உடையாத(தே) வெண்ணிலவே 10

சில முகங்களைப் பார்க்கும் போது உள்ளுக்குள் ஏதோ ஒரு சுக உணர்வு திரண்டு வந்து நம் இதயத்தை மோதும்.

அப்படி மோதப்பட்ட உணர்வில் தான் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள் மான்யா.

அவள் உள்ளத்தில் ஏகப்பட்ட சலனங்கள், குழப்பங்கள் இடைவிடாமல் எழுவதுண்டு. ஆனால் அது அனைத்தும் மீனாட்சியம்மாளின் உறங்கும் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் துகளாய் உடைந்து மறைந்து போனதொரு மாயை.

நிர்மலம் என்ற சொல்லுக்கு அர்த்தமாக மீனாட்சியின் பெயரை அகராதியில் மொழிப் பெயர்த்துவிடலாம், அப்படி ஒரு நிச்சலனம் அந்த முகத்தில்.

ஆனால் இந்த பேரமைதிக்கு உலகம் வைத்த பெயர் பைத்தியம்!

‘இவரின் இந்த முகத்தைப் பார்த்தும் கூட எப்படி பைத்தியம் என்று அழைக்க மனம் வருகிறது இவர்களுக்கு. சே!’ என நினைத்தபடியே தன் உள்ளங்கையில் குத்திக் கொண்ட நேரம் தன்  கண் இமைகளைத் திறந்து பார்த்தார் மீனாட்சியம்மாள்.

அவர் கண்கள் எதிரிலிருந்த மான்யாவின் மீது படிந்தது.

அந்த பார்வையில் எடை போடும் பாங்கில்லை. கோபமோ அன்போ எதுவுமே இல்லை. அது ஒரு வெற்றுப் பார்வை. எந்த உணர்வையும் தன்னில் கலக்காத தூய நீரின் பார்வை அது.

அந்த பார்வை தான் மான்யாவை அவரை நோக்கி ஈர்த்தது. தன்னை மீறி “அம்மா” என்றது அவளது உதடுகள்.

அந்த வார்த்தையைக் கேட்டு அவரிடம் எந்த மாற்றம் இல்லை. அதே நிர்மலமான வெறிப்பு மட்டுமே.

‘ஏன் எதற்கும் பதிலளிக்காமல் எதுவும் தன்னை பாதிக்காமல் இப்படிஇருக்கிறார்? எது இவரை இப்படி மாற்றிவிட்டது?’ என்ற கேள்வி விஸ்தாரமெடுத்த நேரம் ஷ்யாம் உள்ளே வந்தான்.

“அம்மா, இப்போ எப்படி இருக்கீங்க?” என்று கேட்டவன் அவர் கன்னத்தை வருடியவாறே அருகில் அமர்ந்தான்.

ஷ்யாமின் கேள்விக்கு அவரிடம் எந்த அசைவும் இல்லை. அதே மொழிப்பெயர்க்க முடியாத வெறிப்பு.

ஆனால் ஷ்யாம் அவர் கவனிக்கிறாரா,  பேசுகிறாரா என்பதையெல்லாம் கவனிக்காமல் தன் போக்கில் அவருடன் பேசினான்.

மற்ற நேரங்களில் எல்லாம் கடுகடு பேர் வழியாக இருப்பவன் தாயிடமும் மகளிடமும் மட்டுமே இன்முகத்தோடு இருக்கின்றான்.

வெகு அதிசயமாக காண கிடைத்த அவனது புன்னகை முகத்தையே இமைத் தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் தாயிடம் பேசி முடித்துவிட்டு திரும்பிய  ஷ்யாமின் விழிகளில் மான்யாவின் பார்வை விழுந்தது.

“ஓய் இன்டெர்ன், என்ன பேனு முழிச்சுட்டு நிற்கிற. எனக்கு ட்ரெஸிங் பண்ணனும்ன்றதை மறந்துட்டியா” என்று கேட்டபடியே எழுந்து கொள்ள “இதோ வந்துட்டேன்” என்றபடியே அவளும் எழுந்துக் கொண்டாள்.

அவன் அமைதியாய் தன் அறையை நோக்கி நடந்தான். ஆனால் மான்யாவின் மனதில் மட்டும், அமைதியில்லை.
 
மீனாட்சியம்மாள் தான் இடைவிடாமல் அவள் இதயத்தில் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்.

‘ஏன்? எதனால்? எப்படி’ என பல கேள்விகள் அவரைப் பற்றி.

ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பதில் வைத்திருப்பவனோ இதோ இறுக்கமாய் வரும் இவனிடமே.

‘கேட்டுப் பார்க்கலாமா? சொல்வானா?’ என மனதுக்குள் யோசித்து யோசித்துப் பார்த்தவள் சட்டென்று தன்னை மீறி அந்த கேள்வியை கேட்டும்விட்டாள்.

அவனின் மௌனத்திரையை உடைக்கும் கல்லாய் மான்யாவின் வார்த்தைகள் வந்து விழுந்தது.

“அம்மா ஏன் இப்படியிருக்காங்க, ஷ்யாம்? அவங்க மனசை எது காயப்படுத்துச்சு?”

அந்த கேள்வி ஒன்றே போதுமானதாய் இருந்தது அவனை ஸ்தம்பிக்க வைக்க.

“ஏதாவது ஒரு சம்பவத்தாலே தான் இப்படி ஆனாங்களா?” என மான்யா திரும்பவும் கேட்க ஷ்யாமின் சிரம் மெல்ல அசைந்தது.

“யெஸ் ஒரு பர்டிகுலர் இன்சிடென்டாலே தான் அம்மா இறந்துப் போயிட்டாங்க” என்றவனது குரலிலோ கிளையின் முறிவு.

‘உயிரோடு இருக்கும் அன்னையை இறந்துவிட்டதாக சொல்கிறானே?ஏன்’ மான்யாவின் முகம் குழப்ப கோடு வரைந்தது.

“ஆனால் அம்மா, உயிரோட தானே இருக்காங்க…” அவள் தயங்கியபடி இழுக்க

“உயிரோட இருக்கிறது வேற. உயிர்ப்போட இருக்கிறது வேற மான்யா”  அழுத்தமாக சொன்னவனது வார்த்தைகளில் மான்யாவிற்கு ஏதோ ஒன்று புரிந்தது. ஆனால் முழுவதாக ஒன்றும் புரியவில்லையே.

“எந்த இன்சிடென்டாலே இப்படி ஆச்சு ஷ்யாம்?” தயங்கி தயங்கி அவள் கேட்க ஷ்யாமின் முகத்தில் இருள் கவிந்தது. கண்கள் முழுக்க கனல். அவன் கைகள் எதையோ நினைத்து இறுகிய சமயம்  “ஷ்யாம்” என்று மான்யாவின் குரல் இடையிட்டு ஒலித்தது.

அதில் கலைந்தவன் தனது தலையை சிலுப்பிக் கொண்டு திரும்பினான். அவனது  முகத்தில் சட்டென அந்நிய பாவம் குடிக் கொண்டது.

“பர்சனல் விஷயத்தை ஷேர் பண்ற அளவுக்கு நாம இன்னும் க்ளோஸ்  ஆகலைனு நினைக்கிறேன். யூ ஆர் இன்டெர்ன் ஐ யம் சீனியர்.சப்ஜெக்ட்லே ஏதாவது டவுட்டுனா கேளு சொல்றேன் என் பர்செனலே கேட்காதே காட் இட்” என்றவனது குறுக்குவெட்டு பதில் மான்யாவின் சொற்களை தடை செய்தது.

‘உனக்கு தேவை தான் மான்யா. இவன் கிட்டே எப்பவும் மொக்கை வாங்குறதே உனக்கு வேலையா போச்சு. இதுக்கு மேல இதைப் பத்தி இவன் கிட்டே பேசவேக்கூடாது’  முணுமுணுத்துக் கொண்டபடியே அவனுக்கு டிரெஸிங் செய்து முடித்தாள்.

“இப்போ வலி எப்படி இருக்கு?” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“என் டாக்டர் நீ தானே? என்னைக் கேட்டா என்ன அர்த்தம்?” அவன் கைகளை விரிக்க, அவளோ முறைப்புடன் பெயின் கில்லரை எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்ல முற்பட்டாள்.

“மிஸ். மான்யா?” அவன் அழைப்பிற்கு திரும்பிப் பார்த்தாள்.

“அடுத்த ரெண்டு நாளைக்கு நமக்கு ப்ரீ ப்ளான்டு சர்ஜரிஸ் இல்லை. சோ உனக்கு இப்போ இது ப்ராக்டிஸ் செக்ஷன்” என்றவன் ஒரு அலமாரியை சுட்டிக்காட்டி அங்கிருந்த பெட்டியை எடுத்துத் திறக்க சொன்னான்.

அதில் மனித உடல் உறுப்புகள் த்ரீ- டி வடிவில் செயற்கையாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அதில் இதயம் உட்பட அடக்கம்.

எல்லா உறுப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி, “லிவ்வரை எடு” என்றான். அவளும் அதை கையில் எடுத்தவாறே அவனைப் பார்த்தாள்.

“இப்போ நாம பார்ஷியல் ஹெப்போக்டாமி சர்ஜரி பண்ண போறோம். அங்கே நான் மார்க் பண்ணியிருக்கிற இடத்துலே கேன்சர் செல்ஸ் இருக்கு. இப்போ அந்த செல்ஸ் ரீமுவ் பண்ணிட்டு ஸ்யூட்சர்  பண்ணிக் காட்டு” என சொல்ல மான்யா கச்சிதமாக செய்துவிட்டு நிமிர்ந்தாள்.

அவன் கண்களில் லேசாக ஒரு மெச்சுதல் தெரிந்தது. இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் “ஓகே இப்போ அந்த ஸ்டிட்சஸ்ஸை அப்படியே ரிமூவ் பண்ணிட்டு, நம்பர் டென் சர்ஜிகல் ஸ்ட்ரிங்கு பதிலா நம்பர் சிக்ஸ் ஸ்ட்ரிங்க்லே செய்” என்றான்.

அவள் திகைத்துப் போய் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

கண்களால் கூட பார்க்க முடியாத அளவிற்கு மிக மெல்லியதான நூல் அது.

அதை வைத்து எப்படி என்னால் செய்ய முடியும் அவள் கண்களாலேயே கேள்வி கேட்க,  “முடியும் மான்யா. ஐ வில் டீச் யூ” என்று எழுந்துக் கொண்டவன் அந்த ஸ்டிரிங்கை கையிலெடுத்து லாவகமாக செய்து காட்டிவிட்டு அவள் புறம் அந்த நூலை நீட்டினான்.

தயங்கி தயங்கி வாங்கியவள் பதற்றத்தில் அந்த லிவ்வரில் கொஞ்சம் அழுத்தமாக குத்திவிட ஷ்யாமோ தலையிலடித்துக் கொண்டான்.

“ஆமாம் இப்படி தான் நல்லா குத்தனும். அப்போ தான் ரத்தம் பீய்ச்சு அடிச்சு உன் முகத்தை வாட்டர் வாஷ்கு பதிலா ப்ளட் வாஷ் பண்ணும்” என்று கத்தியவன் அவளுக்கு பின்னால் வந்து அவளது கையோடு சேர்த்துப் பிடித்தான்.

அவள் திகைத்துத் திரும்ப “கான்சென்ட்ரேட் இன்டெர்ன்” என்று சொன்னவாறே அவள் கைகயைப் பிடித்து தையல் போட கற்றுக் கொடுக்க துவங்கினான்.

“ஃபர்ஸ்ட் ஷேலோவா தான் உள்ளே ஊசியை இறக்கணும். அப்புறம் இந்த பக்கம் ஒரு இழு, அந்த பக்கம் ஒரு இழு,  சேர்த்து வைச்சு முடிப் போடனும். நூல் தெரியலைனாலும் உன் கையோட இடைவெளி தான் கணக்கு” என்று சொன்னபடியே அடுத்தடுத்து முடிச்சு போட்டுக் கொண்டிருக்க இவள் லிவ்வரை ஒரு முறையும் ஷ்யாமை ஒரு முறையும் திரும்பி திரும்பி பார்த்தாள்.

“ஓய் இன்டெர்ன். என் முகத்துலே  நவரசத்தை தேடி  ஹீரோயின் ஆகலாம்னு ட்ரை பண்றியா? ஒழுங்கா திரும்பி ஸ்டிட்சஸைப் போடு” நக்கலாக சொல்லியபடி அவன் அடுத்த ஊசியை இறக்கினான்.

“ஒரு குட்டிப் பொண்ணுக்கு அப்பாவா இருக்கிறவருக்கெல்லாம் நான் ஹீரோயின் ஆக ட்ரை பண்ண மாட்டேன் மிஸ்டர் ஷ்யாம் சித்தார்த் புரியுதா” என்றவளது பதிலைக் கேட்டு அவனது கைகள் அப்படியே நின்றது. வேகமாக அவள் முகத்தைத் திரும்பிப் பார்த்தான்.

“உங்களுக்கு டாக்டரா இருக்க தான் நான் ட்ரை பண்றேன் ஷ்யாம். தோளுக்கு ஸ்ட்ரெயின் கொடுக்கும் போது வலி வருதானு திரும்பி திரும்பி பார்த்துட்டு இருந்தேன். மத்தபடி எதுவும் இல்லை” அவள் சொன்ன நேரம் திறந்திருந்த அந்த அறையின் கதவை சம்பிரதாயமாக தட்டிவிட்டு நர்ஸ் பிரியங்கா உள்ளே வந்தாள்.

அவர்கள் இருவரும் நின்றிருந்த அந்த நிலையைக் கண்டு பிரியங்காவின் விழிகள் விரிந்தது.

கிட்டத்தட்ட இருவரும் கட்டிப்பிடித்து நிற்பது போன்ற நெருங்கிய நிலை அது.

அவள் பார்வையின் மாற்றத்தை உணர்ந்த மான்யா, சட்டென்று ஷ்யாமின் கைகளிலிருந்து தன் கைகளைப் பிரித்துக் கொண்டு விலகி நின்றாள்.

“ஓய் இன்டெர்ன் இப்படி தான் பாதிலேயே விட்டுட்டு போவியா. முழுசா முடிக்க மாட்டியா?” என்றுக் கேட்டபடி ஷ்யாம் அந்த கடைசித் தையலும் போட்டு முடித்துவிட்டு எதிரிலிருந்த நர்ஸைத் திரும்பிப் பார்த்தான்.

“சொல்லுங்க ப்ரியங்கா? எனி எமெர்ஜென்சி?” எனக் கேட்க “நோ சார். யெஸ் சார்”  மாற்றி மாற்றி சொல்லி திருதிருத்தவள் பின்பு நிதானித்து

“சார் அந்த பெரிடோசினிசிஸ் பேஷன்ட் ரொம்ப பெயினா இருக்குனு அழறாரு” என்று ஒருவாறு சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள்.

“மான்யா, போய் அந்த பேஷன்டை பார்த்துட்டு வா. நீ அடுத்து ஸ்டெடி பண்ண வேண்டியதை என் டேபிள் மேலே எடுத்து வைக்கிறேன். வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி வந்து அந்த ஸ்டெடி மெட்டீரியல்ஸை எடுத்துட்டு போ” என்று சொன்னவன் தன் சோபாவில் சென்று படுத்துக் கொண்டான்.

அவனைக் கண்டு பெருமூச்சுவிட்டவள் வேகமாக அந்த பேஷன்ட் இருக்கும் அறைக்கு வந்தாள்.

விழித்திருந்த அந்த ரேப்பிஸ்டை கண்ட மாத்திரத்தில் அவளுக்குள் கோபம் சுறுசுறுவென ஏறியது.

கண்களில் வழிந்த கண்ணீரோடு “வலிக்குது டாக்டர் முடியலை” என்று கதறினான் அவன்.

“இந்த சின்ன வலியைக் கூட பொறுத்துக்க முடியாத நீ அந்த குட்டிக் குழந்தைக்கு மட்டும் ஏன் அவ்வளவு பெரிய வலியைக் கொடுத்த?” என்று கேட்டபடியே  வலியைக் குறைப்பதற்கான மருந்தை கையில் எடுத்தாள்.

‘போயும் போயும் உன்னைப் போல ரேப்பிஸ்டை பார்த்துக்கிற நிலைமை எனக்கு வந்துடுச்சு. விஷ ஊசி போடுறதுக்கு பதிலா இந்த ஊசியை போட விட்டுட்டானே அந்த ஷ்யாம் சைக்கோ’  மனதுக்குள் நொந்தபடி அவனுக்கு இன்ஜெக்ஷனை உள்ளே இறக்கிவிட்டு வெளியே வந்தாள்.

அதன் பின்பு நிற்க கூட அவகாசமில்லாமல் வேலைகள் வரிசை கட்டிக் கொண்டு அவளை வரவேற்றன.

காலையிலிருந்து அந்த எமெர்ஜென்சி அறைக்கும் ஐ.சி.யூவிற்குமே மாறி மாறி நடந்தவள் மூச்சு வாங்கியபடி ரிசெப்ஷனிற்கு வந்து நின்றாள்.

அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்த மீரா, ஆதரவாக கூல்ட்ரிங்க்ஸை அவள் முன் நீட்ட, அந்த நேரத்திற்கு  மான்யாவிற்கு அது மிகவும் தேவையாய் இருந்தது. ஒரு புன்முறுவலுடன்  பெற்றுக் கொண்டாள்.

“காலையிலேயிருந்து செம டென்ஷன்லே” என்று மீரா கேட்க 

“யெஸ் உங்க சீனியர், சரியான டென்ஷன் பார்ட்டி. தோளிலே அடிப்பட்டு பெட்லே இருந்தாலும் காலையிலே இருந்து நிற்கவிடாமல் நாக்கு தள்ள வேலை வாங்கிட்டாரு” என  சொல்லியபடியே முதல் மிடறை விழுங்க எத்தனித்தாள்.

ஆனால் அதற்குள் அலைப்பேசி அதிர்ந்து தடை செய்தது. எடுத்துப் பார்த்தவளது முகத்திலோ ஏகத்துக்கும் பெருமூச்சு.

“இதோ கூப்பிட்டுட்டாருல, உங்க சீனியர் சர்ஜனு. நான் ஒரு ரெண்டு நிமிஷம் உட்கார்ந்தா கூட சரியா மோப்பம் பிடிச்சு கால் பண்ணிடுறாரு” சலித்தபடியே எழுந்து கொள்ள மீராவிற்கோ பாவமாக போய்விட்டது.

“டாக்டர் கேட்டா நான் பேசிக்கிறேன். நீங்க கூல்ட்ரிங்க்ஸை குடிச்சுட்டு போங்க மான்யா”, மீரா சொல்லவும் புன்முறுவலுடன் பார்வையால் நன்றி சொல்லியபடி ஆசுவாசமாக அமர்ந்து பருக ஆரம்பித்தாள்.

அதே நேரம் அந்த மருத்துவமனையின் இன்னொரு நர்ஸ் மோகனா முக சுணக்கத்தோடு வந்தாள்.

“என்ன ஆச்சு மோகனா? ஏன் டல்லா இருக்கீங்க?” மீராவின் கேள்விக்கு மோகனா தீவிரமாக திரும்பி மான்யாவைப் பார்த்தாள்.

“டாக்டர் நீங்க நம்ம ஹாஸ்பிட்டலிலே ஒரு மாசம் மட்டும் தானே இருக்கப் போறீங்கனு சொன்னீங்க?” எனக் கேட்க அவள் ஆமாமென்று தலையாட்டினாள்.

“அப்போ நாங்க எல்லாருமே உங்க கிட்டே டாக்டர்னு இடைவெளிவிட்டு ஒரு ரெஸ்பெக்டோட பழகனுமா?  இல்லை ஃப்ரெண்ட் மாதிரி உங்க கிட்டே பழகலாமா?” எனக் கேட்க மான்யாவின் இதழ்களில் புன்னகைக் கீற்று.

“இதுலே என்ன கேள்வி. நான் இங்கே ஒரு இன்டெர்ன் தான். என்னை விட நீங்க எல்லாரும் தான் இங்கே எக்ஸ்பீரியன்ஸ். நான் தான் உங்க எல்லார் கிட்டேயும் ரெஸ்பெக்டா பழகனும் நீங்க இல்லை.  உங்க எல்லாரையும் நான் ப்ரெண்ட்ஸா தான் பார்க்கிறேன்” என்று நட்புக் கரம் விரித்தாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்டு ஆசுவாசமான மோகனா, “எப்படியாவது எங்க ஷ்யாம் சாரை காப்பாத்திக் கொடுங்க மான்யா. அவர் என்னோட க்ரஷ் தெரியுமா? அவ்வளவு கம்பீரமா இருந்தவர், இப்படி பெட்லே படுத்துட்டு இருக்கிறதைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு” என்று சொல்ல மான்யாவிற்கு புறை ஏறியது.

தனது தலையைத் தட்டிக் கொண்டவாறே, “ஏதே அவர் ஹேண்ட்சமா?” என்றாள் அவசரமாக. 

“பின்னே அவர் ஹேண்ட்சம் இல்லையா? நல்லா கண்ணைத் திறந்து பாருங்க. அவர் நடக்கிற ஸ்டைல் என்ன? அந்த ஷார்ப் பார்வை என்ன?” என்றவள் பேசிக் கொண்டே போக மீரா பெருமூச்சுவிட்டாள்.

“இவள் ஷ்யாம் புராணத்தை ஆரம்பிச்சா நிறுத்த மாட்டா மான்யா. தினமும் நான் மாட்டிக்கிட்டு முழிப்பேன். இன்னைக்கு நீங்க மாட்டிக்கிட்டிங்க” என்று சிரித்தவாறே “நான் ஒரு பேஷன்டுக்கு ட்ரிப்ஸ் மாத்தனும்” என்று அங்கிருந்து கழன்று கொண்டாள்.

இப்போது மான்யாவும், மோகனாவும் மட்டும் தனியாக.

‘தன் கண்களுக்கு மட்டும் சைக்கோ ஷ்யாமாக தெரிபவன், எப்படி இவளுக்கு மட்டும் ஹேண்ட்சம் ஷ்யாமாக தெரிகிறான்’ என்றவள் ஆழ்ந்த யோசனையில் இருக்கும் போதே மோகனாவின் குரல் இடையிட்டு ஒலித்தது.

“நம்ம ஹாஸ்பிட்டலோட ஹேன்ட்சம் டாக்டருக்கு இப்படி ஆனதை என்னாலே தாங்கிக்கவே முடியலையே” என்றாள் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே.

அதைக் கண்டு சிரித்தவள், “நீங்க ஹேன்ட்சம்னு சொன்னது அவர் வைஃப்க்கு தெரியுமா? தெரிஞ்சா அடிக்க வர மாட்டாங்களா?” என்றுக் கேட்க

“இருந்தா தானே கேட்க வர முடியும்” என மோகனா தோளைக் குலுக்கினாள்.

“வாட்? அப்போ ஆரனாஷிக்கு அம்மா இல்லையா? ஷ்யாம் டிவோர்ஸியா?” என்றாள் அதிர்வாக.

“அப்ராடுக்கு படிக்க போன நம்ம ஷ்யாம் சார், திரும்பி வரும் போது கையிலே ஒரு குழந்தையோட வந்தார். அங்கேயே லவ்வாகி அங்கேயே அவருக்கும் அந்த பொண்ணுக்கும் ப்ரேக்-அப்பும் ஆகி இருக்கும் போல. எப்படியோ இப்போ நம்ம ஷ்யாம் சார் சிங்கிள் தானே. அதான் நாங்க எல்லாரும் குரூப்பா சேர்ந்து அவரை சைட் அடிக்கிறோம்” என்றாள் விளக்கும் விதமாக.

‘ஏது அந்த சைக்கோவை சைட் அடிக்க ஒரு குரூப்பையே ஆர்ம்பிச்சுருக்கங்களா?’ என மனதுக்குள் நொந்தவள் முகத்தில் கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்தபடி அவர்களைப் பார்க்க முயன்றாள்.

“சங்கத்துலே நீங்களும் உறுப்பினர் தானே மான்யா. நம்ம ஷ்யாம் சாருக்கு நீங்களும் ஒரு விசிறி தானே?” மோகனா கேட்டதும் உறுதியான மறுப்பு மான்யாவிடம்.

“அப்படி என்ன இருக்கு அந்த ஷ்யாம் கிட்டே. முகத்தை எப்போ பார்த்தாலும் ரோபா மாதிரி வெச்சுக்கிட்டு திட்டுறது தான் அவருக்கு வேலை. சிட்டி 2.0 கூட சிரிச்சுடும் போல ஆனால் இவரை சிரிக்க வைக்கிறது கஷ்டம். இவருக்கு விசிறலாம் என்னாலே முடியாது விஷ்வக்குக்கு வேணா சங்கம் ஆரம்பிங்க, நான் விசிறி ஆகுறேன்” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நர்ஸ் பிரியங்கா இடையிட்டாள்.

“மோகனா இவங்க சொல்றதை நம்பாதே. நான் இப்போ தான் ஒரு ரொமான்ஸ் சீனைப் பார்த்துட்டு வந்தேன்” என்றாள் சற்று முன் தான் பார்த்த காட்சியை நினைவில் வைத்துக் கொண்டு.

“ஐயோ, பிரியங்கா நீங்க மாத்தி புரிஞ்சுக்கிட்டிங்க. அவர் எனக்கு ஸ்வீட்சர் போட சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார்” என்றாள் இவள் சற்று விளக்கும் விதமாக.

“நோ நோ நான் நம்ப மாட்டேன். உங்க ரெண்டு பேரைப் பக்கத்துலே பார்க்கும் போது எப்படி ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது தெரியுமா?” என்று சொன்னவள் மோகனாவிடம் திரும்பி,

“ஓய் மோகனா, நம்ம மான்யாவை இந்த விஷயத்துலே மட்டும் நம்பாதே. இங்கே ஷ்யாம் சாரை பிடிக்காது அப்படி இப்படினு சொல்லிட்டு அங்கே அவர் கூட தனியா டூயட் பாடிட்டு இருக்காங்க” சிறப்பாக கொளுத்திப் போட்டாள்.

“அப்போ ஆர்மியிலே சேர மாட்டேனு நீங்க எங்க கிட்டே சும்மா புருடா விட்டுட்டு, தனியா ஒரு ட்ராக் ட்ரை பண்றீங்களா?” மோகனா கேட்கவும் மான்யாவிற்கோ தலையிலடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

“அவர் மேலே எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. ஹீ இஸ் நாட் மை டைப்” என்றாள் மறுக்கும் விதமாக.

“இல்லை நீங்க ஷ்யாம் சாருக்கு ரூட்டு விடுறீங்க” என்று மோகனாவும் பிரியங்காவும் திரும்பி திரும்பி அதே வார்த்தையை சொல்ல இல்லையென்று பல முறை மறுத்த மான்யா ஒரு கட்டத்தில் சோர்ந்துப் போய் ஆத்திரத்தில் கத்திவிட்டாள்.

“ஆமாம் ஷ்யாம் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை மடக்க தான் முயற்சி பண்றேன். இந்த ஹாஸ்பிட்டலை விட்டுட்டு போற ஒரு மாசத்துக்குள்ளே அவரை கரெக்ட் பண்ண போறேன். நீங்களே பாருங்க”  என்றவளது இறுதி வார்த்தைகள் அவளைத் தேடி அங்கே வந்த ஷ்யாமின் செவிகளில் துல்லியமாக விழுந்துவிட்டது.

அதைக் கேட்டு அவன் முகத்தில் பல மாறுதல்கள்.

இதுவரை மான்யாவின் மீது அவன் வைத்திருந்த அபிப்பிராயம் எல்லாம் சுக்கல் சுக்கலாக உடைந்துப் போக நிழலைப் போல தடயமற்று அங்கிருந்து நகர்ந்துவிட்டான் அவன்.

யோசியாமல் பேசிய அந்த ஒரு வார்த்தை தன் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை அறியாமல் அங்கே சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மான்யாவின் வாழ்க்கை நிலத்தில் காலம் பல கன்னி வெடிகளை புதைக்க ஆரம்பித்திருந்தது.

இந்த வெண்ணிலாவை உடைத்துவிடுமோ அந்த வெடி சப்தம்?