உணர்வை உரசி பார்க்காதே! 04

IMG-20211108-WA0067-be492e50

🌹அத்தியாயம் 04

அவள் மேல் கால் கை பட்டுவிடுமோ என்று ஒதுங்கி ஒதுங்கி படுத்திருந்தவனுக்கு எப்போது விடியும் என்றாயிற்று.

அவள் அழகில் மயங்கி அவளிடம் தஞ்சமடைந்து விடுவோமோ என்கிற பீதி அவ்வப்போது அவன் மனதை குடைந்தது. 

‘சீக்கிரம் விடிஞ்சிறணும் எவ்ளோ நேரம் நானும் ஒருகளிச்சு படுக்குறது. முதல் நாளே மூஞ்சில பால ஊத்தி கேவலப்படுத்திட்டா,

உனக்கு இருக்கு டீ. அணு அணுவா சித்தரவதை பண்ணுவேன். வாழாவெட்டியா வீட்டுக்கு அனுப்புவேன் அப்போதான் என் அருமை புரியும்.’ 

அவன் வாதாடும் வழக்குகளெல்லாம் பெரும்பாலும் ஏழை எளியவர்களின் வழக்காகதான் இருக்கும். ஒரு பைசாவும் வாங்காமல் வாதாடி வெற்றியீட்டுவான். அதுமட்டுமின்றி,ஏனைய வழக்குகளில் விகுஷ்கி ஆஜராகினாலே மற்ற வழக்குரைஞர்கள் இவனுடன் வாதாட அஞ்சி நடுங்கி அரண்டு புரளுவர்.

நியாயத்தை நிலை நாட்ட நீதிபதிக்கு கட்டளையிடுவான். அந்தளவிற்கு வலுவான பேச்சுத்திறனும் சமயோசித புத்தியும் உடையவன்.  வழக்கிற்கான ஆதாரங்களை திரட்டுவதில் வல்லவன்.  வாதாடும்போது புத்தியில் ஆதவன். ஆனால், மீத்யுகாவிடம் மட்டும் புத்தி இல்லாதவன் போல் நடந்து கொள்வது ஏனோ?

எளிமையாய் விடிந்து காலை பொழுதை என்றூழ் வந்து வரவேற்க முதலில் விழித்துக்கொண்டது விகுஷ்கிதான். எழுந்த கணமே மந்திர உச்சாடனத்துடன் எழுவது அவன் வழக்கத்தில் ஒன்று, “ௐ நமசிவாய, ச்சே! இந்த மனுஷன் பேர வேற நான் சொல்லிக்கிட்டு” என்ற சளைப்பில், மாமனார் பெயரை உச்சரிப்பது பிடிக்காமல் போக, அப்பனின் நாமத்தை விடுத்து சுப்பனின் நாமத்தை உச்சரித்தான். “முருகா, இன்னைக்கு பொழுது நல்லதே நடக்கணும்.” என பிரார்த்தித்திவிட்டு மீத்யுகாவின் புறம் திரும்பினான். 

‘கும்பகர்ணி எப்படி தூங்குறா பாரு! காஃபி போட்டு என்னைய எழுப்பாம நீ மட்டும் நல்லா தூங்குறியா?’ 

அவள் காதின் அருகில் சென்று “லட்சுமி மா காஃபி போடுங்க” சத்தமாக கூறினான்.

மீத்யுகாவின் காது கொய்ங் என்றது. காதை பிடித்து ஒரு விரலால் ஆட்டியவாறு, “லட்சுமி கா கீழ இருக்காங்க. ஏன்யா என் காதுல கத்துற?” 

‘எழும்பு டீ எழும்பு, நான் முழிச்சிட்டேன். நீ மட்டும் தூங்குவியா?’ அவளை எழுப்பிவிட்டு அவன் சத்தமிட்டதற்கு சம்பந்தமே இல்லாததுபோல் பாவனை செய்தான். 

கண்களை கசக்கி நேரத்தை பார்த்தவள், மணி எட்டு மெதுவாக எழுந்து, “விகுஷ்கி கால எடுங்க நான் கீழ இறங்கணும்.” அவன் கால்களை நீட்டி நிமிர்ந்து ஒய்யாரமாய் அமர்ந்திருந்தான்.

“முடியாது. ஜம்ப் பண்ணிப்போ” வேண்டுமென்று கூறினான்.

பெருமூச்சைவிட்டவள், ‘சொல்லி புரிய வைக்க முடியாது.’ என்று மனதில் எண்ணி, அவன் கால்களை எடுக்காமல் இருக்க, மெதுவாக தவழ்ந்து வந்து அவன் கால்களில் நன்கு அமர்ந்து, அவள் உடல் சுமையை இறக்கி உடலை முறித்து கொட்டாவி விட்டாள். 

“அடியே குந்தானி எழும்பு டீ, என் காலு போச்சு, காலு காலு போச்சு…” என்று கத்தினான். 

மெதுவாக எழுந்தவள், “இதுக்குதான் சொன்னேன் கால எடுக்க சொல்லி” 

“எந்த கடைல டீ அரிசி வாங்கி திங்கிற.” என்று அவன் கத்த ஆரம்பிக்க, அதையெல்லாம் அவள் பொருட்படுத்தாமல் குளியலறைக்குள் புகுந்தாள். 

“எத்தன கேஸ வாதாடிருப்பேன், இவகிட்ட வாயாட முடியலயே! என்ன பண்ணாலும் நமக்கு அடங்க மாட்டிங்கிறாளே! ஒரு வேலை நம்ம பண்றது எதும் பத்தலயோ?” 

அவளோ குளியலறைக்குள், “வாத்து வாயான் ரொம்பதான் வாதாடுறான் எங்கிட்ட. வாதாடுற வாயிக்கு பூட்டு போடணும்.” 

இருவரும் குளியல் வேலைகளை முடித்துவிட்டு கீழே வந்தனர். விகுஷ்கி சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க மீத்யுகா சமையலறைக்குள் நுழைந்தாள். 

நேற்று முதலிரவு என்பதால் இருவரும் சீக்கிரமாக விழித்துக்கொள்ள மாட்டார்களென  குளம்பியையும் கலந்து வைக்காமல் சந்தைக்கு காய்கறி வாங்குவதற்கு கிளம்பியிருந்தார் லட்சுமி. 

லட்சுமி இல்லாததால் தானே குளம்பியை கலந்திடலாமென்று எண்ணி, பாலை அடுப்பில் வைத்து குளம்பியை கலந்தாள்.

காலை எழுந்தால், மன அமைதிக்காகவும் நாளின் புத்துணர்ச்சிக்காகவும் ஒரு பாடலை பாடுவாள். குளம்பி அருந்தும் முன் இன்று அதை செய்திடலாமென்று எண்ணினாள்.”ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன். என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன். என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா! நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா! வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா…” 

மீத்யுகா இரு வரிகளை பாட ஆரம்பித்ததுமே சத்தம் கேட்டு அவள் அருகில் நின்றுக்கொண்டு, ‘ரதிதேவினு நெனைப்பு, இவளுக்கு சேவகம் செய்றதுக்கு எனக்கு கொடுத்து வச்சிருக்கணுமாம்.’ என மனதில் கருகிக்கொண்டான். 

அவள் பாட்டை முடிக்க, அவள் பாட்டுக்கு பதிலளிக்கும் விதமாய் எசப்பாட்டு பாடினான் அவன். “வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன். அதன் விழியில் வழிவது அமுதமல்ல விடம் என்று கண்டேன்.

அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆ… வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது வலைகளியே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது. வா என்றால் நான் வருதில்லை. போ என்றால் நான் மறைவதில்லை. இது நீ நான் என்ற போட்டி அல்ல நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல” 

அவன் பாட ஆரம்பித்து மறுகணமே, ‘வாத்து வாயன் இவருக்கு பாடுறதா நெனச்சிட்டாரோ, அதுக்குதான் இந்த எசப்பாட்டா?’ 

“நீங்க என்னை நெனைச்சிட்டீங்க. நான் உங்கள என் கால வந்து விழ சென்னேனு நெனச்சிங்களா?” 

“வேற வேலை இல்ல எனக்கு. நான் வந்து உன் கால விழ. எங்களுக்கும் வாயிருக்கு நாங்களும் பாடுவோம்” 

“போயா சும்மா இருட்டேட் பண்ணாம.” என்று சாதரணமாக கூறினாள். அவளுக்கு மட்டும் குளம்பியை கோப்பையில் எடுத்துவிட்டு நகர்ந்தாள். 

“ஏய், எனக்கு எங்க டீ காஃபி?” என்று அதிகாரமாய் கேட்டான் அவன்.

“நான் ஒண்ணும் லட்சுமி அக்கா இல்ல. உங்களுக்கு காஃபி போட்டு தாரத்துக்கு.” அவனை பொருட்படுத்தாமல் குளம்பி அருந்தினாள். குளம்பி கிடைக்கும் என்று சற்று பொருத்திருந்தான். 

மீத்யுகாவும் தனது விளையாட்டு சங்கத்திற்கு அழைப்பை விடுத்து மீண்டும் பணியில் இணைந்து கொள்வதாக கூற, திருமணமாகி ஒரு வாரத்திற்கு பிறகு சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கூறினர். 

இளம் தம்பதியர் என்பதால் பணிக்கு தாமதாமாக வருமாறு கூற, ‘ரொமான்ஸ் அப்படியே பொங்கி வழியுது. அதுக்கு ஒரு வாரம் லீவு வேற.’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

அவன் புறம் மெதுவாக திரும்பினாள். “காஃபி போட்டு குடுத்திருப்பேன். உங்களுக்கு வாய் ஜாஸ்தியா, அதான் காஃபி கட்” அழகாக கேட்டிருந்தால் குளம்பி கிடைத்திருக்கும். இவன்   அகங்காரமாய் கேட்டானே அதான் அவளுக்கு பிடிக்கவில்லை.

அவள் பேசுவதை கேட்டு அவளை முறைக்க, “சரி சரி பார்க்க பாவமா இருக்கு. இருங்க காஃபி எடுத்துட்டு வாரேன்.” ஏற்கனவே கலந்து வைத்திருந்த குளம்பியை கொடுத்தாள். 

“காஃபியும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்” என்று அவள் தலையில் ஊற்றினான். 

நேற்று அவள் பாலை ஊற்றி பாலாபிஷேகம் செய்ததால் இன்று அவன் அவளுக்கு குளம்பியை ஊற்றி கும்பாபிஷேகமே செய்தான். நல்ல வேலை குளம்பி இளஞ்சூடாக இருந்தது.

“ஏன் விகுஷ்கி இப்படி பண்றீங்க. உங்களுக்கு சேர்த்து காஃபி போட்டேன் பாருங்க, என்னைய சொல்லணும்.” என்று கூறிவாறு தலையில் வழிந்தோடும் குளம்பியை துடைத்தாள். 

“உனக்கு ரொம்ப திமிர் டீ அதான் கொஞ்சம் அடக்குனேன்” என்று கூறியவன் உதட்டில் இருக்கும் ஏளனப் புன்னகை. அவன் குளம்பியை அருந்துவதற்குதான் கேட்டான் என்று ஏமாற்றம் அவள் முகத்தில். 

“நான் உங்களுக்கு அடங்கிப்போனதா நெனைச்சா, அது உங்க தப்பு!” என்று கூறிய மறுகணமே, அவள் மேனியில் பாதி குளம்பியில் குளித்திருக்க,  நனைந்திருந்த ஈரமார்போடு  அவனை கழுத்தோடு அணைத்து அவன் மார்பையும் நனைத்தாள்.

“ஏய் என்னைய விடு டீ, விடு டீ. காஃபிய என் மேல தேய்க்காத டீ” அருவெறுப்பு ஒரு புறமிருக்க, அவள் மென்மை நிறைந்த தேகம் அவன் உடலையும் உணர்ச்சிகளை உரசி பார்த்தது.

“மாட்டேன் தேய்ப்பேன்.” என்று அவள் கன்னத்திலிருந்த குளம்பியை அவன் கன்னத்தில்  தேய்த்தாள். 

உதட்டில் ஒட்டியிருந்த குளம்பியை அவன் உதட்டில் ஒட்டிவிட மறந்தாளா, மறுத்தாளா அல்லது வெட்கித்தாளா? சிறு இடை வெளியுடன் விலகிக்கொண்டாள். நெற்றியில் வழிந்த குளம்பியை ஒரு விரலால் நீவி அவன் மீது தெறிக்குமளவில் சுண்டி விட்டாள். 

அவள் தேய்த்த குளம்பி, அவன் அணிந்திருந்த வெண்மை நிற சட்டையை கரைபடுத்தியது மட்டுமல்லாமல், பெண்வாடை அற்ற அவன் மனதையும் உடலையும் கலங்க செய்தது. 

“நீங்க நேத்து என் கைய புடிச்சு முறுக்குனீங்க. சோ நான் பால் ஊத்துனேன். இன்னைக்கு நான் என்ன பண்ணேன்?” 

அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற அருகில் வந்தவன், அவன் கையால் அவள் நாடியை பற்றி, “இது வேற கணக்கு, கூட்டி கழிச்சு பார்த்தேன். கணக்கு இன்னும் கழியல. இன்னும் நிறைய நிறைய இருக்கு கழிக்கிறதுக்கு. அவசரமா வெளிய போறேன், வந்து வச்சுக்கிறேன்.” 

அவன் கூறுவதை கேட்டவளுக்கு அவன் கூறுவதெல்லாம் புரியாத புதிராய் தெரிந்தது. “பொடி வச்சு பேசுவீங்களா, உங்களுக்குள்ளயே ஏதோ ஒரு விஷயத்த பூட்டி வச்சுருக்கீங்க. பரவாயில்ல, இப்போ நான்தான் முதல்ல போய் குளிப்பேன் அது வரைக்கும் நீங்க வெய்ட் பண்ணிதான் ஆகணும்”. என்று கூறிவிட்டு அவனுக்கு முதல் முந்தியடித்து குளியலறைக்கு புகுந்து கொண்டாள். 

அவனோ வீட்டில் வேறு குளியலறையா இல்லை என்று கீழிருக்கும் குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்தினான். 

அவள் குளியலை முடித்துவிட்டு வெளியே வந்து பார்க்க அவன் மகிழுந்தில் புறப்பட்டிருந்தான், உடனே அவனை பின் தொடர வேண்டுமென்று வீட்டை மூடி விட்டு முச்சக்கரவண்டியை பிடித்து அவனை பின் தொடர்ந்தாள். 

‘நான் குளிக்க போகணும்னு சொல்லியும் சைலண்டா இருந்தாரு, பாத்ரூம் போறதுக்கும் சண்ட போடல, நான் குளிச்சுட்டு வரதுக்குள்ள அவர் கிளம்பிட்டாரே! என்னவா இருக்கும்?’ போதாத குறைக்கு சில பல கணக்குகளை வேறு அவளிடம் கழிக்க வேண்டுமென்று கூற, குழப்பவலைகள் அலைமோதியது அவள் மனதில். 

வைத்தியசாலை வாசலில் விகுஷ்கி மகிழுந்தை நிறுத்தினான், வெளியே இறங்கி வந்து சுற்றி அங்குமிங்கும் பார்த்துவிட்டு வைத்தியசாலைக்குள் நுழைந்தான்.  அவன் சற்றுதூரம் செல்ல, அவனை பின் தொடர்ந்தாள் மீத்யுகா. 

வைத்தியசாலையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு அறைக்குள் நுழைந்தான். கட்டிலில் படுத்திருந்த தங்கையின் கையை பிடித்து, “எப்போ டா வீட்டுக்கு வருவ, நீ இல்லாம வீடே வெறிச்சோடி போயிருக்கு.” 

மருந்துகள் ஏற்றப்பட்ட கைகளிலிருந்து எந்தவித அசைவுமின்றி விகுஷ்கியின் தங்கை சஷ்டி இருக்க, அதை பார்த்த விகுஷ்கியின் விழிகள் விசனத்தில் வீழ்ந்தது.

இவற்றை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மீத்யுகாவிற்கு, இது யார்? என்ற சந்தேகம் நிலவியது. 

தாய் தந்தையர் இல்லையென்று கூறிய மீத்யுகாவின் தாய், விகுஷ்கிக்கு  இப்படி ஒரு தங்கை இருப்பதாகவும் கூறவில்லையே! 

விகுஷ்கியும் மீத்யுகாவின் பெற்றோரிடம் தனக்கு ஒரு தங்கை இருப்பதாக தெரிவிக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் தங்கை இருப்பதாக கூறியிருந்தால், இந்த திருமணம் நடந்திருக்குமா?

சில மணிதுளிகள் தங்கையின் அருகிலிருந்து நினைவூட்டும் வகையில் பேசிவிட்டு நீதிமன்றத்திற்கு கிளம்பினான். 

அவன் வெளியே வருவதை பார்த்து ஒளிந்துகொண்டாள். அவன் வெளியே வந்து நீதிமன்றத்தின் பக்கம் வண்டி திரும்ப இவள் வீட்டின் பக்கம் வண்டியை திருப்பிக்கொண்டு வந்தாள். 

‘ஹாஸ்பிடல்லுக்கு யாரும் பார்க்காத மாதிரி ஏன் போகணும், யார் அந்த புள்ள, இவரு ஏன் உருகி உருகி பேசுறாரு?’ 

‘லட்சுமி அக்காகிட்ட கேட்டா எதும் தெரிய வருமா?’ 

வீட்டு வாசலில் வந்து வண்டி நிற்க, லட்சுமி வெளியே நிற்பதை பார்த்தவள், முச்சக்கரவண்டி சாரதிக்கு பணத்தை கொடுத்துவிட்டு லட்சுமியின் அருகில் வந்தாள், “ஸாரி கா வீட்டு சாவியை எடுத்துட்டு போயிட்டேன்.” 

“நல்ல பொண்ணுமா நீ, எவ்ளோ நேரம் என்னைய நிக்க வச்சிட்ட.” 

சிறுநகையுடன் மீத்யுகா, “எப்போ கா மார்கெட் போயிட்டு வந்தீங்க?” 

“நான் வந்து அரைமணி நேரத்துக்கு மேல ஆகிருச்சு.” 

லட்சுமியுடன் நேசமாக பேசிக்கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். லட்சுமியுடன் நேசவுறவு வைத்தால்தானே விகுஷ்கியை பற்றி விசாரிக்கலாம்.

இருவரும் சமையலறைக்குள் நுழைய, மீத்யுகா காய்கறிகளை அடுக்க, “ஏன்மா உங்க வீட்ல இருந்து யாருமே வரயில்லயா, நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு  கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?” 

“ஐய்யோ லட்சுமி கா! இல்லயில்ல. அரேஞ்சு மேரேஜ்தான், தாலி கட்டினதுக்கு அப்பறம்தான் அவர் முகத்தையே பார்த்தேன்” 

“இந்த காலத்துலயும் இப்படி ஒரு பொண்ணா! உங்க அம்மா அப்பா எல்லாரும் எப்போ வாருவாங்க?”

“இன்னும் ரெண்டு மூனுநாள் கழிச்சு வருவாங்க கா.” அப்படி தொடர்ந்து மீத்யுகா வீட்டாரின் குசல விசாரிப்பு பதிலுக்கு லட்சுமி வீட்டாரின் குசல விசாரிப்புயென முடிந்தது. 

வீட்டிலிருந்து கொண்டு வந்த ஆடைகளை அலமாரி அடுக்கி வைக்கலாமென்று அறைக்குள் வந்தாள். பெட்டியிலிருக்கும் ஆடைகளை எடுத்து பக்குவமாய் கட்டிலில் எடுத்து வைத்தாள். 

அலமாரியை திறக்க விகுஷ்கியின் உடைகள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அத்தனை பெரிய அலமாரியில் இவனுடைய ஆடைகள் வெள்ளை வர்ண சர்ட்தான் அதிகமாக இருந்தது. ஏனைய வர்ண ஆடைகள் குறைவுதான். 

“இவ்ளோ பெரிய பீரோல வெள்ளை சர்ட், கறுப்பு கோர்ட்டு, பான்ட்டு. இத தவிர வேற எதும் கண்ணுக்கு தெரிய மாட்டீங்குதே. என்னோடு டிரஸ்ஸ பக்குவமா அடுக்க வேண்டியதுதான்.” 

பார்த்து பார்த்து அழகாக அவள் உடைகளை அடுக்கினாள். அலமாரி நிறைய உடைகளை அடுக்கியும் அவளுடைய உடைகளை வைக்க இடம் போதவில்லை. ஆதலால் மீதி உடைகளை பெட்டியிலேயே வைத்தாள். 

“சரி வராது. நமக்குன்னு தனியா பீரோ வாங்கணும்.” என்று கூறி அமர்ந்தது மட்டும்தான் அவனுடைய வண்டியின் சத்தம் கேட்க, “யப்பா… வில்லன் சீக்கிரமா லஞ்சுக்கு வந்துட்டாரு.” 

வருகை தந்தவன் விரைவாக அவனது அறைக்கு வருகை தந்தான். ஒரு கோப்பை எடுப்பதற்கு அலமாரியை திறந்தவன் அவள் உடை அடுக்கி வைத்திருப்பதை பார்த்துவிட்டு, தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த மீத்யுகாவை ஒரு முறை முறைத்து  பார்த்தான். அவளோ அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் இருந்தாள்.

அவன் கால் பதித்த தடமெல்லாம் சிம்மத்தடம், அரியாசனத்தில் அமர்ந்து காட்டின் ராஜா சிங்கமென வீட்டை ஆட்சி செய்துக் கொண்டிருந்தான். மீத்யுகா வந்ததில் இருந்து அவள் செய்கையிலும் பேச்சிலும்  அவனை வீழ்த்தியது ஒரு எலியிடம் தோற்றதற்கு சமமாய் எண்ணினான். 

பொறி வைத்து எலியை பிடிக்க கணக்கிட்டான். பொறி வைத்து, வலை விரித்தான். அவன் வைத்த பொறியில் மொத்தமாய் மாட்டுவாளா? எலி சிக்கியதா, நழுவியதா? 

“உன் டிரஸ்ஸெல்லாம் யார்டீ இங்க வைக்க சொன்னா?” அலமாரியில் அவளுடைய உடைகளை கலைத்து கதவோரமாய் தூக்கி எறிந்தான். 

“ஏன் விகுஷ்கி இந்த மாதிரி பண்றீங்க. என் டிரஸ்ஸ வேற எங்குதான் வைக்கிறது?” 

“அதெல்லாம் எனக்கு தெரியாது? என் டிரஸ்ஸுக்கு பக்கத்துல வைக்கக் கூடாது. அதான் தூக்கி வீசினேன்.” வம்பிழுப்பதற்காகவே வேண்டுமென்று செய்தான்.

“ஓ… அப்படியா! உங்க டிரஸ்ஸுக்கு பக்கத்துல வைக்கக் கூடாது. அவ்ளோதானே?” பெருமூச்சை இழுத்தபடி இரு கைகளை இடுப்பில் வைத்து ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைத்துப் பார்த்தாள் அவனை. 

“ஆமா வைக்ககூடாது!” என்று கண்டிப்புடன் கூறினான்.

அவன் கூறிய மறுகணமே அவனுடைய ஆடைகளை கலைத்து தூக்கி குப்பை தொட்டிக்கு அருகில் வைத்தாள். அவளுடைய உடைகளை அள்ளிக்கொண்டு வந்து அலுமாரியில் திணித்தாள். 

“இப்போ உங்க டிரஸ்ஸுக்கு பக்கத்துல இல்ல ஓகேவா?” 

அதை பார்த்தவனுக்கு கோபமும் அகங்காரமும் தலைக்கேறியது. பற்களை கடித்துக்கொண்டு, “ஏய் பைத்தியக்காரி ஏன் டீ இப்படி பண்ண?” என்று அவள் அருகில் சென்று ஒரு கொத்து முடியை பிடித்து ஆட்டி கேட்டான். 

லாவகமாய் அவன் முடி வளர்ந்திருக்கு பதிலுக்கு அவளும் ஒரு கொத்தை கைப்பற்றினாள்.

“கைய எடு டீ!” என்று கர்ஜித்தான்.

“நோ, முதல்ல நீங்கதானே என் முடிய புடிச்சீங்க. நீங்க விடுங்க ஃபர்ஸ்ட்.” எதற்கும் சளைத்தவள் இல்லை அவளும். சிங்கத்திற்கு சமமான சிறுத்தைதான்.

“நான் என்ன பண்ணலாம் அப்படியே நீங்க பண்ணுவீங்களோ மேடம்.” என பணிந்த குரலில் கேலிக் செய்தான். 

“கண்டிப்பா ரிப்பீட் பண்ணுவேன் சார்.” என்று திமிராய் கூறினாள் அவள்.

“நான் பண்றதெல்லாம் உன்னால பண்ண முடியாது டீ. போ!” என்று வீரியம் மிகுந்த குரலில் கூறி ‘போ’ என்று கூறும் போதே கையில் இருக்கும் கேசத்தோடு அவளை ஒரு புறம் தள்ளினான். அத்தோடு அவனுடைய கேசத்திலிருந்த அவள் கையும் தானாகவே விடுபட்டது.

அவன் மறுபுறம் திரும்பி இருக்க, அவனை அவள் புறம் திரும்பினாள். “என்னது, என்னால எதும் பண்ண முடியாதா?” கலைத்திருந்த கேசத்துடன் செந்நிற சாயம் கக்கிய அவள் கண்கள். 

“ச்சீ ச்சீ! உன்னால முடியாது.” என கூறிவிட்டு மூன்று விரல்களை வாயில் வைத்து நகைந்தான்.

“என்னால முடியும் சார். வக்கீல் உங்களோட இவ்ளோ வாதாடுறேனே! அப்பவே புரியலையா? நான் தைரியமான பொண்ணுன்னு.” 

“அப்படியா! என்ன பண்ணலாம் திருப்பி பண்ணிருவ?” என்றவன் மூன்று அடிகளை முன்னேடுத்து வைத்தான்.

“ஆமா பண்ணுவேன்” என்றவளின் குரல் கமரியதோடு இரண்டடி பின் வைத்தாள். 

“அப்படிங்கிற, பார்ப்போமே!” என்று அவள் இருகைகளை  அவன் ஒரு கையால் இறுக்கி பிடித்தான். மறுகையால் அவளை சரித்து இடையோடு வளைத்து அவள் ஈர உதட்டோடு அவன் உதட்டை பொருத்தி வாதாட ஆரம்பித்தான்.

முரண்பாடான முத்தத்தை அவள் மறுக்க, இவன் இழுத்து அணைக்க, சிறு காயத்தோடு முடிவடைந்தது அந்த இதழ் சிறை.

மூச்சு முட்ட முட்ட முத்தம் கொடுத்ததால், மீத்யுகாவிற்கு திக்பிரமை பிடித்தது ஒரு புறமிருக்க மூச்சிறைக்க ஆரம்பித்திருந்தது. அவள் எதிர்பார்க்காத ஒன்றை அவன் செய்ததில் அவள் சித்தமே கலங்கியிருந்தது.

அவள் இரத்தம் அவன் உதட்டில் படிந்திருக்க அதை துடைத்துவிட்டு, “இந்த மாதிரி உன்னால லிப் டூ லிப் கிஸ் அடிக்க முடியுமா, அதான் நான் சொன்னெனே உன்னால முடியாதுன்னு?” அவன் கூற்று முடிய சர்ட் காலரை உயர்த்திவிட்டான்.

பெண்மை ஏட்டிக்கு போட்டியாக  நின்றாளா, முத்தத்தை திருப்பி கொடுத்தாளா? சபதத்தில் வென்றாளா? 

உணர்வுகள் மலரும்..