உடையாத(தே) வெண்ணிலவே 20

எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது இந்த வாழ்க்கை.

எந்த திருப்பத்தின் வளைவில்  ஆச்சர்யம் இருக்கும்? எந்த வளைவின் முடிவில் அதிர்ச்சி இருக்கும் என்பதை மனிதர்களால் யூகிக்கவே முடியாது.

அப்படி கணிக்க முடியாமல் போன தன் தவறை எண்ணி மருகி நின்றான் ஷ்யாம் சித்தார்த்.

அவனுக்கு தெரியாமல் தான் எடுத்த பரிசோதனைகளின் முடிவை ஒருவித தயக்கத்துடன் நீட்டினாள், மான்யா.
வாங்கிப் பார்த்தவனின் முகமெங்கும் அதிர்ச்சியின் பரவல்.

தன் குழந்தைக்கு பிறவியிலிருந்தே இருதயத்தில் சீர்மை இல்லையா?

பட்டென்று நிமிர்ந்தவனைப் பார்த்த மான்யா, “ஷ்யாம், உங்களுக்கு தெரியாம டெஸ்ட் எடுத்ததுக்கு என்னை திட்ட மாட்டிங்களே” என்றாள் வேகமாக.
அதைக் கேட்டு அவன் உதடுகளில் கசந்த முறுவல்.

“நியாயப்படி நான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் மான்யா. ஆஷிக்கான ட்ரீட்மெண்ட் ஃபாஸ்டா நடக்க, நீ முன்னாடியே எடுத்த டெஸ்ட் ரிசல்ட் தான் காரணம்.நான் கவனிக்காததை நீ கவனிச்சு இருக்கே” உணர்வற்ற குரலில் சொல்லிக் கொண்டிருந்தவன் முகத்தில் சட்டென வேதனை சிலந்தி படர்ந்தது.

எப்போதும் உள்ளுக்குள் அழுத்தத்தை தேக்கி, உணர்வில்லாமல் வலம் வருபவனை இந்த நிகழ்வு முற்றிலும் உடைத்துப் போட்டது.

“நான் ஒரு அப்பாவாவும், டாக்டராவும் தோத்துட்டேன் இன்டெர்ன். என் குழந்தையை கவனிக்காம விட்டுட்டேன்” அவன் வார்த்தைகள் வருத்தத்தில் ஊறியிருந்தாலும் முகம் மட்டும் கல்லாய் சமைந்து இருந்தது.

வரிசையாய் எண்ணங்கள், வலைப் பின்னின அவன் இதயத்தில்.

காலையில் கூட நீலமாக இருந்த உதட்டை கவனித்து அவன் என்னவென்று கேட்கும் போது நாவல்பழம் தின்றதால் வந்த வண்ணம் என்று பொய் சொல்லிவிட்டாளே ஆஷி!

இன்று மட்டுமா, கடந்த பல வருடங்களாக பொய் சொல்லிக் கொண்டு தானே வந்திருக்கிறாள்.

எதற்காக? யாருக்காக?

எல்லாம் எனக்காக தானே… நான் வேதனைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தானே.

இப்படிப்பட்ட தேவதைப் பெண் யாருக்கு கிடைப்பாள்? ஆனால் எனக்கு கிடைத்தாளே. பொக்கிஷமாக கிடைத்தவளை பாதுகாக்க தவறிவிட்டேனே!

அவன் உள்ளமெங்கும் வேதனையின் கேவல்.

அணு பரிசோதனை செய்யப்பட்ட களம் போல ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டான்.

அந்த ஆண்மகன் திடமாய் இருக்க முயன்றாலும் கைகளில் தன்னை மீறி நடுக்கத்தின் பரவல்.

தாங்கிப் பிடிக்க யாருமில்லாமல் பிடிமானத்திற்காக தவிக்கும் கொடியின் நிலையில் அவன்.

அவன் வேதனையை உணர்ந்த மான்யா ஆறுதலாக அவன் கைகளைப் பற்றி கொண்டாள்.

இணைந்திருந்த கைகளை ஒரு முறையும்  மான்யாவின் முகத்தை மறுமுறையும் வேகமாக பார்த்தவன் என்ன நினைத்தானோ, சட்டென்று அந்த விரல்களை தன் உள்ளங்கைக்குள் இறுக்கிக் கொண்டான்.

அதே நேரம் அங்கே வந்த வெங்கட்ராமின் விழிகள், கோர்த்திருந்த அவர்களது விரல்களை கண்டு இருளில் கவிந்தது.

ஷ்யாம் அவரது நெருடலான பார்வையைக் கண்டும் மான்யாவின் விரல்களை விடவில்லை.

ஒருவித கோபத்தோடு வெங்கட்ராமனைப் பார்த்தான். அவரும் பதிலுக்கு ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாக தன்னறைக்குள் நுழைய, அவர் மீதிருந்த பார்வையை சிறிதும் விலக்கவில்லை அவன்.

ஒரு தந்தையாக அவரை இதுவரை அவன் முழுமனதாக ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் ஒரு மருத்துவராக அவர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தான். ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பது அவனுக்கு காலம் கடந்தே புரிந்தது.

ஆரனாஷிற்கு அப்போது நான்கு வயது இருக்கும். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பட்டென்று சரிந்து கீழே விழுந்துவிட வேகமாக மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினான்.

ஆஷி மூச்சுவிடுவதற்கு சிரமப்பட, அவனுக்குள்ளே சந்தேகத்தின் ஆதி துவக்கம்.

கார்டியாலஜி பிரிவில் முதன்மை மருத்துவரான வெங்கட்ராமிடம் கொண்டு சென்றான்.

ஆனால் ஆஷியை முழுவதுமாக சோதித்துவிட்ட அவர் சொன்ன பதிலோ முற்றிலும் வேறு.

ஆஷிக்கு இருதயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. மருத்துவ கண்களோடு பார்த்தால் குழந்தையின் மெல்லிய தும்மல் கூட உனக்கு காசநோயின் அறிகுறியாக தான் தெரியும். இது குழந்தையின் எடையின் காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறல். சரியாக சாப்பிடாமல் வந்த மயக்கம் என்றாரே.
எவ்வளவு பெரிய பொய்? எவ்வளவு பெரிய துரோகம்!

ஆற்றாமையில் கொதித்துக் கொண்டிருந்த நேரம் கதவு கீறிச்சுடும் சப்தம் கேட்டது.

திரும்பி பார்த்தவனின் விழிகளில் திறமைக்குப் பெயர் போன  இருதய சிகிச்சை நிபுணர், ராம் தன் முககவசத்தை கழற்றியபடி வெளியே வந்தார்.

“ஷ்யாம், ஆரனாஷியோட ஹார்ட் டேமேஜ்ட் ஹெவிலி. ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளென்ட் ப்ராக்ராம்லே ஃபர்ஸ்ட் டையர் மென்ஷன் பண்ணி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா ஹார்ட் வாங்கணும். ஷீ நீட் இமிடியட் சர்ஜரி. எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரம்” அவரின் வார்த்தைகளில் படுவேகமாக துரிதமானான்.

பல மருத்துவமனைகளை வரிசையாக தொடர்பு கொண்டவன் இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு டோனோரை கண்டுப்பிடித்துவிட, அடுத்த நான்கு மணி நேரத்திற்குள் இங்கே சர்ஜரியைத் துவங்க எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு நிமிர்ந்தான்.

அதுவரை கலக்கத்தில் துவண்டிருந்தவன் ஒரு முடிவோடு வேகமாக எழுந்து மான்யாவைப் பார்த்தான்.

“மான்யா, நீ போய் ஸ்வேதாவை தொடர்ந்து மானிட்டர் பண்ணு. ப்ரைன் ஃபங்ஷன்லே ஏதாவது சேஞ்சன்ஸ் இருந்தா உடனே என்னை கூப்பிடு” என்றவன் மீராவை அழைத்தான்.

வேகமாக வந்து நின்ற அவளிடம், “மீரா இன்னும் கொஞ்சம் நேரத்திலே ட்ரான்ஸ்ப்ளன்ட்கான ஹார்ட் வந்துடும். ஆஷிக்கு ப்ரீ சர்ஜரி ப்ராசெஸ் எல்லாம் முடிச்சுடுங்க. ராம் சர்ஜரி டீம்லே நீயும் ஜாயின் பண்ணி, அங்கே நடக்கிற இன்ஃபர்மேஷன்ஸ் தொடர்ந்து அப்டேட் பண்ணுங்க” என்றவனது பார்வை இப்போது வெங்கட்ராமனின் அறையை தீர்க்கமாக பார்த்தது.

வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஷ்யாம், எதிரில் அமர்ந்திருந்த வெங்கட்ராமை வெட்டும் பார்வை பார்த்தான்.

“ஐ நோ ஷ்யாம், நீ இப்போ என்ன கேட்கப் போறேனு” பதறாமல் சொன்னபடியே தன் மூக்குகண்ணாடியை சரி செய்து கொண்டு கேளு என்பதைப் போல பார்த்தார்.

“எதுக்காக எனக்கும் என் மகளுக்கும் துரோகம் பண்ணீங்க? ஏன் உண்மையை சொல்லாம மறைச்சீங்க” முதல் கேள்வியிலேயே அவரை சிலுவையில் அறைந்தான்.

அவரிடம் அதிகமான அலட்டல் இல்லை.

“உன் லைஃப்லே வேண்டாத களையா இருக்கிற ஆஷியை பிடுங்கி எறியணும்னு நினைச்சேன்” வெகு நிதானமாக சொன்னவரை நோக்கி கோபமாய் “ஏன்?” என்று கர்ஜித்தான்.

“ஒரு அப்பாவா, என் மகன் நல்லா வாழணும்னு ஆசைப்படுறேன் ஆனால் அதுக்கான பெரிய தடையா அந்த ஆரனாஷி இருக்கா. அவள் இல்லைனா நீ நல்லா இருப்ப ஷ்யாம். அப்பா உனக்காக தான் இதெல்லாம் செஞ்சேன்” பேசிக் கொண்டே சென்றவரை ஒரு பார்வை பார்த்தான். அதில் வேட்டையின் ரத்த நிழல்.

“இதுக்கு மேலே ஏதாவது பேசுனீங்க அப்பன்னு கூட பார்க்க மாட்டேன்.என் குழந்தையை என் கிட்டேயிருந்து பறிக்கலாம்னு நினைச்சா நான் அரக்கனாகிடுவேன்” அவன் குரலில் சிறுத்தையின் உறுமல் பதுங்கியிருந்தது.

“இதுவரை உங்களை நான் முழுமனசா அப்பானு கூப்பிட்டது இல்லை, ஆனால் ஒரு டாக்டரா பெரிய ரெஸ்பெக்ட் வெச்சு இருந்தேன். பட் அந்த மரியாதையை நீங்களே சிதைச்சுட்டீங்க. இனி இந்த ஹாஸ்பிட்டெலிலே உங்களுக்கு கீழே நான் வொர்க் பண்ண மாட்டேன்” கோபத்தோடு ஐ.டி கார்டை கழற்றி வைக்க முயன்ற நேரம் வெங்கட்ராமனின் குரல் ஒலித்தது.

“உங்க அம்மா உன் கிட்டே வாங்கின சத்தியத்தை மறந்துட்டியா ஷ்யாம்” அவரின் அந்த வார்த்தை நன்றாக வேலை செய்தது. சாமர்த்தியமான காய் நகர்த்தல் அது!

‘என்ன ஆனாலும் மதுரா மருத்துவமனையை விட்டு போக மாட்டேன். இவர் கூடவே இருந்து இங்கே எந்த தப்பும் நடக்காமல் பொறுப்பா நோயாளிகளை கவனிச்சுப்பேன். இது சத்தியம்மா’

ஷ்யாம் அன்று தன் அன்னையிடம் கொடுத்த வாக்குறுதி இன்று மனச்சுவற்றில் மோதி ஒலிக்க நிலைகுலைந்து நின்றான்.

ஐ.டி கார்டை கழற்ற போன அவன் கைகள் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, வெங்கட்ராமை ஒரு பார்வை பார்த்தான்.

பார்வையா அது நெருப்பு!

“என்னை இங்கே இருக்க வெச்சுட்டோம்னு ரொம்ப சந்தோஷப்பட்டுகாதீங்க. என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உங்களை சும்மா விடமாட்டேன். நியாபகம் வச்சுக்கோங்க” கர்ஜனையாய் சொன்னவன் கோபத்தோடு வெளியே வந்தான்.

அங்கே ஆரனாஷிக்கு தேவையான எல்லா முன்னேற்பாடுகளையும் மருத்துவ குழு செய்து கொண்டிருக்க அவன் கால்களோ நேராக ஸ்வேதாவின் அறைக்குள் நுழைந்தது.

வேதனை விழுங்கிய முகத்தோடு ஸ்வேதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மான்யா. அதைக் கண்டு ஷ்யாமின் முகமெங்கும் கவலைத் திவலைகள்.

இந்த அறைக்குள்ளும் அந்த குட்டி இன்ஜினியர் செய்த பில்டிங் ப்ளாக்ஸை கொண்டு வந்து வைத்து, ஸ்வேதா கண் திறப்பதற்காக காத்திருந்த மான்யாவைக் கண்டு அவனுக்குள் நெகிழ்ந்தது.

இவள் அன்பின் அணுக்களால் ஆனவளோ?

அவளையே பார்த்துக் கொண்டிருந்த நேரம் ஆளரவம் கேட்டு மான்யா திரும்பினாள். ஷ்யாமைக் கண்டு அவள் நெற்றியின் சுருக்கங்கள் யோசனையை காட்டியது.

“நீங்க அங்கே ஆரனாஷி கூட இல்லாம இங்கேயா?” என்றாள் அதிர்ச்சியை காட்டி.

“அங்கே ஆஷியை கார்டியாலஜி ஸ்பெஷலிஸ்ட்ஸ் பார்த்துட்டு இருக்காங்க. அங்கே என் தேவையில்லை, ஸ்வேதாவுக்கு தான் நான் தேவைப்படுறேன்” என்றபடி அவள் கையிலிருந்த ரிப்போர்டை வாங்கினான்.

அதில் அவன் நினைத்ததைப் போலவே லிவர் கேன்சரின் வீரியம் மூளையை அதிகமாக பாதித்திருந்தது.

கவலையை உள்ளுக்குள் மறைத்து ஸ்வேதாவை உணர்வு துடைத்த முகத்தோடு பார்த்த நேரம் மான்யாவின் விழிகளிலிருந்து கோடாய் கண்ணீர் வழிந்தது.

“இன்ஜினியர் வலிக்கு ரியாக்ட் பண்ண மாட்டேங்குறா. ப்யூப்பில் லைட்டுக்கு ரெஸ்பாண்ட் பண்ணலை. இன்ஜினியர் நம்மளை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு இருக்காளா?” வலி நிறைந்த குரலில் கேட்டவள் சட்டென்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

“இல்லை ஸ்வேதாவுக்கு நான் எதுவும் ஆக விட மாட்டேன். நான் அவளுக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்திருக்கேன். எப்படியாவது அவளைக் காப்பாத்திடுவேன்” வேகமாக அவள் எழுந்த நேரம் ஹார்ட் மானிட்டர் இயந்திரத்தில் வேகமாக சப்தம் எழ ஸ்வேதாவின் இதயம் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டிருந்தது.

அதைக் கண்டு துரிதமான மான்யா, வேகமாக ஸ்வேதாவின் படுக்கையில் ஏறி அமர்ந்து தன் இரு கை கொண்டும் இருதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி சி.பி.ஆர் செய்ய துவங்கினாள்.

“ப்ளீஸ் ஸ்வேதா,எங்களை விட்டு போகாதே. ப்ளீஸ்” வேகமாக சொல்லியபடியே அவள் சி.பி.ஆர் செய்துக் கொண்டிருக்கும் போதே அவள் இதயம் முற்றிலும் செயலிழந்துவிட்டதாய் அந்த ஒற்றைக் கோடு சொன்னது.

அதைப் பார்த்த ஷ்யாம் கலக்கத்துடன் மான்யாவின் தோள் தொட்டு கலைக்க முயல, “இன்ஜினியர்” என்ற கதறலோடு இதயத்தில் அதிவேகமாக ஒரு அழுத்தம் கொடுத்தாள்.

அதற்கு முன்பு வரை ஒற்றை கோடாய் இருந்த அந்த உயிர் கோடு, சட்டென மேலெழும்பி அடுத்த ஐந்து நொடிக்குள் மீண்டும் ஒற்றைக் கோடாய் மாறிவிட்டது.

மான்யா கேவலோடு உயிர் உறைந்த ஸ்வேதாவின் உடலை இறுக்கி அணைத்தாள்.

“ஏன் இன்ஜினயர் என்னை விட்டுட்டு போன? எழுந்துடு இன்ஜினியர்” கோபமாக கேட்டபடி இன்ஜினியரை உலுக்கி கொண்டிருந்தவளை பின்னாலிருந்து வேகமாக இழுத்தான் ஷ்யாம்.

“என்னை விடுங்க ஷ்யாம். நான் என் இன்ஜினியர் கிட்டே கேட்கணும். ஏன் என்னை விட்டுட்டு போனானு கேட்கணும்” வலியோடு கேட்டபடி, மீண்டும் முன்னோக்கி செல்ல முயன்றவளை பின்னாலிருந்து இறுக்கி அணைத்து கட்டுப்படுத்த முயன்றான் ஷ்யாம் சித்தார்த்.

ஆனால் அவள் உள்ளம் கட்டுக்கடங்காத ஆற்றாமை வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.

அவனிடமிருந்து வேகமாக விடுப்பட்டு ஸ்வேதாவை நோக்கி செல்ல முயன்ற நேரம் அவளது கைகள் ஸ்வேதா ஏற்கெனவே கட்டி முடித்த அந்த குட்டி கட்டிடம் மேலே தற்செயலாக பட்டது.

அடுத்த நொடியே அந்த கட்டிடம் கீழே விழுந்து மொத்தமாய் சிதறியது, மான்யாவின் இதயத்தைப் போல.

மெதுவாக மடிந்து அமர்ந்தவள் உடைந்து கிடந்த அந்த துண்டுகளை வெறித்தாள். அவள் கண்களில் இப்போது ஒரு சொட்டு கண்ணீர் இல்லை.

ஏன் தனக்கு பிடித்த எல்லோரும் தன்னை விட்டு வெகுவேகமாக சென்றுவிடுகிறார்கள் என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மனதில்.

வெளியே நின்றிருந்த லஷ்மிக்கு தன் பெண் மூளை சாவு அடைந்த விஷயம் தெரியவர கேவலுடன் உள்ளே ஓடி வந்த அதே நேரம் மீரா, “ஷ்யாம்” என்ற பதற்ற குரலோடு ஓடி வந்தாள்.

அவன் மான்யாவின் தோளை ஆதரவாக பற்றியபடி நிமிர்ந்து மீராவை பார்த்தான்.

“யெஸ் மீரா. என்ன ஆச்சு?” என்றான் கேள்வியாக.

“ட்ரான்ஸ்ப்ளன்ட் ஹார்ட் கொண்டு வந்த வண்டி மேலே இன்னொரு லாரி மோதி தீவிபத்து ஆகிடுச்சு. இப்போ ஹார்ட் கிடைக்கலே” அவள் கவலையோடு சொல்ல அவனிடம் நிலைகுலைவு.

வருத்தத்தோடு வெளியே வந்தவன் வெவ்வேறு ஹாஸ்பிட்டலுக்கு தொடர்பு கொண்டான். ஆனால் எந்த இடத்திலிருந்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

சோர்ந்து போய் அமர்ந்தவனின் தோள்களை விஷ்வக் ஆதரவாய் தாங்கிப் பிடித்தான்.

“ஷ்யாம், இப்போ தான் வண்டி ஆக்ஸிடென்ட் ஆன விஷயத்தை கேள்விப்பட்டேன். நீ எல்லா ஹாஸ்பிடெலுக்கும் கான்டாக்ட் பண்ணிட்டாயா?”

“யெஸ், பட் எங்கேயும் கிடைக்கலை விஷ்வக்” கலக்கமாக சொன்னவன் “மீனு அம்மாவை இங்கே கூட்டிட்டு வந்துட்டியா?” என்றான் கேள்வியாக.

“யெஸ் நீ ஃபோன் பண்ணி இன்ஃபார்ம் பண்ண அடுத்த நிமிஷமே வீட்டுக்கு போய் அம்மாவை இங்கே கூட்டிட்டு வந்துட்டேன்.இப்போ ஸ்பெஷல் ரூமிலே நர்ஸோட அசிஸ்டென்ட்லே விட்டுட்டு வந்து இருக்கேன்” என்றவனின் கைகளை நன்றியாக பிடித்துக் கொண்டவனை விஷ்வக் யோசனையாக பார்த்தான்.

“ஷ்யாம் நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே. ஸ்வேதாவோட ஹார்டை ஆஷிக்கு எடுத்து வைக்கலாமே” விஷ்வக்கின் வார்த்தைகளைக் கேட்டு ஷ்யாமிடம் வேகமான மறுப்பு.

“நோ விஷ்வக். அப்படி பண்ணா ஸ்வேதாவை இதுவரை காப்பாத்துனதுக்கு நன்றிக்கடன்  கேட்கிற மாதிரி ஆகிடாது?” என்றான் வேகமாக.

“அது மட்டுமில்லாம இன்னும் அந்த குழந்தை தன்னை விட்டுட்டு போனதை கூட அந்த தாய் முழுசா ஜீரணிச்சு இருக்க மாட்டாங்க. அதுக்குள்ளே போய் உங்க குழந்தை இதயத்தை கொடுங்கணு கேட்கிறது மனஷத்தன்மையில்லாத செயல். அதை நான் பண்ணவே மாட்டேன்” உறுதியாக அவன் சொல்லிய நேரம் கண்ணீர் மல்க லஷ்மி அங்கு வந்து நின்றார்.

அவர் கைகளில் ஒரு காகிதம். அதை ஷ்யாமின் கைகளில் திணித்தவர் தன் கையை கூப்பினார்.

“டாக்டர் இது என் பொண்ணோட உடல் தானத்துக்கான ஃபார்ம். சத்தியமா நான் நன்றிக்கடனுக்காக செய்யலை. என் குழந்தை உயிர் போன மாதிரி இன்னொரு குழந்தை உயிர் போகக்கூடாது. அதுக்காக தான் செய்யுறேன்” என்றவரின் வார்த்தைகளில் ஸ்தம்பித்து நின்று விட்டான் ஷ்யாம்.

ஷ்யாமின் அருகே நின்றிருந்த ராமோ, “இதயத்துலே கேன்சர் செல்ஸ் பாதிக்கப்பட்டிருந்தா இந்த ஹார்ட்டை ட்ரான்ஸ்பிளான்ட் பண்றதுலே சிக்கலிருக்கும். வீ நீட் டூ எக்ஸாமின்” என்று சொல்லியபோது மான்யா இப்போது முன்னே வந்தாள்.

“சார் நான் தான் அந்த குழந்தையை ரெகுலரா மானிட்டர் பண்ணேன். நேத்து எடுத்த டெஸ்ட் முடிவிலே மூளை தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதயத்திலே எந்த பிரச்சனையும் இல்லை” என்றபடியே அந்த ரிப்போர்ட்ஸை நீட்ட
“மான்யா” என்ற குரலோடு ஷ்யாம் வேகமாக இடைமறித்தான்.

“என் இன்ஜினியர் ஹார்ட் துடிக்கணும் ஷ்யாம்.  விடாம துடிக்கணும்.  அந்த துடிப்பு நிற்கிறதை நான் கொஞ்சமும் விரும்பலை” கண்களில் துளிர்க்க முயன்ற கண்ணீரை கிள்ளியபடி உணர்ச்சி துடைத்த குரலில் பேசியவளை மறுத்து அவனால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை.

உயிரற்ற ஓவியமாய் வண்ணமிழந்திருந்த ஸ்வேதாவின் அருகே வந்தவன், கண்ணீர் கசிந்த கண்களோடு ஸ்வேதாவின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு “ஐ மிஸ் யூ ஸ்வேதா” என்றான் குரல் கமற.

மான்யா கொடுத்த ரிப்போர்டை வாங்கிக் கொண்டவர்கள் ட்ரான்ஸ்ப்ளன்ட் டீமிற்கு தகவல் கொடுத்துவிட்டு சர்ஜரிகான வேலைகளில் துரிதமாக செயல்பட அடுத்த நான்கு மணி நேரத்திற்குள் ஸ்வேதாவின் இதயம் ஆரனாஷிக்குள் துடிக்க துவங்கியது.

மகளை இழந்த வேதனையில் கண்ணீரில்  கரைந்து கொண்டிருந்த லஷ்மியை அழைத்து சென்று, ஆரனாஷியின் இதயத் துடிப்பை கேட்க வைத்தான் ஷ்யாம்.

ஒவ்வொரு முறை துடிக்கும் போதும் அந்த தாயின் உணர்வில் ஏற்பட்ட மாற்றமும் சிலிர்ப்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.

ஆரனாஷியின் நெற்றியில் கண்ணீர் மல்க முத்தமிட்டவர் “நீ நல்லா இருக்கணும்டா” என்றார் மனம் நிறைந்த வேண்டுதலோடு.

எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் உறைந்துப் போய் அமர்ந்திருந்தாள் மான்யா.

ஆஷி உயிர் பிழைத்துவிட்டாள் என்ற செய்தி கேட்டதும் உள்ளே வந்தவள் ஆஷியின் உள்ளங்கையை இறுக்கமாக பற்றிவிட்டு அதிவேகமாக வெளியே சென்றுவிட்டாள்.

நேராக தன் லாக்கர் இருக்கும் இடத்திற்கு வந்து டாக்டர் கோட்டை கழட்டி உள்ளே வைத்தவள் வேதனையாய் சுவற்றில் சாய்ந்தாள்.

அவளுக்கு இப்போது வேண்டியது சிறியதாக ஒரு அழுகை. சிறியதாக ஒரு புன்னகை.

ஒரு உயிர் பிரிந்ததன் வேதனை தாங்காமல் கதறி அழ வேண்டும். மறு உயிர் காப்பாற்றப்பட்டதன் சந்தோஷத்தில் ஆழ்ந்த நிம்மதி பெருமூச்சுவிட வேண்டும்.

ஆனால் எவ்வளவு முயற்சித்தும் கண்களிலிருந்து கண்ணீர் வரவில்லை.
உணர்வு குவியலாய் இருந்தவளின் இதயம் மெல்ல மெல்ல இயந்திரமாய் மாறிக் கொண்டிருந்தது.

அவள் மன கரையில் ஸ்வேதாவின் முகமும் குரலும் சிரிப்பும் பெரும் அலைகளாக மோத மோத முகத்தை மூடிக் கொண்டாள்.

அதுவரை சுவற்றில் சாய்ந்திருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து அமர்ந்தவளின் முகம் கால்களில் தன்னை புதைத்துக் கொண்டது.

அவள் மருத்துவ பயணத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு. அவள் மருத்துவராய் இருந்து காப்பாற்றப்படாமல் போன முதல் உயிர். அதுவும் அந்த உயிர் தன் இன்ஜினியர்.

எங்கு தவறு செய்தோம்? எங்கு தவறாகிப் போனது?

என் இன்ஜினியருக்கு நான் சரியான சிகிச்சை தரவில்லையா? நான் உண்மையில் நல்ல சர்ஜன் தானா?

இதுவரை தன்னை சந்தேகிக்காதவள் தன் மீது முதல் முறையாய் சந்தேகம் கொண்டாள். அவளுக்குள் இருந்த மொத்த தன்னம்பிக்கையும் வடிந்துப் போய் பயத்தில் கைகள் நடுங்க துவங்கியது.

மெல்லிய திடுக்கிடலுடன் நிமிர்ந்து தன் கையைப் பார்த்த நேரம், அவளருகில் நிழல் விழுந்தது.

ஷ்யாம் தான் அவள் அருகில் வந்து அமர்ந்திருந்தான். அவன் பார்வை நடுங்கிய அவளது கைகளின் மீதே இருந்தது.

எந்த கைகள் நடுங்கிவிடக்கூடாது என்று காலையில் ஆதரவாய் பற்றி  விடுவித்தானோ இப்போது அந்த கையிலே அதீத நடுக்கம்.

வேகமாக மான்யாவின் கைகளை தன் கரத்துக்குள் அடக்கி நடுக்கத்தைப் போக்க முயன்றான்.

கலக்கத்தோடு ஷ்யாமின் எதிரே தலை சரிந்தாள். “நான் தோத்துட்டேன் ஷ்யாம். என்னாலே என் இன்ஜினியரை காப்பாத்த முடியலை நான் ஒரு நல்ல சர்ஜனில்லை. ” என்றாள் எங்கோ வெறித்தபடி.

“நோ மான்யா. யூ ஆர் க்ரேட் சர்ஜன். நீ இன்ஜினியர்னு கூப்பிட்ட அடுத்த நொடி ஸ்வேதாவோட இழந்த உயிர் திரும்ப வந்தது. உன் அன்பு, உன் பாசம் தான் ஸ்வேதாவை இந்த உலகத்துலே இன்னும் அஞ்சு நொடி எக்ஸ்ட்ரா வாழ வைச்சது. நீ ஜெயிச்சுட்ட இன்டெர்ன்” என்றான் அவளது கைகளை ஆதூரமாக பிடித்தபடி.

அதுவரை கண்ணீரை உள்ளுக்குள் தேக்கி அணைப்போட்டிருந்தவளின் விழிகளில் மெல்ல நீர் கசிய, “உண்மையாவா? நான் ஸ்வேதாவுக்கு நல்லா தான் ட்ரீட்மெண்ட் பார்த்தேனா? அப்புறம் ஏன் என் கை இப்படி நடுங்குது. என் மேலே எனக்கு ஏன் டவுட் வருது” என்றாள் மெல்லிய கேவலோடு.

“நமக்கு ரொம்ப பிடிச்சவங்களோட உயிர் போகும் போது நம்ம கை ஆட்டமெடிக்கா நடுங்கும் மான்யா. அதுவும் உனக்கு இது முதல் சர்ஜரி. முதல் உயரிழப்பு. அதோட வடு ஆற கொஞ்சம் நாள் எடுக்கும். இது நம்ம மெடிக்கல் லைஃப்லே நார்மல்” என்றான் அவளை ஆற்றுப்படுத்தும்விதமாய்.

“உங்களுக்கு இந்த மாதிரி எப்பவாவது கை நடுங்கி இருக்கா?” என்றாள் கேள்வியாக.

“யெஸ் எனக்கும் ஒரு சர்ஜரியிலே இப்படி கை  நடுங்கியிருக்கு” என்றவனின் கைகள் எதை எண்ணியோ இறுக அவன் உள்ளங்கைக்குள் சிறைப்பட்டு இருந்த மான்யாவில் விரல்களில் வேதனையின் சுணக்கம். 

வலியோடு நிமிர்ந்தவள், “யார்?” என்றாள் கேள்வியாக.

அந்த கேள்வியில் ஷ்யாம் மொத்தமாய் முறிந்து போனான்.

“அதை மட்டும் கேட்காதே இன்டெர்ன்” என்ற கதறலோடு சொன்னவன் வேதனை தாங்காமல் சட்டென்று மான்யாவை இறுக்கி அணைக்க, அவளுக்குள் ஸ்தம்பிப்பு.