உடையாத(தே) வெண்ணிலவே 24b

நிம்மதி!

மனிதன் எங்கெங்கோ தேடி அலையும் ஒன்று. தனக்குள்ளேயே தான் மறைந்து கிடக்கிறது என்று மறந்து போகும் ஒன்று.

அந்த ஒன்றைத் தேடி தான் மான்யா அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள்.

ஆனால் நுழைந்த அடுத்த கணமே அவளுக்குள் மின்னலடித்தது அந்த இடம்.

அங்கு தான் மீனாட்சியம்மாள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தார்.

அன்று மீனாட்சியம்மாளை மட்டும் பாராமல் இருந்திருந்தால் ஷ்யாம் மீண்டும் தன் வாழ்வில் வந்திருக்க மாட்டானே.

இத்தனை பெரிய துயரத்தை தான் அனுபவிக்க நேர்ந்திருக்காதே!

‘எத்தனை எளிதாக சொல்லிவிட்டான்  காதலிக்கவில்லையென்று. ஆனால் ஏன் என்னால் அத்தனை எளிதாக இந்த வலியை கடக்க முடியவில்லை’

இதயத்தில் யாரோ பாறாங்கல்லை ஏற்றி வைத்தார் போல அவளை பெரிய துயரம் ஒன்று அழுத்தியது.

என்ன தான் ஷ்யாம் முன்னால் தான் நிமிர்வாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் அவனால் உள்ளுக்குள் சில்லு சில்லாக உடைந்துப் போய் இருந்தாள் அவள்.

‘எப்போதும் தவறிப் போகாத என் உள்ளுணர்வு எப்படி ஷ்யாமின் விஷயத்தில் மட்டும் தவறிப் போனது. ஏன் அவனை நம்பினேன்? ஏன் அவனை காதலித்தேன், காதலிக்கிறேன்?’

கேள்வி கயிறு அவள் தொண்டையை இறுக்கிய நேரம் அந்த பூங்காவிற்குள் லயா நுழைந்து கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும் மான்யாவின் முகத்தில் பெரும் மாற்றம்.

ஏன் திடீரென்று லயா, வேலையை விட்டு சென்றாள் என்பது இது வரை மான்யாவிற்கு புதிராய்.

வேகமாய் லயாவை அழைக்க மான்யாவை கண்ட அடுத்த கணமே அவள்  அங்கிருந்து நழுவ முயன்றாள்.

வேகமாக லயாவைப் பின் தொடர்ந்து அவளின் முன்பு நின்ற மான்யா, “எப்படி இருக்க? ஏன் என்னைப் பார்த்தும் பார்க்காம போற லயா?” என்ற கேள்விக்கு லயா முகத்தில் நொடிப்பு.

“எப்படி இருப்பேன்? நான் பார்த்த வேலையையும் நீ தான் பறிச்சுட்டியே” என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

அவள் பதில் மான்யாவை குழப்பியது.
“வாட் நான் எங்கே பறிச்சேன். நீ தான் வேலையை விட்டுட்டு போனதா ஷ்யாம் சொன்னார்” என்றாள் புருவத்தில் விழுந்த வரிகளோடு.

அதைக் கேட்டு லயாவிடம் விரக்தி சிரிப்பு. “எப்படி மான்யா எதுவும் தெரியாத மாதிரி நடிக்கிற. என்னை வேலையை விட்டு தூக்கினதே அவர் தான். கொஞ்ச நாளுக்கு முன்னாடி வந்த உன் மேலே வெச்ச நம்பிக்கையை அவர் என் மேலே சுத்தமா வைக்கல” என்றாள் கசந்த குரலில்.

மான்யாவிற்கு லயா பேசுவது ஒன்றுமே விளங்கவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது, லயா தானாக செல்லவில்லை ஷ்யாம் தான் அனுப்பியிருக்கிறான் என்று.

ஆனால் ஏன்?

கேள்வியோடு லயாவைப் பார்த்தாள்.

“ஷ்யாம் எந்த விஷயத்திலே நம்பினார்?” என்ற கேள்விக்கு லயா அன்று தான் கிள்ளிவிட்டு பழியை அவள் மீது போட முயன்றதை உரைக்கவும் மான்யாவிற்கு திடுக்கிட்டது.

கோபமாக நிமிர்ந்து லயாவைப் பார்த்தாள். “ஏன் லயா, என் மேலே இவ்வளவு கோவம்? நான் உனக்கு என்ன பண்ணேன்? எல்லோரும் ஏன் பின்னாடியிருந்தே என்னை குத்துறீங்க” என்றாள் ஆற்றாமை தாங்காமல்.

“அத்தனை வருஷம் மீனாட்சியம்மாவை எவ்வளவு பாசமா பார்த்துக்கிட்டேன் தெரியுமா? ஆனால் நீ வந்ததும் உன் பக்கம் சாஞ்சிட்டாங்க. அந்த கோவத்திலே கிள்ளிட்டு பயத்திலே உன் பேரை உளறிட்டேன்” என்று நிறுத்தியவள் மான்யாவின் முகத்தைப் பார்த்தாள்.

“ஆனால் ஷ்யாம் சார்  நான் சொன்னதை நம்பலை. மான்யா எதுலே வேணாலும் விளையாடுவா. ஆனால் அன்புலே மட்டும் விளையாட மாட்டானு அவ்வளவு நம்பிக்கையா சொன்னார். யாரையும் நம்பாத ஷ்யாம் வந்த கொஞ்சம் நாளிலேயே உன்னை நம்பினாரு. நீ அதிர்ஷ்டகாரி தான்” ஒருவித விரக்தியோடு லயா சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட மான்யாவிற்குள் ஸ்தம்பிப்பு.

ஷ்யாம் தன்னை முழுவதுமாக நம்பியிருக்கின்றான். ஆனால் ஏன் நடிப்பதாக பொய் சொல்லி என்னை உடைத்துப் போட்டான்?

இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை எல்லாம் இணைத்து பார்த்தாள்.

ஒவ்வொரு முறை மனதால் ஷ்யாம், தன்னை நெருங்கி வரும் போதெல்லாம் அந்த செவிலியர்கள் பேசியதைக் கேட்டு நெருடலுடன் விலகிப் போய் இருக்கின்றான் என்பது புரிந்தது.

ஒரு வேளை அது பாதுகாப்பு உணர்வாகவும் இருக்கலாம். ஆனால் அவன் முகத்தில் அவள் எள்ளளவும் வெறுப்பை கண்டதே இல்லை.

பொறாமையையும் கோபத்தையும் மட்டும் தான் கண்டிருக்கிறாள்.

ஆனால் இந்த பொறாமை ஒன்றிற்காக மட்டுமே நடித்து தன்னை ஏமாற்றி இருப்பான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. காரணம், அவன் முகத்தில் பல முறை காதல் கசிவை கண்டிருந்தவளாயிற்றே அவள்!

ஷ்யாம் அத்தனை எளிதில் தன் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டான். ஆனால் அவன் உடைந்துப் போன ஒவ்வொரு கணத்திலும் என்னை இறுக அணைத்து இருக்கின்றான். என் விரல்களை தேடி இருக்கின்றான்.

அது நடிப்பு அல்லவே!

என்னை நம்பாமல் இருந்தால் ஆஷியின் அருகே என்னை நெருங்ககூட விட்டு இருக்க மாட்டானே. மீனாட்சியம்மாளிடம் பாசத்தை வெளிப்படுத்த அனுமதித்து இருக்க மாட்டானே

அவன் அப்போது செய்த செயலும் இப்போது சொல்லிய சொற்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக.

இவனுக்குள் காதல் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒன்றால் மறைக்கின்றானோ? எதற்காகவோ வெளிப்படுத்த முடியாமல் தயங்குகிறானோ? உள்ளுக்குள் மருகுகிறானோ?

கேள்வி எழுந்த அடுத்த கணமே அனலில் துடித்து கொண்டிருந்தவளின் முகத்தில்  நிதானம் குடியேற, மருத்துவமனையை அடைந்தாள்.

அங்கே விஷ்வக் இவளுக்காக காத்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் இவள் விழிகளில் வளைவு.

“உனக்கு இன்னைக்கு செகண்ட் ஷிப்ட் இல்லையா?” என்ற கேள்வியோடு கோட்டை மாட்டினாள்.

“நோ மான்யா ஜெனரல் ஷிஃப்ட் வாங்கிட்டேன்” என்றபடியே அவள் முன்பு இரண்டு கடிதத்தை நீட்டினான்.

ஒரு கடிதத்தில் விஷ்வக், ஆர்மி மெடிக்கல் கார்ப்பாக சேருவதற்கான அப்பாயின்மெண்ட் ஆர்டர் வந்திருந்தது.

அதைக் கண்டு மலர்ந்த மான்யா, “வாவ் சூப்பர் காங்கிராட்ஸ்” என்றாள் மனதார.
ஆனால் விஷ்வக்கிடம் அந்த மலர்வு இல்லை. சோர்ந்து போய் இருந்தான்.

“இன்னும் முடிவு பண்ணலை மான்யா. எனக்கு உங்க எல்லாரையும் விட்டு போகணுமானு இருக்கு” ஒருவித தவிப்போடு சொன்னவன் அவள் கையிலிருந்த இன்னொரு கடிதத்தை சுட்டிக் காட்டினான்.

“இந்த லெட்டரை திறந்துப் பார்க்கலையா மான்யா?” அவன் ஊக்கவும் கடிதத்தை திறந்துப் பார்த்தாள்.

அதில் வெளிநாட்டில் படிப்பதற்கான விண்ணப்ப படிவமும் கூடவே ஒரு கடிதமும் காசோலையும் அவளது ஸ்பான்சரிடமிருந்து வந்திருந்தது,மேற்கொண்டு படிக்க விருப்பமிருந்தால் பயன்படுத்திக் கொள்ளவும் என்ற குறிப்போடு.

அவளுக்கு தேவையான மாற்றம் நல்ல நேரத்தில் கிடைத்துவிட்ட திருப்தியில் விஷ்வக்கின் முகத்தில் புன்னகை. ஆனால் மான்யா யோசனையின் பிடியில் ஆழ்ந்து இருந்தாள்.

“மான்யா, க்ரேட் ஆப்பர்சுனிட்டி மிஸ் பண்ணிடாதே. நீ ஜாயின் பண்ண போற தானே?” என்றான் விஷ்வக் வேகமாக.

“ஷ்யாம் கிட்டே தீர்க்காத கணக்குகளும் கேள்வியும் இருக்கு விஷ்வக். அதை எல்லாம் தீர்த்துட்டு நான் என் முடிவை இன்னும் கொஞ்சம் நாளிலே சொல்றேனே” உறுதியாக சொல்லிவிட்டு சென்றவளையே கலக்கமாக பார்த்தான் விஷ்வக்.

ஷ்யாம் சித்தார்த் அறை கதவின் முன்னால் சென்ற மான்யா, தன் கால் கொலுசை ஒரு முறை சிணுங்கவிட்டாள்.

ஆனால் எப்போதும் “உள்ளே வா இன்டெர்ன்” என்ற குறுஞ்செய்தியை அடுத்த நொடியே சுமக்கும் அவள் அலைப்பேசி இன்று ஒளியிழந்துப் போய் இருந்தது.

கோபத்தில் அவள் வேகமாக கொலுசை அசைக்க கதவுக்கு பின்னாலிருந்த அவனோ ஒரு வித தவிப்போடு அவள் கால்களைப் பார்த்தான்.

அவன் கண்ணில் ஏற்பதற்கான பரிதவிப்பும் மறுப்பதற்கான பதட்டமும் ஒரு சேர மின்னியது.

பொறுத்து பொறுத்து பார்த்த மான்யா வேகமாக கதவை தட்டாமல், அதிரடியாக திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

அவன் கண்களில் என்ன என்ற கேள்வியைப் பார்த்ததும் நேராக விஷயத்திற்கு வந்தாள்.

“நீங்க லயா கிட்டே நான் அன்பை வெச்சு விளையாட மாட்டேனு உறுதியா சொல்லியிருக்கீங்க ரைட்?” அவள் கேள்வியில் அவன் நெற்றி அதிர்ச்சியைக் காட்டவும் லயா சொன்னது அனைத்தும் உண்மை என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது.

“அப்புறம் ஏன் அன்பை வெச்சு நான் விளையாடினேன்னு பழி போட்டிங்க?” அவள் கேள்வியில் ஷ்யாமின் முகம் தவிப்பை காட்டியது. அவன் மருகும் விழிகளைக் கண்ட, மான்யாவின் முகத்தில் சட்டென மாற்றம். அதுவரை கோபத்தில் இருந்தவள் சற்றே நிதானப்பட்டாள். 

அவனுக்கு நடந்த எல்லாவற்றையும் விளக்குவது அவசியம் என்பது புரிய அனைத்தையும் சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

“ஷ்யாம் நான் மனசறிஞ்சு அந்த வார்த்தைகளை சொல்லல. நர்ஸ்ங்க கிட்டே பேசிட்டு இருக்கும் போது ஒரு வேகத்துலே அப்படி சொல்லிட்டேன். இப்போ உங்களுக்கு என்னை புரிஞ்சுக்க முடியுது தானே?” அவள் வார்த்தைகளைக் கேட்டவனின் முகம் நம்பாமல் மான்யாவைப் பார்த்தது.

“ப்ளீஸ் ஷ்யாம், அப்படி என்னை பார்க்காதீங்க. உண்மையா நான் நடிக்கல. மீனுமா, ஆஷி மேலே வெச்ச பாசம் உண்மைனு உங்களாலே உணர முடிஞ்சது தானே? நீங்களே நம்புனீங்க தானே?” ஏக்கமாக கேட்டவளின் பார்வையை சந்திக்க முடியாமல் வேகமாக திரும்பிக் கொண்டான். அவன் முகமெங்கும் வருத்தநதி பாய்ந்து கொண்டிருந்தது.

“இப்போ கூட அலைபாயுற உன் கண்ணுல காதல் தான்டா தெளிவா தெரியுது. எது உன்னை தடுக்குது?” என்றாள் பிடிமானம் தேடிய அவன் கையை இறுகப் பிடித்து.

அவன் மௌனத்தின் நிசப்தத்தை கேட்க பிடிக்காதவள், “ஐ வான்ட் ஆன்சர் ஷ்யாம். ஏன் உண்மையை சொல்ல தயங்குறீங்க? ஒரு வேளை உங்க முன்னாள் காதலிலே இருந்து முழுசா வெளியே வர முடியாம தவிக்குறீங்களா?” வாஞ்சையாய் கேட்டவளைக் கண்டு அவனுக்குள் ஏதோ துடித்தது.

உணர்வின் பெருக்கில் சிலையாகி நின்றிருந்தவனின் அருகில் நெருங்கி வந்தாள்.

“யார் ஆஷியோட அம்மா? ஏன் உங்க எக்ஸை நீங்க பிரிஞ்சு வந்தீங்கனு கேட்க மாட்டேன். ஐ டோன்ட் வான்ட் யுவர் பாஸ்ட். ஐ வான்ட் டு பி யுவர் ஃப்யூட்சர். ப்ளீஸ் ஷ்யாம் மனசுக்குள்ளே எதையோ நினைச்சு மருகாதே. நீங்களும் காயப்பட்டு என்னையும் காயப்படுத்தாதீங்க” என்றாள் கெஞ்சலான குரலில்.

அவள் வார்த்தைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் சாய்ந்து கொண்டிருந்த தன் மனதை கண்டு அதிர்ந்தவன் வேகமாக தலையை சிலுப்பி தன்னை மீட்டு கொண்டான்.

“மான்யா, நான் நடிக்க தான் செஞ்சேன். உன்னை காதலிக்கலை” அதே பல்லவியையே மீண்டும் பாடியவன், “எப்போ வீட்டை காலி பண்ண போற?” என்றான் கேள்வியாக.

“நான் இந்த மன்த் ரென்ட்டை மார்னிங்கே உங்க அக்கவுண்டுக்கு சென்ட் பண்ணிட்டேன். சோ என்னாலே இந்த மாசம் போக முடியாது.அடுத்த மாசம் வேற வீடு பார்த்து போய்க்கிறேன்” என்றாள் எங்கோ பார்த்தபடி.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என் லைஃப் விட்டு போயிடு மான்யா. அதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது” என்றான் இவனும் வேறு எங்கோ பார்த்தபடி.

“ஏன் பயமா? நீங்க ஒளிச்சு வைச்சு இருக்கிற உண்மையை நான் கண்டுபிடிச்சுடுவேனோன்ற பயமா?” அவளின் குறுக்குவெட்டு கேள்வியில் ஷ்யாமிடம் அதிர்வு.

அவனை நெருங்கி வந்து அவன் விழிகளில் தன் பார்வையை ஊடுருவியவள், “நீங்களும் என்னை காதலிக்கிறீங்கன்ற உண்மையை உங்க வாயாலே ஒத்துக்க வைக்கல. நான் மான்யா இல்லை” என்றாள் சவாலாக.

“யூ கான்ட் மான்யா” முகத்தில் உறுதியிருந்தாலும் குரலில் ஏனோ விரிசல்.

அதை கவனித்து மௌனமாக சிரித்தவள்,”ஐ கேன். என்னாலே முடியும்னு நான் ஃப்ருவ் பண்ணி காட்டுறேன்” என்றாள் உறுதியாக. அவள் குரலிலிருந்த தீவிரம் ஷ்யாமை அசைத்துப் பார்க்க அவன் முகமெங்கும் கலவரம்.

இறுகிக் கிடக்கும் இவனை  கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க துவங்கி விட்டதோ இந்த வெண்ணிலவு!