இளைப்பாற இதயம் தா!-3அ

IIT copy-1895bc00

இளைப்பாற இதயம் தா!-3A

ஐடா, ரீகன் சந்திப்பு நிகழ்ந்து இன்றுடன் ஒரு வாரம் கழிந்திருந்தது.  அன்று ஸ்டெல்லா, ஐடா விடுதிக்கு திரும்புவதற்குள் நான்குமுறை அழைத்திருந்தார். 

ஐடா, ‘ஹாஸ்டல் போயிட்டு பேசறேன்மா’ என்று தாயிக்கு மெசேஜ் செய்துவிட்டு விடுதி சென்று சேருவதற்குள் அடுத்து இரண்டு முறை அழைத்துவிட்டார்.

“என்னம்மா? ஏன் இவ்ளோ அவசரப்படறீங்க?” என்றுதான் தாயிக்கு அழைத்ததுமே கேட்டாள் ஐடா. 

தாயின் அவசரம் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.  இதுவரை எதற்கும் இத்தனை அவசரம் காட்டியிராத தாய் என்றுமில்லாமல் தன்னிடம் இப்படி நடந்துகொண்டது ஐடாவிற்கு வித்தியாசமாக இருந்தது.

மகளின் கேள்வியைப் புறம் தள்ளிய ஸ்டெல்லா, “போன விசயம் எல்லாம் நல்லபடியா நடந்ததுதான?  நீ சரியான நேரத்துக்கு அங்க போயிட்டதான? அவங்களை நீ வெயிட் பண்ண வைக்கலதான? அவங்க வரதுக்கு முன்ன நீ அங்க போயிட்டதான?  அவங்கட்ட நீ கைண்டாத்தானே பேசின?

அவங்களுக்குப் பிடிக்காத மாதிரி எதுவும் நீ பண்ணலையே? அந்தப் பையனோட பாட்டீ உங்கிட்ட நல்லபடியா பேசினாங்களா? அவங்களோட ரியாக்சன் உன்னைப் பாத்ததும் எப்டி இருந்தது?” என அடுக்கடுக்காய் மாப்பிள்ளையின் பாட்டியோ, அல்லது மாப்பிள்ளையோ தங்கள் மகளை ஏதேனும் குறை சொல்லி ஒதுக்கி விடுவார்களோ என்கிற ரீதியில் கேள்வியை முன் வைத்தாரே அன்றி, ஐடாவிற்கு பையனைப் பிடித்திருக்கிறதா என்று கேட்பதற்கு அவருக்குத் தோன்றவில்லை.

தன் மகளை எதாவது காரணம் சொல்லி நிராகரித்துவிடக்கூடாதே என்கிற பரிதவிப்பு இருந்ததே அன்றி, தன் மகளுக்கு அந்த வரனை பிடித்திருந்தால் மட்டுமே திருமணம் பற்றி அடுத்துப் பேச வேண்டும் என்று ஏனோ ஸ்டெல்லாவிற்குத் தோன்றவில்லை.

அதற்குக் காரணமும் இருந்தது.  இதுவரை வந்த வரன்களில் எதாவது ஒரு குறை என்று ஸ்பஸ்டமாக தெரிய வந்ததும் இவர்களாகவே ஒவ்வொன்றையும் நிராகரித்துப் பின்வாங்கியிருக்க, இரண்டாண்டு நீண்ட நெடிய தேடலுக்குப்பின் ரீகன் மட்டுமே இதுவரை எந்தக் குறையும் இல்லாததுபோல் அவர்களுக்கு எண்ணத் தோன்றியிருந்தது. அதனால் இந்த வரனாவது மகளுக்குத் தகைய வேண்டுமே என்கிற எதிர்பார்ப்புதான் அப்படி ஸ்டெல்லாவை பேசச் செய்திருந்தது.

தாயின் கேள்வியில் அவர் என்ன நினைக்கிறார் என்பது ஐடாவிற்கு தெளிவாகப் புரிந்தது.  ஆனாலும் தாயிடம் அதீத உரிமை எடுத்துப் பேசியிராத காரணத்தினால், “நீங்க பயப்படற மாதிரி நான் எதுவுமே பண்ணலைம்மா.  அவங்க கேட்டதுக்கு நல்லபடியா பதில் பேசினேன்.  அவங்களுக்கு என்னைப் பத்தி என்ன தோணுச்சுனு இனி அவங்கதான் சொல்லணும்.” என்று பதில் கூறியவள்,

“ஆனா…” என்று சொல்ல வந்த விசயத்தைக் கூற தயங்கி நிறுத்தினாள் ஐடா.

“என்ன ஆனா?” ஸ்டெல்லா.

சற்று நேரம் அமைதி காத்த ஐடா, “அந்த மாப்பிள்ளையோட மாமா பொண்ணும் கூட வந்திருந்தாம்மா…” நிறுத்தி இதைத் தாயிடம் சொல்லலாமா இல்லை வேண்டாமா என்கிற போராட்டத்தோடு இருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக பேச முன் வர,

அதற்குமுன் ஸ்டெல்லா, “மாமா பொண்ணா?” என்று கேட்டதும்,

“ஆமாம்மா…!”

“அங்க அவளை எதுக்குக் கூட்டிட்டு வந்தாங்க?” ஸ்டெல்லாவின் வார்த்தை இதம் தொலைத்திருந்தது.

“அவங்க கூட்டிட்டு வரலைம்மா.  அவ ஏற்கனவே அந்த சர்ச்சுக்குள்ளதான் இருந்திருக்கா.  ஹீல் ஸ்லிப்பானதால ஆங்கில்ல சுளுக்காம்.  முதல்ல பெரிய இஸ்யூ இல்லனு பிரேயருக்கு வந்துட்டாளாம்.

இடையிலயே அதிக பெயினாயிருச்சுனு பிரேயர் முடியும் முன்ன வீட்டுக்கு கிளம்பிப் போனா போல.  அப்போ அந்தப் பையன் உள்ளே வரும்போது எதேச்சையா பாத்துட்டு ஹெல்ப் கேட்டுச்சாம்.  அப்ப பாட்டி கால் பண்ணி வரச்சொன்னதும் அவருகூடவே அதுவும் வந்துச்சு”

அதன்பின் ஒவ்வொன்றாக ஸ்டெல்லா வினவ அன்று சர்ச்சிற்கு சென்றது முதல், அஸ்வினை சந்தித்தது, அதன்பின் அவனைச் சமாளித்து சர்ச்சினுள் சென்று வழிபாட்டில் தான் கலந்து கொண்டது, அதன்பின் பாட்டி அவள் அருகே வந்தமர்ந்தது, பேரனைக் காணாமல் பாட்டி தேடியது, பிறகு தன்னோடு பாட்டி பேசியது, பாட்டி பேரனுக்கு அழைத்தபின் அவன் தன் மாமன் மகளோடு அவர்கள் இருக்குமிடம் வந்தது, பாட்டி ரீகனின் மாமன் மகளிடம் கடுமையாக ஆனால் ஐடா முன் அதனைக் காட்ட விரும்பாமல் நேர்த்தியாக நடந்து கொண்டது, அதன்பின் அவளை கேப் புக் செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டு பாட்டி தன் பேரனுடன் ஐடாவையும் வற்புறுத்தி அருகே இருக்கும் கேஃபிடோரியாவிற்கு அழைத்துச் சென்றது, அங்கு பாட்டி தன்னிடம் பேசியது,  அவரவர் விருப்பம் கேட்டு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தது.  அந்த இடைவெளியில் ஐடாவைப் பற்றி அறிந்து கொள்ள பாட்டி கேட்டது.  அதற்கு ஐடா கூறிய பதில்கள், இடையிடையே ரீகனின் கேள்விகள் அதற்கு ஐடாவின் பதில்கள் அதன்பின் கிளம்பும்போது ரீசண்ட் மாடல் ஐ போனை பேரனிடம் கொடுத்து பாட்டி தன்னிடம் கொடுக்கச் சொன்னதுவரை அனைத்தையும் கூறினாள் ஐடா.

மகள் கூறியதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஸ்டெல்லா, “அதை நீ வாங்கிட்டியா?” என்று கேட்டார்.

“இல்லைம்மா…”

“அதானே பாத்தேன்!” என்று எதிர் முனையில் இருந்தவர் பெருமூச்சு விட்டதோடு, “என்ன சொன்ன?”

“தாங்ஸ் பாட்டி.  நான் இப்போ வச்சிருக்கறதே ரீசண்ட்டா வாங்கினதுதான்.  அதனால எனக்கு இது இப்போ தேவைப்படாது.  அதனால எனக்கு இது வேணாம் பாட்டீ.  நான் வேணானு சொன்னதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்கன்னு சொல்லிட்டேன்மா” என்றாள் ஐடா.

இப்படி அன்று நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் தாயிடம் ஒப்பித்துவிட்டாள் ஐடா.

அத்தோடு விடாமல் தனக்குத் தோன்றியதையும் தாயிடம் கூறியிருந்தாள் ஐடா.  அது, “அந்த பொண்ணுக்கு அந்த மாப்பிள்ளை மேல ஏதோ அபிப்ராயம் இருக்கற மாதிரித் தெரியுது.  ஆனா… அந்தப்  பொண்ணை எடுக்காம, என்னை ஏன் பேசுறாங்கனு ஒரு சின்ன டவுட் வந்துதுமா…

அத்தோட அந்தப் பாட்டிக்கு அந்தப் பையனோட வந்த அந்தப் பொண்ணை பிடிக்கவே இல்லை.  அந்தப் பையனுக்கும் அப்டி ஒன்னும் அந்தப் பொண்ணுமேல அபிப்ராயம் இருக்கற மாதிரியும் தெரியலை!” என்று அப்படியே உரைத்துவிட்டாள்.

உண்மையில் ரீகன் சிறு வயதில் தன் தங்கையோடு திரிந்த மாமாவின் மகள்களையும் தங்கையாகவே பாவித்து பழகியிருந்த காரணத்தினால், அவர்கள் அவனிடம் வேறு மாதிரி எதிர்பார்த்துப் பழகினாலும் அவனால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ள விரும்பியதில்லை.

“அப்டியா…?” என்று கேட்ட ஸ்டெல்லாவிற்குள்ளும் யோசனைதான்.

மகள் பேசிய விசயங்கள் அனைத்தையும் ஆராய்ந்தவர், ‘நாமளா வாலண்டியராப் போயி மேற்கொண்டு எதுவும் பேச வேணாம்.  அவங்க வந்து பேசினா அடுத்துப் பேசுவோம்’ அமைதியாக இருந்துவிட்டார் ஸ்டெல்லா.

ஸ்டெல்லாவிற்கு சற்று தயக்கமும் வந்திருந்தது.  ‘ஐடா சொல்ற மாதிரி சொந்தத்துலயே பொண்ணு இருக்கும்போது அவளை விட்டுட்டு ஏன் வெளியே தேடறாங்க?” எனும் கேள்வி எழுந்ததும் அதற்கான சரியான காரணத்தை அறிந்துகொண்டால் மட்டுமே ஐடாவின் திருமணம் பற்றி அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும் என்கிற நிலைமைக்கு வந்திருந்தார்.

அதற்கான முயற்சியில் தாமதிக்காது இறங்கவும் செய்திருந்தார்.

***

          ரீகனின் மாமன் மகளான யாமினி டொமிஸ்ஸை விரட்டாத குறையாக கேப் புக் செய்து அனுப்பிய பிறகுதான் ரூபி பாட்டிக்கு நிம்மதியாக இருந்தது.

          ஐடாவின் முன் பேரனை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை.  அவனை கண்டிக்கவும் முடியவில்லை.  ஆனால் தான் அமைதியாக இருக்கும் பட்சத்தில் ஐடா ரீகன் திருமண ஏற்பாடே யாமினியின் வரவால் கொலாப்ஸாகிவிடும் வாய்ப்பு இருப்பதை அறிந்து தாமதிக்காமல் பேரனைக் கொண்டே கேப் புக் செய்து அது வந்ததும் யாமினியை அதில் அனுப்பி வைத்திருந்தார் பாட்டி.

          ஐடாவோடு அதிக நேரம் செலவளிக்கவும், பேரனுக்கு ஐடாவைப் பிடிக்க வைக்கும் முயற்சியாகவும் அரைநாள் அவளோடு செலவிட எண்ணி வந்தவரை, யாமினியின் வருகை எரிச்சலை உண்டு செய்து தனது திட்டங்கள் அனைத்தையும் மாற்றியமைக்கும்படி செய்திருந்தது.

          அதனால் அருகே இருக்கும் கேஃபிடோரியா வரை ஐடாவை அழைத்துச் சென்று சற்று நேரம் அவளின் பணி, அவளது குடும்ப பின்னணி மற்றும் இதர விசயங்களை மட்டும் பேசிவிட்டு ஐடாவைப் பற்றிய கணிப்பின் மணி மகுடமான அந்த நொடிகளை எதிர்நோக்கி தான் வாங்கி வந்திருந்த ஆண்ட்ராய்டு போனை எடுத்து பேரனிடம் கொடுத்து, “இந்தா நீ வாங்கின போனை உன் கையாலேயே ஐடாகிட்டக் கொடு” என்று கொடுத்திருந்தார் ரூபி.

          ரீகன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.  அவன் ஆச்சர்யமாக ஆனால் அதை வெளிக்காட்டாமல் பாட்டியிடமிருந்து வாங்கி ஐடாவிற்கு கொடுக்க எண்ணி அவள் புறம் திரும்பும்முன் அதனை மறுத்துப் பேசிய ஐடாவின் பேச்சைக் கவனித்தபடியே அப்போதுதான் ஐடாவின் முகத்தை உற்று நோக்கினான்.

          ஏதோ ஒரு உள்ளுணர்வு!

          இதயம் வரை இடம்மாறி இனித்தது!

          இதமாக உணர்ந்தான் அந்த நொடியை…

          சிற்றின்பத்தைக் காட்டிலும் இது வித்தியாசமாக இருந்தது.

          ஆனால் அது என்னவென்றோ, எதனாலென்றோ உணரும் நிலையில், புரியும் நிலையில் அவனில்லை!

          எந்தப் பெண்ணிடமும் இதுவரை அவனுக்குத் தோன்றியிராத உணர்வு!

          நிமிடங்களில நீடிக்க விடாமல் இருவரின் பேச்சுக்களும் அவனை நடப்பிற்கு கொண்டு வந்து இனிமையை தடா செய்திருந்தது.

          ரூபி ஐடா பற்றிய தனது கணிப்பு சரியான சந்தோசத்தை வெளியில் காட்டாமல், “அதனால என்னடா?  இதை இனி யூஸ் பண்ணிக்க” என்று ஐடாவிடம் அந்த போனை அவளிடம் நீட்டியவாறே கூற,

          “இல்லை பாட்டி… அவசியத்துக்கு இதுவே அதிகம்.” தனது கையில் இருந்த போனைக் காட்டிக் கூறியவள்,

“இதுல இன்னொரு போனை வாங்கி வீணாக்க வேணாம்னு தோணுது” என்றாள்.

“நீ யூஸ் பண்ணா, ஏன் வீணா போகப் போகுது?” ரூபி பாட்டியும் அத்தனை எளிதில் ஐடாவை விடவில்லை.

“இது நல்ல கண்டிசன்ல இருக்கும்போது அதை என்ன செய்யறது பாட்டீ” ரூபியின் கையில் இருந்ததைக் காட்டிக் கேட்டாள்.

“அதை அம்மாவுக்கு கொடுத்துரு.  இதை இனி யூஸ் பண்ணிக்கோ” மிகவும் கூலாகச் சொன்னார் ரூபி.

“இல்ல பாட்டீ.  எல்லாருகிட்டயும் போன் இருக்குது”

“இது அப்டேட்ட வர்ஷன்மா!”

“வார வாரம் அப்டேட் பண்ணுவாங்க பாட்டி.  காசு இருக்குங்கறதுக்கா அப்டியெல்லாம் வாங்கி வீணாக்கறது எனக்கு பிடிக்காது பாட்டி. அம்மாவும் அதை ஆமோதிக்க மாட்டாங்க.  இந்த போன்ல எதாவது பிராப்ளம்னாகூட வாங்கிக்கலாம்.   அப்டி இல்லாதப்போ புதுசு தேவையில்லை பாட்டி”

“அப்ப நீ இதை வாங்கிக்க மாட்ட!” ரூபி

“சாரி பாட்டி.  நீங்க என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க” என்று திடமாய் மறுத்துவிட்டாள் ஐடா.

          ரீகன் இப்படி ஒரு பெண்ணை இதுவரை சந்தித்தது இல்லை.  “எனக்கு அது வேணும்” என்று குறிப்பிட்ட பொருளைக் கேட்டு தன்னிடம் வாங்கிய பெண்களையும்,  “இதெல்லாம் வேணுமே” என்று ஆசையாக லிஸ்ட் போட்டு அத்தனையையும் கேட்ட பெண்களையுமே பார்த்திருந்தவனுக்கு, பாட்டி வாங்கி வந்திருந்த லேட்டஸ்ட் பிராண்டட் மொபைலை வேண்டாமென திடமாக மறுத்தவளை வினோதமாகப் பார்த்தான்.

          ‘அவங்க வசதிக்குள்ள வாழப் பழக்கிட்டதால நாம கொடுக்கறதை வாங்க மாட்டறாளோ? இல்லை குணமான பொண்ணுனு அவங்க நம்பணும்னா அவங்க கொடுக்கற எதையும் வாங்காம இப்ப மட்டும் வேணானு சொல்லணும்னு வீட்ல சொல்லி விட்டுருக்காங்களோ!’ இப்படியெல்லாம் ரீகனுக்குத் தோன்றியது. 

          அதற்குக் காரணம் ரூபியின் வார்த்தைகள்தான்.  “எதுக்கு பாட்டி நமக்கு ஈக்வல் ஸ்டேட்டஸ்ல பொண்ணு தேடாம, குறைச்சுத் தேடறீங்க?” எனும் பேரனது கேள்விக்கு ரூபி என்ன சொன்னார்?

***