உடையாத(தே) வெண்ணிலவே 13

வெள்ளை நிறம்!

அது பரிசுத்தத்தின் நிறம். கருணையின் பிரதிபலிப்பு.

இப்படிப்பட்ட புனிதமான நிறத்தை மாட்டிக் கொண்டு அந்த கேவலமனாவனை காப்பாற்றுவதா? உள்ளுக்குள் எழுந்த கேள்வியோடு அந்த வெள்ளைக் கோட்டை கைகளில் எடுத்தாள்.

இந்த கோட்டை மாட்டிய பிறகு அவள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவள்.

ஆகவே விருப்பமிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அந்த காமுகனை இவள் இப்போது பரிசோதித்து தான் ஆக வேண்டும்.

பெருமூச்சோடு அந்த அறைக்குள் நுழைந்தவளின் பார்வை அந்த படுபாவியின் மீது விழுந்தது. வந்து சேர்ந்ததை விட இப்போது பார்ப்பதற்கு மிக ஊட்டமாக இருந்தான்.

ஒரு குழந்தையை கொன்ற இவனை தெம்பேற்றுவதற்கு குளுக்கோஸ் பாட்டில் ஒரு கேடு.

கோபத்தோடு நினைத்தவள் அதை நிறுத்திவிட்டு அவனை பரிசோதிக்க தொடங்கினாள்.

அந்த ராகுல், மான்யாவையே பார்த்தான். அந்த பார்வை அவள் மீது கம்பளி பூச்சை ஊற வைத்தது.

அவன் கண்களில் ஊசியை ஏற்ற வேண்டுமென தோன்றிய வெறியை அடக்கிக் கொண்டு ஐவியை கழற்ற முயன்றாள்.

அப்போது அவனுடைய இன்னொரு கரம் எழும்பி அவளுடைய கைகளை தடவியது.
சட்டென ஆத்திரமான மான்யா, வேக வேகமாக ஐவியை பிடுங்கினாள். அவன் வலியில் ஆவென்று கதற “அப்படி தான்டா வலிக்கும். நல்லா துடி. அந்த பொண்ணு அனுபவிச்ச வலியிலே நீ பாதி தான் அனுபவிக்கிற” பார்வையில் அனலை ஏற்றி அவனைப் பார்த்தாள்.
அவன் முகமெங்கும் வலி. 

அதை கண்டவளுக்குள்  பரம  சந்தோஷம். அவன் துடிப்பதைப் பார்த்து கண்களில் ஒருவித திருப்தி.

ஆனால் அந்த குழந்தை அனுபவித்ததை விட இவன் அனுபவிக்கும் வலி மிக மிக சிறியது. பணம் இருப்பவர்களுக்கு தண்டனை எப்போதும் மிக சிறியது தானே!

இறுக்கத்தோடு நினைத்தவள் அவனை முழுவதாக பரிசோதனை செய்துவிட்டு வெளியே நின்ற கான்ஸ்டபிளிடம் வந்தாள்.

“சார் பர்ஃபெக்ட்லி அவர் ஓகே. நீங்க அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகலாம்” என்றவள் அவரிடம் மெல்ல தயங்கி
“அவருக்கு எத்தனை வருஷம் ஜெயில் தண்டனை” என்றாள். அவரிடம் பெருமூச்சின் வெளிப்பாடு.

“யாருக்குமா தெரியும். இப்பவே ஜாமீன் கேட்டு கோர்ட்ல மனு தாக்கல் பண்ணிட்டாங்க. குறைஞ்சபட்சம் மூனுலேயிருந்து ஆறு மாசம் உள்ளே இருப்பான். அதுக்கு அப்புறம் கையிலே இருக்கிற பணத்தை வெச்சு வெளியே வந்துடுவான்” அவரின் தகவல் இவளுக்குள் கலவரத்தை உண்டாக்கியது.

வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே சிறையிலிருப்பான் என்று தெரிந்திருந்தால் அப்போதே விஷ ஊசி போட்டு கொன்றிருப்பாள் ஆனால் இப்போதோ அவனை தேற்றி வெளியே அனுப்பும் நிலை.

இயலாமையுடன் நினைத்த நேரம் அங்கே ஷ்யாம் வந்தான்.

அவனது பார்வை அந்த பேஷன்ட் கையின் மீது ஒரு முறை படிந்து மீண்டும் மான்யாவின் மீது நிலைத்தது.

“ஐ நோ இன்டெர்ன். நீ இப்படி தான் பண்ணுவ” ஒரு மாதிரி குரலில் சொன்னவன் அந்த பேஷன்டின் கைகளில் பேன்ட் ஏய்டை ஒட்டினான்.

“ராகுல். இந்தாங்க உங்களோட ரிப்போர்ட் அன்ட் பே பண்ண பில் ரிசிப்ட். இந்த செகண்டோட நீங்க எங்களோட பேஷன்ட் கிடையாது” அவனிடம் சொல்லிவிட்டு திரும்பியவன் மான்யாவை தலை சாய்த்துப் பார்த்தான்.

எந்த கணத்திற்காக அவள் இத்தனை நேரம் காத்திருந்தாளோ அந்த தருணம் வந்துவிட்டாயிற்று.

கையை முறுக்கிக் கொண்டு வந்தவள் அவனின் கன்னத்திலேயே ஒரு அறை வைத்தாள். ‘பளார்!’

“ஏய் என்ன அடிக்கிற” அடிப்பட்ட குரலோடு அவன் கர்ஜிக்க “உன்னை கொல்லாம விட்டேனுனு சந்தோஷப்படுடா” கோபமாக சொன்னவள் மீண்டும் அவன் கன்னத்தில் தன் கரத்தை இறக்கினாள்.

நெருப்பாய் காந்திய கன்னத்தை கைகளால் தேய்த்துக் கொண்டவன், “ஹே நான் வெளியே வந்த அப்புறம் உன்னை சும்மா விடமாட்டேன்டி”  என கர்ஜிக்க இந்த முறை அவன் கன்னத்தை பழுக்க வைக்கும் முறையை ஷ்யாமின் கரங்கள் ஏற்றிருந்தது.

மான்யா திகைத்து திரும்பி பார்க்க ஷ்யாம் அவசரமாக அவள் அருகில் நெருங்கி வந்தான். அவள் என்னவென்று அடுத்து யோசிக்கும் முன்பே அவளின் மீதிருந்த வெள்ளை கோட்டை கழட்டியவன், “ஓய் இன்டெர்ன், இப்போ அவனை என்ன வேணாலும் பண்ணிக்கோ நான் கேட்க மாட்டேன். பட் போலீஸ் கேஸ் வராத அளவுக்கு பார்த்து பதமா அடிச்சு அனுப்பு” என்றான் உத்தரவாக. 

இந்த ஷ்யாம் அவளுக்கு மிகப் புதியவன்.
அவனையே இமைக்காமல் பார்க்க ஷ்யாமின் விரல்கள் சொடுக்கிட்டு அவளை அழைத்தது.

“சர்ஜரி பத்தி சொன்னா தான் புரியாதுனு நினைச்சேன். சாதாரணமா பேசுனா கூடவா  உனக்கு புரியாது இன்டெர்ன்” ஷ்யாமின் கேள்வியில் கலைந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“என் உணர்வுகளை காட்டுறதுக்கு உங்களோட அனுமதி ஒன்னும் எனக்கு தேவையில்லை. நீங்க பர்மிஷன் கொடுத்தாலும் சரி கொடுக்கலைனாலும் சரி. இவனை அடிச்சு துவைக்க தான் போறேன்” வேகமாக சொன்னவளின் கரங்கள் ஒவ்வொன்றும் அந்த ரேப்பிஸ்டின் மீது இடியாக இறங்க ஷ்யாமின் இதழ்களில் சிறு புன்னகை. அதை வெளிக்காட்டாமல் அவ்விடம் விட்டு அகன்றான்.

தன் மனம் ஆறும் மட்டும் அவனை அடித்து ஓய்ந்தவள் பெரும் நிம்மதியுடன் அந்த அறையை விட்டு வெளியே வந்து தண்ணீர் பருகினாள்.

அதே நேரம் ஒரு குழந்தை நிற்க கூட திராணியில்லாமல் நாற்காலியில் சோர்வாக அமர்ந்தபடி தன் குட்டிக் கண்களை சுருக்கி அந்த மருத்துவமனையே அளவிட்டது.

அந்த குழந்தையின் அருகே யாருமில்லை.
ஒரு வேளை தொலைந்திருப்பாளோ என்ற கேள்வியுடன் மான்யா அந்த குழந்தையின் அருகே மண்டியிட்டு “குட்டி யாரைத் தேடுறீங்க?” என்று வினவினாள்.

“நான் யாரையும் தேடலை. இந்த இடத்தைப் பார்த்துட்டு இருக்கேன். இந்த ஹாஸ்பிடெல் சூப்பரா இருக்கு. இதே மாதிரி ஒரு பில்டிங் கட்டப் போறேன்” அந்த சிறுமி தன் எண்ணத்தை சொல்ல இவள் வாயைப் பிளந்தாள்.

“ஓ ஃப்யூச்சர் இன்ஜினியரா நீங்க” மஞ்சளில் கரைத்த அந்த குழந்தையின் கன்னத்தைத் தட்டியபடி கேட்க, “நோ நோ ப்ரசென்ட் இன்ஜினியர்” திருத்தி சொன்னது அந்த சிட்டு.

“ஓகே ஓகே ப்ரசென்ட் இன்ஜினயர்” சிரித்தபடி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த குழந்தையின் அம்மா அங்கே வந்தார். அவரது முகத்தில் ஏகத்துக்கும் பதற்றம்.

“ஒரு நிமிஷம் அம்மாவை பயமுறுத்திட்டியேடா. இடம் மறந்து எங்கேயோ போயிட்டியோனு கலவரமாகிட்டேன்” கவலையில் பேசிக் கொண்டிருந்தவரை மான்யா புன்முறுவலுடன் நோக்கினாள்.

“நம்ம ப்ரெசன்ட் இன்ஜினியர் பில்டிங் அளவெடுக்க வந்தாங்கமா. நாங்க கன்ஸ்ட்ரக்ஷன் பத்தி பேசிட்டு இருந்தோம்” மான்யா புன்முறுவலோடு சொல்ல அந்த தாயின் முகத்தில் பெருமூச்சு.

“மயக்கத்துலே இருந்தா கூட இன்ஜினியர்னு சொன்ன எழுந்து உட்கார்ந்துடுவா. வாலு” செல்லமாக கடிந்தபடி சொல்ல மான்யாவின் இதழ்களில் புன்னகை.

“ஸ்வீட் கேர்ள். ஆமாம் பாப்பா பேரு என்ன?” கொஞ்சியபடி கேட்க “ஸ்வேதா.ஜி என்ஜினியர்” என்றாள் துருதுருப்பாக.
அந்த பெயரைக் கேட்டதும் மான்யாவின் மூளையில் மின்னலடித்தது.

ஷ்யாம் காலையில் கொடுத்த சர்ஜரி ஃபைலில் இருந்த பெயர் அது. ஒரு வேளை அந்த குழந்தை தான் இந்த குழந்தையா? குழப்பத்தோடு நிமிர்ந்தாள்.

“யாருக்கு ட்ரீட்மென்ட் பார்க்க வந்து இருக்கீங்க?” என்றவளின் கேள்விக்கு “இவளுக்கு தான்” என்று குழந்தையை சுட்டிக் காட்டியது அந்த தாயின் கரம்.

அதுவரை புன்னகையில் ததும்பிக் கொண்டிருந்த மான்யாவின் முகத்தில் இப்போது வருத்தப் புயல்.

அந்த குழந்தையின் கன்னத்தை வாஞ்சையாக வருடிக் கொடுத்தவள் “எல்லாம் சரியாகிடும்டா. குட்டி இன்ஜினியர் பெருசாகி நிறைய வீடு கட்டப் போறீங்க” நம்பிக்கையாக சொன்னவளின் முன்பு கையை விரித்தாள் ஸ்வேதா.

“எனக்கு தூக்கம் தூக்கமா வருது டாக்டர். தூங்கிட்டே இருக்கனும் போல இருக்கு.  அப்புறம் எப்படி என்னாலே முழிச்சு இருந்து வீடு கட்ட முடியும்?” அவளின் கேள்விக்கு மௌனத்தையே பதிலாக தந்த மான்யா, அவர்களுக்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்து வந்தாள்.

சட்டென்று அந்த மருத்துவ அறையில் பொருந்திப் போனது அந்த குழந்தை.
வேகமாக சென்று கட்டிலில் படுத்தவள் தன் வலது கையை நீட்டி “ஐவி ஏத்துங்க டாக்டர்” என சொல்ல மான்யாவிற்கோ நெகிழ்ந்துப் போனது.

எத்தனை முறை மருத்துவமனைக்கு வந்திருந்தால் இத்தனை அளவுக்கு மனதினில் பதிந்திருக்கும் என நினைத்தவள் அந்த குழந்தையின் கையைப் பிடித்து “இன்னும் கொஞ்சம் நாள் தான்டா. அப்புறம் ஹாஸ்பிட்டெல் பக்கமே வர வேண்டியிருக்காது. ஸ்வேதாவை ஸ்ட்ராங் கேர்ள் ஆக்கிடலாம்” ஆதரவாக சொன்னவள் தேவையான எல்லா டெஸ்ட்டையும் எடுத்துக் கொண்டு வந்தவளுக்கு பொறுப்பு கூடிய உணர்வு.

முன்பை விட தீவிரமாக அந்த த்ரீ-டி லிவரை எடுத்து பயிற்சியில் ஈடுபட்டாள்.
ஷ்யாம் கொடுத்த மெடிக்கல் ஹிஸ்டரியை பார்த்தவளுக்கு ஒன்று மட்டும் துலக்கமாக தெரிந்தது. அத்தனை இலகுவாக இந்த சர்ஜரி இருக்காது என்பது.

ஏற்கெனவே மஞ்சள் காமாலை வேறு வந்துவிட்டிருக்க அந்த குழந்தை கேன்சரின் இறுதிக் கட்டத்தில் இருப்பது தெளிவாக புரிந்தது. கல்லீரல் சுவற்றில் இருக்கும் திசுக்கள் அதிகமாக சிதைந்திருக்க வாய்ப்பிருப்பதை உணர்ந்தவள் சிந்தனை முடிச்சோடு அந்த ரிப்போர்ட்டையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அதே நேரம் அவளைப் பார்ப்பதற்காக வந்த ஷ்யாம், மான்யாவின் யோசனை பின்னிய முகத்தை கண்ணாடி ஜன்னல் வழியே கண்டு அப்படியே நின்றான்.

மான்யா இந்த சர்ஜரிகாக எவ்வளவு மெனக்கெடுகிறாள் என்பது புரிய மெல்லிய புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தான்.

ஆளரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான்யாவின் முன்பு பென் டிரைவ் மற்றும் கோப்புகளை வைத்தவன் “இதுலே ஹெப்போடாமி சர்ஜரிகான மெடிரியல்ஸ் வெச்சு இருக்கேன். கோ த்ரூ பண்ணு”  என்று சொல்ல அவள் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

“அந்த பேஷன்டோட ரிசல்ட்ஸ் வந்துடுச்சா?” இவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதவைத் தட்டிவிட்டு மீரா டெஸ்ட் ரிசல்ட்ஸோடு உள்ளே நுழைந்தாள்.

“ஷ்யாம் சார் ஹெப்போடோமி சர்ஜரி பேஷன்ட் ரிசல்ட்ஸ் வந்துடுச்சு” தகவலாக சொல்லிவிட்டு அந்த ரிப்போர்ட்டை வைத்துவிட்டுப் போக எடுத்துப் பார்த்த மான்யாவின் முகத்தில் அதிர்ச்சி.

அதைக் கண்ட ஷ்யாம் குழப்பத்தோடு அந்த ரிப்போர்ட்டைப் பார்க்க அவனுக்கும் அது அதிர்ச்சியாக தானிருந்தது.

அந்த குழந்தைக்கு கல்லீரலில் வெகு தீவிரமாக கேன்சர் பரவியிருக்க நுரையீரலிலும் அந்த கேன்சர் செல்கள் தன் தடத்தை பதித்திருந்தது.

இது கஷ்டமான சர்ஜரியாக இருக்குமென்று தான் இருவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பெரும் சவாலான சர்ஜரியாக இது இருக்கப் போவதை உணர்ந்தவர்களின் மனதில் கவலையும் கலக்கமும் ஒரு சேர அரும்பியது.

“நாம ஹெப்பிடோமி சர்ஜரி பண்ணும் போது லங்க்ஸ் மால்ஃபன்க்ஷன் பண்ணா என்ன பண்றது?” மான்யாவின் கேள்விக்கு ஷ்யாமிடம் தீவிரமான யோசனை.
“நான் இப்போ பேஷன்டோட அம்மா கிட்டே பேசனும். பேசி முடிச்சுட்டு சர்ஜரி பண்ணலாமா வேணாமான்றதை சொல்றேன்” அவசரமாக சொல்லிவிட்டு சென்றவனையே கலக்கத்தோடு தொடர்ந்தது மான்யாவின் விழிகள்.