இராசாத்தி அம்மன் வரலாறு

ராசாத்தி அம்மன் – 2

அன்று முழுவதும் களியாட்டங்களில் விழித்திருந்த அனிச்சன் வழக்கம்போல் மறுநாள் காலம் கடந்தே எழுந்தான். பெண் ஒருத்தி முகம் கழுவி உற்சாகம் ஊட்டினாள். அன்று முக்கியமான இரண்டு நிகழ்ச்சிகளைத் தெரிவிக்க காவலர்கள் காத்திருந்தனர்.

முதலாமவன், “பிரபு! நம் யானையை ஒருவன் கொன்றுவிட்டு குதிரையில் ஏறிச் சென்றுவிட்டான்” என பயந்து கொண்டே கூறினான்.

கோபம் கொண்ட அணிச்சன்ன் முழுவதும் கேளாமலே அவனைக் கோபத்தில் அடித்துவிட்டு, “அவனை முற்றிலும் தெரிந்து கொண்டு வந்து மீண்டும் சொல் ” என்று விரட்டினான்.

இவ்வாறு சொல்லிக் கொண்டு இருக்கும் போது, “ஐயா! ஒரு நற்செய்தி” என்று கூறிக்கொண்டே ஒருவன் உள் நுழைந்தான்.

“நற்செய்தியா? வா வா…” என்று அழைத்து, “என்ன செய்தி” எனக் கேட்டான்.

“பிரபு! நம் கிளிப் பெண்ணை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்” என்று ஆரவாரமாக கூறினான்.

அப்படியா என்று குதிதெழுந்த அனிச்சன் அவனைக் கட்டித் தழுவி, “எங்கே அவள்? பயப்படாமல் அவளைப்பத்தி சொல்” என்றான்.

“பிரபு! அவள் எப்படியோ நம்மிடம் இருந்து தப்பித்து…” என ஆரம்பித்தான்.

“நிறுத்து… அவள் இப்பொழுது இருக்குமிடத்தை முதலில் சொல்.”

“அச்சன்கோவில்.”

“நிச்சயமாகவா?”

“ஆம் பிரபு! அதே பெண், அதே கிளி, அதே கிழவன் சந்தேகம் வேண்டாம்.”

அனிச்சன் அவனைத் தனியாக அழைத்து இன்னும் விசாரித்தான். கேரளத்தின் ஓரமான அச்சன்கோவில்லில் அவர்கள இருப்பதையும் ஊர் மக்கள் அவர்களிடம் பிரியமாக இருப்பதையும் வேலையாள் தெரிவித்தான்.

“அச்சன்கோவில் தானே! அது எனக்குத் தெரியுமடா… இன்னும் இரண்டே நாளில் அந்த சுந்தரி என்னிடம் இருப்பாள். உன்னுடன் சேர்ந்த மற்றவர்கள் எங்கே?” என வினவினான்.

“அவர்கள் அங்கயே தங்கி கண்காணிக்கின்றனர். நான் மட்டுமே இதை உங்களிடம் கூற வந்தேன்” என விடையளித்தான்.

பிறகு ரகசியமாக பல ஏற்பாடுகள் நடந்தன. வல்லவர்களான நான்கு கொடியவர்கள், குதிரைகள், ஆயுதங்கள், மதுஉணவு அனைத்தும் தயாராகின. புறப்படும் சமயம் வரையறுகப்பட்டது. அன்று இரவே மந்திரக்கோல் ஏந்தி முழு ஆயுதபானியான அனிச்சன் தன தோழர்களுடன் புறப்பட்டு பல வழி நடந்து மறுநாள் மாலையில் அச்சன்கோவிலை அடைந்தான். ஊருக்கு அருகாமையில் சென்று ஒரு மறைவிடம் சேர்ந்தனர்.

அன்று மாலை மாறுவேடத்தில் சென்ற அனிச்சன் ஒதுக்கு புறமான ஒரு சிறிய வீட்டில் அதே கிழவன் தம்பிரானையும் கண்டுவிட்டான். எல்லாமே சாதகமாக இருந்ததை எண்ணி உற்சாகத்தின் உச்சியில் உலாவினான். மீண்டும் தோழர்களிடம் வந்து அன்று இரவுக்காக காத்திருந்தான்.

குறிப்பிட்ட அந்தே நேரமும் வந்துவிட்டது. பாவிகள் இரவு உடையணிந்து ஆயுதம் கையில் ஏந்தி புறப்பட்டனர். மந்திரக்கோலும், மங்கையின் மோகமும் வழி நடத்த அணிச்சனும் மற்றொருவனும் குதிரை மீது ஏறி வர, வீணர்கள் கிளியின் வீட்டை அடைந்தனர்.

 அப்பொழுது நடுநிசி எங்கும் இருள் சூழ்ந்த பயங்கரம். ஆந்தை ஒன்று கீச்சிட்டுப் பறந்தது. தூரத்தே நாய் ஒன்று ஊளையிட்டு அழுதது. வெளித் திண்ணையில் கிழவன் இருமிக் கொண்டே படுத்திருந்தான்.

இந்த சந்தடிகளைக் காணித்த அனிச்சன் தன் மந்திரக்கோலைச் சுழற்றினான். அதன் மகிமையால் அருகில் இருந்தவர்கள் உட்பட அனைவருமே மெய்மறந்தனர். தோழர்களை வெளியில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வீட்டுக்கு தான் மட்டும் மெதுவாக நுழைந்தான்.

அப்பொழுது கிளி ஆழ்ந்த துயிலில் இருந்தாள். வளையிலே ஒரு ஒரு கிளிக் கூண்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதில் இருந்த கிளி உறங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தது. இந்நிலையில் அனிச்சன் வெறி கொண்டான். கிளியைக் கூர்ந்து கவனித்தான்.

ஒற்றைக்கால் நீட்டி வைத்து

மற்றொரு கால் மடக்கி வைத்து

கட்டழகித் தூங்குவதைக் கண்டானே – பாவி

காமம் என்னும் கண்மயக்கம் கொண்டானே    

கனி இதழ்கள் குவிந்து இருக்க

கருங் குழல்கள் விரிந்திருக்க

வட்டநில தூங்குவதைக் கண்டானே – பாவி

வாரி அள்ளித் தூக்க மனம் கொண்டானே

காணி இவள் கட்டழகா

காஞ்சிபுரம் பட்டழகா

மின்னுகின்ற கண்ணழகா என்றானே – பாவி

மேனியை அணைக்க மனம் கொண்டானே

பேச்சை உடை இடை உடுத்தி

பாங்குடன் ரவிக்கையிட்டு

இச்சைக்கிளி தரை கிடக்க கண்டானே – பாவி

ஏந்தி தாங்கி சேர்க்க மனம் கொண்டானே

உன் குலுக்கும் மூச்சினாலே

உயர்ந்து தாழும் உடல் வனப்பு

கள் இருக்கும் போற்குடமோ நேரானே – பாவி

காமனின் ரதி இவளோ என்றானே

இவ்வாறு பார்த்து, ருசித்து, வெறியும் கொண்ட அனிச்சன் செயலில் இறங்கி மெதுவாக அவளைத் தூக்க குனிந்தான். அதுவரை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கிளி தன் சிறகை விரித்து கூண்டில் படபடவென்று அடித்து சிறிய சத்தம் உண்டாக்கியது. அனிச்சன் தன் கவனம் களைந்து திரும்பிப் பார்த்தான்.

‘என்ன சத்தம்? ஓ கிளியா?’ கிளிதானே என்று உறுதி செய்துக் கொண்டு மீண்டும் அவளைத் தூக்க குனிந்தான்.

இப்பொழுது அந்தக் கிளி கூண்டை விட்டு வெளியே வந்து, “அனிச்சா… ஆ… நீசா… நீசா…” என்று கத்தியது.

மறுபடியும் நிமிர்ந்த அனிச்சன் , “ஏ… அற்பக் கிளியே… சற்று பொறு… உன் கழுத்தை திருகிவிடுவேன். என்னிடமே வாலாட்டுகிறாயா?” என்று கிறுக்கனைப் போல் பேசிவிட்டு ஒரே எண்ணத்தில் மீண்டும் கிளியைத் தூக்க முற்பட்டான்.

இப்பொழுது அந்தக் கிளி அணிச்சனின் பிடரியில் இருந்தது. அதுமட்டுமா? தன் மூக்கினால் பலமுறை அவன் கழுத்தில் கொத்தி இரத்த வெள்ளமாக்கியது. வலி கொண்ட அனிச்சன் திரும்பிக் கிளியைப் பிடிக்க முயன்றதில் அவன் மந்திரக்கோலும் சரிந்து விழுந்தது. அதை குனிந்து எடுப்பதில் தோல்வி கண்டான். கிளியோ ஆக்ரோஷம் கொண்டு பலமுறைக் கொத்தி கடைசியாக அணிச்சனின் மூக்கை கவ்வி பெரும்பகுதியைக் கடித்து துண்டாக்கியது.

மூக்கைப் பறிகுடுத்த அனிச்சன் வெகுண்டு வெளியேறினான். மூக்குப் போச்சே… “ஆபத்து ஆபத்து” என்று தன் தோழர்களுடன் ஓடினான். அவர்களின் சத்தத்தில் நாய்கள் அவர்களைத் துரத்தியது.பாவிகள் பயந்து ஓடி தன் மறைவிடம் சேர்ந்தார்கள்.

இவ்வளவு நடந்தது கயிலிக்கும், தம்புரானுக்கும், மந்திரக்கோலால் மரண உறக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார்க்கும் ஏதும் தெரியவில்லை. எல்லாரும் வழக்கம் போல மறுநாள் காலையில் எழுந்து அவரவர் வேளையில் ஈடுபட்டனர். கிளி மட்டுமே இதை அறியும். அதுவோ ஏதும் அறியாதது போல் சாதுவாக தூங்கிக் கொண்டிருந்தது.

***

சோட்டானிக் கரையிலிருந்து புறப்பட்டு குதிரை ஏறி சபரிமலை நோக்கிச் சென்ற அரசனும் அடியானும் காடு, மலை, ஆறு, ஓடைகள், யானை, புலி போன்ற அனைத்தையும் கடந்து பல காத தூரம் கடந்து அங்கே பம்மையாறு என்னும் புனித நதியை அடைந்தனர். அங்கேத தங்கி இளைப்பாறி மறுநாள் பம்பையில் குளித்து அமுதுண்டு, பின் சிவசின்னங்கள்அணிந்து அகிலம் வணங்கும் சுவாமி ஐயப்பன் திருவுருவைக் காண மலை ஏறினர்.ஐயப்பன் கோவில் கொடிமரத்தையும் கோவிலையும் கண்டனர். சுற்றிலுமுள்ள இயற்கையின் எழிலோட்டத்தையும் காணத் தவறவில்லை. கோவிலின் புனிதமான பதினெட்டு படிகளையும் கண்ணுற்று வணங்கினர். கோவிலில் முகப்பில் உள்ள கருப்பசாமியையும் கண்டு கும்பிட்டனர். பின்பு படிகளில் ஏறி ஐயன் ஆலயம் சேர்ந்து கன்னி மூளையில் அமர்ந்துள்ள மகா கணபதியையும் உள்ளம் உருகி வணங்கினார்கள். அதன் பிறகு அருள் தரும் ஐயப்பன் சுவாமியின் மணி உருவத்தைக் கண்டனர். ஐயப்பன் புகழைப் பலவாறு புகழ்ந்து பாடி ஆடினர், களித்தனர். சுவாமிகள் வரலாறுகளை நினைவு கூர்ந்து ஐயப்பனின் வீரம், விவேகம், சபதம், தியாகம், எழுச்சி என்று அத்தனையும் நினைவில் கொண்டு ஒருவருக்கொருவர் உரையாடினர்.

ஐயப்பனை அடுத்துள்ள பல கோவில்களின் தெய்வங்களையும் வணங்கி எழுந்து மீண்டும் பம்பையை நோக்கி மலை இறங்கினர். பம்பாயைச் சேர்ந்த பின் குதிரையைக் குளிப்பாட்டி, தாகம் தீர்த்து, உணவு ஊட்டிய பின் தாங்களும் சாப்பிட்டுக் களைப்பாறிய பின் அங்கிருந்து நீண்ட தூரத்தில் உள்ளதும், தமிழ்நாட்டின் எல்லை அருகில் உள்ளதுமான அச்சன்கொவிலை நோக்கிப் புறப்பட்டனர். நாள் முழுவதும் குதிரைகளிலிருந்து காதம் பல கடந்து அச்சன்கோவில் எல்லையை அடைந்தனர்.

குதிரையிலிருந்து இறங்கி சிறிது தூரம் காலார நடந்து குதிரைகளுக்குத் தீனியிட்ட பின் அருகில் உள்ள ஆற்றில் நீராடிக் களித்தனர். விபூதி, சந்தானம், போட்டு என நெற்றியில் அணிந்தனர். ஆற்றை விட்டு கரையில் வந்து வழியில் நடந்த அரசப்பன் நடு மதிய நேரத்தில் அய்யன் சாஸ்தாவின் கோவில் வளாகத்தில் நுழைந்தான்.

 தொடர்ந்து நீண்ட பயணத்தை மேற்கொண்ட கள்ளர் வென்றான் உண்மையாகவே பெரும் களைப்புற்று இருந்தான். கோவில் வளாகத்தில் பசுமையாக படர்ந்து அடர்ந்த கிளைகளுடன் இயற்க்கை எழில் சூழ நின்ற ஒரு வேம்பு மரத்தைக் கண்டான். அதன் நிழலில் சற்று இளைப்பாறினான். அங்கிருந்து பார்க்கும் தூரத்தில் நீர்ச்சுனை ஒன்று தெரிந்தது.  அங்குச் சென்று குளிர்ந்த நீரை தாகம் தீரக் குடித்தான். மீண்டும் வேம்பு மரத்தின் நிழலில் தரையில் உட்கார்ந்தான். மெல்லிய குளிர் காற்றும், நிழலும், தண்ணீரும் அவன் களைப்பை அறவே போக்கின. சிந்தனைகள் தெளிந்தன. அப்பப்பா… கடால் தான் படைத்த மனிதர்களின் புலன்களுக்கு எப்படி எல்லாம் இனிமை சேர்த்து ஊட்டி வளர்க்கிறார் என்பதை சிந்தித்துக் கொண்டே எழுந்து நடந்து, சாஸ்தாவின் முழு உருவத்தையும் கண்டான். தன் சிந்தனையை அப்படியே குரலெடுத்து கணீரென்று பாடினான்.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை

கிடைத்த குளிர் தருவே, தருநிழலே, நிழல் கனிந்த கனியே

ஓடையிலே ஊருகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே

உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மன மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே

மென்காற்றில் விளைசுகமே சுகத்திலூறும் பயனே

இறைவனின் நன்கொடைகளைப் பற்றி வள்ளலார் பாடியதை முன்னதே கனவிலே உணர்ந்து தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க, கோவிலில் மற்றொரு பகுதியில் மலர்மாலை கட்டிக் கண்டிருந்த கிளிப் பெண் அரசப்பனின் குரலைக் கேட்டு கிளர்ச்சியடைந்தாள். ஆம்… என்கைடோ அடிக்கடி இக்குறளை நான் கேட்டிருக்கிறேன் என்னை ஆட்டிப்படைக்கும் இக்குறளை உடையவர் யார் என பார்க்க வேண்டுமே… தொடுத்த மாலை கையில் இருக்க தடாலென்று எழுந்தாள். குரல் வரும் திசையை நோக்கி விரைந்து, பாடிக் கொண்டிருந்த கள்ளர்  வென்றான் அரசப்பனைக் கண்டாள், பரவசம் கொண்டாள். அவள் மனதில் ஏதோ பழைய நினைவுகள் தோன்ற, ஆமாம்… இவரே தான் எனக்கு கணவர், இவர்தான் என் கனவின் நாயகன் என்று உருதியுற்றாள். அப்பொழுது,

ஆடையிலே எனை மணந்த மணவாளா

என்று ஏழாவது அடியைப் பாடிக் கொந்திருந்தான் அரசப்பன்.

இதுவே சமயம் என்று கயிலிக்குத் தோன்றியது. அருகில் சென்று எதுவும் பேசாமல் தன் கையில் இருந்த மலர்மாலையை அரசரின் கழுத்தில் அணிந்தாள். காலில் விழுந்தாள். அப்பொழுது கள்ளர் வென்றான் பாட்டின் கடைசி வரியான,

ஆடுகின்ற அரசே என் நலங்கணிந்தருனே

எனப் பாட்டை பாடி முடித்தான். அவர்கள் இருவருக்கும் வேறு எதுவும் தோன்றவில்லை.

அப்போது மரக்கிளையிலிருந்து அந்த பேசும்கிளி, “அரசப்ப! அவளை ஏற்றுக்கொள். அவள் உனக்காக இங்கே பிறந்து வளர்ந்தவள். அவள் உன் முன்பிறப்பின் மனைவி இது சத்தியம், உறுதி” என்று அசரீரியாய் சொன்னது.

இதை எல்லாம் அறிந்து சிலைப் பக்கமிருந்து தம்பிரான் தட்டில் மாலை, பிரசாதம் இவற்றுடன் அரசப்பன் அருகில் வந்தார்.

“சிவா சிவா… அய்யப்ப சாஸ்தாவே…” எனக் கூவி அண்ணன்தம் அடைந்தார்.

இவ்வாறு இந்த உலகத்தை சில கணம் மறந்திருந்த அரசப்பன், தம்புரானிடம் இருந்த பூஜைத் தட்டில் உள்ள பூமாலையை எடுத்துக் கயிலிக்குச் சூட்டினான். குங்குமம் இட்டு, பிரசாதத்தை ஊட்டிவிட்டான்.

இருவரும் தர்மசாஸ்தாவையும், தம்புரனையும் அணங்கி ஆசிர்வாதம் பெற்றனர். அருகில் அந்த பேசும் கிளி இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது. அரசடியான் எதுவும் பேசாமல் மெய் மறந்து நின்றான். இப்படியாக இவர்கள் திருமண நடந்தது. பிரிந்த தம்பதிகள் கூடினால் பேச்சுக்கு இடமேது?

நிமிடங்கள் கடந்தன. யாவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. கயிலி மீண்டும் ஒரு சிறு மாலையைத் தொடுத்தாள். குறிப்பிட்ட நேரத்தில் ஐயனாரை அலங்கரித்து மீண்டும் ஒரு பூஜை நடத்தினார்கள். கோவில் கதவு சாத்தப் பட்டது.

“பெரியவரே! வீடு செல்வோமா?” என கள்ளர் வென்றான் பேச்சைத் தொடங்கினான்.

அதைக் கேட்ட தம்புரான், “நீங்க எனது இல்லம் வருவது எனது பாக்கியம்” என அவர்களை அழைத்துச் சென்றார்.

அங்கு வாயில் வரை சென்ற அரசடியான் திடீரென்று தன் வாலைப் பிடித்துக் கொண்டு நின்று விட்டான். உள்ளே செல்லவும் மறுத்து விட்டான். கயிலியைப் பற்றி அரசன் விவரம்  கேட்க தம்பிரான் மிகுந்த பதட்டத்துடன் கயிலியின் கதையைக் கூறினார். மாலை பானத்துக்காக வாங்கி வைத்திருந்த பாலை மட்டும் சுட வைத்து, அதைக் கயிலி அன்புடன் அரசப்பனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கிப் பருகினான். கொஞ்சம் கொஞ்சமாக கள்ளர்வென்றான் யார் என்பதும் அரசடியான் ஏன் வாயிலில் நின்று கொண்டான் என்பதும் தெரிந்தது. தம்புரானும் கயிலியும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர், ஆனந்த தேனில் மிதந்தனர்.

சில மணி நேரம் கழித்து அரசன் அரசன் தன் மெய் காவலனை அழைத்து, “அடியானே நாம் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் பல முக்கிய கொவில்கொவில்களைத் தரிசித்து வந்துள்ளோம், இப்போது எனக்குத் திருமணம் நடந்துள்ளது. இதனால் நம் ஸ்தல யாத்திரை முடிந்து விட்டது. நான் முதலில் என் இரூ மனைவிகளுடனும் சென்று, என் இஷ்ட தெயய்வங்களான அம்மை, அப்பனை வணங்கி ஆசி பெற வேண்டும். ராசாத்தியும் மங்கலபுரியிலிருந்து உடனே   புறப்பட்டு மதுரை வர வேண்டும். இது பற்றி நான் தரும் கடிதத்தை நீ உடனே சென்று ராசாத்தியிடம் சேர்க்க வேண்டும்.”

இதை கேட்டதும் அடியான் மனம் வருந்தியது, “பிரபு, தங்களைக் காப்பதுவே என் தலையாயக் கடமை. இது அரசியாரின் உத்தரவும் கூட…” என்று தயக்கத்துடன் கூறினான்.

அருகில் இருந்த அந்தக் கிளியானது, “அரசே, இந்த வேலையை என்னால் செய்ய முடியும்.” என்று பணிவுடன் கூறியது.

கயிலியாரும் அந்தக் கிலோயின் திறமையை எடுத்துக் கூற, கடிதம் ஒன்று கிளியிடம் கொடுக்கப் பட்டது. பெற்றுக்கொண்ட கிளி துளு நாட்டுக்கு பறந்து சென்றது. கடிதத்தை அரசி ராசாத்தியிடம் சேர்த்துவிட்டு அன்றே திரும்பி வந்துவிட்டது. அரசியார் நாளையே மதுரை திரும்புவார் என்றும் தகவல் கூறியது.

யலியின்  கல்யாண செய்தி ஊர் முழுவதும் பேசப்பட்டது.அணிச்சனின் ஆட்கள் எல்லா விவரத்தையும் அறிந்து , பரபரப்புடன் அணிச்சன் முன் சென்று, “பிரபூவே அந்தக் கிளிப் பெண்ணுக்கு இன்று கல்யாணமே நடந்து முடிந்து விட்டது, மாவீரன் போல் தோன்றும் இருவர் கயிலியின் குடிசைக்குப் புதிதாக வந்துள்ளனர். அவர்களுடைய தோற்றம், விவரங்களை அறியும் பொது ஸ்தல யாத்திரை என்ற ப்ராயானத்தையும் நினைத்தால் நமது யானையைக் கொன்றவர்களும் இவர்களே என்று நினைக்கிறோம்.” என தாங்கள் கேட்டதைக் கூறினர்.

இந்த செய்திகள் அனைத்தும் அணிச்சனின் காதில் நெருப்புத் துண்டங்களாக விழுந்தன. எழுந்து நின்று விகாரமாய் பல சபதங்கள் செய்தான் பிறகு, “நண்பர்களே, அந்த மங்கையின் ஆசை இன்றுடன் தீர்ந்தது. இனி நான் ஒரு வேங்கை, அவன் என் காமதேவதையைக் கைப்பிடித்தான், என் யானையைக் கொன்றான், என் மூக்கைக் கடித்து குரூரமாக்கிய கிழிக்கும் இனி அவன்தான் எஜமானன். ஆக, இனி அவன் அல்லது அவள் எனக்குத் தேவையில்லை, அவர்களின் உயிர் தான் வேண்டும். அவர்கள் இருவரையும் கொலை செய்வேன். கொன்று பழி தீர்ப்பேன்.” என ஆக்ரோஷமாக கூறினான்.

“நண்பர்களே இது முடிந்தால் என் ஏராளமான செல்வங்களில் உங்களுக்குப் பாதியாக நான் தருவேன், இது சத்தியம். ஆகவே ஒன்றாக படுகொலைக்குத் திட்டம் போடுவோம், வெற்றி நமக்கே.”  என்று கொக்கரித்தான்.

அதில் ஒருவன், “பிரபூவே அந்த இரு வீரர்கள் மற்றும் அந்தப் பொல்லாக் கிளியும் அவளுடன் உள்ளனவே, நம் திட்டம் நிறைவேறுமா?”

“நமது திட்டம் வெற்றி பெறும், செயல்கள் எல்லாம் பகலில் அல்ல இரவினில், முடிவில் அல்ல வழியினில், விழிப்பில் அல்ல உறக்கத்தில்.” என தன் சதித் திட்டத்தை உற்சாகத்தில் சொல்லிக் கொண்டே போனான். அன்று முதல் கயிலியின் வீட்டில் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். அவர்களுக்கு காலமும் உதவி செய்தது.

குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது,அனைவரும் அன்று காலையிலே எழுந்து, குளித்து போஜனம் அருந்தி பயணத்திற்கு தயாரானார்கள். கயிலி அம்மையாரும் வழிப் பசியாற்றுவதற்காக சுவையாக சமத்து கட்டமுது சேர்த்திருந்தார். பின் அனைவரும் சென்று எம்பெருமான் தர்ம சாஸ்தாவை வணங்கினர். வீட்டு வாசலில் குதிரைகளின் மீது பிரயாண சாமான்கள் ஏற்றப்பட்டது. கயிலியின் உயிர் போன்ற கிளியும், அவள் சமைத்த கட்டமுதும் அடியானின் குதிரையில் வந்தன.

அரசனும் கயிலியும் ஒரு குதிரையில் அமர்ந்தனர். தம்பிரான் ஆனந்தக் கடலில் மிதந்தான். ஊர் ஜனங்கள் பலர் கூடி வழி அனுப்பி வைத்து குதூகலித்தனர். குதிரைகள் இரண்டும் மதுரையை நோக்கி குறுக்கு வழியில் பாய்ந்தன. பசுமையும் எழிலும் நிறைந்த கேரளத்து மண்ணில் குதிரைகள் குதித்து குதித்து வந்தன. அரசப்பன் பெண்ணுடன் இருந்ததால் குதிரைகள் சற்று மெதுவாகவே செல்ல வேண்டி இருந்தது.

இதை எல்லாம் அறிந்து தயார் நிலையில் இருந்த அணிச்சனும் அவன் ஆட்களும் அவர்களுக்கு வேண்டிய பலித்த கொடூர ஆயுதங்களுடனும், மது மற்றும் உணவும் எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானார்கள். அணிச்சன் மந்திரக்கோல் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன் நண்பர்கள் படி சூழ சென்றான். கூப்பிடும் தூரத்தில் முன்னும் பின்னுமாக அவர்கள் குதிரையில் தொடர்ந்தனர். அந்தப் பொல்லாக் கிளியின் வல்லமையை ஒடுக்க எண்ணி, அதற்காகவே வீசும் கம்பும், வில் உருண்டையும் சேகரித்திருந்தான்.

இவர்களின் சூதை அறியாத அரசப்பன் மனைவியுடன் அன்பும் ஆதரவுமாக பேசி, மட்டில்லா மகிழ்ச்சியுடன் முன் சென்றான். அணிச்சன் கோஷ்டியினர் சமயம் போல நடந்து சூழ்நிலைக்குத் தக்கவாறு திட்டம் வகுத்து தொடர்ந்தனர். கொலைவெறி கொண்ட வேடனும், குளிர் மனம் கொண்ட புறாவும் போல அவர்கள் சென்று கொண்டிருந்தனர். கள்ளர்வென்றார் பல காத தூரம் கடந்து தென்காசியை அடைந்தனர். அங்கு பகல் போஜனம் முடித்து, அருகில் உள்ள திருக்குற்றால நாதனின் பெருமைகளை எண்ணி, அவரை வழிபட்டனர். மறுபடியும் வருவதாக நேர்ச்சை கொண்டான். வெளியில் நின்றவாறே தென்காசி விஸ்வநாதப் பெருமானையும் வழிபட்டனர். அங்கிருந்து சங்கரன்கோவில் நோக்கிப் புறப்பட்டனர்.

எம்பெருமான் சங்கரனும், ஆதிநாராயணனும் ஒரே சிலையில் வடித்துள்ளது இங்குள்ள சிறப்பம்சம். அதனாலேயே சங்கரநாராயணன் கோவில் என்று பெயர் வந்தது. அதன் முன்பு வெளியில் நின்றவாறே மூவரும் விழுந்து வணங்கினர். தாக சாந்தி செய்து கொண்டு மீண்டும் குதிரைகளில் ஏறி செல்லும் வழியில் கரிசல்குளம் என்ற கிராமத்தின் அருகாமையை அடைந்தனர்.

அங்கு இரு குளங்களின் நடுவே உள்ள குளக்கரை வழியாகவே பாதையும் அமைந்திருந்தது. கரையில் பசுமையான மரங்கள் பல வளர்ந்திருந்தன. இரண்டு குளங்களும் நீர் நிறைந்து தெளிவாக மறு கால்வாய் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தன. இதை அறிந்த அரசப்பன் கயிலியுடன் குதிரையை விட்டு இறங்கினார். அடியான் குதிரைகளைத் தண்ணீர் குடிக்க விட்டு, அதன் மேல் நீரையும் இறைத்தான். அங்குள்ள இதமான காற்று  அவர்களை வசீகரித்தது.

அந்தக் குளக்கரையில்  நடுவில் கம்பீரமாகப் படர்ந்து வளர்ந்திருந்தது ஒரு கடம்ப மரம். அதன் அடியில் கள்ளர் வென்றான் தன் மனைவியுடன் அமர்ந்திருந்தான். வழி கடந்த களைப்பு சிறிது சிறிதாக அவனை வாட்டிக் கொண்டிருந்தது. அப்போது கதிரவனும் மேற்கே மறையத் தொடங்கினான். அருகிலேயே ஐய்யனார் கோவில் ஒன்று இருப்பதையும் பார்த்தான். மனைவியுடன் உல்லாசமாக கோவிலுக்கு நடந்து சென்று ஐய்யனாரை வணங்கிவிட்டு மீண்டும் கடம்பம் மரத்துக்கு வந்தான்.

“அடியானே! அருகிலேயே கிராமம் இருக்கிறது, பெண்ணுடன் மேலும் இராப்பயணம் வேண்டாம். இங்கயே இரவைக் கழிக்கலாம் என்று நினைக்கிறேன்.” எங்க, அதற்கு மற்றவரும் சம்மதித்தனர்.

அரசடியான் அந்த இடத்தில் துணியிலான ஒரு கம்பளத்தை விரித்தான். அதில் அமர்ந்து கொண்ட கள்ளர்வென்றான் கயிலியுடன் பலவாறு பேசிக் களித்தான். பிறகு எல்லோரும் கட்டமுதை உண்டனர். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்த சூரியன் முழுவதுமாக மறைந்து விட்டான்.

நீண்ட நேர குதிரை பயணத்தில் கள்ளர்வென்றான் சிறிது களைப்புற்றான். நீரில் மிதந்து வந்த காற்று அவனை நினைவிழக்கச் செய்தது. தன் இரு கால்களையும் நீட்டி உறக்கத்திற்கு தயாராகி விட்டான். இதை அறிந்த கயிலி அம்மையார் அருகிலேயே அமர்ந்து மெதுவாக அவன் தலையைத் தூக்கி தன் மடியில் கிடத்தினாள்.

மன்னனின் மதிமுகம் பார்த்து அரசியார், “அரசே! நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகமா?” எனக் கேட்டாள்.

“இல்லை கண்ணே! எப்படியோ வந்து விட்டோம், சீக்கிரமே போய் விடுவோம்.” என்று கடைசியாக சொன்ன அரசன் அப்படியே உறனிப் போனான்.

இருளும் இதமான காற்றும், இளமங்கையின் ஸ்பரிசமும் சேர்ந்து அவனை கடும் தூக்கத்தில் ஆழ்த்தியது. சிறிது அவனை அணைத்தபடியே அம்மையாரும் உறங்கிவிட்டார்.

இதைக் கண்ட அரசடியான், சற்று வெக்கத்துடன் கிளியின் கூண்டையும் தூக்கிக் கொண்டு மறைவானான். அருகில் உள்ள மற்றோர் புதரில் அவன் மறைந்திருந்தான். விதி வழி மதி செல்லும் என்பது நம் பழமொழி.

அப்போது,

வானுறங்கின; வனமும் உறங்கின; வையம் உறங்கினவே;

மானுறங்கின; மதகிரி உறங்கின; மரங்களும் உறங்கினவே;

நாய் உறங்கின; நரிகளும் உறங்கின; நாடும் உறங்கினவே;

பேய் உறங்கின; பிணிகளும் உறங்கின; பீடாரிகள் உறங்கினவே;

பாம்பு உறங்கின; பறவைகள் உறங்கின; பயமும் உறங்கினவே;

இப்படியாக உயிரினங்கள் உறங்கினாலும் அணிச்சனும் அவன் ஆள்களும் தூங்கவில்லை. ஏன்?

பாவசெயல்களை நினைப்பதற்கு முதலில் தூக்கம் வராமல் அடிப்பதும் விதியே. பிறகு அவர்களை நிரந்தரத் தூக்கத்தில் அழிப்பதும் விதியே அல்லவா.

அணிச்சன் உறங்கல; அநியாயம் உறங்கலையே;           

பழி உறங்கல; கொண்ட பகையும் உறங்கலையே;

அதர்மம் உறங்கல; கொண்ட காமம் உறங்கலையே;

காலன் உறங்கல; அவன் கவனம் உறங்கலையே;

இவர்கள் இவ்வாறு இருக்க அச்சன் கோவிலில் இருந்தே இவர்களைப் பேய் போல் பின் தொடர்ந்த பாவிகள் அணிச்சனும், அவன் ஆட்களும் குறி தவறாமல் இவர்களை கண்காணித்து வந்தனர். அவர்கள் மறைவாக மற்றொரு மரத்தடியில் மறைந்திருந்தனர். நீரின் அலைகளும், காற்றும் அங்கே ஒரு சந்தடி ஸ்ருதியை ஏற்படுத்தியது. அவர்களும் கொண்டு வந்ததை சாப்பிட்டு, போதை ஏற்றிக் கொண்டு, பின் தங்கள் திட்டம் பற்றி ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டார்கள்.