இராவணனே இராமனாய்! – அத்தியாயம் 01
இராவணனே இராமனாய்! – அத்தியாயம் 01
உதடுகளுக்கிடையில் பொருந்தியிருந்த ட்ரெஷரர் லக்ஷரி ப்ளாக் சிகெரெட் புகையினை ஆழ உள்ளிழுத்து நுரையீரலுக்குள் நிரப்பிக்கொண்டவனின் இரத்தசெல்களெல்லாம் நிக்கோடினின் உந்துதலால் உற்சாகமாகிக் குதித்துக்கொண்டு இருந்தன. அவற்றின் உற்சாகத்தினால் சிறிதும் பாதிக்கப்படாதவனாக சிவந்துபோய் இருந்த கபில நிறக்கண்களால் சுருங்கிய புருவங்களுடன் சுவற்றில் மாலைகளிற்கிடையில் புன்னகைத்துக்கொண்டு இருந்த அன்னையையே வெறித்துக்கொண்டு இருந்தவன் விஷ்வஜித்!
அவரின் புறமிருந்த பார்வையை மெல்ல இடப்புறமாக நகர்த்தியவனின் விழிகளுக்குள் இப்பொழுது விழுந்தது ஆளுயர சட்டத்தினுள் புன்னகைத்துக்கொண்டு இருந்த தந்தையின் முகம். வெறுமையான அறைமுழுதும் இருளில் சூழ்ந்து இருக்க விஷ்வஜித்தின் அன்னை மற்றும் தந்தையின் முன்னால் இருந்த விளக்குகள் மட்டும் மெலிதாய் அவ்வறைக்கே வெளிச்சத்தைப் பரப்ப முயன்று அசைந்து கொண்டு இருந்தது. ஜக்காப்சன் எக் கதிரையின் மீது நன்கு சாய்ந்து அரச தோரணையில் அமர்ந்து இருக்கும் விஷ்வஜித்தின் மனது முழுவதும் பழுக்க காயச்சிய சூட்டுக்கோலால் இழுத்துப்போட்டது போல வலி மட்டுமே நிறைந்து இருந்தது.
தந்தையின் இழப்பு! அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே அன்னையின் இழப்பு! வீறுகொண்டு எழும் சிங்கம் அவனை உணர்வுகளால் ஓங்கி அடித்து சோர்ந்து போக வைக்கின்றதே இந்த விதி. விழிகளை இறுகமூடி அப்படியே பின்னால் சரிந்தவனின் நெற்றி விண்விண்னென்று தெறிக்க “பத்ரா!!!!” என்று கர்ஜித்தான். கர்ஜித்தவனின் குரல் அந்த அறையின் சுவர்களில் பட்டு எதிரொலிக்க கதவைத்திறந்து கொண்டு வந்த பத்ராவின் கைகளில் மாத்திரையும் நீர்க்குவளையும் தயாராக இருந்தது.
பொம்படேர் ஸ்டைலில் இருந்த சிகை கலைந்து கிடக்க பாக்ஸ் ஸ்டைலில் வெட்டப்பட்டிருந்த தாடி அவனது சோர்ந்த தோற்றத்திலும் கம்பீரத்தை அள்ளித்தெளிக்க ஓர் நாளிலேயே ஒடிந்து போன தனது முதலாளியை வேதனையாக நோக்கிய பத்ராவின் கைகளில் ஒரு கோப நடுக்கம். மனதினுள் எழும் கோவத்தை அடக்க வழிதெரியாமல் அப்படியே கையில் இருந்த குவளையின் மேல் காட்டவும் குவளையில் மெல்ல மெல்ல விரிசல் விழத்தொடங்கியது.
“சரக் சரக்” என குவளை விரியும் ஒலியில் விழிகளைத் திறந்த விஷ்வஜித்தின் கண்களில் ருத்ரமூர்த்தியாக நிற்கும் பத்ராவின் விம்பம் விழவும் “பத்ரா” என்று அதட்டலாக அழைத்தான். அவனின் அழைப்பில் உடல் தளர தலை குனிந்த பத்ராவின் கண்களிலும் கண்ணீர்த்துளிகள். அவனை உணர்ந்துகொண்ட ஒரு பெருமூச்சுடன் அருகில் நின்றவனின் கைகளைத்தட்டியவன் “கொல்லனும் பத்ரா! அவனைக் கொல்லனும். ஆனா அவன் சும்மா சாகக்கூடாது. துடிக்க துடிக்க!! யாராவது தன்னைக்கொல்லமாட்டாங்களா என்று கெஞ்சி கெஞ்சி சாகனும். என் அம்மாவும் அப்பாவும் சாகிறப்போ அனுபவிச்ச வலியை அவனுக்கு உடம்பு, மனசு இரண்டுலயும் கொடுக்கனும். உன்னோட கோபத்தால அவனை ஏதாவது செய்து அவன் உடனே இறந்து போறதை என்னால அனுமதிக்க முடியாது. அதுனால தான் உன்னைக்கட்டி வைச்சு இருக்கின்றேன்” என்ற தனது எஜமானனின் வார்த்தைகளில் அப்படியே அவனின் காலருகே சரிந்தவன் முகத்தை மூடிக் குலுங்கிக் குலுங்கி அழுதான். தன்னைப் பெற்ற மகனாகப் பாவித்த தெய்வங்கள் இறந்த தினம் இன்று என்பது அவனது மனதையும் துடிக்கச்செய்து கொண்டு இருந்தது போலும்!
விஷ்வஜித்தோ ஒரு துளிக்கண்ணீரைக் கீழே சிந்தவில்லை. ஒரு துளிக்கண்ணீரால் அவனது வேதனை மிகச்சிறிய அளவு குறைவதைக் கூட அவன் விரும்பவில்லை. இது பழிவாங்கும் படலம். பதினான்கு ஆண்டுகளாக இந்த தினத்திற்காகத் தானே தவம் இருந்தனர் இருவரும். பெற்றவளின் இறுதித்துடிப்பைக் கையாலாகாதவனாக வேடிக்கைப் பார்த்த ரணம் அவனுள்ளே! தன் வெஞ்சினத்தைத் தீர்க்க சரியான தருணம் எதிர்பார்த்து இருந்தவனின் கோபமுகத்தைப்பார்த்து அவனின் அன்னை தமயந்தியின் முகம் புன்னகைத்ததோ?
தமயந்தி, வாசன் தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். முதலாமவன் விஷ்வஜித். இரண்டாமவன் அஷ்வஜித். விஷ்வஜித்தின் பதினாறுவயதில் அன்னை தந்தை இருவரையுமே இழந்து தனிமரமாக அஷ்வஜித் மற்றும் பத்ராவுடன் நின்ற பொழுது அவனை அரவணைத்துக்கொண்டது தமயந்தியின் தந்தை ஜனார்த்தனன் தான். அஷ்வஜித்தை தந்தை மற்றும் தாயின் இறப்பு அவ்வளவாக பாதிக்கவில்லை. அவனை அன்னைபோல அரவணைத்துக்கொள்ளவும் தந்தை கண்டிப்புக்காட்டவும் அவனது அண்ணண் இருந்தானே. ஆனால் விஷ்வஜித்திற்கு?! மீண்டும் உடல் நாணாக விறைக்க தந்தையின் இறப்பிற்கு நியாயம் தேட யோசிக்கத்தொடங்கியவனுக்குத் தெரியாது இதில் சம்பந்தமே இல்லாமல் இன்னொருத்தியை வதைக்கப்போகின்றான் என்று. தெரிந்தாலும் அதைக் கணக்கில் எடுத்து இருப்பானா என்பது சந்தேகமே!
************
இருள் கொண்ட வானில்
இவள் தீப ஒளி!
இந்தப்பாடல் வரிகள் தனது மகளுக்காகவே எழுதப்பட்டதாக தோன்றும் மாதவிக்கு. திருமணமான நாளில் இருந்து கணவன் செய்யும் எந்தசெயல்களுமே அவருக்கு உவப்பானதாக இருந்ததே இல்லை. வெளியே பகட்டான வாழ்க்கையாக இருந்தாலும் உள்ளே துன்பத்தின் பிடியில் துடித்துக்கொண்டு இருந்த மாதவியை மீட்க வந்த தேவதை தான் மிருணாளினி!
அழகிலும் குணத்திலும் அப்படியே மாதவியைக்கொண்டு பிறந்து இருந்தவள் நடனக்கலையில் சிறுவயதில் இருந்தே தேர்ச்சி பெற்றதால் நளினமும் செதுக்கிய உடலும் இயல்பாகவே அமைந்து இருந்தது மிருவுக்கு! வெண்ண்ணிறக் கல் பதித்த சிறிய ஒற்றைக்கல் மூக்குத்தியும் எப்பொழுதும் புன்னகைத்த உதடுகளும் வெண்ணிறத்தில் சிறிதளவு மஞ்சள் கலந்துவிட்ட நிறமும் அதற்கெல்லாம் மணிமகுடமாய் அமைந்த அவளது குணமும் அவளை தேவதையாகவே எவருக்கும் காட்டும்.
பட்டப்படிப்பையும் கலைத்துறையிலேயே செய்தவள் அருகில் இருந்த சிறிய நடனாலயாவிலே ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டு இருந்தாள். அவளது ஆசைகளுக்கு எப்பொழுதுமே மாதவியின் கணவன் மிருவின் தந்தை தடைகூறியது இல்லை ஆதலால் அவளது நடனப்பற்று தடையின்றி வளர்ந்தது.
மிருணாளினியின் தந்தை பிரகாசம்!! ஒரு வைரவியாபாரி. தந்தை என்றால் மிகுந்த பாசம் மகளுக்கு. ஆனால் அதே பாசம் தந்தைக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே! எதிலுமே ஒட்டாமல் இருக்கும் அவர் குணம் சில நேரங்களில் சலித்தும் இருக்கின்றது மிருவிற்கு! அவள் கேட்டது அனைத்துமே எந்தத் தடையும் இல்லாமல் அவளை வந்து சேர்ந்துவிடும். ஆனால் அந்த ஆனால் தான் அவளுக்கே புரியாத விடயம். எதுவோ தனது குடும்பத்தில் குறைவது தெரியும். அது இன்னதென்று விளங்கிக்கொள்ள இயலவில்லை பாவையால்!
அதற்கு மகுடம் வைத்தாற் போல கடந்த சில மாதங்களாகவே தந்தையின் நடத்தைகளில் மிருணாளிக்கு சில சந்தேகங்கள் முளைத்து இருந்தன. தாயும் கடந்த சிலநாட்களாக ஏதோ யோசனையின் பிடியில் இருப்பது கண்கூடாகவே தெரிந்தது. இதோ இப்பொழுதும்! அடுப்பில் இருந்த தோசை கருகுவதைக்கூட உணராமல் எங்கோ வெறித்தவாறு எதையோ யோசித்துக்கொண்டு இருந்த தாயைக் கண்ட மிருணாளினியின் மனதில் சுருக்கென்று ஒரு வலி எழத்தான் செய்தது. இந்த யோசனைகளில் இருந்து சோக முகங்களில் இருந்து அன்னையை மீட்டெடுக்கத்தான் அவளும் போராடிக்கொண்டு இருக்கின்றாள்.
பின்னால் இருந்து அன்னையின் கழுத்தைக்கட்டிக்கொண்டவள் “அம்மா! எப்போவும் போல கருகின தோசையை எனக்குத்தரலாம் என்று ப்ளான் பண்றியா?” என்று சிரித்தவாறு கேட்கவும் பக்கவாட்டில் அவளது நெற்றியை தனது நெற்றியால் முட்டிச்சிரித்த மாதவி “போடி வாயாடி” என்று செல்லமாக சலித்துக்கொண்டார். அவரின் பேச்சின் புன்னகைத்தவாறே அவரை உணவு மேசையில் அமரச்செய்தவள் மளமளவென்று தோசை வார்க்கத் தொடங்கவும் மகளையே நோக்கிக்கொண்டு இருந்த மாதவியின் உள்ளம் ‘என் மகள்’ என்ற இறுமாப்பில் பூரித்துப் போனது.
************
இறுதியில் ஒலித்த ஸ்லோகத்துடன் தனது பரதத்தை நிறைவு செய்து வணங்கி ஒரு சில பல விளக்கங்களுடன் தனது மாணவிகளை அனுப்பியவள் சலங்கையைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு தன்னைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்த ஆராதனாவை நோக்கிச்சென்றாள்.
“என்ன ஆரா இவ்வளவு சிரிப்பு?”
“இல்ல உனக்கு பரதத்தில இருக்கிற ஆர்வத்தைப் பார்த்து அப்படியே சிலிர்த்துப்போய் இருக்கிறேன் டி”
“ஆஹான்?!”
“பின்ன!! நேரடியா சொல்லனும் என்றால் நான் உன்னை சைட் அடிச்சிட்டு இருந்தேன்” என்று கண்ணடித்தவளை விளயாட்டாக முறைத்தவள்
“போதுமே” என்றபடி தாண்டிச் செல்ல “மிரு! மிரு!! நில்லுடி. உண்மையைத் தான் டி சொன்னேன்” என்று கத்தியவாறே மிருணாளினியின் பின்னால் ஓடினாள் ஆராதனா! அவளின் உயிர்த்தோழி!
“இவங்க தான் பாஸ்! மிருணாளினி! பிரகாசத்தோட பொண்ணு” நடனாலயாவில் தமது ஆட்களின் மூலம் பதிவுசெய்யப்பட்டு இருந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு இருந்த விஷ்வஜித்தின் மனம் நிறைய கணக்குகளைப் போடத்தொடங்கியது.
“நம்மோட நெக்ஸ்ட் மூவ் என்ன பாஸ்?” தனது சுழல் நாற்காலியில் இப்புறமும் அப்புறமுமாக அசைந்த விஷ்வஜித்தின் கபில நிறக்கண்கள் இப்பொழுது பத்ராவின் புறம் அழுத்தமாகப் பதிந்தது.
“அடுத்த மூவ்!! அவசரப்படாதே பத்ரா! அஷ்வஜித் எங்க?”
“கம்பனியில தான் பாஸ்“
“ரைட்!! எனக்கு பிரகாசத்தோட இப்போதைய பிஸ்னஸ் லீகல், இல்லீகல் இரண்டோட டீடெய்ல்ஸ்ஸும் வேணும்! ”
“நாளைக்கு உங்க டேபிள்ள இருக்கும்” என்று கூறிவிட்டு செல்லும் பத்ராவின் முதுகையே வெறித்தவனுக்கு தனது ஆட்டத்தை எங்கு தொடங்குவது என்று இப்பொழுது உறுதியாகி விட்டு இருந்தது. அப்புள்ளி மிருணாளினி!!