இளைப்பாற இதயம் தா!-11அ

இளைப்பாற இதயம் தா!-11A

          பொதுவாக வேற்று ஆண்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்துவிடுவாள் ஐடா.  அலுவலக பணி சார்ந்து பேச வேண்டியிருந்தால் தயங்காமல் அதற்கேற்ற தொனியில் தனது பேச்சினை தகுந்த பண்பேற்றத்தில் பேசிவிடுவாள். 

ஆண்களிடம் அலுவல் சார்ந்து பேசத் தயங்கவோ, எத்தகைய விசயமாக இருந்தாலும் வேறு யாரையும் சிபாரிசுக்கு அழைக்கவோ விரும்பமாட்டாள்.

          அப்படி வளர்ந்தவளுக்கு அன்றைய தினத்தின் நிறைவில் அவளின் மனக்குறையாக நடந்து முடிந்த விசயம் மனதிற்குள் பூமியின் சுற்று வேகத்தைவிட அதிக வேகத்தில் அவளின் நிம்மதியை சூறையாடிக் கொண்டிருந்தது.

          கணவனோடு வீட்டிற்கு வந்தது முதலே யோசனையில் ஐடா இருந்ததை ரீகன் கவனித்தான்.  என்ன கேட்பாள் என்பது தெரியாதபோதும், எதைப்பற்றிக் கேட்பாள் என்பது தெளிவாகப் புரிந்தேயிருந்தான் ரீகன்.

          டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ராபர்ட் ரீகனை எதிர்பார்த்திராத ஆராதனாவிற்கு, அவனது மாறிய தோற்றம் கண்டு அவனிடம் பேச ஆரம்பத்தில் தயக்கம். 

அவன் உள்ளே வந்த சற்று நேரத்தில் எதேச்சையாக பார்த்தவளுக்கு, ‘இது யாரு?  நல்ல பரிச்சயமான முகமாத் தெரியுதே’ என சிந்தித்தபடியே பத்து நிமிடங்களை கழித்தவளுக்கு, அவன் அங்கிருந்த ரேக்குகளில் உள்ள பொருள்களில் வேண்டியதை எடுத்து ட்ராலியில் வைத்தபோது அவனிடம் ஏற்பட்ட நடவடிக்கையைக் கண்டதும் சட்டென யாரென்பது நினைவுக்கு வந்திருந்தது.

‘இது நம்ம தெரோபலோட ஆளு ரீகன் மாதிரியில்ல இருக்கு!  ஆனா ஆளு அடையாளம் சரியாத் தெரியாம அவன்னு நினைச்சுப் போயி எதாவது பேசி வைச்சிரக்கூடாதே!’ என அதன்பின்னும் சிறிது நேரம் கவனித்துப் பார்த்தவளுக்கு இது அவனேதான் என்பது விளங்கியது. 

அதன்பின் அதிகம் தாமதிக்காது அவளாகவே முன்வந்து ரீகனோடு பேசியிருந்தாள் ஆராதனா.

ஆராதனா ரீகன் பங்களூரில் பணிபுரியும்போது அறிமுகம்.  ரீகனின் மீது பித்தாக இருந்தளின் ஹாஸ்டல்மேட்தான் இவள்.

எடுத்ததும் ரீகன் என அழைத்துப்பேச தயக்கம் இருக்க, “கேன் ஆஸ்க் யு சம்திங், இஃப் யூ டோண்ட் மைண்ட்” என்று துவங்கி, “நீங்க தெரோபலோட ரீகன்தான” என்று கேட்டுவிட்டு அவனை ஆராய்ந்தாள்.

          ரீகன் எதையும் மறைக்கவோ, பதுங்கவோ எண்ணாமல் ஆராதனாவை சாதாரணமாக எதிர்கொண்டான். “யா…! ஐம் ரீகன்! பட்… நாட் தெரோபல்’ஸ்” என சிரித்தபடியே கூறியவன், “நீங்க?” அவளை அவனுக்குப் பரிச்சயமாகத் தோன்றினாலும் அவளின் பெயர் நினைவில் இல்லாமல் போயிருந்ததால் அப்படிக் கேட்டான்.

“ஓஹ் சாரி…” என்றவள், “நான் ஆராதனா!  தெரோபலோட ஹாஸ்டல்மேட்!” என்றதோடு, “தெரோபலோட நீங்க ஹாஸ்டல் வந்தப்போதான் உங்களைத் தெரியும்.  அதான் அப்படி கேட்டேன்” என ஆங்கிலத்தில் உரைத்தவள், “அடையாளமே தெரியாம இப்படி மாறிட்டீங்க!” என்றாள்.

“இல்லையே… அப்டியேதான் இருக்கேன்” தோள்களை உயர்த்தி சிரித்தவன், “ரொம்ப வருசத்துக்குப் பின்ன பாக்கறதால அப்டித் தெரியுமா இருக்கும்” சமாளித்தான்.

ஆராதனா பேசப்பேச பதிலுக்கு அவனும் உரையாடினான்.

          “இப்ப எங்க வர்க் பண்றீங்க?” ஆராதனா கேட்டதும், தான் தற்போது வேலை பார்க்கவில்லை என்றதோடு தனது தொழிலைப் பற்றி மேலோட்டமாக கூறினான்.

          “ரீசண்டா மீட் பண்ணப்போகூட தெரோபல் உங்களைப் பத்தி ரொம்ப புலம்பினா.  உங்களை காண்டாக்ட் பண்ண எவ்ளோ ட்ரை பண்ணாலும் முடியலைன்னு சொன்னா. உங்க நம்பர் மாத்திட்டீங்களா?” என்று வினவினாள் ஆராதனா.

          நம்பர் மாற்றியதைப் பற்றி பதில் கூறாமல் சிரித்து சமாளித்தான் ரீகன். அதில் அவன் நம்பரை மாற்றியதாகக் கூறுகிறானா இல்லை மாற்றவில்லை என்று கூறுகிறானா என்பது புரியாத அளவில் தலையை மாற்றி மாற்றி அனைத்து திசையிலும் ஆட்டினான்.  அதற்குமேல் அதைப்பற்றிக் கேட்பதற்கு அவளுக்கும் சங்கடமான உணர்வு.  தெரோபலைப் பற்றி ரீகனே விசாரிப்பான் என்று ஆராதனா எதிர்பார்க்க அதைப் பொய்யாக்கி இருந்தான் ரீகன்.

          “உங்களை அவ மிஸ் பண்ணிட்டதா ரொம்ப புலம்புவா!” எப்படியாவது ரீகனை தெரோபலைப் பற்றி பேச வைத்திடும் முயற்சியில் ஆராதனா இறங்க, “நீங்க இத்தனை வருசமா இங்கேயேதான் கண்டினியூ பண்றீங்களா?” பேச்சை மாற்றினான் ரீகன்.

          ரீகனது கேள்விக்கு ஆமோதிப்பாக பதிலைக் கூறிய ஆராதனா மீண்டும் தனது தோழியைப் பற்றியே பேசத் துவங்கியிருந்தாள்.  “நீங்க அவளையே மேரேஜ் பண்ணிருந்திருக்கலாம்” ஆராதனா கூறியதும், “வர்க்காக கூட இருக்கறவங்களோட நல்லா பேசிக்கறதுதான்.  மற்றபடி வேற எந்த இன்டென்சனோடயும் யாரோடையும் அப்ப பழகலை” என்று தெளிவாகக் கூறினான்.

          ரீகனுக்கு தெரிந்திருக்காத விசயம் என்னவென்றால், தெரோபல் ரீகனோடு எங்கெங்கு சென்று வந்தாள், அங்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் என்ன நடந்தது? எப்படி இருவருக்குள்ளும் படிப்படியாக எங்ஙனம் நெருக்கம் கூடியது. 

          நெருக்கமானது எப்போது இருவருக்கிடையே விருப்பமானது.

விருப்பம் எப்போது கண் தீண்டி, மெய் தீண்டி, இதழ் தீண்டி இருவரையும் அடுத்த கட்டத்திற்கு தூண்டியது.  அந்த முதல் தூண்டலின்போது என்ன நடந்தது.  அதன்பின் அது அடுத்த நிலைக்கு எவ்வாறு சென்றது.

இப்படி நடந்த அனைத்தையும் அப்படியே இல்லாமல் அவளின் மனம் சிலாகித்ததையும் சேர்த்து அதிகமாகவே ஆராதனாவிடம் பேசி அவளின் கழுத்திலிருந்து ரத்தம் வர வைத்திருக்கிறாள் என்று.

ஆராதனாவிற்கு ரீகனோடு தெரோபலுக்கு உண்டான நெருக்கம் பற்றி எல்லாம் தெரியும் என்பதை ரீகன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஏனென்றால் தெரோபல் அவர்களின் விசயம் யாருக்கும் தெரியாது என்பதுபோலவே அவனோடு பழகிய நாள்களில் அவனிடம் பேசியிருந்தாள்.

அப்படி இருந்தவள் வெறொருவனோடு திருமணம் என்று பத்திரிக்கையை ஆராதனாவிடம் நீட்டியபோது உள்ளுக்குள் கேள்விகள் பல எழுந்தபோதும், எதுவும் கேட்காமலேயே தோழியைக் கடந்து சென்றிருந்தாள். 

அது அவளின் வாழ்க்கை.  அது அவளின் விருப்பம்.  இதில் தான் எதையும் பேசி கெடுத்துவிட்டோம் என்று பின்னாளில் ஒரு பெயர் தனக்கு வேண்டாம் என்கிற முன்னெச்சரிக்கைதான் அது.

அதன்பின் தோழியின் திருமணத்திற்கு சென்று வந்திருந்தாள் ஆராதனா.  அன்றைய தினம் தெரோபல் மிகுந்த மகிச்சியோடே காணப்பட்டாள். கடந்துபோன நாள்களுக்காகவோ, ரீகனை மணக்க முடியாததற்கோ வருத்தப்பட்டாற்போல சிறு சுணக்கமும் அவளிடம் தெரியவில்லை.

அதன்பின் இரண்டாண்டுகள் தெரோபலை ஆராதனா சந்திக்கவே இல்லை.  தெரோபலின் விவாகரத்திற்குப்பின் ஆராதனாவைச் சந்தித்தபோது, மீண்டும் பணிக்கு வந்திருந்த செய்தியோடு, அவளின் மணமுறிவுச் செய்தியையும் அறிய நேர்ந்தது.

தோழியின் விவாகரத்து செய்தியோடு அதற்கான காரணங்களை அவளாகவே சொல்லிக் கேட்டதும், “உங்க வீட்ல பாத்த மாப்பிள்ளை நீ அப்பவே வேணானு சொல்லியிருந்திருக்கலாம்.  இப்ப பாரு.  எவ்ளோ கஷ்டம் உனக்கு” என வருந்திப் பேசியிருந்தாள் ஆராதனா.

அதன்பின் அடிக்கடி தற்போது இருவரும் உரையாடிக்கொள்கிறார்கள்.  அப்போதெல்லாம் ரீகனை எண்ணிப் பேசி, அவனது அருகாமைக்கு தான் ஏங்குவதாகவெல்லாம் தோழி தெரோபல் பேசியதைக் கேட்டவளுக்கு, ‘இனிமேலாவது அவனைத் தேடி கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழட்டும்’ எனும் நினைப்புதான்.

          தோழியின் நினைப்பில் இருந்த ஆராதனா தற்போது ரீகனிடம், “அப்ப இனி அவளைப் பாத்தா அந்த ஐடியா வருமா?” என்று கேட்டு வைத்தாள்.

கடந்துபோன நிகழ்வுகளை எண்ணி ஏங்கவோ, தெரோபல் இல்லாத தனது வாழ்க்கையை எண்ணி வருந்தவோ செய்யாத ரீகன் ஆராதனாவின் கேள்விக்கு, “சாரி! அப்டி ஒரு எண்ணம் எனக்கு எப்பவுமே வர வாய்ப்பில்லை” ஆணித்தரமாக தனது மனநிலையை அவளிடம் பதிவு செய்தவன் கூடுதல் செய்தியாக, “நான் இப்போ மேரிட்.  இங்க என்னோட வயிஃப்கூடதான் ஷாப்பிங் வந்திருக்கேன்” அலுங்காமல் இடியை வீசிய வேளையில்தான் அவனைத்தேடி ஐடா அங்கு வந்தாள்.

ஆராதனாவைப் பொறுத்தவரையில் ரீகன் தெரோபலோடு மட்டுமே இத்தனை நெருக்கம் காட்டியதாக எண்ணியிருந்தாள்.  உண்மையில் அவனோடு நெருங்கிப் பழகிய பல தையல் பட்டாளத்தை அறிந்திராதவள் அப்படி எண்ணியதில் எந்தத் தவறுமில்லை.

ரீகனது இயல்பான பேச்சு மற்றும் செயல் அவளை மேலும் அதிர்விற்குள்ளாக்கி நிற்கச் செய்திருந்தது தெரியாமலேயே ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியில் இருந்தான் ரீகன்.

          ஐடாவைப் பார்த்ததும் ஆராதனாவிற்கு தோழியை நினைத்து வருத்தம் மேலிட்டது.  ஐடாவை ஆராதனாவிடம், “இவங்கதான் என் மிஸ்ஸஸ். கிரேஸ் ஐடா!” அறிமுகம் செய்து வைத்தவன், ஐடாவிடம் திரும்பி, “இவங்க ஆராதனா!  நான் இங்க வர்க் பண்ணும்போது பழக்கம்” மனைவிக்கு அறிமுகம் செய்ய, ஐடா சாதாரணமாகவே புன்முறுவலோடு ஆராதனாவை ஏறிட்டாள்.

          ஆராதனாவின் முகத்தில்தான் ஐடாவைக் கண்டது முதல் ஈயாடாமல் போயிருந்தது.  சிரிப்பில்கூட உயிரோட்டம் இல்லாமல் இருந்தது.  அதனைக் கவனித்த ஐடாவிற்கு மனதிற்குள் அதுவரை தோன்றாத விழிப்பு நிலை உண்டாக, ‘இவ ஏன் இப்டி பாக்கறா?’ என்பதுபோல.

          ஆராதனாவிற்கு, ‘இத்தனை அழகா பொண்டாட்டி கிடைச்சா வேற யாரையும் எப்டி அவன் நினைச்சுப் பாப்பான். இந்த தெரோபல் இனி என்ன செய்வா?’ இப்டியான சிந்தனையில் ஆழ்ந்து சென்றிருந்தாள்.

          ரீகன் அதனைக் கவனித்ததால் அதிகம் பேச்சை வளர்க்காமல், மனைவியிடம் திரும்பி, “கிளம்பலாமா ஹனி!” என்று கேட்டதும், ஐடாவும் சரியென்று தலையாட்ட ஆராதனாவைப் பார்த்தவன், “ஓக்கே ஆராதனா. ஃபிரண்ட் யாரையும் பார்த்தா கன்வே மை ரிகார்ட்ஸ்.  பை” என்று ஒரு மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டு அவளின் பதிலுக்காக காத்திராமல் மனைவியை ஒரு கையால் அணைத்தபடியே பில்லிங் நோக்கி நகர்ந்துவிட்டான் ரீகன்.

          இருவரும் பொருள்களுக்கான தொகையைச் செலுத்திவிட்டு ஃபிளாட்டிற்கு அவர்களின் வண்டியில் திரும்பியிருந்தார்கள்.

          ஐடாவிற்கு ஆராதனாவின் பார்வைக்கான வித்தியாசம் எதனால் என்பதைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டி மனம் முரண்டியது.  ரீகன் மனைவியிடமிருந்து சற்று இடைவெளி இருக்கும்படியே வீட்டிற்குள் நுழைந்தது முதலே பார்த்துக்கொண்டான். அவனுக்கு அவனுடைய வருங்காலப் பிள்ளையின் பாதுகாப்பு அவசியமாகப்பட்டது.

          மேலும் ஆராதனாவைப் பற்றிய ஏதோ ஒரு விசயம் மனைவியின் மனதிற்குள் குடைவதால், விரைவில் அது சார்ந்த வினாக்கள் மனைவியிடமிருந்து எழக்கூடும் என்பது புரிந்திருந்தது. 

          சாதாரணமாக கணவன் தன்னை விட்டு விலகி இருந்து பார்த்திராத ஐடாவிற்கு கணவன் இங்கு வந்ததுமுதலே தன்னைத் தவிர்ப்பதுபோல தோன்றியிருக்க, தற்போது ஆராதனாவின் முக மாறுதல்களை கவனித்தவளுக்கு சற்று கலக்கம் குடிவந்திருந்தது.  எல்லாம் சேர்ந்து மனம் ஒருநிலையில் இல்லாமல் போக ரீகனைக் கண்காணிக்கச் சொன்னது.

          இடைவெளி விட்டு நின்றபடியே அவளிடம் பேசுவதும், உண்ண அழைத்ததும், நேரங்கருதி உண்ணச் சென்றவளிடம் அதிகம் பேசாமல் உண்ணுவதில் கவனமாக இருந்ததும், இருவருமாக உண்டு முடித்ததும், “நீ போயித் தூங்கு ஹனி” என்றதோடு டிவியின் முன்னே ஆஜரானவனை அவன்போக்கில் விட்டாளா?

***