உடையாத(தே) வெண்ணிலவே 15

வாழ்க்கை!

சில பேருக்கு அது  மிக குறுகிய சாலை, பல பேருக்கு அது நீளும் நெடுஞ்சாலை.

‘இதில் ஸ்வேதா செல்லப் போகும் சாலை எதுவாகயிருக்கும்?’ வினா உள்ளுக்குள் எழுந்த அடுத்த கணமே மான்யாவின் முகம் வேதனையானது.

அதீத சோர்வுடன் காணப்பட்ட ஸ்வேதாவின் விரல்களை ஆதூரமாகப் பற்றிக் கொண்டாள்.

“கவலைப்பாடதே இன்ஜினியர், சீக்கிரமா குணமாகி  நீ  பெரிய பெரிய பில்டிங் கட்டப் போறே” மான்யாவின் வார்த்தைகள் கேட்டு ஸ்வேதாவின் இதழில் புன்னகை கீற்று.

“யெஸ் பிக் பிக் பில்டிங்க்ஸ் கட்டப் போறேன்” வார்த்தைகளில் உற்சாகமிருந்தாலும் உடலில் அது பிரதிபலிக்கவில்லை.

அவள் முழுஉற்சாகத்தை வெளிக் கொணர மான்யா நேற்று வாங்கி வைத்த பில்டிங் ப்ளாக்ஸை நீட்டினாள். அதைக் கண்டதும் ஸ்வேதாவின் இதழ்களில் புன்னகை வளைவு.

“எனக்கா ஆன்டி?” என்றாள் பில்டிங் ப்ளாக்ஸை கைகளால் வருடியபடி.

“ஆமாம்டா. நாளைக்கு சர்ஜரி முடிஞ்சு நீ கண்விழிச்சதும் நாம பில்டிங் கட்டலாம்” என்றாள் குழந்தையின் கன்னத்தைத் தட்டியபடி.

ஸ்வேதாவிடம் இயல்பாக பேசி சர்ஜரி பற்றிய பயத்தைப் போக்க முயலும் மான்யாவையே நெகிழ்வாகப் பார்த்தார் லஷ்மி.

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்றவரின் குரலில் நன்றி கசிவு.

“எதுக்குமா தேங்க்ஸ்” நன்றியை மறுத்தவள் சிறுப் புன்னகையுடன் மருத்துவமனை முகப்பை வந்தடைய எதிரில் ஷ்யாம்.

இந்நேரத்துக்கு இவன் வீட்டிற்கு கிளம்பிருக்க வேண்டும். ஆனால் ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கின்றான்? கேள்வியை கண்களில் தேக்கி அவனைப் பார்த்தாள்.

“நேத்து சொன்னது மறந்து போச்சா இன்டெர்ன். எங்க அம்மா டைம்க்கு சாப்பிட்டு மாத்திரை போடணும். சோ” என்றவன் நின்றிருந்த காரை சுட்டிக் காட்டினான்.

மறுவார்த்தைப் பேசாமல் ஏறிக் கொண்டவளின் அருகே ஷ்யாம் அமர்ந்ததும் ட்ரைவர் காரை கிளப்பினார்.

சாலையை வெறித்தபடி வந்த மான்யாவின் இதயத்தில் நாளைய சர்ஜரிப் பற்றி ஏகப்பட்ட கேள்விகள்.

இன்ஜினியரை காப்பாற்ற முடியுமா? முதல் சர்ஜரியில் ஏற்பட்ட பிழை மீண்டும் நிகழ்ந்துவிடுமோ? தன்னால் முடியுமா? கேள்விகள் குழப்பங்கள் அவள் இதயத்தை சிலந்தியாய் பின்னியது.

அவள் முகத்திலிருத்த கலக்கத்தைக் கண்டவன், “நாளைக்கு பண்ண போற சர்ஜரி நினைச்சு பயமா இருக்கா மான்யா?” என்றான் மெல்லிய குரலில்.

அவன் வார்த்தையில் கலைந்தவள் “இல்லையே நான் ஏன் பயப்பட போறேன். நான் இன்ஜினியரைக் காப்பாத்திடுவேன்” என்றாள் குரலில் அழுத்தம் கூட்டி.

ஆனால் அந்த குரலில் மறைந்திருந்த பயத்தையும் கலக்கத்தையும் கண்டவன் அவளைக் கூர்ந்துப் பார்த்தான்.

“இன்டெர்ன் நீ பயப்படுற. ஆனால் அதை ஓவர் கான்ஃபிடென்ஸ்ன்ற போர்வைப் போர்த்தி மறைக்க பார்க்குற” அவன் குரல் குற்றம் சாட்ட மான்யாவின் தலை சரிந்தது.

“மான்யா நான் ஆரம்பத்துலே இருந்து உன் கிட்டே பயப்படுற ஒரே விஷயம் உன்னோட ஓவர் கான்ஃபிடென்ஸ். உன்னாலே பண்ண  முடியாதுனு தோன்ற பட்சத்துலே அழுத்தமா நோ சொல்ல கத்துக்கணும். அதை விட்டுட்டு என்னாலே எல்லாம் பண்ண முடியும்ணு கையை மடிச்சுக்கிட்டு கிளம்பக்கூடாது” என்றான் அவள் கண்களை ஊடுருவி.

“எப்பவும் மனசுலே பெருக்கெடுக்கிற உணர்வுகளுக்கு கையை நடுங்க வைக்கிற சக்தி இருக்கு. அதனாலே தான் சர்ஜிகல் கத்தியை எடுக்கும் போது உன்னை ரோபோவா இருக்கேன் சொல்றேன். பேஷன்ட்டை மரக்கட்டையா பார்க்க சொல்றேன்” என்றவனை இப்போது மான்யா நிதானமாக பார்த்தாள்.

“அப்புறம் ஏன் ஷ்யாம், மீனாட்சியம்மாக்கு உடம்பு முடியலைனதும் உங்க கை நடுங்குச்சு” அவன் வார்த்தைகளை வைத்தே அவனை வளைத்துப் பிடிக்க முயன்றாள்.

“இன்டெர்ன் என்னை மடக்கிட்டதா நினைப்பா? நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொன்னேனே நியாபகமிருக்கா?” அவனின் கேள்விக்கு இவள் புருவங்களில் வளைவு.

“என்னாலே என் அம்மாவுக்கு சர்ஜரி பண்ண முடியாதுனு தோணுச்சு சோ நான் பண்ணல. நான் உன்னை மாதிரி ஓவர் கான்ஃபிடென்ட் ஆளு கிடையாது. நோ சொல்ல வேண்டிய இடத்துலே நோ சொல்லிடுவேன்” அவன் நிறுத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

“உனக்கு சப்போர்ட்டா விஷ்வக்கும், கைட் பண்ண நானும் பக்கத்துலே இருப்போம். உன்னாலே இந்த சர்ஜரி பண்ண முடியும் தானே மான்யா? பட் யெஸ் சொல்லிட்டு ஏதாவது ஏடாகூடம் மட்டும் பண்ணி வைச்ச ஸ்கேல்பல் எடுத்து மூஞ்சுலே கோடு போட்டுடுவேன்”

அவன் இறுதி வாக்கியத்தில் முகம் சுருக்கினாலும் முதல் வாக்கியத்தில் ‘விஷ்வக்கும் உடன் இருப்பான்’ என்ற தகவல் கிடைத்ததும் அவள் முகத்தில் நம்பிக்கை வெளிச்சம் கூடியது.

“கண்டிப்பா என்னாலே பண்ண முடியும் ஷ்யாம்.என் இன்ஜினியரை நான் காப்பாத்திடுவேன்” நம்பிக்கையோடு சொன்னவளுக்கு ஷ்யாம் சில சர்ஜரி நுணுக்கங்களை சொல்லி முடிக்கும் போதே கார் வீட்டிற்குள் நுழைந்து ஷெட்டில் வந்து தேங்கி நின்றது.

“அப்பா” என்ற சந்தோஷ குரலோடு ஓடி வந்தாள் ஆஷி.

ஷ்யாம் அங்கே அருகிலிருந்த  குழாயில் கை கழுவியபடி, “வீட்டுக்குள்ளே தானே வரப் போறோம். அதுக்குள்ளே ஏன்டா கார் ஷெட் வரை ஓடி வந்த” என்றான் செல்ல கண்டிப்புடன்.

“இதுக்காக தான் ஓடி வந்தேன்பா. லவ் யூ” கன்னத்தில் முத்தமிட்ட மகளை தூக்க முயன்றான்.

அவள் அடிப்பட்ட தோளை சுட்டிக்காட்டி மறுக்க ஷ்யாமோ ஒன்றுமில்லை என்பதைப் போல கண்ணடித்துவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டான்.

மகளை தோளில் சுமக்க எந்த தகப்பனுக்காவது வலிக்குமா!

அந்த தகப்பன் மகள் பாசத்தை ஏக்கமாக பார்த்தது மான்யாவின் விழிகள்.

அதைக் கண்ட ஆரனாஷி, ஷ்யாமின் தோள்களில் இருந்தபடியே மான்யாவை இழுக்க எதிர்பாராத இந்த தாக்குதலில் மான்யாவின் நெற்றியும் ஷ்யாமின் நெற்றியும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டது.

திகைத்தவாறே விலகப் போக எத்தனித்த மான்யாவை மீண்டும் அருகில் இழுத்த ஆரனாஷி அழுத்தமாக கன்னங்களில் இதழ் பதித்து “லவ் யூ” என்றாள்.

ஆரனாஷியின் இந்த செயலில் ஷ்யாம் முகத்தில் ஏகத்துக்கும் அதிர்ச்சி. எதிரும் புதிருமாய் நின்று இருந்தவர்கள் இப்போது ஒட்டி உறவாடுவதன் ரகசியம் புரியாமல் திகைத்தான்.

இந்த திடீர் செயலில் வேர் விட்டு நின்றவனை ஆரனாஷி அசைத்தாள்.

“அப்பா நீங்க ரெண்டு பேரும் இடிச்சுக்கிட்டீங்களே. மறுபடியும் முட்டாம விட்டா கொம்பு முளைச்சுடும். சோ இன்னொரு தடவை இடிங்க பா” ஆரனாஷியின் கோரிக்கைக்கு ஷ்யாம் இடவலமாக தலையசைத்து மறுத்தான்.

“ஆஷி டிவி அதிகமா பார்த்து கெட்டுப் போய் இருக்க நீ” பதிலோடு நகர முயன்றவனை ஆஷி கெஞ்சலாக பார்த்தாள்.

கேட்காமலேயே மகளின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவன் அவளது கெஞ்சலுக்கு இளகலாமா போய்விடுவான்?

பெருமூச்சோடு திரும்பியவன், இது தான் சாக்கென்று நச்சென்று மான்யாவில் தலையில் ஒரு இடி வைக்க அவளுக்கு கிறுகிறுத்துப் போனது.

“யூ சைக்கோ” கோபத்தில் முணுமுணுத்துக் கொண்டே நெற்றியைத் தேய்த்துக் கொண்டு திரும்பியவளின் கண்கள் அந்த ஆடி காரைக் கண்டதும் கோலி குண்டாய் உருண்டது.

வேகமாக ஓடி ஷ்யாமின் முன்பு நின்றவள் “அது உங்களோட காரா?” என்றாள் கேள்வியாக.

“ஆமாம் எங்க அப்பாவோட காரு தான். எப்பவும் அப்பா தான் ட்ரைவ் பண்ணுவாரு. யாரையும் தொட விடமாட்டாரு” ஆரனாஷி உபரி தகவல் தந்துவிட்டு ஷ்யாமின் புறம் திரும்பிய ஆஷி, “அப்பா இன்னைக்கு என் ப்ரெண்ட்ஸ் வீட்டிற்கு வந்து இருக்காங்களே” என்றாள் குதூகலத்துடன்.

“அப்போ நீங்க தான் அன்னைக்கு என்னை இடிக்க வந்த ஆசாமியா?” என்றாள் கோபமாக.

ஷ்யாமிடம் அசட்டையாக ஆம் என்ற தோள் குலுக்கல் ஆனால் ஆரனாஷியின்  முகத்தில் ஒரு வித பதற்றம்.

“எப்படி நீங்க என்னை இடிக்க வரலாம்?” மான்யாவின் கேள்விக்கு, நக்கலாக பதில் சொல்ல வாய் திறந்த ஷ்யாமின் உதடுகள், “எப்படிபா நீங்க அவங்களை இடிக்க போகலாம்” என்ற ஆஷியின் கேள்வியில் பிளந்து நின்றது.

அவன் நினைவு சரியாக மான்யா மருத்துவமனையில் சேர்ந்த முதல் நாளிற்கு சென்று நின்றது.

அன்று அந்த காரில் அவனுடன் ஆஷியும் தான் இருந்தாள். அன்று மான்யா திட்டிய வார்த்தைகளை ஷ்யாம் பெரியதாக சட்டை செய்யாமல் முன்னோக்கி ஓட்ட முனைந்தவனை தடுத்தது ஆஷியின் கரம்.

தன் தகப்பனை திட்டிய ஆத்திரத்தில் “அப்பா ரிவர்ஸ் எடுங்கபா. உங்களை திட்டுனவங்களை அப்படியே சும்மா விட்டுட்டுப் போகக்கூடாது” என்று அன்று சொன்ன ஆரனாஷியா இன்று மான்யாவிற்கு நியாயம் கேட்க கூட்டு சேர்ந்துக் கொண்டாள்.

“என்னடா நடக்குது இங்கே!” ஷ்யாம் குழம்பியபடி ஆஷியைப் பார்க்க, அவளோ எதையும் சொல்லிவிடாதே என்று சைகையால் கெஞ்சினாள்.

“ஷ்யாம் அன்னைக்கு நேரா கேட்க முடியலை. இப்போ கேட்கிறேன். ஆடி காரை வெச்சுட்டு இருந்தா ஆடிட்டே போகலாம்னு நினைப்பா?” என்றாள் எகத்தாளமாக.

அந்த கேள்வியில் கையை முறுக்கியவன் “மான்யா உன்னை” என்று ஏதோ பேச வர ஆஷி இடையில் புகுந்தாள்.

“அப்பா என்ன இருந்தாலும் நீங்க பண்ணது சாரி கேளுங்க” என்ற ஆஷியைக் கண்டு அவன் முகத்தில் ஈயாடவில்லை.

ஒரே நேரத்தில் எத்தனை அதிர்ச்சிகளை அவன் இதயம் தாங்கும்!

“ஆஷிமா அப்பாவையாடா சாரி கேட்க சொல்ற?” என்றான் மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக.

“ஆமாம் பா ப்ளீஸ் சாரி கேட்டுடுங்களேன்” ஆஷி இமைகளை சுருக்கி புருவங்களை வளைத்து கேட்ட விதத்தில் ஷ்யாமால் மறுக்க முடியவில்லை.

பல்லைக் கடித்து கொண்டே சாரி என்றவனிற்குள், ‘என் பெண்ணை வைத்த என்னை மன்னிப்பு கேட்க வைத்துவிட்டாளே!’ என்ற ஆற்றாமை பெருக நடையின் வேகத்தில் கூட்டல்.

ஷ்யாமா அந்த வார்த்தையை சொன்னது. அவனா? அந்த அழுத்தகாரனா தன்னிடம் மன்னிப்பு கேட்டான்.

மான்யா திகைப்பாய் பார்க்க ஷ்யாமின் தோள்களில் இருந்த ஆரனாஷி இவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.

‘ஆக ஷ்யாம் என்னும் ரோபோட்டை கட்டுப்படுத்தும் ரிமோட் ஆரனாஷியிடம் மட்டுமே இருக்கிறது’  புன்னகைத்தபடி வீட்டிற்குள்  நுழைந்த தன்னை ஷ்யாம் கூர்மையாக பார்த்ததை இவள் அறியாமல் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு  மீனாட்சியம்மாளின் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே லயா கன்னங்களில் கைகளைத் தாங்கியபடி மீனாட்சியம்மாளையே இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

மான்யா உள்ளே வந்து என்னவென்று கேட்க, “சாப்பிடுறதுக்கு முன்னாடி போட வேண்டிய மாத்திரையை கிட்டே கொண்டு போனாலே தட்டி விடுறாங்க” என்றாள் சலிப்பான குரலில்.

மான்யா லயாவிடமிருந்து அந்த மாத்திரையை வாங்கி கொடுக்க, மீனாட்சியின் உதடுகள் தானாக திறந்துக் கொண்டது.

அதைக் கண்டு லயாவின் உள் மனதில் பெரும் அடி. இத்தனை வருடங்கள் பார்த்துக் கொண்டும் புதியதாக வந்தவளின் மீது இத்தனை பாசம் காட்டுகிறாரே. என் இடத்தை இவள் பிடித்துவிடுவோளோ!

வஞ்சம் பெருகியது லயா கண்களில்.
இதே வஞ்சம் தான், காலையில் மீனாட்சியம்மாள் எந்த செயலுக்கும் ஒத்துழைக்காத போது அவர் கைகளை வலிக்க வலிக்க கிள்ள வைத்தது.

அப்படி தான் செய்து இருக்கக்கூடாது தான் ஆனால் எதற்கும் ஒத்து வராமல் முரண்டு பிடித்த மீனாட்சியம்மாளை  ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டாள்.

இதை மட்டும் ஷ்யாம் கண்டு கொண்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தோடு  கிளம்பி கீழே வந்தவள் அங்கே நின்றிருந்த ஷ்யாமை கண்டதும் எம்பி துடித்தது.

“அம்மா எப்படி இருக்காங்க லயா?”
இது ஷ்யாம் எப்போதும் கேட்கும் கேள்வி. ஆனால் இன்று வழக்கத்திற்கு மீறி அவளுக்கு வியர்த்தது.

“அது நல்லா தான்” தந்தியடித்த அவளது வார்த்தைகளின் வித்தியாசத்தை ஊன்றிக் கவனித்தவன் “என்னாச்சு லயா?” என்றான் அழுத்தமாக.

“அது அம்மா கையிலே” முழுவதாய் முடிக்க முடியாமல் திண்டாடினாள்.

“என்னாச்சு லயா அம்மாவுக்கு ஏதாவது ஆகிடுச்சா? நீ கேர்ஃபுலா இருந்து இருக்கக்கூடாதா? உன்னை நம்பி தானே விட்டுட்டுப் போனேன்” ஷ்யாமிடம் ஏகத்துக்கும் பரபரப்பு.  அவனுடைய கேள்வி லயாவை பயத்தில் பொய் சொல்ல வைத்தது.

“இல்லை, அம்மா கையிலே காயத்தை பார்த்தேன். மான்யா தான் இதுக்கு காரணமா இருப்பாங்களோனு தோணுது. ஒரு வேளை மீனாட்டசியம்மாவை மிரட்டி தான் மான்யா தன் பேச்சை கேட்க வைக்கிறாங்கனு நினைக்கிறேன்?”  படபடப்பாக பொய்யுரைத்தவள் வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

லயா சொன்ன வார்த்தைகளை ஷ்யாமால் நம்ப முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

வேகமாக ஓடிச் சென்று தன் அன்னையின் கரத்தை ஆராய்ந்துப் பார்த்தான். அது கிள்ளிய தடத்தை சுமந்திருந்தது.
அதைக் கண்டதும் அவன் விழிகளில் ரௌத்திரம்.

ஆத்திரத்துடன் இறங்கியவனை அங்கே கண்ட இன்னொரு காட்சி கோபத்தின் விளிம்பிற்கு தள்ளியது.

ஆஷியின் நண்பர்கள் “உன் அம்மா ரொம்ப அழகா இருக்காங்க” என்றதும், “என் அம்மா என்னை மாதிரியே செம அழகு” என்றாள் மான்யாவை கட்டிக் கொண்டு.

ஆஷியின் அம்மா என்ற வார்த்தையைக் கேட்டதும் ஷ்யாமின் விரல்கள் இறுகியது.

“ஓகே ஆன்டி நாங்க அப்புறம் வரோம்” என்றவர்கள் விடைப் பெற்று கொள்ள ஆஷியும் மான்யாவிடம் திரும்பி, “நான் அவங்களை கேட் வரைக்கும் போய் விட்டுட்டு வந்துடுறேன் அம்மா” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

மான்யா தலையாட்டிவிட்டு திரும்பிய போது அங்கே ஷ்யாமின் முகம் நெருப்பின் தகிப்பாய்.

“ஆஷிக்கு நீ அம்மாவா? இது எப்போ இருந்து?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.கொஞ்சம் வழி விடுறீங்களா. நான் போகணும்” என்றாள் அசட்டையாக.

“இன்டெர்ன் நீ உன் எல்லையை மீறி போற. முதலிலே என் அம்மாவை உன் பக்கம் இழுத்த, இப்போ என் பொண்ணையும் உன் பக்கம் இழுத்துட்ட. இதெல்லாம் எதுக்காக பண்ற நீ?” என்றவனின் கேள்விக்கு மான்யாவிடம் பெருமூச்சே வெளிப்பட்டது.

எத்தனை தரம் இதே கேள்வியை கேட்டு என்னை வதைப்பான் இவன்? சலிப்பாக நிமிர்ந்தவளின் மனம் “நீ என்னை கவுக்கிறதுக்காக தானே இது எல்லாமே பண்ற மான்யா” என்ற வார்த்தைகளில் ஆத்திரமானது.

“ஆமாம் உங்களை மயக்கிறதுகாக தான் பண்றேன் சந்தோஷமா. இப்படிப்பட்ட ஒரு மன்மதனை மயக்கிறதுக்கு தான் இந்தளவுக்கு மெனக்கெட்டுட்டு இருக்கேன்” மான்யா  எகத்தாளமாக சொல்லிவிட்டு இதழில் கேலி சிரிப்பு வரைய ஷ்யாமின் கையோ அவளை இறுகப் பிடித்தது.

“மான்யா யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்ஸ். என் பொண்ணை விட்டுடு. நீ அவளுக்கு அம்மா இல்லை. ஆகவும் முடியாது” என்றான்  பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்.

“விட முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவீங்க? நான் அவளுக்கு அம்மாவா தான் இருப்பேன்”  மான்யா துடுக்காக சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஷ்யாம் அவளது கழுத்தை இறுக்கிப் பிடித்தான்.

“நானும் எவ்வளவு பொறுமையா சொல்றது. அடுத்த தடவை அம்மான்ற வார்த்தையை சொல்ல உன் தொண்டை இருக்காது ஜாக்கிரதை” கர்ஜித்தவனின் பிடி நொடிக்கு நொடி கூட மான்யா பதிலுக்கு அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தாள்.

தன் நண்பர்களை விட்டுவிட்டு உள்ளே நுழைந்த ஆஷி மான்யாவின் கழுத்தை தன் தகப்பன் பிடித்திருப்பதைப் பார்த்ததும், “அப்பா அவங்களை விடுங்க” என்று கத்தினாள். ஆனால் ஷ்யாமின் கை தளரவே இல்லை.

அதைக் கண்ட ஆரனாஷி வேகமாக வந்து ஷ்யாமின் கால்களில் பளீரென்று ஒன்று வைக்க பெரியவர்கள் இருவரும் திகைத்து திரும்பினர்.

“ஆஷிமா அப்பாவையா அடிச்ச?” ஷ்யாம் அதிர்ச்சியில் கேட்க, “மானு அம்மாவை விடுங்க அப்பா அவங்களுக்கு வலிக்கும்ல” என்றாள் பதிலாக.

“ஆஷி அவள் உனக்கு அம்மா இல்லை. முதலிலே அதை நியாகத்துலே வெச்சுக்கோ. இனி அம்மானு கூப்பிடாதே” ஷ்யாமின் குரலில் கண்டிப்பு.

“நான் சொல்லுவேன்” என்று உறுதியோடு சொன்ன ஆஷியைப் பார்த்து அவனுக்குள் ஏதோ ஒன்று முறிந்தது.

இதுவரை தன் சொல்லை தட்டாத மகள் இப்போது மான்யாவின் எதிராக தன்னை எதிர்த்து பேசவும் கோபம் கண்ணை மறைத்தது.

ஆற்றாமையில் ஆஷியின் முதுகில் பளாரென்று வைத்தவன், “சொல்லக் கூடாதுனு சொன்னா சொல்லக் கூடாது ஆஷி. இவள் உனக்கு அம்மா இல்லை”  கோபத்தில் கர்ஜித்தான்.

இதுவரை தன்னை அடிக்காத தந்தை முதல் முதலாக அடித்த அதிர்ச்சி ஆஷியின் விழிகளில் அப்பட்டமாக தெரிந்தது.

கண்ணீர் திரண்ட விழிகளோடு வேகமாக ஷ்யாமை விட்டு பின்னோக்கி நகர்ந்தாள்.
மகளுக்கும் தனக்கும் விழுந்து கொண்டிருக்கும் இடைவெளி ஷ்யாமின் இதய நிலத்தில் கூரிய கடப்பாரையை இறக்கியது.

“ஷ்யாம் எதுக்காக உங்க கோபத்தை குழந்தை மேலே காமிக்கிறீங்க?” கண்டிப்போடு மான்யா கேட்டபடி ஆஷியை வருடிக் கொடுக்க ஷ்யாம் நெருப்பாய் தகித்தான்.

“மான்யா என் பொண்ணை விட்டு நகர்ந்து போ” ஷ்யாம் மிரட்டலாக கத்த ஆஷியோ மான்யாவை போகவிடாமல் இறுகப் பிடித்துக் கொண்டாள்.

ஆஷியின் பார்வை ஷ்யாமை ஒரு வித கோபத்தோடு பார்த்தது.
“ஒன்னு என் அம்மா யாருனு சொல்லுங்கபா  இல்லைனா, இவங்களை என் அம்மானு கூப்பிட விடுங்க” ஆஷியின் இந்த வார்த்தைகள் போதுமாயிருந்தது ஷ்யாமை மொத்தமாய் அசைத்துப் பார்க்க.

“நான் அம்மாவுக்கு ஏங்குற அளவுக்காடா உன்னை வளர்த்தேன்? நான் நல்லா பார்த்துக்கலையா?” கேட்கும் போதே அவன் கண்களில் விழிநீர் மீறல்.

“என்னோட அம்மா யாருனு சொல்லுங்கப்பா ப்ளீஸ்.உங்களுக்கு அம்மா இருக்கிற மாதிரி எனக்கும் அம்மா வேணும்ல அப்பா?”  ஆஷியின் இந்த கேள்வி ஷ்யாமின் இதயத்தை கூரிய வாள் கொண்டு வெட்ட கண்களில் வெள்ளை உதிரம்.

“ஆஷிமா அந்த கேள்வியை மட்டும் கேட்காதேடா ப்ளீஸ்” கெஞ்சும் குரலில் கேட்டவனின் கண்களில் கண்ணீர் கோடாய் வழிய மான்யா திகைத்துப் போய் பார்த்தாள்.

இந்த அழுத்தக்காரனுக்குள் இத்தனை கண்ணீர் அழுந்தி கிடக்கிறதா!