இரட்டை நிலவு – 6

eiVCMWU67234-b97d53ad

ஷ்ரவனை சரித்து தனது பாதையை விட்டு விலக்கியதாக நினைத்து கொண்டு சரமாரியான உற்சாகத்தில் இருந்தாள் தன்வி.. அன்று இரவு மனதில் அப்படி ஒரு அமைதி.. நிம்மதி.. உவகை.. என்னவேண்டுமானாலும் கூறலாம்.. ஒவ்வொருவரும் அவர்கள் புரிந்த அர்த்தத்தோடு தொடரலாம்..

“மீகா.. மீகா.. மீகா..” என கன்னம் கொஞ்சியபடியே சிணுங்கிய தன்வியை புன்னகை இழையோட நோக்கி, “என்ன?? இன்னைக்கு கொஞ்சல்ஸ் ஓவரா இருக்குது.. கோபம் எல்லாம் தீர்ந்துடுச்சா??” என மூக்கின் நுனியை மெலிதாய் அழுத்தினாள்..

“ப்ச்.. கோபம் எல்லாம் இல்லை..” என்ற தன்வி எங்கோ திரும்பி கொள்ள, “அடி கள்ளி.. நீ திரும்பிக்குறதை பார்த்தா சரியா தோனலையே.. என்னையே சீட் பண்ணி வரவச்சிட்டியா?? நீ பீல் பண்ணுறன்னு தெரிஞ்சதும் உடனே பொண்ணு பார்க்க வந்தவங்களை கூட மதிக்காம வீட்ல சண்டை போட்டுட்டு வந்துருக்கேன்.. டிராமா பண்ண கூட கத்துக்கிட்டியாடி என் செல்ல ராணியே..” என கிச்சுகிச்சு மூட்ட துவங்கினாள் அமீக்கா..

சிரித்து சிரித்து வயிறு வலித்த தன்வி அப்படியே பட்டுகரங்களால் அமீக்காவின் காதுவழி கலைந்த ஒற்றை முடிகற்றையை திருகி கொண்டே மார்பில் சாய்ந்து கொள்ள, கழுத்தினை வளைத்து கொண்ட அமீக்கா அவளின் உச்சந்தலை மீது முகவாயை முட்டி கொண்டு “இப்போ ஓகே வா..” என்றாள்..

மெல்லமாய் பவளவிழிகளை மூடி திறந்த தன்வி, “ம்ம்..” என அந்த நொடிகளை கொடிகளாக்கி தன் நினைவு புத்தகத்தில் தவழ விட முயன்று கொண்டிருந்தாள்.. அப்பொழுது கால்களுக்கு கீழே அதிர்வை உணர்ந்து, “என்ன??” என வினவ, “என்னோட போன் தான்.. ஷ்ரவன் கால் பண்றான்.. ப்ச்.. அப்புறம் பேசலாம்.. சரி நீ சொல்லு..” என்றவள் போனை ஷார்ட்ஸ் உள்ளே வைத்து அணைத்தாள்..

“ஏன் மீகா நீ அட்டென்ட் பண்ணல..”

“ப்ச்.. அது ஒன்னும் முக்கியமான கால் இல்லை தனு..”

“நான் பக்கத்துல இருக்குறதுனால எடுத்து பேச ஷையா இருக்குதா??”

“என்னை பார்த்தா இப்படி ஒரு கேள்வி கேக்குற..”

“ஆமால.. நீ தான் வெட்கம், நாணம், பயிர்ப்புன்னு சொன்னா எந்த மார்கெட்ல கிடைக்கும்னு கேட்பியே.. அதை விடு.. உனக்கும் ஷ்ரவனுக்கும் ரிலேஷன்ஷிப் எப்படி போகுது??”

“ஷ்ரவன்.. ம்ம்… குட் பாய்.. பெஸ்ட் கம்பேனியன்.. இட்ஸ் குட்யா..”

“அப்புறம் ஏன் போன் அட்டென்ட் பண்ணல..”

“விடவே மாட்டியா?? நீ ஏதோ பேசணும்னு வந்த.. சோ அட்டென்ட் பண்ணல.. லாயர்னு நினைச்சிக்கிட்டு லம்பி லம்பி கேள்வி கேக்குற..”

“கோச்சிக்காத..” என கன்னம் கொஞ்சினாள் தன்வி..

அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அமைதியே நிலவ, அமீக்கா தனுவின் கூந்தலை கோதி விட்டுக்கொண்டிருந்தாள்.. விட்டத்தை வெறித்து நோக்கி கொண்டிருந்தவளுக்கு இது தான் சரியான சமயம் என்று தோன்றிட, “மீகா.. சப்போஸ்.. நானா?? ஷ்ரவனா??ன்னு ஒரு சிச்சுவேஷன் வந்தா நீ யாரை சூஸ் பண்ணுவ..” என்று ஒரு தைரியத்தில் கேட்டுவிட்டாள்.. ஆனாலும் இதயம் தாறுமாறாக துடிக்கும் ஓசை அமீகாவை சென்றடைவதற்குள் கண்களை கொட்ட கொட்ட விழித்து யோசனை நெற்றி பொட்டில் குளமென தேங்க அவளை நோக்கி கொண்டிருந்தாள் தன்வி..

“கொஞ்சம் கஷ்டம் தான்.. பட் அந்த மாதிரி சிச்சுவேஷன் வராம நான் சமாளிச்சுடுவேன்..” என உறுதியாக கூறியவளை செல்லமாக முறைத்து கொண்டே, “ஆன்சர் கேட்டேன்..” என அதிகாரமாய் கேட்டாள்.. வெளியே அதட்டி பேசினாலே அழுது விடும் தன்வி அமீக்காவிடம் அதிகாரமாய் கேட்பது உரிமையின் ஆழம் தானே..

“கொஸ்டீன் பாஸ்ட்.. பத்ரியா?? நானா??ன்னு உன்கிட்ட கேட்டா நீ என்ன செய்வியோ அதே தான்.. ஷ்..ஷ்.. நோ.. நோ மோர் டிஸ்கஷன்.. ஒழுங்கா தூங்கு..” என அடக்கி கண்களை மூடிய தன்வியை தாலாட்டு பாடாமல் உறங்க வைத்தாள் அமீக்கா..

தன்வி தெளிந்து கொள்வதற்காக கேட்கப்பட்ட கேள்வி தற்பொழுது அமீக்காவை குழப்பி விட்டது.. இரண்டு நாட்கள் கூட அவளை விட்டு பிரிந்திருக்க முடியாது உயிர் வலி காண, முற்றிலும் தன்னை விட்டு நீங்கினாளானால் என்ன நிகழுமோ?? எப்படியும் இரண்டு மாதங்கள் கூட கிடையாது என்பதை மூளை உணர்ந்து கொண்டாலும் இதயத்தால் அதனை எதிர்கொள்ளவே இயலவில்லை.. அன்று கூட மதியோடு அவ்வார்.. இப்பொழுது நினைத்தாலும் கன்னங்கள் பழுக்க நான்கு அடிகள் விட வேண்டும் என்று தான் தோன்றுகிறது.. ஆனால் அவளின் பட்டு கன்னங்கள் ரணப்படுமே என்பதால் ஆத்திரத்தை அடக்கி கொள்கிறாள்.. அணுஅணுவாய் ரசித்திடவும் அனுபவித்திடவும் கிடைக்கும் இந்த நொடிகள் இனி கிடைக்க போவதில்லை என நினைக்கும் பொழுதே நெஞ்சை பிசைந்தது.. யோசனைகளுக்கிடையே உலவி கொண்டிருந்த அமீக்கா, ரீங்காரமிட்ட தனது போனை துழாவினாள்..

தோ.. தன்விக்கு கீழே கிடக்கிறது.. அவளை எழுப்பி தான் போனை எடுக்க வேண்டுமென்ற நிலையில் முயற்சியை கைவிட்டாள்.. அறைக்குள் அங்கலாய்ப்போடு அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்தவளை தூங்குவது போல பாவலா செய்து கொண்டிருந்த தன்வி ஓரகண்ணால் நோட்டமிட்டாள்.. அவளின் கவலை ஷ்ராவனிடம் பேசவில்லை என்பதால் என தவறாக எண்ணி கொண்டு போனின் மீது அழுத்தம் கொடுக்க நெருக்கடியின் அழுத்தம் தாளாமல் ஆப் பட்டனை அதுவே அழுத்தி கொண்டு உறக்கத்திற்கு சென்றது..

நைட் லாம்ப் டேபிளில் தன்விக்கு புதிதாக வாங்கி கொடுத்த புது போன் இருக்க, ஷ்ரவனை அழைத்து அமீக்கா பேசி கொண்டிருக்கையில் நடிப்பில் இருந்த தன்வியோ, “மண்டைல இருந்த கொண்டையை மறந்துட்டியே தன்வி.. எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணி பண்ணனும்.. ப்ளான் பண்ணலைன்னா இப்படி தான் நடக்கும்..” என தலையிலடித்து கொண்டாள்..

மறுநாள்,

காலையில் எழுந்ததில் இருந்தே படுஉற்சாகமாக காணப்பட்ட தன்வி புத்துணர்வோடு கிளம்பினாள் தனது புதிய நகரத்தில் அமீக்காவோடு நேரம் செலவழித்து உலா வருவதற்கு.. உயர்த்தி கொண்டையிட முயன்ற அமீக்காவை சுருள் சுருளாக மாற்றி போனிடேயிலாக முனிந்தாள்.. “இப்போ தான் ரொம்ப கியூட்டா இருக்குற..” என நெற்றி முறித்தவளை மறித்தது வாசலில் காலிங் பெல் ஓசை..

“சைத்தான் கே பச்சே.. எத்தனை தடவை அழிச்சாலும் திரும்ப திரும்ப பொறந்து வர்றான்..” என திட்டுக்களை முனங்கி கொண்டே கதவை திறக்க அவள் வாயில் பலப்.. வந்து நின்றது ஷ்ரவன் என்னும் பல்லி மிட்டாய் இல்லை.. பத்ரி என்னும் பாதாளம்..

அவனை கண்ட நொடி தலை கவிழ்ந்து கொள்ள, முகவாயை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்திய பத்ரி.. “ஹாய் டார்ல்ஸ்.. என்னை பார்த்ததும் பழைய ஷைனஸ் வந்துடுச்சா..” என கண்களை சிமிட்ட, “ம்ம்..” என வேண்டா வெறுப்பாக காண்டாமிருகத்தை பார்த்தது போல முறுவலித்தாள்..

கண்கள் நிரம்ப காதலுடன் அவளை நெருங்கி இடை வளைக்க, அவஸ்தையாக உணர்ந்தாள் தன்வி.. “யாரு??” என்றபடியே வந்த அமீக்கா இருவரின் நெருக்கத்தை உணர்ந்து மௌனமாகி கொள்ள, அவளின் நிமித்தம் விலகி கொண்டான் பத்ரி..

“ஹாய் அமீக்கா.. நீங்களும் இங்க தான் இருக்குறீங்களா?? சூப்பர்..” என்ற பத்ரியை, “வாங்க பத்ரி…” என வரவேற்றாள் அமீகா.. நேற்று பிரிட்ஜில் மீந்திருந்த வொயினை உள்ளே தள்ளி ஜூஸை கிளாசில் ஊற்றி வர, பத்ரியின் அருகே பொம்மையாக அமர்ந்திருந்தாள் தன்வி..

கைகளில் ஏந்தி வந்த கிளாசை அவனிடம் கொடுத்து விட்டு, “இது எனக்கு பழக்கமில்லை..” என்கவும், “இட்ஸ் ஓகே.. நான் இவ்ளோ உபசரிப்பை அமீக்கா கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணமாட்டேன்..” என்றான் அந்த ஜென்டில் மேன்.. “அப்புறம்.. உங்க வொர்க் எப்படி போகுது பத்ரி.. ஆல் குட் தானே..” என்று கௌச்சில் அமர்ந்தவாறே  நலம் விசாரிக்க, “யா.. இட்ஸ் டூ குட்..” என்றான்..

“தென்.. நீங்க..” எனும் பொழுதே கேள்வியை புரிந்து கொண்ட பத்ரி, “டூ டேஸா தன்விக்கு கால் அண்ட் மெசேஜ் பண்றேன்.. நோ ரிப்ளை.. காண்டாக்ட் நாட் ரீச்சபிள்ல இருந்துச்சு.. சோ நேர்ல பார்த்து பேசலாம்னு வந்தேன்..” என மிகவும் தாழ்மையாக கூற, “இந்த காலத்தில் இப்படி ஒரு காதலனா??” என அமீக்கா இதழ் வளைக்க, நிர்மலமான முகத்துடன் வீற்றிருந்தாள் அவனின் காதல்தேவி தன்வி..

“தன்வி போன் ப்ரேக் ஆனதுனால உங்களால காண்டாக்ட் பண்ண முடியலன்னு நினைக்குறேன்.. ஓகே.. நீங்க பேசிட்டு இருங்க.. நான் வந்துடுறேன்..” என்ற அமீக்கா அவர்களுக்கு தனிமையை அளித்து எங்கோ கிளம்பி சென்றாள்.. தன்வியின் நலனிற்காக அங்கிருந்து கிளம்புகிறாள் தான் ஆனாலும் அவளோடிருக்கும் மணி துளிகள் குறைந்து போனதே என்ற தவிப்பும் மேலோங்கியது..

தனக்கிருக்கும் பயம் தெரிந்தே தன்னை விட்டு செல்கிறாளே என்ற தவிப்பு தன்வியை நெட்டி தள்ள, “என்ன டார்ல்ஸ்.. அவுட்டிங் போலாமா?? இந்த மும்பையோட பேஸ்ட் ப்ளேசஸ் சுத்தி காட்டுறேன்.. நிறைய மனுஷங்களை பார்க்கும் போது உன்னோட பயம் தானா விலகிடும்…” என ஆதரவாக தோளணைக்க அதிர்ந்தாள்..

இவளின் பயத்தினை அவன் எப்படி அறிவான்?? என்ற திகிலோடு நோக்க, முகம் முழுவதும் பயத்தை அப்பியிருந்ததை கண்டவனாக “கூல்.. கூல்.. உன்கிட்ட கேசுவலா பேசுறதா நினைச்சிட்டு உன்னை பயமுறுத்திட்டேனா?? சாரி..” என காதை பிடித்து மன்னிப்பு கேட்டவனை பார்த்து சட்டென சிரித்தாள் தன்வி..

இந்த இயல்பிற்காகவே மனதிற்குள் போராடியவன் இப்பொழுது நிம்மதியான பெருமூச்சோடு, “தன்வி.. உனக்கு இருக்குற சைக்கலாஜிக்கல் பியர் பத்தி அமீக்கா பேசினாங்க.. அதுக்கு அப்புறம் தான் நான் பண்ணின முட்டாள்தனம் தெரிஞ்சிது.. நானும் பர்ஸ்ட் மீட்லஏ அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு அந்த கொஸ்டீன் கேட்டிருக்க கூடாது.. சோ சாரி.. நாம பர்ஸ்ட் பிரெண்ட்ஸ்.. அப்படின்னா நமக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் கிடைக்கும்.. நீ என்கிட்டே நார்மலாவே பேசு.. ஜஸ்ட் ஒரு ரயில் சிநேகம் மாதிரி..” என எடுத்து கூற அவளால் தற்பொழுது தளர்வாக உணர முடிந்தது..

வெளியில் அழைத்து சென்றவன் பல புதிய இடங்களையும் சிறப்பு மிக்க இடங்களையும் சுற்றி காண்பிக்க இருவருக்குள்ளும் ஒருவித புரிதல் ஏற்பட்டது.. தன்விக்கு முன்பு போல தயக்கம் இன்றி அவனுடன் உரையாடுவது இதமாக இருந்தது.. புதிய மனிதர்கள் அவளின் குறுகிய வட்டத்தினை மாற்றியிருக்க குற்றஉணர்வினை தவிர்த்திருந்தாள்..

பத்ரியின் அன்பான கவனிப்பாலும் அழகான அக்கறையினாலும் அவனுடன் இருக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தாள்.. ஆனால் ஆனந்தம்?? அதற்கு நேரம் எடுக்குமே.. ஆனாலும் அமீக்காவிடத்தில் இருக்கும் அவளின் ஆனந்தம் இவனிடம் தோன்றுமா என்ற கேள்வி தொக்கியே நின்றது.. சிரித்து பேசி நட்பாக அரட்டை அடித்து அளவில்லாமல் அடித்து பிடித்து விளையாட தொடங்கியிருந்த தன்வியை ஒவ்வொரு பிரேமிலும் ரசித்து லயித்தான் பத்ரி..

இறுதியாக இந்திய வாயிலினை அடைய மாலை நேரத்து மக்களினை காண்பதற்கே ஆயிரமாயிரம் கண்கள் வேண்டும் போலிருந்தது.. வரிசையாக அடுக்கப்பட்டிருந்த ரோட்டோர கடைகளும், சுற்றுலா பயணிகளும், உணவிற்காக பறந்து வரும் புறாக்களுமாக அவ்விடத்தை நிறைவாக மாற்றி கொண்டிருக்க, கண்குளிர ரசித்து கொண்டிருந்த தன்வியின் மனமானது ‘ஒருநாள் மீகாவோட வரணும்..’ என குறித்து கொண்டது.. இந்த ஒரு விஷயம் தான் அவளுக்கு புரியவே இல்லை.. ஏன் தனது வாழ்வில் எந்த நிகழ்வானாலும் மீகாவை உட்புகுத்தியே பார்க்கிறது இந்த மானங்கெட்ட மனம்..

திடீரென பறவைகளுக்கு நடுவே முட்டியிட்ட பத்ரி..

“என் அன்பே..

அழகென்று அடைந்திட

அலையவில்லையடி..

அனைத்துமாய் அணைத்து

அழைக்கிறேன்..

அணுஅணுவாய் ஆழமிறங்கும்

அலைகடலே..

அன்பின் அழகியலை

அனுபவிக்கலாமா??”

என முட்டியிட்டு காதலை தெரிவிக்க, அந்த நொடி சூழ்ந்திருந்த பலரும் அதிசயித்து கொண்டிருக்க, அதிசயிக்க வேண்டியவளோ அதிர்ந்து அனர்த்தமாய் நோக்குகிறாள்.. இவன் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கும் அவளின் ராங்கிக்காகவும் பிரத்யேகமாக எழுதப்பட்டது போன்று தோன்றுகிறது..

அந்த குழப்பத்தை விடுத்தால், இதற்கு பதில் என்ன கூறுவது?? மீண்டும் குழம்பி தான் போகிறாள்..

“பத்ரி.. எனக்கு உங்களை பிடிக்கும்.. பட் லவ்?? எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. டைம் கேட்டு உங்களை வெயிட் பண்ண வைக்க தோணலை.. இந்த நேரம் என்கிட்டே எந்த பதிலும்.. யம் சாரி..” என அவனுக்கு புரிய வைப்பதற்காக கெஞ்சும் தொனியில் கூறிகொண்டிருக்கும் போதே தூரமாக நெற்றியில் காயத்துடனும் ஆடைகளில் கரையுடனும் புல்லட்டில் சென்று கொண்டிருந்தது ஒரு உருவம்..

அது மீகா தான்.. காலையில் வாரி விட்ட வளைவு நெளிவுகள் கொண்ட கூந்தல் காற்றில் கரம் நீட்டி அழைக்கிறதே.. “பத்ரி.. ஒன் மினிட்..” என்ற தன்வி பின்னாலேயே வேகமாக ஓடி களைத்து ஒரு கட்டத்தில் ரிக்ஷாவை பிடித்து வீட்டை அடைந்தாள்.. அறை முழுவதும் இருள் மட்டும் பிரகாசிக்க, சுவற்றில் துழாவி விளக்கை ஒளிர விட்டாள் தன்வி..

அங்கே ருத்ரமூர்த்தியாய் நடுவீட்டில் அமர்ந்திருந்த அமீக்காவின் உருவமே பயத்தினை தர, அருகே சென்று “மீகா.. மீகா..” என உலுக்கினாள்.. நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் கோபம் எரிந்து கொண்டிருக்க, “பேசாம இரு தனு..” என கர்ஜிக்க, அந்த அதட்டலில் அரண்டு போனாள் தன்வி..  

“மீகா..” என அடிபட்ட குரலில் அனத்திய தன்வியை, காண இயலாமல் “இங்க வா..” என அழைத்தாள்.. தனக்கருகே அமர்த்திட, “ஐயோ காயம்.. என்னாச்சு.. மீகா.. என்ன இது?? எப்படி ரத்தம்?? என்ன நடந்துச்சு..” என தன்வி அக்கறை கேள்விகளை அடுக்கி கொண்டே செல்ல, “ஷ்ரவன் அலர்ஜி தெரிஞ்சும் ஏன் பிரான் வாங்கிட்டு வந்த??” என அழுத்தமாக கேட்டவளிடத்தில் கூற பதில்கள் இல்லை..

“சொல்லு தனு.. ஏன் அப்படி பண்ணின?? ஸீ பூட் ஏன் வாங்கிட்டு வந்த?? இது கோஇன்சிடேன்ட்டா நடந்ததா?? இல்லை.. தெரிஞ்சே தான் பண்ணுனியா??” என கேட்கும் அமீக்காவின் விழிகளை காணும் தைரியம் இல்லாமல் தலையை கவிழ்த்தி கொண்டே, “நான் தான் வாங்கினேன்..” என்றாள்..

அடுத்த நொடி அமீக்காவின் கரங்கள் ஆங்காரமாய் ஓங்கி பின் அன்பினால் தாழ்ந்திட, “ஏன் தனு??” என்றவளின் குரல் உடைந்திருந்தது.. தன்வியை காயப்படுத்தி விட்டு பின்னர் தானே காயத்தின் வலியை அனுபவிக்க இயலாதே.. ஆனாலும் அவள் செய்த தவற்றை உணர வைப்பது தானே தலையாய கடமை..

“எனக்கு ஷ்ரவனை பிடிக்கல.. மீகா.. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல அவன் வர்றது எனக்கு பிடிக்கல.. நம்மள பிரிச்சிடுவான்.. மீகா..” என தேம்ப துவங்க, “தனு.. இங்க பாரு.. என்னை பாரு..” என முகத்தை தன்பக்கம் இழுத்து, “தனு.. நாம ரெண்டு பேரும் என்னைக்குமே பிரிய மாட்டோம்.. நான் உனக்கு ப்ராமிஸ் பண்றேன்.. நீ தேவையில்லாம பயந்து அடுத்தவங்களை ஹர்ட் பண்ணாத.. பத்ரி மாதிரி ஷ்ரவனும் நல்லவன் தான்.. அவங்களால நாம பிரிய மாட்டோம்..” என அக்கறையாய் கூறிய அமீக்காவின் கண்களிலும் நீர்த்துளி எட்டிப்பார்த்தது..

“மீகா, நீ என்ன சொல்ல வர்ற?? நீ பத்ரியை அக்செப்ட் பண்ணின மாதிரி நானும் ஷ்ரவனை அக்செப்ட் பண்ணிக்கனுமா?? இது எந்த மாதிரி லாஜிக்..” என கேட்ட தன்வியிடம் ஒரு ஏக்கம்.. “சோ.. நீ இதை நிறுத்தமாட்டல்ல.. கண்டினியஸ்ஸா ஷ்ரவனை ஹர்ட் பண்ணிட்டு இருக்க போற.. ஷ்ரவன் ஹர்ட் ஆகும் போது நானுமே ஹர்ட்..” அதற்கு மேல் பேச விடாமல் அவளின் இதழை தன்னிதழால் முற்றுகை இட்டிருந்தாள் தன்வி..

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சில பாலியல் வல்லுனர்கள் வகைப்படுத்தும் பொழுதே ஓரினசேர்க்கையாளர்கள் என்ற பிரிவில் பெண்களும் அடக்கம் என்பது தெரிய வருகிறது.. பதினேழாம் நூற்றாண்டுகளில் தங்களை வெளிப்படுத்திக்கொண்ட ஆண்ஓரினசேர்க்கையாளர்கள் அனுபவித்த கடுமையான தண்டனைகளை பார்த்து பயந்து தங்களுக்குள்ளாகவே ஒரு மறைவை ஏற்படுத்தி வாழ்ந்து வந்தனர்.. இன்னும் சில பேர் தற்கொலையும் செய்கிறார்கள்..

பெண்ஓரினசேர்க்கயாளர்கள் வெளிவந்ததில் முக்கியமான பங்கு வகிப்பவர் கவிஞர் சாப்போ.. இவரின் கவிதைகளில பெண்ஓரினசேர்க்கையாளர்களை அடையாளப்ப்படுத்தியுள்ளார்.. அல்கெர்னோன் சார்லஸ் ஸ்வின்பர்னின் கவிதை 1866ல் வெளியான போது ‘லெஸ்பியன்’ன்ற வார்த்தையை குறிப்பிட்டிருக்கிறார்.. ‘லெஸ்பியன்’ என்ற வார்த்தை ‘லெஸ்போஸ் தீவில் இருந்து’ எடுக்கப்பட்டது..

அடுத்தடுத்த காலகட்டத்தில் மனிதன் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சி அடையும் பொழுதும் அறிவில் சிறந்து விளங்க, பாலின வேறுபாடுகளும் வளர்ந்த வண்ணமே இருக்கிறது.. ஒவ்வொரு காலக்கட்டத்திலேயும் ஒரு சிலர் தங்களை வெளிப்படுத்த முயற்சி செய்து பலவிதமான இன்னல்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்   

 -அமீக்கா