உடையாத(தே) வெண்ணிலவே

சென்னை விமான நிலையம்.

ஒத்த உருவத்தைக் கொண்ட பல பறவைகள் தஞ்சம் கொண்டிருக்கும் வேடந்தாங்கல்.

சில பறவைகள் வானில் பறக்க, பல பறவைகள் கிளம்ப தயராயிருக்க ஒரு பறவை மட்டும் வானை கிழித்துக் கொண்டு வேகமாய் வந்து கொண்டிருந்தது.

உச்சி வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மின்னல் வேகத்தில் தரையிறங்குவதை அதன் ஜன்னலோரத்தில் அமர்ந்தவாறே, கசந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்சித்தார்த்.

காதல் என்பதும் இப்படி தானே!

எதிர்பாராமல் உள்ளுக்குள் நுழைந்து மகிழ்ச்சியின் முகடுகளில் ஏற்றிவிடும் இந்த காதல், பட்டென்று  கைப்பிடியை தளர்த்தி கீழே விழ வைத்துவிடும் துரோகத்தின் குருதிவாள் அல்லவா!

அந்த காயத்தின் தழும்புகள் இன்றும் ஆறாமல் அவனை வதை செய்துக் கொண்டிருந்த நேரம் “அப்பா” என்ற குரல் அவன் செவியை தீண்டியது.

வேகமாய்த் திரும்பியவன் விழிகளில் விழுந்தது அந்த சின்னச்சிட்டின் உருவம்.

ஆரனாஷி!

நான்கடி சிங்கார சிலை.

பத்து வயது நிரம்பிய பதிற்றுப் பத்து பாடல்.

தன் கோவைப்பழ உதடுகளால், “அப்பா எல்லாரும் இறங்கிட்டாங்க. நம்ம தான் லாஸ்ட்” என்றதும் சுயம் கலைந்தான்.

விமான நிலையத்தின் முகப்பை அடைந்து கார் பார்க்கிங்கிற்குள் செல்ல முயன்ற நேரம் வானமாலை தன் நீர்முத்துக்களை கீழே சிதறவிட்டிருந்தது.

மழையில் நனையாமல் அந்த முகப்பில் தன் மகளோடு ஒதுங்கியவனின் மேல் மழைச்சாரல் தீண்ட தீண்ட அவன் இதயத்துக்குள் நினைவுகளின் ஈரம்.

மழை வரும் போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு வந்துவிடும். கூடவே அந்த நாளும்.

மறக்க முடியுமா அந்த நாளை!

ஷ்யாம்சித்தார்த் என்ற அழுத்தக்காரனிற்குள்ளும் காதலின் விதை இருக்கிறது, அதுவும் மலர்ந்து வாசம் வீசுமென அவனே முழுமையாய் உணர்ந்த தருணமது.

அன்றும் இதே போலதான் மழைப் பெய்துக் கொண்டிருந்தது.

பனியில் சிவந்த ரோஜாவைப் போல சிவந்து நின்றவளின் வதனத்தை தாங்கியவனின் கைகளில் இன்றும் அந்த நாள் தந்த குளிர்ச்சியின் குறுகுறுப்பு கரத்தில் பாய்ந்தது.

அவளின் கண் அசைவில் மகுடிக்கு மயங்கும் பாம்பாய் சொக்கிப்போக,

வேகமாய் அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டவனின் கைகளிலோ அத்துமீறலின் ஆதிதுவக்கம்.

மின்னல் போல அவனை சுகமாய் வெட்டிக் கொண்டிருந்த அவளின் இடையை இறுகப் பற்றியவனுக்குள் காதல் கண்மண் தெரியாமல் கூடிப்போக, கட்டழகியின் கைப்பாவையாகி தனது கட்டுப்பாட்டை மெல்ல இழக்க ஆரம்பித்திருந்தான்.

இருவரிக் கவிதையாய் இருந்த  இதழ்களை ரசித்துப் படிப்பதற்காக  நெருங்கியவனை, மொழிப்பெயர்க்க முடியாத புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்திலோ அசாத்திய மாற்றம்.

அதுவரை அவன் மேல் சுகமாய் வீசிக் கொண்டிருந்த காதல்சாரல் மெல்ல அவன் தலையில் இடியை இறக்க தொடங்கியது.

“யூ லாஸர். நீயும் காதல்ன்ற சாக்கடைக்குள்ளே விழுந்துட்டே ஷ்யாம் சித்தார்த்.” என்றவளின் இதழ்களிலோ காதல் சிரிப்பிற்கு பதில் கர்வசிரிப்பு.

மின்னல் தாக்கிய மரமாய் அவன் உணர்வுகள் எல்லாம் நொடிப்பொழுதில் கருக, ஸ்தம்பித்துப் போய் நின்றவனின் கன்னத்தைத் தட்டியவள் கேலிப் புன்னகையுடன் தொடர்ந்தாள்.

“என்ன மிஸ்டர் ஷ்யாம்சித்தார்த். இன்னுமா உங்களுக்கு புரியலை, எப்படி நீங்க என்னை பழிவாங்க காதலிக்கிறா மாதிரி நடிச்சீங்களோ, அதே மாதிரி தான் நானும் நடிச்சு உங்களை ஏமாத்துனேன். அன்னைக்கு நான் எப்படி  கதறுனேனோ அதே மாதிரி நீ இன்னைக்கு துடிக்க துடிக்க கதறனும்டா” கோபமாய் கர்ஜித்தவளின் கரத்தை பதற்றத்தோடு பிடித்துக் கொண்டான்.

“நான் அன்னைக்கு அப்படி நடந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. ப்ளீஸ் நான் சொல்ல வரதை கேட்டுட்டு முடிவு பண்ணுடா. இப்படி அவசரப்பட்டு நடிப்புனு சொல்லி என் மனசை உடைச்சு போடாதேமா. என் காதல் உண்மை. நம்ம காதல் பொய்யில்லை” கதறியபடி அவளைக் கட்டியணைக்க முயன்றவனை வேகமாக தள்ளிவிட்டாள் அவள்.

“மிஸ்டர் ஷ்யாம்சித்தார்த். யூ நோ ஒன்திங் நான் உன்னை காதலிக்கவேயில்லை. நான் ஸ்டேட்ஸ்க்கு போக முடிவு பண்ணிட்டேன். போறதுக்கு முன்னாடி என்னை காயப்படுத்தின உன்னை பழிவாங்காம போறது நியாயமாப்படலை. அதான் உன்னை துடிக்கதுடிக்க வேட்டையாடிட்டேன். இப்போ ஐ யம் ஹேப்பி. டாடா லாஸர்” அன்று மோகினியாய் சிரித்தவளின் குரல் இன்று அவனது செவிகளில் மாறிமாறி ஒலிக்க சட்டென்று காதை மூடிக் கொண்டான்.

தான் செய்த அந்த ஒரே தவறு தன்னைத் திருப்பி அடிக்குமென்று ஷ்யாம் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

அவன் ஆண் என்னும் அகங்காரத்தையே சில்லுசில்லாக உடைத்துவிட்டாள் அவள்.

எவ்வளவு சமாதானப்படுத்தியும் மனது இடைவெளியில்லாமல் அரற்றிக் கொண்டிருந்தது.

மனதார அவன் அந்த காதல் சதுரங்க விளையாட்டை துவங்கவில்லை.  விளையாட்டின் போக்கு மாறும் என்றும் நினைக்கவில்லை. அதில் அவள் காயப்பட்டு நிற்பாள் என்றும் உணரவில்லை. இறுதியில் அவள் நகர்த்திய காயில் அந்த ராஜா தன் வாழ்க்கையையே இழந்து நின்றுவிட்டான்.

எங்கேயோ தொடங்கி எங்கேயோ நகர்ந்து இறுதியில் எங்கேயோ நிறுத்திவிட்டது காலம்.

வாழ்க்கை என்பதே விசித்திரமான விளையாட்டு தானே!

அவன் இயலாமையோடு பெருமூச்சுவிட்ட நேரம் பதற்றமாய் ஆரனாஷி அவனை அழைத்தாள்.

“அங்கே பாருங்கபா. நம்ம மானுமா நிற்கிறாங்க” என்றவள் ஷ்யாமைத் தொட்டு திருப்ப அவள் காட்டிய திசையின் விளிம்பில் மான்யாசுந்தர்.

யாரைப் பற்றி இவ்வளவு நேரம் நினைத்துக் கொண்டிருந்தானோ அவளே இப்போது எதிரில் வந்து எதிரில் நிற்கின்றாள், கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு.

அவனிடம் கடவுளைக் கண்ட ஸ்தம்பிப்பு!

அவளிடமோ தூசைத் தட்டிவிடும் அலட்சிய பாங்கு

அவன் காதல் வானத்தில் மீண்டும் தோன்றிய மான்யா என்னும் நிலவு, அவனை உடைக்கும் வெண்ணிலவா?

இல்லை அவனால் உடையும் வெண்ணிலவா!

பதில் காலத்தின் கைகளில்…