உணர்வை உரசி பார்க்காதே! 01

IMG-20211108-WA0067-ae7ab42b

🌻அத்தியாயம் 01(ஆ)

வெள்ளை வானம் வெட்கப் பூண்டு சிவக்க, மேகத்துளிகள் மண்ணை முத்தமிடுவதற்கு பூமியை நோக்கிப் புறப்பட, மண் துமிக்கையோ தூவல் வாடையை கிளப்பி மக்கள் வாயில் மௌவலை தவழவிட, அம் மாமதுரை மாநகரிலே வீற்றிருக்கும் மதுரை மீனாட்சியின் உச்சிக் குளிர்ந்துபோன தருணமது.

“அடியே யுகா! மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாக. சீக்கிரமா புடவை கட்டுடீ” என்று பாட்டி பரவை முனியம்மா விளம்பினார்.

“ஏய் பரவ முனியம்மா, உன் செட்டு எல்லாம் வானத்துக்கு டிக்கட் வாங்கி பறந்துப் போச்சு. நீ பறக்குற வழிய பார்க்காம, நீ என்னைய மாமியார் வீட்டுக்கு பறக்க வைக்க ப்ளான் பண்றீயா?” என்றவள் தன் பாட்டியை கேலிச் செய்தாள். 

“உன் வயித்து பிள்ளைய பார்க்காம என் கண்ணு மூடாது டீ.” 

“சரி கிழவி, ஒரே ஒரு சிக்கன் பீஸ் சாப்பிட்டு வாரேன்.” 

“ஐயோ இதை எங்க போயி சொல்லுவேன். மாப்பிள்ளை பிரமாண வீட்டுப்பிள்ளை டீ.” 

“கட்டிக்க போறேனு முடிவாகியிருச்சா, இல்லதானே! மூடிக்கிட்டு போ அந்த பக்கம். எனக்கு வயிறு வலிச்சுது உன்ன உண்டில்லனு பண்ணிருவேன்.” என்று துடுக்குத் தனமாய் கூறினாள் அவள். 

தந்தை நமசிவாயமும் தாய் உமேஷ்வரியும் அவள் அறைக்குள் நுழைந்தனர். “என்னங்க உங்க பொண்ணு இன்னும் ரெடியாகாம இருக்கா, மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்தா நான்தான் போய் நிக்கணும் போல.” என்று பெற்றப் பிள்ளையை உமேஷ்வரி கடிந்துகொண்டார். 

“போய் நில்லுமா, யாரு வேணாம் சொன்னா, நிக்கிறத்துக்கு முதல் உன் தலைக்கு ப்ளக் ஹெனா அடிச்சுட்டு போ.” 

“வாரவன் உன் கழுத்துல மட்டும் இல்லாம, உன் வாயிக்கும் சேர்த்து மூக்கணாங்கயிறு போடத்தான் போறான்.” 

“அவள விடு மித்துமா, நீயும் உன் அக்காவ மாதிரி லவ் பண்ணிருந்தா மேரேஜ் பண்ணி வச்சிருப்பேன். எனக்கு வேலையே இருந்திருக்காது. நீ என்னனா அரேஞ் மேரேஜ்தான் பண்ணுவேனு இருக்க, இதோட பத்தாவது மாப்பிள்ளைமா, பார்த்து பார்த்து என்னை மாதிரி வக்கீலா புடிச்சிட்டு வந்துருக்கேன். இந்த மாப்பிள்ளையும் புடிக்கலனா, இதுக்கு மேல நான் மாப்பிள்ளை பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன்.” என்றார் அவரது செல்ல மகளிடம். 

“டிரைப் பண்றேன்பா. என்னோட கன்டிஷன்ஸுக்கு ஓகே சொன்னாரா?” பாடசாலையிலும் கல்லூரியிலும் அதிகமாக அவள் கற்றது கல்வியல்ல விளையாட்டைதான். விளையாட்டில் எல்லையற்ற ஈடுபாடு அவளுக்கு. வீராங்கனை என்பதால் இயல்பாகவே தைரியமும் ஒட்டிக்கொண்டது. மனதளவில் இருந்த தைரியம் மலையளவிலும் கடலளலிலும் பல்கி பெருகியிருந்தது அவளிடம். 

சென்னையில் வலைப்பந்தாட்டா பயிற்சிவிப்பாளராக பிரத்யேகமாக பணி புரிகிறாள். அதனால்தான் சென்னை மாப்பிள்ளை பிரமாணன் என்பதை காட்டிலும் அவள் பணியில் குறுக்கிடாமல் இருந்தாலே போதும் என்றது அவள் மனம். அதனால் இந்த வரன் அவளுக்கு வசமாய் அமைந்தது. 

“சொன்னேன்மா சொன்னேன். அந்த பையனுக்கு எல்லாம் ஓகேதான். நீ இன்னும் பையன பார்க்கவே இல்லயே! இந்தாருக்கு ஃபோட்டோ” 

“அப்படி வைங்கபா. இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளையே வரப்போறாரு, அப்பறம் எதுக்கு ஃபோட்டோ! நேர்லயே பார்க்குறேன்.” 

“சரி சரி, புடவைய கட்டிட்டு மேக் அப் போட்டுக்கோ.” என்றார் உமா.

“சாஸ்திரத்துக்கு வேணும்னா புடவை கட்டுறேன். மேக் அப் போட மாட்டேன், காலம் பூரா மேக் அப் போட்டுக்கிட்டா இருக்க போறேன். 

காலத்துக்கும் இந்த மூஞ்சதானே பார்க்கணும். அதுக்கு எதுக்கு மேக் அப் போடணும். மேக் அப் போட்டாதான் மாப்பிள்ளை ஓகே சொல்லுவாருனா இந்த மாப்பிள்ளையே வேணாம்.” 

அதிக நேரம் வெயிலில் அவள் தேகம் காய்வதால் ஒப்பனை செய்வதே இல்லை. ஒப்பனை செய்து வெயிலில் காய்ந்தால் சருமம் மாசுறும் என்றே தவிர்த்திடுவாள்.

“நீ கொஞ்சம் வாய வச்சிக்கிட்டு இரேன் டீ.” என்று மனைவியிடம் கூறிவிட்டு, மகளின் புறம் திரும்பி, “அம்மாடி நீ மேக் அப் போடமளே அழகாதான் இருக்க, புடவைய கட்டிட்டு வாம்மா.”

கயல் மீன் கண்கள், ரோஜா மலரின் செவ்விதழ்கள்.  தெற்றுப்பல்லில் தெரியும் பத்து நிலவு. கூர்ந்த நாசியில் வலது புறம் இருக்கும் ஓர் அழகிய மச்சம்.

அவளுக்கென்ன அழகிய முகம்  அவளுக்கென்ன அழகிய உடல் என்று அவளுடயை அழகை வர்ணித்துக் கொண்டே செல்லலாம். 

பிறந்ததிலிருந்து பால் வர்ணம்தான், விளையாட்டால் சற்று பழுப்பு வர்ணம் அவ்வளவுதான். விளையாட்டை அதிகம் நேசிப்பதால் நலினமான உடல் தோற்றம். 

அவளும் பட்டு புடவை அணிந்து பொட்டு வைத்து பூவும் வைத்துக்கொண்டாள். அதை தவிர்த்து வேறெதுவும் செய்யவில்லை. 

“மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துட்டாங்க. இந்த காஃபிய குடு.” என்று தாய் உமேஷ்வரி  ஒரு தட்டில் ஒரே ஒரு குளம்பி கோப்பையை வைத்து கொடுக்க, “என்னமா, மாப்பிள்ளை மட்டும்தான் வந்துருக்காரா?” 

“வாயமூடிக்கிட்டு காஃபிய குடுத்துட்டு வாடி.” 

மீத்யுகாவும், ‘சரி’ என்று தனக்கு ஒத்துவராத இயல்பில் இல்லாத வெட்கத்தையும் மெல்லிடையின் அன்னநடையையும் வரவழைத்து தலை குனிந்தவாறு சென்று குளம்பியை கொடுத்து முகத்தை சற்று நிமிர்ந்து பார்க்க, தலைக்கேறியது கோபம் விறு விறுவென நடந்து வந்து தட்டை கட்டிலில் எறிந்தாள். 

“அம்மா, நான் அந்த காட்டெருமையதான் கல்யாணம் பண்ணிக்கணுமா?” 

“ஏய் அரகிறுக்கி, இது மாப்பிள்ளையே இல்ல.  மாப்பிள்ளையோட அஸிஸ்டன்ட்” 

“என்னது அஸிஸ்டன்டா? அவருக்குப் போயி வெட்கப்பட்டு மெதுவா நடந்து ரொம்ப பில்டப் பண்ணிட்டேனே, ச்சே!” 

“மாப்பிள்ளைக்கு கோர்ட்ல ஏதோ அவசர வேலையாம் அதனால வரமுடியலயாம். அவருக்கு உன்னைய புடிச்சிருக்காம். உன் முடிவ சொல்லு?”  

“அவருக்கு என்னைய புடிச்சிருக்கா, என்னைய எப்போ பார்த்தாராம்?” 

“நீ வேற, அவர்தான் உன்னைய சென்னைல பார்த்துட்டுதான் அப்பாக்கிட்ட பேசிருக்காரு” என்று கூறினார் உமா.

‘ஓ, இவ்ளோ விஷயம் நடந்திருக்கா, நமக்குதான் ஒண்ணுமே தெரியல!’

மாப்பிள்ளையின் உதவியானை அனுப்பி வைத்துவிட்டு நமசிவாயமும் அறைக்குள் நுழைந்தார். “என்னமா கல்யாணத்துக்கு ஓகேவா?” 

ஒற்றை புருவத்தை உயர்த்தி ஒரு பார்வைப் பார்த்தாள். ‘இப்படி ஒருத்தன்தான் நமக்கு சரி. அவன், அவன் வேலைய பார்த்துட்டு இருப்பான். நம்ம விஷயத்துல தல போடமாட்டான்.’ 

“ஓகே ஓகே.” என்றாள் சிறு புன்னகையுடன்.

“அப்பாடி, இனி கல்யாண வேலைய பார்க்க வேண்டிதான்.” என்று பெருமூச்சை இழுத்துவிட்டார் நமசிவாயம்.

மாப்பிள்ளை புகைபடத்தை எடுத்தவள் பார்க்கவில்லை. ‘காலம் பூரா பார்க்கதான் போறேன். இப்போ ஏன் பார்த்துக்கிட்டு, கல்யாணம் அன்னைக்கு பார்ப்போம் அப்போ இன்னுங் கொஞ்சம் ஆர்வமா இருக்கும்.’

“மாப்பிள்ளை நம்பர் இருக்குமா பேசுறியா?” என்று நமசிவாயம் கேட்க, “இல்லபா அவர்தான் எங்கிட்ட முதல்ல பேசணும்.” 

‘பொண்ணு பார்க்க வரல, ஒரு ஸாரி கேட்டிருப்பாரா? எனக்கும் தன்மானம் எல்லாம் இருக்கு.’ என மனதில் எண்ணிக்கொண்டாள். 

கல்யாண வேலைகள் சிறப்பாக நடைபெற தன்னவனின் பெயரை கூட அறியாதிருந்தால் அவள்.

“என் புருஷன் பேரு என்னவா இருக்கும்? அப்பாக்கிட்ட கேட்டா ஃபோன் நம்பர் தந்துட்டேன் நீயே கேட்டுக்கோனு சொல்லுவாரு. இப்போ யாருக்கிட்ட கேட்கலாம்” என்று சிந்தித்தவள், “வெடிங்க் இன்விடேஷன்ஸ் வந்துருச்சே! அதுல பார்க்கலாம்.” 

சுவாமி அறையில் இருக்கும் பத்திரிக்கையை யாருக்கும் தெரியாமல் எடுத்து அவளது அறைக்கு வந்து தாளிட்டாள்.

ஆசை ஆசையாய் முகம் நிறைய பூரிப்புடன் பத்திரிக்கையை திறந்தாள். “நிகழும் மங்களகரமான, ச்சே! இதெல்லாம் வேணாம். பேருதான் வேணும்.” 

பெயரை பார்த்தவுடன் கண்களை அகல விரித்து விரித்துப் பார்த்தாள். “வி, வி, விஸ்கி” என்று கூறிவிட்டு, “ச்சீ ச்சீ! வி கு ஷ் கி, விகுஷ்கி. இவருக்கு யாருதான் பேரு வச்சாங்களோ தெரியலயே! வாய்ல நுழையவே ரொம்ப நேரமாகுது. குஸ்தி வாத்தியார் நேம் மாதிரி இருக்கே.” 

விகுஷ்கி என்கிற பெயரை கூறுவதே கடினமாக இருக்கும்போது, அவனுடன் வாழ்வது எத்தனை கடினமாயிருக்கும் என்று அவள் எண்ணவில்லையே!

பெயரைப் பார்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் கல்யாணப் பத்திரிக்கையை சுவாமி அறையிலேயே வைத்துவிட்டாள்.

நாட்கள் ஓடிய வேகமே தெரியவில்லை. அடுத்த முகூர்த்தத்திலே திருமணம் முடிவாகியிருக்க, மண்டபமே நாதஸ்வரம் மேளதாளமென களைக்கட்டியது. 

வருகை தந்தவர்கள் அனைவரும் மீத்யுகா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதே பெரிதாய் எண்ணினர். 

மணமகள் அறையில், “மீயூ குட்டி” என்று அவள் கண்களை மூட, “இப்போதான் தங்கச்சி கல்யாணத்துக்கு வர வழி தெரிஞ்சுதா கா” மீத்யுகாவின் தமக்கை சகிஷ்ணவி.

“என்னடா பண்ண அத்தானுக்கு வேலை, நான் மட்டும் எப்படி தனியா வராது. அதான் இப்போ வந்துட்டேன்ல. சரி சரி உன் ஆத்துக்காரர் எங்க?” 

“சும்மா போ கா, நான் இன்னும் அவர பார்க்கவேயில்ல” நடந்தவற்றை சுருக்கமாகவும் விசனத்தோடும் விளம்பினாள். 

“சரி சரி நைட்டுக்கு மொத்தமா பார்த்துரலாம்.” என்று சிலாகித்தாள் சகிஷ்ணவி.

“ச்சீ, சகி நீ ரொம்ப கெட்டுப்போயிட்ட.” என்று கண்களை மூடி தமக்கையை பொய்யாய் கடிந்துகொண்டாள். 

இங்கு மணமேடையிலே ஐயர், “மாப்பிள்ளையை வரச் சொல்லுங்கோ.” என்று இரண்டு மூன்று தரம் அழைத்தும் அவன் வரவில்லை. மணவாளன் மண்டபத்திற்கே இன்னும் வரவில்லை. அப்படி இருக்க மணமேடைக்கு மட்டும் எப்படி வருவது?

இங்கு நமசிவாயமோ நான்கைந்து முறை அவனுக்கு அழைப்பை விடுத்தும், “இதோ வரேன் மாமா.” என்பதை தவிற வேறெதுவுமே கூறவில்லை அவன். 

குழுமியிருந்தவர்கள், “மாப்பிள்ளைக்கு பொண்ண புடிக்கலையோ?” 

“மாப்பிள்ளைக்கு வேற எதும் காதல் இருக்குமோ?” 

”கல்யாணத்துல விருப்பமில்லயோ தெரியலயே, பொண்ணுக்கிட்ட என்ன குறைய கண்டாரோ தெரியல?” என்று ஆளாளுக்கு புரளியை கிளப்பினர்.

இச்செய்தி மீத்யுகாவின் காதை சென்றடைய, அளவில்லா பதற்றத்தில் ஆழ்ந்தது அவள் மனம். மணப்பெண்ணாய் அலங்காரம் பூண்டிருந்தவளுக்கு முத்து முத்தாய் வியர்க்க ஆரம்பித்தது. 

‘அவருக்கு என்னதான் ஆச்சு, என்னைய புடிச்சுதானே அப்பாக்கிட்ட பேசுனாரு, அப்பறம் ஏன் இன்னும் மண்டபத்துக்கு வரல, முதல்லே நான் ஃபோன் போட்டு பேசியிருக்கணுமோ? இந்த கல்யாணம் நடக்கலனா லாயர் இண்டஸ்ரில அப்பாவோட கௌரவம் என்ன ஆகுறது?’ என்ற பலமான சிந்தனையே பதற்றத்தில் பரிதவிக்க வைத்தது மீத்யுகாவை.

சிவனை தரிசிக்க விழியில் விசனத்தோடு பார்வதி காத்திருந்தாள். சிவன் வந்தாரா இல்லையா?

***

                      உணர்வுகள் தொடரும்..