நான் பார்த்ததே இல்லை.. என்னோட ஒவ்வொரு வார்த்தையிலும் என்னோட பீளிங்கஸை புரிஞ்சிக்குற உனக்கு நான் கதருறதை பார்த்தும் இரக்கம் வரலைல.. நீ என்ன நினைச்சிட்டு இருக்குற மீகா?? இந்த எல்லா பிரச்சினையும் நீ ஒருத்தியா சமாளிக்கலாம்னா?? அதுக்கு நீ மட்டும் பிரச்சினையில இல்லை.. நாம இருக்குறோம் மீகா.. நாம.. உனக்கு புரியுதா இல்லையா?? மும்பையில வச்சு நீ என்ன சொன்ன?? எந்த பிரச்சினையா இருந்தாலும் சேர்ந்து கைகோர்த்து சால்வ் பண்ணனும்னு சொன்னியா இல்லையா?? இப்போ எங்க போச்சு அந்த சந்தோஷம்.. எனக்கும் தைரியம் இருக்குது மீகா.. மும்பயில பத்ரி கிட்ட சொல்ல தெரிஞ்ச எனக்கு இங்கேயும் உண்மையை சொல்ல தெரியாதா?? என்னை நிறுத்தி மொத்த பழியையும் உன்மேல போட்டுக்குற.. ஊர்ல முழுக்க உன்னை ஒரு மாதிரியா பேசுறாங்க.. அது உனக்கு புரியுதா?? என்னால அதை தாங்கிக்க முடியலை.. இதுனால வர்ற விளைவுகளை யோசிச்சியா மீகா.. உன் அத்த திரும்பவும் பத்ரி வீட்டுக்கு போய் பேசி நின்னு போன கல்யாணத்தை திரும்ப நடத்துறதுக்காக நல்ல நாள் பார்த்துட்டு வந்துருக்குறாங்க.. நிலைமை நம்ம கைய மீறி போயிட்டு இருக்குது..” என கத்தியவள் அப்படியே அவளின் தோள்களில் சாய்ந்தாள்..

கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, “ஆனா நீ எதுவுமே நடக்காதது மாதிரி இருக்குற.. ஒரு தடவை கூட என்ன வந்து பார்க்கணும்னு தோணலியா மீகா.. முன்னாடி நமக்குள்ள இந்த தொலைவு இருந்துச்சு தான்.. ஆனா எப்போ நீ என்னோட மீகான்னு புரிஞ்சிகிட்டேனோ பிரிஞ்சு போறதுல உடன்பாடு இல்லாம போய்டுச்சு.. உனக்காக காத்துட்டு இருப்பேன்னு தெரியாதா மீகா??” என குலுங்க தொடங்கினாள்..

தனது முதுகில் ஈரப்பதத்தை உணர்ந்தவள் அவளை தன்னிடம் இருந்து பிரிக்க, “மீகா, நாம இந்த ரியாலிட்டிய புரிஞ்சிக்கணும்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?? நம்ம ஊர்கள்ல லெஸ்பியன் கல்ச்சர் இல்லை தான்.. ஆனா லெஸ்பியன்ஸ் இருக்குறாங்க.. ரெண்டு லெஸ்பியன்ஸ் லவ் பண்ணி சந்தோசமா இருக்குறாங்க.. ஆனா வெளிய காட்டிக்குறதில்லை.. ஏன் தெரியுமா?? இந்த சொசைட்டி அவங்களை ஏத்துக்காது.. முக்கியமா அவங்க பேரெண்ட்ஸ்.. வீட்ல பிரச்சினை கொடுக்க கூடாதுன்னு அமைதியா இருக்குறவங்களுக்கு மேரேஜ் பண்ணி வச்சா அவங்களால சந்தோசமா வாழ முடியாது.. பிசிக்கல் ரிலேஷன்ஷிப்ல வர்ற ப்ராபளத்தை வேற வழியில்லாம தனக்குள்ள திணிச்சிக்கிட்டு வாழுறாங்க.. இன்னும் சில பேர் அந்த ரிலேஷன்ஷிப்ப அக்செப்ட் பண்ணிக்க முடியாம வெளிய வந்துடுறாங்க.. இவங்களுக்கு மத்தியில நாம சர்வைவ் பண்றது கஷ்டம் மீகா..” என்றாள்..

அவளின் கூற்று புரிந்தாலும் மையகருத்தில் கொண்ட ஐயப்பாடினால் “இப்போ நீ என்ன சொல்ல வர்ற??” என ஏறிட்டாள் அமீக்கா.. “அதனால தான் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.. ஊருக்குள்ள பேசுறதை பொய்ன்னு சொல்ற மாதிரி நீ ஷ்ரவனை கல்யாணம் பண்ணிடு.. வெளிய நாம ஆர்டினரியா தெரிவோம்.. பட் கடைசி வரை ஒன்னாவே இருக்கலாம்..” என்றதும் விருட்டென எழுந்து கொண்டாள் அமீக்கா..

“உனக்கென்ன பைத்தியமா தனு.. ஊர் பேசுறதுக்காக நம்ம வாழ்க்கையை அழிச்சது பத்தாதுன்னு ஷ்ரவனையும் இன்வால்வ் பண்ணனுமா?? யோசிச்சு தான் பேசுறியா?? இது நமக்கு இருக்குற குறை இல்லை.. நம்மளோட அடையாளம்.. இதை மறைச்சு வாழுறது நம்மள நாமளே கொலை பண்றதுக்கு சமம்.. சுதந்திரமா இல்லாம ஏதோ ஒரு போர்வைக்குள்ள அடிமையா வாழுறோமேன்னு மூச்சு முட்டாதா?? இல்ல தன்வி.. நம்ம அடையாளம் வெளிய தெரியுறதுனால எந்த தப்பும் இல்லை.. சொசைட்டிக்காக நாம ஏன் பயப்படணும்?? முட்டாள்தனமா அவங்க பேசுனா புரிய வைக்குறது நம்மளோட கடமை..” என வீறு கொண்டு எழுந்தாள் அமீக்கா..

“அப்போ சரி.. வெளிய போய் போராடு.. போராட்டம் பண்ணி வாழுற வாழ்க்கை நிலையில்லாதது.. நிம்மதி கிடைக்காது.. கொடுத்துருக்குறது ஒரு வாழ்க்கை தான் மீகா.. போராடியே நம்ம காலம் முடிஞ்சிட கூடாது.. இங்க இது தான் ரியாலிட்டி.. போராட்டம் பண்ணி வெற்றியடையுறது எல்லாம் வெற்றி மாறன் படத்துல மட்டும் தான் நடக்கும்.. ரியாலிட்டில சாத்தியப்படாது… பெரிய பெரிய சிட்டியில உக்காந்து பேஸ்புக்லையும் யூடியூப்லையும் வேணா உன்னோட ஸ்பீச்சை அப்லோட் பண்ணலாம்.. நடைமுறைக்கு பாசிபிலிட்டீஸ் சீரோ தான்.. ப்ராக்டிக்கலா யோசி மீகா..” என்றவளின் குரல் அடியாளத்திற்கு சென்றது..

அதற்கு மேலும் அங்கு நில்லாமல், “ம்ஹும்..” என திருப்பி கொண்டு சென்ற அமீக்கா வந்த வழி செல்லாமல் நேர்வழியாகவே தன்னறைக்கு நடைபோட, எதிரில் நின்ற நிர்மலாவை ஒரு பொருட்டாகவே மதியாமல் சென்றாள்.. அவளை அங்கே கண்டதும் துணுக்குற்ற நிர்மலா, வேகமாக தன்வியின் அறைக்கு செல்ல குளியலறையில் நின்றிருந்தாள்.. குளியலறையின் கதவில் இருந்த கதகதப்பு நீண்ட நேரம் உள்ளிருப்பதாக எடுத்து காட்ட அங்கிருந்து நிம்மதியோடு நகர்ந்தார்.. ஆனால் உள்ளேயோ சூடான வெந்நீரை கதவில் ஊற்றி விட்டு கதறி கொண்டிருந்தாள் தன்வி..

சில இடங்களில் ஓரினசேர்க்கை தவறென்பதற்கு முக்கிய காரணம் உடலுறவாக பார்க்கப்படுகிறது.. உண்மை நிலையானது பல உறவுகள் காமத்தை நோக்கியோ உடல்உறவை நோக்கியோ செல்வதில்லை.. காதல் கொண்டு இறுதி வரை இணைந்து வாழ்வதிலேயே நோக்கமாய் உள்ளது.. திருநங்கைகள் பலரும் பாலியல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டாலும் தற்பொழுது சாதித்து தங்களின் உணர்வுகளை நிலைநாட்டி தங்களின் தேவை கலவி அல்ல கல்வி என்று உணர்த்தி வருகின்றனர்.. அந்த வரிசையில் ஓரினசேர்க்கையாளர்களும் அடக்கம்..

இந்த காரணிகளை கடந்து உறவு கொண்டார்களேயானால் அது அவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் அடங்கும்.. அதில் தலையீடு செய்வதற்கு எவருக்கும் அதிகாரமில்லை என்பதை பிரிவு 43-A விளக்குகிறது.. அதன் பிறகு வரும் விளைவுகளுக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பேற்கிறார்கள்..    

-அமீக்கா