இராவணனே இராமனாய்

அத்தியாயம் 06

வீட்டு வாசல்க் கதவை வந்து சேரும் மட்டும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை மிருணாளினிக்கு. உள்ளே செல்லும்நோக்குடன் முன்னேறிவிட்டாலும் பூட்டியிருந்த கதவைத்தள்ள எழுந்த கைகளும் மனமும் சற்றுத்தயங்கி நிற்கத்தான் செய்தன.  ‘நான் செய்வது சரியா? தவறா?’ என்று தனக்குள்ளேயே கேள்வி எழுப்பிக்கொண்டவள் தாய் மற்றும் ஆராதனாவின்நினைவு எழ அனைத்தையும் புறம் தள்ளியவளாக பூட்டியிருந்த கதவில் கைவைத்து சற்று ஊன்றித் தள்ளினாள்.

தாழ் எதுவும் போடாமல் சாற்றி இருந்தது போலும் கதவு பட்டென்று திறந்து கொள்ள வாயிலைப் பார்த்தவாறுபோடப்பட்டிருந்த பனானா கவுச்சின் (Couch) மேல்ப்பகுதியில் கைகளிரண்டையும் படரவிட்டவாறு காலின் மேல் கால்போட்டுத் தோரணையாக அமர்ந்து  இருந்தான் அவன்!

‘இவனா!’ என்று உதடுகள் முணுமுணுக்க மறக்கக்கூடியவனா இவன் என்ற எண்ணத்தில் நெஞ்சம் கசந்து வழிந்தது. இவனைப் பார்த்தபின்னர் தானே இவளின் வாழ்க்கையே திசை மாறிப்போனது. அதிர்ச்சிகளைத் தாங்கித்தாங்கி மரத்துப்போன மனத்துடன் விஷ்வஜித்தை உற்று நோக்கினாள்.

கடும் நீலநிறப் பான்டும் முழங்கை வரை மடித்துவிட்டிருந்த இளநீல நிற ஷர்ட்டும், சற்றுத் தளரவிடப்பட்டிருந்த டையும்முக்கியமாக கூலிங்கிளாஸால் மறைக்கப் படாத அந்தக் கபில நிறக்கண்களும் மிருவின் மனதில் பச்சக்கென்றுஒட்டிக்கொண்டது என்னமோ உண்மை.

“வெல்கம் டு மை கிங்க்டம் (Kingdom) மிருணாளினி” என்று கூறியபடியே எழுந்து நின்று பான்ட் பாக்கெட்டில் கைகளைஇட்டவாறு நிமிர்ந்துநின்றவன் மேல் எழுந்த கோவத்தை  அடக்க முடியாமல் விரைந்து அவன் அருகில் சென்றவள் அவனதுசட்டைக்காலரைப் பற்றி தன்புறம் இழுத்து அக்கபில நிறக்கண்களை உற்று நோக்கினாள். அந்தக்கண்கள்!! அந்தக்கண்கள்!! அதுவும் புருவ ஓரத்தில் இருந்த மச்சம்! சட்டென்று அவனது சட்டையை விட்டவள் “யா…யார் நீ?” நடுங்கும் குரலைமறைத்தவாறே திமிராகக் கேட்டாள்.

அவள் சட்டையைப் பற்றிய போதும் சரி, விடுவித்தபோதும் சரி, யார் என்று தோரணையாகக் கேட்டபோதும் சரி, விஷ்வஜித்தின்உதட்டில் இருந்த சிரிப்பு மறையவே இல்லை. அவனின் சிரிப்பு அவளுக்கு எரிச்சலைத்தந்து இருக்க வேண்டும்.

“நீ யாரா வேணா இருந்துட்டுப் போ! ஏன் எங்க வாழ்க்கையில வந்து இப்படிப் படுத்தி எடுக்கிற? என்னோட அம்மாவும்ஃப்ரெண்டும் இப்போ எங்கே? எங்க அவங்க? அவங்களை நீ ஏன் கடத்தி வைச்சு இருக்க? உனக்கு என்ன தான் வேண்டும்?” என்று வேகவேகமாகக் கேள்விகளை அடுக்கியவள் தான் கேட்ட கேள்விகளின் கணம் தாங்காமலும் உடலின் அலுப்புத்தாங்காமலும் அப்படியே தரையில் மடிந்து அமர்ந்தாள்.

“என்ன மிருணாளினி இப்போவே சோர்ந்து போய்விட்டால் எப்படி? இன்னும் எவ்வளவு இருக்கு! இனித்தானே நான்ஆரம்பிக்கவே போறேன்” என்று கேட்டவனைப் பயத்துடன் அண்ணாந்து பார்த்தவள்

“எங்க என்னோட அம்மாவும் ஆராவும்? அவங்களை விட்டுடு நாங்க போய்டுறோம்” என்று பரிதாபமாகக் கேட்டாள். அவளின்கலங்கிச்சிவந்த விழிகளை சலனமே இல்லாமல் பார்த்தவன் குனிந்து அவளது முகத்தருகே தனது முகத்தை நகர்த்திச்சென்று

“உன்னை விடுறதுக்காக இங்க கூட்டி வரல மிஸ். மிருணாளினி பிரகாசம். உன்னை சிறையெடுக்க வரச்சொல்லி இருக்கேன்”

“என்.. என்ன்..என்ன” பேச்சே வரவில்லை அவளுக்கு!!

கடத்தி வைத்தவனின் தேவை தனது பணம், சொத்து, உயிர் இப்படி எதுவாக இருந்தாலும் அவள் கவலைப்பட்டிருக்கமாட்டாள். இதில் எதை இழந்தாவது தாய் மற்றும் ஆராதனாவை மீட்க வேண்டும் என்று எண்ணியிருந்தவளுக்கு விஷ்வஜித்தன்னை சிறையெடுக்கப் போவதாகக் கூறியதும் திகிலாகிப்போனது. மூளை மரத்துப்போய் சிந்தனைகள் அனைத்துமேவெற்றிடமானதைப் போல இருந்தது. அவளின் திக்கலை இரசித்தவன் மீண்டும் நிமிர்ந்து நின்று

“நீ என் கூட ஒரே வீட்டில நான் சொல்லும் மட்டும் இருக்கனும்” அவனின் பேச்சில் பற்றி எரிந்த உடலை நிமிர்ந்தி எழுந்துநின்றவள்

“ச்சே! நீ எல்லாம் ஒரு ஆணா? ஒரு பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக உன் வீட்டிற்கு வரவழைத்து அவளின் தாய்தோழியின் உயிருக்குப் பதிலாக அவளின் மானத்தை விலை பேசுறியே! நீயெல்லாம் நல்ல தாய் வயிற்றில் பிறந்தவன் தானா?” சாட்டையென சுழன்ற அவளது வார்த்தைகளில் எழுந்த கோவ அலைகள் பொறுமை என்ற அணையை உடைக்க

“ஏய்” என்று கர்ஜித்தபடி பாய்ந்து அவளது தலைமுடியைக் கொத்தாகப் பற்றித் தூக்கியவன் “யாரைப் பார்த்து என்ன வார்த்தைபேசிட்டு இருக்க? இன்னொரு வார்த்தை என் அம்மாவைப் பற்றியோ இல்ல என்னோட குடும்பத்தைப் பற்றியோ தப்பாஉன்னோட வாயில வந்திச்சு நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று விட்டு சட்டென்று பற்றியிருந்த அவளது கூந்தலைவிடவும் பிடிமானமிறிப் போக அருகில் இருந்த சோபாவைப் பற்றித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள்.

அவளைப் பார்த்துக் கோவமாக சிரித்தவன் “என்னோட தப்புத்தான்! பிரகாசத்தோட பொண்ணுக்கு புத்தி இப்படிப் போகலஎன்றால் தானே ஆச்சர்யம்! உன்னைப்பற்றி நான் போட்டக் கணக்கு தப்பு போலவே!” தோள்களைக்குலுக்கி கைகளைஇலேசாக விரித்தவனின் கம்பீரம் அவன் தன்னை சிறையெடுத்து நிற்கும் வேளையிலும் மிருணாளினியைக் கவர்ந்தது தான்கொடுமை.

பற்றியிருந்த சோபாவில் அப்படியே அமர்ந்து தலையைத் தாங்கிக் கொண்டவள் விழி மூடி சிறிது சிந்தித்தாள். தந்தையுடன்இருக்கும் பகையில் தான் பகடைக்காயாக்கப் பட்டு இருப்பது தெளிவாகத் தெரிந்தது மிருணாளினிக்கு. அதைக் கூடஏற்றுக்கொண்ட அவளால், தந்தையும் இவனது திட்டத்தில் வீழ்ந்து தன்னை இழக்கப் பார்த்ததை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

அவளை எதுவும் சொல்லாது குனிந்திருந்த தலையையே பார்த்தவாறு நின்றிருந்தான்  விஷ்வஜித். யோசனையில் தெளிந்தவள்இருகைகளின் உள்ளங்கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்தபடி நிமிர்ந்து விஷ்வஜித்தின் கபில நிறக்கண்களைஅழுத்தமாக நோக்கினாள். அவனின் விழி இம்மி கூட அசையவில்லை. இரையை நோக்கிக் கொண்டிருக்கும் புலியின்பார்வை!

“சரி! இப்போ நான் என்ன செய்யனும்?” பற்களைக் கடித்தபடி வந்த மிருணாளினியின்  குரலிற்கு கைகளைத் தட்டியவன்

“பலே! இதோ இந்தத் தெளிவைத் தான் உன்கிட்ட எதிர் பார்த்தேன் மிருணாளினி”

“…..” அவனை வெறித்துப் பார்த்தவளை நோக்கியபடியே சென்று முன்னர் அமர்ந்து இருந்த கவுச்சில் அதே ராஜதோரணையுடன் அமர்ந்தவன்

“உனக்குள்ள நிறையக் கேள்வி இருக்கலாம்! நான் யாரு? உன் அப்பாவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் தேவையில்லாமஉன்னோட வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சேன்? இப்படி இப்படி நிறையக் கேள்வி இருக்கலாம். ரைட்?”

அவனின் கேள்விக்கு அழுத்தமான தலை அசைப்பு மட்டுமே  மிருவிடமிருந்து.

“இதுக்கெல்லாம் விடை உனக்கு சொல்லவேண்டிய நேரம் வர்றப்போ சொல்லுவேன்! உன்னோட அப்பாக்கிட்ட இருந்துஎனக்குக் கிடைக்கவேண்டிய சில விஷயங்கள் இருக்கு. அது கிடைக்கும் மட்டும் நீயும் உன்னோட அம்மா, தோழி எல்லாரும்என்னோட கட்டுப்பாட்டுல தான் இருக்கனும். அதுலயும் நீ,” என்று அவளை நோக்கித் தனது ஆள்காட்டி விரலை நீட்டியவன்

“என்கூடவே இருக்கனும். ஆஹா!! என்ன பார்வையில காரம் ஏறுது! என்னை முழுசா சொல்ல விடுமா!”

“….” மௌனமாக அவனையே வெறித்துக் கொண்டு இருந்தாள் மிருணாளினி.

“நீ என் கூட ஒரே வீட்டுல தான் இருப்ப. பட் தவறான நோக்கத்தோட என்னோட நிழல் கூட உன் மேல படாது! உன்னோடகற்புக்கு எந்த பாதிப்பும் வராது.” அவனது கூற்றில் புருவம் சற்று உயர நிமிர்ந்து பார்த்தவளின் பார்வையில் ஒருதுளிசந்தேகமும் கலந்து இருந்ததோ?!

“நீ என்னை நம்பித்தான் ஆகனும்! நான் நினைச்சது நடக்கும் மட்டும் நீ என்கூட தான் இருக்கனும். அதுமட்டும் உன்னோடஅம்மா அன்ட் ஃப்ரெண்ட் சேஃபா இருப்பாங்க. என்னோட காரை எடுத்திட்டு இந்த போர்ட்டிக்கோக்கு வரும் மட்டும், உனக்குநான் யோசிக்க நேரம் தருகிறேன். காரை நிறுத்தி ஐந்து ஹார்ன் அடிப்பேன். நான் சொன்னது சம்மதம் என்றால் வந்து காரிலஏறு. இல்லனா உன் அம்மாவையும் நண்பியையும் மறந்துடு. உனக்கு என்னைப் பற்றி ஃபோன் காலிலேயே தெரிஞ்சு இருக்கும்” என்றவன் அவ்வளவு தான் என்பது போல எழுந்து வெளியில் ஷெட்டை நோக்கி நடந்தான்.

**********

தலையில் ஏதோ கல்லை வைத்தது போல படுக்கையில் இருந்து எழ முடியாமல் போகவும் கைகளால் தலையை அழுத்தியபடிஎழுந்து அமர்ந்த மாதவிக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த உயர்தர அறையைச் சுற்றிப் பார்வையை ஓட்டியவர் எங்கேஇருக்கின்றோம் என்று அறியமுற்பட்டவராக கட்டிலில் இருந்து இறங்கப் போகும் போது விழிகளை தனது அருகே சுழற்றியவர்அதிர்ந்து தான் போனார். ஆராதனா!!

‘எங்கு இருக்கின்றோம்? மிரு! அய்யோ என் பொண்ணு மிரு?’ மனம் பட படவென்று அடிக்க சுவரில் இருந்த நேரத்தைப்பார்த்தவர் நேரம் பத்துமணி என்று இருக்கவும் இரவா காலையா என்று தெரியாமல் குழம்பிப் போனார். மெல்ல கால்களைத்தரையில் ஊன்றி எழுந்து நின்றவர் மீண்டும் கண்கள் இருட்டிக்கொண்டு வரவும் தலையைப் பற்றியவாறே கட்டிலில்அமர்ந்தார். 

சிறிது நேரத்தில் உடல் சமப்பட்டது போலத்தோன்றவும் எழுந்தவர் தன்னால் இயன்றவரை விரைவாக வெளியே சென்று  பார்க்க ஹாலில் ஜனார்த்தனம் பத்திரிக்கை ஒன்றை வைத்துப் படித்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.

“ஜனாப்பா” என்று உதடு முணுமுணுக்க அவரின் அருகே விரைந்தவர் “ஜனாப்பா” என்று தயக்கமாக அழைக்கவும் அவளைத்திரும்பி நோக்கிவிட்டு கையில் இருந்த பத்திரிக்கையை மடித்து வைத்துவிட்டு புன்னகைத்தார் ஜனார்த்தனம்.

அவரின் புன்னகையில் நெஞ்சில் யாரோ கத்தியைச் சொறுகி இழுத்தது போல வலித்தது மாதவிக்கு. அவருக்குத்தான் செய்தஅநியாயம் எங்கே? அதற்கான வெறுப்பு ஒரு சதவீதம் கூட இல்லாமல் தன்னை நோக்கிப் புன்னகைக்கும் அவர் பண்பு எங்கே? தலையைக் குனிந்தவாறு நின்றவரைப் பார்த்து பரிவாகப் புன்னகைத்த ஜனார்த்தனம்

“உட்காரு மாதவி” என்று கூறவும் தயக்கமாக அவரின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தவரின் கண்கள் ஆயிரம்கேள்விகளைத் தாங்கி இருந்தது. அதற்கு பதில்கள் எதுவும் தெரியாமல் போகவும் அருகில் நின்று கொண்டு இருந்த பத்ராவைநோக்கினார் ஜனார்த்தனம். எங்கே அவன் அசைந்து கொடுத்தால் அல்லவோ? மாதவியையும் ஆராதனாவையும் அழைத்துவந்தபத்ராவை ஆயிரம் கேள்விகள் கேட்டு இருப்பர் ஜனார்த்தனமும் அஷ்வஜித்தும்! “பாஸைக்கேளுங்க” “எனக்குத் தெரியாது” இதைத்தவிர வேறு பதில்களே சொன்னான் இல்லை.

இப்பொழுது கையில் இருக்கும் ஒரே ஒரு விடையான பத்திரிக்கையை மாதவியிடம் நீட்டியவர் அதனைப் படிக்கச் சொன்னார். தயக்கமாகவும் பயமாகவும் அப்பத்திரிக்கையை வாங்கி விழிகளை ஓட்டி “அமைச்சர் அருணகிரியின் மகனின்பொறுக்கித்தனங்களை சகிக்க முடியாத திருமணப் பெண் காதலனுடன் ஓட்டம்” என்ற தலைப்பை மாதவி வாசித்ததும் “என்னபைத்தியக்காரத்தனம் இது!!” என்று முழங்கியது அறை வாசலில் கண்களைக் கசக்கியவாறு நின்றிருந்த ஆராதனாவின் குரல்!