உடையாத(தே) வெண்ணிலவே 21

பிறப்பு என்பது தாயின் கருவறையிலும் இல்லை. முடிவு என்பது கல்லறை கற்களிலும் இல்லை.

பிறப்பின் மறுபதிப்பே மரணம்.

அப்படி தான் புதியதாக ஆரனாஷிக்குள் மறுபிறப்பு எடுத்து இருந்தாள் ஸ்வேதா.

அவளுக்கு அறுவை சிகிச்சை முடிந்து இன்றோடு இரண்டு வாரம் முடிந்துவிட்டது. மருத்துவமனையின் மருந்து நெடியிலிருந்து விடுதலையும் அடைந்துவிட்டாள்.

ஓடியாடி விளையாடும் குழந்தை ஒரே இடத்தில் முடங்கிவிட அதன் முகமெங்கும் அலுப்பு.

இருக்குமிடத்தை விட்டு நகராதபடி  விளையாடுவதற்கு ஏதாவது கிடைக்கிறதா என சுற்றி முற்றிப் பார்த்த கண்களை வெகுவாக உறுத்தியது அறையின் மூலையில் இருந்த அந்த பொருள்.

தன்னைப் பார்த்துக் கொள்வதற்காக புதியதாக நியமிக்கப்பட்டிருந்த சாந்தியிடம் அந்த பொருளை சுட்டிக் காட்டவும் அவரும் புரிந்து கொண்டு அதை ஆரனாஷியின் முன்பு கொண்டு வந்து வைத்தார்.

அடுத்த நொடி அவளின் கவனம் முழுக்க அதில் குவிய துவங்கியது.

💐💐💐💐💐💐💐

மாற்றம்!

எல்லோர் வாழ்விலும் மாறாத ஒன்று அது. இப்போது மான்யாவின் வாழ்க்கையிலும் புகுந்து பல மாற்றங்களை நிகழ்த்தியிருந்தது.

அவள் இதயம் இரண்டாக உடைந்து இன்றோடு இரண்டு வாரம் ஆகிறது.

எப்போதும் துருதுருப்பாக வலம் வருபவளின் முகம் இன்று துருப்பிடித்த இரும்பாய்.

உணர்ச்சிகள் சங்கமிக்கும் கடலாய் இருந்தவள் இன்று வறண்டு போன நதியாய்.

கண்ணாடியின் முன்பு  சிலையாக நின்றிருந்தவளின் முகத்தில் முன்பிருந்த ஒளிர்வில்லை.

கடமையே என தயாராகி கொண்டிருந்தவள், பட்டு போல மின்னிய தன் கூந்தலை அள்ளி முடிய போன நேரம், ஸ்வேதா அன்று சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து மின்னியது.

‘எனக்கும் உங்களை மாதிரி சில்கி ஹேர் வேணும்’ அன்று ஸ்வேதா ஆசையாய் சொன்ன வார்த்தைகள் இன்று ஈட்டியாய் மாறி குத்தும் என்று அவள் நினைக்கவேயில்லை.

வேகமாக தன் முடியை கலைத்து விட்டு கொண்டவளின் மனது இப்போது மிக கனமாய்.

அதே நேரம் ஷ்யாமின், மான்யா என்ற குரல் அவள் செவியை எட்ட அவசரமாக தன் முடியை கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

எப்போதும் நேர்த்தியாக வலம் வருபவள் இப்போதெல்லாம் விதியே என கிளம்பி வருகிறாளே!

அவள் முகத்தை ஒரு கணம் ஊன்றிப் பார்த்தவன் பின்பு வேகமாக தலையை உதறிக் கொண்டான்.

விடைப் பெற்று கொள்வதற்காக ஆரனாஷியின் அறைக்குள் நுழைந்தவனின் கால்கள் ஸ்தம்பித்து நின்றுவிட,

அவன் பின்னாலேயே வந்த மான்யாவின் விழிகள், ஆரனாஷியின் அருகிலிருந்த பி்ல்டிங் ப்ளாக்ஸை கண்டு கலங்கி நின்றது.

ஸ்வேதா ஆசை ஆசையாய் கட்டி முடித்த அந்த குட்டி மருத்துவமனை, மான்யாவின் கைப்பட்டு அன்று உடைந்து விட, இன்று அதே  கட்டிடத்தை அதே வடிவத்தில் அதே நேர்த்தியில் மீண்டும்
உருவாக்கியிருந்தாள் ஆரனாஷி.
“எப்படியிருக்கு என் பில்டிங்?” ஆசையாய் கேட்டவளின் நெற்றியில் நெகிழ்வாய் முத்தமிட்டவளுக்கோ, ஆரனாஷியின் முகத்தில் ஸ்வேதாவின் பிம்பம் பிரதிபலித்தது.

உடைந்த குரலோடு,”என் இன்ஜினியர்” என்றவளின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்டான் ஷ்யாம் சித்தார்த்.

“நம்ம ஸ்வேதா இங்கே தான் இருக்கா” என்றான் ஆரனாஷி இதயத்தை சுட்டிக் காட்டியபடி.

ஆமோதித்து தலையசைத்தவளின் கையைப் பற்றி கொண்டு காரில் ஏற்ற, அடுத்த அரை மணிநேரத்தில் மதுரா மருத்துவமனையின் முன்பு கீறிச்சிட்டு நின்றது அந்த கார்.

எப்போதும் மான் போல துள்ளிக் குதித்து கொண்டு உள்ளே செல்பவளின் நடையில் இப்போது அசாத்திய நிதானம்.

ஒவ்வொரு நோயாளியையும், முன்பு கனிவாகவும் அன்பின் பதற்றத்தோடும் பார்த்து வந்தவளிடம் இப்போது உணர்வின் தடமே இல்லை.

வெறுமையும் நிராசையும் சூல் கொண்டிருந்த முகத்தோடு அங்கிருந்தவர்களை பரிசோதித்த மான்யாவை கவனித்தவன் ,”கம் டூ மை ரூம் இன்டெர்ன்” என்றான் கட்டளையாக.

மறுபேச்சில்லாமல் உள்ளே
நுழைந்தவளைப் பார்த்தவன், “ஏன் இப்போ எல்லாம் சிரிக்கவே மாட்டேங்குற மான்யா, உள்ளுக்குள்ளே ஏன் இப்படி இறுகிப் போய் இருக்க?” அக்கறையாக வினவினான்.

“சாரி ஷ்யாம் சார், டுயூட்டி டைம்லே பர்செனல் விஷயத்தை பேச எனக்கு இஷ்டமில்லை” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“மான்யா ஆக்சுவலி உனக்கு இப்போ டியூட்டி இல்லை. இன்னைக்கு உனக்கு லீவ்” என்றவனை புருவம் உயர்த்திப் பார்த்தாள்.

“நான் லீவுக்கு அப்ளை பண்ணலேயே?” என்றாள் குழப்பமாக.

“யெஸ், நீ கேட்கலை தான்… ஆனால் நானா கொடுக்கிறேன். ஒன் டே லீவ் எடுத்துட்டு மைண்ட் ரிலாக்ஸ் பண்ணிட்டு நாளைக்கு ஃப்ரெஷா டுயூட்டிலே ஜாயின் பண்ணு” என்றவனை புருவம் உயர்த்தி பார்த்தாள்.

“என் மேலே என்ன திடீர் அக்கறை ஷ்யாம்?” நம்பாத பாவனை அவள் முகத்தில்.

“நான் எங்கே உன் மேலே இருக்கிற அக்கறையிலே சொன்னேன்? பேஷன்ட்ஸ் மேலே இருக்கிற அக்கறையிலே மட்டும் தான் சொல்றேன். யூ ஆர் நாட் இன் ஸ்டேபில் ஸ்டேட் நவ். உன்னை நம்பி என் பேஷன்ட்ஸை என்னாலே ஒப்படைக்க முடியாது” அவன் கையை விரிக்க அவளிடம் அதிர்வின் ரேகைகள்.

“உன்னை நம்பி நான் இப்போதைக்கு பேஷன்ட்ஸை ஒப்படைக்கிறதா இல்லை. எனக்கு எப்போ ஓகேனு தோணுதோ அப்போ தான் உன்னை சர்ஜரி பண்ண அலோவ் பண்ணுவேன்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“எப்போ தான் நான் சர்ஜரி பண்ணனும்னு நினைக்கிறீங்க ஷ்யாம்? நான் ரிட்டையர்ட் ஆன பிறகா?” அதுவரை மௌனத்தை கையாண்டு இருந்தவளிடம் சட்டென கோபத்தின் வெளிப்பாடு.

“உனக்கு அந்த ஆசை வேற இருக்கா…நீ ரிட்டையர்ட் ஆகுற வரை இங்கே வேலை பார்ப்பேனு நினைக்கிறியா மான்யா? அதுக்குள்ளே டார்ச்சர் பண்ணி துரத்தி அடிச்சுட மாட்டேன் உன்னை” என்றான் அவளை வெறுப்பேற்றும் விதமாக.

“என்னை அவ்வளவு சீக்கிரமா துரத்திட முடியுமா உங்களாலே? நான் அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்துடுவனா? இந்த  ஹாஸ்பிட்டலிலே எத்தனை வருஷம் சர்வீஸ் பண்ண போறேன்றதை எண்ணுறதுக்கு,  இப்பவே உங்க கைவிரலை ரெடியா வெச்சுக்கோங்க” அடாவடியாக பேசியவளைப் பார்த்து நிம்மதியாக புன்னகைத்தான்.

இவள் தான் மான்யா!

கிட்டத்தட்ட இரண்டு வாரமாக புன்னகையை உதடுகளில் சூடாமல் வெறுமையாய் சுற்றிக் கொண்டு  இருந்தவள் வேறு யாரோ…

மான்யாவின் மனதை அந்த இழப்பிலிருந்து சமன்படுத்திக் கொள்வதற்காக அவனும் அவளுக்கு தேவையான காலத்தை கொடுத்திருந்தான்.

ஆனால் நாளுக்கு நாள் உள்ளுக்குள் இறுகிக் கொண்டே வருபவளை அப்படியே விட அவனுக்கு மனம் வரவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் இன்று களத்தில் அதிரடியாக குதித்துவிட்டான்.
இந்த மான்யாவை வெளிக் கொணர எத்தனை பிரயர்த்தனங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது! அவனிடம் பெருமூச்சின் வெளிப்பாடு.

“என்ன, ஷ்யாம் சார் இனி வர போற வருஷம்லாம் இந்த இன்டெர்னை எப்படி சமாளிக்க போறோம்னு பெருமூச்சு விடுறீங்களா?” துடுக்காக கேட்டவளை மனநிறைவோடு பார்த்தான்.

“இப்போ தான் நீ என்னோட இன்டெர்ன்” என்றான் உதட்டில் பூத்த முறுவலுடன்.
அவனுடைய “என்” என்ற வார்த்தையில் திகைத்து நிமிர, அவசரத்தில் தான் விட்ட சொல்லை மாற்றியமைக்க முயன்றான்.

“எனக்கு கீழே தானே வொர்க் பண்ற. அப்போ நீ என் இன்டெர்ன் தானே. ஆமாம் எப்போ என் பழைய டுபாக்கூர் இன்டெர்ன் எனக்கு திரும்ப கிடைப்பாங்க?” அவன் பதிலும் கேள்வியும் மான்யாவை தினுசாக பார்க்க வைத்தது.

“அதே தான் நானும் கேட்கிறேன். நான் பார்த்த என்னோட சீனியர்  நீங்க இல்லை. எப்போ அந்த ரோபோ ஷ்யாம் திரும்ப வருவாரு?” அவன் கேள்வியை அவனுக்கே திருப்பிவிட்டாள்.

அவள் வினாவில் ஷ்யாமின் முகத்தில் புன்னகையின் தடம்.

“ஏன் இந்த நியூ வெர்ஷன் ஷ்யாமை உனக்கு பிடிக்கலையா?” என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி.

அவன் புன்னகையின் வசீகரம் அவளை சாய்க்க முயன்றது.

என்றோ ஒரு நாள் செவிலியர்களிடம் பேசும் போது ‘அப்படி என்ன அழகாக இருக்கின்றான் இந்த ஷ்யாம்?’ என்று  சலிப்பாக கேட்ட அதே மான்யா,  இப்போது அவன் முகத்தையே அங்குல அங்குலமாய் பார்வையால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் கூரிய பார்வை அவள் இதயத்தில் எதையோ ஒன்றை விதைக்க முயன்றது.

“மான்யா நீ எப்பவும் அதே பழைய இன்டெர்னாவே இரு. டோன்ட் சேன்ஞ் யுவர் ஸ்டைல். ஐ லைக் தட் ஓல்ட் இன்டெர்ன் ஒன்லி” உதடுகளில் புன்னகை மிளிர சொன்னவனை இமை தட்டாமல் பார்த்தாள்.

இறுக்கி கட்டிய அவள் இதய நூலை அறுக்க முயன்றது  அவன் வார்த்தைகள்.

அவன் நெற்றி சுருக்கத்தில் இடம் வலமாக ஓடிக் கொண்டிருந்த வரிகள் இவள் மனதில் எதையோ எழுத முயன்று கொண்டிருந்தது.

உதடுகளுக்கு மேலாக ஊடாடிக் கொண்டிருந்த அவன் மீசையில் ஏற்பட்ட துடிப்பு இவள் இதயத்தின் துடிப்பை பன்மடங்காக்கியது.

சமீபகாலமாகவே ஷ்யாமின் ஒவ்வொரு செயலிலும் தென்றல் தொடும் இலையாய் அவன் பக்கம் அசைந்து கொண்டிருந்தவளுக்கு இன்று தான் தெளிவாக ஒன்று புரிந்தது, அவன் தன் உயிரின் வேரையே மொத்தமாக அசைத்திருக்கின்றான் என்று.

கண்கள் நான்கும் மின்னலாய் வெட்டிக் கொண்டது ஒரு நிமிடமா, இரண்டு நிமிடமா?

எத்தனை நிமிடங்கள் அவன் கண்களில் தன்னை இழந்து நின்றால் என்பதை அவளே அறியாள். வேகமாய் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்த நர்ஸ் பிரியங்காவின் குரலில் தான் சுயம் கலைந்தாள்.

அவசர அவசரமாக அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்துவிட்டு வேகமாக ஓடியவளை நமட்டு சிரிப்போடு பார்த்தவனின் கவனம் அந்த நர்ஸிடம் திரும்பியது.

அறைக்கு வெளியே வந்த மான்யாவிற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன் தன் இதயத்திற்கு என்ன நிகழ்ந்தது என்றே புரியவில்லை.

பார்வையை வைத்தே என் இதய துடிப்பை இரட்டிப்பாக்கி விட்டானே!

இதெல்லாம் வெறும் மாயை மான்யா. ஒரு ஈர்ப்பு அவ்வளவு தான் என்று நினைத்தவளின் இதய கண்ணாடியில் தன் கையைப் பின்னாலிருந்து பிடித்து தையல் போட கற்றுக் கொடுத்த ஷ்யாம் பிம்பமாய் விழுந்தான்.

வேகமாக தலையை சிலுப்பிக் கொண்டு நினைவிலிருந்து வெளியே வர முயன்ற நேரம், லஷ்மியிடம் தன்னைப் பற்றி உயர்வாக பேசிய ஷ்யாமின் வார்த்தைகள்  காதில் விழுந்தது.

காதை இறுக மூடி கொண்டவள், வேகமாக அந்த சப்தத்தை கடந்து செல்ல ஓரடி எடுத்து வைத்தாள். காலில் வீற்றிருந்த கொலுசு “டூ மை இடியட் இன்டெர்ன்”  சிணுங்கலாய் ஒலித்தது.

ஒவ்வொரு அசைவிலும் ஷ்யாம் சித்தார்த்தின் சாயலைத் தேடி சிலிர்த்து கொண்டிருந்த, தன் இதயத்தை எண்ணி அவளுக்குள் ஏதோ அதிர்ந்தது.

அந்த திடீர் அதிர்வு கைகளிலும் பரவ, நடுக்கம் கொண்ட தன் உள்ளங்கையை குனிந்துப் பார்த்தாள்.

“நீ ஜெயிச்சுட்ட இன்டெர்ன்” ஆதூரமாய் சொல்லியபடி அன்று பிடித்தவனின் விரல்களிலிருந்த வெட்பம்,  இன்றும் உள்ளங்கைக்குள் குறுகுறுத்து கொண்டிருப்பதை போன்ற மாயை.

மேலும் மேலும் அவன் நினைவுகள் கிளை விரிக்க, இப்போது இங்கிருந்தால் ஆபத்து என்று உணர்ந்தவள் வேகமாய் ஷ்யாம் அறையை நோக்கி சென்றாள்.

ஆனால் உள்ளே செல்ல முடியாதபடி ஏதோ ஒரு தயக்க கயிறு அவள் கால்களை கட்டியது.

ஆனால் அவள் அங்கு வந்து நின்ற அடுத்த நொடியே, “கம் ஆன் இன்டெர்ன். ஏன் அங்கேயே நிற்கிற” என்ற குறுஞ்செய்தி அலைப்பேசியில் விழ நெற்றியில் விழுந்த கேள்வியோடு கதவை வேகமாக திறந்தாள்.

“எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். எப்படி நான் உங்க கதவு முன்னாடி நிற்கிறதை கரெக்டா சொன்னீங்க?”அவள் கேள்விக்கு விடை கொடுக்காமல் உதடுகளில் மென்முறுவலை தவழவிட்டான்.

“நான் சி.சி.டி.வி இருக்கானு கதவு கிட்டே நின்னு சுத்தி முத்தி மேலே பார்த்துட்டேன். பட் அதுவும் இல்லை.வேற எதை வெச்சு நான் வரதை கண்டுபிடிக்கிறீங்க?” அவளின் கேள்விக்கு இம்முறை மறுக்காமல் இதழ் பிரித்தான்.

“அவ்வளவு உன்னிப்பா மேலே பார்த்த  நீ, கதவுக்கு கீழே பார்க்க மிஸ் பண்ணிட்டியே இன்டெர்ன்” என்றான் பெரியதான புன்னகையுடன்.

அப்போது தான் அவன் அறை கதவின் கீழ் பாகத்தை கவனித்தாள். அதில் ஒரு பாதம் மட்டுமே அளவிற்கு தெரியும்படி சிறிய இடைவெளி இருந்தது.

ஆனால் இந்த சிறிய இடைவெளியை மட்டுமே வைத்து எப்படி தன் ஒவ்வொரு அசைவையும் சரியாக கணித்து சொன்னான்?

கேள்வியோடு அவனைப் பார்க்க அவனும் புரிந்து கொண்டு சிரித்தான்.

“என்னாலே உன் நடையை எத்தனை பேர் நடுவுலே இருந்தாலும் சரியா கண்டுபிடிக்க முடியும் இன்டெர்ன். உன் அசைவுக்கு தனித்துவமான ஒரு இசை இருக்கு” கண்சிமிட்டி சொன்னவனை புரியாமல் பார்த்தாள்.

அவன் கண்கள் காலிலிருந்த அவளது கொலுசை ரசனையாய்ப் பார்க்க மான்யாவின் முகத்தில் நாணம் நாணலாய் வளைந்தது.

‘ஆக கொலுசை வைத்து தான் இத்தனை நாள், நான் செய்த சடுகுடு விளையாட்டை சரியாக சொல்லியிருக்கிறான்’

அவளுக்குள் புன்னகை துளிர எதற்காக வந்தாளோ அதை கேட்க மறந்து நின்றாள்.

“இன்டெர்ன் இங்கே வந்ததுகான காரணம் என்னவோ?” அவனே எடுத்து கொடுக்க வேகமாக தன்னிலை மீண்டவள்,

“நீங்க தரதா சொன்ன லீவை நான்
அக்செப்ட் பண்ணிக்கிறேன்” அவளின் வார்த்தைக்கு அவன் தலை தன்னால் அசைந்து அனுமதி கொடுக்க மான்யாவின் கால்கள் அலையடித்து கொண்டிருந்த மனதை அமைதிப்படுத்த  ஸ்வேதாவின் கல்லறையை நோக்கி வந்தது.

கைகளில் வைத்திருந்த மலரை ஸ்வேதாவின் மீது வைத்தவளின் பார்வை அந்த கல்லறை மேலே பொறிக்கப்பட்டிருந்த வாசகத்திலேயே நிலைத்திருந்தது.

பெயர்: ஸ்வேதா இன்ஜினியர்
பிறப்பு – 01.10.2011
இறப்பு – 14.03.2018
மறுபிறப்பு – 14.03.2018

எத்தனை பேருக்கு வாய்க்கும் இறந்த அன்றே மீண்டும் பிறப்பெடுக்கும் அபூர்வ நொடி.

ஆனால் ஸ்வேதாவின் வாழ்வில் அந்த அற்புதம் நிகழ்ந்திருந்தது. அதை எண்ணியே வெகு நேரம் நெகிழ்வுடன் அமர்ந்திருந்த மான்யா, கலங்கிய கண்களோடு வெளியே வந்தாள்.

ஏதேச்சையாக திரும்பிய மான்யாவின் விழிகள் எதிரிலிருந்த கோவிலிலிருந்து வெளியே வந்த இருவரை கண்டு அப்படியே நிலைத்து நின்றது.
அவர்கள் இருவரும் வேறு யாருமில்லை.

தன் சின்னஞ்சிறு குழந்தையை கொன்ற காமூகன் இறக்க வேண்டி அன்று பிரார்த்தனை செய்த அதே பெற்றோர்.

‘அவன் உயிரை எப்படியாவது கொன்றுவிடு என்று இறைவனிடம் வேண்ட தான் வந்திருப்பார்கள்’ மான்யா மனதுக்குள் கலங்கிய நேரம் எதிரிலிருந்தவர்களின் பார்வை இவள் மீது விழுந்தது.

மான்யாவை அடையாளம் கண்டு கொண்டதும் வேகமாக அருகில் வந்தார்கள்.

“எப்படி இருக்கீங்க டாக்டர்” அன்பாக கேட்டவர்களிடம் பதிலுக்கு
‘எப்படியிருக்கிங்க?’ என்ற வார்த்தையை அவளால் கேட்க முடியவில்லை.

ஒரு கொடூரனிடம் குழந்தையை பறி கொடுத்தவர்களின் மனநிலை மிக கொடுமையானதல்லவா இருக்கும்!

மௌனமாக அந்த கேள்விக்கு தலையாட்டியவளின் முன்பு அவர்கள் சந்தோஷமாக இனிப்பை நீட்டினர்.

“நாங்களே ஹாஸ்பிட்டலுக்கு வந்து உங்களுக்கு ஸ்வீட் தரலாம்ணு இருந்தோம் டாக்டர். ஆனால் கடவுளே  உங்களுக்கு நேரிலே சந்திக்க வெச்சுட்டார்” என்றவர்களை மான்யா புரியாமல் பார்த்தாள்.

“எங்க பொண்ணுக்கு நியாயம் கிடைக்கிறதுக்காக,  அன்னைக்கு எங்க கூட சேர்ந்து நீங்களும் பண்ண பிரார்த்தனை வீண் போகலை டாக்டர்” என்றனர் மன நிறைவுடன்.

அதுவரை குழப்பமாய் இருந்த மான்யாவுக்குள் சட்டென மலர்ச்சி ஏற்பட, “அந்த ரேப்பிஸ்ட் இறந்துட்டானா?” என்றாள் வேகமாக.

“நோ டாக்டர். அவன் இறந்திருந்தா எந்த வலியும், தண்டனையும் கிடைக்காம ஈஸியா உயிர் போய் இருக்கும். ஆனால் ஷ்யாம் சாரோட உதவியாலே அந்த நாய் இப்போ வெளியவே வர முடியாதபடி ஜெயிலே கம்பி எண்ணிட்டு இருக்கான். இன்னைக்கு தான் கேஸ்ஸோட ஃபைனல் ஜட்ஜ்மெண்ட் வந்துச்சு” என்ற வார்த்தைகளைக் கேட்டு மான்யாவின் இதயம் மீட்டப்பட்ட வீணையாய் அதிர்ந்தது.

அவர்கள் சொன்ன தகவலில்,இறுதியில் மிஞ்சியிருந்த கசப்பு முற்றிலுமாக கரைந்துவிட மான்யா வேகமாக வீட்டிற்கு வந்தாள்.

ஒவ்வொரு அறையாய் அவனைத் தேடியவள் இறுதியாக மீனாட்சியம்மாளின் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே எதையோ வெறித்தபடி படுத்துக் கொண்டிருந்த மீனாட்சியம்மாளின் கைகளை அழுத்தமாக பிடித்தபடி, அவரையே கண் கலங்க பார்த்து கொண்டிருந்தான்.

“அம்மா அந்த குட்டிப் பொண்ணு வாழ்க்கையை கெடுத்த அந்த ரேப்பிஸ்ட்டுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துட்டேன்மா. உங்க பையன் பண்ண காரியத்துக்கு நீங்க தலை கோதி சூப்பர் டா மகனேனு சொல்ல மாட்டிங்களா?” தன் தாயின் கைகளை எடுத்து தலையில் மீது அழுத்தமாக வைத்து ஏக்கமாக கெஞ்சி கொண்டிருந்தவனை நெகிழ்வோடு பார்த்தாள்.

இதுவரை ஷ்யாம் என்பவன் அவளுக்கு புதிரானவன். ஆனால் இப்போதோ மிக மிக புதியவனாக.

கதவோரம் சாய்ந்து கொண்டு அவனையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்த அவள் மான்விழியில் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் மயக்கம்.