இராவணனே இராமனாய் – அத்தியாயம் 05

அத்தியாயம் 05

மருதாணியிட்டு சிவந்து போய் இருந்த விரல்களைப் பதற்றத்துடன் பிணைத்துப் பிரித்த படி அமர்ந்திருந்த மிருணாளினியின் உடலில் பயத்தால் ஏறிய சூட்டையும் வியர்வையையும் அறையில் இருந்த ஏ.சியின் குளுமை கூட தணிக்கவில்லை. அறையில் அவளின் சில தோழிகளும் சொந்தக்காரப்பெண்களும் அமர்ந்து இருந்தனர். ஆனால் அவளின் கண்களோ தாயின் வருகைக்காக வாசலைப் பதற்றத்துடன் நோக்கிக்கொண்டு இருந்தது.

விடிந்தால் திருமணம்!  ஒளிர்ந்து ஒளிர்ந்து ஓய்ந்து போன கைபேசியின் திரை மீண்டும் கைலாஷின் பெயரைத் தாங்கி எப்பொழுது ஒளிருமோ என்று பதற்றமாகவே இருந்தது. இந்த விடயத்தில் அவனைக் குற்றம் சொல்ல முடியாது. நிச்சயம் செய்த பெண்ணுடன் பேச எண்ணுவது இயல்புதானே? ஆனால் அவன் அழைப்பை ஏற்பதற்குக்கூட மனம் வரமாட்டேன் என்கிறதே!

திருமணத்தின் முன்தினம் தான் நிச்சயத்தையும் வைத்து இருந்தனர். அதற்குக் காரணம் சத்தியமாக மிருணாளினுக்குத் தெரியவில்லை. எல்லாமே அவசர கதியில் நடந்துவிட அவளை நிதானமாக யோசிக்கக் கூட அனுமதிக்கவில்லை இந்த விதி.

நிச்சயம் முடியும் வரை அவளுடன் இருந்துவிட்டு கோவிலுக்கு என்று சென்ற மாதவி இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. அவர் தனியாகச் செல்கிறாரே என்று  இவள்தான் ஆராதனாவையும் அனுப்பி வைத்தாள். இப்பொழுது யோசிக்கும் பொழுது தானே, வேறு யாரையும் அன்னையுடன் அனுப்பி வைத்து இருக்க வேண்டும் என்ற ஞானோதயமே வருகின்றது. அவள் இருந்து இருந்தாலாவது சற்றுப் பலமாக இருந்து இருக்கும். தலையில் அடித்துக்கொள்ள எழுந்த கைகளை அங்கிருந்தவர்கள் தன்னைக் கவனிப்பதை உணர்ந்து காதருகே இருந்த முடியை சரி செய்வது போல சமாளித்துவிட்டு கீழே இறக்கினாள்.

நெற்றி வேறு விண்விண்ணென்று தெறிக்கத்தொடங்க நெற்றியை அழுத்தியவளின் கைகளில் உறங்கிக் கொண்டு இருந்த ஆரதனாவிடம் வாங்கிய கைபேசி அழைக்கவும் பரபரப்புடன் எடுத்துப் பார்த்தாள். ஆராதனாவின் கைப்பேசியில் இருந்து தான் அழைப்பு! ஹப்பா! என்ற பெருமூச்சுடன் அழைப்பை எடுத்துக்காதில் வைத்தாள்.

“மிருணாளினி!” என்று மறுபக்கத்திலிருந்து காதை வந்து அறைந்த குரலில் ஃபோனை மீண்டும் காதில் இருந்து எடுத்து திரையைப் பார்த்தாள். ‘இல்லையே! ஆராதனாவின் இலக்கம் தான்’. மெல்ல எழுந்து பால்கனியின் அருகே சென்று நின்றவள்

“ஹலோ! யாரு? இது ஆராதனாவோட நம்பர். நீங்க யாரு? ஆராதனா எங்க? அவள் கிட்ட ஃபோனைக் கொடுங்க. இல்லனா என்னோட அம்மா பக்கத்தில இருப்பாங்க அவங்க கிட்ட ஃபோனைக் கொடுங்க” என்று பட படக்கவும்

“ரிலாக்ஸ் டார்லிங்” என்று சிறு சிரிப்புடன் பதில் வந்தது.

“டா..டார்லிங்.?.ஹேய் மிஸ்டர் யாரு நீ?”

“நான் ஜித்! விஷ்வஜித்!”

“பெரிய ஒபாமா! பெயர் சொன்னதும் தெரிஞ்சுடுச்சு. நீ யாரா வேணா இருந்துக்கோ. என் அம்மாவும் ஆராவும் எங்க? அவங்களைப் பேசச் சொல்லு”

“அவங்களை நான் பாதுகாப்பா கடத்தி வைச்சு இருக்கேனே! அப்புறம் எப்படி பேசுவாங்க? இப்போ என்னோட டர்ன். நான் பேசுறதை நீ கேட்கனும். இனி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்திச்சு! அப்புறம் உன் அம்மா, ஆராவோட உசுருக்கு நான் உத்தரவாதம் இல்லை”

“என்னது அம்ம்மாவை…” ‘ங்கொய் …. அவன் கட் செய்திருப்பதை உணர்ந்த பின்னர் தான், அவன் பேச வேண்டாம் என்ற பின்னரும் பேசிய மடத்தனம் உரைத்தது.

வியர்த்திருந்த  விரல்களுக்கிடையில் வழுக்கிய ஃபோனை இறுக்கப் பற்றியவள் மீண்டும் மீண்டும் ஆராதனாவின் நம்பருக்கு முயன்றாள். அழைப்பை அவன் ஏற்றால் அல்லவோ?! இருபது முறைக்கு மேல் அழைத்தபின்னர் சோர்ந்து அப்படியே நிலத்தில் அமர்ந்தவள் கலங்கிய கண்களுடன் மீண்டும் அழைக்க இப்பொழுது அழைப்பை ஏற்று இருந்தான் விஷ்வஜித்!

அழைப்பை ஏற்ற பின்னர் பயத்தில் ஹலோ கூட சொல்லாமல் மூச்சை அடக்கி அவன் பேசக் காத்திருந்த பாவையை ஏமாற்றாமல்

“குட் மிருணாளினி” என்ற குரல் வெளியே கசிந்தது.

“….”

“இப்போ நான் சொல்றதைக் கவனமா கேளு! உன்னோட அம்மா, ஃப்ரெண்ட்டை உயிரோட பார்க்கனும் என்றால் மூன்று மணி நேரத்தில நான் அனுப்புற விலாசத்தில நீ இருக்கணும்.” அவன் கூறியதும் விழிகளைச் சுழற்றியவளுக்கு தலையும் சேர்ந்து சுற்றியது.

“என்னமோ கேட்க நினைக்கிற போல இருக்கே! கேளு பார்ப்போம்”

“இங்க என்னைச் சுத்தி எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா? நான் எப்படி வருவேன்?” நடுக்கமாக வந்த அவளது குரலை இரசித்து “ஹா..ஹா” என்று சிரித்தவன் பற்களைக் கடித்த படி

“வரனும் மிருணாளினி. நீ இங்க வந்தே ஆகனும். அது மட்டுமில்லை. வர்றப்போ ஒரு கடிதமும் எழுதி வைச்சுட்டு வரனும்” கடிதத்தில் எழுதவேண்டிய விபரங்களைக் கூறியவன் “அம்மாவா உன்னோட பயமா நீயே முடிவு பண்ணிக்கோ”

அவ்வளவு தான் மீண்டும் அழைப்பு துண்டிக்கப் பட்டது. அப்படியே பக்கவாட்டு சுவற்றில் தலையை சாய்த்தவளுக்கு அடுத்து என்ன என்பதே தெரியவில்லை. எவ்வளவு தான் தாங்குவாள்? தந்தை ஒரு புறம்! இதோ முகம் தெரியாத இன்னொருவன் மறுபுறம்!

இதைத்தந்தையிடம் கூறலாமா என்று ஒரு கணம் எண்ணியவள் அவரால் தானே இவ்வளவு வேதனைகளும் என்ற ஒரு கோபம் வரவும் நிமிர்ந்து அமர்ந்தாள். எப்படியோ தப்பிக்கத்தானே யோசித்தது! என்ன தப்பித்து வாழ்வைத்தேடிப்போக எண்ணியவள் இப்பொழுது தப்பித்து இன்னொழு சுழலுக்குள் சிக்கப்போகின்றாள். இல்லை! அம்மா ஆராவிற்கு எதுவும் நடக்கக் கூடாது!

இவ்வாறு சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் இன்னொன்றும் மூளையில் தோன்றியது. அவன் ஆராதனாவின் கைப்பேசையை களவெடுத்துச்சென்றுவிட்டும் எனக்கு வலை விரிக்கலாம் இல்லையா?

அவளது எண்ணவலைகள் அவனை எட்டிவிட்டது போலும் வாட்ஸப்பின் உட்பெட்டியில் ஒரு புகைப்படமும் ஒரு விலாசமும் வந்து விழுந்தது. புகைப்படத்தில் வாய்கள் கட்டப்பட்ட நிலையில் காரொன்றில் இருக்கும் தாயினதும் ஆராதனாவினதும் புகைப்படம்! சட்டென்று எழுந்து நின்றவள் தனியாளாக தனது திட்டத்தை செயற்படுத்தத் தொடங்கினாள்.

முகத்தை அழுந்தத்துடைத்தவள் வெட்கப்படுவது போல சற்றுக்குனிந்தபடி அங்கேயிருந்த மூத்தபெண்மணி ஒருவரின் அருகில் அமர்ந்து

“அத்தை! அவர் கால் பண்ணார். ஒரு நிமிஷம் அவரைப் பார்க்க வரச்சொல்றார். நான்.. நான் போகட்டுமா?” அவள் கேட்டது தான் தாமதம் அனைவரும் ‘கொல்’ என்று சிரிக்க உண்மையிலேயே இவளுக்கு வெட்கமாகிவிட்டது. ஒருவனைப் பார்க்கத்தானே செல்கின்றாள்?

“ச்சு! சும்ம இருங்கடி எல்லாரும்” என்றபடி அவளது முகத்தை த்ருஷ்டி கழிப்பது போல விரல்களால் வழித்து நெட்டி முறித்த அப்பெண்மணி

“இப்போ நீ வெளியில போகக் கூடாது மா! ஆம்பிள்ளைப் பையனுக அப்படித்தான் இருப்பானுக! கேப்பானுக! நம்மதான் பார்த்து நடந்துக்கனும்” என்று கூறவும் இவளுக்கு ‘புஸ்’ என்றானது. சோர்ந்த முகத்துடன் பால்கனியை நாடியவளைப் பார்த்து பார்வைகளைப் பரிமாறிக்கொண்ட அவளது தோழிகள் அங்கிருந்த பெண்மணிகளை ஒவ்வொருவராக ஒவ்வொரு காரணம் கூறி வெளியேற்றினர். 

அனைவரும் வெளியேறியது மிருணாளினியின் அருகில் வந்த ஒரு பெண் “மிரு! இப்போ ரூம் ல யாரும் இல்லை. வேணும் என்றால் அவரை இங்க வரச் சொல்லலாம்ம்ம்ம்” என்று இழுத்தவாறே வெளியே சென்று கதவைச் சாற்றிவிட்டுப் போக தலையில் அடித்துக்கொண்டவள் மளமளவென ஓடிச்சென்று தந்தைக்கு ஓரு கடிதம் எழுதி மேஜையில் இருந்த டயரியின் கீழே வைத்துவிட்டு மெல்லக் கதவைத்திறந்து எட்டிப்பார்த்தாள். சுற்றிலும்  ஆட்கள்!

மெல்லக் கதவை சாற்றிவிட்டு பல்கனியின் கீழ் எட்டிப்பார்த்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் வேலை செய்தபடி ஆட்கள் இருந்தனர். என்ன செய்யலாம் என்று சுற்றிப்பார்த்தவள் அங்கே அலங்கார விளக்குகளை ஜோடிக்கவென சாற்றிவைத்திருந்த ஏணியைக்கண்டுவிட்டு அதன் அருகே சென்றாள். ‘இதுல இறங்கிடலாம். பட்! இரண்டு மூன்று தலை தெரியுதே என்ன செய்யலாம்’ அவள் யோசித்துக்கொண்டு இருக்கும் போதே “டேய் எல்லாரும் வாங்கடா. இந்த வாகனத்தைத் தள்ளுங்கடா” என்று ஒரு குரல் வரனும் அனைத்து வேலையாட்களும் அந்தப்புறம் நகர்ந்தனர். ‘முருகா!’ என்று முணுமுணுத்துக் கொண்டவள் மெல்லக் கடந்து ஏணியின் உதவியுடன் கீழே இறங்கினாள்.

இறங்கியவள் மீண்டும் அங்கே யாரும்  இல்லை என்று உறுதி செய்துவிட்டு அலங்காரத்திற்கென்று நிறுத்தப்பட்டிருந்த மரங்களின் பின்னர்  ஒளிந்து ஒளிந்து சில மரங்களின் முட்கள் கீறுவதையும் பொருட்படுத்தாது வீட்டின் பின்புற மதிலின் அருகில் நெருங்கினாள். ‘இப்போ மதிலை எப்படிக் கடப்பது?’ பயத்தில் வழிந்த வியர்வையை புறங்கையால் அழுந்தத் துடைத்த படி அண்ணாந்து பார்த்தவளுக்கு மதிலில் அமர்ந்திருந்த இரு  தடியர்களைக் கண்ட அதிர்ச்சியில் நெஞ்சுத்துடிப்பு ஒரு விநாடி நின்றுவிட்டது.

பயத்தில் ஓரடி பின்னே எடுத்துவைத்தவள் “நாங்க ஜித்  சாரோட ஆட்கள்” என்று ஒருவன் கூறவும் நெஞ்சில் கைவைத்தபடி ஆழமூச்சை எடுத்துவிட்டு அங்கிருந்த இருவரையும் அக்கினிப்பார்வையுடன் நோக்கினாள். அதை அவர்கள் கணக்கில் எடுத்ததாகவே தெரியவில்லை. மேலிருந்து ஒருவன் தடிமனான கயிற்றைப் போட்டு இவளை அதை இறுகப் பற்றக் கூறினான்.

அதை இவள் பற்றியதும் சர்ரென்று மேலே இழுத்தார்கள். மதில் மேல் அமர்ந்தவளை வீதி வழியே கயிற்றின் உதவியுடனே இறக்கிவிட்ட அவர்கள் இருவரும், இறங்கும் முன்னர் “டேய் யார்ரா அது” என்ற ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.. ‘யாரோ கண்டு விட்டார்கள்! இனி தான் அங்கு இல்லை என்பதும் தெரிந்துவிடும்; விஷ்வஜித் கொடுத்த கெடு முடியும் நேரமும் நெருங்கி  இருக்க அத்தடியர்களைப் பார்த்துக் கொண்டு இருக்க நேரமில்லாமல் வீதியில் இறங்கி ஓடத்தொடங்கினாள் விஷ்வஜித்தின் சீதை!

சற்றுத்தூரத்தில் சென்ற ஆட்டோ ஒன்றை வழிமறித்து அவன் சொன்ன நேரத்திற்கு ஐந்து நிமிடம் இருக்க, கூறிய அட்ரஸை வந்தடைந்தவள் அப்பொழுது தான் காசு கூட இல்லாமல் ஆட்டோவை மறித்தை உணர்ந்தாள். சட்டென்று ஆட்டோக்காராரை நோக்கி வணங்கியவள்

“ஸாரி அண்ணா! ஒரு அவசரம். ஓடி வந்துட்டேன். காசு கூட எடுத்துட்டு வரல..நீ..நீங்க..உங்களுக்கு” சட்டென்று கைலாஷ் போட்ட நிச்சய மோதிரம் கண்ணில் பட அதை உருவி கையில் எடுத்து அவ்வாட்டோக்காரரின் கையில் திணித்துவிட்டு “ஏம்மா! இந்தாம்மா” என்று அவர் கூவியதையும் பொருட்படுத்தாமல் அப்பிரம்மாண்ட வாயிற்கதைத் திறந்துகொண்டு வாயிலுக்கும் வீட்டிற்கும் இருந்த சீமெந்துப்பாதையில் ஓடினாள்.

தன்னுடைய கோட்டைக்குள் வந்த சீதையை சிசிடிவியின் பார்த்துக்கொண்டு இருந்த அவ்வினோதமான இராவணனோ அவளைக் கடத்தாமலே தனது கோட்டைக்குள் சிறைப்பிடிக்கப்போகும் களிப்பில் புன்னகைத்துக்கொண்டான்.