இளைப்பாற இதயம் தா!-19அ
இளைப்பாற இதயம் தா!-19அ
இளைப்பாற இதயம் தா!-19அ
ரீகனும், ரூபி பாட்டியும் இருக்கும்வரை அவர்களைக் கவனிக்க நினைத்து மற்றவற்றில் ஐடாவின் கவனம் செல்லவில்லை. ஆனால் விருந்தினர்களை கவனிக்க நினைத்தாலும் ஐடாவின் உடம்பு அதற்கு ஒத்துழைக்கவில்லை.
அதனால் பெரும்பாலும் ரீகனே ஐடாவிற்கு வேண்டியதையும், ரூபி பாட்டியின் தேவைகளையும் வந்தது முதல் கவனித்துக்கொள்ளும்படி நேர்ந்தது.
ஐடாவின் தாய் ஸ்டெல்லாவிற்கு இன்னும் உடல்நிலை முழுமையாகத் தேறி வந்திராத நிலையில் அவரைத் தொந்திரவு செய்ய வேண்டாமென்று ரூபி பாட்டியே அனைத்திற்கும் ரீகனை ஏவினார்.
“ரீகன்! ஐடாவை அலைய விடாத! ஸ்டெல்லாவுக்கும் இன்னும் குணமாகலை! அவளையும் தொந்திரவு பண்ணாத…! நீயே பாத்துக்கோ!” என்று பாட்டி சொன்னதை தட்டாமல் கேட்டான் ரீகன்.
சிறு வயது முதலே பாட்டி தாத்தாவுடன் வளர்ந்தவனுக்கு இது ஒன்றும் வித்தியாசமாகத் தோன்றியிராததால், இன்முகத்தோடே அனைத்தையும் செய்தான்.
ரீகனுக்கு ஐடாவின் அருகே வளைய வருவதே சந்தோசமாகத்தான் இருந்தது. பாட்டியின் முன்போ, அவளின் வீட்டாரின் முன்போ ரீகனை தவிர்க்கவோ, வார்த்தைகளால் காயப்படுத்தவோ ஐடாவால் முடியவில்லை.
“ஹனி… ஸ்பூன் வச்சி இத்தணுன்டு இத்தணுன்டா எடுத்து வாயில வச்சு… எப்ப சாப்பிட்டு முடிப்ப… அதுக்குத்தான் நான் ஊட்டி விடறேன்னு சொல்றேன்!” என்று உணவூட்டிவிட முன்வந்தான். ஐடா மறுத்தாலும் விடவில்லை.
அவள் மறுக்கும்போது, “வேலையே பாக்காம போர் அடிக்குது ஹனி. பெரிய வேலையெல்லாம் பாக்க எங்கூட உன்னால இப்பல்லாம் சப்போர்ட் பண்ண முடியாது” என்று கள்ளச் சிரிப்பு சிரித்தவன் எதனைச் சொல்கிறான் என்று தெரியாமல் இருக்க ஐடா இன்னும் சிறு பிள்ளை அல்லவே!
சிடுசிடு என முகத்தை வைத்துக்கொண்டு, “இந்த மாதிரி இனி பேசினா இந்த ரூமுக்குள்ளயே விடமாட்டேன்!” என்று எச்சரித்தவளிடம்,
“அதுக்குத்தான்… இந்த வேலையாவது பாக்கலாமேன்னு வந்தேன்!” என்று தட்டையும் அதிலிருந்து கையில் எடுத்து வைத்திருந்த உணவையும் ஐடாவிடம் பாவம்போல முகத்தை வைத்துக் காட்டி, “அதுக்கும் நீ விட மாட்டிங்கற!” என்றவனை முறைக்க மட்டுமே ஐடாவால் முடிந்தது.
பாட்டி அருகே இருந்தாலும் ரீகனது அலும்புகள் தொடர்ந்தது. அவருக்கு இருவரின் ஊடலும் ஒரு முடிவுக்கு வந்து கூடல் எனும் செய்தியை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தார். அப்படி இருப்பவருக்கு இந்த சம்பாசனைகள் ஒன்றுமில்லை என்பதுபோல கண்டும் காணாததுபோல இருந்தார்.
பாட்டியும், கணவனும் உடனிருந்ததால் ஐடாவாலும் தாயிடம் தனித்துப்பேச நேரம் அமையவில்லை. ஸ்டெல்லாவிற்கு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. மகள் எதற்கு தனியாக புறப்பட்டு வந்தாள் என்று.
ரீகன் அதையும் பேச்சோடு ஒரு முறை சொன்னதால்தான் ஸ்டெல்லாவிற்கு தெரிய வந்திருந்தது.
மருத்துவமனையிலேயே ஐடாவைத் தாங்கியவன், அவளின் வீட்டில் அதற்கு ஒருபடி மேலே தாங்கினான். ஸ்டெல்லாவிற்கு மருமகன் மகளைக் கருத்தாகக் கவனிப்பதைக் கண்டு ஆனந்தமே!
பாட்டியும் பேரனும் அன்று ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்த தருணம். அப்போது ஐடாவின் தந்தை ஸ்டெல்லாவிடம், “ஆபீஸ்கு நேரமாகுது. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கோபத்தோடு சத்தமாகக் கேட்டதும், அடுக்களைப் புறம் சென்று ஸ்டெல்லா தயாரித்து வைத்திருந்த காலை ஆகாரத்தை எடுத்து வந்து மாமனாரிடம் கொடுக்க விரைந்தான் ரீகன்.
அதனைக் கண்டு ஸ்டெல்லா பதற அதனை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளாமல், “ஆண்ட்டி உங்க ஹெல்த் இஸ்யூவோட இவ்ளோ தூரம் நீங்க எல்லாத்தையும் பாக்கறது கஷ்டம். நான் செய்தது சின்ன உதவிதான. இதுக்கு ஏன் நீங்க இவ்ளோ பதறுறீங்க!” என்று சமாதானம் செய்துவிட்டு அகன்றிருந்தான்.
அறைக்குள் இருந்தாலும் ஐடாவிற்கு அனைத்தும் தெரிய வந்தது. ஆனால் தந்தையின் இந்தப் போக்கு அவளுக்கு இத்தனை வருடங்களாகப் பெரியதாகத் தோன்றியிருக்கவில்லை.
அதாவது ரீகனின் வீட்டிற்கு வாழச் செல்வதற்கு முன்புவரை சாதாரணமாகத் தோன்றிய விசயம் ஐடாவிற்கு தற்போது அசாதாரணமாகத் தோன்றத் துவங்கியிருந்தது.
வந்தது முதலே கவனித்துக்கொண்டுதான் இருந்தாள் ஐடா. ‘இது ஏன் இங்க கிடக்கு. வீடு வீடாவே இல்லை’ இப்படி தாயின் மீதான குற்றச்சாட்டுகள் திணிக்கப்பட்டதே அன்றி, சிறு துரும்பையும நகர்த்தி வைக்கும் முயற்சி தந்தையிடம் இல்லை என்பதைக் கண்கூடாகக் காண நேர்ந்தது.
தந்தைக்கு சாதம் ரெடி செய்து இரவு காத்திருந்தால், “எனக்கு சோறு வேணாம். தோசை ஊத்து” என்றார்.
“தோசை ஊத்திருக்கேன். வாங்க சாப்பிடுங்க” என்று அழைத்தால், “சோறு வைக்கலையா. டெய்லி தோசை எப்டி சாப்பிட முடியும்?” என்று கேட்டார் ஆல்வின்.
“வெளிய ஹோட்டல்ல வாங்கிட்டு வரவா ஆண்ட்டி?” என்று கிளம்பிய மருமகனைத் தடுத்து, “அவரு வெளி சாப்பாடு சாப்பிட மாட்டாரு” என்று அதன்பின் அவருக்கு சாதம் வடித்து சாப்பிட வைத்த ஸ்டெல்லாவின் நிலையைக் கண்டு ஐடாவிற்கு மட்டுமல்லாது ரீகன், ரூபி இருவருக்குமே வருத்தமே.
‘ஆபீஸ்ல பத்து மணிக்கு இருக்கணும்னா வீட்டுல ஒன்பது மணிக்காவது கிளம்பினாத்தான் சரியான நேரத்துக்குள்ள போக முடியும். இப்படி லேட் பண்ணிட்டே இருந்தா என்ன ஸ்டெல்லா அர்த்தம்?’ என்பது போன்ற சத்தங்கள் விருந்தினர்கள் அதாவது தன் புகுந்த வீட்டார் முன்பாகவே நடந்ததை ஐடாவால் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
தற்போது தாய் உடல்நிலைக் குறைபாட்டோடு அல்லாடுவது புரிந்தும் தந்தை ஏன் இத்தனை கடுமையாக தாயிடம் நடந்துகொள்கிறார் என்று மனதிற்குள் அதுவரை புழுங்கிக் கொண்டிருந்தவள் தற்போது கணவன் செய்த செயலால் அவன் மீது நன்மதிப்பு உண்டானாலும் அதனைக் காட்டிக்கொள்ளாமல் அவளால் தாயிக்கு எந்த உதவியும் செய்ய முடியாத வருத்தத்தோடு இருந்தாள்.
திருமணத்திற்கு முன்புவரை வீட்டில் இருந்தபோது தோன்றியிராத விசயங்கள் எல்லாம் தற்போது ஐடாவிற்கு பூதகரமாகத் தோன்றத் துவங்கியிருந்தது.
திருமணத்திற்குப்பின் கணவனோடு அவ்வப்போது வந்து சென்ற போதெல்லாம் கவனித்திராத விசயங்கள் இப்போது கவனத்திற்கு வந்தது.
தாய் ஸ்டெல்லா வீட்டைக் கவனித்துக்கொண்டு பணிக்கும் சென்று வந்த காலங்களில் ஐடா ஓரளவு அவருக்கு உதவியிருக்கிறாள். ஐடா இல்லாத நேரங்களில் ஸ்டெல்லா தனியாகவே அனைத்தையும் பார்ப்பார் என்பதால் ஐடா பணிக்குச் சென்றபின், ‘தனியா எல்லா வேலையும் செய்ய கஷ்டமா இருக்குமே அம்மா. மெய்ட் வச்சிட்டா உங்களுக்கு சப்போர்ட்டா இருக்குமே’ என்று கூறிய தருணங்களில் எல்லாம், ‘ரெண்டு பேருக்குதான ஐடா. அதெல்லாம் நான் சமாளிச்சுக்குவேன்’ என்று அனைத்தையும் ஒருவராகவே சமாளித்து வந்த தாயிக்கு தற்போது உடல்நிலை ஒத்துழைக்காததை கண்கூடாகக் காண நேர்ந்த சமயம்.
ஆனால், தனியொருவராக இயலாமையோடு ஸ்டெல்லா அடுக்களையிலும், இதர பணிகளிலும் ஈடுபடுவதைப் பார்த்து ஐடா உதவ முன்வந்தாலும் ரீகன் விட மறுத்தான்.
“உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதை எங்கிட்ட சொல்லு. நான் பாத்துக்கறேன். நீ இன்னும் ஒரு வாரம் நல்ல ரெஸ்ட்ல இருக்கணும்னுதான இங்க கொண்டு வந்து விடச் சொன்ன… இப்ப இப்படிப் பண்ணா என்ன அர்த்தம்!” என்று மனைவியின் முயற்சிக்கு தடை விதித்தான்.
ஸ்டெல்லாவிற்கும் மகளின் நிலையைக் கண்டு அவளை அமர வைத்துப் பார்க்க தன் உடல் ஒத்துழைக்கவில்லையே என்கிற வருத்தம்.
இப்படி ஒருவரை மற்றொருவர் எண்ணி வருந்த யாருக்கோ வந்தது நமக்கென்ன என்பதுபோல ஐடாவின் தந்தை ஆல்வின் இருந்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதிலும் தாயை எதாவது குறை சொல்வதும், வசை பாடுவதுமாக இருந்த தந்தை அவளுக்கு வித்தியாசமாகத் தெரியத் துவங்கியிருந்தார். இத்தனை வருடங்கள் அப்படி இருந்தவர்தான். இங்கு இருந்தவரை அவருடைய நமுப்புகளை எளிதாகக் கடந்து போனவளுக்கு தற்போது அவரின் அதே செயல்கள் முகச் சுழிப்பையும், அவரிடமிருந்து மன ஒதுக்கத்தையும் உண்டு செய்தது.
‘அம்மா இவ்ளோ முடியாம இருக்கும்போது… இவருக்கு இப்ப என்னவாம். எதுக்கெடுத்தாலும் நொட்டை சொல்லிட்டே இருந்தா வீடு க்ளீனா மாறிடுமா? எதாவது ஹெல்ப் பண்ணா குறைஞ்சா போயிருவார்?’ என்று எண்ணத்தான் அவளால் முடிந்ததே அன்றி அவரிடம் வந்தவர்கள் முன் எதுவும் சொல்ல முடியவில்லை. இதுவரை அப்படி தந்தையிடம் பேசிப் பழகியிராததால் அதற்கு தகுந்த சமயம் பார்த்து காத்திருந்ததால் அது அமையாமலேயே போனது.
காலை எழும் முன்பே துவங்கும் தந்தையின் பிரசங்கம் இரவு படுக்கும்வரை தொடர்ந்தது. ஐடாவிற்கு தாயிடம் தந்தையைப் பற்றிப் பேசக்கூட தயக்கம். அவளுக்குத் தோன்றியதைத் தாயிடம் கேட்க நினைத்தாலும் தைரியம் இருந்தாலும் முடியவில்லை. எப்படி இப்படிப்பட்ட ஒருவருடன் இத்தனை ஆண்டுகள் தாய் வாழ்ந்திருப்பார் என்று ஆச்சர்யமாகத் தோன்றியது ஐடாவிற்கு.
வேலைக்குச் சென்று வருவதைத் தவிர தாய் சொன்னால் எதாவது வாங்கி வந்து தருவார் என்பதைத் தவிர பெரிய பொறுப்புகள் எதுவும் தந்தைக்கு இதுவரை இருந்தது கிடையாது. அப்படி இருக்க தனியொருவராக தாய் இத்தனை ஆண்டுகள் வீட்டையும், தன்னையும் கவனித்துக்கொண்டு பணிக்கும் எப்படிச் சென்று வந்திருப்பார் என எண்ணவே ஆயாசமாக இருந்தது ஐடாவிற்கு.
இதுவரை தன் கவனத்தில் வந்திராத இந்த விசயங்கள் அனைத்தும் தற்போது பெரும் பூதகரமாகத் தோன்றுவதற்குக் காரணம் என்னவென்பதையும் தீவிர சிந்தனைக்குப்பின் அவளால் உணர முடிந்தது.
ஐடா திருமணம் முடிந்து சென்றது முதலே ரீகன் வீட்டில் குறிப்பாக தனியாக சென்னையில் வந்தது முதலே பாட்டியும், ரீகனும் அவளைத் தாங்குவதும்… அவளின் உடல்நலன் மட்டுமல்லாது அனைத்திலும் ரீகன் அக்கறை எடுத்துக்கொள்வதும் என்று சென்ற நாள்கள் அவளின் மனதில் வந்து போனது.
ஐடா அவளாகவே விரும்பி இழுத்துச் செய்யும் வேலைகளின்போது ரீகன் வீட்டில் இருந்தால் வேலைக்காரர் உதவி இருந்தாலும், அவனும் அவளோடு அடுக்களையில் வந்து அவளுக்கு உதவுகிறேன் என்கிற பெயரில் எதையாவது செய்துகொண்டு அவளோடு அளவளாவிக் கொண்டு அங்கே நிற்பதை நினைவு கூர்ந்தவளுக்கு, ‘இந்த அப்பா ஏனிப்படி இருக்கார்?’ என்று தோன்றியது.
அதை தாயிடம் மிகத் தயங்கி கேட்டபோது சிரித்த ஸ்டெல்லா, “அவர் எப்பவுமே அப்படித்தானே ஐடா. திடீர்னு என்னன்னவோ கேக்கற?” என்று சிரித்தாரே அன்றி தந்தையின் இந்தப் போக்கை வருத்தத்தோடு இயம்பமோ, அவரைக் குறை சொல்லவோ இல்லை என்பதையும் ஐடா கவனித்தாள்.
“எப்படிம்மா… அப்பா எப்பப் பாத்தாலும் எதாவது உங்களை குறை சொல்லிட்டே இருக்காங்க… உங்களுக்கு கோபம் வராதா?” என்றாள்.
“வீடு நல்லா இருக்கணும்னுதானே சொல்றார். இதுக்கு ஏன் கோபப்படணும். நல்லா வச்சிட்டா அவர் ஏன் சொல்லப் போறார்.” சாதாரணமாகக் கூறிவிட்டுக் கடந்த தாய் தெய்வமாகத் தோன்றினார் ஐடாவிற்கு. தாயை நினைத்து மலைப்பாகவும், தந்தையை நினைத்து களைப்பாகவும் உணர்ந்தாள்.
“அவங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ணலைன்னாலும், நீங்க அவங்கட்ட ஹெல்ப் கேக்கலாமில்லையா?” தாயிடம் மகள் வினவ,
“ஓஹ் கேக்கலாமே… அதுக்கும் எதாவது சொல்லுவார். பரவாயில்லையா?” என்று அதே புன்சிரிப்போடு கேட்ட தாயை பார்த்து ஐடாவிற்கு பொறுமை போனது.
“ரெண்டு பேரும் வேலைக்குப் போகும்போது ஆளுக்கொரு வேலை செய்தா… ஒருத்தவங்களுக்கே வேலை பொறுக்காதில்லையா… அவங்களையும் ஒத்தாசைக்குக் கூப்பிடுங்கம்மா” என்று ஐடா விடாமல் உரைக்க,
“இப்பவே இந்தப் பேச்சு பேசறாருங்கறே… இதை வேற கேட்டா… அப்புறம் அவ்ளோதான்!” என்று அதனை தனது செய்கையில் மறுத்தார் ஸ்டெல்லா.
“ஏன்? பொண்ணுங்கதான் எல்லாமே செய்யணும்னு இருக்கா?”
ஐடாவின் இதுபோன்ற முறையிலான பேச்சுகள் ஸ்டெல்லாவிற்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. “எப்பவும் இப்படியெல்லாம் யோசிக்க மாட்டியே ஐடா. இப்ப என்ன புதுசா இப்படியெல்லாம் கேக்க ஆரம்பிச்சிட்ட?”
“தப்பா ஒன்னும் நான் கேக்கலையேம்மா… முன்ன காலத்துல ஆண்கள் வேலைக்குப் போனாங்க… வீட்டுப் பொறுப்பை எல்லாம் பெண்கள் பாத்திட்டாங்க. ஆனா இப்போ பெண்கள் இரண்டையும் பாத்துக்கணும்னா எப்டிம்மா?”
“இது நாமளா இழுத்து வச்சிட்டது ஐடா. அவங்க நம்மளை வேலைக்குப் போயி சம்பாரிச்சுட்டு வானு சொல்றதுக்கு முன்னயே நாம வேலைல இருந்தோம். அத விட மனசில்ல. அப்போ இழுத்து வச்சிட்ட நாமதான அதுக்குப் பொறுப்பு” என்று ஸ்டெல்லா உரைக்க,
“அப்ப நீங்க வீஆர்எஸ் கொடுத்துட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானம்மா” பொறுப்பாகக் கேட்ட மகளைப் பார்த்துச் சிரித்தார் ஸ்டெல்லா.
பிறகு, “எடுக்கலாம்…” என்று இழுத்தவர், “ஆனா உடம்பு குணமாகற வரை நீ சொல்றது சரிதான். ஆனா அதுக்குப்பின்ன வீட்ல தனியா பகல் முழுவதும் இருந்து பொழுதை நெட்டித்தள்ளணும்ல!”
“ரிட்டையர் ஆகிட்டா அப்டித்தான இருந்தாகணும்” மகளும் விடாப்பிடியாக நடப்பைப் பேச,
“அப்ப வேற வழியில்லை. இப்ப அதுக்குள்ள ஏன் வீட்டுக்குள்ள முடங்கணும்!”
“போங்கம்மா… உங்களை நினைச்சு நான் வருத்தப்பட்டுச் சொன்னா… எதாவது சாக்கு சொல்லிட்டு… கஷ்டத்தை இழுத்து வச்சிக்கறீங்க” என்று மனம் பொறுக்காமல் தாயிடம் பேசினாள் ஐடா.
மகள் தனித்து தேவகோட்டை கிளம்பி வந்தபோதுதான் விபத்தில் சிக்கிக்கொண்டாள் என்பதை ரீகன் சாதாரணமாகச் சொல்லியபோது அறிய நேர்ந்தது முதலே மகளை தான் அழைத்தபோது வரமாட்டேன் என்று கூறியது நினைப்பில் வர, ‘அப்படி என்ன தலை போகின்ற காரியம்னு பஸ்ல தனியா கிளம்பி வந்தா… அவங்க வீட்லயும் இவளை இதுவரை தனியா வர விட்டதில்லை. அதையும் மீறி எப்டித் தனியா கிளம்பி வந்திருப்பா… அப்டி என்ன அங்க நடந்திருக்கும்!’ எனும் யோசனை ஸ்டெல்லாவின் மனதிற்குள் இருந்துகொண்டே இருந்தது.
மகளின் தற்போதைய பெண்ணாதிக்கப் பேச்சை திசைமாற்ற எண்ணி, “ஐடா… என்ன விசயமா இங்க வரணும்னு தனியா கிளம்பி வந்த?” என்று கேட்டார்.
தாயிடம் என்ன கூறினாள் ஐடா?
***