உடையாத(தே) வெண்ணிலவே 5

எங்கோ விரல் படா தூரத்தில் இருக்கும் நிலவின் காந்தம், கடல் அலையின் கட்டுப்பாட்டை சில நேரங்களில் உடைத்து எறிய வைக்கும்

அப்படி தான் அவன் தாயின் உடலில் ஏற்பட்டிருந்த வலி, அவன் கட்டுப்பாட்டை சல்லிசல்லியாக நொறுக்கிப் போட்டது. 

அந்த பெரிய மருத்துவமனையின் முக்கிய சர்ஜனில் தான் ஒருவன் என்பதை தற்காலிகமாய் மறந்துப் போனான். எப்பொழுதும் பாறையாய் இறுகிப் போய் இருக்கும்  அழுத்தமான கைகளில் இன்று அவனை மீறி நடுக்கம்.

மேகம் தன் கண்ணைத் திறந்து மழைப் பொழியாதா, என ஏக்கத்தோடு பார்க்கும் வாடியபயிரைப் போல தன் தாயைப் பார்த்தான். ஆனால் அந்த கண்களோ திறக்கப்படவே இல்லை.

செயலற்றுப் போய் நின்ற ஷ்யாமை தூரத்தில் நடந்து வந்த விஷ்வக்கின் கண்கள் குழப்பத்தோடு ஏறிட்டது. நெருங்கி வந்துப் பார்த்தவனின் முகத்திலோ ஏகத்துக்கும் பதற்றம்.

“டேய் நம்ம மீனு அம்மாடா. என்னாச்சு ஏன் இப்படி பேயறைஞ்சா மாதிரி நிற்கிற?” என்று ஷ்யாமைப் பார்த்துசொன்னவன் வேகமாக எதிரிலிருந்த அந்த பெண்ணைப் பார்த்தான்.

மீரா!

அந்த மருத்துவமனையின் செவிலியர்களில் ஒருத்தி. சேர்ந்து இரண்டு மாதமே ஆகியிருந்தாலும் அவளுடைய ஒவ்வொரு பணியிலும் அத்தனை நேர்த்தி இருக்கும்.

அந்த நேர்த்தியை முன்பே கவனித்திருந்த விஷ்வக், மீனாட்சி அம்மாவை கவனிக்கும் முக்கிய பொறுப்பை அவளிடம் ஒப்படைக்க தயாரானான்.

“மீரா, அவங்களுக்கு வேகமாக ஈ.ஈ.ஜி டெஸ்ட் எடுங்க. வைட்டல்ஸ் எல்லாம் தொடர்ந்து மானிட்டர் பண்ணிட்டே இருங்க. இன்னும் கொஞ்சம் நேரத்துலே ஓ.ஆர் ரூம்க்கு கூட்டிட்டுப் போகணும். எபிலெப் சர்ஜரிக்கு ரெடியா இருக்க சொல்லி அனஸ்தியாலஜிஸ்ட் அகில்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க” என்று  வேகவேகமாய் அடுத்து செய்ய வேண்டியவற்றை கட்டளையிட்டவன் ஷ்யாமின் பக்கம் திரும்பினான்.

“ஷ்யாம் கவலைப்படாதே. அம்மா நிச்சயமா சரியாகிடுவாங்க. நம்ம ஹாஸ்பிட்டல் சீஃப் டாக்டர்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன். வந்துட்டே இருக்காரு” என்று விஷ்வக் சொன்ன வார்த்தைகள் எதுவும் ஷ்யாமின் மூளையில் பதியவே இல்லை.

அவனிடம் அப்பட்டமான ஸ்தம்பிப்பு.

“ஷ்யாம் ஷ்யாம்” என விக்ரம் எத்தனை முறை அழைத்துப் பார்த்தும் அவனிடம் அசைவில்லை. ஆனால் திடீரென பட்ட அந்த ஸ்பரிசத்தில் ஷ்யாமின் வேர்கள் சட்டென அசையத் துவங்கியது.

அதுவரை திகைத்துப் போய் நின்றிருந்த ஷ்யாம், வேகமாக தன் மீது விழுந்த கையைத் திரும்பிப் பார்த்தான்.

மீண்டும் வலிப்பு வந்து மீனாட்சியின் உடல் தூக்கிப் போட ஆரம்பிக்க, அவரது கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டவன், “அம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகாதுமா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த மருத்துவமனையின் சீஃப் டாக்டர் அங்கே வந்து நின்றார்.

அறுபதின் துவக்கத்திலிருந்த அவரது முகத்தில் அனுபவத்தின் நிழல் படர்ந்து கிடந்தது. பார்வையில் அப்படியொரு அழுத்தம்.

மீனாட்சியின் கழுத்தில் இரண்டு விரல்களை வைத்து பல்ஸை சரிபார்த்தவர் நேராக நர்ஸிடம் திரும்பி, “லொராசிபாம் கொடுங்க. ஓ.ஆர் ரெடியா இருக்கா?” என்று கேட்டவரின் முகத்தில் மருத்துவருக்கே உரிதான நேர்த்தியும் பொறுமையும்.

வேகமாக மீனாட்சியை ஆப்பரேட்டிங் ரூமிற்கு கொண்டு சென்றவர், செயலற்று நின்றிருந்த ஷ்யாமை திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அந்த பார்வைக்கு ஆயிரம் அர்த்தங்கள்.

அவரது பார்வையை எதிர் கொள்ள முடியாமல் குனிந்தவன் சர்ஜரி நடக்கும் அறைக்கு வெளியே இருந்த இருக்கைக்கு வந்து அமர்ந்தான். அவன் முகம் முழுக்க வேதனையின் தடயங்கள்.

அங்கே நடந்து கொண்டிருந்த சம்பவங்களை மௌனமாய் வெறித்துக் கொண்டிருந்த மான்யாவை ஒரு குரல் அழைத்தது.

திரும்பிப் பார்க்க விஷ்வக். அவனைக் கண்டதும் மான்யாவிடம் மெல்லிய முறுவல்.

“இங்கே சர்ஜரி முடியுற வரை கேன்டீன்க்கு போயிட்டு வரலாமா?” என விஷ்வக் கேட்க சம்மதமாய் தலையாட்டினாள் அவள்.

தனக்கு எதிரே இருந்த மான்யாவை இமை தட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க, “உன்னை திரும்ப இந்த ஹாஸ்பிட்டலிலே பார்க்கவே முடியாதானு நினைச்சு கவலைப்பட்டேன். ஆனால் இனி எல்லாமே மாறப் போகுது” என்றான் நம்பிக்கை பளிச்சிட.

ஆனால் மான்யாவின் முகத்தில் அந்த நம்பிக்கை வெளிச்சம் இல்லை.

“என்ன மாறப் போதுனு சொல்ற விஷ்வக்” என்றாள் அவனைக் கூர்மையாக பார்த்தபடி.

“ஷ்யாமோட முடிவை தான் சொல்றேன் மான்யா. அவன் எடுத்த முடிவை யாருக்காகவும் மாத்திக்க மாட்டான், மீனாட்சி அம்மாவை தவிர்த்து. இன்னைக்கு அவனுக்கு நீ செய்த பெரிய உதவிக்கு நன்றிக்கடனா இந்த ஹாஸ்பிட்டலிலேயே கண்டிப்பா உன்னை இருக்க சொல்லுவான்” என விஷ்வக் சொல்ல மான்யாவிடம் கசந்த முறுவல்.

“நான் என்னைக்கும் திறமையாலே தான் வேலை வாங்கணும்னு நினைக்கிறவ. நன்றிக்கடனா தர  இந்த வேலை எனக்கு வேண்டாம். ப்ளாக் மார்க் என் சர்டிஃபிகேட்ல போடாம இருந்தா போதும், என் வேலையை என்னாலேயே தேடிக்க முடியும்” என்றாள் உறுதியான குரலில்.

அவளது உறுதியைக் கண்டு விஷ்வக்கின் முகத்தில் ஆச்சர்ய விரிவு.

“மான்யா இந்த ஃபேமஸ் ஹாஸ்பிட்டலிலே உனக்கு வேலை வேண்டாமா? ஆர் யூ சீரியஸ்?” என அவன் கேட்க நிர்த்தாட்சண்யமாக மறுத்தாள் அவள்.

“ஐ யம் ப்ளடி சீரியஸ். என்ன நடந்ததுனு தெளிவா விசாரிக்காம அவசரத்துலே முடிவெடுக்கிற ஒருத்தன் கீழே எல்லாம் என்னாலே வேலை செய்ய முடியாது” என்று முடிவாக உரைத்தவள், பேச்சை திசை திருப்ப முயன்றாள்.

அதை உணர்ந்தவனும் அதைப் பற்றி பேச்சு வளர்க்காமல் சர்ஜரியில் தான் அறிந்த முக்கியமான நுணுக்கங்களை அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தான்.

இருவருடைய உரையாடலும் மூன்று மணி நேரம் விடாமல் தொடர்ந்த நேரம்  விஷ்வக்கின் அலைப்பேசி ஒளிர்ந்து அடங்கியது. எடுத்துப் பார்த்த விஷ்வக்கின் முகத்திலும் ஒளிர்வு.

“மீனு அம்மாவோட சர்ஜரி முடிஞ்சுடுச்சு. இப்போ வைட்டல்ஸ் எல்லாம் நார்மலா இருக்காம்” என்று விஷ்வக் நிம்மதி பெருமூச்சுவிட  மான்யாவின் முகத்திலும் சந்தோஷம் பரவியது.

“தேங்க் காட்” என்றிவள் சொல்லிய நொடி
அவளது அலைப்பேசி அலறியது. எடுத்துப் பார்த்தாள். ஷ்யாம் தான் அழைத்திருந்தான்.

விஷ்வக்கிடம் திரும்பியவள், “உன் சீனியர் தான் கால் பண்ணி இருக்கார்” என்று சொல்லியபடி அலைப்பேசியை உயிர்ப்பித்து காதுகளில் வைத்தாள்.

“மான்யா உங்க கூட பேசணும். கம் டூ மை ரூம்” என்று வேகமாக சொன்னவன் அவள் பதில் சொல்வதற்கு முன்பே அழைப்பை கத்தரித்துவிட்டான்.

“உன் சீனியர்க்கு மேனர்ஸ்னா என்னனே தெரியாதா விஷ்வக்? பதில் பேசறதுக்கு முன்னாடியே கட் பண்றாரு” என்று குறை சொல்லியபடியே எழுந்து கொண்டவளை கெஞ்சலாகப் பார்த்தான் விஷ்வக்.

அவள் என்னவென்று புருவம் உயர்த்த, “ஷ்யாம் இங்கே வேலை செய்ய சொன்னா கன்சிடர் பண்ணு மான்யா. என்னாலே தான் உன் வேலை போச்சுனு எனக்கு குற்றவுணர்வா இருக்கு” என்றான் தலை குனிந்தபடி.

“நோ விஷ்வக். சூழ்நிலை அப்படி அமைஞ்சுடுச்சு. நீ கில்டியா ஃபீல் பண்ணாதே. எனக்கு அந்த சைக்கோ கீழே வேலை பார்க்க பிடிக்கலை. அதனாலே தான் இந்த முடிவு எடுத்து இருக்கேன்” என்று சொல்லிவிட்டு சென்றவளையே வருத்தத்தோடு தொடர்ந்தது அவன் விழிகள்.

ஷ்யாம் சித்தார்த், ஜெனரல், நியூரலாஜிக்கல், கோலான் சர்ஜன் என்று எழுதியிருந்த வார்த்தைகளைப் பார்த்ததும் அவள் விழிகள் வியப்பில் விரிந்தது.

இத்தனை பிரிவிலும் எம்.எஸ் முடித்திருக்கிறானா இவன்?

அதிகம் படித்த திமிர் தான் ஒரு வேளை அதிகம் பேச வைக்கிறதோ?  என எண்ணியபடியே கதவை தட்டினாள்.

“யெஸ் கம் இன்” என உள்ளிருந்து ஒலித்தது ஷ்யாமின் குரல்.

சில மணி நேரங்களுக்கு முன்பு கண்ட ஷ்யாமின் முகத்திற்கும் தற்போது காணும் ஷ்யாமின் முகத்திற்கும் மலையளவு வித்தியாசம்.

அந்த முகத்தில் உணர்விருந்தது. ஆனால் இந்த முகமோ கற்பாறையாய் இறுகிக் கிடந்தது.

தன்னையே பார்வையால் அளவிட்டு கொண்டிருந்தவளை நோக்கி  எதிர் இருக்கையை சுட்டிக் காட்ட அதில் அமர்ந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“அம்மாவை சரியான நேரத்துக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ். இந்த வாழ்க்கையிலே நான் மறக்க முடியாத உதவியைப் பண்ணியிருக்கீங்க” என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்.

“உங்க அம்மானு இல்லை சார். யாருக்கு இப்படி ஆகியிருந்தாலும் நான் இதான் பண்ணியிருப்பேன். சோ தேங்க்ஸ் வேண்டாம்” என்று சொல்லியபடியே அங்கிருந்து எழ எத்தனித்தாள்.

“சிட் மான்யா. உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்” என்றவன் அவளுக்கு எதிரே சர்டிஃபிகேட்ஸை நீட்டினான்.

“உங்க சர்டிஃபிகேட்ஸ்லே நான் ப்ளாக் மார்க் போடல. நீங்க எங்க வேணாலும் வொர்க் பண்ணலாம். இங்கே கூட  இன்டெர்ன்ஷிப் கன்டினியூ பண்ணலாம். உங்க இஷ்டம்” என்று ஒட்டும் ஒட்டாமலும் பேசியவனையே புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

தன்னை ஒரு சர்ஜனாக அவன் மனதார அங்கீகரிக்காமல், தான் செய்த உதவிக்காக மட்டுமே இங்கே வேலை பார்க்க சொல்கிறானோ? இவனது இந்த முடிவு முழுமனதாக எடுக்கப்பட்டதா?

கேள்வியோடு நிமிர்ந்தாள்.

“என் இஷ்டம் இங்கே வொர்க் பண்றதுனு நான் சொன்னா நீங்க என்ன நினைப்பிங்க?” அவனைக் கூர்மையாக பார்த்தபடி கேட்டாள்.

“ஒன்னுத்துக்கும் உதவாத ஒரு முட்டாள் இன்டர்னுக்கு சொல்லிக் கொடுக்கனும்னே என்னை நினைச்சே நொந்துக்குவேன்” என்றான் அவளை அசட்டையாக பார்த்தபடி.

அவனது அந்த பதில் அவள் இதயத்தில் கோபத்தீயை பற்ற வைத்தது.

“நான் ஒன்னுத்துக்கும் உதவாத முட்டாள் சர்ஜனில்லை. மெடிக்கல் எக்ஸாம்ஸ்லே ஃபர்ஸ்ட் மார்க் எடுத்த என்னைப் பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்?” என்று அவன் எதிரே நின்று கைகட்டியடி  கேட்டாள்.

“நீ ஒரு நல்ல ஸ்காலரா இருக்கலாம். ஆனால் நல்ல சர்ஜனில்லை மான்யா” என்றான் இவனும் அவளுக்கெதிரே கைக்கட்டி நின்று கொண்டு.

“எனக்கு வாய்ப்பே கொடுக்காம எப்படி நான் நல்ல சர்ஜனில்லைனு முடிவு பண்ணலாம். இப்போ சொல்றேன், உங்க வாயாலே நான் ஒரு நல்ல சர்ஜன்னு பேர் வாங்காம இந்த ஹாஸ்பிட்டலை விட்டு போக மாட்டேன்” என்றாள் உறுதியுடன்.

“என் வாயிலே இருந்து ஈஸியா அந்த வார்த்தை வந்துடும்னு நினைக்கிறியா?” அவளது உறுதியை அசைத்துப் பார்க்க முயன்றது அவன் கேள்வி.

“ஈஸியா வாங்கிட முடியாதுனு எனக்கும் தெரியும். என்னாலே முடிஞ்ச பெஸ்ட்டை நான் கொடுத்து அந்த பேரைக் கண்டிப்பா வாங்குவேன்”

“அப்படி அந்த பேரை வாங்க முடியலைனா இந்த இடத்தை விட்டு நீ போயிடனும். இதுக்கு உனக்கு சம்மதமா” என்றான் அவள் உறுதியை சோதித்துப் பார்க்கும் விதமாக.

“இந்த ஒரு மாசத்துலே என்னோட ஸ்கில்ஸ்ஸைப் பார்த்து நீங்களே என்னை நல்ல சர்ஜன்னு சொல்ற வரைக்கும் போராடுவேன். விட்டுக் கொடுக்க மாட்டேன். ஒரு வேளை என்னாலே முடியலைனா அந்த நொடியே இங்கே இருந்து கிளம்பிடுவேன். மெடிக்கல் ஃபீல்டை விட்டே ஒதுங்கிடுவேன்” என்று சொன்னவளது குரலில் ஆலமரத்தின் உறுதி.

அவளது உறுதியைப் பார்த்து இடக்காக சிரித்தவன், “ஓகே மான்யா. பார்க்கலாம் இந்த சேலன்ஞ்ச்லே யார் ஜெயிக்கிறாங்கனு. ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லியபடியே கைநீட்டினான்.

அவனது கைகளைப் பார்த்தவள் ஒரு முடிவோடு நிமிர்ந்து, “நீங்க தோக்கப் போறதுக்கு ஆல் தி வெரி பெஸ்ட் ஷ்யாம் சித்தார்த் சார்” என்று சொல்லியபடி நீட்டிய அவன் விரல்களில் தன் விரல்களைக் கோர்த்தாள்.

இது பிரிவிற்கான கைக்குலுக்கலா? இல்லை தொடக்கத்திற்கான கைக்குலுக்கலா?

விடை விரைவில்.