உடையாத வெண்ணிலவே 12

பெரும் வனத்தைப் போல காட்சியளித்த அந்த அறையை  பார்க்க பார்க்க  மான்யாவின் விழிகளில் மருட்சி.

‘இத்தனை பெரிய அறையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?’ என கட்டிலில் படுத்தபடி அந்த அறையையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் மான்யா.

அவளுக்கு தேவையெல்லாம் ஒரு சிறு மரம், அதிலொரு சிறு கூடு!

அவள் சிறிய இடத்திலிருக்கும் சிறிய தனிமையை சமாளித்து பழக்கப்பட்டவள். காடு போல் விரிந்து கிடக்கும் இந்த இடம் மனதை மிரட்டியது.

கண்ணுக்கு தெரியாத புள்ளியைப் போல மனதுக்குள் இருந்த அந்த குட்டி வெற்றிடம் இப்போது ஏக்கர் கணக்கில் கூடிவிட்டதைப் போன்றதொரு மாயை. 

கிட்டத்தட்ட மூன்று வருடமாக தனிமையில் இருந்திருக்கிறாள் அப்போதெல்லாம் மிக மெல்லியதாக ஒலித்துக் கொண்டிருந்த அநாதை என்ற சப்தம் இப்போதோ ஓங்காரமெடுத்து ஒலித்தது.

இத்தனை பேருக்கு நடுவில் தான் ஒருத்தி மட்டுமே தனித்துவிடப்பட்டதை எண்ணி அவள் கண்களில் கண்ணீரின் கசிவு.

அந்த கட்டிலில் புரண்டு புரண்டு படுத்து தூங்க முயற்சித்தாள்.

ஆனால் தூக்கம் தூரமாக சென்று தாய் ஏக்கமோ வெகு அருகில் நின்று அவளை அலைக் கழித்து கொண்டிருந்தது.

அவளது தேவையெல்லாம் ஆதூரமாய் ஒரு தலை கோதல். கவலையெல்லாம் மறந்து சுருண்டு படுத்துக் கொள்ள தாயின் மார்பு.

“எல்லாம் சரியாகிடும்டா. அம்மா உன் பக்கத்துலே தான் இருக்கேன்” என எப்போதும் ஒலிக்கும் அன்பில் ஊறிய அன்னையின் குரல்.

மஞ்சள் பூசிய தாயின் முகத்தைக் கண்டு தன் உள்ளத்து மருகலை எல்லாம் போக்கிக் கொள்ள அவள் உள்ளம் துடித்தது.

‘ஆனால் எங்கு சென்று காண்பது?’

அவள் முகம் எங்கும் பரிதவிப்பு.

சிறுவயதிலேயே தன்னை விட்டு சென்ற தாயை தன் மனக்கண்ணில் கொண்டு வந்து லட்சத்து இருபது முறையாக ”நீ ஏன்மா என்னை விட்டு இவ்வளவு சீக்கிரமா போயிட்டே’  ஆற்றாமையோடு கேட்டவளின் மனதில் பால்யகால நினைவின் கிடங்குகள் தீப்பற்றி எறிந்தன.

அதன் கருகல் வாசனையில் மூச்சு முட்ட வேகமாக கட்டிலிலிருந்து எழுந்தவளின் கால்கள், தோட்டத்தை நோக்கி அவளை நகர்த்தி சென்றது.

தாயை நினைத்து அழுகை வரும் போதெல்லாம் தந்தையின் வாசனையில் தோள் சாய்ந்து கொள்வாள்.

எப்போதும் போல இன்றும் அந்த பூக்களின் வாசம் அவளது வறண்ட மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசம் செய்தது.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தது அந்த தோட்டம். அதன் நடுவில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்தவளின் கண்கள் நிமிர்ந்து வானைப் பார்த்தது.

அங்கே உடையாத ஒரு முழு வெண்ணிலா!

அந்த நிலவையே கண்களில் எந்த உணர்ச்சியுமின்றி வெறுமையாய் வெறித்துக் கொண்டிருந்தாள்.

அந்த வெண்ணிலவை இன்னொரு ஜோடி கண்களும் சாளரத்தின் அருகே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தது.

அது ஷ்யாமின் கண்கள்.

அந்த நிலவை ஏதேச்சையாகப் பார்த்துவிட்டு திரும்பிய ஷ்யாமின் விழிகளில் மான்யாவின் முகம் விழுந்தது.

அவளது முகத்தில் துயரத்தின் அலை அடித்துக் கொண்டிருப்பதை கண்டதும் ஷ்யாமின் நெற்றியில் சிந்தனை முடிச்சுகள்.

இதுவரை பதிலுக்கு பதில் பேசும் மான்யாவையே பார்த்து பழகியவனுக்கு அவளது சோகம் கப்பிய முகம் ஏதோ செய்தது.

மான்யா நத்தைப் போல அந்த பெஞ்சில்  சுருண்டு படுத்துக் கொண்டதைப் பார்த்ததும் அதற்கு மேலும் அங்கே அவனால் நிற்க முடியவில்லை.

வேகமாக தோட்டத்தை நோக்கி விரைந்தவனின் கால்கள் மான்யாவை நோக்கி நடத்தி சென்றது.

நிலவொளியின் வெளிச்சத்தில்  கன்னத்தில் அழுத தடம் மின்னியதைக் கண்டதும் ‘மான்யா’ என்றழைக்க வந்த அவன் உதடுகள் அப்படியே தந்தியடித்தபடி நின்றுவிட்டது.

ஆனால் இவனது அழைப்பு மான்யாவின் செவிகளிலில் விழுந்திருக்கும் போல பட்டென்று கண்களை திறந்துப் பார்த்தாள்.

எதிரில் நின்ற ஷ்யாமை கண்டதும் விருட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

அந்த பெஞ்சின் மறுபுறத்தில் அமர்ந்த ஷ்யாமின் வார்த்தைகள் கூர்மையாக விழுந்தது. 

“அழுதியா மான்யா?”

அவளிடம் மௌனத்தின் குடைவிரிப்பு.

“அந்த ரூம் உனக்கு கம்ஃபர்டலிபா இருக்கு தானே?” என்று கேட்க அவளிடம் அப்போதும் பதிலில்லை.

“வீட்டுக்குள்ளே வரும் போது கீழே விழுந்ததுலே ஏதும் அடிப்பட்டுச்சா? டிடி இன்ஞக்ஷன் போடவா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அந்த கேள்விகளுக்கும் அவள்  உதடுகள் திறக்கவில்லை.

“ஏன் இங்கே வந்து படுத்துட்டு இருக்க? பழக்கமில்லாத இடம்ன்றதாலே  தூக்கம் வரலையா?” அவனிடம் வரிசையாக கேள்விகள்.

தன் வீட்டிற்கு வந்தவளை சரியாக உபசரிக்க தவறிவிட்டாமோ, ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டுவிட்டாதோ என்ற  கலக்கம் அவனை அத்தனை கேள்விகள் கேட்க வைத்தது.

அது வரை மௌனத்தை தாங்கியிருந்த மான்யாவின் இதழ்கள் இறுதியாக அவன் கேட்ட வினாவில் கசப்பாய் வளைந்தது.

“பழக்கமில்லாத இடம் காரணமில்லை. எனக்கு பழக்கமில்லாத மனுஷங்க இங்கே இல்லாததாலே தான் எனக்கு தூக்கம் வரலை” மான்யாவின் பதில் அவனை தடுமாற செய்தது.

“நீயும் நானும் ஹாஸ்பிட்டலிலே ஏற்கெனவே பழகி இருக்கோம் தானே. இந்த இடத்தை அந்நியமா எடுத்துக்காதே. பீ ஃபீல் யுவர் ஹோம்”

“நீங்க ஒரு ரோபோ ஷ்யாம். ஒரு ரோபோ கூட எப்படி என்னாலே பழக்க வழக்கம் வெச்சுக்க முடியும்” கேலியாக கேட்டவளின் குரல் அடுத்து அழுத்தமாய் ஒலித்தது.

“இந்த வீட்டுலே எனக்குனு ஒரு அறை இருக்கு. அதுக்கு நான் ரென்ட்டும் பே பண்ணப் போறேன். சோ கெஸ்டா என்னை ட்ரீட் பண்ணாதீங்க. என் வீட்டுலேயே என்னை அந்நியமாக்கிடாதீங்க” தீர்க்கமாக சொல்லிவிட்டு திரும்பி கூடப் பார்க்காமல் சென்றவளையே மொழியற்றுப் பார்த்து நின்றான் அவன்.

அவள் பதிலில், அவன் இதழ் கோப்பையில் ஒரு மிடறு கோபம் ஒரு மிடறு புன்னகை.

‘தேவை தான் எனக்கு!’ தலையை கோதியவனின் உதடுகள்  புன்னகையுடன் முணுமுணுத்துக் கொண்டது.

மெல்லிய சிரிப்புடன் தன்னறைக்குள் வர அங்கே  வாயில் விரல் வைத்தபடி உறங்கிய ஆரனாஷியைக் கண்டு அவன் இதழ்கள் இன்னும் பெரியதாக விரிந்தது.

“அப்பா. எத்தனை தடவை வாயிலே கையை வைக்கக்கூடாதுனு சொல்லியிருக்கேன்” உறங்கும் மகளின் தலையை கோதியவாறே உதடுகளிலிருந்து  விரல்களை எடுத்துவிட்டான்.

“இனி பண்ண மாட்டேன்பா” தூக்கத்திலேயே உளறியபடி அவனது விரல்களை இழுத்து வாயில் அதக்கியபடி மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தது அந்த சின்ன சிட்டு.

தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டவனின் கண்கள்  புன்னகையுடன் மூடியது.

இங்கோ தளர்வாக தன்னறையை நோக்கி நடந்த மான்யாவின் கால்கள் மீனாட்சியம்மாள் அறையின் அருகே வந்தவுடன் தேங்கி நின்றது.

ஏனோ தெரியவில்லை அவரை பார்க்க வேண்டும் போல தோன்ற  மெல்ல கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.

மீனாட்சியம்மாளின் விழிகள் உறங்காமல் சீலிங் ஃபேனை வெறித்தபடியிருக்க, மான்யா அம்மா என்ற அழைப்போடு உள்ளே சென்றாள்.

அவளது குரலைக் கேட்டதும் அவரது கண்கள் திரும்பி அவளைப் பார்த்தது.

“என்னாச்சுமா தூக்கம் வரலையா?” எனக் கேட்க மௌனமாய் அவளையே வெறித்தது அவரின் விழிகள். 

அவரருகே சென்று அமர்ந்தவள் மெல்ல தலை கோதியவாறே, “எனக்கும் தூக்கமே வரலைமா. ஏன்னே தெரியலை அம்மா நியாபகமாவே இருக்கு” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் குரல் உடைந்தது.

அதுவரை நிர்மலமாய் இருந்த மீனாட்சியம்மாள் சட்டென அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டார். மான்யாவும் அவர் இழுப்பிற்கு வளைந்து கொடுத்தாள்.

அவருடைய வருடலில் அப்படியொரு வாஞ்சை!

கோழிக் குஞ்சாய் அவர் மார்பில் ஒடுங்கிப் போனாள் இவள்.

எந்த தாயின் வருடலுக்காக சற்று முன்பு ஏங்கினாளோ அதே வருடல் மீனாட்சியம்மாள் ரூபத்தில் கிடைக்க அவளது மனதிலிருந்த பாரம் எல்லாம் வடிந்துப் போனது.

சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்தாள்.அவரும் பதிலுக்கு ஒரு பார்வை பார்த்தார்.

ஆனால் அதில் உயிரில்லை. அது மான்யாவிற்கு கவலை கொடுத்தது.

“அம்மா நீங்க ஏன் இப்படி மௌனமாவே இருக்கீங்க?” வருத்தமாய் கேட்டவளுக்கு மௌனமே பதிலாக கிடைத்தது.

அதைக் கண்டு வருத்தமாக பெருமூச்சுவிட்டவள், “கண்டிப்பா நீங்க சரியாகிடுவீங்கமா. நான் உங்களை எப்பாடு பட்டாவது குணப்படுத்திடுவேன். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க”  ஆறுதலாக சொல்லியபடி அவரை இறுக அணைத்துக் கொள்ள அவரும் பதிலுக்கு அணைத்தார்.

கண்ணுக்கு தெரியாத அன்பின் நூல் அவர்கள் இருவரது இதயத்தையும் ஒன்றுக்கொன்று பிணைக்க நிம்மதியாய் விழிகளை மூடியது இரு ஜோடி கண்களும்.

💐💐💐💐💐💐💐💐💐💐

காலையில் கண்விழித்த ஷ்யாம்,  எப்போதும் போல மீனாட்சியம்மாளை  எழுப்புவதற்காக கதவைத் திறக்க அங்கே கட்டிக் கொண்டு படுத்திருந்த மான்யாவையும் மீனாட்சியம்மாளையும் காண அவன் விழிகளில் திகைப்பின் தெறிப்பு.

அவன் பின்னாலேயே வந்த ஆரனாஷியும் இந்த காட்சியைக் கண்டு கண் உருட்டி நின்றாள்.

“அப்பா நம்ம பாட்டி இவங்களை மட்டும் கட்டிப்பிடிச்சு தூங்குறாங்க. ஆனால் என்னை ஒரு நாள் கூட ஹக் பண்ணதில்லையே” ஆரனாஷி உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ஏக்கமாக கேட்க ஷ்யாமிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

நினைவு தெரிந்த நாள் முதற் கொண்டு தன்னை கூட மீனாட்சியம்மாள் அணைத்ததில்லை என்று நினைத்தவனிற்குள் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.

இத்தனை நாட்கள் இவ்வளவு அன்பாய் பார்த்துக் கொண்டும் தன்னை பாசமாய் அணைக்காதவர், எப்படி இவளை மட்டும் அணைத்தார்?

என்ன சொக்குபொடி போட்டு மயக்கினாள் இவள்!

இயலாமையோடு நினைத்தவனின் மனம் மான்யாவின் மீது காரணமேயில்லாமல் வன்மத்தை வளர்த்துக் கொண்டது.