இளைப்பாற இதயம் தா!-14அ

இளைப்பாற இதயம் தா!-14A

          சிந்துவின் திருமணத்திற்கு சென்று வந்தது முதலே அமைதியைத் தத்தெடுத்திருந்தவளுக்குள் ரீகனைப் பற்றியும், தனக்கு நெருடலான  அவன் பற்றிய விசயங்களை ஆய்ந்தறிந்தே ஆகவேண்டிய பரபரப்பு.

          இதற்கு மத்தியிலும் ஐடாவின் மனதோரத்தில் சிறிதளவு நப்பாசை ஒட்டிக்கொண்டிருந்தது. 

          பயணத்தின்போது வின் என்று அழைத்தவளும், திருமணத்தின்போது தான் எதிர்கொண்ட ஜான்வியும் ஒரே நபராக இருக்கக்கூடாது என்கிற வேண்டுதல்தான் அது.

          அப்போது, ‘இன்னொருத்தி வேற அன்னைக்கு பஸ்ஸில கூட வந்தாளே… அவ பேரு என்னான்னு தெரியலையே!’ என்று தோன்றியதுமே,

          ‘கர்த்தாவே… எங்களோட கடந்துபோன வாழ்க்கையில நடந்த தவறுகளால இனிவரும் காலங்களில் எங்கள் நேசமும், இதுவரை வாழ்ந்த வாழ்க்கையும் கேலிக்கூத்தா மாறிடாம எங்களை ரட்சியும்!’ மனதிற்குள் பிரார்த்தனை வலுத்தது ஐடாவிற்கு.

          அந்த நப்பாசைக்கு பின்னணியில் தன் கணவன் மீது ஏராளமான அன்பும் காதலும் நேசமும் இருந்ததோடு, அவனை விட்டு நீங்கும் நிலை வந்துவிடுமோ என்கிற அவள் ஏற்கக் தயங்கக்கூடிய… எதிர்கொள்ளவே அஞ்சக்கூடிய மலையளவு பயமும் உள்ளுக்குள் இருந்தது.

          ரூபி ஐடாவை உண்ண அழைத்ததற்கு, “பசியில்லை பாட்டீ!  அலைஞ்சது டயர்டா இருக்கு.  பசி வந்ததும் நானே சாப்பிட்டுக்கறேன் பாட்டீ!” என்றாள்.

          பாட்டியும் ஐடாவின் சோர்ந்து காணப்பட்ட வதனத்தைக் கண்டு அவள் கூறியது உண்மை என்று நம்பி, “டயர்டா இருந்தா… ரெஸ்ட் எடுடா!  வேற எதாவது அசௌகர்யமா ஃபீல் பண்ணா… நாங்க சிரமப்படுவோம்னு சொல்லாம இருந்திராதடா!” என்றதோடு, ஐடாவின் தலையை அன்பாக வருடிவிட்டவர் அவளிடம் சொல்லிக்கொண்டு பேரனிடம் வந்து விசயத்தைக் கூறிவிட்டு அகன்றுவிட்டார்.

          ரீகனுக்கு, ஐடா வயிற்றில் பிள்ளையோடு இருக்கும்போது அப்படியே விட பயம்.  தங்களிடம் ஏதேனும் சொல்ல தயங்கி அந்தத் தாமதிப்பால் இரு உயிருக்கும் பெரிய பிரச்சனை என்றால் என்கிற முன்னெச்சரிக்கை.

பாட்டி சொல்லியிருந்தாலும் அவன் உண்டு முடித்ததும் ஐடாவிடம் வந்து, “என்ன செய்யுது ஹனி?” என்று கேட்டான். பதிலே பேசாமல் படுத்துக்கிடந்தவளை அணுகி, “ஹனி…!” என மீண்டும் அழைத்தான்.

          அவனது அழைப்பைக் கேட்டபடியே படுத்துக்கிடந்தவள் அவன் தன்னருகே வருவதை உணர்ந்து திரும்பாமலேயே, “லீவ் மி அலோன்!” எனும் மனைவியின் பதிலில் அதற்குமேல் இடையுறாமல் நகர்ந்துவிட்டான்.

இப்படி அவனை இதுவரை அவள் தவிர்த்ததில்லை. ஆனால் விசயம் என்னவென்று ஒரு முடிவிற்கு வரமுடியாததால் அதற்குமேல் அவளைத் தொந்திரவு செய்யாமல் அங்கிருந்து அகன்றுவிட்டான்.

          ‘இன்னைக்கு மேரேஜ் ஃபங்சன்ல நடந்த விசயத்துக்காகவா… இல்லை… வேறு எதாவது பிரச்சனையா?’ சிந்தனையோடு பாட்டியிடம் சென்றவன், “நான் ஆஃபீஸ் போயிட்டு வரவரை அவளைப் பாத்துக்கங்க பாட்டீ!” என்றுவிட்டு மீண்டும் தங்களின் அறைக்குள் வந்தவன் அதையே மனைவியிடமும் உரைத்துவிட்டு அவளின் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டான்.

          ஐடாவிற்கு தனிமை!

ஸ்லீப்பர் பேருந்தில் தான் கண்டவள்தானா ஜான்வி என்பதைக் கண்டறிய மனம் தூண்டியது.  அந்த நிகழ்வின் முக்கியஸ்தனாக இருந்தவன் தனது கணவனாக இருந்துவிடக்கூடாதே என்கிற எதிர்பார்ப்பும் கூடவே கொட்டிக் கிடந்தது.

வழமையாக அவள் டிக்கெட் புக் செய்யும் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு போன் செய்து பேசினாள் ஐடா. தேவகோட்டையைச் சேர்ந்தவர்தான் அவர்.  அந்த டிராவல்ஸ் மூலமாக தமிழகமெங்கும் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறார்.  அவரின் அலுவலகம் காரைக்குடியில் இயங்கியது. 

ஐடாவின் தந்தைக்கு தெரிந்தவர் என்கிற வகையில் சென்னை வந்தது முதலே டிக்கெட் போட அவரிடம்தான் பேசுவாள்.  அந்த பழக்கத்தில் ஐடாவின் எண் அவரிடமும் இருந்தது.  அவளின் அழைப்பைப் பார்த்ததும், “என்னமா… ரொம்ப நாளாச்சு” என்று கேட்டவரிடம்,

“மேரேஜ்கு பின்ன சென்னையிலதான் இருக்கேன்.  அதான்” என்று விளக்கம் அளித்தவள் தாமதிக்காது விசயத்திற்கு வந்தாள்.

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.  என்னோட பாஸ்போர்ட் வச்சிருந்த பைல் ஒன்னு மிஸ்ஸாகிருச்சு!” என்றதோடு வின் மற்றும் அந்தப் பெண்கள் பயணித்த தினத்தின் தேதியை அவரிடம் கூற, “என்னம்மா வருசக் கணக்காச்சு” என்றிட,

“என்னோட ஃபைல் மிஸ்ஸானது இந்த டேட்லதான்.  உங்க ஆஃபீஸ்ல பைல் எதுவும் எடுத்து வச்சிருந்தாங்கன்னா அதுல என்னோடது இருக்கான்னு பாத்து சொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.

“அப்படி எதுவும் மிஸ்ஸாகி இருந்தா உடனே டிராவல்ஸ்ல இருந்து பேஜன்சர் நம்பருக்கு மெசேஜ் போட்டு உடனே கேட்டுருவோம்மா” என்றார்.

இதுவரை இப்படி எதுவும் துழாவிப் பழக்கம் இல்லாததால் சுத்தி வளைத்து விசயத்துக்கு வர நேர்ந்தது ஐடாவிற்கு. ஆனாலும் தான் தொடர்ந்ததை விடாமல், “அன்னைக்கு அந்த பஸ்ல வந்தவங்களோட காண்டாக்ட் லிஸ்ட் தந்தா அவங்கட்ட விசாரிக்க உதவியா இருக்கும்” என்று கூறிட, எதிர்முனையில் இருந்தவர் தயங்க,

“இது என் வாழ்க்கைப் பிரச்சனை.  புராஜெக்ட் விசயமா யுஎஸ் போக வேண்டியிருக்கு.  இன்னும் டென் டேஸ்ல கிளம்பணும். இப்ப அப்ளை பண்ணி வாங்க லேட் ஆகும்.  இவங்க யாராவது என்னோட பைல் வச்சிருந்தா எனக்கு வேலை ஈஸியா முடிஞ்சிரும்ல” என்றெல்லாம் ஐடா பேசினாள்.

அவரும் பாஸ்போர்ட் சார்ந்து பல கேள்விகளைக் கேட்டு ஐடாவை மடக்கினார்.  ஐடாவும் முதன் முறையாக திணறலோடு பதில் கூறி சமாளித்தாள்.

“என்னம்மா சொல்ற? பாஸ்போர்ட் தொலைஞ்சு இத்தனை வருசமா எப்டித் தெரியாம இருந்தது.  ஸ்டேசன்ல எதாவது கம்ப்ளைண்ட் கொடுத்தியா?” என்று விசாரித்தார்.

“அப்போ அந்த பைல்ல இருந்த சில சர்ட்டிபிகேட்ஸ் மட்டும் டூப்ளிகேட் அப்ளை பண்ணி வாங்கிட்டேன்.  பாஸ்போர்ட் அதுக்குள்ள வச்சிருந்ததே எனக்கு அப்போ நினைப்பில்ல.  அடுத்து வர்க் டென்சன், மேரேஜ்னு பிஸியானதுல பாக்காம விட்டுட்டேன்.  இப்போ ஆப்பர்சூனிட்டி வந்ததால தேடும்போதுதான் நினப்பு வருது” என்று சமாளித்தாள்.

அவரோ, “படிச்ச புள்ள இப்டியா கேர்லெஸ்ஸா இருப்ப” என்றுவிட்டு, “ஸ்டேசன்ல கம்ப்ளைண்ட் குடுத்து எஃப்ஐஆர் போட்டு, நான்ட்ரேசபிள் சர்ட்டிபிகேட் வாங்கி திரும்ப அப்ளை பண்ணும்மா” என்றார்.

“அதுக்கு இப்போ நேரம் குறைவா இருக்கறதால, முதல்ல அன்னைக்கு வந்த பேசன்சர்ஸ் யாருகிட்டயாவது என்னோட ஃபைல் இருக்கான்னு பாத்துட்டுத்தான் அப்ளை பண்ணணும்” என்றாள்.

அவளின் தேவை ஒன்றாக இருக்க, அவள் இப்படியெல்லாம் மாற்றிப்பேச அதிகம் தடுமாறினாள்.  அந்த தடுமாற்றத்தில் அவருக்கு என்ன தோன்றியதோ, “அப்டியெல்லாம் குடுக்கக் கூடாதேம்மா!” என்றார்.

“உங்களுக்கு இந்த வர்க்குக்கு என்ன செலவானாலும் டபுளா பே பண்ணிறேன்.  இல்லையா… உங்களோட ஒரு ட்ரிப்ல என்ன அமெளண்ட் வருமோ அதையே டபுளாத் தந்திறேன்” என்று கூறியதும், பணம் என்றால் யார்தான் முடியாது என்பார்கள். 

அவரும் உடனே, “இதை யாருக்கும் குடுக்கவே கூடாது.  எனக்கு ஒரு நாள் டைம் குடும்மா.  பாத்துட்டு சொல்றேன்” என்றவர் பாதி பணத்தை இப்போதே அனுப்பும்படி சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

ஐடாவும் அந்த தொகையை உடனே அனுப்ப யோசித்தவள், இதனால் வேலை இழுக்கும் என்று உணர்ந்து அவர் கூறிய அக்கவுண்டிற்கு அனுப்பிவிட்டு தனது செயலை எண்ணி வருந்தினாள். 

தனது இந்த மாற்றத்தை அவளாளலேயே சகிக்க முடியவில்லை.  ‘எப்டி ஸ்ட்ரைட் ஃபார்வார்டா எல்லா வேலையும் செய்திட்டு இருந்தேன்.  இப்படி ஒரு விசயத்தை நான் ஒரு வருசத்துக்கு முன்ன செய்வேன்னு யாராவது வந்து சொல்லியிருந்தா… நான் நம்பியிருப்பேனா?’ என்றெல்லாம் தோன்ற… அவள்மீதே வெறுத்து வந்தது.

          அடுத்து ஐடாவின் நினைவுகள் எங்கெங்கோ சென்றது. ஒன்றோடொன்று ஒப்பிட்டு அலசியது. பங்களூரில் தான் முதன் முதலாக பார்த்த ஆராதனா முதல் அன்றைய தினம் பார்த்த அனைத்து பெண்களையும்பற்றி முதலில் அறிந்துகொள்ள எண்ணி முடிவெடுத்தவள் அதற்கான பணியில் இறங்கினாள்.

          அதற்கு முன் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்த காலத்தில் ரீகனது பெர்ஃபாமென்சை அறிய முடிவெடுத்தாள்.

          ரீகனது அறையைவிட்டு வெளியேறி அதன் அருகிலேயே இருந்த தனது அறைக்குள் சென்று அவளின் கணினி டேபிளின் முன் அமர்ந்தவள், சற்று நேரம் எப்படி, என்ன செய்தால் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும் என யோசித்தாள்.

          யோசனைக்குப்பின் இதுவரை தனது பணிசார்ந்து செய்ததை முதன்முறையாக தன் சொந்த அலுவலுக்காக செய்திட முடிவெடுத்தாள்.

          ஐடாவின் நேர்மறை உணர்வு அவளைத் தடுத்தாலும், வேறு வழியின்றி, ‘இப்படி சந்தேகத்தோட இருக்கறதுக்கு உண்மை என்னான்னு தெரிஞ்சிட்டா நிம்மதியா இருக்கலாம்’ என்று தோன்ற சாதகமான பணிகளைத் தேடி அறிய தீர்மானித்துவிட்டாள்.

          கணினி தொலைநுட்ப அலுவலகப் பணிக்கான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரமிக்க பொறுப்பிலும் ஐடா இருப்பது அவளுக்கு மிகவும் வசதியாகிப் போயிற்று.

          அடுத்து தாங்கள் செய்ய இருக்கும் புது புராஜெக்டிற்காக திறமை வாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் அறிவிப்பின் கீழ் தென்னிந்திய முக்கிய நகரங்களில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்களை பரிந்துரைக்க வேண்டி நிர்வாக மேலிடத்திற்கு முறையாக மெயில் அனுப்பினாள்.

          இதில் எந்த அலுவலகமும் பணியாளர்களை ரெக்கமண்ட் செய்து அனுப்புவதில்லை.  தங்களின் முக்கிய வெப்சைட்டில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்ட அலுவலகப் பணியாளர்களின் ப்ரொஃபைல் லிங்கை மட்டும் குறிப்பிட்ட மணி நேரத்திற்கு அக்செஸ் செய்யும்படியாக திருத்தங்களைச் செய்து, ‘உங்களின் பணிக்குத் தேவையான அனுபவமும், திறமையும் வாய்ந்தவர்களை இதன் மூலம் நீங்களே தேர்வு செய்துவிட்டு, விசயத்தைத் தெரிவியுங்கள்’ எனும் மெயில் வழிச் செய்தியோடு கடமை முடிந்தது என்று ஒதுங்கிக்கொள்வர்.

          இது அரிதான நேரங்களில் நடைபெறுவது உண்டு.  திறமை வாய்ந்த நபர்களை மட்டும் ஒருங்கிணைத்து அந்த ஒரு புராஜெக்டிற்கு பயன்படுத்திக்கொண்டு அதன் வாயிலாக பெறக்கூடிய அடுத்து வரும் புராஜெக்டுகளின் தரத்தைப் பொறுத்து தங்களுக்குள் பிரித்து எடுத்துக்கொள்வதும் இங்கு மேல்மட்ட அளவில் நடக்கக்கூடியதுதான்.

          உடனே அத்தனையும் கைகளுக்குள் வராது. ஒவ்வொரு அலுவலக வெப்சைட்டும் ஒவ்வொரு மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.  சிலவற்றில் ஆட்டோமேடிக்.  அதில் ரெக்வஸ்ட் செய்தால் சில மணி நேரங்கள் கழித்தே அந்த மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

ஏதேனும் நிறுவனத்தில் இருந்து மெயில் வந்தமைக்கான நோட்டிஃபிகேசன் வந்திருக்கிறதா என்பதை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தாள் ஐடா.

ஐடா வேறு யாரையும் தனது குழப்பங்களுக்கான தீர்வைக் காண உதவும்படி நெருங்கவில்லை.  அதற்கான காரணம், தனது சந்தேகம் உண்மையாக இருக்கலாம்.  அல்லது அது தன் மனக்குழப்பமாகவும் போகலாம்.

அப்படியொரு நிலையில் தனது மனக்குழப்பத்தின் காரணமாக தனது கணவனை, தான் வாழும் குடும்பத்தின் மதிப்பை தனது செயலால் தரையிறக்கிவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கைதான்.

அப்படி தனது சந்தேகம் அனைத்தும் உண்மையாக இருந்தாலும், இந்த விசயங்களை தன்னால் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியுமா என்று யோசித்தவளுக்கு திக்குத்திசை தெரியாத புதிய பயணியின் நிலைதான் ஐடாவிற்கு.

முன்னிரவில் வந்த நோட்டிஃபிகேசனின் வழியாக தனக்குத் தேவையான நபர்களின் விபரங்கள் இருக்கிறதா என்று பார்த்தாள்.

அதில் அவளின் கண்ணில் அகப்பட்டது சில ஆண்டுகளுக்கு முன் பணியிலிருந்து சென்ற ராபர்ட் ரீகனின் ப்ரொஃபைல்.

ஆவலோடு என்பதைவிட ஆராய்ச்சி நோக்கோடு கணவனது தரவுகளை நோட்டமிட்டாள். அதில் இருந்த அவனது அனுபவங்களை வாசித்தபோது, ‘பேருக்கு நானும் வேலைக்குப் போறேன்னு மாச மாசம் சம்பளத்தை வாங்கிட்டு இருந்திருக்காரு’ என்றே யோசிக்கத் தோன்றியது ஐடாவிற்கு.

எந்த முக்கிய பொறுப்புகளிலும் இதுவரை பணியாற்றியிருக்கவில்லை.  கோடிங் ரிலேட்டட் வேலையில் இருந்ததாக அதில் தெரிவித்தது.  ஆனால் கொடுத்த பணியில் எந்த முறையீடோ, குறையோ சொல்லும்படியாக இல்லாமல் குறித்த நேரத்தில் பணி செய்து முடித்தமைக்கான அப்ரிசியேசன் மட்டும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது சிஸ்டத்தில் ப்ரொஃபைலில் இருந்த தரவுகளைக் குறிப்பு எடுத்துக்கொண்டாள். ஏனெனில் இந்த லிங்க் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மட்டும் பயன்படுத்த முடியும்படி மாற்றம் செய்யப்பட்டிருக்கும். 

அதற்குள் தனக்கு வேண்டியதை எடுத்து வைத்துக்கொண்டால் மட்டுமே தேவைப்படும்போது எடுத்து ஒப்பிட்டு நோக்க முடியும்.  அதனால் நேரம் அதிகமெடுத்தவற்றில் பிரிண்ட் ஸ்க்ரீன் போட்டு தனி பைலில் எடுத்து சேமித்து வைத்துக்கொண்டாள் ஐடா.

          அன்று இரவில் ரீகனது அறையில் ஐடாவைக் காணாமல் அவளைத் தேடி வந்தபோது, அவளுக்கான அறையில் கணினியின் முன் அமர்ந்திருந்தவளைப் பார்க்க நேரிட்டது.

          “ஹெல்த் இப்போ ஓக்கேவா ஹனி” என்று கேட்டவனிடம், தலையை ஆட்டி பதில் சொன்னாளே அன்றி வாயைத் திறக்கவில்லை.

          மனைவியின் தோள்தொட்டு வந்து நின்றவன், “சாப்பிடலாமா ஹனி” என்று வினவ, மறுத்துத் தலையசைத்தாள் ஐடா.

          இதுவரை ஐடா ரீகனிடம் இப்படியெல்லாம் நடந்துகொண்டதில்லை.  திருமணமான புதிதில்கூட இத்தனை ஒதுக்கத்தை அவளிடம் காணாதவனுக்கு முதன்முறையாக ஏதோ பெரிய வித்தியாசம் தன்னவளிடம் தோன்றத் துவங்கியது.

என்ன செய்தான் ரீகன்?

***