இளைப்பாற இதயம் தா!-3ஆ

இளைப்பாற இதயம் தா!-3B

          “ஸ்டேட்டஸ் எல்லாம் பாக்கலை ரீகன்.  குணத்தை மட்டுந்தான் பாக்கறேன்” என்றவர்,

“ஈக்வல் ஸ்டேட்டஸ்ல பொண்ணு பாத்தா உன்னோட எல்லாத்துக்கும் மல்லுக்குத்தான் நிப்பா.  உன்னைவிட நான் எதுல குறைச்சல்னு!  அப்புறம் அவங்க வீட்டுல இருக்கற வசதி வாய்ப்புக்கு இன்னும் நிறைய இழுத்து நாறடிப்பா…

குடும்பம் நடத்த வரவ உங்கூட மல்லுக்கு நின்னா குடும்பம் உருப்படுமா?  நாங்கதான் நிம்மதியா இருக்க முடியுமா? சொல்லு” என்றபடியே பேரனது யோசனையான முகம் பார்த்தவர்,

“வசதி குறைவா இருந்தாலும், அதிகமா இருந்தாலும் குணமான பொண்ணா இருந்தா அவகிட்ட எல்லாத்திலயும் ஒரு நியாயம் இருக்கும்.  நானும் கலங்காம போயிச் சேருவேன்.  அதனால குணமான பொண்ணா மட்டுந்தான் பாக்கறேன்” என்றுரைத்திருந்தார்.

          வந்தது முதல் பாட்டி இருவருடனும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்ததற்கு இடையில் ஒரு சில கேள்விகள் ரீகனும் ஐடாவிடம் அவள் அலுவலகம் சார்ந்து வினவ, சாதாரணமாகவே ரீகனிடமும் பதில் பேசியிருந்தாள்.

          கலந்தாய்வில் பேசும் தொனிதான் இருவரிடமுமே.  வேறு எந்த உணர்வும் இருவருக்கிடையே காண முடியவில்லை.  ஒருவர் அலுவலக உயரதிகாரி போல வினவினால், மற்றொருவர் பணியாளர்போல பதில் சொன்னது இருவருக்கிடையே இருந்த தொனியை பாட்டியும் கவனிக்கவே செய்தார்.

          “எப்போ ஜாயிண்ட் பண்ண?”

          “என்னவா ஜாயிண்ட் பண்ண?”

          “இப்போ என்னவா இருக்க?”

          இதைக் கண்ட பாட்டிக்கு தலையிலடித்துக் கொள்ளத்தான் தோன்றியது. ‘இங்க வந்து அந்தப் புள்ளைகிட்ட அவன் ஆஃபீஸ்கு ஆளெடுக்க இண்டர்வியூல கேள்வி கேக்கற மாதிரி கேட்டு வைக்கிறானே…’ என்றிருந்தது.

          ஐடா என்ன நினைக்கிறாள் என்பதை பாட்டியால் கணிக்க முடியவில்லை.  ஆனால் சின்ன நெருடல் பாட்டிக்கு வந்திருந்தது.  அது என்னவென்றால் யாமினியைக் காரணம்காட்டி ஐடா தன்  பேரனை திருமணம் செய்ய மறுத்துவிடுவாளோ என்பதுதான்.

          அந்த நெருடல் ஐடாவிடம் விடைபெற்றதும் ரீகனிடம் வசபாடுதலாகத் திரும்பியிருந்தது.

          “உனக்கு பொண்ணு பாக்கணு வந்திருக்கற இடத்தில, அந்த யாமினி பிசாசை எதுக்கு தோளோட தொங்கவிட்டுக் கூட்டி வந்த?” ரூபி கோபமாக பேரனிடம் கேட்டதும், சிரித்துவிட்டான் ரீகன்.

          “அவ நிக்க சப்போர்ட் இல்லாம தள்ளாடிட்டே வந்தா.  என்னைப் பாத்ததும் ஓடி வந்து அத்தான்னு தோளை பிடிச்சிட்டா… அவளை போ அந்தப்பக்கம்னு என்னால சொல்ல முடியலை பாட்டி” என்றான்.

          “பொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா உன் கண்ணுல ரத்தமே வந்திரும்னு இனியும் டயலாக் அடிச்ச, கடைசிவரை தனியா இருக்கற மாதிரி ஆகிரும்.  ஒழுங்கா பாத்து இருந்துக்கோ” எச்சரித்தார் ரூபி.

          “அந்தப் பொண்ணு இல்லனா வேற பொண்ணு பாட்டி” கூலாகச் சொன்னான் ரீகன். மனதாரச் சொல்லத் தோன்றவில்லை.  ஆனாலும் சொன்னான்.

          “லைன் கட்டி நிக்குதுன்னு நினைப்பாக்கும்” கடுமையாகவே வினவினார்.

          “இல்லையா பின்ன?” தோளைக் குலுக்கிக் கேட்டான்.

          ரீகனின் தோளில் அடியைப் போட்டவர், “ஒழுங்கா ரோட்டைப் பாத்து வண்டிய ஓட்டு” என்றதோடு, “ஓவர் கான்ஃபிடண்ட் உடம்புக்கு ஆகாது பேராண்டி” என்றார்.

          “உண்மையச் சொன்னா, என்னை வாருறதிலயே குறியா இருங்க” ரீகன் நொடிக்க,

          “எது உண்மை? நீயா எதாவது தப்பு தப்பா நினைக்காத… உன்னோட வயசைக் காட்டிலும் இரண்டரை மடங்கு வருசம் கூடுதல் அனுபவம் எனக்கு.  நான் சொல்றது இன்னைக்கு உன்னால ஏத்துக்க முடியாமப் போகலாம்.  ஆனா ஒரு நாள் அது உண்மைனு புரிய வரும்” ரூபி.

          “அப்டியென்ன அவ மட்டும் பெஸ்ட்டுன்னு நினைக்கறீங்கனு சொல்லுங்க அப்ப” என்று கேட்டான்.

          “உனக்கு என் காலத்துக்குப் பின்ன என்னை மாதிரி பாத்துக்கற மாதிரிப் பொண்ணு ஐடாவைவிட்டா வேற எங்கயும் வலை வீசித் தேடினாலும் கிடைக்க மாட்டா” வீராப்பாகச் சொன்னார் ரூபி.

          “அப்டியா?” என்று சிரித்தான் ரீகன்.

          “வேற என்னானு நினைச்சிட்டு வந்த?”

          “நான் எதுவுமே நினைக்கலையே!” சிரித்தான்.

          “நல்லா கேட்டுக்கோ.  உங்க அம்மாவுக்கு அவளோட ரெண்டு பொண்ணுங்களைத் தவிர நீங்க ரெண்டு பேரும் எப்டிப் போனாலும் கண்டுக்க மாட்டா.  என் காலம் இருக்கும்போதே ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகப் பாரு.  இல்லையோ… கடைசிவரை கஷ்டந்தான்” ரூபி சீரியஸ் மோடில் பேச,

          “பயமுறுத்தறீங்க ரொம்ப…” ரீகன்.

          “உண்மையச் சொன்னா உனக்கு இப்ப அப்டித்தான் தோணும்!”

          “எது உண்மை!” என்றான் ரீகன்.

          “உன் மாமன் பொண்ணு பண்ணது எல்லாம் இன்னைக்கு வேணுனே பண்றா.  அது புரியாம அவளுக்கு வள்ளல் மாதிரி தோள் குடுக்கறேன்னு அந்த ஐடா பொண்ணு முன்னுக்கு வந்து நிக்கற.  இப்ப அதைக் காரணமாச் சொல்லி அவங்க பேரண்ட் உன்னை வேணானு சொன்னா உன்னோட நிலைமை கஷ்டம்!”

          “இதுல என்ன கஷ்டம் வந்திரும்?  இவ இல்லைனா… இன்னொருத்திய பாத்து கல்யாணம் பண்ணிக்கறேனே” சாதாரணமாகச் சொன்னான். ஆனால் அது பாட்டிக்காக சொன்னான்.  உள்ளார்ந்து அப்படி அவனால் சொல்ல முடியுமா என்கிற கேள்வியும் அந்த கணத்தில் அவனுக்குள் உதிக்கவே செய்தது.

          ஆச்சர்யமாகவும் இருந்தது.  அவனது சிந்தனையின் போக்கு செல்லும் திசை.

          “ஆனா ஐடா மாதிரி பொண்ணு கிடைக்காதுன்னு எத்தனை தடவை உனக்குச் சொல்றது?” கடினமான தொனியில் கோபமாக வந்தது வார்த்தைகள்.

          “அவ மட்டும் ஸ்பெஷலாம்… எப்டினு கேட்டா… என்னன்னமோ சொல்லி சின்னப் பையனை ஏமாத்தறீங்க!” ரீகன்.

          “டேய் ஒன்னுமே தெரியாத மாதிரியே எங்கிட்டப் பேசாத… உண்மையிலேயே நீ பாத்த பொண்ணுங்கள்ல இவ ஒரு பர்சண்ட்கூட வித்தியாசமாத் தோணலைனு நெஞ்சைத் தொட்டுச் சொல்லு பாக்கலாம்”

          சிரித்தான் அந்தக் கள்ளன்.  ஆனால் எதுவும் ரூபியிடம் சொல்லவில்லை.  பாட்டி சொல்லாமலேயே அவனுக்குள்ளும்ம் அப்படித் தோன்றியிருந்ததுதானே.

          “அவகிட்ட அப்டியென்ன வித்தியாசத்தைப் பாத்திங்கன்னு சொல்லுங்களேன்” என ரூபியிடம் வம்பு வளர்த்தான்.  அவர் வாயாலேயே கேட்பதற்காக…

          “கண்டுபிடியேன் பாக்கலாம்” ரூபி.

          “எனக்குத் தெரியாது” விட்டேத்தியாகச் சொல்வதுபோல விதண்டாவிதமாகச் சிரித்தவாறே சொன்னான்.

          “அவகூட வாழ்ந்து பாத்தாத்தான் உனக்குப் புரியும்.  அதுவரை நான் என்ன சொன்னாலும் உனக்குப் புரியப் போறது இல்லை.  அவளோட வாழறதுக்கு யாமினி மாதிரி நிறைய முட்டுக்கட்டையெல்லாம் அப்பப்போ வரும் உனக்கு.  அதுபின்ன போனா உன் சாப்டரே க்ளோஸ்” என்ற ரூபியின் வார்த்தையில் திருதிருவென பாட்டியைப் பார்த்து விழித்தான் ரீகன். 

பேரனது பார்வையைப் பார்த்துச் சிரித்த பாட்டி, “அதனால இடமறிஞ்சு நடந்துக்கோ ரீகன்.  இதுக்கு முன்ன நீ எப்டியிருந்திருந்தாலும் யாருக்கும் ஒன்னுமில்லை.  ஆனா இனி உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா நீ அவளுக்கு கண்டிப்பா உண்மையா இருக்கணும்.”

          என்றெல்லாம் பேசிக்கொண்டே வந்த ரூபி, மருமகளுக்கு அழைத்து, “உன் அண்ணன் பொண்ணுக்கு இங்கிதமே இல்லாம, அங்க வந்து அநியாயம் பண்ணிட்டா” எனத் துவங்கி அன்று யாமினி நடந்துகொண்டவற்றைப் பேசி அவரின் காதை தீய வைத்திருந்தார்.

          சீலிக்குமே யாமினியின் நிலையைப் பற்றி வருத்தம் வந்தாலும், பொது இடத்தில் அதுவும் மகனுக்கு பெண் பார்க்கும் படலத்தின்போது இப்படி வந்து நடந்துகொண்டாளே என்கிற கோபம்.

          அண்ணனிடம் உடனே பேசி தனது கோபத்தை ஆத்தியிருந்தார் சீலி.

          “நான் அன்னைக்கு உங்கட்ட பேசினதை கேட்டுட்டு, உங்க மகளை இப்டியெல்லாம் டிராம பண்ணி அங்க போயி குழப்புன்னு அனுப்பி வச்சிருக்கியே அண்ணே” என்று கடிந்து பேசிவிட்டு வைத்திருந்தார் சீலி.

          சீலியின் அண்ணனுக்கு, ‘நாம நினைச்சு செய்ததை அப்டியே கண்டு பிடிச்சிருது பிசாசு’ என்று தங்கையை மனதில் திட்டித் தீர்த்திருந்தார்.

          “நாசுக்கா போயி காரியம் சாதிக்கத் தெரியலை.  நீங்க எல்லாம் என்ன புள்ளைங்க?” என்று மகளைக் கடிந்து அவரின் புலம்பலைத் தணித்திருந்தார் சீலியின் அண்ணன்.

***

          ஸ்டெல்லா நேரடியாகவே சீலியிடம் விசாரணையைத் துவக்கியிருந்தார் யாமினியைப் பற்றி.

          “சொந்தத்துல இப்பல்லாம் கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் பிறக்கற குழந்தைக்கு அதுல பிரச்சனை, இதுல பிரச்சனையினு சொல்லும்போது வருத்தப்படறதுக்கு அப்படி பண்ண வேணானுதான் வெளிய பாத்தோம்” என்று பாலீசாகப் பேசினார் சீலி.

          “நீங்க சொல்ல வர்றது புரியது.  ஆனா பையனுக்கு ஏதும் ஆசை இருந்து… அதை நீங்க மறுக்கற மாதிரி இருக்கானு தெரிஞ்சிக்க வேண்டித்தான் உங்ககிட்டயே நேரடியாக் கேக்கறேன்” என்று ஸ்டெல்லா நேரடியாகவே கேட்டிருந்தார்.

          “அப்டியெல்லாம் இல்லை.  இந்த இடம் முடிவான ரீகனும் மேரேஜ் பண்ணிக்க ரெடியாதான் இருக்கான்” என்று சீலி கூறிய பின்பும், “என் பொண்ணுகிட்டயும் இது சம்பந்தமாப் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்” என்று வைத்துவிட்டார் ஸ்டெல்லா.

          விசயம் ஐடா வழியாக வீட்டிற்குத் தெரிந்ததால் அப்படிச் சொல்கிறார் ஸ்டெல்லா என்பதும் புரிய வர, சரியென்று வைத்தவருக்கு ரூபியிடமிருந்து  அன்றே அழைப்பு.

          “என்ன பொண்ணு வீட்ல இருந்து எதாவது பேசினாங்களா?” ரூபி.

          விசயத்தைச் சொன்னதும், “இதைத்தானே நான் அப்பவே சொன்னேன்” என்று அடுத்து ஒரு ரவுண்ட் மருமகளையும், அவரின் அண்ணன் மகளையும் திட்டிவிட்டு வைத்தவர், அவ்வப்போது ஐடாவிடம் பேசுவது யாருக்கும் தெரியாது.

          ஐடாவும் மரியாதை நிமித்தமாக அவரிடம் பேசிக்கொண்டாள்.  ஆனால் யாமினி விசயம் பற்றி யோசிக்க யோசிக்க ரீகனின் செயலை ரீவைண்ட் செய்து மனதில் பார்த்தவளுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது.

          பிற ஆண்களைப்போல அவளை ஆர்வமாகப் பார்க்கவில்லை.  யாமினியிடமும் ஒதுக்கமாகத்தான் நின்றிருந்தான்.  அவள்தான் அவன் தோளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தாள் என்பதுதான் அது.

          அவனது பார்வையில் ஆர்வமில்லை என்பதை தனக்கு சாதகமாக எடுப்பதா? இல்லை பாதகமாக எடுப்பதா என்கிற போராட்டத்தில் யோசிக்க நேரமெடுப்பதாக பெற்றோரிடம் கூறினாள் ஐடா.

          ஐடா தாமதிக்க ரீகனை வைத்து செய்தார் பாட்டி.

          தன்னை ஒரு பெண் ஏற்க இத்தனை தூரம் யோசிப்பதை ரீகனாலும் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  ஆரம்பத்தில் அவளைக் காண ஆர்வமில்லாமல் சென்றவனுக்குள், அவளை நேரடியாக பார்த்த ஏதோ ஒரு கனத்தில் அவனைப் அசைத்துப் பார்த்திருந்தாள்.

ஆனால் அதனை ஒத்துக்கொள்ள ஆண்மனம் மறுத்தது.  அதேமனம் அவள் நாள் கடத்தியதும் தன்னை அவள் நிராகரித்துவிட்டால்… எனும் பதற்றம் தொற்றியிருந்தது.

          பாட்டியை சமாளிப்பதைவிட, அவளது நிராகரிப்பை அவனால் எளிதாக ஏற்றுக்கொள்ள நிச்சயமாக முடியாது என்பது அவனுக்குப் புரிய வர, அந்த நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்துவிடக்கூடாதே என எண்ணத் துவங்கியிருந்தான்.

          அவளது நிராகரிப்பு அவனது ஈகோவைத் தொட்டு அவனை இல்லாமல் செய்துவிடும் என்பது தெளிவாக எதிலும் அவனால் ஈடுபட முடியவில்லை.

          ஒவ்வொரு நாளும் ரீகனுக்கு முதன் முறையாக யுகமாகக் கழிந்தது.

          அதற்கு மாறாக எந்தக் குழப்பமும் இன்றி அவளுண்டு, அவளது பணியுண்டு என்றிருந்தாள் ஐடா.

          பெற்றோர் விசாரித்திருக்கிறார்கள்.  அவர்களுக்குத் திருப்தி என்பதால்தான் இந்தளவு வந்திருக்கிறது என்பது புரிந்தாலும் அவசரம் காட்டப் பிடிக்காமல் அமைதி காத்தாள்.

          எப்போதும் ஐடா அமைதிதான்.  ஆனால் ரீகனை சந்தித்துவிட்டு வந்தபின் ஐடா பேரமைதி காத்ததால், அந்த புது அமைதியைக் கண்டு அது எதனால் என்பதைக் கண்டுகொள்ள எண்ணி அஸ்வின் பேச்சு கொடுத்தான். முதலில் பணி நிமித்தமாக பதில்கள் சொன்னாள்.  அதன்பின் அதையும் குறைத்துக் கொண்டாள்.

          மேலும் ஒரு வாரம் கடந்திருந்தது.  அவளைக் அலுவலகத்தில் கண்கொத்திப் பாம்பாக அவளைக் கண்காணித்துக் கொண்டிருந்தான் அஸ்வின். அவளாகவே எதாவது சொல்வாள் என்று காத்திருந்தவன், அதற்குமேல் தாங்க இயலாமல் சர்ச்சில் ரீகனோடுடனான அவளது சந்திப்பைப் பற்றிய பேச்சைத் துவங்கினான்.

          அந்தப் பேச்சு அவளுக்கு ஆரம்பத்தில் எரிச்சலைத் தந்தாலும், அடுத்து அவள் எடுக்க வேண்டிய முடிவை நோக்கி அவளை உந்தித் தள்ளியது.

          அஸ்வின் ரீகனோடுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டதை ஐடா எப்படி எடுத்துக்கொண்டாள்?

          என்ன முடிவெடுத்தாள்?

***