இளைப்பாற இதயம் தா!-4அ

IIT copy-9ec8bc64

இளைப்பாற இதயம் தா!-4A

ரீகனின் தாயிடம் நேரடியாகக் கேட்டறிந்து கொண்டதோடு ஸ்டெல்லா அதை அப்படியே நம்பிவிடவில்லை.  தனக்குத் தெரிந்த திருச்சியில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் சென்னையில் இருக்கும் நண்பர்கள் என ரீகனைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள எண்ணி விசாரிக்கத் துவங்கியிருந்தார்.

சட்டென முடிவுக்கு வராமல் ரீகனின் தாய் மகனின் திருமணம் பற்றி அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கக் கேட்டபோது, “எனக்கு ஆஃபீஸ்ல கொஞ்சம் டைட் வர்க்.  அவருக்கும் அப்டித்தான்.  அதனாலதான் உங்கட்ட அடுத்துப் பேச முடியலை.

இன்னும் பத்து நாளைக்கு வேற எதிலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது.  அதுக்குப்பிறகு மேரேஜ் பற்றி பேசி முடிவுக்கு வந்திரலாம்” என்று சமாளித்திருந்தார் ஸ்டெல்லா.

சீலி மூலமாக பாட்டி ரூபிக்கு விசயம் தெரிய வந்ததும், “நீ செய்து வச்ச குழப்பத்தை அவங்க தீக்கறவரை இப்டி எதாவது சொல்லி சமாளிக்கத்தான் செய்வாங்க.  விசாரிக்கும்போது எதாவது டவுட் வந்தா இதையே சொல்லி இன்னும் நாளைக் கடத்துவாங்க… உனக்கு முன்ன மூனு பேருக்கு கல்யாணம் பண்ணும்போதெல்லாம் பதறாத மனசு இப்ப பதறுது.

எல்லாம் அந்த யாமினியாலயும், உன்னோட அசட்டுத் தனத்தாலயும்  வந்தது.  அவ மட்டும் அன்னைக்கு உங்கூட வந்திருக்கலைன்னா, இன்னேரம் மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்கலாம்.” ரீகனிடம் தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.

ஐடாவிற்கு அஸ்வினிடம் தனது சொந்த விசயங்கள் பற்றிப் பேச விருப்பமில்லாமல் அவன் நேரடியாகவும், மறைமுகமாகவும் ரீகனது குடும்பத்தைப் பற்றிப் பேச வந்தபோது நாசூக்காக கடக்க முயன்றாள்.

அஸ்வினிற்கு அவளின் ஒதுக்கம் அறிந்ததுதான் என்றாலும், ரீகனுக்கும், ஐடாவிற்குமான குடும்ப உறவைப் பற்றி அறிந்துகொள்ள அதிக பிரயாசம் மேற்கொண்டான்.

அஸ்வினது முயற்சியின் பலனாக இருபது நாள்களுக்குப்பின் ரூபி பாட்டியிடம் சர்ச்சில் பேசிய அவனது குடும்ப உறுப்பினரின் துணையோடு அன்றைய விசயத்தை ஓரளவு கேட்டறிந்து விசயம் என்னவென்பதையும் கணித்திருந்தான்.

அது ரீகனுக்கு ஐடாவைப் பெண் பார்க்கவே அன்று அங்கு வந்திருந்தான் என்பதே.

அதற்குமேல் அவனால் அப்படியே ஐடாவை ரீகனுக்கு விட்டுக்கொடுக்க முடியாத நிலை.  விசயம் கேள்விப்பட்டதும் காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் அபகரித்துச் சென்று விடுவானோ என்கிற பதற்றம் அஸ்வினைத் தொற்றிக்கொண்டிருந்தது.

அதனைக் காட்டிலும் அஸ்வினுக்கு, ‘ஐடா மாதிரி ஏஞ்சலை நினைக்கக்கூட ரீகன் மாதிரியான ஆளுக்கு அருகதை இல்லை. அப்டியிருக்க அவன் ஐடாவைக் கல்யாணம் பண்ணா அது அவளுக்கு  நடக்கற பெரிய துரோகம். 

ஏன்னா… அவள் ஒரு புனிதமான பெண்.  அப்படிப்பட்டவளுக்கு எண்ணத்தாலயும், செயலாலையும் களங்கப்பட்டிருக்கும் ரீகனை மேரேஜ் பண்றது பாவம்.

அதனால என்னை அவள் கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் பரவாயில்லை.  ஆனா நான் அவனைப் பத்தின விசயங்களை கண்டிப்பா ஐடாகிட்ட சொல்லி இந்த மேரேஜ்ஜை நடக்கவிடமாட்டேன்’ என சபதமெடுத்து, அதனைக்கூற தகுந்த நேரம் பார்க்க எண்ணித் தாமதிக்காமல் உடனே ஐடாவை நெருங்கியிருந்தான் அஸ்வின்.

ஐடாவிற்கு அன்று அதிக வேலைப்பளு.  அதற்கிடையில் பங்களூர்  கிளையில் இரண்டு தினங்கள் முக்கிய வேலை என்று அவளை அங்கு செல்லச் சொல்லி மேலிட உத்தரவு வேறு.  தாயிடம் இந்த விசயத்தைக் கூறினால் அதற்கு அவர் என்ன சொல்வாரோ என்கிற தயக்கத்தோடும், மேலிட உத்தரவை நிராகரிக்கவும் முடியாமல் இருந்தவளை அணுகியிருந்தான் அஸ்வின்.

சுற்றி வளைத்துப் பேசத் துவங்கிய அஸ்வினிடம், “எதுக்கு சுத்தி வளைச்சிப் பேசிட்டிருக்கீங்க அஸ்வின்.  என்ன சொல்ல வந்தீங்களோ அதை நேரடியாச் சொல்லுங்க.  முக்கியமா பர்சனல் வேண்டாம்” என்று ஐடா சொன்னதும், அமைதி காத்தான் அஸ்வின்.

அவனது அமைதியிலேயே அவன் பேச வந்திருக்கும் விசயம் எதைப்பற்றி என்பது ஐடாவிற்கு புரிந்து போயிருந்தது.

“அப்ப பேச எதுவும் இல்லை” என்று ஐடா நகர எத்தனிக்க,

“இந்த ஒரு விசயம் உன்கிட்ட சொல்லலைன்னா பின்னாடி நான் ரொம்ப வருத்தப்படுவேன்.  சோ… ப்ளீஸ்” என ஐடாவை நிறுத்தியிருந்தான்.

ஐடாவிற்கு பொறுமை பறந்துவிடும்போல இருந்தது.  ஆனாலும் என்னவென்பதுபோல அஸ்வின் முகம் பார்த்து நின்றாள்.

“நீங்க ரீகன் மாதிரியான நபரை லைஃப் பார்ட்னரா ஏத்துக்க நினைச்சா அது உங்க ஃபியூச்சரையே நாசம் பண்ணிரும்” என்று அஸ்வின் கூறியதைக் கேட்டவள் கிளம்ப எண்ணியதை மறந்து நின்றுவிட்டாள்.

அஸ்வின் பேசப்போகும் விசயம் ரீகன் பற்றி இருக்கும் என்று தோன்றியிருக்கவில்லை ஐடாவிற்கு.  அவன் சாதாரணமாக வழமைபோல காதலை ஏற்கச் சொல்லி பேச வந்திருக்கிறான் என்றே நினைத்து நின்றிருந்தாள்.

ஆனால் அவன் ரீகனைப் பற்றி பேசியதை அவளால் நம்ப முடியவில்லை.  ‘இந்த விசயம் எப்டி இவனுக்குத் தெரிந்தது’ என்பதுபோல பார்த்திருந்தவள் அதற்குமேல் ரீகனைப் பற்றி அஸ்வினிடம் பேச விரும்பாமல் அந்த சூழலை சமாளிக்க எண்ணி சட்டென பதில் கூறினாள்.

“அவரைப் பத்தி இப்ப எங்கிட்ட வந்து எதுக்கு சொல்லிட்டு இருக்கீங்க?” என்ற ஐடாவின் கேள்வியில் அதிர்வது இப்போது அஸ்வின் முறையானது.

“அப்ப… அன்னைக்கு மீட் பண்ணது…?” தற்போது குழப்ப முகம் தாங்கி அடுத்து பேச வந்ததை பேச முடியாமல் தயங்கி நின்றான் அஸ்வின்.

“மீட் பண்ணா?”

“மேரேஜ் ரெண்டு பேருக்கும்னு?” அஸ்வின்.

“அப்டி நான் உங்கட்ட சொன்னேனா?” ஐடா சூடாகக் கேட்டாள்.

அஸ்வினுக்கு தான் அவசரப்பட்டுவிட்டது புரிந்தது.  ஆனாலும் ரீகன் பாட்டி அன்று அப்படித்தான் சொன்னதாக தனது உறவினர் வழி தான் சேகரித்த விசயம் பொய்யா?

ஐடா கூறியதை நம்பவும் முடியாமல், உறவினர் சொன்னதை நம்பாமல் இருக்கவும் முடியாமல் நின்றிருந்தவன், “உங்க மேரேஜ் விசயமா அவங்களை அன்னைக்கு மீட் பண்ணலைன்னா நல்லதுதான்.  ஆனாலும் இந்த விசயம் உங்களுக்குத் தெரியறது நல்லதுன்னு நினைச்சேன்” என்றவன்,

“உங்க வீட்ல இன்னொரு முறை நான் வந்து பேசிப் பாக்கட்டா…” என்று துவங்கினான்.

“எங்க வீட்டுலதான் தெளிவா சொல்லிட்டாங்களே.  திரும்பவும் நீங்க தனியா வந்து பேசுறதால எந்த யூசும் இல்லை” என்றாள்.

“நீ மட்டும் சப்போர்ட் பண்ணா, கண்டிப்பா நம்ம மேரேஜ்ஜை சக்சஸ் பண்ணிறலாம்” அஸ்வின்.

“சாரி.  அது என்னால முடியாது.” என்றவள்,

“எனக்கு அர்ஜெண்ட் வர்க் இருக்கு” என்று அஸ்வினது பதிலுக்குக் காத்திராமல் அகன்றிருந்தாள்.

அவ்வப்போது ஐடாவிடம், “நீ மனசு வச்சா கண்டிப்பா நாம ஒன்னு சேர முடியும்.  நீ மட்டும் ஓகேன்னு சொல்லு” என்றெல்லாம் அவளைச் சுற்று வந்து அவ்வப்போது தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துவந்தவன், திடீரென்று ரீகனைப் பற்றி தவறாகப் பேசிச் சென்றது ஐடாவிற்கு அஸ்வின் மேல் நம்பிக்கையின்மையையே உண்டாக்கியிருந்தது.

அவனது பேச்சை நம்பத் தோன்றவில்லை.  மேலும் ஐடாவை ஒவ்வொரு முறையும் பரவசமாகப் பார்க்கும் அஸ்வினின் பார்வையைவிட, ரீகனது எந்த உணர்வுமில்லாத சலனம் தொடைத்த பார்வை ஐடாவிற்கு அஸ்வினைக் காட்டிலும் ரீகனின் மேல் நல்ல அபிப்ராயத்தை உண்டு செய்திருந்ததையும் ஐடா தற்போது நினைவு கூர்ந்தாள்.

தற்போதுவரை தன் மீதான அஸ்வினின் ஆர்வம், குறுகுறுப்பு, பார்வையில் உள்ள ஸ்பார்க்கோடு அவன் இன்று ரீகன் பற்றிப் பேசியதையும் ஐடாவால் எளிதில் நம்ப முடியவில்லை.  தனது தேவைக்காக அடுத்தவன் இலையில் பாயாசம் ஊற்றக் கேட்பதுபோல தனக்கு காரியம் ஆக வேண்டி ரீகனைக் குறை சொல்கிறானோ என்றுதான் அஸ்வினின் பேச்சு ஐடாவிற்கு தோன்றியது.

அதனால் அஸ்வினின் பேச்சை நம்பாமல் தனது பெற்றோரின் முடிவு எதுவானாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தாள்.

பங்களூர் செல்ல வேண்டி இருப்பதைப்பற்றி தாயிடம் அன்று இரவில் பேசியபோது, அஸ்வின் பேசியதைப்பற்றியெல்லாம் நினைவில் வந்தாலும் அதைப்பற்றிப் பேசவில்லை.

ஸ்டெல்லா விசாரிக்கக் கூறியிருந்த இடங்களிலெல்லாம் ரீகனது தாய் தந்தையரைக் கொண்டும், அவனது சகோதரனைக் கொண்டும், குடும்பத்தின் நற்பெயரைக் கொண்டும் ரீகனுக்கு நற்பெயரும், மதிப்பும் இருப்பதை அறிய நேர்ந்தது.

“அந்தப் பையனா?  ரொம்ப சூட்டிகை.  வேலைன்னா அவங்கிட்ட வெள்ளைக்காரன் தோத்துருவான்.  அப்படி நேரங்காலம் பாக்காமப் பாப்பான்.  அவன் அண்ணனுக்கு கப்பலை விட்டா வேற ஒன்னும் தெரியாது.

இவன் வீட்டுக்கு சின்னப் பையனா இருந்தாலும், அவங்க அப்பாவுக்குப் பின்ன அவனோட அம்மா, வயசான பாட்டி, அண்ணன் குடும்பம், சகோதரிங்க குடும்பம், அத்தோடு அம்மா வழியில வந்த தொழில், அப்பாவோட தொழில்னு எதையும் விட்டுடாம எல்லாத்தையும் பொறுப்பா பாத்துக்கற அருமையான புள்ளைப்பா” என்று சான்றிதழ் பல நபர்களிடமிருந்து வந்திருந்தது.

அதனால் மகள் பேசியபோது, “சீக்கிரமே மேரேஜ் ஃபிக்ஸ் பண்ற மாதிரி இருக்கும் ஐடா.  அதனால இனி பங்களூர் ட்ரிப்பெல்லாம் மேரேஜ்கு பின்ன வச்சிக்கற மாதிரி ஆபிஸ்ல பேசிரு.  எத்தனை நாளாகும் நீ திரும்ப சென்னை வர” என்று கேட்டறிந்துகொண்டவர், மகள் பணி நிமித்தம் பங்களூர் சென்று திரும்பியபின் திருமணத்திற்கு தேதி முடிவு செய்திருந்தனர்.

திருமணத்தை தேவகோட்டையிலும், அதன்பின் வரவேற்பை அன்று இரவே திருச்சியிலும் வைத்துக்கொள்வதாக ஏற்பாடாகி அதற்கான திருச்சபை தேவாலய வழமைகள் இரு குடும்பத்திலும் பின்பற்றப்பட்டது.

திருமணப் பத்திரிக்கைகள் வந்து அலுவலகத்தில் விநியோகிக்கும்வரை ஐடாவைத் தொந்திரவு செய்த அஸ்வின், பத்திரிக்கையைப் பார்த்ததும் அதிர்ச்சி தாங்காமல் அலுவலகத்திற்கு வருவதையே தற்காலிகமாக நிறுத்தியிருந்தான்.

ஐடாவிற்கு அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.  திருமண நாளுக்கு முன்பாகவே திருச்சபை வழக்கப்படி திருமணத்தின் மகத்துவம், குடும்ப உறவு மேன்மை, தாம்பத்தியம் மற்றும் தம்பதி இடையே நல்லுறவு பேண கடைபிடிக்கப்பட வேண்டிய விசயங்கள் அனைத்தும் சார்ந்த திருச்சபை வழங்கும் வகுப்புகளில் மணமக்கள் இருவருமே கலந்துகொண்டிருந்தனர்.

திருமண நாள் நெருங்கும்போது பாட்டி ரூபி மீண்டும் ஐடாவைச் சந்திக்க எண்ணி அழைத்திருந்தார்.  பொது இடத்தில் சந்திக்க எண்ணி ஒரு உணவகத்தை தேர்ந்தெடுத்திருந்தனர். உணவகத்திற்கு ரூபியின் அழைப்பை ஏற்று ஐடா வந்தாளா?

***