இரட்டை நிலவு – 3

eiVCMWU67234-7896301d

“போச்சு..” என நாக்கை கடித்து தலையை அழுந்த பிடித்த அமீக்கா, நிர்மலாவின் நிலை அறிந்ததும் வேகமாக சென்று தாங்கி பிடித்தாள்.. திடுக்கிட்ட தன்வி செய்வதறியாது அதே இடத்தில் சிலையாகி நிற்க, இதற்கு மேலும் இங்கிருந்தால் இரவு இடியாப்பமாகி விடுவோம் என தோன்றவும் “அப்புறமா பாக்கலாம் தன்வி..” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினாள் மதி..

தன்வியின் கோலத்தினை கண்ணுற்ற நிர்மலா பாதி மயக்கத்திற்கே சென்று வர, தன்வியின் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தார்.. அந்த அடியில் “அத்த..” என அமீக்கா தடுத்திட முயல, “நீ பேசாத அமீக்கா.. என்ன காரியம் பண்ணிட்டு இருந்தா.. சொல்லவே நாக்கு கூசுது.. நீயெல்லாம் என் வயித்துல தான் வந்து பொறந்தியாடி.. உன்னை நினைக்கவே வெக்கமா இருக்குது.. படிச்சு நாலு பேருக்கு முன்னால பெருமைபட வைப்பன்னு நினைச்சேன்.. இப்படி உடம்பெல்லாம் கூசி போற மாதிரி பண்ணிட்டியே.. என்னை தடுக்காத விடு.. இவளை கொன்னா தான் என் ஆத்திரம் அடங்கும்..” என தன்வியின் மீது பாய்ந்தார்..

“அத்த.. ப்ளீஸ்..” என்ற அமீக்கா சரியாக தடுத்து விட, அந்த பலத்த அடி நல்ல வேளையாக தன்வியை சென்றடையவில்லை.. பயந்து கூனி குறுகி நின்றாள் அவள்.. அதை மட்டும் தானே செய்ய முடியும்.. “நல்ல வேலையா குகனும் வாசுவும் வீட்ல இல்லை.. அவங்க இந்த கொடுமையா பாத்திருந்தா நான் என்ன பண்ணுவேன்..” என அரற்ற துவங்கிய நிர்மலாவை, “அத்த, என்ன பேசுறீங்க.. அம்மாவும் அப்பாவும் பார்த்தா என்ன?? பார்க்கலைன்னா என்ன?? அது விஷயம் இல்லை.. தன்வியை நாம கவனிக்கணும்.. இந்த நேரத்துல நாம தானே அவளுக்கு நல்லது கெட்டது எடுத்து சொல்லணும்.. இப்படி திட்டினா பயம் தான் வரும்.. தப்பு பண்ணகூடாதுன்னு தெரியுமா??” என மடக்கினாள் அமீக்கா..

“அப்படி சொல்லாத அமீக்கா.. நடு வீட்டுக்குள்ள வச்சு.. ச்சே.. நல்ல வாழ்க்கை அமைய போகுதுன்னு சந்தோசப்படுற நேரத்துல எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டா.. இவ அப்பா சேர்த்து வச்ச மானமும் மரியாதையும் மண்ணோட மண்ணா போச்சே.. உண்மையாவே நீ என் வயித்துல தான் பொறந்தியாடி..” என தலையில் அடித்து அழ துவங்க, “ப்ளீஸ் அத்த.. நீங்க என்ன பேசுறீங்க இப்போ என்ன செஞ்சிட்டு இருக்குறீங்கன்னு புரியுதா.. நம்ம நாலு பேருக்கு மட்டும் தெரிஞ்ச விஷயத்தை இன்னும் நாலு பேர் கேக்குற மாதிரி சத்தம் போட்டு சொல்லிட்டு இருக்குறீங்க.. காம் டவுன்.. ஜஸ்ட் ஒன் கிஸ்.. இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.. மாமாவோட மானம் மரியாதை போறதுக்கும் தன்வியோட மொத்த வாழ்க்கையும் கெட்டு போற அளவுக்கும் இதுல என்ன இருக்குதுன்னு தெரியல.. ப்ளீஸ் அத்தை.. இந்த சின்ன விஷயத்தை வச்சு நல்ல வாழ்க்கையை கெடுத்துக்க வேணாம்..” என அமைதிப்படுத்தினாள் அமீக்கா..

“எந்த சின்ன விஷயத்தை வச்சிட்டு நல்ல வாழ்க்கையை கெடுக்க போற அமீக்கா..” என்ற வாசுகியின் குரலில் மூவருமே திடுக்கிட, நிர்மலாவும் தன்வியும் கண்களில் கண்ணீரோடு பேந்த பேந்த விழித்து கொண்டிருந்தனர்..

பெற்றோர்களின் இயல்பான நிலையிலேயே சங்கடமான எதையும் கேட்டுவிடவில்லை என்று யூகித்து கொண்ட அமீக்கா, “அதுவா.. ப்பா.. நீங்களே கேளுங்க.. உங்க அக்காவை.. டீ போட்டு செர்வ் பண்றது எப்படின்னு கிளாஸ் எடுத்துட்டு இருந்தாங்க.. இவங்க அத்தைக்கு தான் இந்த ஆல் இண்டியா ரேடியோ கூட சேர்ந்து புத்தி மழுங்கி போச்சுதே.. சூடா கொண்டு வரும் போது பதட்டப்படுற மாதிரி பேசிட்டாங்க.. தன்வி தெரியாம டம்ப்ளரை கீழ போட்டுட்டா.. உடனே மானம் போச்சு மரியாதை போச்சுன்னு ஒரே ப்ளாக்மெயில்..” என கண்களில் ஜாலம் காட்டி அன்னை தந்தையை போக்கு காட்டி இருவரிடமும் சைகையும் காண்பித்தாள்….

“ம்ம்..” என இருவருமே தலையசைக்க, “என்ன அண்ணி?? நானும் வந்த புதுசுல இதை விட மோசமா தானே இருந்தேன்.. நீங்க தான் பக்குவமா சொல்லி கொடுத்தீங்க.. தன்விக்கு ஏன் இவ்ளோ கண்டிப்பு.. சீக்கிரமே கத்துக்குவா..” என தன்வியின் தோள்களில் அழுத்தம் கொடுத்த வாசுகி, “அதுக்காக உடனே அண்ணியை கெடுத்த மாதிரியே பேசுறா..” என அமீக்காவின் தலையிலும் ஒரு கொட்டை வைத்தார்.. தன்வியின் பெயரில் வாசுகிக்கு பாசம் என்பது அதிகம்.. எப்பொழுதும் அரைடவுசரும் டீஷர்ட்டும் அணைந்து வலம் வரும் அமீக்காவை விட தன்வியே அவரின் அலங்காரத்தில் அமர்வதால் கூட இருக்கலாம்…

“அக்கா அப்படிதான்.. விடு தன்வி..” என்ற குகன், “அக்கா, ஜாதகம் ரொம்ப அம்சமாவே பொருந்தி வருது.. சீக்கிரமே கல்யாணம் வச்சிக்க சொல்லிட்டாங்க.. மாப்பிள்ளை வீட்ல பேசிட்டோம்.. மாப்பிள்ளை பிஸ்னஸ் விஷயமா டெல்லி போயிருக்குறாரு போல.. ரெண்டு வாரத்துல சின்னதா எங்கேஜ்மென்ட் வச்சிட்டு மாப்பிள்ளை பிஸ்னஸ் ட்ரிப் முடிச்சிட்டு வந்ததும் கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க..” என மகிழ்ச்சியோடு கூற, நிர்மலா வலிய புன்னகையை ஒன்றை உதிர்த்தார்..

கண்ணீரை கட்டுப்படுத்த இயலாமல் குனிந்து கொண்ட தன்விக்கு வெட்கம் என்பதாய் எடுத்துகொள்ளப்பட, “ப்பா.. ம்மா.. அது வரை தன்வி.. என் ரூம்ல இருக்கட்டுமே.. சின்ன வயசுல தான் நான் கெடுத்துருவேன்னு விடலை.. இப்போ கொஞ்ச நாளைக்கு மட்டும்.. ப்ளீஸ்.. அவளையும் அத்த ஏதாவது சொல்லி திட்டிட்டு இருக்காங்க..” என தன்வியை தனது பக்கம் இழுத்து கொள்ள, “சரி..” என திருமணம் வரை ஒன்றாக இருக்கட்டுமே என்று அமீக்காவின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்பட்டது..

நாட்கள் சக்கரம் கட்டிக்கொண்டு வேகமாக பறக்க, பெரியவர்கள் சம்பிரதாயங்களில் மும்முரமாகி விட்டனர்.. அமீகாவிற்கும் தன்விக்கும் தனிமை அளிக்கப்பட, பேசாத கதைகள் பலநூறு பேசப்பட்டது.. ஒரு நிமிடம் கூடா விலாகாது இருவரும் ஓட்டிக்கொண்டே திரிய, ஒருவரையும் தனியே காண இயலாது என்றானது.. பத்ரி வந்து விட்டால் மட்டும் மரியாதையின் நிமித்தமாக அங்கிருந்து நகர்ந்து விடுவாள் அமீக்கா.. தன்விக்கோ பத்ரி தானாக வந்து பேசினாலும் தயக்கமா ஒதுக்கமா என தெரியாது சங்கடத்தில் நெளிந்தாள்.. சில நேரங்களில் காதலாக இடைவளைத்து விட்டால் சங்கோஜமாக உணர்ந்திட்டாள்.. திருமண படபடப்பில் உணர்ச்சிவசப்பட்டு தடுமாறி மதியோடு அன்று அப்படி நடந்திருக்கலாம் என யூகித்து கொண்டு அந்நிகழ்வை நினைவுப்படுத்தும் எந்த காரணியையும் அண்ட விடவில்லை..

ஆனால் நிச்சயதார்த்த நிகழ்வில் மதியை காணும் நிர்மலா நடுங்க, அது அவரின் நடவடிக்கைகளை தனித்து விநோதமாக மற்றவர்களுக்கு காட்சிப்படுத்த துவங்கியது.. அமீக்கா சில நேரங்களில் நிர்மலாவிற்கு எடுத்து கூறி புரிய வைக்க முயன்றாலும் பலனில்லை.. தன்வியோ தாயின் முகத்தை காணவே இயலாத குற்ற உணர்வுக்குள் ஆட்பட்டிருந்தாள்..

பத்ரிக்கும் தன்விக்கும் நிச்சயதார்த்தம் இனிதே நடந்திட, வாழ்த்து கூற வந்தவர்களும் குடும்பத்தினரும் நிகழ்வு நிறைவடைந்ததும் நிறைவான மனதோடு கிளம்பினர்.. அப்பொழுது தான் கூட்டத்தில் ஷ்ரவன் நின்றதையும் கவனித்தாள் அமீக்கா..

“ஹாய் ஷ்ரவன்.. நான் உங்களை இன்வைட் பண்ணவே இல்லையே..” என ஆச்சர்யம் கலந்த சந்தேகத்தோடு வினவ, “ஒரு பார்ட்டிக்கு நான் டிராப்பிங் பண்ணலாம்னு வந்தேன்.. ரொம்ப நேரமா கவனிச்சிட்டே இருக்குறேன்.. கடைசி வரை அவங்க என்னை பார்க்கவே இல்லை..” என உதட்டை பிதுக்கினான் அவன்..

வீட்டிற்கு வந்தவனை வெட்டி பேச மனமில்லாதவளாக, “சாரி.. ஷ்ரவன்.. சம் இஷ்யூஸ்.. சோ நெக்ஸ்ட் மீட் பண்ண முடியல.. நைட் டைம் ட்ராவல் பண்ணலாம்.. இதுவே என்னோட காலேஜ் சிட்டியா இருந்தா.. இங்க நோ சான்ஸ்.. பிகாஸ் என் அம்மா இருக்குறாங்களே.. பொண்ணுங்க கூட பேசினாலும் தப்பு.. பசங்க கூட பேசினாலும் தப்பு.. அவங்க லாங்குவேஜ்ல பிரெண்ட்ஸ் அவங்க பொண்ணோட லைப்ல ப்ராஹிபிட்டட் எரியால நின்னுடனும்.. இப்போ மட்டும்..” என பேசி கொண்டிருந்தவளின் வழமை “இந்த லெகங்கால நீ ரொம்ப கியூட்டா இருக்குறீங்க மீகா..” என்ற ஷ்ரவனின் வார்த்தையில் தடைப்பட்டது..

இதுவரை தன்னுடைய அழகை குறித்த பாராட்டுக்களை வாங்கியிராத அமீக்காவிற்கு வித்தியாசமான உணர்வுகளை கொடுக்க “இருந்தாலும் ரைடர் அமீக்காவை தான் எனக்கு பிடிச்சிருக்கு..” என அனுமதியேயின்றி கன்னத்தில் முத்தமிட்டு அதிர்ச்சியை இரட்டிப்பாக்கியிருந்தான்..

“இவன் என்ன லூசா??” என மனம் கேட்டாலும் தண்டிக்க மனம் வரவில்லை.. யோசனையோடு நின்றவளின் போன் சிணுங்க, போனில் தெரிந்த குரலால் தலை தெறிக்க ஓடி கொண்டிருக்கிறாள்..

போனில் “மீகா, ஐ யம் டன்.. இதுக்கு மேல நான் வாழுறதுல எந்த அர்த்தமும் இல்லை..” என அழுகையினூடே தன்வி பிதற்ற, “நீ எங்க இருக்குற??” என்றவளின் கண்கள் அனிச்சையாக மேலே நோக்க, வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்தாள் அவள்..

“தனு.. நான் சொல்றதை கேளுடி.. கீழ இறங்கு.. அங்க நிக்காத..” என அமீக்கா எச்சரிக்க, “இல்ல மீகா.. இது தான் சரி.. என்னால தானே இவ்ளோ கஷ்டம்.. அம்மாவால என்னோட முகத்தை பாத்து கூட பேச முடியாத அளவுக்கு நடந்துகிட்டேன்.. தைரியமா பத்ரியை பேஸ் பண்ண முடியலை.. கில்ட்டியா இருக்குது.. யாருக்குமே உண்மையா இல்லாம ஒரு ரிலேஷன்ஷிப்ல நுழைய கூடாதுன்னு நீ தானே சொன்ன.. என்னால இந்த கல்யாணத்தை பண்ணிக்க முடியாது..  நீ என்னோட மீகா.. போறப்போ சொல்லிட்டு போகணும்னு தோனுச்சு.. அதுனால மட்டும் தான் கடைசியா உன்னோட குரலை கேட்டுட்டு போறேன்.. நான் வாழ தகுதி இல்லாதவ மீகா.. தயவு செஞ்சு என்னை காப்பத்துறேன்னு மேல வர ட்ரை பண்ணாத.. நான் குதிச்சுடுவேன்..” என மிரட்டவும் செய்தாள்..

“யோ.. தனு.. நீ இல்லாம நான் என்னடி செய்வேன்..” என ஏக்கமாக கேட்க, “என்னை மன்னிச்சுடு..” என்ற தன்வி பாதங்களை அடியெடுத்து வைக்க, அமீக்காவின் மொத்த உலகமும் இருள துவங்கியது.. அந்த நொடி, எங்கிருந்தானோ இறைதூதன் போல மாடியில் தோன்றிய ஷ்ரவன், கீழே விழுந்திருந்த தன்வியின் கரத்தை பிடித்து அந்தரத்தில் நிறுத்தியிருந்தான்..

கீழே விழ முரண்டு பிடித்த தன்வியை தன்னால் ஆனமட்டும் விடாது பிடித்திருக்க, நான்கு படிகளாக தாவிய அமீக்கா இரண்டு இடங்களில் கால்கள் இடறியும் பொருட்படுத்தாது ஷ்ரவனுக்கு மற்றொரு கரமாக மாறி அவளை மேலே தூக்கினாள். விவரமறிந்த பெற்றோர்கள் அங்கே விரைந்திட, “என்னை விடு மீகா, நான் சாக போறேன்.. எனக்கு இந்த கல்யாணம் பண்ணிக்க தகுதி இல்லை..” என அரற்றி கொண்டிருக்க, நிர்மலாவோ ஒரு ஓரத்தில் ஒடிந்து அழதுவங்கினார்..

“தனு.. ஸ்டாப் இட்..” என்ற அமீக்கா தன்வியின் கன்னங்களை பதம் பார்த்து விட, “ஷ்ரவன்.. தூக்குங்க..” என்றாள்.. “ஆண்ட்டி.. அவங்களை கவனிங்க..” என்ற ஷ்ரவன் பத்திரமாய் தன்வியை அறைக்கு எடுத்து சென்றான்..

ஷ்ரவன் மெல்ல தன்வியை படுக்கையில் கிடத்த, “மீகா.. மீகா..” என குலுங்க தொடங்கினாள்.. “ஒரு வார்த்தை பேசுன.. உயிரோட எரிச்சிருவேன்.. பேசாத..” என்ற அமீக்காவின் ஆத்திரம் அடங்காமல் மூச்சு மேலும் கீழும் வாங்கியது.. கண்களில் கண்ணீரோடு பாவமாக நோக்கிய தன்வியை, “மிஸ்.தனு.. எதுக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தீங்கன்னு தெரியல.. ஆனா எதுவா இருந்தாலும் பொறுமையா பேசி தீர்த்துருக்கலாமே.. நல்லவேளை யாருன்னே தெரியாத நான் அங்க வந்தேன்.. இல்லைன்னா என்ன ஆய்ருக்கும்னு யோசிச்சீங்களா?? உங்களோட போன் வந்த ஒரு நிமிஷம் ரொம்ப பயந்து போய்ட்டாங்க.. இப்போ வரை அந்த நடுக்கம் கையில இருக்குது பாருங்க..” என்றிடவுமே அவளை கவனித்தாள்..

அமீக்கா ஆத்திரத்திலோ கோபத்திலோ இல்லாமல் அடங்கி நடுங்கி போயிருந்தாள்.. “மீகா..” என்ற அழுகையோடு கட்டி கொண்ட தன்வி, “சாரிடி.. இனி இப்படி பண்ண மாட்டேன்..” என வாக்களித்தாள்.. கோபமாகவே பிரித்து விட்ட அமீக்கா, “நீ இல்லைன்னா நாங்க எல்லாம் என்ன ஆவோம்னு யோசிச்சியா?? நான் பண்ற சேட்டைக்கு எல்லாம் யார் என்னை காப்பாத்தி விடுவா.. ஆவியா வந்து பண்ணுவியா??” என அமீக்கா செல்லமாக அடிக்க, “பேயா உனக்குள்ளே புகுந்துக்குறேன்.. போதுமா??” மீண்டும் கட்டிக்கொண்டாள் தன்வி..

தன்வியின் மொத்த தைரியமாகி போயிருந்த அமீக்கா நடுங்கியிருப்பது அவளுக்கு தெரிந்தால் மொத்தமாக உடைந்து விடுவாளே என்பதற்காக மட்டுமே கேலியாக பேசி கவனத்தை திசை திருப்பியிருந்தாள்.. ஆனாலும் உள்ளிருக்கும் இதயம் விட்டு விட்டு துடித்த நடுக்கத்தில் உறைந்து கொண்டிருந்தது.. ஒரு நிமிடம்.. கணநொடியில் ஷ்ரவன் அங்கு போயிருக்கா விட்டால் இந்நிமிடம் இவளின் நிலை என்ன?? கோபமாக பேசலாம்.. சண்டையிடலாம்.. ஆனால் தனு இல்லாத ஒரு உலகத்தை இது வரை யோசித்து பார்க்காத கோழை அல்லவா இவள்.. வெளியே ஆயிரம் தத்துவங்கள் பேசினாலும் உள்ளேயோ தைரியமே இல்லாத தன்வியின் அன்புக்கு அடிமையாயிற்றே..

அப்பொழுது, “அமீக்கா.. அக்காவ வந்து பாரு..” என கூறிய குகனின் குரலில் தெரிந்த பதட்டத்தினால் மூவருமே ஓட்டமும் நடையுமாக செல்ல, தன்வியின் அறையில் இருந்த மரஅலமாரியை அடித்து உடைத்து கொண்டிருந்தார் நிர்மலா.. கோபத்தின் உச்சியில் ஆத்திரமாக உடைத்து கொண்டிருக்கும் அண்ணியின் அருகே எவ்வாறு செல்வது என்று கைகளை பிசைந்து கொண்டிருந்தார் வாசுகி..

“அத்த..” என்ற அமீக்காவின் வார்த்தைக்கு மதிப்பே இன்றி போனது.. நாற்பது வருடங்களுக்கு மேலாக கூடவே வாழும் தம்பி.. தங்ககம்பி.. குகனின் வார்த்தைக்கே மதிப்பில்லாத பொழுது நேற்று பெய்த மழையில் உருவான காளான் அமீக்கா எங்கே?? பைத்தியம் பிடித்தாற்போல அனைத்தையும் கலைத்து போட்ட நிர்மலா, “இது எதுவும் இல்லாம இருந்திருந்தா இன்னைக்கு ஒழுங்கா இருந்திருப்பால்ல..” என கத்தினார்..

“ஆண்ட்டி.. இது சுத்த முட்டாள்தனம்.. இந்த புக்ஸ் உங்க பொண்ண மாத்துறதில்லை.. எது சரி.. எது தப்புன்னு சொல்லி கொடுக்கும்.. அவ்ளோ தான்.. இன்னைக்கு அவங்க பண்ணின காரியத்துக்கு புக்ஸ் எந்த விதத்துலேயும் காரணம் இல்லை.. சூசைட் பண்ணனும்னு நினைச்ச பல பேரை இந்த புக்ஸ் தான் மாத்தியிருக்குது.. தனு சூசைட் பண்ண போனதுக்கு ரீசன் என்னன்னே தெரியாம ஒரு முடிவுக்கு வந்துடுறதா.. புத்தகம் படிப்ப சொல்லி கொடுத்தாலும் அனுபவம் அம்மா கிட்ட இருந்து தானே கிடைக்கும்.. இந்த மேரேஜ்னால உங்களை பிரிஞ்சு போகணுமே.. தனியா இருக்குற அம்மாவுக்கு பினான்ஷியலா எதுவும் பண்ண முடியாதேன்னு கில்ட்டியா பீல் பண்ண வச்சிருக்கலாம்.. சோ இந்த முடிவை எடுத்துருக்குறாங்க.. அவங்க எடுத்த முடிவை சரின்னு நீங்களே நினைக்க வச்சிடுவீங்க போலேயே..” என பேசிய ஷ்ரவனை, “கூட்டத்துல நீ யாருடா கோமாளி..” என்பது போல பார்த்து வைத்தார் நிர்மலா..

“மீகா.. இவன் யாரு?? தெலுங்கு பட பாட்டுக்கு லிரிக்ஸ் பாட வந்தவன் மாதிரி இருக்குறான்..” என முழுவதும் இயல்பான தன்வி குறும்பாக காதில் கிசுகிசுக்க, “ஆடு தானா வந்து மாட்டி இருக்குது.. ஒரு ஹாப் அன் ஆர்க்கு டைம் பாஸ் ஆகுதா?? அதை பாரு..” என காதை கடித்தாள் அமீக்கா.. “எனக்கு என்னவோ தெலுங்கு பட க்ளைமாக்ஸ்ல வர்ற ஹீரோ டயலாக் பேசுற சீன் மாதிரியே ஒரு பீல்.. எங்க அம்மா இப்போவே திருந்திடுவாங்க போலேயே.. எனக்கு இப்போவே அழுகனும் போல தோணுது.. தோ பாரு.. கூஸ்பம்ப் கூட வருது..” என பரிதாபத்தினூடே பங்கமாய் கலாய்த்த தன்வியை, கால்களில் மிதித்து அடக்கினாள்..

என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நிற்கும் குகன் மற்றும் வாசுகியின் குழப்பமான முகத்தையும், தன்வியின் தெளிந்த முகபாவத்தையும் கண்ட நிர்மலாவை, “கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ..” என தலையை சொறிய வைத்தது சூழ்நிலை.. கீழே சிதறி கிடந்த புத்தகங்களின் நடுவே அடர்நீல வண்ண அட்டையை கண்ட குகன் யாரும் அறியாது அதனை பத்திரப்படுத்தி கொண்டார்..

பிரச்சினை முடிந்து பாதி நூற்றாண்டுகள் கடந்திருக்க, “இங்க பாருங்க.. எவ்ளோ மெடல்ஸ் வாங்கியிருக்குறாங்க.. சர்டிபிகேட்ஸ்..” என யூடியூப்பில்லாமல் தன்வி ரூம் டூர் நடத்தி கொண்டிருந்தவன், “பாருங்க, மும்பையில இருந்து கால் லெட்டர் கூட வந்திருக்கு..” என்கவும் விருட்டென வாங்கினாள் அமீக்கா..

அதை கண்டதுமே மூளைக்குள் ஆயிரமாயிரம் திட்டங்கள் வகுக்க, உடனே “மும்பையோட பெரிய கம்பெனியில இருந்து ஆபர் லெட்டர் வந்துருக்குது.. ஏன் எங்க கிட்டே சொல்லவே இல்லை தன்வி..” என்றவள் எப்பொழுதோ தன்விக்கு கண்களை காட்டியிருந்தாள்.. அவளின் வழிகாட்டுதலின்படி, “ஆமா என்னோட ட்ரீம் அது.. இந்த நல்ல விஷயத்தை சொல்ல வரும் போது தான் மேரேஜ் அலையன்ஸ் வந்துச்சு.. தெரிஞ்சாலும் என்னை விட மாட்டீங்கன்னு தெரியும்.. அதுனால தான் சொல்லலை.. நடக்காத விஷயத்துக்கு ஆசைப்பட கூடாது..” என முகத்தை பாவமாக தொங்கவிட்டு கொண்டாள்..

உடனே குகனின் மனவோட்டத்தில் சமாதியாகிருந்த சமுத்திரகனி விழித்து பக்கம் பக்கமாய் பேசி, “நீ போடா.. உன்னோட எல்லை அந்த வானம்..” என டயலாக்கை தெறிக்க விட, “ப்பூ.. பூ..” என விசிலடித்தாள் அமீக்கா.. “அப்போ கிளம்பு தன்வி..” என துரிதபடுத்த, “எங்க??” என மற்றவர்களின் விழி அதிர்ச்சியில் விரிந்தது..

இதற்கும் வழியில்லாமலா விழிவிரிப்பை உண்டாக்குவாள்.. “நன்றே செய் அதை இன்றே செய்னு நீங்க தானப்பா சொல்லியிருக்குறீங்க.. மும்பையில தான் லில்லி இருக்குறா.. கொஞ்ச நாள் தன்வி அங்க இருந்தா உங்க தொந்திரவு இல்லாம நிம்மதியா இருப்பாளே..” என அமீக்கா இழுக்க, “தொந்திரவா??” என மூவருமே முறைக்க, “அன்பு தொந்திரவு..” என அசடாய் சிரித்து சமாளித்த தன்வி விரைவாகவே பெட்டியை கட்டினாள்..

அதற்கு அடுத்த அறையில், “அண்ணி, நான் பெத்த கழுதை தன்வியை என் ரூமுக்கு அனுப்புன்னு சொல்லும் போதே சுதாரிச்சிருக்கணும்.. ரெண்டே வாராத்துல கழுத கெட்டா குட்டி சுவருன்னு கெடுத்துட்டா.. ரெண்டு பேருமா பிளானை போட்டு மும்பை கிளம்புறதுக்கு உங்க தம்பி வாயில இருந்தே வார்த்தையை வாங்கிட்டாங்க.. பார்த்தீங்களா?? தன்வி மேலே நின்னதை பார்த்ததும் நெஞ்சு அப்படியே ஒரு நிமிஷன் நின்னே போச்சுது..” என நெஞ்சை இருக்க பிடித்த வாசுகியிடம், “ச்சே.. அப்படி இருக்காது வாசு.. தன்வி உண்மையாவே பயந்து போயிருந்தா.. இந்த ஜாப் அவளோட மெண்டல் ப்ரஷரை கம்மி பண்ணும்..” என மறுத்தார் குகன்..

“அண்ணி.. நீங்களே பாருங்க.. பொண்ணு என்ன பண்ணினாலும் தப்பே இல்லை.. ஒருவேளை இவருக்கும் அந்த ப்ளான்ல பங்கு இருக்கும் போல..” என நிர்மலாவோடு இணைந்து சந்தேகப்பார்வை வீசிட, “ய்யோ.. ஒரு யூகத்தை சொன்னா உடனே தீவிரவாதியா மாத்திடுவ போலேயே.. அந்த தம்பிக்கு அடி எதுவும் படலியே..” என கவனத்தை திசைதிருப்பினார் குகன்..

“ம்ம்.. கையில சின்ன ஸ்க்ராட்சஸ் தான்.. மெடிசின் போட்டாச்சு.. இந்த பையன் தான அன்னைக்கு அவளோட பைக்ல ஏறினது.. அப்போ சொல்லும் போது என் பொண்ணு சொக்க தங்கம்னு உச்சு கொட்டுனீங்க.. இப்போ என்ன சொல்றீங்க..” என சரியாக வாசுகி மடக்கிட, “ஏதாவது சொல்லிட்டே இருக்காத..” என்று விட்டு அங்கிருந்து தப்பியிருந்தார் குகன்..

ரயில் நிலையத்தில்,

“தன்வி, பத்திரம்.. ஜாக்கிரதை.. ஸ்டேஷன் போனதும் லில்லி வந்து பிக் பண்ணிப்பா.. உன்னோட டீடேயில்ஸ் அல்ரெடி சென்ட் பண்ணிட்டேன்.. லில்லியே உன்னை இண்டர்வியூக்கு கூட்டிட்டு போய்டுவா.. சோ டோன்ட் பேணிக்.. நல்ல படியா பண்ணு.. ஆல் தி பேஸ்ட்.. அங்க போனதும் கால் பண்ண மறந்திடாத..” என பலவாறான எச்சரிக்கைகளை கூறி கொண்டிருந்தவளை இறுக்கி அணைத்த தன்வி, “ஓகே மீகா.. நான் பார்த்துக்குறேன்… நீ பத்திரமா இரு..” எனும்போதே கண்கள் குளமாகியிருந்தது..

“ஏ.. ச்சீ.. அழாத.. இன்னும் சின்ன குழந்தை மாதிரி..” என அமீக்கா தடுக்க, “இல்ல.. என்னோட லைப்ல இது எனக்கு செகண்ட் சான்ஸ் நான் மிஸ் பண்ண மாட்டேன்.. அண்ட் சாரி மீகா… அன்னைக்கு நான் தெரியாம பண்ணல.. எனக்கு பிடிச்சு தான் கிஸ் பண்ணினேன்.. ஐ பீல் தட் மொமென்ட்.. உன்கிட்ட சொல்லனும்னு தோணிச்சு..” என்று விட்டு ரயிலில் ஏறவும் மெல்ல நகர்ந்தது.. அவளின் வார்த்தைகள் சரிவர புரியவில்லை என்றாலும் தலையாட்டி வைத்தாள் அமீக்கா..

பலமுறை தன்வியை விட்டு செல்லும் போது வராத அழுகை, முதல் முறை அவளே பிரிந்து செல்லும் போது பிழிந்து ஊற்றியது.. உதட்டை பிதுக்கி அழ தயாரானவளை ஷ்ரவன் அணைத்து கொள்ள, மார்பில் புதைந்து கண்ணீர் வடிக்க துவங்கினாள்.. “நான் அவளை பயங்கரமா மிஸ் பண்ண போறேன்..” என்றவளை தேற்றும் வழி தெரியாது விழிக்க, அவர்கள் இருவரையும் வெறித்து கொண்டிருந்தாள் தன்வி..

ஓரினசேர்கையாளர்களும் இயல்பான மனிதர்கள் அனுபவிக்க கூடிய காதலில் இன்பம், துன்பம், பிரிவு, கண்ணீர், பொறாமை, காமம் அனைத்தையும் உணர்கிறார்கள்.. அவர்களின் முதல் தயக்கமாக தங்களின் அடையாளத்தை சமூகம் ஏற்று கொள்ளுமா என்ற பயம் எழுகிறது.. தனது பாலியலினால் வாழ்க்கை முறை பாதிக்கப்படுமோ என்ற கேள்வியும் எழுகிறது..

முதலாக சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு ஆட்படுகிறார்கள்.. அவர்களின் எண்ணங்களை மாற்றி கொள்ளுமாறு ஒடுக்கப்படுகிறார்கள்.. அவர்களின் ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் சுதந்திரமோ அனுமதியோ கிடைப்பதில்லை.. இரண்டாவதாக தனக்கான துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது பலவிதமான அவமானங்களுக்கும் கேலிகளுக்கும் ஆட்படுகிறார்கள்..

இந்தியாவில் மும்பை போன்ற பெருநகரங்களில் இவர்களுக்கென்று தனி பகுதிகள் இருப்பினும் பலரும் தவறான பழக்கங்களுக்கு தள்ளப்படுகிறார்கள்.. 75% ஓரினசேர்க்கையாளர்கள் மது பழக்கத்திற்கும் போதை பழக்கத்திற்கும் அடிமையாகிறார்கள்.. சமூகத்தின் ஏற்றுகொள்ளாதன்மை அவர்களுக்குள் ஏற்படுத்தும் மனஅழுத்தமே காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது..          

  -அமீக்கா