உடையாத(தே) வெண்ணிலவே 7

கோபம்!

சில நேரங்களில் அது பிரிவிற்கு அடித்தளமாய் அமையும். பல நேரங்களில் பாசத்தின் உச்சமாகவும் அது வெளிப்படும்.

ஆனால் ஆரனாஷியின் மனதில் இரண்டு உணர்வுகளும் ஒரு சேர போட்டிப் போட்டுக் கொண்டு வெளிப்பட்டது.

தன் தந்தையின் கழுத்தைப் பிடித்தவளின் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வர வேகமாக சென்று மான்யாவின் காலில் பட்டென அடித்து “கொன்னுடுவேன்” என்று விரலை நீட்டி எச்சரித்தது அந்த சின்ன சிட்டு.

மான்யா கண்ணை உருட்டிப் பார்க்க ஆரனாஷியும் கண்ணை உருட்டிப் பார்த்தாள்.

இருவரது பார்வையையும் கண்டு ஷ்யாமின் இதழ்களில் மௌன சிரிப்பு குடிக் கொண்ட நேரம் அவன் அலைப்பேசி ஒளிர்ந்து அடங்கியது. 

எடுத்துப் பார்க்க, அகிலிடமிருந்து அழைப்பு.

“ஷ்யாம் இங்கே எல்லாம் ரெடி. பேஷன்ட்டுக்கு அனஸ்தீஷியா கொடுத்தாச்சு. நீங்க இப்போ வரலாம்” என்று சொல்ல சரியென்று சொல்லி வைத்தவன் ஆரனாஷியைப் பார்த்தான்.

“ஆஷிமா, அப்பா சர்ஜரி பண்ணிட்டு வந்துடுறேன். அதுவரை லயா கிட்டே சமத்தா இருக்கணும்” என்று ஆரனாஷியைப் பார்த்து சொன்னவன் வேகமாக மான்யாவிடம் திரும்பினான்.

“ஒழுங்கா உனக்கு கொடுத்த வேலையைப் பாரு போ” என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் வேகமாய் மைனர் ஆப்பரேட்டிங் ரூமை நோக்கி நடந்தான்.

அவனைப் பார்த்து பெருமூச்சுவிட்டபடி திரும்ப அங்கே ஆரனாஷி இவளை முறைப்புடன் பார்த்தபடி நின்றாள்.

“எங்க அப்பா கிட்டே அடுத்த தடவை சண்டை போட்ட. பிச்சு பிச்சு” என்று சொல்லிவிட்டு கோபமாக திரும்பி நடந்த ஆரனாஷியைக் கண்டு,

“அப்பனுக்கு பொண்ணு தப்பாம பிறந்து இருக்கா. எப்படி கையை நீட்டி மிரட்டிட்டு போறா பாரு” என்று கோபமாக நினைத்த மான்யாவின் இதழ்களில் புன்னகை மொட்டு.

சிரிப்புடன் எமெர்ஜென்சி ரூமைக் கடந்து ஐ.சி.யூவிற்குள் செல்ல எத்தனிக்கும் போது அங்கிருந்து வந்த கூக்குரலைக் கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

“அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டிங்களே. இனி எங்களுக்கு யார் இருக்கா?” என பதின்ம வயதுப் பெண் கதற, “ஐயோ! இனி நான் என்ன பண்ணுவேங்க” என குமாரின் மனைவி இன்னொரு பக்கம் கதறிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரது உடையிலும் முகத்திலும் அத்தனை ஏழ்மை நிறைந்திருந்தது.

குடும்பத்தின் ஒரே ஒரு ஆணி வேரையும் இழந்ததின் விளைவு அவர்கள் குடும்பத்தின் மரத்தையே ஆட்டம் காண செய்திருந்தது.

அவர்களது கண்ணீரைக் கண்டு இவளது விழிகளிலும் நீர் கோர்க்க, வேகமாய் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அவளுக்கு சிறிது பூக்களின் நறுமணம் தேவைப்பட்டது, உள்ளுக்குள் வடிந்துக் கொண்டிருக்கும் நினைவின் கருகல் வாசனையைப் போக்க.

தன்னிச்சையாக
மருத்துவமனையின் பூங்காவை நோக்கி நடந்தது கால்கள்.

கடந்தகாலத்தை நினைக்க நினைக்க அவள் கண்களில் வெள்ளை உதிரம்.

சுந்தர்!

மான்யாவின் தந்தை.

நர்சரி கார்டன் வைத்திருந்த சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்.

மான்யாவிற்கு சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டுமென்ற கனவு இருப்பதை அறிந்து பெரிய மருத்துவ கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

பூக்களை விற்று வந்த அந்த சிறிய  வருமானம் கொண்டு எப்படி தன்னை மருத்துவக்கல்லூரியில் சேர்த்தார் என்பதை எண்ணி அவள் பலமுறை வியந்ததுண்டு.

தான் பெற்ற குழந்தைகளுக்காக மலையையே நகர்த்தும் வல்லமை ஒவ்வொரு தந்தைக்கும் உண்டல்லவா!

அவள் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த சமயம் அது. எதிர்பாராத விபத்தில் சிக்கிய சுந்தர், ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தாலும் பின்னால் வந்து சேர்க்கப்பட்ட பணக்காரர்களுக்கு மருத்துவம் பார்க்க நேரம் கடத்தியதாலும் அவளது தந்தையின் அநியாயமாக பறிக்கப்பட்டுவிட்டது.

சில வருடங்களுக்கு முன்பு தனக்கு நடந்த அதே அநியாயம் மீண்டும் தன் கண் முன்னே  வேறொருவருக்கு அரங்கேறியதை அவளால் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

‘ஐயோ ஒரு டாக்டரா இருந்தும் என்னாலே எதுவுமே செய்ய முடியலையே’ என அவள் தன்னிரக்கத்தோடு நினைத்த நேரம் அலைப்பேசி அலறியது.

நர்ஸ் மீரா தான் அழைத்திருந்தார். அவரிடம் வருவதாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் தன் கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு தன் கடிகாரத்தைப் பார்த்தாள்.

இன்னும் ஐந்து நிமிடங்களில் மீனாட்சியின் ட்ரிப்ஸ் முடியப் போகிறது என்பது ஞாபகத்திற்கு வரவும் அவசர அவசரமாக மருத்துவமனைக்குள் நுழைய எத்தனித்தாள்.

அதே நேரம் இறந்துப் போன குமாரை, கண்ணீரும் கதறலுமாய் அவர் குடும்பத்தினர் வெளியே எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

அதைக் கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றவள் பின்பு வேகமாக ஐ.சி.யூவிற்குள் நுழைந்தாள்.

அங்கே மீனாட்சி அம்மா நிச்சலனமாய் உறங்கிக் கொண்டிருந்தார். அவரது ட்ரிப்ஸ் முடியும் தருவாயில் இருக்க வேகமாக அதை மாற்றிவிட்டு அவரது அருகில் அமர்ந்தவள் முகம் முழுக்க வேதனை.

தான் அன்று அழுத கதறல் ஒலியும், இன்று அழுத அந்த சிறுபெண்ணின் கேவலும் ஒரே நேரத்தில் மன சுவரில்  முட்டி மோதி எதிரொலிக்க தன் காதுகளை இறுக மூடிக் கொண்டாள்.

“யூ ஷ்யாம், நீ எடுத்த ஒரு தப்பான முடிவாலே தான் இங்கே ஒரு குடும்பம் மொத்தமா சிதைஞ்சுப் போயிடுச்சு. நீ செய்யுற பாவம் தான் உன் அம்மாவை இப்படி ஆட்டிப் படைக்குது” என்று 
இவள் தன்னை மீறி சப்தமாய் முணுமுணுக்க, மூடியிருந்த  மீனாட்சியின் கண்களில் இருந்து கோடாய் கண்ணீர் இறங்கியது.

அதைக் கண்டவளின் கண்களில் திகைப்பு.

‘ஐயோ! இவங்க முழிச்சுக்கிட்டு இருக்கும் போதா பேசி தொலைச்சேன்’ என தன்னைத் தானே நொந்தவள் “அம்மா” என்றழைக்க அவரது கண்களோ திறக்கப்படவேயில்லை.

மாறாய் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.

“அம்மா நான் சும்மா சொன்னேன். நீங்க கவலைப்படாதீங்க. நான் புதுசா பார்த்த படத்தைப் பத்தி பேசிட்டு இருந்தேன்” என்றிவள் சமாதானப்படுத்தி கொண்டிருக்கும் போது கதவைத் திறந்துக் கொண்டு ஆரனாஷி, விஷ்வக்கோடு வந்தாள்.

“ஆஷிமா, பாட்டியைத் தொந்தரவு பண்ணாம பார்த்துட்டு வரணும்” என்று விஷ்வக் சொல்ல ஆமோதிப்பாய் தலையசைத்த ஆரனாஷி, மீனாட்சியின் அருகே வந்தாள்.

பாட்டியின் கண்களிலிருந்து வந்த  கண்ணீரைக் கண்டதும் பேத்தியின் விழிகள் ரௌத்திரமாய்  மான்யாவின் மீது படிந்தது.

“என் பாட்டி எதுக்கு அழறாங்க. எங்க அப்பா மாதிரி அவங்க கழுத்தைப் பிடிச்சுங்களா? இல்லை அவங்களுக்கு ஊசி போட்டு அழ வைச்சீங்களா?” என்று கேட்டபடியே மீண்டும் மான்யாவை அடிக்கப் போனாள்.

வேகமாய் வந்த விஷ்வக், ஆரனாஷியை சட்டென தூங்கிக் கொண்டான்.

“ஆஷிமா, இவங்க எதுவும் பண்ணல. நம்ம பாட்டிக்கு வலி அதிகமா இருக்கும். அதான் அழறாங்க” என்று சமாதானம் செய்தவாறே வெளியே நின்றிருந்த லயாவிடம் ஆரனாஷியை விட்டுவிட்டு வந்தவன்  மான்யாவை வெளியே வர சொல்லி கண்ணசைத்தான்.

அவன் பார்வை கேள்வியாய் அவள் மீது விழுந்தது.

“ஷ்யாம் கழுத்தைப் பிடிச்சுயா?” என்றவனது கேள்விக்கு ஆமாமென்று தலையாட்டினாள்.

அவளது பதிலைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டவனின் வார்த்தைகளில் கோப கனல் வீசியது.
“ஆர் யூ க்ரேஸி மான்யா. ஒரு சீனியர் டாக்டரோட கழுத்தையே பிடிப்பியா. எதுக்காக இப்படி பண்ண?”

“ஒரு பணக்காரனை காப்பாத்துறதுக்காக ஏழை உயிரை கொன்னவனோட கழுத்தை பிடிச்சது எனக்கு தப்புனு தோணல. இப்போ வரை அவங்களோட அழுகுரல் என் காதுலே கேட்டுக்கிட்டே இருக்கு தெரியுமா விஷ்வக்” உணர்ச்சிவசப்பட்டு பேசிய மான்யாவை பெருமூச்சோடு பார்த்தான்.

“மான்யா, ஷ்யாம் உன்னைப் பத்தி சொன்னது கரெக்டோனு எனக்கு இப்போ சந்தேகம் வருது. யூ ஆர் சோ எமோஷனல் அன்ட் வெரி எக்ஸ்ப்ரசிவ். சட்டுசட்டுனு ரியாக்ட் பண்ற. இது நம்ம மெடிக்கல் ஃபீல்டுக்கு ஒத்து வராது” என்று கண்டித்தவனை  ஆற்றாமையோடு பார்த்தாள்.

“இது என்ன அநியாயம். மெடிக்கல் ஃபீல்ட்லே இருக்கிற எல்லாரும் கல்லா இருக்கணுமா? உணர்ச்சியே இருக்கக்கூடாதா?” என்றவளின் கேள்விக்கு, “ஆமாம்” என்ற குரல் பின்னாலிருந்து அழுத்தமாய் ஒலித்தது.

திரும்பிப் பார்க்க, ஷ்யாம்.

“சர்ஜனா இருக்கும் போது நாம கல்லா தான் இருக்கணும். பேஷன்ட்டை ஒரு  மரக்கட்டையா தான் பார்க்கணும். உணர்வுகளுக்கு இடம் கொடுத்தா நீ நல்ல சர்ஜனா இருக்க முடியாது. பெரிய கொலைகாரியா தான் இருப்ப” என்றான் கைகளை கட்டிக் கொண்டு.

“உணர்ச்சியும் ஈவு இரக்கமும் இருக்கிற மனுஷங்களாலேயும் ஒரு நல்ல சர்ஜனா இருக்க முடியும்னு நான் நிரூபிச்சு காட்டுறேன்” என்று சவால்விட்டவளின் மீது கேலியாய் படர்ந்தது அவன் பார்வை.

“அப்போ ஒவ்வொரு சர்ஜரி முடிச்சதும் இதே மாதிரி ஓடிப் போய் அழுதுட்டு வரப் போறீயா மான்யா?” அவளது கண்களை உற்றுப் பார்த்தபடி கூர்மையாய் கேட்க மான்யாவிடம் லேசாக தடுமாற்றம்.

‘நான் அழுதது அவ்வளவு பச்சையாவா தெரியுது’ என யோசித்தபடி கண்ணைத் துடைக்க சென்றவளது எண்ணத்தைப் படித்தவன் போல “ரொம்ப பச்சையா தெரியுது” என்று சப்தமாக சொல்லிவிட்டு போனான்.

“ஹே மான்யா அழுதியா?” விஷ்வக் அப்போது தான் அவளது முகத்தை உற்றுப் பார்த்தான். அதில் அழுத தடங்கள்.

“மான்யா, எமோஷனல் இடியட்டா இருக்காதே. இப்படி சட்டு சட்டுனு ரியாக்ட் பண்றதை நிறுத்து. இப்படி சீனியரோட கழுத்தையே பிடிச்சுட்டு வந்து நிற்கிறியே இந்த வேலை போச்சுனா என்ன பண்ணுவ?”  அவள் மீது ஊறிய அக்கறையோடு விழுந்தது அவன் வார்த்தைகள்.

“நான் இங்கே இருக்க போறது, ஒரு மாசம் மட்டும் தான். என் சர்ஜிகல் ஸ்கில்ஸை ப்ரூவ் பண்ணிட்டு நான் கிளம்பிட்டே இருப்பேன். அப்புறம் எனக்கு என்ன பயம்? என்ன தப்பு நடந்தாலும் நேருக்கு நேரா கேட்பேன்” என்று சொல்லிவிட்டு திரும்ப ஷ்யாம் அவளையே எடை போடும் கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

“விஷ்வக் நீ வொயிட் கோட் போடாம  ஐ.சி.யூ லே அம்மா கூட கொஞ்சம் நேரம் இரு. இந்த உருப்படாத சர்ஜனோட ஸ்கில்ஸை நான் இன்னைக்கு பார்க்கணும்” என்றவன் மான்யாவிடம் திரும்பி “கெட் ரெடி ஃபார் சர்ஜரி” என்றான்.

“இன்னைக்கு ஒரு சர்ஜரி தானே ப்ளான் பண்ணியிருந்தோம். எமெர்ஜென்சி பேஷன்ட் யாராவது வந்து இருக்காங்களா ஷ்யாம்?” என விஷ்வக் கேட்க ஆமாம் என்று அவன் தலை அசைந்தது.

“ஒரு பேஷன்ட் வயித்துலே காயத்தோட அட்மிட் ஆகியிருக்காரு. ஹீ நீட் பெரிடோனிடிஸ் சர்ஜரி” என்றவன் மான்யாவிடம் திரும்பி,

“நீ தான் இன்னைக்கு என்னோட அசிஸ்டென்ட். பேஷன்டோட மெடிக்கல் ஹிஸ்டரி மீரா கிட்டே இருக்கும். ஸ்டடி பண்ணிட்டு பத்து நிமிஷத்துலே மைனர் ஓ.டி லே இருக்கனும். கொஞ்சம் லேட்டா வந்தாலும் கால் இருக்காது ஜாக்கிரதை” என்று காலை சுட்டிக்காட்டி எச்சரித்தவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

“இவன் சர்ஜனா? இல்லை சைக்கோவா?” பெருமூச்சுவிட்டபடி கேட்டது மான்யாவின் உதடுகள்.

“அது பார்க்கிற கண்ணைப் பொறுத்து மான்யா. என் வரையிலே ஷ்யாம் க்ரேட் சர்ஜன்” என்றான் புன்னகையுடன்.

“பட் எனக்கு அவன் க்ரேட் சைக்கோ” என்று அங்கலாய்ப்போடு சொன்னவளின் கால்கள் நேராக மீராவைத் தேடி சென்றது.

ரிசப்ஷனருகே  நின்று கொண்டிருந்த மீராவிடம், “அந்த பெரிடோடினிஸ் பேஷன்டோட ரெக்கார்ட் வேணும். அவர் நம்ம ஹாஸ்பிட்டலுக்கு ரெகுலரா வரவரா? ரெக்கார்ட்லாம் பண்ணி வெச்சுருக்கீங்க”  என்றிவள் கேட்க மீரா ஆமோதிப்பாய் தலையாட்டிவிட்டு அந்த ஃபைலை நீட்டினாள்.

இவள் வாங்கிக் கொண்டு நிமிர காக்கி சட்டையுடன் எதிரே ஒருவர்.

“இங்கே, ராகுல்ன்ற பேருலே யாராவது அட்மிட் ஆகியிருக்காங்களா? வயசு முப்பதுலே இருந்து முப்பத்தைஞ்சுக்குள்ளே இருக்கும்” அந்த போலீஸ்காரர் கேட்க, மீராவின் கண்கள் குழப்பமாய் அவரை ஏறிட்டது.

“ஆமாம் வயித்துலே காயப்பட்டு இப்போ தான் அட்மிட் ஆனாரு. பெரிடோனிசிஸ் சர்ஜரி பண்ண கூட்டிட்டு போய் இருக்காங்க” என மீரா சொல்ல வேக வேகமாய் தன் கைகளிலிருந்த ஃபைலை மான்யா பார்த்தாள்.

ராகுல் குமார். வயது முப்பத்திரெண்டு என எழுதப்பட்டிருந்தது.

“அவன் ஒரு பத்து வயசு பொண்ணை கற்பழிச்சு கொன்னவன்மா” என்ற வார்த்தைகளில் மான்யா கையிலிருந்த ஃபைல் நழுவவிட்டாள்.

அனஸ்தீசியா கொடுத்து ஐந்து நிமிடங்களாகியும் இன்னும் உள்ளே வராத மான்யாவை எண்ணி இங்கே ஷ்யாமிடம் கோபத்தின் வெடிப்பு.

“சே டைம்முக்கு இவளுக்கு வரவே தெரியாதா?” என அவன் கோபமாய் நினைத்த நேரம் கதவை திறந்து கொண்டு மான்யா உள்ளே வந்தாள்.

அவள் முகத்தில் சர்ஜரி மாஸ்க் இல்லை. உடம்பில் சர்ஜரி செய்யும் நேரத்தில் போடப்படும் பச்சை உடையும் இல்லை. கைகளிலும் தூய்மைப்படுத்தியதன் அடையாளமாய் ஒரு சொட்டு நீர் இல்லை.

“உன்னாலே ஒரு சர்ஜிக்கல் ப்ரோடோகாலை கூட ஒழுங்கா ஃபாலோ முடியாதா?” என்று அவன் கொந்தளித்த நேரம்

“சாரி ஷ்யாம். என்னாலே இந்த சர்ஜரியை பண்ண முடியாது” என்றாள் இறுக்கமாக.

“வாட்? ஆர் யூ ஜோக்கிங்”

“நோ. ஐ யம் சீரியஸ். இந்த ரேப்பிஸ்டை காப்பாத்த என்னாலே முடியாது” என்றவளது வார்த்தையைக் கேட்டு ஷ்யாமின் முகத்தில் அதிர்வின் ரேகைகள்.