உடையாத(தே) வெண்ணிலவே 22

காதல்!

அது ஒரு மனச் சாய்வு.

காதல் கொண்டவர்கள் காணும் எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களிலும் காதலையே தேடுவார்கள்.

அப்படி தான் மான்யா, ஷ்யாமின் ஒவ்வொரு அசைவிலும் காதலின் சாயலைக் கண்டு சிலிர்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னையே பார்வையால் மேய்பவளைக் கண்டு வினாவாய் அவன்  புருவம் உயர, அந்த வளைவில் நாணலாய் வளைந்தாள் அவள்.

“ஓய் இன்டெர்ன்” என்றவனின் வார்த்தையில் மான்யாவின் இதழ்களில் சோழியின் சுழிப்பு.

“ஹாஸ்பிட்டலிலே மட்டும் தான் இன்டெர்ன், வீட்டுலே நான் மான்யா” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

“ஆனால் நீ எனக்கு, எங்கேயும் எப்பவும் இன்டெர்ன் தான்… என் இன்டெர்ன்” என்றவனது வார்த்தை அவளை காதல் சொட்ட பார்க்க வைத்தது.

இரண்டு பேரின் கண்களும் ஒன்றோடொன்று மோதி கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து கொண்டிருந்த நேரம், கதவைத் தட்டிக் கொண்டு சாந்தி உள்ளே வந்தார்.

“அம்மாவை டைனிங் ஹாலுக்கு கூட்டிட்டு வந்துட்டேன் சார்” என்றவரின் வார்த்தைகளுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவன் மான்யாவோடு கீழே வந்தான்.

மீனாட்சியம்மாளின் அருகே வேகமாக வந்து அமர்ந்த மான்யா, “அம்மா சாப்பிடலாமா?” எனக் கேட்க அவர் தலை ஆமோதிக்கவில்லை என்றாலும் அவர் கண்களில் நொடிப் பொழுதில் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது.

அதைக் கண்டு ஷ்யாமின் முகத்தில் வருத்த பின்னல்கள்.

எப்போது தன் வார்த்தைகளால் தாயின் முகத்தில் மின்னலடிக்கும்!

அவன் வேதனையை கண்களால் படித்தவள், தவிப்புடன் உணவை வாயில் வைக்கப் போன ஷ்யாமின் கைகளை வேகமாக பிடித்தாள்.

கேள்வியோடு திரும்பியவனின் கைகளை இறுக்கிப் பிடித்தவள் அவன் கையிலிருந்த உணவை மீனாட்சியம்மாள் முன்பு நீட்டினாள்.

அவர் மறுக்காமல் உணவை வாங்கிக் கொள்ள ஷ்யாமின் இதயம் உணர்ச்சியின் பிடியில் சிக்கி கொள்ள மான்யாவை நன்றியாய் பார்த்தான்.

முதன்முறையாக தன் கையால், மீனாட்சியம்மாள் உணவை உண்டதும், பல கோடி மத்தாப்பூக்கள் ஒன்றாய் சேர்த்து கொளுத்தியதைப் போல மனமெங்கும் வெளிச்சம்.

பல வருடங்களுக்கு முன்பே  சாயம் போயிருந்த அவன் புன்னகையில், இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் வண்ணமேறிக் கொண்டிருந்தது.

💐💐💐💐💐💐

மதுரா மருத்துவமனை!

புன்னகை மாறாத முகத்துடன் வலம் வந்து கொண்டிருந்த ஷ்யாமையே எல்லோரும் ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்தனர் அதில் டியூட்டி நர்ஸ்களின் விழிகளும் அடக்கம்.

எப்போதும் சிகிச்சை அளிக்கும் போது இறுகிக் கிடக்கும் அவன் முகத்தில் இப்போதெல்லாம் புன்னகை எட்டிப் பார்க்கின்றது.

இயந்திரமான அணுகுமுறையில் கொஞ்சம் கொஞ்சமாய் இறகின் மென்மை தடங்கள்.

ஒரு சிறிய பையனுக்கு  பரிசோதனை செய்து முடித்த ஷ்யாம், “அதிகமா சாக்லேட் சாப்பிட கூடாது அப்புறம் அடிக்கடி பூச்சு வந்துடும்”  குழந்தையின் கன்னத்தை கிள்ளியபடி சொன்னவனையே மான்யா இமைக்காமல் பார்த்தாள்.

சிரிப்புடன் திரும்பிய ஷ்யாம், தன்னையே விழியகலாமல் பார்த்த மான்யாவை நோக்கி புருவம் உயர்த்தினான். அதில் சுயம் கலைந்தவள் சட்டென்று தலை குனிய அவனுக்குள் புன்னகை குடியேற்றம்.

அவர்கள் இருவருக்குமிடையே நடந்த அந்த மௌன சம்பாஷனைகளை கவனித்த வெங்கட்ராமன் விழிகளில் அனல் ஏற ஒரு முடிவோடு அங்கிருந்து நகர்ந்தார்.

இதை கவனிக்காத மான்யா,”ஷ்யாம் நான் உங்களுக்கு ஈ.சி.ஜி எடுக்கணும் எனக்கு கோ-ஆப்பரேட் பண்ணுவீங்களா?” என்றாள் கெஞ்சலை முகத்தில் தேக்கி.
“எதுக்கு?” அவன் முகம் குழப்பத்தை காட்டியது.

“நான் ரிசல்ட் வந்த அப்புறம் உங்க கிட்டே சொல்றேனே. இப்போதைக்கு எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ்” ஏக்கமாக கேட்டவளின் முகத்தைப் பார்த்து உச்சுக் கொட்டியவனின் தலை தன்னால் அசைந்து சம்மதம் கொடுத்தது.

அவள் வேகமாக ஈ.சி.ஜி டெஸ்ட் எடுத்து முடித்துவிட்டு நிமிரவும், “இப்போ நான் போகலாம் தானே. இல்லை வேற ஏதாவது டெஸ்ட் பாக்கி இருக்கா?” என்றான் சலிப்பாக.

“நோ நோ ஷ்யாம் இந்த ஒரே ஒரு டெஸ்ட் மட்டும் தான். பார்க்கலாம் இந்த டெஸ்ட்லே நீங்க தேறுறீங்களா இல்லையானு” மர்மப்புன்னகையோடு சொன்னவளை குழப்பத்தோடு பார்த்தபடி வெளியே வந்தான்.

💐💐💐💐💐💐💐💐💐

எமெர்ஜென்சி அறை!

அங்கிருக்கும் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை புன்னகை மாறாமல் செய்தாள் மீரா.
அவளின் அழகு சிந்தும் முகத்தையே சுவருக்குப் பின்னால் நின்று பார்வையால் உறிஞ்சிக் கொண்டிருந்தான் விஷ்வக்.

மீரா! கருணையின் வடிவம்.

அவள் முகம் சுழிந்து இதுவரை அவன் கண்டதே இல்லை.

வெளிச்சம் பாயும் சுடர் விழிகள்.

இதுவரை யாருமில்லாமல் இருட்டில் தவித்துக் கொண்டிருந்த விஷ்வக்கின் இதயம் அவளைக் கண்ட பிறகு தான் வெளிச்சப்பட்டு போனது.

அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு. அது காதலா என்று கேட்டால் அவனுக்கு பதில் தெரியவில்லை.

ஆனால் மீரா அவன் வாழ்வில் இன்றியமையாத ஒருவளாக மாறிப் போய்விட்டாள் என்பது  அவளை மருத்துவமனையில் பார்க்க முடியாத இந்த சில நாட்களில் தெளிவாக கண்டு கொண்டான்.

இழந்த நாட்களுக்கு ஈடு செய்யும் விதமாக அவளை சுவற்றிற்கு பின்னால் மறைந்து நின்று பார்க்க அங்கே நடந்து வந்த ஷ்யாம், விஷ்வக்கின் பார்வை செல்லும் திசையைக் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.

தன்னை ரசிக்கும் விஷ்வக்கின் பார்வையை மீரா முன்பே உணர்ந்திருந்தாலும், புன்முறுவலை அடக்கியபடி, வேலை செய்து கொண்டிருந்த மீராவின் முக அசைவை கவனித்த ஷ்யாமின் புருவங்கள் வளைந்தது.

எமெர்ஜென்சி வார்டை விட்டு வெளியேறிய மீரா சென்ற திசையை நோக்கி  விஷ்வக்கின் கால்களும் பயணிக்க, ஷ்யாமின் முகத்தில் ஏகத்துக்கும் மாறுதல்.

தன் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த விஷ்வக்கின் நிழலை உணர்ந்து மீராவின் இதழ்களில் புன்னகை தன்னை மீறியது.

“மீரா, நீ முன்னாடி சிரிக்கிறது பின்னாடி இருக்கிற எனக்கு தெளிவா தெரியுது” புன்னகை கசிந்த அவன் வார்த்தைகளைக் கேட்ட மீரா, சட்டென முகத்தை மாற்றிக் கொண்ட நேரம் விஷ்வக் அவளருகில் வந்து நின்றான்.

“நான் ஒன்னும் சிரிக்கலையே விஷ்வக்” சமாளித்தபடியே வெண்டிங் மிஷனில் உள்ள பட்டனை தவறாக அழுத்த சென்றாள்.

“மீரா நீ எப்பவும் ப்ளாக் டீ தானே குடிப்ப” கேட்டபடியே அதற்கான பொத்தானை தட்டினான்.

இரண்டொரு நிமிடங்களில் சுட சுட வந்த தேநீரை எடுத்து அவள் எதிரில் நீட்ட மீராவின் முகம் வியப்பைக் காட்டியது.

“உனக்கு ப்ளாக் டீ பிடிக்கும்னு எனக்கு எப்படி தெரிஞ்சதுனு ஆச்சர்யப்படுறீயா?” அவன் கேள்விக்கு வேகமாக தலையாட்டி மறுத்தாள்.

“கிட்டத்தட்ட நாலு மாசமா என்னை மறைஞ்சு நின்னு பார்க்கிறவருக்கு இந்த சின்ன விஷயம் கூட தெரியலைனா தான் ஆச்சர்யப்படணும்” என்றபடியே தேநீரை ஊறிஞ்சியவளின் வார்த்தைகள் அவன் இதயத்தையும் சேர்த்தே விழுங்கியது.

“ஹே மீரா. அப்போ நீ வந்த அடுத்த நாளிலிலே இருந்தே நான் உன்னை பார்க்கிறதை பார்த்துட்டியா?” என்றான் ஆனந்த அதிர்வாக.

சப்தமின்றி மறைந்து நின்ற ஷ்யாமின் செவிகளில் அவர்கள் பேசிய சப்தம் விழ விழ அவன் முகமெங்கும் இருள்.

வேகமாக சுவற்றிற்கு பின்னாலிருந்து வெளியே வந்தவன் அழுத்தமான காலடி வைத்து மீராவை நெருங்கினான்.

“கம் டூ மை ரூம் இமிடியட்லி மீரா” ஷ்யாமின் கடுமையான குரலில் மீராவின் முகம் தடுமாற, மறுப்பேச்சின்றி  அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்தவளை ஷ்யாம் பார்த்த பார்வை இருக்கிறதே.

ஐயோ அது நெருப்பு!

பார்வை மட்டுமா? வார்த்தைகளையும் சேர்த்தே நெருப்பாக கக்கினான்.

“இந்த ஹாஸ்பிட்டலிலே சேரும் போது என்ன சொல்லிட்டு சேர்ந்தேனு நியாபகம் இருக்கா?” என்றான் கோபமாக.

“அது ஷ்யாம்…” அவளிடம் தயக்கம் தந்தியடித்தது.

“உனக்கு எப்படி நியாபகம் இருக்கும்? அதான் காதல் உன் கண்ணை மறைக்க ஆரம்பிச்சுடுச்சே” அவன் வார்த்தைகள் தீயாய் சுட சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.

“இங்கே ப்ரொஃபஷனையும் பர்சனலையும் மிக்ஸ் பண்ணக்கூடாதுனு சொல்லி தானே ஹாஸ்பிடெலிலே அப்பாயின்ட்மெண்ட் பண்ணேன். வந்த நாலு மாசத்துலேயே எல்லாம் மறந்துப் போயிடுச்சா?” அவன் கேள்விக்கு தலைகுனிவை தவிர்த்து மீராவிடம் பதிலில்லை.

“இனிமேல் பேஷன்ட்ஸை மட்டும் கவனிச்சா போதும் மீரா. யாரை  கவனிக்க வேண்டாம்னு நான் சொல்றேனு உனக்கு புரியும்னு நினைக்கிறேன். நவ் யூ மே கோ” அவன் அழுத்தமாக சொல்ல மீரா வறண்டு போன முகத்தோடு வெளியே வந்தாள்.

அவளுக்காக நெடு நேரமாக காத்து கொண்டிருந்த விஷ்வக்கை கவனிக்காதவாறு கடந்து செல்ல முயன்றாள்.

“மீரா, என்னாச்சு ஏன் உன் முகம் இப்படி இருக்கு? ஷ்யாம் ஏதாவது சொன்னானா?” அவன் கேள்விக்கு பதிலளிக்காமல் வேகமாக நகர முயன்றாள்.

அவளை முன்னோக்கி செல்ல விடாமல் இடைமறித்த விஷ்வக், “என்னாச்சுனு சொல்லிட்டு போ மீரா?”என்றான் கேள்வியாக.

“விஷ்வக் ஹாஸ்பிடெல் டைம்லே பர்சனல் பத்தி பேச வேண்டாம்” என்றவளை கூர்மையாக பார்த்தான்.

“இத்தனை நாள், மீனு அம்மாவை பார்த்துக்கிட்டதாலே ஹாஸ்பிட்டலிலே மீட் பண்ண முடியல. மெசேஜ், கால்ஸ் எதுக்கும் ரிப்ளையும் பண்ண மாட்டேங்குற. அப்போ எப்போ தான் உன் கிட்டே பேசுறது. நீயே சொல்லு” வழியை மறித்து பேசியவனின் வார்த்தைகள் கேட்டும் கேட்காதபடி வேகமாக கடக்க முயன்றாள்.

அதைக் கண்டு பொறுமை இழந்தவன் வேகமாக மீராவின் கையைப் பிடித்து நிறுத்தினான். அவனின் கையை உதறியபடியே “உங்க கிட்டே, என் பர்சனல் விஷயத்தை பத்தி பேசுற அளவுக்கு எதுவும் இல்லை. நீங்க டாக்டர், நான் நர்ஸ் அவ்வளவு தான் நமக்குள்ளே ரிலேஷன்ஷிப்” இறுகிப் போய் வந்த வார்த்தைகளைக் கேட்டு விஷ்வக்கிடம் இறுக்கம்.

இத்தனை நாள் உள்ளுக்குள் மறைத்து வைத்த காதல், எப்போது அவளுக்கு தெரிந்துவிட்டதோ அப்போதிருந்தே விஷ்வக் தவிக்க துவங்கியிருந்தான்.

அன்று தன்னிடம் புன்னகை முகத்தோடு பேசிய மீராவா இது! அவனுக்குள் குழப்பம் கூடு கட்டியது.

இன்றோடு எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு விஷ்வக்கின் வார்த்தைகள் வெளியே வந்தது.

“ஏன் மீரா, என் ஃபீலிங்க்ஸோட விளையாடுற? இருக்கு இல்லை, இந்த ரெண்டுலே ஏதாவது ஒரு பதில் சொல்லிட்டு போ”  அவன் கேள்வியில் மீரா நிதானித்து திரும்பிப் பார்த்தாள்.

அந்த பார்வை உணர்ச்சி துடைக்கப்பட்டு இருந்தது.

“நீங்க பார்க்கிறதை நான் பார்த்தேனு சொன்னேனே தவிர, நானும் உங்களை பார்க்கிறேனு சொன்னேனா?” அவளின் கேள்வி அவன் இதயத்தை சுருக்கென்று தைக்க அவனிடம் பதிலில்லை.

“இது வெறும் ஈர்ப்பு விஷ்வக். அதுக்கு மேலே வேற எதுவும் இல்லை” அழுத்தமாக சொல்லிவிட்டு சென்றவளின் திசையைப் பார்த்தவனின் தொண்டையில் துயரத்தின் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது.

💐💐💐💐💐💐

வெங்கட்ராம் அறை!

அங்கே எதிரும் புதிருமாய் தந்தையும் மகனும் நின்று கொண்டிருந்தனர்.

“என்னை எதுக்கு கூப்பிட்டுங்கணு தெரிஞ்சுக்கலாமா?” என்றான் எங்கோ பார்த்தபடி.

“மான்யாவை லவ் பண்றியா ஷ்யாம்?” எடுத்த எடுப்பிலேயே அவர் விஷயத்தின் மையப்புள்ளிக்கு வந்துவிட அவனிடம் திடுக் உணர்வு.

“ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன் நீங்க எனக்கு சீனியர் டாக்டர் மட்டும் தான். அப்பா மாதிரி கேள்வி கேட்கிற வேலைலாம் வெச்சுக்காதீங்க. மெடிக்கல் ரிலேட்டடா பேசறதா இருந்தா மட்டும் தான் நான் இங்கோ இருப்பேன்” என்றான் குரலில் அழுத்தம் கூட்டி. 

ஆரனாஷி உடல்நிலையை மறைத்த கோபத்தில் இருந்தவன் விட்டேத்தியாக பேசினான்.

ஷ்யாமின் வார்த்தையில் அவர் கலங்கினாலும் முகத்தில் அதை காட்டாமல் அவனை நோக்கினார்.

“மான்யாவை காதலிக்கிறியானு கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலை”  வெங்கட்ராம் சப்தமாய் கேட்ட கேள்வி, ஷ்யாமைத் தேடி வெங்கட்ராமின் அறைக்கு வந்த மான்யாவின் காதுகளில் தெளிவாக விழுந்துவிட்டது.

‘என்ன சொல்லுவான்? என்னை காதலிப்பதாக சொல்லுவானா?’ உள்ளுக்குள் கேள்வி எழுந்ததும் சட்டென்று நிதானித்த மான்யா செவியை கூர்தீட்டினாள்.

“நான் லவ் பண்றேனு சொன்னா என்ன பண்ணுவீங்க?” ஷ்யாம் கோபமாக எதிர்கேள்வி கேட்க “முடியாதுனு சொல்வேன்” என்றான் கோவமாக.

அவரது வார்த்தைகளைக் கேட்டு அவன் இதழ்கள் ஒரு தினுசாய் சிரித்தது.

“அப்போ நான் கண்டிப்பா மான்யாவை தான் லவ் பண்ணுவேன் மிஸ்டர்.வெங்கட்ராம்” அவன் முடிவாய் சொல்லிவிட்டு செல்ல எத்தனிக்க “நில்லு ஷ்யாம்” என்றார் வேகமாக.

ஷ்யாமின் பதில் மான்யாவிற்குள் மத்தாப்பாய் ஒளி கூட்டிய நேரம் நர்ஸ் பிரியங்காவும் மோகனாவும் அந்த வழியே வந்தனர்.
அவர்களை கண்டதும் மான்யா சட்டென கதவின் அருகிலிருந்து நகர்ந்து நின்றாள்.

“ஷ்யாம், ஐ யம் வார்னிங் யூ. மான்யாவை காதலிக்காதே. அவள் நம்ம ஸ்டேடஸ்க்கு ஒத்து வர மாட்டா” வெங்கட்ராம் இறுதியாக பேசிய வார்த்தைகள் மான்யாவின் செவியை எட்டாதபடி பிரியங்காவும் மோகனாவும் மான்யாவை அந்த அறையை விட்டு தள்ளிக் கொண்டு வந்தனர்.

“மான்யா, நீங்க சவால் விட்டு ஒரு மாசத்துக்கு மேலே ஆச்சே… நீங்க இன்னும் ஹாஸ்பிட்டலை விட்டு போகவே இல்லையே?” என்றாள் மோகனா கேள்வியாக.

“இல்லை மோகனா நான் அந்த ப்ளானை ட்ராப் பண்ணிட்டேன். ரிடையர்ட் ஆகுற வரைக்கும் இங்கே தான் வொர்க் பண்ண போறேன்” என்றாள் உதடுகளில் குறுஞ்சிரிப்பு மின்ன.

மான்யாவின் பதிலைக் கேட்டு பிரியங்கா மோகனாவின் தோளை தட்டினாள்.

“நான் சொன்னேன்ல பார்த்தீயா, இனி மான்யா இங்கே தான் வொர்க் பண்ண போறாங்களாம். நான் தான் அப்பவே சொன்னேனே ஷ்யாம் சார் இப்போ எல்லாம் சிரிக்கிறாரு ரெண்டு பேரும் ரொமாண்டிக்கா லுக் விட்டுக்குறாங்கனு. நீ எங்கே கேட்ட? ஷ்யாம் சாரை நீ சைட் அடிக்க முடியாது மோகனா, அவரு மான்யாவுக்கு சொந்தமாயிட்டாரு போ” ப்ரியங்கா மோகனாவிடம் கடகடவென பேசிவிட்டு வேகமாக மான்யாவிடம் திரும்பினாள்.

“அது எப்படி மான்யா? சொன்ன மாதிரியே ஒரே மாசத்துலே ஷ்யாம் சாரை கவுத்துட்டீங்க? அவர் ரோபோ லவ்வுலேலாம் விழ மாட்டாருனு நினைச்சோம். பட் நீங்க ஷ்யாமையே காதலிக்க வெச்சுட்டிங்க” பிரியங்காவின் கேள்வி, வெங்கட்ராமின் அறையிலிருந்து வெளியே நடந்து வந்த ஷ்யாமின் செவிகளில் துல்லியமாக விழுந்துவிட, அவன் முகத்தில் ஏகப்பட்ட மாறுதல்கள்.

வந்த தடமின்றி வேகமாக திரும்பி சென்றவனின் மனதில் பிரியங்கா பேசிய வார்த்தைப் பந்துகளே, விடாமல் மோதி கொண்டிருக்க அவன் உள்ளமெங்கும் சலனம் அலையாய் அடித்து கொண்டிருந்தது.

வம்பு பேச்சு பேசிய அந்த நர்ஸ்களை ஒரு வழியாக சமாளித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்த மான்யா பெருமூச்சு எடுத்தாள்.

அவள் மனக் கரையை ஷ்யாமின் வார்த்தை அலைகளே திரும்ப திரும்ப அடித்துக் கொண்டிருக்க அவள் முழுவதுமாக காதலில் நனைந்தாள்.
அவளின் நினைவு காலையில் எடுத்த ஈ.சி.ஜிக்கு செல்ல வேகமாக தன் டிராயரை திறந்து பார்த்தாள்.

அந்த காகிதம் அவனுடைய இதய துடிப்பை தாங்கியிருந்தது.

தனக்கு ஏற்கெனவே எடுத்த ஈ.சி.ஜி ரிசல்ட்டையும் அவன் ரிசல்டையும் அருகருகே வைத்துப் பார்த்தாள்.

சில முரண்களைத் தவிர்த்து கிட்டத்தட்ட இருவரது இதயத்துடிப்பின் கோடுகளும் ஒத்ததிர்வாய்.

அதைக் கண்ட மான்யாவின் இதழ்களில் புன்னகை தளிரிட்டது.

அவள் நினைவு தன் தந்தையிடம் வருங்கால கணவனைப் பற்றிய பேச்சில் சென்று நிலைத்தது.

அப்போது அவள் கல்லூரியின் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இதயத்துடிப்பும் வெவ்வேறாக இருக்கும் என்று பாடத்தில் படித்தவளுக்குள் ஒரு ஆசை.

தன் இதயத்துடிப்போடு கிட்டத்தட்ட ஒத்துப் போகும் இன்னொரு இதயத்துடிப்பு தான் தனக்கு துணையாக வர வேண்டும் என்று.

அந்த ஆசையை தந்தை சுந்தரிடம் வெளிப்படுத்த அவரோ, “எல்லாருக்கும் ஜாதகத்தை வெச்சுக்கிட்டு தான் பையனை தேடுவாங்க. ஆனால் நான் மட்டும் ஈ.சி.ஜி ரிப்போர்ட்டை வெச்சு என் பொண்ணுக்கு பொறுத்தமான பையனை கண்டுபிடிக்கப் போறேன்” என்றார் மகளின் தலையை வாஞ்சையாய் வருடியபடி.

அவர் அப்போது சொன்ன வார்த்தைகள் இப்போது காதில் ஒலிக்க மான்யாவின் இதயம் நெகிழ “அப்பா நான் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிற இதயத்துடிப்பை கண்டுபிடிச்சுட்டேன்பா. நானும் ஷ்யாமும்  நல்லா இருக்கணும்னு ஆசிர்வாதம் பண்ணுங்க” மனதார வேண்டியவள் அந்த ரிசல்ட்டை எடுத்துக் கொண்டு ஷ்யாமின் அறையை நோக்கி சென்றாள்.

காலையில் அவனிடம் இந்த சந்தோஷ செய்தியை பகிர முயன்ற போது அவளுக்குள் ஒரு தயக்கம்.

ஆனால் எப்போது ஷ்யாமும் தன்னை காதலிக்கின்றான் என்று அவன் வாய் வார்த்தைகளினாலே அறிந்தாளோ அப்போதே அந்த தயக்க கயிறை இதயம் இரண்டாக வெட்டிப் போட வேகமாக ஷ்யாமின் கதவு முன்பு நின்றாள்.

சுழல் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு அந்த நர்ஸ்கள் பேசியதை மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டிருந்தவன் மான்யாவின் கொலுசு ஒலியில் தன்னிலை கலைந்தான்.

“கம் ஆன் இன்டெர்ன்” என்று இவன் குரல் கொடுக்க அடுத்த நொடியே உள்ளே நுழைந்தவள் அவனின் முன்பு அந்த காகிதத்தை வைத்து விட்டு புன்னகையோடுப் பார்த்தாள்.

எடுத்துப் பார்த்தவனது புருவங்கள் சுருங்கி விரிந்தது.

இரண்டு இதயத்துடிப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியிருக்க அவனும் அவளைப் போலவே ஒரு நொடி அதிர்ந்தான்.

மெல்ல அந்த காகிதத்தின் பின்புறம் திருப்பி பார்க்க, “நீங்க என்னோட இதயதுடிப்பா இருப்பீங்களா? எனக்காக துடிப்பிங்களா?” அவள் தன் காதலை கேள்வியாய் எழுதியிருக்க பக்கத்திலேயே ஆம், இல்லை என்ற இரண்டு பதில்கள்.

இதில் எந்த பதிலை அவன் தேர்ந்தெடுப்பான்?
படப்படப்போடு அவனையே பார்த்த நேரம் ஷ்யாமின் பார்வை மான்யாவின் மீது ஒரு முறை அழுத்தமாக விழுந்து மீண்டும் அந்த காகிதத்தின் மீது விழுந்தது.

ஷ்யாம் சித்தார்த்தின் கையிலிருந்த பேனாமுனை, ஒரு பதிலை தன் நிறத்தால் தேர்ந்தெடுக்க அவன் தேர்வில் மான்யா திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.

அவன் பதிலால் இந்த காதல் வெண்ணிலவு வளருமா? இல்லை தேயுமா?