உடையாத(தே) வெண்ணிலவே 23

பதில்கள்!

சில பதில்கள் உயிரின் வேரையே பிடுங்கி போடும் வல்லமை கொண்டது. சில பதில்கள் உயிரைத் துளிர்க்க வைக்கும் வளமை கொண்டது.

ஷ்யாம் சொன்ன “சரி” என்ற பதிலில் அவள் உயிரில் பல கோடி காதல் பூக்களின் மலர்வு.

செந்தாமரையாய் பூத்த முகத்தைக் கண்டு, ஷ்யாம் அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்க்க அவள் புருவத்தில் வளைவு.

“ஹலோ சீனியர், இந்த ரொமாண்டிக் லுக்லாம் ஹாஸ்பிட்டலிலே அலோவ் கிடையாது. நியாபகம் இருக்கட்டும்” கைநீட்டி சொன்னவளின் முகத்தில் அபிநயத்தின் விளையாடல்.

நேருக்கு நேர் நின்று தன்னை எதிர்த்த மான்யாவுக்கும் இந்த மான்யாவுக்கும் தான் எத்தனை வித்தியாசம்!

‘அன்பு, சீறி வரும் சிறுத்தையைக் கூட தவழ வைக்கும் என்பது உண்மை தான் போல’ நினைத்த மாத்திரத்தில் அவன் உதடுகளில் புன்னகை சுழியாய் சுழிந்தது.

அவன் மௌனத்தை காதலின் சம்மதமாக மொழிப் பெயர்த்துக் கொண்டவள், மனதில் தேக்கி வைத்த அன்பை எல்லாம் வேக வேகமாக கொட்ட ஆரம்பித்தாள்.

“ஷ்யாம், பல வருஷம் கழிச்சு என் வாழ்க்கையிலே வந்த முதல் மழை நீங்க தான்” இதழில் காதலை தேக்கி சொன்னாள்.

பாவம், அவளின் மழையானவன், தன் வாழ்வில் இடியை இசைக்கும் வானமாகப் போகிறான் என்பதை அறியாமல்.

“என் ஆஷியையும், மீனு அம்மாவையும் இன்னும் பக்கத்துலே இருந்து உரிமையா பார்த்துக்கலாம்லே” கண்கள் மின்ன கேட்டவளைப் பார்த்து அவனுக்குள் ஏதோ பிசைந்தது.

“உங்க வீட்டுலேயே இருந்தாலும் இதுவரை அந்நியப்பட்டு இருந்தேன். ஆனால் இனி அப்படி தனியா நிற்க வேண்டிய அவசியம் இல்லைல. நானும் நம்ம குடும்பத்துலே ஒருத்தி ஆகிட்டேன்ல?” உதடு துடிக்க கேட்டாள்.

‘பைத்தியக்காரி, இன்னும் முழுசா காதலிக்கவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே ஃபேமிலி வரை போயிட்டா! ரொம்ப ஃபாஸ்டு தான்’ அவன் இதழில் கேலி சிரிப்பு ஊர்ந்தது.

ஆனால் இவள், அவன் முகபாவனைகளை கவனிக்கும் நிலையில் எல்லாம் இல்லை.

கோபமோ சந்தோஷமா எல்லாவற்றையும் வெளிப்படையாகவே பேசி பழகி இருந்தவள், உள்ளுக்குள் ஊறியிருந்த தன் காதலின் நீருற்றை தயங்காமல் அவன் இதயத்தில் பாய்ச்சி கொண்டிருந்தாள்.

“ரோபோ மாதிரி இருக்க, உங்க மேலே காதல் கொஞ்சமும் வராதுனு நினைச்சேன். பட் நவ் ஐ யம் இன் லவ் வித் திஸ் சிட்டி ரோபோட்” நெருங்கி வந்து அவன் இதயத்தை தட்டி சொன்னவளைக் கண்டு அவன் இதயத்துடிப்பு தப்பியது.

அவன் இதயத்துடிப்பு தடுமாறியது அந்த ஒரு முறை மட்டுமா?

அதன் பின்பு ஒவ்வொரு முறையும், ஷ்யாம் சித்தார்த், இலை நுனியில் தவழும் நீராய் அவள் அசைவில் தடுமாறி கொண்டு தானே இருந்தான்.

இப்போது கூட ஆரனாஷிக்கு கதை சொல்லியபடி ஊட்டியவளோ அவனுக்குள் பெரும் பிரளயத்தை உண்டாக்கி கொண்டிருந்தாள்.

“மானு அம்மா, அப்புறம் என்னாச்சு? ராணியை காதலிக்கிறா மாதிரி நடிச்ச ராஜா, உண்மையாவே காதலிக்க ஆரம்பிச்சுட்டாங்களா?” உணவை வாயில் அதக்கியபடி மீதி கதையை மான்யாவிடம் ஆவலாக கேட்டாள்.

ஆரனாஷியின் கேள்வி ஷ்யாமை திடுக்கிட வைத்தது.

“ஆமாம் ஆஷிமா, ஆனால் நம்ம ராணி ராஜாவை ஏத்துக்கல. எதுலே வேணாலும் விளையாடலாம் ஆனால் அன்பை வெச்சு விளையாடுறது கொலைக்கு சமம்லே. சோ ராணி ராஜாவை பிரிஞ்சுட்டாங்க” மான்யாவின் வார்த்தைகள் அவன் இதயத்தை நசுங்கியது.

“அச்சோ பாவம் ராஜா” ஆரனாஷி உச்சு கொட்ட, “ஹ்ம்ம் பாவம் தான்” அசட்டையாக சொன்னவளின் பார்வை ஷ்யாம் சித்தார்த்தின் விழிகளை ஒருவிதமாய் ஊடுருவியது.

அந்த பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் தன்னால் தலை குனிந்தான் அவன்.

ஆரனாஷிக்கு உணவை முழுவதுமாக ஊட்டிவிட்டு வாயைத் துடைத்துவிட்டவள்,

“என்ன ஷ்யாம் சாப்பிடாம அப்படியே வெச்சு இருக்கீங்க?” என்றாள் அவனைப் பார்த்து.

அந்த கேள்வியில் சுயம் கலைந்தவன் ஒன்றுமில்லையென்று தலையசைத்தவாறே உணவை கையால் அளந்தான்.

“மானு மா. அப்பா இப்போ எல்லாம் சரியாவே சாப்பிட மாட்டேங்குறாரு. அவருக்கும் என்னை மாதிரியே ஊட்டிவிடுங்க” ஆரனாஷி துருதுருப்பாக சொல்ல,

“அப்பா தான் பிக் பாயா ஆகிட்டேன்ல. சோ நானே சாப்பிட்டுக்குவேன், ஆஷிமா” அவசரமாக மறுத்து கொண்டிருக்கும் போதே மான்யா உணவை ஷ்யாமை நோக்கி நீட்டினாள்.

அவளின் அதீத அக்கறையின் வீச்சு, செல்ல உரிமையை எடுத்து கொள்ள வைத்ததை உணர்ந்தவனின் உதடுகள் அவளுக்கு வாகாய் தன்னால் பிரிந்து உணவை வாங்கி கொள்ள, மான்யாவிடம் இளநகை.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பிக் பாய்னு சொன்னவரு, சட்டுனு சின்னக்குழந்தை ஆகிட்டாரே” மான்யா அவன் கன்னத்தை இழுத்து கொஞ்ச,

“மானுமா நானும்” என்றபடி அவன் இன்னொரு கன்னத்தைப் பிடித்து இழுத்து கொஞ்ச, அவளின் கொஞ்சலை தன் கன்னத்தில் பூசி கொள்ள முடியாத அவஸ்தையில் எழுந்து நின்றான்.

“எனக்கு இப்போ பசிக்கலை. நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” அவசரமாக சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வெளியே வர கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

அப்படி வெளியே வந்தவன் அங்கே  கண்ட காட்சியில் திடுக்கிட்டு நின்றுவிட்டான்.

வீல்சேரில் வீற்றிருந்த மீனாட்சியம்மாளின் கால்களை பல வருடம் கழித்து பூமியில் பதிய வைக்க முயன்று கொண்டிருந்தாள் மான்யா.

வேகமாக அருகே வந்தவன், “நீ என்ன பண்ற மான்யா அம்மாவுக்கு நடக்க தெரியாது. கீழே விழுந்துடுவாங்க” என்றான் தவிப்பாக.

“ஷ்யாம், அம்மாவாலே நடக்க முடியும். நான் நம்புறேன். நீங்களும் நம்புங்க” என்றபடி மெல்ல மீனாட்சியம்மாளின் தோளை அணைத்தபடி காலடி எடுத்து வைத்தாள்.

அவர் கால்கள் தரையில் சரியாக பாவாமல் தடுமாறியதை கண்டு ஷ்யாம் பதறினான்.

“இன்டெர்ன் போதும் இதோட நிறுத்திடு. எங்கம்மா மட்டும் விழுந்தாங்க உன்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவேன்” கோபத் தீயில் எரிந்து கொண்டிருந்தவனின் வார்த்தைகள் சட்டென அங்கு கண்ட காட்சியைக் கண்டு தணிந்து போனது.

அவன் பேசியதை கண்டு கொள்ளாத, மான்யா மீனாட்சியம்மாளின் தோளிலிலிருந்து தன் கைகளை விடுவித்தாள். 

அவரிடம் ஏகமாய் தடுமாற்றம், ஆனாலும் சில நொடிகளிலே தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, அருகிலிருந்த சுவற்றை பிடிமானமாய் பிடித்துக் கொண்டார்.

அதைக் கண்டு ஷ்யாமின் புருவங்கள் ஆச்சர்யமாய் வளைந்த நேரம் மான்யாவோ “என் கிட்டே வாங்க மீனுமா” என்று கை நீட்டினாள்.

சுவற்றைப் பிடித்து மெல்ல நடைப்பழகியவர் ஒரு கட்டத்தில் தன்னால் நடக்க துவங்க ஷ்யாமின் உணர்வுகளை வரிக்க வார்த்தைகள் இல்லை.

தன் குழந்தை முதல் எட்டு வைக்கும் பொக்கிஷ நொடியை கண்டு நெகிழும் தாயைப் போல நெகிழ்ந்தான்.

மீனாட்சியம்மாள் மான்யாவின் அருகே நடந்து வரவும் அவரை வீல்சேரில் அமர்த்திவிட்டு, உணர்ச்சியின் பிடியில் சிக்கி கொண்டிருந்த ஷ்யாமின் தோளை தொட்டாள். அடுத்த கணம் அவன் இறுகிய அணைப்பிற்குள் அவள்.

“இன்டெர்ன்,நீ என் அம்மாவை நடக்க வெச்சுட்ட” மழையில் உடையும் மலராய் அவன் வார்த்தைகள் உடைந்து வந்தது.

“பார்க்க தான் விரைப்பா இருக்கிறது. ஆனால் உள்ளுக்குள்ளே குட்டி பாப்பா” அவன் தலைமுடியை இதமாக கோத அவன் அவளுக்கு இசைந்து கொடுத்தான்.

“இதுக்கே அழுதா எப்படி? இப்போ நடந்த மீனாட்சியம்மா, அடுத்து பேசுவாங்க அப்புறம் உங்களை கட்டிப்பிடிப்பாங்க, சாப்பாடுலாம் ஊட்டிவிட போறாங்க. அப்போ மொத்தமா சேர்த்து அழுதுக்கலாம் ஓகே?” அவளிடம் சிறுகுழந்தையை சமாதானப்படுத்தும் பாங்கு.

“ஓ அப்போ இந்த மான்யா மீடியட்டரை தாண்டி தான், நான் எங்கம்மா கிட்டே இனி பேசவே முடியுமா?” அவன் ஒரு மாதிரி குரலில் கேலியை பூசி கேட்க

“ஆமாம் மான்யாவை தாண்டி தான் இனி எல்லாமே நடக்கணும்” என்றாள் குறும்பு விளையாடும் குரலில்.

அவள் புன்னகை மின்னிய முகத்தை கண்டவனுக்குள் மண்புழுவாய் குடைந்தது அந்த கேள்வி.

‘என் பொய்களின் நீரூற்றில் மகிழ்ந்த இவள், நிஜம் அறியும் போது உண்மையின் வெம்மை தாங்காமல் கலங்கி விடுவாளோ?’

 

💐💐💐💐💐💐💐💐💐💐

காதல் ஆற்றில் நனைந்து, கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக் கொண்டிருந்த மான்யாவை “எமெர்ஜென்சி” என்ற குரல் வெகு வேகமாய் கலைத்தது.

நிமிர்ந்துப் பார்க்க அபாய நிலையில் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளே கொண்டு வரப்பட்டார்.

வேகமாக அவர் அருகில் சென்று பரிசோதித்த மான்யாவிற்கு குழந்தையை கலைத்தால் மட்டுமே தாய் உயிர் பிழைக்க முடியும் என்பது தெரியவர கலக்கமாக அந்த பெண்மணியைப் பார்த்து நின்றாள்.

“மான்யா வாட் இஸ் பேஷன்ட் ஸ்டேடஸ்?” கேள்வியுடன் வந்து நின்ற ஷ்யாம் சித்தார்த்திடம் குழந்தையை கருகலைப்பு செய்ய வேண்டிய நிலைமையை விளக்கினாள்.

“அகில் கிட்டே அபார்ஷன் ப்ராசஸ்கான எல்லா ப்ரொசீஜரையும் சீக்கிரமா பண்ண சொல்லுங்க. கைநோகாலஜிஸ்ட் லதாவுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க” அவன் வேகமாக கட்டளையிட மீரா இடையிட்டாள்.

“லதா மேம் இன்னைக்கு அவைலபிளா இல்லை, ஷ்யாம் சார்”

“ஒகே தென், அவங்க கீழே வொர்க் பண்ற இன்டெர்னை கூப்பிட்டு பண்ண சொல்லுங்க”

“அந்த இன்டெர்ன் இப்போ தான் புதுசா ஜாயின் பண்ணாங்க, சோ” மீரா தயங்கவும், ஷ்யாம் மான்யாவைப் பார்த்தான்.

“மான்யா நீயும் அந்த நியூ ரெஸிடென்டும் ஒன்னா சேர்ந்து இந்த ப்ரொசிஜெர் பண்ணிடுங்க” அவன் சொன்னதும் அவள் கால்கள் வேகமாக பின்னோக்கி நகர்ந்தது.

“ஐ யம் நாட் கம்ஃபர்டெபில் வித் திஸ் அபார்ட் சர்ஜரி ” அவள் பேச்சில் பாதரச நழுவல்.

“யா ஐ கேன் அன்டர்ஸ்டான்ட். இந்த  சர்ஜரி ப்ராசெஸ் உனக்கு புதுசு தான். பட் உன் கூட சேர்ந்து நியூ இன்டெர்னும் இருக்க போறாங்க. என் மேற்பார்வையிலே தான் சர்ஜரியும் நடக்கப் போகுது. அப்புறம் என்ன தயக்கம்?” அவன் அவ்வளவு எடுத்து சொல்லியும் மான்யாவின் முகம் சமன்படவில்லை.

“இல்லை நான் இந்த சர்ஜரி பண்ண மாட்டேன் ப்ளீஸ் ஷ்யாம்” அடம்பிடித்து நின்றவளைக் கண்டு அவன் நிதானம் தப்பியது.

“ஒய் இன்டெர்ன் என் கிட்டே திட்டு வாங்காம சர்ஜரி பண்ண ஸ்டார்ட் பண்ண கூடாதுனு ஏதாவது சபதம் எடுத்து வைச்சு இருக்கியா? சீக்கிரமா ரெடியாகிட்டு வா. இல்லை ரிட்ராக்டர் வெச்சு தலையை ரெண்டா பிளந்துடுவேன்” கோபமாய் கத்திவிட்டு அவன் செல்ல மான்யா சோகத்தை சுமந்து கொண்டு நின்றாள்.

எப்போது கருகலைப்பு என்ற வார்த்தை அவள் செவிகளில் விழுந்ததோ அப்பொழுதே அவள் கைகளில் லேசாக துவங்கிய நடுக்கம் இப்போது தேகம் முழுக்க பரவியிருந்தது.

வேகமாக பச்சை அங்கியை எடுத்து மாட்டியவள், உதறிய கைகளை அழுத்தமாக பிடித்தபடியே “உன்னாலே முடியும் மான்யா” என்ற வார்த்தைகளை திரும்ப திரும்ப மனதுக்குள் சொல்லியவாறு அந்த அறைக்குள் நுழைந்தாள்.

ஆனால் அவளால் முடியவில்லை. கைகளில் நடுக்கம் நிற்காமல் உதறியது.

அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அசைவும் நொடிக்கு நொடி பிறழ, ஷ்யாம் அவளைக் கண்டு முறைத்தான்.

“மான்யா, ஒரு சின்ன கட் கூட உன்னாலே ஒழுங்கா பண்ண முடியாதா?” கடிந்தவனை  வேகமாக நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவள் கண் கரையில் கண்ணீர் அலைகள்.

அதைக் கண்டு பல்லைக் கடித்தவன், “கோ அவுட் இமிடியட்லி ஃப்ரம் ஹியர்”  கோபத்தில் கத்திவிட்டு, அவள் எங்கிருந்து விட்டாளோ அங்கிருந்து சர்ஜரியைத் தொடர்ந்தான்.

அந்த அறையை விட்டு வெளியே வந்த மான்யா கண்ணீருடன் தன் கரங்களை கழுவினாள்.

அவள் எத்தனை முறை கண்ணீரில் கழுவினாலும் அந்த நினைவின் தடத்தை அழிக்க முடியவில்லை. உள்ளுக்குள் ஏதோ உடைந்து கொண்டிருக்க வேகமாக தன் லாக்கரை நோக்கி ஓடினாள்.

திறந்து பார்த்தவளின் எதிரே, சிரித்த முகத்துடன் செவ்வக சட்டத்துக்குள் புதைந்து இருந்த தாயின் புகைப்படம்.

நடுங்கிய விரலோடு கையில் எடுத்தவள் “அம்மா” என்ற கேவலோடு மடிந்து அமர்ந்தவளின் உள்ளம் முழுக்க தாய் ஏக்கம்.

அவர் புகைப்படத்தை மடியில் சாய்த்துக் கொண்டிருந்தவள், பனி சிலையாய் எத்தனை மணி நேரம் உறைந்துப் போய் இருந்தாள் என்பதை அவளே அறியாள்.

ஷ்யாம் அவள் தோளை தொட்ட அடுத்த நொடி கரைந்துப் போனவள், தன்னருகே அமர்ந்திருந்த அவனைப் பார்த்தாள்.

“இன்டெர்ன், ஏன் இப்படி எமோஷனல் இடியட்டா இருக்க? அந்த சிசுவை வெளியே எடுத்தா தானே ரெண்டு உயிர்லே ஏதாவது ஒரு உயிரையாவது காப்பாத்த முடியும்? அந்த குழந்தை இறந்து போனதை நினைச்சு இப்படியா அழுவ?” அதட்டியபடி அவள் கையைப் பற்ற அந்த கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது.

அதிர்வாய் ஷ்யாம், நிமிரும் போதே அவள் குரல் கண்ணீரோடு ஒலித்தது.

“ஆனால் ஒரு உயிரை காப்பாத்த வேண்டிய இடத்திலே இரண்டு உயிரை இந்த கருகலைப்புன்ற வார்த்தை எடுத்துடுச்சே” கண்ணீருடன் கதறியவளைக் கண்டு அவன் முகம் குழப்பத்தைக் காட்டியது.

தன் மடி மீதிருந்த புகைப்படத்தை எடுத்து அவனிடம் காட்டியவள், “இது தான் என் அம்மா, எவ்வளவு அழகா இருக்காங்கல?” கண்ணீர் மின்னிய குரலோடு கேட்டாள்.

மான்யா சொன்னது உண்மை தான்.

மங்களகரமாய் ஜொலித்தது அந்த முகம்.

மான்யாவின் முகத்தைப் போலவே அவர் கண்களிலும் அன்பின் ஊற்றுக்கண்.

அந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனை மான்யா வேகமாக கலைத்தாள்.

“ஆனால் என் அம்மாவோட அழகான முகத்தை பார்க்க முடியாதபடி காலம் செஞ்சுடுச்சு ஷ்யாம். இரத்தப்போக்குனாலே வந்து அட்மிட் ஆன என் அம்மாவுக்கு கருகலைப்பு மாத்திரை கொடுத்து அநியாயமா அவர் உயிர் போயிடுச்சு. அந்த பெரிய தப்பாலே சின்ன வயசுலேயே என் அம்மாவை இழந்துட்டேன்” கதறியபடி சொன்னவளை திகைத்துப் போய் பார்த்தான்.

“வாட்? உனக்கு அம்மா இல்லையா?” அவன் குரல் குமிழியாய் உடைந்தது.

“யெஸ் அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. குறிப்பா சொல்லணும்னா நான் அநாதை” உணர்வற்ற குரலில் சொல்லியவளைக் கண்டு அதிர்ந்துப் போய் இருந்தான்.

புன்னகை மின்னலோடு இருப்பவளின் வாழ்வில் இத்தனை இடி மின்னல்களா?

ஏற்கெனவே வாழ்வில் பல சோகங்களை கடந்து வந்தவளிடம், உண்மையை மறைத்து வேடமிட்டு ஏமாற்ற அவனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.

ஒரு முடிவோடு நிமிர்ந்தவன் “இன்டெர்ன்” என்றான் உணர்வற்ற குரலில்.

இதுவரை இருந்த குரலிற்கும் இப்போது ஒலித்த அவன் குரலிற்கும் மலையளவு வித்தியாசம்.

கேள்வியைப் பார்வையில் தேக்கியபடி நிமிர்ந்தாள்.

“நான் உன்னை காதலிக்கலை இன்டெர்ன். ஜஸ்ட் காதலிக்கிறா மாதிரி நடிச்சேன்” சட்டென அவன் வார்த்தைகளை உடைக்க அவள் இதயம் நொறுங்கிப் போனது.

“எந்த அன்பை வெச்சு என்னை ஜெயிக்க நினைச்சுயோ அதை வெச்சே உன்னை தோற்கடிக்க நினைச்சேன்” அவன் பேச பேச மான்யா முகத்திலிருந்த ஒளி கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்தது.

 

“நீங்க முதலிலே என்னை காதலிக்கலைன்ற விஷயம் எனக்கு தெரியும் ஷ்யாம். பட் நீங்க இப்போ என்னை காதலிக்கிறீங்க தானே. இப்போ நீங்க நடிக்கலே தானே. உங்க கண்ணுலே என்னாலே காதலை பார்க்க முடியுது” என்றாள் தவிப்பை இதழில் தேக்கி.

“நோ இன்டெர்ன். ஐ டோன்ட் ஹேவ் எனி ஃபீலிங்க்ஸ். எனக்கு பர்சனலையும் ப்ரொஃபஷனலையும் மிங்கிள் பண்ண பிடிக்காது. இதுக்கு மேலேயும் எனக்கு இந்த விளையாட்டை விளையாட பிடிக்கலை. இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம். நீ இன்டெர்ன் நான் சீனியர். அதை தவிர்த்து நமக்குள்ளே எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்லை”

அவன் ஒவ்வொரு வார்த்தையும் அவளை வேதனையின் உச்சியில் தள்ள தன் கைகளில் பிணைந்திருந்த அவன் கரங்களைப் பார்த்தாள்.

அது காதலின் கரங்கள் அல்ல ஒரு அறுவை சிகிச்சையாளனின் தொழிற்கரங்கள்!

கசந்த முறுவலுடன் அவன் கைகளை வேகமாக உதறினாள்.

“சோ இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி வரை என் கிட்டே கேம் தான் விளையாடிட்டு இருந்தீங்க. என்னை முழுசா காதலிக்கலை ரைட்” அவன் முகத்தை பதட்டத்துடன் வாசித்தறிய முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

“யெஸ், நான் உன்னை காதலிக்கலை. இட்ஸ் ஜஸ்ட் எ கேம்” என்றான் எங்கோ பார்த்தபடி.

அவன் வார்த்தை கீறல்கள் மனமெங்கும் மறைக்க முடியாத நகக்குறிகளாக மாற நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் மான்யா.அந்த கண்களில் ஒரு சொட்டு நீர் இல்லை.

அவனையே பார்வையால் ஊடுருவியவள், “சோ யூ  வான் தி கேம் ரைட்? நவ் யூ ஆர் ஹேப்பி?”  என்றாள் ஒரு மாதிரி குரலில்.

அவள் கேள்விக்கு பதிலளிக்காமல் அசட்டையாய் எழுந்துக் கொண்டவன்  அவளைத் திரும்பி கூட பார்க்காமல் வேக வேகமாய் வெளியேறிவிட்டான்.

காதலின் மூச்சை உயிர் நிறைக்க நிரப்பிய அவனே இன்று அவள் இதயத்திலே மரண விதைகளை உன்றிவிட்டான்.

செல்லும் அவனையே வெறித்துப் பார்த்தவளின் கண்களில் அதுவரை தேங்கியிருந்த கண்ணீர் தன்னால் உடைப்பெடுக்க “அம்மா” என்ற கதறலுடன் அந்த புகைப்படத்தைக் கட்டிக் கொண்டவள் குமிழியாய் உடைந்தாள்.

வெண்ணிலவு உடைந்ததோ!