உடையாத வெண்ணிலவே 4

சில நேரங்களில், ஒரே ஒரு வார்த்தை நம்மிடம் அத்தனை ஆயுதங்கள் இருந்தும் நிராயுதபாணியாய் நிற்க வைத்துவிடும்.

அப்படி தான் ஷ்யாம் சொன்ன அந்த வார்த்தை மான்யாவை நிச்சலனமாய் நிற்க வைத்தது.

“யூ மே கோ நவ்” என ஷ்யாம் சொன்ன அந்த வார்த்தையே திரும்ப திரும்ப செவிப்பறையில் மோத தன் செவிகளை இறுக மூடிக் கொண்டாள்.

எதை விட்டுப் போக சொல்கின்றான் இவன்? பல கனவுகளோடு துவங்கிய இந்த மருத்துவப் பயணத்தை விட்டா?

எத்தனை வருடங்களாக கனவு கண்டிருப்பாள், தன்னை ஒரு மருத்துவராக கண்ணாடியில் பார்க்க வேண்டுமென்று.

ஆனால் அந்த ஆசை கண்ணாடியை தன் வார்த்தை கல் கொண்டு சுக்கு நூறாக உடைத்துவிட்டானே அவன்.

மருத்துவம் என்பதை இவள் ஒரு தொழிலாக பார்க்கவில்லையே. தன்னுடைய இலட்சியமாக, தீராத ஆசையாக தானே பார்த்தாள்.

இல்லையென்றால் ஒட்டு மொத்த இந்தியாவில் நடைப்பெற்ற நீட் பிஜி தேர்வில் எழுநூற்று பத்து மதிப்பெண்கள் எடுத்து முதல் ஆளாக வந்திருக்க முடியுமா?

இல்லை மருத்துவ உலகில் கொடி கட்டிப் பறக்கும் மதுரா மருத்துவமனை தானே முன் வந்து அவளுக்கு இன்டெர்ன்ஷிப் என்னும் பொன்னான வாய்ப்பை தந்து தான் இருக்குமா?

ஆனால் மொட்டுவிடத் துவங்கிய மலரை, பட்டென பிடுங்குவதுப் போல என் மருத்துவ கனவை பிடுங்கிவிட்டானே அவன்!

எண்ண எண்ண அவளுக்குள் ஆற்றாமையும் கோபமும் பெருகியது. ஆனால் அது எல்லாவற்றையும் பின்னே தள்ளி இப்போது  குற்றவுணர்வு தான் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

தான் இழைத்த சிறு தவறால் ஒரு உயிர் ஊசாலாடியதின் அலைவு இன்னும் விழிகளில் நிற்கவில்லை.

எத்தனை முறை முகத்தை கழுவினாலும் நேற்று சிதறிய உதிரத்தின் வாசனை இன்றும் நீங்கமால் அவளை வேதனையின் உச்சத்திற்கு தள்ளியது.

இடையிடையே ஒளிர்ந்து அடங்கிய தன் அலைப்பேசியை பரிதவிப்போடு பார்த்தாள்.

விஸ்வக் தான் விடாமல் அழைத்துக் கொண்டிருந்தான்.

அவனை எப்படி எதிர்கொள்வது!

தன்னை முழுமையாக நம்பி அறுவைசிகிச்சை செய்ய அனுப்பியவனின் நம்பிக்கையை சிதறடித்துவிட்டதன் வலி அவள் கண்களில் பிரதிபலித்தது.

‘யூ மான்யா,  தப்பு பண்ணிட்டே. பெரிய தப்பு பண்ணிட்டே. எல்லாரோட வாழ்க்கையிலேயும் விளையாடுற’  தன்னைத் தானே கடிந்து கொண்டவளின் மனமோ சமன்படவே இல்லை.

சோகமாக இருக்கும் போதெல்லாம் பூங்காவிற்குள் நுழைந்துவிடுவாள்.

இன்றும் அதே போல தான் பூங்காவிற்கு வந்தாள். ஆனால் எப்போதும் லேசாக வருடும் இளங்காற்று, இன்று அவளின் இதயத்தை பலமாக மோதி அதிர வைத்தது.

கழுகு தன் இரையைக் கொத்திக் கிழித்து தின்பது போல் அவள் செய்த தவறும் ஷ்யாம் பேசிய வார்த்தையும் மாறி மாறி அவளை கொத்தித் தின்றது.

ஆயாசத்துடன் அந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவளின் கண்கள் எதிரே நோக்கியது.

வீல் சேரில் அமர்ந்திருந்த அந்த மத்திம வயதுப் பெண்ணைப் பார்த்து அவள் கண்கள் லேசாக சுருங்கின.

அதுவரை நிர்மலமாய் வீல்சேரில் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் முகத்தில் அசாத்திய மாற்றம். எதையோ வெறித்துக் கொண்டிருந்தவரின் கண்கள் லேசாக மேலே சொருகிவிட வீல் சேரில் அமர்ந்தபடியே அவரது கை கால்கள் இழுக்க துவங்கியது.

அதைக் கண்டதும் மான்யாவிடம் பரபரப்பு.

வேகமாக அந்த பெண்ணின் அருகே வந்தவளோ கூட்டம் கூடியவர்களை தள்ளிப் போக சொல்லிவிட்டு, “கால் தி ஆம்புலன்ஸ்” என்று கத்தியபடியே   அவரை தரையில் வேகமாக கிடத்தியவள் கண்ணாடியையும் கழுத்தை சுற்றியிருந்த சால்வையையும் கழற்றிவிட்டு தன் மடி மீது படுக்க வைத்தாள். 

அவரது வலிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிற்க மான்யாவோ அவரது வலிப்பு நிற்க எவ்வளவு காலமானது என்பதை குறித்துக் கொண்டுவிட்டு அவரது தாடையை உயர்த்தி எவ்வாறு மூச்சுவிடுகிறார் என்று கவனித்தாள்.

ஆனால் மூச்சே வரவில்லை. வேகமாக அவருக்கு சி.பி.ஆர் செய்துக் கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் பூங்காவின் வாயிலில் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய இருவர் அந்த பெண்மணியை ஸ்ரெட்சரில் ஏற்ற மான்யாவும் அவரின் நெஞ்சை நீவியபடியே ஏறிக் கொண்டதும் அசுர வேகமெடுத்துப் புறப்பட்டது அந்த ஆம்புலன்ஸ்.

சிவப்பு வண்ணத்தில் சுழன்றபடியே அங்கிருந்து கிளம்பிய ஆம்புலன்சையே குழப்பத்தோடு பார்த்தபடி பூங்காவிற்குள் நுழைந்தாள் லயா.

‘யாரைக் கூட்டிட்டுப் போறாங்க’ என்ற குழப்பத்தோட அவள் பூங்காவிற்குள் நுழைய அங்கே காலியாக இருந்த அந்த வீல் சேரைக் கண்டு பதறிப் போனாள் அவள்.

“சார், இங்கே வீல் சேரிலே உட்கார்ந்திருந்த அந்த அம்மாவைப் பார்த்தீங்களா?” என்று அருகிலிருந்தவரைக் கேட்க, அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் நடுங்கிய அவள் கைகளிலிலிருந்து இடறி விழுந்தது கோவில் பிரசாதம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

இறுகிப் போய் அமர்ந்திருந்த ஷ்யாமையே இயலாமையோடு பார்த்தான் விஷ்வக்.

கல்லை கூட கரைத்துவிடலாம் ஆனால் இந்த ஷ்யாமை கரைப்பது பெரும்பாடாக இருந்தது.

விஷ்வக்கிடம் ஏகத்துக்கும் பெருமூச்சு.
என்ன தான் செய்வது இந்த ஷ்யாமை?

நடந்த எல்லாவற்றையும் விளக்கிவிட்டாயிற்று. அதில் மான்யாவின் மீது தவறில்லை என்றும் சொல்லிவிட்டாயிற்று.

தவறு முழுக்க தன் மீது இருக்கும் போது  தண்டனை மட்டும் ஏன் மான்யாவிற்கு?

ஒரு முடிவோடு திரும்பிய விஷ்வக், “யூ ஆர் சோ பார்ஷியல் ஷ்யாம். உன் உயிர் நண்பனான என் மேலே எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாதுன்றதுக்காக நீ மான்யாவை தண்டிக்கிற” என்றான் கோபமாக.

அந்த வார்த்தையைக் கேட்டு ஷ்யாமிடம் அசைவு. நிமிர்ந்து விஷ்வக்கைப் பார்த்தவனின் விழிகளில் அப்படியொரு அழுத்தம்.

“விஷ்வக் ஐ யம் நாட் பார்ஷியல். ஐ யம் ப்ராடிக்கல்.” கோடாரின் கூர்மையாய் அவன் வான்த்தைகள்.

“வாட் இஸ் ப்ராடிகல்? எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத ஒரு நியூ இன்டெர்னை ஒரே ஒரு தப்பு பண்ணிட்டான்றதுக்காக இப்படி வெளியே அனுப்புறதா?” என்றான் ஆற்றாமை மேலிட.

“விஷ்வக், மெடிக்கல் ஃபீல்டிலே நம்ம பண்ற ஒரு சின்ன தப்பு, ஒரு பெரிய உயிரோட இழப்புக்கு காரணமா அமையும்.
அன்ட் மோர் ஓவர் ஷீ இஸ் ஓவர் கான்ஃபிடென்ட்” என்ற ஷ்யாமின் வார்த்தையைக் கேட்டதும் விஷ்வக் முகத்தில் ஏகத்துக்கும் கடுப்பு கூடியது.

“எது ஓவர் கான்ஃபிடென்ட். ஒரு உயிரை காப்பாத்த போராடுனதா ஷ்யாம்?” என்றான் கண்களில் கோபம் மின்ன.

“நோ.  நம்மலாலே செய்ய முடியாதுனு தெரிஞ்ச அப்புறமும் ஒரு விஷயத்துலே இறங்கக்கூடாது. நம்மளோட பலம் பலவீனம் இரண்டும் தெரிஞ்சு முடிவு எடுக்கணும். என்ன தான் நீ சொல்லியிருந்தாலும் அவள் அதை செய்திருக்கக்கூடாது. மறுத்து இருக்கணும். ஒரு ஆபத்தான நேரத்துலே சரியான முடிவு எடுக்க முடியாதவள் மருத்துவரா இருக்க தகுதியே இல்லாதவள்” என்றான் முடிவாக.

அவனது குரலின் தீவிரத்தன்மையைக் கண்ட விஷ்வக் இருக்கையில் சோர்வாக சாய்ந்தான்.

“முதல் தப்பு தானே ஷ்யாம். ஒரே ஒரு வாய்ப்பு தரலாமே” என இறுதியிலும் இறுதியுமாக கெஞ்சிப் பார்க்க

“முதல் தப்போ கடைசி தப்போ ஆனால் தப்பு, தப்பு தானே. ஒரே ஒரு தப்பு பண்ணிட்டு தன்னோட மொத்த வாழ்க்கையும் இழந்துட்டு நிற்கிற இரண்டாவது டாக்டர் இந்த ஹாஸ்பிட்டலிலே உருவாக வேண்டாம்னு நினைக்கிறேன் விஷ்வக். அதனாலே தான் இந்த முடிவு. ஐ திங்க் உனக்கு புரிஞ்சு இருக்கும்” என்று ஷ்யாம் சொல்ல விஷ்வக்கிடம் மௌன வெறிப்பு.

ஷ்யாம் சொன்ன வார்த்தைகளை எதிர்த்துப் பேச இப்போது விஷ்வக்கிடம் வேறு வார்த்தைகளில்லை.

மௌனமாய் தன்னறைக்குள் நுழைந்தவனோ மான்யாவிற்கு வருத்தமாக “சாரி மான்யா என்னாலே ஷ்யாமை கன்வின்ஸ் பண்ண முடியலை” என்ற குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இயலாமையோடு தன் இருக்கையில் சாய்ந்தான்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

இங்கோ சி.பி.ஆர் செய்துவிட்டு பெருமூச்சோடு சாய்ந்த மான்யாவின் கண்களில் பட்டது மிளிர்ந்து அடங்கிய அலைப்பேசி.

எடுத்துப் பார்க்க விஷ்வக்கிடமிருந்து குறுஞ்செய்தி. அவன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைப் படித்ததும் அவள் இதழ்களில் கசந்த புன்னகை.

‘அவ்வளவு தான் முடிந்துவிட்டது. மொத்தமாக முடிந்துவிட்டது. மீண்டும் அந்த மருத்துவமனையில் இனி கால் பதிக்க முடியாது’ என்று வருத்தத்தோடு  நினைத்த நேரம் அந்த ஆம்புலன்ஸ் சரியாக மதுரா மருத்துவமனையின் உள்ளே நுழைந்தது.

அதைக் கண்டு திடுக்கிட்டவள், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் முன்பே ஆம்புலன்ஸின் கதவு திறக்கப்பட்டது.

தயக்கத்தோடு இறங்கியவளின் கால்கள் எங்கிருந்து துரத்தப்பட்டதோ அதே இடத்தில் மீண்டும் பதிந்தது.

அவசர அவசரமாக ஸ்ட்ரெக்சரில் இருந்து அந்த பெண்மணி இறக்கப்பட, மருத்துவமனையின் ரிசப்ஷனிற்கு சென்றாள்.

“மிஸ். மான்யா. நாளைக்கு தானே ஷ்யாம் சார் உங்களோட ரிப்போர்ட் வாங்க வர சொன்னார்” அந்த ரிசப்ஷனிஸ்ட் குழப்பமாக ஏறிட

“நான் ரிப்போர்ட் வாங்க வரலை. இந்த பேஷன்ட்டை அட்மிட் பண்ண வந்தேன்” என்றவள் அவர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி எப்போது ஃபிட்ஸ் நின்றது என்ற நேரத்தையும் குறிப்பிட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து செல்ல திரும்பினாள்.

ஆனால் திரும்பிய வேகத்தில் யார் மீதோ மோத தன் நிலைத் தடுமாறியவள் இடறி விழப் போக, அவளை சுற்றி பாதுகாப்பாய் படர்ந்தது ஒரு கரம்.

நிமிர்ந்துப் பார்க்க எதிரில் ஷ்யாம் சித்தார்த்.

இவன் கைகளில் தான் இருப்பதா எனத் தோன்ற வேகமாக அவன் கைகளில் இருந்து விடுப்பட்டு நின்றாள்.

அவளையே கூர்மையாகப் பார்த்தவன், “உங்களுக்கு இங்கே என்ன வேலை மிஸ்.மான்யா? நாளைக்கு தானே உங்களை வர சொன்னேன். என்னை சமாதானப்படுத்துற எண்ணத்தோட இங்கே வந்து இருந்தீங்கனா. யூ  மே கோ நவ். என் முடிவை யாருக்காகவும் எதுக்காகவும் மாத்திக்க மாட்டேன்” பேசிக் கொண்டே போனவனை கைநீட்டி இடைமறித்தாள்.

“சாரி டாக்டர். நான் உங்களை சமாதானப்படுத்த வரலை. உயிருக்கு ஆபத்தான நிலையிலே இருந்த இவங்களை காப்பாத்த தான் வந்தேன்” அவள் விரல்கள் ஸ்ட்ரெக்சரை சுட்டிக் காட்டியது.

அந்த திசையின் விளிம்பில் இருந்த பெண்மணியைக் கண்டதும் ஷ்யாமின் கண்கள் திகைப்பில் தெறித்தது.

வேகமாக அவரருகில் சென்றவன் “அம்மா” என்று கண்ணீர் குரலில் அழைக்க, மான்யாவின் இதயத்தில், மீட்டப்பட்ட வீணையின் அதிர்வுகள்.