உடையாத வெண்ணிலவே 12b

நம் நேசத்திற்குரியவரின் கோப்பைகளில் நம் அன்பிற்கு பதில் வேறொருவருடைய அன்பு நிறையும் போது மனம் பதற்றம் கொள்ளும். கோபம் கொள்ளும்.

அந்த கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தவனின் வருத்தத்தை மகளால் உணர முடிந்தது.

அவனையே வருத்தமாக பார்த்த ஆரனாஷி அவனை அருகில் அழைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

“அப்பா, கஷ்டப்படாதீங்க. பாட்டி கண்டிப்பா நம்ம கிட்டேயும் பாசமா இருப்பாங்க”  என்று பெரிய மனுஷியாய் பேச அவன் இதழ்களில் புன்னகை வெடிப்பு.

“என் ஆஷிமா” வாஞ்சையாய் அழைத்தவன் அவளது கைகளை எடுத்து முகத்தில் புதைத்துக்  கொண்டான்.
நொடிப் பொழுதில் அவன் வருத்தத்தை மறைய செய்தது  அந்த ஸ்பரிசம். 

“ஆமாம் மேடம் இன்னும் ரெடியாகலையா. புது ஸ்கூலுக்கு போக வேண்டாமா” என அவள் நெற்றியில் முட்டிக் கேட்டபடியே அவளைத் தயார் செய்துவிட்டு தான் தயாராவதற்காக தன்னறைக்குள் நுழைந்தான்.

தன் தந்தை தலை மறையும் வரை காத்திருந்த ஆரனாஷியின் விழிகள் வேக வேகமாக தன் பையைத் திறந்து அதிலிருந்த வாட்டர் பெயின்ட்டை பார்த்து வில்லத்தனமாய் சிரித்தது.

பல நாட்கள் கழித்து  மீனாட்சியம்மாளின் அணைப்பில் நிம்மதியாக உறங்கிய மான்யாவின் விழிகள் ஜன்னலருகே விழுந்த சூரியனின் வெம்மை தாங்காமல் கண் திறந்துப் பார்த்தது.

எதிரிலிருந்த கடிகாரத்தில் மணி எட்டு!

அதைப் பார்த்ததும் சட்டென பரபரப்பு தொற்றிக் கொண்டது அவளிடம்.

‘ஐயையோ இப்படி நேரங்காலம் தெரியாம தூங்கிட்டேனே. இந்த ஷ்யாம் வேற ஹாஸ்பிட்டலுக்கு லேட்டா வந்தா தையதக்கானு குதிப்பானே’  மனதுக்குள் நொந்தபடியே அறைக்குள் புகுந்தவள் வேகமாக குளித்துவிட்டு கைக்கு அகப்பட்ட சுடிதாரை மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

தான் போட்டிருக்கும் வெள்ளை நிற உடையை வண்ணமயமாக்கப் போகும் ஆரனாஷியின் திட்டம் தெரியாமல் அவசர அவசராமாக வெளியில் செல்ல முயன்ற போது படபடவென வாட்டர் பலூன்கள் அவள் மீது மோதி உடைந்தது.

இந்த எதிர்பாராத தாக்குதலில் மான்யா திணறிப் போய் நின்றுவிட்டாள்.
நொடிப் பொழுதில் வெள்ளை சுடிதார் வானவில் நிறமாய்.

தன் முகத்தில் வழிந்த தண்ணீரை துடைத்துக் கொண்டே எதிரிலிருந்த ஆரனாஷியை முறைத்துப் பார்த்தாள்.
அவளும் பதிலுக்கு ஒரு பார்வை பார்த்தாள்.

“இப்போ எதுக்கு என் மேலே வாட்டர் பலூன் அடிச்ச ஆரனாஷி?” என்றாள் கோபமாக.

“நீங்க எதுக்கு என் அப்பாவை எப்பவும் வம்பிழுத்திட்டு இருக்கீங்க? கோபப்படுத்திட்டு இருக்கீங்க?” எதிர்க்கேள்வி கேட்டது அந்த சிட்டு.

“ஏதே நானா?” இவளிடம் அதிர்வு. 

“நீங்க தான். பாட்டி எங்களை ஒரு தடவை கூட ஹக் பண்ணதில்லை தெரியுமா? உங்களை மட்டும் கட்டிப்பிடிச்சா எங்களுக்கு கோவம் வராதா பின்னே?” ஆற்றாமையில் வெடித்தாள் ஆரனாஷி
.
‘ரைட்டுரா. ஒரு ஷ்யாமையே என்னாலே சமாளிக்க முடியலை. இதுலே இவள் வரை என்னை இப்படி படுத்துறாளே’ சலிப்பாக நினைத்தவள் ஆரனாஷியை நோக்கி முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டாள்.

“இதே மாதிரி அடுத்த தடவை பண்ணா கண்டிப்பா சும்மா இருக்க மாட்டேன். இதான் ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங். குட் கேர்ளா இருக்கணும்” என்று கண்டிப்போடு திரும்ப அங்கே ஷ்யாம் உதடுகளில் வழிந்த புன்னகையை அடக்க சிரமப்பட்டு நின்றுக் கொண்டிருந்தான்.

அதைக் கண்டு கடுப்பானவள் கீழே உடையாமல் கிடந்த வாட்டர் பலூனை  எடுத்து வீச அதுவோ அவன் மீது வண்ணத்தை பூசிவிட்டு கீழே விழுந்தது.

அவனை மேலும் கீழும் பார்த்தவள் “பர்ஃபெக்ட்” என்று சர்டிஃபிகேட் கொடுக்க
“யூ இடியட்” என்று ஒரு சேர கோபத்தில் தகப்பனும் மகளும்  கத்தினர்.

‘திட்டுறதுலே கூட அப்பனுக்கும் பொண்ணுக்கும் இவ்வளவு ஸின்கா?’ கேலியாக நினைத்தபடி அவர்களை திரும்பிப் பார்க்காமல் கடந்துப் போனவள் உடையை மாற்றிக் கொண்டு மீண்டும் வரும் போது அந்த வீட்டிற்குள் லயா மட்டும் தான் இருந்தாள்.

அவளிடம் மீனாட்சியம்மாளின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்த போது நேரம் பத்தரையை தாண்டியிருந்தது.

கடிகாரத்தை பதற்றமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவளை மேலும்  பதற வைத்து பார்க்கும் நோக்கோடு ஷ்யாமிடமிருந்து அழைப்பு.

‘ஏற்கெனவே சலங்கை  இல்லாமல் ஜங்கு ஜங்குனு ஆடுவான். இன்னைக்கு கேட்கவா வேணும்’ என நொந்தபடி அந்த அறையை கதவை தட்ட எத்தனித்த போது “யெஸ் கம் இன்” என்று உள்ளிருந்து ஒலித்தது அவன் குரல்.

மான்யாவிற்குள் அதிர்வு!

சிசிடிவி கேமாரவில் தன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறானோ என எண்ணியபடி சுற்றி முற்றி மேலே கீழே பார்வையால் அலசிய நேரம் அவளது அலைப்பேசி ஒளிர்ந்து அடங்கியது.

“சிசிடிவியிலே பார்க்கிற அளவுக்குலாம் நீ வொர்த் இல்லை. ஒழுங்கா கதவு கிட்டே முழிச்சுட்டு நிற்காம ரூமுக்குள்ளே வா” என்ற குறுஞ்செய்தி பார்த்து மீண்டும் அதிர்ந்தாள்.

சிசிடிவியில் பார்க்கவில்லையென்றால் எப்படி தன் அடுத்தடுத்த அசைவுகளை துல்லியமாக சொல்கின்றான் என்ற கேள்வியோடு உள்ளே நுழைய எதிரே ஷ்யாம் கை கட்டியபடி அவளைப் பார்த்து முறைத்து கொண்டிருந்தான்.

“இதான் ஹாஸ்பிட்டெலுக்கு வர டைம்மா. கொஞ்சம் கூட பன்க்சுவாலிட்டி இல்லையா?” என அவளை அவன் கிழிக்கத் துவங்க அவளோ முறைத்துப் பார்த்தாள்.

“நான் லேட்டா வந்ததுக்கு உங்க பொண்ணு தான் காரணம்” என்றாள் கண்களில் கோபம் மின்ன.

“மிஸ்.மான்யா இந்த சாக்கு சொல்றதுலாம் இங்கே வேணாம். ஒழுங்கா டைம்முக்கு இங்கே இருக்கணும். காட் இட்”

“ஷ்யாம்!” என்றாள் இவள் கோபமாக.
மான்யாவின் அந்த அழைப்பில் வெகு வேகமாக திரும்பியவனின் விழிகள் கோபத்தை தத்தெடுத்தது.

“ஹே இன்டெர்ன். நான் இந்த ஹாஸ்பிட்டலோட சீனியர் சர்ஜன். கொஞ்சம் கூட ரெஸ்பெக்ட் இல்லாம பேர் சொல்லிக் கூப்பிடுற. ஒழுங்கா சார்னு கூப்பிடு” முறைப்பாய் விழுந்தது அவன் வார்த்தைகள்.

“இத்தனை நாளா பெயர் சொல்லி தானே கூப்பிட்டுட்டு இருந்தேன். அப்போ எல்லாம் என் மேலே வராத கோபம் இப்போ ஏன் வருது சார்” என்றாள் அவனை கூர்ந்துப் பார்த்தபடி.

“உன் எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என் கேள்விக்கு தான் நீ பதில் சொல்லியாக வேண்டிய நிலையிலே நீ நிற்கிற. அதை முதலிலே மனசுலே வெச்சுக்கோ”  கண்டிப்பான குரலில் சொன்னவன் கீழே குனிந்து ரிப்போர்ட்டைப் பார்ப்பது போல பாசங்கு செய்தவாறே மெல்லிய குரலில் கேட்டான்.

“என் அம்மா எப்படி உன் கிட்டே மட்டும் இவ்வளவு அன்பா இருக்காங்க? என்ன பண்ண?” என்றுக் கேட்க மான்யாவின் இதழ்களில் புன்னகை.

“ஷ்யாம், நான் தான் சொன்னனே அந்த ஆயிரம் மாத்திரை ஒரு அன்பான வார்த்தை” என்றவள் புன்னகையை அடக்கியபடி பேச வர கை நீட்டி தடுத்தவன்

“மான்யா நீ என் பொறுமையை சோதிக்குற” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே.

“எனக்கு வேண்டியது பதில். இத்தனை வருஷமா என் மேலே கூட காட்டாத பாசத்தை பழகின கொஞ்ச நாளிலேயே எப்படி உன் கிட்டே காட்டுறாங்க? என்ன பண்ண?” என்றுக் கேட்க அவள் உதடுகள் பிதுங்கியது.

அவளுக்கு உண்மையாகவே அந்த கேள்விக்கு விடை தெரியவில்லை.
சிலரைப் பார்த்தவுடன் நம் மனதிற்குள் இனம் புரியாத பாசம் உண்டாகிவிடும். அதற்கு காரணங்கள் தெரியாது. விளக்கங்கள் புரியாது.

அப்படி தான் விடை தெரியாத ஒரு நேசம் எங்கள் இருவருக்குள் உண்டாகிவிட்டது என்பதை சொன்னால் இவன் நம்பவா போகிறான்.
ஆதலால் அந்த கேள்விக்கு மௌனத்தையே பதிலாக தந்தாள்.

“சொல்ல மாட்டேலே ஓகே. உன் இஷ்டம். பட் வெரி நைஸ் மூவ் மான்யா” என்றான் ஒரு மாதிரி குரலில். அந்த குரல் மான்யாவை நிமிர செய்தது.

“என்ன மூவ்? எனக்கு புரியலை” மான்யாவிடம் நேரான கேள்வி.

“அதான் நீ விளையாடிட்டு இருக்கியே ஒரு சதுரங்க விளையாட்டு அதை சொன்னேன்” என்றான் இவன் இடக்காக.

“ஷ்யாம் சார் உங்களுக்கு நேராவே கேட்க தெரியாதா?” தலையை சரித்து கேட்டவளைக் கண்டு அவனுக்குள் கோபம் ஊற்றெடுத்தது.

‘எல்லாம் தெரிந்துக் கொண்டு எப்படி தெரியாத மாதிரி நடிக்கிறாள் இவள்?’ என உள்ளுக்குள் பொறுமியவன்,

“அதான் நீ என்னை ஜெயிப்பேனு போட்டியே ஒரு மாத சபதம். அதை சொன்னேன்” என்றான் இவன் அன்று நர்ஸிடம் பேசியதை மனதினில் வைத்துக் கொண்டு.

இவளோ தான் ஒரு நல்ல இன்டெர்ன் ஆகப் போகிறேன் என்று சவால்விட்டதை சொல்கிறான் என மாற்றிப் புரிந்துக் கொண்டவள் அவனிடம் தன் பதிலை வென்று காட்டி செய்கையால் சொல்ல வேண்டுமென அமைதி காத்து நின்றாள்.

அவளுடைய பதில் பேசாத முகத்தை ஒரு கணம் ஊன்றிப் பார்த்தவன் பின்பு அவள் முன்னே ஒரு ஃபைலை வைத்தான்.

“இது நாம அடுத்து சர்ஜரி பண்ண வேண்டிய பேஷன்ட்டோட ரெக்கார்ட். இன்னைக்கு மதியம் அட்மிட் ஆகப் போறாங்க. பேசிக் டெஸ்ட்ஸ் அன்ட் அவங்க ஹெல்த் கன்டிஷனை செக் பண்ணிட்டு டூ டேஸ்லே சர்ஜரி வெச்சுக்கலாம். நீ தான் சர்ஜரி லீட் பண்ணப் போற. பீ ரெடி”  என்று சொல்லி நிறுத்தியவன் அவளது முகத்தை கூர்ந்து பார்த்து

“ஏதாவது தப்பு பண்ணா என்ன பண்ணுவேனு உனக்கே தெரியும்” என்றான் அவள் கண்களை ஊடுருவி.

‘தெரியும் தெரியும். கசாப்பு  கடைக்காரனா மாறிடுவீங்க’ உள்ளுக்குள் கடுகடுத்தவள் எதுவும் பேசாமல் தன்னறைக்கு வந்து விழுந்தவளிடம் பெருமூச்சின் வெளிப்பாடு!

அதே சமயம் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்த விஷ்வக், “என்ன மான்யா? ஏன் சோகமா இருக்க? நான் லீவுலே போன இந்த கொஞ்ச நாளிலே யாராவது என் ப்ரெண்டை வம்பிழுத்திட்டாங்களோ? யாருனு சொல்லு நான் பார்த்துக்கிறேன்” எனக் கேட்டபடி இருக்கையில் அமர்ந்தான்.

“உன் சீனியர் தான். அவரை தவிர வேற யாரா இருக்க முடியும். ஏன் இப்படி அவர் கடுகடுனு இருக்காரு. சிரிக்கவே மாட்டாரா?” அவளிடம் அப்பட்டமான எரிச்சல் வெளிப்பட்டது. அதைப் பொறுக்க மாட்டாமல் ஷ்யாமிற்காக பேச முயன்றான் விஷ்வக்.

“அவர் காலேஜ் படிக்கிற அப்போ இப்படி இல்லை மான்யா. அந்த ப்ரேக் அப் அப்புறம் தான் இப்படி கடுகடுனு ஆகிட்டாரு” சோகம் கவிந்து கிடந்தது அவன் குரலில்.

“ஓய் அப்போ நீயும் அவரும் ஒரே காலேஜ்ஜா?” என்றாள் ஆர்வமாக.

“யெஸ் அவர் எனக்கு சீனியர். அவர் லாஸ்ட் இயர் படிக்கும் போது நான் ஃபர்ஸ்ட் இயர் சேர்ந்தேன். அப்போ எல்லாம் அவர் முகத்திலே எப்பவும் சந்தோஷம் இருக்கும்” இடைவெளி விட்டு நிறுத்தினான் அவன்.

அவன் மனதிற்குள் பழைய ஷ்யாமின் முகம் நினைவிற்கு வர உதடுகளில் மந்தகாசமான புன்னகை.

புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் கண்ணனாக தானே ஷ்யாமை கண்டிருக்கிறான். ஆனால் இப்போதோ பெயருக்கு கூட அவன் முகத்தில் புன்னகை எட்டிப் பார்ப்பதில்லை.

விஷ்வக்கின் மௌனத்தை கலைக்கும் விதமாய் மான்யாவின் குரல் ஒலித்தது.

“அப்படி இருந்தவர் ஏன் இப்படி ஆனார்?”

“எல்லாம் காதல் படுத்துற பாடு. அவர் கேர்ள் ப்ரெண்டுகாக ஸ்டேட்ஸ்கு படிக்க போனதா அவர் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. ஆனால் திரும்பி வரும் போது குழந்தையோட வந்தார். அங்கேயே அவங்களுக்குள்ளே ப்ரேக் அப் ஆகிடுச்சு போல” சொல்லும் போதே அவன் முகத்தில் சோகம் படிந்தது.

இவளது முகத்திலும் அதைக் கேட்டு வருத்தம். எப்போதும் அழுத்தக்காரர்களுக்கு பின்னால் ஒரு ஆழமான கதையிருக்கும்.

ஷ்யாமின் கதையை முழுமையாக அவள் அறியாள். ஆனால் பாதி கதையிலேயே அவன் மீது பரிதாபம் எழுந்துவிட்டது.

“பாவம் தான் உன் சீனியர்” என்று பரிதாபப்பட்டவள், “ஆமாம் நீ ஷ்யாமோட கேர்ள் ப்ரெண்டை பார்த்திருக்கியா? ஆரனாஷி மாதிரி தான் அவங்க இருப்பங்களா?” என்றாள் ஆர்வம் தாங்காத குரலில்.

“ஆரனாஷி அப்படியே ஷ்யாமோட ஜெராக்ஸ். அவனுக்கு இருக்கிற அதே கழுத்து மச்சம் ஆஷிக்கும் இருக்கும். அதே கோபம். அதே ஜாடைனு ஷ்யாமை உரிச்சு வெச்சது போல இருப்பா” என சொல்ல மான்யாவிடம் ஆமோதிப்பான தலையாட்டல்.

“ஆமாம் அப்படியே ஷ்யாமோட டிட்டோ தான் ஆரனாஷி” என்று சொல்லும் போதே மான்யாவின் அலைப்பேசி ஒலித்தது.
எடுத்து காதில் வைக்க எதிர்முனையில் ஷ்யாமின் குரல்.

“அந்த பெரிடோடினிஸ் பேஷன்ட் இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகுறான். அவனை கம்ப்ளீட்டா ஒரு செக்கப் பண்ணிட்டு பத்திரமா அனுப்பி வை” கட்டளையாக சொல்லியவன் அவள் மறுத்து பேசும் முன்பே அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

தனது அலைப்பேசியை கொல்லும் வெறியோடு பார்த்தவள் விஷ்வக்கிடம் திரும்பி “போயும் போயும் உன் சீனியருக்காக பாவப்பட்டேன் பாரு. அவன் சரியான சீரியல் சைக்கோ. அவனுக்குலாம் நான் பாவமே பார்க்கவேமாட்டேன்” என்று கத்தியபடி தனது டாக்டர் கோட்டை மாட்டிக் கொண்டு சென்றவளையே புன்னகையுடன் தொடர்ந்தது விஷ்வக்கின் விழிகள்.