இரட்டை நிலவு – 7

சற்று நேரத்திற்கு முன்,

ஹோட்டல் சென்று ஷ்ரவனின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சென்ற அமீக்கா திடுக்கிடும் தகவலோடு திரும்பினாள்.. அவனுடைய அலர்ஜி கடல் உணவு உண்டதால் தான் என்று மருத்துவர்கள் கூறிவிட, அதற்கு காரணம் யார் என்பதை யூகித்து விட்ட கோபத்தில் திரும்பி கொண்டிருந்தாள்.. தனக்கு ஷ்ரவனை பிடிக்கவில்லை என்று ஒற்றை வார்த்தை உதிர்த்திருந்தால் போதுமே மறுநொடியே சூழ்நிலையையே மாற்றியிருப்பாளே.. ஏன் இந்த முட்டாள்தனம் செய்தாள்?? என் செல்ல ராணிக்குள்ள இவ்ளோ விஷமம் இருக்குமா?? என்று மாறி மாறி தனக்குள்ளே கேள்விகள் கேட்டு கொண்ட அமீக்கா, “அவளுக்காக சூழ்நிலையை மாற்றலாம்.. ஷ்ரவனை கூடவா??” என்ற கேள்வியை கேட்டிருந்தால் தவறான புரிதல்கள் முடிவிற்கு வந்திருக்கும்..

வரும் வழியில்,

ஒரு சாலையையே மறித்து, **** 3 ரோஜாக்கள் டீ விளம்பரத்திற்கு ஒத்திகை நடைபெற்று கொண்டிருந்தது.. பல நேரங்களில் அவளை எரிச்சல்படுத்திய ஒன்று என்னவென்றால் மும்முரமாக ஹாட்ஸ்டாரில் ‘நவம்பர் ஸ்டோரி’ பார்த்து கொண்டிருக்கும் போது குறுக்கிடும் மூன்று விளம்பரங்கள் அனைவரையுமே எரிச்சலுற செய்தாலும் அமீக்காவை உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும் விளம்பரம் இதுவே தான்.. காரணம் பின்னே..

மழைகாலங்களில் காரை தட்டும் திருநங்கை ஒருவரை எரிச்சலோடு நோக்கும் பெண்மணி தேநீரை கொடுத்ததும் மகராசி என்று விடுவது தான்.. ஏற்கனவே குழப்பத்தில் இருந்து கொண்டிருந்த அமீக்காவிற்கு கோபத்தை தூண்டும் காரணியாக மாறிபோனது இந்த சூழ்நிலை..

நேரே, இயக்குனரின் இருக்கையை அடைய, பகுமானமாய் வீற்றிருந்தவனை புழுதியில் உருட்டி அடிக்க வேண்டும் என்ற வெறி கிளம்பினாலும் நாகரிகமும் அவள் கற்ற ஒழுக்கமும் தடுத்து நிறுத்தியது.. அமைதியாக அருகில் சென்றவள், “சார்.. இந்த ஆட் உங்களோடது தானா??” என கேட்டாள்..

“ம்ம்.. எஸ்.. இதுல என்ன டவுட்??” என ஏறிட்டவனிடம் “உங்க மேல டவுட் இல்ல சார்.. உங்க கிட்ட டவுட்..” என்ற அமீக்காவை மேலும் தொடருமாறு சைகை செய்தான்.. “ஸீ.. உங்களோட ப்ராடக்ட் என்ன சார்?? டீ ஆர் காபி.. வாட் எவர்.. அது பாய்ன்ட் இல்லை.. ஆட் பண்றதுக்கு கன்டென்ட் இல்லைன்னா அனிமேஷன் யூஸ் பண்ணலாமே சார்.. ஏன் ட்ரான்ஸ்ஜென்டேரை யூஸ் பண்றிங்க??” என கேட்டதும் நெற்றியை சுருக்கினான்..

“பிகாஸ், ட்ரான்ஸ்ஜென்டர் வர்றப்போ சொசைட்டியில அவங்களை பத்தின ஒரு விழிப்புணர்வு கொடுக்குற மாதிரி இருக்கும்..” என பொருந்தாத பதிலுறுக்க, பத்தி கொண்டு வந்தது அமீக்காவிற்கு.. “எனக்கு புரியல சார்.. உங்க ஆட் கன்டென்ட் ஆடா (odd) இருக்கணும்.. நாலு பேரு திரும்ப போட்டு பார்க்கணும்.. வித்தியாசமா பண்றீங்கன்னு ஒரு அட்டென்ஷன் உங்களுக்கு வேணும்னு பண்றீங்கன்னு உண்மையை ஒத்துக்கோங்க சார்.. உங்க கன்டென்ட் படி அவங்களுக்கான அவேர்நெஸ் குடுக்கல.. அவமானப்படுத்துறீங்க.. உங்களோட அன்செர் படியே பார்த்தாலும் இந்த இடத்துல உங்க முடியை பிடிச்சு கீழே போட்டு மிதிச்சு அடிச்சு அவமானப்படுத்துறேன்னு வச்சிக்கலாம்.. பப்ளிக்ல ஒரு டிசென்ட் பொசிஷன்ல இருக்குறவங்களை அவமானப்படுத்த கூடாதுன்னு நானும் ஒரு அவேர்நேஸ் கிரியேட் பண்ணினதா ஆகாதா??” என்றதும் அவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, சடாரென எழுந்து கொண்டான்..

“ஏய்.. ஒரு மேநேர்ஸ்க்காக உக்கார வச்சு பேசிட்டு இருந்தா ரொம்ப பேசுற..” என கடிந்து விட்டு, “பாய்ஸ்..” என அழைத்து வெளியேற்றுமாறு கட்டளையிட்டான்.. அவர்களின் பிடியில் திமிறி கொண்டிருந்த அமீக்காவோ, “சொசைட்டில தப்பு நடக்குதுன்னா எது சரின்னு மக்கள் கண்ணுக்கு காட்டுங்க.. அதே தப்பை திரும்ப போட்டு நஞ்சா மாத்தாதீங்க.. உண்மைய சொன்னா ஏத்துக்குற பக்குவம் எப்போ வருதோ அன்னைக்கு தான் இந்த சொசைட்டி ஒரு சரியான ஸ்ட்ரக்ச்சருக்கு வரும்..” என கத்தினாள்..

அவளை பேச விடாது இழுத்து கொண்டிருந்த ஒருவனின் மூக்கில் ஓங்கி குத்து விட்டு, “போர்ஸ் பண்ணின போட்டுடுவேன்..” என மிரட்டவும் அவ்விடம் கைகலப்பானது.. சமூகத்தில் நடைபெறும் கீழ்த்தரமான செயல்களை எதிர்த்து எதிர்கருத்துக்களை முன்வைப்பதினால் தோன்றும் போராட்டங்களையும் மிரட்டல்களையும் எதிர்த்து பழகியவளுக்கு இது ஒன்றும் பெரிதாகப்படவில்லை.. அவளுடைய வரவை மும்பை எதிர்பார்க்காததால் நெற்றியில் காயமும் ஆடையில் கரையும் பரிசாக பெற்று சேர்ந்தாள்..

தற்பொழுது,

தன்வியின் இதழ் முற்றுகையில் திடுக்கிட்ட அமீக்கா அசையாமல் சிலையென சமைந்திருக்க, முத்திரை பதிக்கப்பட்டதும் விலகி கொண்டது அவளின் இதழ்கள்.. இரண்டு நிமிடங்களில் அதிர்ச்சியை அனாயசமாக எரிந்து விட்டு, “நீ என்ன காரியம் பண்ணின தனு.. பைத்தியமா நீ??” என விழிகளை விரித்து கடிதலோடு கேட்டாள் அமீக்கா..

நெற்றில் தவழ்ந்த கூந்தலினை கோதி உச்சந்தலையில் நிற்க வைத்தபடி, “மீகா.. நீ என்ன திட்டுனாலும் இது தான் நான்..” என்றவள் பெருமூச்சிட்டாள்.. புருவம் நெரித்த அமீக்காவோ, “நீ.. நீ..” என வார்த்தைகள் நாட்டியமாட, “ஆர் யூ லெஸ்போ??” என கேட்டிட்டாள்.. அதற்கு அவளின் சிரம் மேலும் கீழுமாய் அசைய மொத்த உலகமும் ஆடிப்போனது அமீக்காவிற்கு..

அதிர்ச்சியில் வேகமாக துடிக்கும் இதயத்தினை மட்டுப்படுத்த முயன்று கொண்டே தன்வியை நோக்க, சலனங்கள் ஏதுமின்றி தலையை கவிழ்த்திருந்தாள்.. ஒரு வேகத்தில் கத்திவிட்ட தனது ஆத்திரத்தை நினைத்து வருத்ததோடே தன்வியின் வதனத்தை நிமிர்த்தினாள்.. “தனு.. நீ லெஸ்போ இல்லை.. இது உனக்கு கன்பியூசன் ஸ்டேட்.. நீ பயப்படாத.. எல்லாம் சரியாய்டும்..” என சமாதானம் செய்ய முயல, “இல்ல.. மீகா, எதுவும் சரியாகாது.. நான் லெஸ்பியன் தான்..” என்ற தன்வி குலுங்கினாள்..

“நோ.. நோ.. நீ நினைக்குறது தப்பு.. உள்ளூர்லேயே இருந்து பசங்க கிட்ட பழகாததுனால உனக்குள்ள இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உருவாகியிருக்குது.. மும்பை வந்து பார்த்த சில விஷயங்கள் உனக்குள்ள ஒரு குழப்பமா மாறி இந்த நிலைமைக்கு கொண்டு வந்துருக்குது.. முதல் நாள் நீ கூட சொன்னியே உன்னோட ஆபீஸ்ல ரெண்டு பொண்ணுங்க லெஸ்பியன் ரிலேஷன்ஷிப்ல இருக்குறாங்கன்னு.. டெய்லி அவங்களை பார்க்குறதுனால உனக்கு அப்படி தோணியிருக்கும்.. சின்ன வயசுல கூட அத்த சொல்லுவாங்களே.. எந்த விஷயத்தை பார்த்து நாம வளருரோமோ அதுவா தான் ஆகுறோம்.. புரிஞ்சிக்கோ..” என்ற அமீக்காவின் குரலில் எப்படியாவது அவளை சமாதானம் செய்து விடுவோமா என்ற ஏக்கம் மின்னியது..

“மீகா.. ப்ளீஸ்.. நான் சொல்றதை நீ புரிஞ்சிக்க ட்ரை பண்ணு.. மும்பை வர்றதுக்கு முன்னாடி இருந்தே எனக்கு இந்த பீல் இருக்குது.. வீட்ல மதியோட.. மறந்துட்டியா மீகா..” என நினைவுப்படுத்த அமீக்காவிற்கு பிரச்சினையின் தீவிரம் சிறிது சிறிதாக விளங்க தொடங்கியது..

அமீக்காவின் கைகளுக்குள் அடைக்கலமாகி கொண்ட தன்வி, “நீ என்மேல கோபப்பட்டாலும் சரி.. என்னை அருவருப்பா பார்த்தாலும் சரி.. இது தான் உண்மை.. வீட்ல இருக்கும் போது எனக்கு வந்த பீல்ங்ஸ புரிஞ்சிக்க முடியல.. ஆனா என்னால பத்ரிகிட்ட நெருங்க முடியாததுக்கு கூட நான் லெஸ்பியன்றது தான் ரீசன்.. என்னால ஜென்ட்ஸ் பக்கம் நெருங்க முடியல.. என்னோட அட்ட்ராக்ஷன் கேர்ல்ஸ் மேல தான் இருந்துச்சு.. கேர்ல்ஸ ரசிச்ச அளவுக்கு பாய்ஸை ரசிக்க முடியல.. எனக்கு இருக்குறது ஒரு வியாதின்னு நினைச்சேன் மீகா.. அப்புறம் தான் உண்மை புரிஞ்சிது.. லெஸ்பியன்னு ஒரு கேட்டகிரி இருக்குது.. அவங்க கிட்ட இருக்குற ஆட்டிடியூட் தான் என்கிட்டயும் இருக்குது.. நான் ஒரு லெஸ்பியன்..” என தன்னை விளக்கி கொண்டிருக்க, எந்த பதிலும் கூறாமல் உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் எழுந்தாள் அமீக்கா..

உண்மைகளை ஏற்று கொள்ள அமீக்காவிற்கு அவகாசம் அளிக்கும் பொருட்டு தன்வி, அறையை விட்டு வெளியேற அனுமதி அளித்தாள்.. மனதில் கொண்ட பாரத்தை ஆத்திரத்திலேயே இறக்கி வைத்தாலும் கிடைத்த அமைதியை அனுபவிக்க படுக்கையில் வீழ்ந்த தன்வியின் கண்களோ நில்லாத ஓடையாக உவர் நீரை உகுக்க, உறங்கியும் போனாள்..

இரவு இரண்டு மணியளவில், உறக்கத்தில் இருந்து விடுபட்டவள் எழும் பொழுது, கட்டிலின் அருகே கிடந்த கௌச்சில் உறங்கி கொண்டிருந்தான் பத்ரி.. திடும்திடுமென எழுந்து அமர்ந்த தன்வி, அவனை மெல்ல தட்டியதும் சொருகிய விழிகளை கசக்கியபடி எழுந்தான்..

“பத்ரி.. நீங்க இங்க..” என அவளின் நாவானது குழற, “சில்.. தன்வி.. எந்த ப்ராப்ளமும் நடக்கல.. சோ பி காம் டவுன்.. ஷ்ரவனுக்கு பீவரிஷ்ஷா இருக்குறதுனால அமீக்கா ஹோட்டல் போயிருக்கிறாங்க.. நீ தனியா இருப்பன்னு என்னை பார்த்துக்க சொன்னாங்க..” என தோள்களை குலுக்கினான்.. நெஞ்சில் கைவைத்து மூச்சை வெளியிட்ட தன்வியிடம், “ஆர் யூ ஓகே.. டீ ஆர் காபி ஏதாவது போட்டு தரட்டுமா??” என வினவ, “இட்ஸ் ஓகே பத்ரி.. பரவாயில்ல.. நீங்க தூங்குங்க..” என போர்வையை தலைவழி இழுத்து மூடி கொண்டாள்..

அது வெட்கமும் தயக்கமும் கலந்த நிலை என்று அவன் எண்ணி கொள்ள,  அவளோ போர்வையினுள் தூக்கமின்றி துக்கத்தில் தவித்தாள்.. அடுத்து வந்த நாட்களில் அமீக்கா இவள் இருக்கும் பக்கமாய் தலையை கூட காட்டாமல் ஷ்ரவனோடு தங்கி கொள்ள, தினம் தினம் பத்ரியின் பாசத்தினாலும் அக்கறையினாலும் நொடிந்து கொண்டிருந்தாள் தன்வி..

அவளுக்காக அனைத்து வேலைகளையும் புறந்தள்ளி விட்டு மும்பையில் காத்திருப்பதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொரு விஷயங்களையும் காதலோடு நடத்த, தன்னால் அவனை காதலிக்க இயலாதே என்ற குற்ற உணர்வு மேலோங்கியது.. இது போதாத குறைக்கு மனம் வேறு அமீக்காவின் அருகாமையை வேண்டி துரிதப்படுத்த நாளொன்று மேனியொன்றாய் நலிந்து கொண்டிருந்தாள்..

ஒரு கட்டத்திற்கு மேல் அவ்வுணர்வை தாங்க மாட்டாமல் அவனிடமே தெரிவித்து விட துணிந்து விட்டாள்.. அன்று ஆபிசிற்கு வந்து அழைத்து கொண்ட பத்ரி, உயர்தர உணவகம் ஒன்றிற்கு அழைத்து சென்றான்.. இப்பொழுதெல்லாம் அவன் மிக தீவிர காதலனாக உருவெடுத்து கொண்டிருக்கிறான்.. காலையில் உணவு தயாரித்து அவளை அனுப்பி விடுவதும் சரியான நேரத்திற்கு அழைத்து கொண்டு இளைப்பாற புதுபுது இடங்களுக்கு அழைத்து செல்வது என்று சிறப்பான சம்பவங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறான்..

உண்மையை கூறிவிடும் திண்மம் தன்விக்கு இல்லை என்றாலும் இதற்கு மேலும் குற்றஉணர்ச்சியோடு அவதியுறும் நிலையை களைய முடிவெடுத்து விட்டாள்.. “பத்ரி…” என உதடுகள் அழைத்தாலும் கைகளோ நாணின் மீதிருந்த தாலில் கோலமிட்டு கொண்டிருந்தது.. “சொல்லு தன்வி.. என்கிட்டே என்ன ஹெசிடேஷன்..” என்றவனின் முகத்தில் இலகுவான புன்னகை.. அவள் வார்த்தைக்கு பின்னும் இதே புன்னகை இருக்குமா என்றால் கேள்விகுறி தான்..

“ம்ம்.. நான் சொல்ல மறந்துட்டேன் தன்வி.. நெக்ஸ்ட் வீக் நாம ஊருக்கு கிளம்புறோம்.. மேரேஜ்க்கு முன்ன சங்கீத் மாதிரி சின்னதா ஒரு பாங்க்ஷன் வைக்கலாம்னு பெரியவங்க நினைக்குறாங்க.. நேத்து நைட் அங்கிள் கால் பண்ணியிருந்தாங்க.. நான் தான் ‘நானே சொல்லிக்குறேன்’னு சொல்லிட்டேன்..” என்றவன் அவளின் அதிர்ச்சியை கவனிக்க தவறியவனாக நாணினை சுவைத்து கொண்டிருந்தான்..

“பட் பத்ரி.. நமக்குள்ள..” என தொடங்கியவள் அடுத்து வார்த்தை மேலெழும்பாது தவிக்க, “ம்ம்.. பரவாயில்லையே தன்வி.. நமக்கு இன்னும் நிறைய டைம் இருக்குது.. ஊருக்கு போனதுக்கு அப்புறம் கூடவே தானே இருக்க போறேன்.. பேசி புரிஞ்சிக்கலாம்..” என்றான் அவளின் கேட்க வந்த கேள்வியறிந்து..

“அதில்ல பத்ரி.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. நான் இன்னும் மேரேஜ்க்கு ரெடி ஆகலைன்னு தோணுது..” என்கவும் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து, “வாட் டூ யூ மீன்??” என்றான் அழுத்தமாக.. “அ.. அது.. நான்.. வந்து..” என கண்ணிமைகள் வேகமாக அடித்து கொள்ள நாவானது வறண்டு போனது.. அந்நொடி அந்த டேபிளில் மெல்லிய போர்க்குகளின் உரசல் சத்தத்தை தவிர நீண்ட மௌனம் நிலவி கொண்டிருக்க, தனது மனதை எவ்வாறு எடுத்து கூறுவது என குழம்பி தவித்து கொண்டிருந்தாள் தன்வி..

அப்பொழுது, சடுதியாய் “பிகாஸ், தன்வியால உங்களை காதலிக்க முடியாது பத்ரி.. மனசுல வேற ஒருத்தரை வச்சிக்கிட்டு உங்களை எப்படி காதலிக்கவோ கல்யாணம் பண்ணிக்கவோ முடியும்..” என்ற ஷ்ரவனின் குரல் வந்து சேர்ந்தது.. அதிர்ச்சியாக இருவரும் நிமிர, ஷ்ரவனோ முகத்தை தீர்மானமாக வைத்து கொண்டிருந்தான்..

“நீங்க என்ன சொல்றீங்க.. ஐ கான்ட் அண்டர்ஸ்டாண்ட் திஸ்..” என பத்ரி படபடக்க. “தன்வி காதலிக்குறது வேற யாருமில்லை..” என்ற ஷ்ரவன் நகர பின்னால் அமீக்கா நின்றிருந்தாள்.. தன்வியின் கண்களில் கண்ணீர் கோடாய் வடிந்து கொண்டிருக்க, “கைஸ்.. என்ன சொல்ல வர்றீங்க.. தன்வியை பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லுறதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு..” என நம்பமாட்டாமல் பொரிந்து கொண்டிருக்க, “பத்ரி… காம் டவுன்.. அண்ட் லிசென் டூ மி.. ஐ யம் லெஸ்பியன்..” என்ற அமீக்காவின் மீது நிலையான பார்வையை குத்தியிருந்த தன்வியின் விழிகள் தனது அமுதநீரை சுரந்து விட்டிருந்தது..

உங்களில் ஒருவர் லெஸ்பியன் என்று தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்??

அவர்களின் அடையாளத்தினை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அறிந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்.. இது எப்போதும் அவர்கள் சொந்த முடிவாக இருக்க வேண்டும். அவர்கள் வசதியாக உணரும் போது ஒரு நேரத்தில் மற்றவர்களிடம் சொல்லலாம். ஒருவர் தங்களின் பாலினம் மீது சந்தேகம் கொள்கிறார் என்றால் அதற்குரிய விளக்கங்களையும் சரியான புரிதல்களையும் கொடுங்கள்.. முக்கியமாக அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள அவகாசம் அளியுங்கள்..

  • அவர்களுடன் நேருக்கு நேர் பேசுதல்
  • உரை அனுப்புதல்
  • தொலைபேசி அழைப்பு செய்தல்
  • கடிதம் எழுதுதல்
  • மின்னஞ்சல் எழுதுதல்

தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்திய பின்னரும் அவர்கள் பாதுக்காப்பாக இருக்கிறாகள் என்பதை உணரசெய்யுங்கள்..       

  -அமீக்கா