உணர்வை உரசி பார்க்காதே! 01

IMG-20211108-WA0067-6ca9e707

🌻அத்தியாயம் 01(அ)

வைகறையிலேயே இருள் சூழ்ந்த வானம் கும்மிருட்டோடு குமுறலிட்டு இடியுடன் வந்து அவன் மனதை இடிக்க, ஆடும் நீள் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஆடியவாறு கண்களை மூடியபடி பல சிந்தனை அவனுள். ஒன்றை நினைக்க மற்றொன்றை மறுக்கவும் முடியவுமில்லை. மற்றொன்றை மறுக்க அவன் மனம் மறக்கவுமில்லை.

சில நினைவுகளும் வாட்டி வதைத்து நெருஞ்சி முள்ளாய் அவன் மனதை குத்த, அவன் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் எப்பொழுதும். புரியாத புதிரென அவள் கூறும் காட்சி பிழைகள்.

அவள் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் செவிப்பறனை கிழிக்க அதில் உண்டான ஆத்திரம், ஆத்திரத்தை இழுத்து பிடித்து ஆழ்மனதிற்குள் பதுக்கி வைத்தான். புலி பதுங்குவது பாய்வதற்குதானே!

தாய் தந்தையர் விபத்தில் தவறிவிட, மீதம் இருப்பது தங்கை மட்டும்தான். தங்கையின் திருமணநாளுக்கு முதல்நாள் தங்கையும் மற்றொரு விபத்தில் சுயநினைவின்றி கோமாவில் கிடக்கும் அவலம்! தங்கைக்காகவே வாழும் அவன் மீத்யுகாவை திருமணம் செய்ததன் நோக்கம்தான் என்ன? 

அவளைப் பழிவாங்கும் உணர்ச்சியில் வெறிப்பிடித்த மிருகமாய் மாறவேண்டிய அவசியம் என்ன? 

குற்றம் செய்தவர் யாரோ, தண்டனை வேறு யாருக்கோ வழங்கிட, சட்டதரணியின் சட்ட ஒழுங்கு இதுதானா? இந்தச் சட்டவாக்கம் நிலைக்குமா? 

மறுபுறம் அவன் கைகளுக்கு கிடைத்த கடிதம். அக்கடிதத்தில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறது,  ஏன் அதைப் பொக்கிஷ பேழையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் இவன்?

வழக்கறிஞர் தொழிலை தெய்வமாக மதிப்பவன், ஏன் இப்படியொரு வழக்கில் அதுவும் எதிர்த்தரப்பு வழக்கறிஞராக ஆஜாராவதற்கு காரணம்தான் என்ன?

வழக்கு தொடர்வதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. இன்று வழக்கிற்காகன எதிர்த்தரப்பு வக்கீலாகக் கையொப்பமிடும் நாள்.

கொட்டும் மழையில் அவனுக்குக் கீழ் வேலைப் பார்க்கும் வேலனுடன் சென்னையில் அமைந்திருக்கும் உயர்நீதிமன்றத்திற்கு வந்திறங்க, நிசப்தமாய் நீதிமன்றத்திற்குள் செல்லலாம் என்றால், அவனை அவர்கள் விடுவதாக இல்லை. 

அவன் நடந்து வருவதை கண்டு பலதரப்பட்ட வர்ணங்களில் ஒரு கையில் ஒலியேற்றியையும்(மைக்) மறுகையில் குடையையும் ஏந்திக்கொண்டு அவன் முன்னே வரும் ஊடகவியலாளர் கூட்டம்.

“சார் மீத்யுகாவோட இறப்பு கொலை வழக்கா இல்ல தற்கொலை வழக்கா? இதைப் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க”

“சார் நீங்க இப்படியொரு கேஸ எடுப்பீங்கனு யாருமே எதிர்ப்பார்க்கல. இந்தக் கேஸ் எடுத்ததுக்கு என்ன காரணம் சார்?” 

“நீங்க எடுக்குற கேஸ் எல்லாம் தோத்துப்போய் பழக்கமே இல்லயே. இந்தக் கேஸ்ல ஜெயிப்பீங்கனு நம்பிக்கை இருக்கா?” 

“எந்தக் கேஸ் எடுத்தாலும் உங்களுக்கு மக்கள் துணையே பக்கபலமா இருக்குமே, இந்தக் கேஸுல அப்படி இல்லயே! அதுக்கு என்ன செய்ய போறீங்க” 

அவனுடைய கறுப்பு கவுனை கழட்டி இடது கையில் ஏந்திக்கொண்டு அவன் புருவம்வரை நீண்டிருந்த முடியை வலது கையால் பின்புறமாக நீவி விட்டு மீண்டும் தலையை அசைத்துக் கேசத்தை கலைத்துவிட்டு, இத்தனை கேள்விகளுக்குப் பதில் கூறாதவன் இப்போது வாய் திறந்தான். “ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” ‘போடா’ என்று விரக்தியான புன்னகையோடு நான்கே வார்த்தைகளில் பதிலைக் கூறி முடித்தான். 

“சார் நாங்க எத்தனையோ கேள்வி கேக்குறோம். ஒரு கேள்விக்காவது ஒழுங்கா பதில் சொல்லமாட்டிங்கிறீங்க. இந்தக் கேஸ் கொலையா, தற்கொலையா?” 

“அதை முடிவு பண்ண வேண்டியது, நான் இல்ல ஆண்டவன்” என்று கூறிவிட்டு ஊடகவியலாளர் கூட்டத்தைக் கடந்து வழக்கிற்கு நல்லநேரத்தில் கையொப்பமிட வேண்டுமென்று நீதிமன்றத்திற்குள் நுழைந்தான்.

அரசு தரப்பு வழக்குரைஞராக, நெற்றியில் பட்டையும் கழுத்தில் உருத்திராட்ச கொட்டையும் அணிந்த நமசிவாயத்தை பார்த்து பட்டையிட்டவனுக்கு நாமம் என்பது போல் அவன் ஏளனப் புன்னகையை உதடுகளில் பரப்பினான். 

கையொயப்பமிடுவதற்கு எழுதுகோலை கையில் கொடுக்க, “என்னை விட மூத்தவர் தொழிலயும் சரி அனுவபத்திலயும் சரி, அவர்தான் பெரியவர் அவரே முதல் சைன் பண்ணட்டும்” என்றவன் உதடுகளில் விரக்தியான புன்னகை. 

பின்பு அவனும் கையொப்பம் போட்டுவிட்டு வெளியேறினான். 

முதலில் வெளியே வந்த நமசிவாயத்தை கேள்விக் கேட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள், அவனைக் கண்டதும் நமசிவாயத்திடமிருந்து பாதியிலேயே ஓடிவந்தார்கள். 

நமசிவாயத்திற்கு அவமானம்தான் இருப்பினும் பற்களைக் கடித்துவிட்டு வழுக்கை தலையில் இருக்கும் ஓரிரு கேசத்தை கோதிவிட்டு நகர்ந்தார். 

“சார், சொந்த மாமவையே எதிர்த்து நிக்குறீங்க. எப்படி ஃபீல் பண்றீங்க” 

“நத்திங். நான் ஒண்ணும் அவர் கால்ல நிக்கல. என் சொந்தக் கால்ல நிக்கிறேன். மாமாங்குற உறவுக்காக நான் பண்ற தொழிலுக்கு உபத்திரம் பண்ண முடியாது” கிண்டலாக இருந்தாலும் குதர்க்கமாக இருந்தது அவன் பதில்கள். 

“சார் ஆஃப்டர் மேரேஜ் ஒரு இன்டர்வியூ கூடத் தரல ஏன் சார்?” 

“இட்ஸ் மை பர்ஸ்னல்” என்று முறைத்தவாறு கூறினான்.

“உங்க வைஃப் என்ன பண்றாங்கனு தெரிஞ்சிக்கிளாமா சார்?” என்று ஓர் ஊடகவியலாளர் கேட்க, அக்னி அம்பகம்(பார்வை) வீசி ஊடகவியலாளரின் வாயை அடைத்தான் அவன். 

“நீங்களும் வைஃபும் பிரிஞ்சு இருக்கதா கேள்விப்பட்டோம் அது உண்மையா சார்?” 

“இட்ஸ் மை பார்ஸ்னல்” என்று மூச்சை இழுத்துவிட்டான். 

“இதுக்கு அப்பறமாவது உங்க வைஃப இன்ட்ரோ பண்ணுவீங்களா சார்?” 

“நோ, நேவர்!” கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழக்க ஆரம்பித்தான்.

“உங்க வைஃப் பேரயாவது சொல்லுங்க சார்?” என்றொருவர் இறைஞ்சிக் கேட்டார். 

“மீத்யுகா! டோன்ட் ஆஸ்க் எபோட் இட் எனிமோர்” என்று உரத்த குரலில் தீவிரமாகக் கூறிவிட்டு வேகநடையிட்டு சீருந்திற்குள் சென்று பலமாகக் கதவை அடைத்து வண்டியைக் கிளப்பினான். 

ஊடகவியலாளர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக்கொண்டனர். 

****