இளைப்பாற இதயம் தா!-2A
ரூபி மற்றும் அவரது மருமகள் சீலியின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு இருந்த ஐடாவை மணமகன் ரீகனுக்கும் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் பெரியவர்கள் இருவருக்கும் இல்லாமல் போயிருந்தது.
சீலிக்கு நல்ல படித்த, அதிகம் வரதட்சணையாக பொன்னும் பொருளும் ஆஸ்தியும் இவர்கள் கேளாமலேயே தரக்கூடிய குடும்பத்திலிருந்து அழகான மருமகள் வரவேண்டும் என்பது மட்டுமே எதிர்பார்ப்பாக இருந்தது.
“இந்தப் பொண்ணு பாக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா இவங்க வீட்டுல சொல்லிக்கற அளவுக்கு எதுவுமில்லை. நாம நம்ம வசதிக்கு ஈக்வலா பாக்கலைன்னாலும், நம்ம சொந்தக்காரவங்க இளக்காரமாப் பாக்கற வகையில இருக்கற பொண்ணை எடுக்க வேண்டாம்னு பாக்கறேன்” எனும் உண்மையைப் பகீரங்கமாக ஒப்புக்கொண்டே இருந்தார்.
இப்படி பல பெண்களை அப்புறப்படுத்தியிருந்தார். தனது மகள்களுக்கு இன்றுவரை எதிலும் குறையில்லாமல் செய்து கொண்டிருக்கக்கூடியவர்தான். இனியும் மகள்களுக்கு செய்யும் முயற்சியில்தான் அவரது எண்ணங்கள் இருக்கிறது.
முதல் முயற்சியாக மூத்த மருமகளை அப்படித்தான் எடுத்திருந்தார். இன்றுவரை மூத்த மகனுக்கு சில கோடிகளில் சொத்து, பொருள் மற்றும் ஆபரணமாக மருமகளின் குடும்பம் வழியாக சேர்த்துக் கொடுத்திருந்தார்.
அதேபோல இளைய மகனுக்கும் எதிர்பார்த்தார். அண்ணனது மகள்களை அதனால்தான் மாமியாரை காரணம் சொல்லி மறுத்திருந்தார். ‘அங்க எனக்கு எந்த முடிவு எடுக்கற உரிமையும் இல்லைண்ணா. உனக்கே தெரியும். அதுனால நீ என்னை நம்பாத. வேற எங்காவது நல்ல இடமாப் பாத்துக் குடுத்திரு’ என்று நீலிக் கண்ணீர் விட்டு நம்ப வைக்க முயன்றார்.
சீலியின் அண்ணிக்குத் தெரியும். இது அத்தனையும் நடிப்பு என்று. ஆனால் அவர் சொன்னால் சீலியின் அண்ணன் நம்ப வேண்டுமே!
அதேநேரம் ரூபி பாட்டிக்கு பேரனது ஆடம்பர மற்றும் அலட்டலான அலட்சிய செய்கைகளுக்கு ஈடுகொடுத்து அனுசரித்துப் போகக்கூடிய, எந்த நிலையிலும் பொறுமையோடு குடும்ப உறவை நீண்ட காலம் எந்தவித தொய்வின்றி எடுத்துச் செல்லும் பெண்ணாகத் தேடினார்.
“அவனுக்கு ஃப்ரண்டா இருக்கறவளுங்களையே நல்ல நிறமா, அறிவா, வசதியா இருக்கணும்னு நினைப்பான். அதே காம்பினேசனோட அவ பொறுமையானவளா, எதையும் அனுசரிச்சுப் போறவளா, சட்டுனு எதையும் பெரிசுபடுத்தாதவளா, பேரனுக்கு மட்டுமில்லாம உறவுகளுக்கு உண்மையானவளா, குடும்பத்தோட உயிரோட்டமா தன்னை ஈடுபடுத்திக்க நினைக்கிறவளை எம்பேரனுக்குப் பாக்கறேன்” என்று ரூபி பேரனுக்கான பேத்தியைத் தேடினார்.
பேரனது ரசனைகள் பற்றியெல்லாம் ரூபிக்கு நன்றாகவே தெரியும். கல்லூரி படிப்பு முடியும்வரை ரசனை என்றளவில் மட்டுமே இருந்தது. அத்தனையையும் மறைக்காமல் பாட்டியிடம் ஒளிவு மறைவின்றி சொல்லி வளர்ந்தவன்தான். ரசனை அடுத்த கட்டத்திற்குச் சென்றதும் அதன்பின் எப்போது எந்த மாதிரியான சூழலில் பேரன் மாறினான் என்பதும் பாட்டிக்கு தெரிந்தே இருந்தது.
ரீகனுக்கு தனது உருவத்தின் மீதும், அவனது பணத்தின் மீதும் அதிக கர்வம். தன்னை எந்தப் பெண்ணும் நிராகரிக்கவே செய்ய மாட்டார்கள். அத்தனை ஈர்ப்பும் ஆர்வமும் தோன்றக்கூடிய வகையிலான தோற்ற அமைப்பும் தனக்குண்டு என்கிற எண்ணம் கர்வமாக ரீகனுக்குள் இருந்தது.
‘எந்தப் பொண்ணா இருந்தாலும் என்னையவோ, என்னோட அந்தஸ்தையோ பாத்திட்டு வேணானு சொல்ல மாட்டா! அந்த ஒருத்தி என்னோட பாட்டியோடு ஆசைக்காகவும், என்னோட தேவைகளை தீக்கறதுக்காகவும், என்னோட வாரிசுகளை பெத்து வளக்கவும் என் வீட்டுல இருந்தாப் போதும்’ என்பதுபோல ரீகனின் எண்ணமிருந்தது.
இத்தனை தகிடுதித்தம் செய்தாலும், தன்னோடு சல்லாபிக்கும் பெண்களை தனது வீட்டிற்கு மருமகளாக்கும் எண்ணம் மட்டும் ரீகனுக்குள் தோன்றவே செய்ததில்லை.
அதற்கும் வலுவான காரணமிருந்தது. ‘என்னைவிட பெட்டரா எவனையாவது பாத்தாளுங்கன்னா எனக்கு பெப்பேனு டாட்டா காட்டிருவா’ என்பதே அது.
‘அப்டி வரவங்களையெல்லாம் வீட்டுக்கு கூட்டிவந்தா பாட்டி என்னையும் சேத்து விரட்டிருவாங்க’ என்பதும் அவனுக்குத் தெளிவே. பாட்டி மீது பயமில்லாதபோதும் மரியாதை இருந்தது. அதனால் அவருக்குப் பிடிக்காததை மறைமுகமாகச் செய்தாலும் அளவோடு இலை மறை காயாக செய்து பழகியிருந்தான்.
எந்தப் பெண்ணையும் இதுவரை அவன் நாடிச் சென்று அவனோடுடனான உறவை நீட்டிப்பு செய்ய அவன் அணுகாமலேயே அவனோடு பழக போட்டி போட்ட பெண்களைப் பார்த்தே பழகிப் போனவனுக்கு பெண்கள் மீது பெரிய அளவில் மரியாதையோ அன்போ கனிவோ காதலோ வேறு எந்த இதமான உணர்வோ தோன்றியதில்லை.
அவன் ஆத்மார்த்தமாக அன்பு செலுத்தக்கூடிய ஒரே ஒரு பெண் அவனது பாட்டி ரூபி மட்டுமே. அதற்கான காரணம் அவன் பிறந்ததும் கையில் ஏந்திக்கொண்டதோடு அவனை இத்தனை தூரம் சீராட்டி பாராட்டி வளர்த்த பெருமை அனைத்துமே அவரைச் சார்ந்தே இருந்தமையால் ஒருவேளை இருக்கலாம். சிறுவயது முதலே பாட்டியோடு இருந்த ஒட்டுதல் தாயிடம் இல்லாமல் போயிருந்தது.
ரீகன் பிறந்த இரண்டே மாதத்தில் அவனது தாய் அடுத்த குழந்தையை கருவுற்றதாலும், அவனுக்கு ஒரு வயதாகும்போது தங்கை பிறந்த விட்டதாலும் சீலியால் மகனைச் சீராட்ட முடியாமல் போயிருந்தது. அதனால் தாயிடம்கூட சற்று தள்ளியிருந்தே பழகியிருந்தான்.
பெண்கள் போகப் பொருளாகவே அவனது பார்வையில் இருந்தனர். அவன் சந்தித்த பெண்கள் பெரும்பாலும் அவனது பணத்தை குறியாக வைத்தும், அவனிடம் கிடைக்கும் சுகத்திற்கான மூலமே அவனது வலுவான தேகம் என்றும் அவனிடமே நேரில் சொல்லிப் பழகியிருந்தமையால் பெண் சமூகத்தைப் பற்றிய அவனது கருத்தும் அப்படி மாறியிருந்தது.
ரூபி பெண்களைப் பற்றி எத்தனை உயர்வாகக் கூறினாலும் அப்போது காது கொடுத்துக் கேட்டுக்கொள்வானே அன்றி, அவர் கூறுவதை நம்ப அவனது அனுபவங்கள் முன்வந்து மறுத்தது.
ரூபிக்கு அவன் பழகும் பெண்களில் யாரையேனும் ஒருத்தியை இழுத்து வந்து ‘இவள்தான் என் மனைவி’ என்று பேரன் சொல்லிவிடுவானோ என்கிற பயம் ஆரம்பத்தில் இருந்தது.
ஆனால் இதுவரை அப்படி எந்த ஒரே பெண்ணுடனும் அவன் தனது உறவை நட்பாகக்கூட நீட்டித்திராத நிலையில் அவருக்கு நிம்மதியே. அப்படி அவனோடு நெருக்கமாக இருந்தவர்களுக்கு பணத்தை தண்ணீராக செலவளித்திருந்தான். அதற்குமேல் அவர்கள் அவனை வேறு மாதிரியான எதிர்பார்ப்போடு நெருக்கினால் அவர்களை தவிர்ப்பான்.
மீறி அவனிடம் வந்து விளக்கம் கேட்டால், “ரெண்டு பேருக்கும் அப்டி இருக்க தோணுச்சு இருந்தோம். அதுக்காக காதல் அது இதுனு பொய் சொல்லி என்னால அதை கண்ட்டினியூ பண்ண முடியாது. ஏன்னா… அது லஸ்ட் மட்டுந்தான். அதுல லவ்வில்லை” என்று கூறிவிடுவான்.
இப்படி அவனது சுயரூபம் தெரிந்து அவனோடு நெருங்கும் பெண்களை பாதிக்கப்பட்டவர்கள் எச்சரித்தாலும் அவன் மீதான மயக்கத்தில் முதலில் சட்டை செய்யாமல் படுகுழியில் விழுந்து எழுந்த பின்பே புலம்புவர்.
அவனது ராசி அப்படி இருந்தது. நாசூக்காக கையாள்வான். தனக்கே பிரச்சனை வரக்கூடும் என்று கணித்தானானால் சட்டெனக் கழண்டு கொள்வான்.
அதனால் இதுவரை எந்தப் பெரிய பிரச்சனையிலும் மாட்டிக் கொண்டதில்லை. அதுவே அவனுக்கு இந்த விசயத்தில் ஒரு அசட்டு தைரியத்தைத் தந்திருந்தது.
கிரேஸ் ஐடாவின் புகைப்படத்தை வாட்சப்பில் பேரனுக்கு அனுப்பி பெண்ணைப் பிடித்திருக்கிறதா என்று ரூபி கேட்டபோது, “நீங்க சொல்றதால எந்தப் பொண்ணுனாலும் கல்யாணம் பண்ணிப்பேன் பாட்டி” என்று சொன்னானே அன்றி, மற்றபடி பெரியளவில் ஐடாவைக் காண ஆர்வம் காட்டவில்லை. கிளம்பி வரும்வரை பார்க்கவுமில்லை.
பேரனது இந்த வார்த்தையில் பாட்டிக்கு பெருமைதான்!
ஐடாவைவிட வனப்பும் வாலிபத்து செழிப்பும் மிகுந்த பெண்களோடு அவன் நெருங்கிப் பழகியிருந்தமையால் அவளது படத்தைக் காண்பதில் அக்கறை காட்டவில்லை ரீகன்.
ஐடாவின் பணமோ, படிப்போ, அந்தஸ்தோ எதையும் கண்டுகொண்டானில்லை. அவனைப் பொறுத்தவரை அவனது தேவைக்காக இதுவரை தன்னை நாடி வந்த பெண்களை மோகித்தவன், இனி மனைவி என்கிற பெயரில் வீட்டிலிருக்கப் போகும் பெண்ணிடம் தனது தேவைகளைத் துய்த்துக் கொள்ளலாம் என்கிற அளவில் மட்டுமே எண்ணியிருந்தான்.
மனைவி என்றொரு பெண் வந்தபின்பும் அவள் மட்டுமே கதி என்று அவளோடு மட்டுமே இருப்பேன் என்கிற எந்த கட்டுப்பாடோ, எண்ணமோ அல்லது உறுதியோ இன்றி இதைப்பற்றிய ஆழமான சிந்தனை எதுவுமின்றி மேம்போக்காக இருந்தான்.
ரூபி தன்னையும், தங்களின் குடும்பத்தில் உள்ள பெண்களின் சகிப்புத்தன்மை தியாகம் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துச் சொன்னாலும், அதனை சாதாரணமாகக் கேட்டுக் கொள்வதோடு அந்த இடத்திலேயே அதைப்பற்றி மறந்துவிடுவான் ரீகன்.
படித்து முடித்ததும் பணிக்குச் சென்றிருந்தவன், வேலை நேரம்போக மற்ற நேரங்களில் நண்பர்களோடு ஊர் சுற்றுவதைக் காட்டிலும் அவர்களைக் கழட்டிவிட்டு பெண்களோடு சல்லாபம் செய்ய ஆர்வமாக இருந்தான். அப்படி இருந்தவனை அவனது தந்தையின் மரணம் சிறிதளவு திசைமாறச் செய்திருந்தது.
தந்தையின் மரணத்தோடு தந்தை வழிப் பாட்டியான ரூபியின் பொறுமையோடுடனான கனிவான பேச்சு ரீகனைத் தேங்கச் செய்து, அதன்பின் தொழிலில் கவனத்தைச் செலுத்தத் தூண்டியிருந்தது.
முதன் முதலில் அவனுக்கு செலவிற்கு கொடுக்கப்பட்டு வந்த பணத்தை திட்டமிட்டே மறுத்திருந்தார்.
“உங்க அப்பா சம்பாதிக்கற வரை கொடுத்தான். இப்ப அங்க கொடுக்க என்ன இருக்குனு போயி பாரு. அப்புறம் என்ன செய்யலாம்னு முடிவெடு” என்றிருந்தார்.
தொழில் முறைகளைப் பற்றி மேலோட்டமாக அறிந்திருந்தாலும், அதனை நஷ்டமில்லாமல் நிர்வாகிக்க அறிவு போதுமானதாக இல்லை. ஆகையினால் முதலில் அதிக நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தொழிலில் நஷ்டம் என்று வந்தது முதலே உல்லாச களியாட்டங்களை அவனாகவே குறைத்துக் கொண்டிருந்தான். அதன்பின் தொழில் சார்ந்த விசயங்களில் கவனம் செல்லச் செல்ல பணத்தின்பின்னே அதிகம் ஓடத் துவங்கியிருந்தான். அதற்காக சல்லாபத்தை மறந்து மொத்தமாக ஒதுக்கிவிட்டான் என்றில்லை.
பணம் எத்தனை பிராயச்சித்தம் செய்தபின் கையிக்கு வருகிறது என்பதை கண்கூடாகக் கண்டு கொண்டதால் முன்போல தண்ணீராக பணத்தை விரயம் செய்ய ரீகனுக்கு மனம் வரவில்லை.
ஒரு இடத்தில் பணியில் இருப்பதைக் காட்டிலும், சொந்தத் தொழில் என்றதும் அதன் கஷ்ட நஷ்டங்கள் தெரிய வர அதிலிருந்தே தன்னை மாற்றிக்கொள்ள அவனாகவே முன்வந்திருந்தான்.
பதினைந்து நாள்களில் ஒரு முறையோ, அல்லது இருபது நாள்களில் ஒரு முறையோ வெளியே சென்று தன்னை புதுப்பித்துக்கொள்ளும் முயற்சியாக இன்னும் பழைய கதைகள் அவ்வப்போது அவனது பக்கங்களாக தொடரவே செய்தது.
செல்லும் நாள்களில், “இந்த ஒரு தடவையோட இனி இங்க வரக்கூடாது” எனும் தீர்மானத்தோடு செல்பவன் பத்து நாள்கள் தாங்குவான். அதன்பின் ஒவ்வொரு நாளும் புத்திக்கும் உடலுக்கும் நடக்கும் போட்டியின் முடிவாக அடுத்தடுத்து வரும் நாள்களில் இறுதியாக உடல் வென்றுவிடும்.
அப்போதெல்லாம், ‘என்ன மாதிரியான போதையிது. அனுபவிச்சதும் இதுக்குத்தான் இப்டித் திரிஞ்சியானு கேவலமா ஒரு ஃபீல் ஆகுது. அப்போ… அந்த நேரம்… இனி இது வேண்டவே வேணானு தோணுது. அடுத்து பத்து நாளுதான் உடம்பு நான் சொல்றதைக் கேக்குது. அதுவும் வேலை வேலைன்னு அது பின்னுக்குத் தெரிஞ்சாத்தான்.
இல்லையோ… அடுத்த நாளே இந்த உடம்பு அதக் கேக்கத்தான் செய்யும். அது இல்லாம வாழவே முடியாதுங்கற அளவுக்கு உடம்பு அடிக்ட் ஆகிக் கிடக்கு!’ என்று ரீகனுக்குள்ளும் போராட்டங்கள் உண்டு.
சல்லாபிக்க பணம் கொடுக்காமல் அவர்களாக முன்வந்து தன்னைத் தந்தவரை கசந்து போயிராத நிமிடங்கள், காசிருந்தால் மட்டுமே சுகிக்கும் நிமிடங்கள் தனக்கு வாய்க்கும், அந்த இனிமை சாத்தியப்படும் என்கிற நிலை வந்ததும் ஏனோ மனம் வலித்தது.
அவனைத் தேடி வரும் பெண்களை சந்தோசப்படுத்த முன்பு செலவளித்ததுபோல தற்போது செலவளிக்க பணமிருந்தாலும், மனமில்லாமல் மாறிப் போயிருந்தான் ரீகன்.
முன்பும் பணியில் இருந்தான். ஆனால் அவனது சொந்தத் தொழிலைக் காட்டிலும் பொறுப்புகள் குறைவு. இலாப நஷ்டமென்பது நேரடியாக அவனைத் தாக்கியிறாத நாள்கள் அவை. எப்படி அவன் வேலை செய்தாலும் அலுவலகத்திற்கு வந்து போயிருந்தாலே மாதம் முடிந்ததும் அவனது கணக்கில் வரவு வைத்திருக்கும் நிறுவனம்.
தற்போது அப்படி அல்லவே. சொந்தத் தொழில் சற்று சரிந்தாலும் அதனை பழைய நிலைக்குக் கொண்டு வர பெரும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அத்தோடு அந்தச் சரிவை, நஷ்டத்தை ஈடுசெய்ய உழைப்போடு சிலவற்றை இழக்கவும் நேரிட்டது.
இழந்ததை மீண்டும் மீட்க சில நேரங்களில் முடியும். சில நேரங்களில் முடியாமலும் போகும் என்பதை அவனது கடந்து போன நாள்கள் புரிய வைத்திருந்தது. அதனால் அவனாகவே மாறியிருந்தான்.
வார நாள்கள் மொத்தத்தையும் சல்லாபத்திற்காக செலவிட்டவன், இந்தளவு மாறியது ரூபிக்கு சந்தோசம். மேலும் தற்போது தொழில் நிமித்தமாக அவன் மேற்கொள்ளும் பிராயச்சித்தங்களை நேரில் இருந்து பார்ப்பதால் பேரன் மீது நம்பிக்கை வந்திருந்தது.
ரீகனை வார்த்தைகளால் கட்டி நிறுத்த முடியாது. ஆனால் உன்னதமான தூய உணர்வுகளால் கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்பதை கண்டு கொண்டிருந்தார். பேச்சால் அவனை மாற்ற முடியாது என்பது தெளிவானமையால் அவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பெண்ணால் மட்டுமே பேரனை இழுத்து வைக்க முடியும் என்று நம்பினார்.
ஏறத்தாழ அவரைப்போல குணத்தைக் கொண்ட பெண் மட்டுமே அவனோடு இருக்க முடியும் என்பதை அவர் உணர்ந்து கொண்டிருந்தார். பொறுமையோடு ரீகனை அணுகியிராவிட்டால் இத்தனை மாற்றங்களை நிச்சயம் அவர் அவனிடம் எதிர்பார்த்திருக்க முடியாது.
அதனால் மிகுந்த நம்பிக்கையோடு பேரனை வலுக்கட்டாயமாக தன்னோடு அழைத்துக்கொண்டு ஞாயிறன்று காலையில் சாந்தோம் சர்ச்சை நோக்கிப் பயணித்திருந்தார் ரூபி பாட்டி.
ரூபி பாட்டியின் வற்புறுத்தல் மற்றும் வழிகாட்டுதலினால் அவ்வப்போது உடன் பிறந்த சகோதரிகளைக்கூட கடனே என்று சென்று சந்தித்து வருவான். அப்படி இருக்க இன்று அவனுக்காக பாட்டி சாந்தோம் சர்ச்சிற்கு செல்ல வேண்டுமென்றதும் சென்றுதான் பார்ப்போமே என வந்திருந்தான்.
“ரீகன்… நீ திருச்சி போனியானா மூத்தவளை போயி பாக்கறதோடு, பக்கத்தில மயிலாடுதுறையில இருக்கற சின்னவளையும் போயி பாத்துட்டு, பாட்டி கொடுத்து விடறதையும் கொடுத்துட்டு வா” என்று ஒவ்வொரு முறையும் பேத்திகளுக்கு உடையோ, ஆபரணமோ எடுத்துக் கொடுத்துவிட மறக்கமாட்டார் ரூபி.
ரீகனும் ரூபி பாட்டியின் பேச்சைத் தட்டாமல் அவர் சொன்னதைச் செய்துவிட்டே சென்னை திரும்புவான். ரூபிக்கு பேத்திகள் தான் கொடுத்துவிட்டதைப் பெற்றுக்கொண்டதும் அந்தப் பொருள் பற்றிச் சிலாகித்துப் போனில் பேசுவதைக் கேட்பதிலேயே அகமகிந்து போவார்.
புகழ்ச்சி போதை! அதனால் அதனை வாடிக்கையாக்கியிருந்தார் ரூபி.
இன்றும் அதேபோல ஒரு பரிசுப் பொருளை ஐடாவிற்காக பேரனுக்குத் தெரியாமல் வாங்கிக்கொண்டே பேரனோடு கிளம்பி வந்திருந்தார் பாட்டி. இதனை அறியாதவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் யாருக்கோ பெண் பார்க்க வருவதுபோல டென்சன் ஃப்ரீயாக வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
***