இரட்டை நிலவு – 4

eiVCMWU67234-f8756e4d

“ஹலோ.. மிஸ்.மாஸ் வுமன்.. நானும் என்னவோன்னு நினைச்சேன்.. குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்குறீங்க??” என முதுகை நீவி விட்ட ஷ்ரவனை விட்டு விலகி, “என்னோட பர்ஸ்ட் ப்ரையாரிட்டி பர்ஸ்ட் டைம் என்னை விட்டு தூரமா போறா.. சோ கொஞ்சம் எமோஷனல் ஆய்ட்டேன்.. நவ் ஐ யம் ஓகே..” என கண்களை துடைத்து கொண்டவள் நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டாள்..

ரயிலில் ஏறியதில் இருந்தே மனம் நிலையில்லாமல் தவிக்க, உடனே போனை எடுத்து அமீக்காவின் பெயரினை அழுத்தினாள்.. அடுத்த ஐந்து நிமிடங்களில் பலமான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட அமீக்காவின் காதுகளில் தன்விக்கென தேர்ந்தெடுத்து வைத்திருந்த செய்த ரிங்டோன் விழாமலே போனது..

“ச்சே..” என நொந்து கொண்ட தன்வியின் கண்களில் இருந்து அவள் அறியாமலேயே கண்ணீர் சொரிய, காரணம் தான் தெரியவில்லை.. அமீக்காவின் கண்ணீரை கண்டதினாலோ என யோசித்தவள் மற்றொரு கோணத்தினை காண மறந்து விட, மற்றொரு நாள் மலையளவு பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதை அறியவில்லை..

வீட்டின் முன் ட்ராப் செய்த ஷ்ரவனிடம், “தேங்க்ஸ்.. யா..” என்று விட்டு உள்ளே செல்ல, “அப்புறம் எப்போ மீட் பண்ணலாம்??” என்றவனின் கேள்வி முன்னே அடியெடுத்து வைத்தவளை திரும்பி வர செய்தது.. “வாட் யூ மீன்??” என புருவம் சுருங்க முறைத்த அமீக்காவை, “கூல்.. கூல்.. உங்களோட பார்ஸ்ட் ப்ரையாரிட்டி ஊர்ல இல்லை.. சோ நான் கம்பெனி குடுக்கலாம்னு..” என உதட்டை சுழித்து புன்னகைத்தான்..

“ம்ம்..” என முகவாயில் விரல் வைத்து யோசித்தவள், “ஓகே.. தன்வி லெவலுக்கு எனக்கு கம்பெனி குடுத்துடுவீங்களா??” எனும் பொழுது அவனின் தலை வேகமாக ஆடியது.. “டுமாரோ செவன் ஒ கிளாக்.. ப்லேட்டர் பார்க்.. பாக்கலாம்..” என்கவும் “ஓகே டன்..” என்ற  ஷ்ரவன் படுஉற்சாகமாகவே கிளம்பினான்..

இதழில் இணைந்த புன்னகையோடு உள்நுழைந்த அமீக்காவை மறித்தவாறு வந்து நின்ற வாசுகி, “என்னடி நடக்குது?? அன்னைக்கு ஐஸ்க்ரீம் பார்லர்ல பேசிட்டு நீ பைக்ல கூட்டிட்டு போன.. இன்னைக்கு அவன் பைக்ல நீ வர்ற.. எங்கேஜ்மென்ட்ல எல்லாரும் கிளம்பினதுக்கு அப்புறமும் உன்கூடவே நிக்குறான்..” என்றார்..

“ம்மா.. கேசுவலான விஷயத்தை ஏன் காம்ப்லீகேட் பண்றீங்க?? வழியை விடுங்க..” என உள்ளே செல்ல முயன்றவளை தடுத்து பின்னே தள்ளிய வாசுகி, “இதெல்லாம் சாதாரணம் தான்.. ஆனா நீ எந்த பிரெண்ட் கிட்டயும் இவ்ளோ க்ளோசா இருந்து பார்த்ததில்லையே.. வாசல்ல நின்னு வழி அனுப்பிட்டு வர்ற.. எந்த ப்ரெண்டும் உன்கூட ரெண்டு நாளைக்கு மேல தாக்கு பிடிச்சதில்லையே..” என்றவரின் கேள்வி அவளை சீண்டி பார்த்தது….

“ம்மா.. என்னோட பிரெண்ட்ஸ் எல்லாரும் லாங்லாஸ்டிங் தான்.. பட் அவங்களை விட ஷ்ரவன் பிராட்மைண்டட்.. சோ கூடவே இருக்குறான்.. வெயிட்.. நீங்க என்னை பாலோ பண்றீங்களா?? ஆர் யூ ஸ்டாக்கிங் மீ??” என ஒற்றை புருவம் உயர்த்த, அதிலே ஆடிப்போன வாசுகிக்கு பதில் வர மறுக்க, “ப்பா.. ப்பா.. எங்க இருக்கீங்க.. இங்க வாங்க..” என கத்தினாள்..

அவளின் சத்தத்தில் மும்முரமாக நாளிதழை தேடி கூகிளில் தஞ்சம் புகுந்து கொண்டிருந்த குகன் வேகமாக வந்து சேர, “அம்மாவை கொஞ்சம் கவனிச்சிக்கோங்க.. கண்ட கண்ட சீரியலும் பார்த்து கெட்டு போய்ட்டாங்க.. முடிஞ்சா சைக்காரிஸ்டிக் கிட்டயும் கூட்டிட்டு போங்க.. வக்கீல் வொய்ப்னதும் தன்னை டிடெக்டிவ்னு நினைச்சிக்கிட்டு பர்ஸ்ட் கேஸா அமீக்காவும் ஷ்ரவனும் காதலிக்கிறார்களா?? பரபரப்பான நொடிகளுடன்னு மைக்கை தூக்கிட்டு சுத்த போறாங்க….” என்றவள், “யாரடி கூட்டிட்டு போகணும்.. உண்மைய கேட்டா பைத்தியம்னு சொல்லுவியா?? ஏங்க.. நீங்க தான் செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க.. அவ பேசும் போதே இப்படி பேச கூடாதுன்னு தட்டி வச்சிருந்தா ஒழுங்கா இருந்துருப்பா..” என்ற வாசுகியின் தீவிரமான வசவுகளை அலட்சியப்படுத்தி அறைக்கு சென்றாள்..

அறையினுள் நுழைந்ததுமே ஏதோ ஒரு வெறுமை மனதிற்குள் குடிகொண்டது.. என்று வந்தாலும் அவளுக்காக காத்திருக்கும் தன்வி இல்லாமல் இருக்கும் அறையை காணும் பொழுதே எரிச்சலாக வந்தது.. போதாத குறைக்கு வாசுகி வேறு பேசிய பேச்சுக்கள் காதினுள் ஒலித்து கொண்டேயிருக்க, கையில் கிடைத்த குஷனை தூக்கி எறிந்தாள்..

அந்த அறை முழுவதும் தன்வியின் வாசமே விரிந்திருக்க, “ச்சே..” என்ற இயலாமையோடு கட்டிலில் விழுந்தவள் போனை எடுத்து பார்க்க ஐந்து தவறிய அழைப்புகள்.. திறந்து பார்ப்பதற்குள் பேட்டரி இறந்து விட, உயிர்ப்பிக்க சார்ஜரில் போட்டுவிட்டு பால்கனியில் வந்து நின்றாள்..

சிறுவயதில் இருந்தே எதிரெதிர் குணங்களை கொண்ட இருவரும் பிரிந்த நாட்களே கிடையாது.. கல்லூரி என்ற கான்செப்ட் தோன்றும் பொழுதே அவர்களின் இணைப்பினில் கலவரம் வெடிக்க துவங்கியது.. தன்வியை வெளியே அனுப்ப மனமில்லாத நிர்மலா உள்ளுரிலேயே சேர்க்க நடவடிக்கை எடுக்க, இருவருமாக சேர்ந்து கிழித்து போட்ட விண்ணப்ப படிவங்கள் பலவும் இன்றளவும் பால்கனி கம்பிகளுக்கிடையே நசுங்கி கிடக்கிறது.. இறுதியில் நிர்மலாவின் கண்ணீரே வெற்றி பெற, இருவருக்கும் இடையே இடைவெளி என்றானது..

மூன்று வருடங்களில் பிரிவு என்பதையே பிரித்து வைக்குமளவிற்கு போனிலும் நேரம் கிடைக்கும் பொழுது நேரிலும் பேசி தீர்த்தனர்.. இருவருக்குள்ளும் பல ரகசியங்கள் புதைந்து கிடக்க, இருவரிடமும் ரகசியங்கள் என்றில்லை.. ஒரு நாள் விடுமுறையை கூட விடுதியில் கழிக்காத அமீக்கா, ஊருக்கு வந்து விட்டால் போதும்.. தன்வியின் தோழிகள் தொலைதூரமாகி போவார்கள்..

அந்த பட்டியலில் மதியும் அடக்கமே.. மதி என்றதுமே அமீக்காவிற்கு நினைவு வந்தது.. கிளம்பும் பொழுது ஏதோ கூறினாளே.. என்ற யோசனையோடு போனை உயிர்ப்பித்து தன்விக்கு அழைக்க, அழுது அழுது சோர்ந்த தன்வி போனை அணைத்து விட்டு அயர்ந்திருந்தாள்..

“போன் சார்ஜ் போய்டுச்சு போல.. எத்தனை தடவை சொன்னேன்.. புது போனை வாங்குன்னு.. நான் எங்க போக போறேன்னு தியாகி மாதிரி பேசுனா.. இப்போ நான் எப்படி அவளை காண்டாக்ட் பண்ண முடியும்..” என சலித்து கொண்டவள் அப்படியே கண்ணயர்ந்தும் விட்டாள்.. 

மும்பை சென்றடைந்த தன்வி, லில்லியின் உதவியோடு குறிப்பிட்ட கம்பெனியில் நேர்முக தேர்வை முடித்திட, வேலையும் உறுதியானது.. அந்த செய்தியை முதலில் அமீக்காவிடம் கூறுவதற்காக போன் செய்ய, கட் செய்த அமீக்காவோ வேறுமாதிரியான சூழலில் சிக்கியிருந்தாள்..

“ச்சே..” என தரையில் பாதங்களை உதைத்து கொண்ட தன்வியிடம், “என்னாச்சு தன்வி… எனி ப்ராப்ளம்..” என வினவினாள் லில்லி.. “ஒன்னுமில்ல.. மீகா என்னோட போன் எடுக்கல.. நேத்து இருந்தே ட்ரை பண்ணிட்டு இருக்குறேன்..” என நொந்து கொண்டவளை தோள்களில் கரம் வைத்து சமாதானம் செய்தாள் லில்லி..

“தன்வி, அமீக்காவை பொறுத்தவரை அவளை பிடிக்குறது கொஞ்சம் கஷ்டம்.. அப்பப்போ ஏதாவது ஒரு மீட்டிங்ல இருக்குறதுனால காலை அட்டென்ட் பண்ணுறது டவுட் தான்.. மெசேஜ்க்கு கூட லேட் ரிப்ளை தான் வரும்.. சோஷியல் ஆக்டிவிஸ்ட்டா இருக்குறது கொஞ்சம் ரிஸ்க்கான ஜாப் தானே.. அமீயோட ஸ்பீச்காக அவளோட க்ரூப்ல ஜாயின் பண்ணினது நெறைய பேர்..” என விளக்கி கொண்டிருக்க, “அப்படியா??” என விழிகளை விரித்தாள் தன்வி..

“எஸ்.. அவளோட மேனேஜிங் கெப்பாசிட்டி அப்படி.. எந்த போராட்டத்தையும் சரியான வழியில கொண்டு போக அவளால மட்டும் தான் முடியும்.. காலேஜ்ல கூட அவளுக்கு நிறைய பேன்ஸ்.. அவ கிட்ட பேசுறதுக்காகவே நிறைய பேர் ப்ராப்ளம் க்ரியேட் பண்ணிட்டு போய் சால்வ் பண்ண கேட்டுப்பாங்க.. பட் அமீயே தேடி போறது சைல்ட்ஹூட் பிரெண்ட் உங்களை தேடி தான்..” என்றதுமே தன்வியின் முகத்தில் பெருமை பிரகாசிக்க மனதின் ஓரம், “ஆனா இப்போ என்னையே அவாய்ட் பண்றாளே..” என்ற வருத்தம் அமிழ்ந்து கொண்டது..

ஊரில்,

ஷ்ரவனை சந்திக்க சென்ற அமீக்கா, சில நிமிடங்கள் கடந்தும் அவன் வராமல் போல எரிச்சலில் அமர்ந்திருந்தாள்.. அப்பொழுது, அங்கே வந்து ஒரு பெண்மணி, “ஹாய்…” என்கவும் “ஹாய்..” என முறுவலித்து கொண்டவளுக்கு “யாராய் இருக்கும்??” என்ற சிந்தனை மூளையில் அரித்து கொண்டது..

“நான் ஸ்ரீகா.. பக்கத்துல ஒரு லைப்ரேரில வொர்க் பண்றேன்.. கொஞ்ச நாளா உங்களை கவனிச்சிட்டு வர்றேன்.. எனக்கு ஒரு தம்பி இருக்குறான்.. உங்களுக்கும் அவனுக்கு செட் ஆகும்னு தோணிச்சு.. சோ பேசி பார்க்கலாமேன்னு வந்தேன்..” என்றவளை மேலும் கீழுமாய் விநோதமாய் நோக்கினாள் அமீக்கா..

“சீரியஸா தான் சொல்றேங்க.. என் தம்பி ரொம்பவே நல்ல பையன்.. நல்ல ஜாப்.. நல்ல சாலரி.. உங்களுக்கு சரின்னா வீட்டுக்கு வந்து முறைப்படி கேட்கலாம்னு இருக்குறோம்..” என்றதும் தாமதம் விருட்டென எழுந்து கொண்டாள் அமீக்கா..

அவளின் திடுகிட்ட நடவடிக்கை சுற்றி உள்ள அனைவரின் பார்வையும் அவர்கள் இருவரின் மேல் பதிய, பார்ப்பதற்கு மரியாதையாக தெரிந்த ஸ்ரீகாவை அங்கே அவமானப்படுத்த மனதில்லாமல், “நாட் இன்ட்ரெஸ்ட்டட்..” என்று விட்டு கடந்தாள் அமீக்கா..

ஆனாலும் அவளை விடாத ஸ்ரீகா பின்தொடர்ந்து, “ஏங்க.. நீங்க ஓகே சொன்னா போதும்.. இல்லன்னா ஒரு தடவை என் தம்பியை மீட் பண்ணுங்க..” என அடுத்தடுத்த கோரிக்கைகளை எடுத்து விட, ஒரு காரின் பின்னே ஒளிந்து கொண்டாள் அமீக்கா.. அந்த சமயத்தில் தான் தன்வி போன் செய்ய, “ஆஹா பெரிய பெரிய படையை கூட சமாளிக்கலாம்.. ஆனா இந்த ஒரு பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கவே கூடாது..” என்ற அமீக்கா சட்டென கட் செய்து சைலன்ட்டில் போட்டுவைத்தாள்.. இயல்பாகவே பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்திய அமீக்கா, இந்த கோரிக்கையில் திடுக்கிட்டு போயிருந்தாள்..

எப்படியோ ஒரு வழியாக தப்பித்து வீட்டினை வந்தடைந்தவள், “நாடு எங்க போயிட்டு இருக்குதுன்னே தெரியல.. இப்போலாம் நடுரோட்ல ப்ரொபோஸ் பண்றது ட்ரென்ட் ஆகுதுன்னு நடுரோட்லையே பொண்ணும் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க போல.. நல்ல வேளையா நான் தப்பிச்சேன்.. இல்லைன்னா நடுரோட்டில் இப்பெண் செய்த இரக்கமில்லாத செயல்னு நாலு யூடியூப் சானெல் என்னை ட்ரோல் பண்ணியிருப்பாங்க..” என புலம்பி கொண்டே வந்தவள், ஷூ ஸ்டாண்டை பார்த்து முற்றிலுமாய் குழம்பினாள்.

உள்ளே ஒரு கூட்டமே அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருக்க அந்த கூட்டத்தில் ஷ்ரவன், ஸ்ரீகா முதற்கொண்டு அமர்ந்திருந்தனர்.. நடந்ததை ஓரளவிற்கு  அனுமானித்து கொண்டிருந்த அமீக்காவை, “உள்ள போய் டிரஸ் செஞ் பண்ணிட்டு வா..” என சன்ன குரலில் வற்புறுத்திய வாசுகியை உஷ்ணமாக முறைத்து வைத்தாள்..

“ஆண்ட்டி, நீங்க என் அம்மா சொல்லியா இல்லை ஷ்ரவன் சொல்லி வந்தீங்களான்னு தெரியாது.. ரெண்டு பேரும் என்னை பத்தி என்ன எல்லாம் பெருமை பேசி வச்சிருக்குறாங்கன்னு கூட தெரியாது.. இது ஒரு பொண்ணு பார்க்கும் படலமாவே இருந்தாலும் ஒரு விஷயம் நான் தெளிவா சொல்லிடுறேன்.. இது தான் நான்.. இப்போ உங்க கண்ணு முன்னாடி நிக்குற மாதிரி தான் கடைசி வரைக்கும்.. என் கேரக்டரும் அப்படி தான்.. பொண்ணா அச்சம், மடம், நாணம் எல்லாம் எதிர்பார்க்குறது கொஞ்சம் சிரமம் தான்.. நான் ஒரு சோஷியல் ஆக்டிவிஸ்ட்.. என் அப்பா என்னை ப்ராடா வளர்த்துட்டாரு.. சோ எந்த பொய்யையும் சொல்ல விரும்பல.. என்னை இப்படியே ஏத்துகிட்டா மட்டும் தான் ஓகே..” என வேகமாக பொரிந்து தள்ளியவள் அறைக்கு ஓடினாள்..

“நான் சொல்லலை.. கல்யாண பேச்சை எடுத்தாலே ஏதாவது செஞ்சு நிறுத்திடுவா.. அதுனால தான உண்மைய சொல்லியே உங்களை வர சொன்னேன்..” என வாசுகி கூற, “ம்ம்.. பார்த்தாலே தெரியுது.. ஆனாலும் இப்படி உண்மைய பட்டு பட்டுன்னு பேசுற பொண்ணுங்க கிடைக்குறதும் கஷ்டம் தானே..” என புன்னகைத்தார் ஷ்ரவனின் தந்தை..

அறையில் கோபமாக அமர்ந்திருந்த அமீக்காவை சமாதானம் செய்யும் பொருட்டு உள்ளே நுழைந்த ஷ்ரவனை “கன்வின்ஸ் பண்றேன்னு எந்த டிராமா டயலாக்கும் பேசாதீங்க.. இன்பார்ம் பண்ணாம எதுக்கு இந்த டிராமா?? சத்தியமா சொல்றேன்.. உங்களை கழுத்த நெறிச்சு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்டலாம் போல இருக்குது.. வீட்ல மேரேஜ்க்கு மெண்டல் டார்ச்சர் பண்றாங்கன்னு பிரெண்டா நினைச்சு உங்க கிட்ட ஷேர் பண்ணினா நீங்களே அந்த ப்ராப்ளமா வந்து நிக்குறீங்க..” என அமீக்கா கடிந்து கொள்ள, சலனமின்றி அவளை நோக்கி புன்னகையை வீசினான்.

“சிரிக்குறீங்க.. நல்லா சிரிங்க.. ப்ராப்ளம் க்ரியேட் பண்றவங்களுக்கு தான் அடுத்தவங்க கஷ்டத்தை பார்த்து கூட சிரிப்பு வரும்..” என விரக்தியாக கூறியவளின் அருகே சாந்தமாக அமர்ந்தான்.. முகத்தில் எழும்பி நின்ற கவலை கோடுகளுக்கு நடுவே பார்வையை எங்கோ வெறித்திருந்தாள்..

மென்மையான வன்மை பொருந்திய கரத்தினை தன் கைகளுக்குள் பொருத்தி கொண்டவன், “மிஸ்.மாஸ் வுமன்.. சொல்றதை கேளுங்க.. கலவரத்துக்கு நடுவுல தான் வழியும் பிறக்கும்.. உங்களோட இன்டிபெண்டன்சிய டிஸ்டர்ப் பண்ணுவாங்கன்னு தான் நீங்க மேரேஜ் ப்ரோபோசலை அவாய்ட் பண்றீங்கன்னு தெரியும்.. என்னோட ப்ரோபோசலுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லுறேன்.. நானும் ப்ராக்டிக்கல் கை தான்.. எனக்கும் கோல்ஸ் அண்ட் சக்சஸ் முக்கியம் தான்.. கேர்ல்ஸ்க்கு இருக்குற ஸ்ட்ரகில்ஸ் என்னால புரிஞ்சிக்க முடியும்.. பியர்(fear)ல இருந்து பீரியட்ஸ் வரை என்கிட்டே ஷேர் பண்ணும் போது நார்மலா ட்ரீட் பண்ணின அதே பிராட் மைண்டட் தான் இப்பவும் ப்ரொபோஸ் பண்றேன்.. நீங்க அக்செப்ட் பண்ற வரை நம்ம ரிலேஷன்ஷிப் ட்ராப்க்காக இன்ட்ரோ ஆன பிரெண்ட்ஷிப்ல தான் இருக்கும்.. நான் இந்த இடத்துல டைட்டானிக் ஜாக் ஆக விரும்பலை.. என்னோட செல்பிஷ்னஷ் கூட இருக்குது.. எனக்கு இப்படி ஒரு பிராட்மைண்டட் பார்ட்னர் கிடைக்க மாட்டாங்களான்னு யோசிச்சிட்டு இருக்கும் போது தான் கிடைச்சீங்க.. இனி உங்க இஷ்டம்..” என்றவன் எழ போக தடுத்தது அமீக்காவின் கரம்.. 

“இந்த டைம் நோன்னு சொல்ல மாட்டேன்.. பட் எனக்கு டைம் வேணும்… ஆனா இப்போவே என் அம்மா கிட்ட சொல்ல வேணாம்.. கொஞ்சம் நேரம் டென்ஷன்லயே இருக்கட்டும்.. எனக்கு தெரியாம எல்லாம் பண்ணினாங்கல்ல..” என்றவள் குகனிற்கு மட்டும் தனியாக தனது முடிவினை வாட்சாப் செய்ய, மகளிற்கு முன்னே மனைவிக்கு அடக்கமாகி போனவரின் போனை மொத்த குடும்பமும் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது..

லில்லி கூறியதில் இருந்து மீகாவின் அன்பிற்கு தானே முதலிடம் என்ற மிதப்பிற்கு வந்த தன்வி, அமீக்காவின் எண்ணினை அழுத்த, குடும்ப க்ரூப்பில் மெசேஜ் மேலெழும்பியது.. என்னவென்று காணும் நோக்கோடு உள்ளே நுழைந்தவள், அங்கு கூறப்பட்ட செய்தியை காணும் பொழுது இதயத்தில் ஏதோ ஒரு வலி பிசைவதை உணர முடிந்தது..

“நான் இவ்ளோ நார்மலா மாறுவேன்னு நானே நினைக்கலை..” என்று கொண்டிருந்தவளின் கன்னங்களை தீண்டி விடும் நோக்கோடு ஷ்ரவனின் இதழ்கள் நகர்ந்து கொண்டிருக்க, சிணுங்கிய தனது போனை எடுத்த அமீக்கா அவனை கவனியாது சென்றாள்..

“ஹாய் என் செல்ல ராணியே..” என உற்சாகத்துடன் தொடங்கிய  அமீக்காவின் முகம் மாற, ஷ்ரவனோ சாய்விருக்கையின் நுனியில் வந்து அமர்ந்தான்.. திரும்ப வந்தவள், வேகமாக “ஷ்ரவன், நான் மும்பை போகணும்.. என் பேமிலிய மேனேஜ் பண்ணிக்க முடியுமா??” என்க, விருட்டென எழுந்தான் ஷ்ரவன்..

பெண்ஓரினசேர்க்கையாளர்களை பொறுத்தவரையில் ஆண்கள் என்பவர்கள் அவர்களின் வாழ்வில் பழகவும் நட்பு பாராட்டவும் செய்யலாமே தவிர வாழ்வின் முக்கியமான அங்கமாக இயலாது.. சிலரால் இவர்களை அடையாளங்காண இயலும் என்பதால் தங்களை மறைத்து கொள்வதற்கு மிகவும் பிரயத்தனப்படுகிறார்கள்.. தங்களின் உணர்வுகள் எல்லை மீறாது கட்டுப்படுத்தி கொள்கின்றனர்.. தங்களுக்கான துணையை காணும்பொழுது அவர்களுக்குள்ளாகவே காதல் அரும்புகிறது..    

-அமீக்கா